பிப்ரவரி 16, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள்

Parthasarathy Ra

 

வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் எழுத்தாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள். வல்லமை வாசகர்களுக்கு இவர் தனது கவிதைகள் பலவற்றையும், சிறுகதைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக சென்ற வாரம் “எண்ணமும், சிந்தனையும்!” என்ற எழுச்சிக் கவிதையையும், காதலர் தின சிறப்புப் பதிவாக “காதல் என்றால். . . ?!”  என்ற கவிதை என இரு கவிதைகளை வழங்கியுள்ளார். அத்துடன் “மாறிய ஜென்மங்கள்”  என்ற இன்றைய உலகில் மூத்த குடிமக்களின்  யதார்த்த வாழ்க்கையையும், பந்தபாசத்தின் மேன்மையையும் உணர்த்தும் சிறுகதையையும் வழங்கியுள்ளார்.

தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள், பாலா, இனியவன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருபவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாகப் பணிநிறைவு பெற்ற இவர் தமிழ் மற்றும் பொருளியியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றவர். பணிநிறைவிற்குப் பின்னும் கவிதைகள் சிறுகதைகள் எழுதும் தனது பொழுதுபோக்கைத் தொடர்கிறார். கவிதை உறவு, தமிழ்ப்பணி ஆகியவற்றில் இவரது கவிதைகளும், குமுதம், தினமலர் பத்திரிக்கைகளில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. தனது “கவிதைப்பூகள்”  என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். சிந்தனை தரும் மேன்மையை உணர்த்தும் அவரது இரு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எண்ணமும், சிந்தனையும்!
______________________________________

எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!

மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!

நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !
***

மனிதனே சற்றே நினைத்துப்பார்
______________________________________

எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !

பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !

மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது
வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
தொலைந்துபோன காலகட்டத்தில் !

பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி,
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !

மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி,
பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!

கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
கரைந்துபோகும் மனிதம்.!

எண்ணுபவர் – விழிப்பர்
விழிப்பவர் – உழைப்பர்
உழைப்பவர் – உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!

இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?

 

வல்லமையாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்களைப் பாராட்டி அவர் தனது இலகியப் பயணத்தில் வெற்றிகள் பல பெற வல்லமை நண்பர்கள் வாழ்த்துகிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

தொடர்புக்கு:
https://plus.google.com/113104518638625010842/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. எண்ணங்களால் உயர்ந்து நின்று 
    எழுத்துலகில் தடம் பதித்து
    வண்ணமுற கவிதையாத்து 
    வழங்கி வரும் வல்லமையாளர்…
    திண்ணமுற பதிவுகள்..நீண்ட நெடுங்காலமாய்
    நிறைந்துவழியும் இதயத்தால்
    நேசத்தைப் பாசத்தை.. நெருக்கத்தை..
    எத்தார்த்த வாழ்வின் கூறுகளை..
    எழுத்தில் வடிக்கும் இனியவர்…
    அண்மையில் 
    சென்னைக்கு சென்றபோது – இவர்தம்
    இல்லத்திற்கும் சென்றுவந்த உறவோடு…
    உள்ளத்தால் வாழ்த்துகிறேன்…
    வல்லமையாளர் விருது பெறும்
    இந்நாளில்.. திரு. ரா. பார்த்தசாரதி அவர்களை…

    அன்புடன்.
    காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.