குறளின் கதிர்களாய்….(59)
-செண்பக ஜெகதீசன்
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (திருக்குறள்:774-படைச்செருக்கு)
புதுக் கவிதையில்…
கையிலிருந்த வேல்
களத்தில்
யானையோடு போனது…
மேனியில் குத்தியிருக்கும் வேல்
மேலும் போரிட உதவுமென
மகிழ்ச்சியில் பிடுங்கும்
படைச்செருக்கு அவனுடையது…!
குறும்பாவில்…
எறிந்தவேல் யானையோடு போனதால்,
உடலில் குத்திய வேலைப்
பிடுங்கி மகிழும் வீரன்…!
மரபுக் கவிதையில்…
எதிர்த்து வந்த யானையதும்
எறிந்த வேலுடன் ஓடியதே,
புதிதாய்ப் போரிட வேலொன்று
பெற்றிடப் போதிய பொழுதில்லை,
எதிரி எறிந்த வேலுடலில்
இருப்பது கண்டு மகிழ்வுற்றே
மெதுவாய்ப் பிடுங்கிப் போர்தொடரும்
மேன்மை வீரச் செருக்கன்றோ…!
லிமரைக்கூ…
யானையுடன் எறிந்தவேல் சென்றது போரில்,
உடலில் தைத்த வேலதையே
உவப்புடன் பிடுங்கிடும் வீரனைப்பார் நேரில்…!
கிராமிய பாணியில்…
வீரம்பாரு வீரம்பாரு
சண்டயில வீரம்பாரு,
எறிஞ்சிருந்த வேலோட
யானயுந்தான் ஓடிப்போச்சே…
எறியவேற வேலுக்குத்தான்
கவலயில்ல வீரனுக்கு,
மாருமேல குத்திநின்ன
வேலயுமே புடுங்கிக்கிட்டே
சண்டபோடுறான் சந்தோசமா…
வீரம்பாரு வீரம்பாரு
சண்டயில வீரம்பாரு…!
ஒருகால் உடைந்துவிட்டால் ஓய்ந்து உட்காராமல் இன்னொரு கால் இருக்கிறதே என்று நிற்கும் மனவலிமை வேண்டும். வல்லவனுக்கு புல்லும்ஆயுதம் என்பது போல். இன்றைய பொருளுரை அனைத்திலும் அருமை.
கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
நண்பர் அமீர் அவர்களுக்கு,
மிக்க நன்றி…!