அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே – கவிஞர் வாலி
கவிஞர் காவிரி மைந்தன்
அந்த நாள் ஞாபகம் …..
வழக்கம்போல் இல்லாமல் புதிய யுக்தியில் பாடல்கள் பிறப்பதுண்டு! வாழ்வில் எதார்த்தமாக பேசும் வார்த்தைகளையே பாடலின் உள்ளீடாகத் தரும்போது.. அதையும் சவாலாக எடுத்துக்கொண்டு.. இசையமைத்த விதமும்.. உயர்ந்த மனிதனில் இடம்பெற்ற இப்பாடலை இன்னும் உயரச் செய்திருக்கிறது!
நடிகர் திலகமும் மேஜர் சுந்தரராஜனும் இணைந்து தங்கள் பால்யகால நட்புமுடல் பள்ளிப் படிப்பு என – இன்றைய வாழ்வு வரை அலசிடும் அழகையெல்லாம் அப்படியே எழுதிக் காட்டிய வாலி அவர்களையும் அதற்கு அப்படியே இசை அமைத்த மெல்லிசை மன்னரையும் மெச்சலாம்! பலவித உணர்வுகளை ஒன்றிணைத்துத் தன் குரலில் வழங்கிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை மறக்க முடியுமா?
இளமையில் தொடங்கி.. முதுமை வரை ஓடுகின்ற இல்வாழ்க்கையில் எத்தனை எத்தனை விருப்பங்கள்? எத்தனை எத்தனை திருப்பங்கள்? எல்லாம் நடந்தேற இணைபிரியா நண்பர்கள் இருவர் சந்திக்கும்போது அவர்களின் பரிமாற்றம் இப்படித்தான் இருக்குமோ?
அழகிய மறுபதிவாக அல்லாமல் வாழ்க்கையை ஒருமுறை திருப்பிப் பார்த்து பெருமூச்சு விடுதல் அலாதியானது! இது நம் அனைவரின் வாழ்விலும் இடம்பெறக் கூடிய ஒன்றுதான்! அதை நாம் எழுதி வைப்பதில்லை! யாரும் இசை அமைப்பதில்லை! நாமும் அதற்குக் குரல் கொடுப்பதில்லை! என்றாலும் இதோ நமது எதிரொலியாக! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்
புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்
பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
படம்: உயர்ந்த மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கவிஞர் வாலி
பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்
https://www.youtube.com/watch?v=1LavYqp80CA
அருமையான வரிகள்.
புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே உயர்ந்த மனிதன் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிய அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே,பாடலை இன்றைக்கும் கேட்டாலும். சில நொடிகளில் நமது இளமை காலத்திற்கு சென்று, அன்று அடைந்த மகிழ்ச்சியின் நிலையை இன்றும் அடையலாம்.