இலக்கியம்கவிதைகள்

துணைவன் வேண்டும் !

-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

சீதனம் எதுவு மில்லை
சீரமைக்குப் பஞ்ச மில்லை
ஆதனம் அதுவு மில்லை
பேதையவள்  வாழ்வில் ஒன்றாய்ப்
பிணைந்திட வரனும் இல்லை!

கல்வியும் கற்றவள் – நல்ல
கனிவினை உள்ளத்தில் பெற்றவள்
சொல்லினில் தெளிவு கொண்டவள்
சுயநலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் அவளை
நாடியே வரவும் இல்லை!

குடிசை தான் வாழ்க்கை
கோபுரம் அவள் உள்ளம்
நடிகையாய் வாழ்வில் மாறும்
நரித் தனம் எதுவும் இல்லை!
அடிமையாய் அவளை அன்பால்
ஆண்டிடத் துணைவன் வேண்டும் !

அந்நிய நாட்டுக் கவளை
அனுப்பியே உழைக்கத் தூண்டித்
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமைசேர் துணைவன் வேண்டும்!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க