எஸ் வி வேணுகோபாலன்

 

images (2)

காதல் செய்பவரை விடவும்
அரைமணி முன்னதாக எழுந்திருக்கின்றனர்
காதல் எதிர்ப்பாளர்கள்
காதலர் தினத்தன்று

எதிர்ப்புத் தின்னி காதல்
இன்னமும் செழித்துப் பயிராகிறது

கண்களை இறுக்க மூடிக் கொள்வோரிடம்
காதுகள் வழியாக உள்ளிறங்கும் காதல்
செவிகளும் மூடப்படுகையில்
உடல்மொழியாகிச் சிலிர்க்கவைக்கிறது

‘இன்னிக்காவது எனக்கு கடுதாசி வந்திருக்கா’ என்று
அஞ்சல்காரரைக் கேட்கும் கிராமத்து ஆசாமிபோல
வழிமறித்துக் கேட்கிறது காதல்
கடந்து போகும் இளவட்டங்களை

கடிகார முள் வெளியே வந்து
குத்திப் போகிறது
தாமத வருகையில் தத்தளிக்கும்
காதல் உள்ளத்தை

நேரத்தோடு வருகிற காதல் பின்னர்
நேரம் காலமற்றும் போகிறது

வெற்றி பெற்றவர்களை வாழ வைக்கும் காதல்
தோற்றவர்களைச் சொல்லித்தான்
மேலும் மேலும்
தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது

காதலின் இளம் தோள்களில்
ஊஞ்சலாடிச் செல்வோர்
விஷப் பாம்புகள் சூழ்கையில்
காதலைப் பாதுகாப்பாகத்
தலைமீது ஏற்றி வைத்துக்கொண்டு
தாங்கள் விரைகின்றனர்
அபாயமிகுந்த வெளியைக் கடக்க

நேயத்தின் பெயரால்
வேகமாக வரத் தலைப்படுகிற காதல்
சாதியின் பெயரால் அளக்கப்படுகையில்
மத அடையாளத்தால் சோதிக்கப்படுகையில்
தலைகுனிந்து நிற்கிறது

அமைதியாகக் காட்டிக் கொள்ளும்
சமூகத்தின் வன்மத்தை
அம்பலப்படுத்தும் காதல்
வெறுப்பின் நெருப்பால்
எரிக்க முடியாத நேயத்தை
அன்பில் கரைத்து
உட்கொள்ளக் கேட்கிறது

வெயிலும் மழையும்
இடியும் மின்னலும்
புயலும் வெள்ளமும்
அமைதியும் ஆவேசமும்
புன்னகையும் கண்ணீருமாய்
எதிர்ப்பையும் எதிர்ப்பின் எதிர்ப்பையும்
எல்லாம் தனக்கே
உவமையாக்கிக் கொண்டு
எப்போதும் அழியமுடியாதபடி
எங்கும் தழைக்கிறது காதல்.

**************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *