நான் அறிந்த சிலம்பு – 154
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை
வேனில் காலக் கடை நாளில் பொழுது போக்கு
தம் கன்றுகளை விரும்பும் பெண்யானைகள் கூட்டத்தோடு
அவற்றை விரும்பும் ஆண்யானைகளும் நடுங்கும்வண்ணம்
நன்கு வெயில் சூழ்ந்து காணப்படும்
குன்றுகள் சார்ந்த நாட்டில் உள்ள
காடுகள் முழுதும் தீப்பிடிக்கும் வண்ணம்
நெருப்பை மூட்டி,
கோடைக்காற்றுடன் வந்து புகுந்து,
கூடல் நகரை ஆட்சி செய்யும் வேனில் வேந்தன்
வேறு இடம் தேடிச்செல்ல முயல்கின்ற
வேனில் காலத்தின் கடைசி நாளில்-
பெருஞ்செல்வர்களும் மன்னர்களும் விரும்பும்
கணிகையர் வீதியில்
கூடார வண்டியும் பல்லக்கும்
மணிகள் இழைத்த கால்கள் உடைய கட்டிலும்
ஆகிய இவற்றுடன்
சோலைகளில் மன்னர்களுடன்
விளையாடி மகிழும் உரிமையும்
வெண்சாமரக் கவரியும்
பொன் வெற்றிலைப்பெட்டியும்
கூர்மையான முனையுடைய வாளும்
தம் அரசன் கொடுக்க…
இங்ஙனம் பெற்ற செல்வங்கள்
எந்தக்காலத்திலும் மாறாத வண்ணம்
அரசப் பரத்தையரும்
அந்த வீதியில் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் அன்றாடம்
புதுமணம் புரிந்து வாழ்ந்து வருவதால்
உண்டான களைப்பு தீரும் வண்ணம்,
ஏவல் பணி புரியும் பெண்கள் ஏந்திய
செம்பொன் கிண்ணங்களில் இருக்கும்
இனிய கள்ளின் தெளிவைப் பருகி மயங்குவர்.
அவ்வாறு மயங்கி
அவர்கள் பூவிழி மூடும்போது
பூவின் இதழுக்குள்
தம் இனமான வண்டுதான்
மறைகின்றதோ என்றெண்ணி
புள்ளிகள் பொருந்திய பாடல் இசைக்கும் வண்டுகள்
அக்கண்களைத் தழுவ வரும்.
அவற்றை விரட்ட எண்ணும் அம்மாதர்கள்
வண்டுகள் இல்லாத இடத்தில் மலர்மாலை வீசி
அவற்றை விரட்ட எண்ணுவார்கள்.
பின் தம் அறியாமை அறிந்து
சிவந்த இலவம்பூ போன்ற தம் இதழால்
புன்னகை புரிவார்கள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120 – 136
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–
படத்துக்கு நன்றி: http://kadaitheru.blogspot.in/2011_04_01_archive.html