மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!!!

— அதிரை இளையசாகுல்.

mgrநடமாடும் ஒரு மனிதாபிமானம், வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர், வறண்ட தமிழகத்தை வளமாக்க வந்த அடைமழை, வரலாற்றையே வளைத்துப்போட்ட கருணைக் கல்வெட்டு, எளியோர் வாழ்வை பண்படுத்த வந்த இரக்க இதிகாசம், தவறுகளை சரியாக்க இறைவன் எய்த பிரம்மாஸ்திரம், புயலால் பாதித்த பூமிக்கு கிடைத்த மரக்கன்று, சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு, ஈழ மக்களும் இனிதே பூஜிக்கும் இனிப்புப் புலி, பசித்த வயிறுகளுக்காய் வந்த அட்சய பாத்திரம், அப்பாவி மக்களுக்கு அழகாய் கிடைத்த அன்புப் பரிசு, வட மாநிலங்களே வியந்து நோக்கிய தென்னகத்து ராஜ தந்திரி!

இந்த அத்தனைக்கும் சொந்தக்காரர் மக்கள் திலகம், மனிதநேய மாமன்றம் எம்.ஜி.ஆர். தவிர வேறு யாராக இருக்க முடியும்?

குடிசைவாசிகள் அனைவரும் கண்ணீர் யாகம் செய்து மக்கள்திலகத்தைக் கேட்டே மன்றாடினார்களோ?

அதனால் தமிழ் நாட்டுக்குக் கிடைதத்த கண்கவர் மனிதர்தானோ எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்!

அவர் வந்த பிறகுதான் சுவாசப் பிரச்சினையில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த தமிழகப் பட்டித் தொட்டிகளுக்கெல்லாம் பிராண வாயு கிடைத்தது எனலாம்!

அரசியல் உலக வரலாற்றில் தேர்தலில் படுத்துக்கொண்டே வெற்றி வாகை சூடிய ஒரே தலைவர் யாரென்று கேட்டால் அது மக்கள் திலகம் என்றே பதில்வரும்!

அப்பேற்பட்ட மனிதாபிமானியைப் பற்றிக் கட்டுரை எழுத போட்டி வாயிலாக என்னைப் பணித்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்!

தமிழக அரசியல் சாம்ராஜ்ஜியத்தில் புரட்சித்தலைவர் அவர்களுக்கென்று தவிர்க்க முடியாத ஒரு தனியிடம் உண்டு.

மலையாள நாட்டுக்கு சொந்தக்கரார் என்றாலும் இலங்கை தேசத்தின் கண்டியில் பிறந்து, தமிழ்நாட்டில் வந்து கோலோச்சியர்வதான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அவர் பிறந்த இடம் நமக்கு முக்கியமல்ல.. இங்கே அந்தத் தங்கத் தலைவனின் திறந்த இதயமே முக்கியம். கண்டவரையெல்லாம் வாழ வைக்கும் இந்த தமிழகம், இந்த வானவரை வாழவைக்காதா என்ன?

இன்றுவரைக்கும்கூட, தமிழ்நாட்டு பாமரர்களின் மனதில் எம்.ஜி.ஆர். அவர்கள் தெய்வமாகவே அமர்ந்திருக்கிறார்கள்.

இன்றும் ஒரு சில கிராம மக்களால் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருப்பதாகவே நம்பப்படுகிறார் என்றால் எத்தனை ஆழமாய் தன் சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்!

எம்.ஜி.ஆர். அவர்கள் முதன் முதலாய் திரையில் தோன்றியது சதி லீலாவதி என்றொரு திரைப்படத்தில்… அதில் அவர் காவல் அதிகாரி வேடம் ஏற்று நடித்திருப்பார்.

அந்தப் படத்திற்குப் பிறகு மதிப்பு மிக்க நல்லதொரு வேடத்திற்காய் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய எதிர்பார்ப்பு நாளடைவில் பொய்த்துப்போனது.. ஆனாலும் அவர்தம் முயற்சியைக் கைவிடவில்லை…

அடுத்தடுத்து வந்ததெல்லாம் காவல் அதிகாரி பாத்திரமே என்பதால், தொடர்ந்து அதில் நடிக்கும்பட்சத்தில் எம்.ஜி.ஆர். காவல் அதிகாரி வேடத்திற்கே லாயக்கு என்று முத்திரைக் குத்திடக்கூடும்.. கருவேப்பிலையாய் நம்மைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் தூக்கியெறிந்துவிடக்கூடும் என்று பயந்து அதற்குப் பிறகு கிடைத்த ஒரே மாதிரியான பாத்திரங்களையெல்லாம் புறந்தள்ளி நல்ல ஒரு வேடத்தை எதிர்பார்த்து கவலையோடு அமர்ந்திருந்தவர்தான் பின்னர் அந்தத் துறையையே ஆட்டுவித்தார் என்பதை அறிக..

அதற்காக அவர் எவ்வளவு உழைத்திருப்பார்.. எவ்வளவு இழந்திருப்பார்.. அந்த நிலையை அடைய எத்தனைக் கடின முயற்சிகளை மேற்கொண்டிருப்பார் என்று எண்ணி பார்க்கையில், அவரை உழைப்பின் முன்னோடியாக வைத்து நாமும் நம்மைப் பட்டைத் தீட்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதாகவே மனதுக்குப்படுகிறது.

முதலில் அவர் திரைத்துறையில் புக மேற்கொண்ட கடின முயற்சிகளையும், அதனால் அடைந்த வேதனைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் என்றுமே மற்ககாதவர்.. ஆகவேதான் அவர் திரைத்துறையில் வளர்ந்த நிலையில் தகுதி வாய்ந்த பல புதிய நபர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதன்வழியில் திரைத்துறையில் அறிமுகமானவர்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் தன் பால்ய காலத்தில் வறுமையென்ற அரக்கனால் அதிகம் பாதிக்கப்பட்டவர். ஆகவே தான் திரைத்துறையின் உச்சத்தில் இருந்த போதும் சரி.. தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோதும் சரி.. ஏழை மக்களுக்கு நிறையவே அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதனால் தமிழக வரலாற்றில் நல்லதோர் இடத்தையும் பிடித்தார்!

எம்.ஜி.ஆர் அவர்களை கொடை வள்ளல் என்பதைவிட “கடை”வள்ளல் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாயிருக்கும்! காரணம், அவருக்குப்பிறகு ஈகைத் தன்மையோடு மக்களுக்காக செல்வங்களை வாரி இறைத்தவர் யாருமே இல்லை எனலாம்!

இன்னெரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய வேண்டும்..

அமைச்சரவை கூடும் இன்றைய நிலையில் பெரும்பாலும் சட்டசபை.. சண்டை சபையாகவே இருந்திருக்கிறது. கற்றோர் கூடும் அவை அது – எதிரில் இருப்பவர் எதிரி என்றாலும் மரியாதை நிமித்தமாக நடந்துக் கொள்வதே மனித மரபு.

சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் வாக்குவாதம் முற்றி தவறான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துவதும், மைக்கைப் பிடுங்கி அடிக்கப்பாய்வதும்..உச்சக் கட்டமாக சேலையை உருவி பெண்ணை அவமானப்படுத்திய நிகழ்வெல்லாம் நடந்திருக்கிறது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆனால் மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர் தமிழகத்தை ஆண்ட காலத்திலெல்லாம் சட்டசபை கெளரவிமிக்க ஒரு சபையாகவே இருந்திருக்கிறது. அனைவரும் உள்ளே சரி சமமாகவே நடத்தப்பட்டார்கள். கண்ணியமாகவே, அழைக்கப்பட்டார்கள்.. அதற்கு உதாரணமாய் கூட ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டலாம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதன்முதலாய் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த நேரம்.. அப்போது சட்டமன்ற உறுப்பினராயிருந்த கிணத்துக்கடவு கந்தசாமி என்பவர் அன்றைய நாளின் எதிர்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை.. அவருடைய பெயரைச்சொல்லி ஏதோ சாடி பேச, அதை செவியுற்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், மரியாதையின்றி பேரைச் சொன்னதற்காக கந்தசாமியை கலைஞர் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்என்றால், எம்.ஜி.ஆர். அவர்களை அவர்தம் ஆட்சியை மெச்சாமல் எப்படி இருக்க முடியும்? எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருக்கும்வரை கலைஞர் அவர்களின் பெயரைச் சொல்லி ஒருமுறைகூட அழைத்ததில்லை என்பதை விளங்கிக் கொள்க!

சாதி மத விசயங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் இன்னொரு பெரியாராகத் திகழ்ந்தார் என்பதற்கு தாழ்த்தப்பட்ட ஏழை சிறுபான்மை, மக்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் சாட்சி..

இன்றைய நாளில் சாதி வேற்றுமைகள் சற்று கட்டுக்குள் வந்துவிட்டாலும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு இருந்த நிலை கிராமங்கள்தோறும் சாதி சம்பிரதாய பிரச்சினைகள் தலைவிரித்தாடியதை மறுப்பதற்கில்லை.. அது ஆளும் கட்சியாளர்களையும் விட்டுவைக்கவில்லையென்றால் அது உண்மையே..

ஆனால் அந்த ஒரு விசயத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சற்று விதி விலக்காகவே இருந்தார்கள். எதையும் முற்போக்குத் தனமாகவே அணுகினார்கள்.

1978ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த நேரம்.. மதுரையில் பிரபலமான மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் வராண்டா பகுதியில் முதியவர் ஒருவர் வற்றிய உடம்போடு உடல் நலிவுற்ற நிலையில் படுத்திருந்திருக்கிறார். அவரை ஊன்றிக் கவனித்த புரட்சித்தலைவர் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டவராய் அவரை அலக்காக அப்படியேத் தூக்கி தன் நெஞ்சில்போட்டு அணைத்தவாறு உடனே மருத்துவமனை நிர்வாகத்தை அழைத்து அந்த அன்பரை “சிறப்புப் பகுதிக்கு” சேர்க்கச் சொல்லி அவருக்கான அத்தனைச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டாரென்றால், எத்தனைப் பெரிய மனிதாபிமானி அவர்!

அங்கே வராண்டாவில் படுத்திருந்த அந்த முதியவர் வேறு யாருமல்ல.. கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் காவல் துறை மந்திரியாகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாண்பாளர் கக்கன் அவர்கள்தான்!

இப்படி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஏராளம்!

எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தமட்டில்.. அவர் ஏழை மக்களுக்கெல்லாம் கிடைத்த வலி நிவாரணி, எப்போதும் கண் விழித்தே கவனித்துக் கொள்ளும் கலங்கரை விளக்கம், தாகம் தீர்க்க ஓடோடி வந்த மனித ஜீவநதி, மகத்தான மனிதாபிமானத்தின் மறுபக்கம், அரிச்சந்திரனின் அடுத்த வாரிசு.. இப்படி அவரைப் புகழ்ந்துகொண்டே போகலாம்.

ஒரு சமயம் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்கிற பத்திரிக்கையின் சென்னைப் பிரதிநிதியான ராமானுஜம் என்பவர் தன் உறவினரான ஏழைப் பெண் ஒருவருக்கு ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சைக்காக உதவி தேடி ஏ.வி.எம்.சரவணன் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். உடனே விசாரித்த மக்கள் திலகம் அவர்கள் அதற்கு உண்டான மொத்தப் பணத்தையும் தானே அளித்து உவகை கொண்டிருக்கிறார்.

இப்படி அவருடைய சரித்திரத்தில் உதவி என்று போய் நின்றுவிட்டு வெற்றுக் கையோடு திரும்பியவர்கள் யாரும் இல்லை எனலாம்.

அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் அன்பே வா படப்பிடிப்பில் இருந்த போது முதியவர் ஒருவர் அங்கே தரைக்கு வார்னீஷ் போடும் பணியில் மும்முரமாயிருந்திருக்கிறார்.. அந்நேரம் புரட்சித்தலைவரின் பார்வையில் அவர் பட்டுவிட.. உடனே அவரை அழைத்து விசாரித்திருக்கிறார். ரொம்ப காலத்திற்கு முன்பு மேடைதோறும் ராஜபார்ட் வேடத்தில் தோன்றி நடித்தவராம் அவர். அந்நிமிடமே அந்த முதியவரை கட்டித் தழுவி பிரத்யேகமாய் உண்டாக்கி வைத்திருந்த தன் உணவறைக்கு அழைத்துச்சென்று அவரோடு மதிய உணவை பகிர்ந்துண்டு தக்க தொகையும்கொடுத்து அவரை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தாரென்றால்.. அந்த கொடை வள்ளலை வாழ்த்தாமல் எப்படியிருக்க முடியும்?

தோழமை வேறு, தொழில் வேறு, பகை வேறு, திறமை வேறு என்று இவ்வுலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

ஒருவர் தம்மை விமர்சிக்கும்பட்சத்தில் அவரை அடிவேரோடு சாய்த்துவிடவே நினைக்கும் மனிதர்களுக்கு நடுவே.. அது மாதிரியான பலஹீனத்தோடுதான் பெரும்பாலான மனிதர்கள் இருக்க.. மக்கள் திலகம் அப்படியல்ல..

கவியரசு கண்ணதாசன் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒரு நேரத்தில் நெருக்கம் கூடிய நண்பர்கள்.. பிறகு இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து பிரிவினைக்கு வித்திட்டது. அதனைத் தொடர்ந்து கண்ணதாசன் பாட்டெழுதினால் நான் நடிக்க மாட்டேன் என்று அறிக்கைவிட்ட நிலையிலும் கவியரசின் கவித்திறமையை எம்.ஜி.ஆர் அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

ஆகவேதான், கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தார் என்பதெல்லாம் மறுக்க முடியாத வரலாறு..

ஆக இத்தனைத் தனித்தன்மையோடு நடந்த, மக்களுக்கு வாரி வாரி வழங்கிய இன்னொரு பாரி, மற்றுமோர் பேகன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்.. என்றென்றும் வாழ்வார் என்றுகூறி இக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க