Blog

  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — சுடர்மதி மலர்வேந்தன். 

    முன்னுரரை:
    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை…
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
    கவியரசரால் எழுதப்பட்ட தீர்க்கமான வரிகள்.

    சரித்திரப் பக்கங்களில் இடம்பெற்ற ஒரு மனிதரின் … திருத்தம்… தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப் பற்றியதோர் கட்டுரை. தொட்டவை அனைத்தும் வெற்றிகளாகவே வந்து மடியில் தவழ, இவர் என்ன அதிசயப் பிறவியா? கேள்விகள் இன்றும் கூட இப்படித்தான் கேட்கப்படுகின்றன. இவரைப்பற்றி அறியும்பொழுது, 20-ம் நூற்றாண்டில் பிறந்து, இன்றளவும் நம் உணர்வோடு உறவாடும் மா மனிதர்… மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வருகிறார்… நம்மோடு இந்தக் கட்டுரையில்!

    விடிவெள்ளியின் உதயம்:
    ஜனவரி 17, 1917 கண்டியில் பிறந்த நம் தலைவர் அங்கேயே வளர்ந்து… வாழ்ந்து… உதிர்ந்திருக்க முடியும். கடவுள் நினைத்தார் போலும் “தமிழகமே நம்மை தூற்றும் இச்சக்ரவர்த்தியை அங்கு கொண்டு சேர்க்காவிடில்” என்று! கோபால மேனன், சத்ய பாமா தம்பதியருக்கு ஐந்தாம் பிள்ளையாய் பிறந்தார். ஐவரில் ஒருவன் என்பது போலாகாது.. கையின் கட்டை விரலாய் சிறப்புப் பெற்றார்.

    வறுமை:
    “இளமையில் வறுமை கொடுமை” இலட்சக் கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்த செம்மல், தன் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத அளவு, வறுமையில் உழன்றவர். தன் இரண்டு வயதில் தந்தையின் அரவணைப்பை இழந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தாயின் வளர்ப்பிலும், வறுமையின் தவிப்பிலும் வளர்ந்தவர். குடந்தை நகரை அடைந்து இம்மண்ணில் கால் பதித்தார். பின்பு மக்களின் மனதிலும் கூட என்பது உலகறிந்த ஒன்று!

    கலை வாழ்க்கை:
    தன் ஏழு வயதில் நாடகத்துறையில் நுழைந்தபொது எண்ணியிருக்க மாட்டார்… ஆம்… இந்த உலகம் எனும் நாடக மேடையிலும், தான் கதாநாயகனாக வலம் வரப் போகிறோம் என்று! பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் காலத்தின் கட்டாய சூழ்நிலையால் தள்ளப்பட்டு, நாடகங்களில் நடிக்கவந்தவரைப் போல் தெரியவில்லை. ஆர்வமும் தன்னம்பிக்கையும் மிளிர்ந்தன. தன் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல, தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை அனைவரைக்காட்டிலும் மிகச் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார். உடலையும் மனதையும் ஒருசேர வடிவமைத்துக் கொண்டார்.

    “கல்லுக்குள் உளி செலுத்தி சிற்பத்தைப் பெற வேண்டும்… ஆனால், இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது” மதுரை ஒரிஜினல் பாய்ஸ் குழுமத்தில்…

    திரையுலகம்:
    அக்காலத்தில் நாடகத்தில் ஒளிரும் மணிகள், பட்டைத்தீட்டப்பட்டு, அடுத்த கட்டமாக இடம்பெறப் போவது திரைத்துறை எனும் கிரீடத்தில் தான் காத்துக் கொண்டிருந்தது போலும். எம்.ஜி.ஆர். தம் வருகைக்காக! ஆரம்ப காலத்தில் சினிமா, ரோஜா மேத்தைபோல அமையவில்லை… முட்களாய் குத்தின தவறிய வாய்ப்புகள். ஆயினும், அம்முட்களையே தன் ஊன்றுகோலாக்கி முன்னேறினார் எம்.ஜி.ஆர் அவர்கள். 1936ல் தொடங்கிய திரை வாழ்க்கையை கைவிட மனமில்லாது, தான் முதல் அமைச்சர் ஆனா பின்னரும்கூட அதனைத் தன்னோடு அதனை இணைத்துக் கொண்டார். கடமை, பற்று என்பது இதுதானா என்று வியக்க வைத்தவரும் இவரே! அரசியல் கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போதே, நல்ல கருத்துக்களை, இதுவரை தான் சொல்லிவந்த திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர எண்ணினார்.

    1936 முதல் 1977 வரை கலை உலகில் அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள், அவரைப் புரட்சி நடிகராக மட்டுமில்லாமல், புரட்சித் தலைவராகவும் மக்களைப் பார்க்கச் செய்தது. தங்கள் அபிமான நடிகராக மட்டுமின்றி, நம்பிக்கை நட்சத்திரமாகவும் எதிர்பார்த்தனர்.

    வெற்றி நாயகன்:
    மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன், குலேபகாவலி, விவசாயி, அடிமைப்பெண், அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன் .. போதும் போதும்! வெற்றிப் படங்களின் பட்டியலிடவே பல ஏடுகள் வேண்டும்! நல்லக் கதைகளையும் கற்பனைத் திறனையும் சுமந்து நின்ற இயக்குனர்களுக்குக் கிடைத்த ஒப்பற்றக் கலைஞன். தயாரிப்பாளர்களின் அட்சயப்பாத்திரம்! முதலில் நாடகம், பின்பு சினிமா, அடுத்து அரசியல் என தன் நிறங்களை மாற்றிக்கொள்ளவில்லை எம்.ஜி.ஆர்.

    தன் பணிகளுக்கிடையே இடையூறு வராத வகையில் 1977வரையிலும் மக்களை மகிழ்விக்கும் கலைஞனாகவும் திகழ்ந்தார். இயக்குனர், தயாரிப்பாளர் என தான் தொட்ட துறைகளெல்லாம் வெற்றிப் பூக்களை மலர்ச் செய்தார்.

    தடைகள் துகள்களாக:
    முடியவே முடியாது! அவரா? கெடுபிடியான அந்த மனிதர் இதற்கெல்லாம் இணங்க மாட்டார்! ஒரு முதல்வர் சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா? சாத்தியப்படாத செயல். இவர் யாராக இருக்கக் கூடும்? 1977ல் பிரதமரான மொரார்ஜி தேசாய் தான் அவர்.. ஆம் .. எம்.ஜி.ஆர். தான் தொடர்ந்து நடிக்கப்போவதாக அறிவித்தபோது, இத்துணை எதிர்மறையான உறுதியுரைகளை சுற்றியிருந்தோர் கூறினார்.

    மறுநாள், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி அத்துனைப் போரையும் மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்தது. “தன் பணிகளுக்கு குந்தகம் நேராமல், திரு எம்.ஜி.ஆர் நடிப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” எனக் கூறியிருந்தார் மொரார்ஜி.

    இது உண்மைதானா? உண்மை ஆக்கியவர் எம்.ஜி.ஆர். மற்றொரு சம்பவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1972ல் தானே இயக்கிய “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். கட்சியைத் தொடங்கியாயிற்று. எதிர்த்து நிற்பது கருணாநிதி எனும் அரசியல் சிகரம்! இருந்தபோதிலும் படப்பிடிப்பு வேளைகளில் சற்றும் சுணக்கம் காட்டவில்லை. தி.மு.க. மதுரை மாவட்டச் செயலாளர் முத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “உலகம் சுற்றும் வாலிபன்” நம் ஊருக்கு வர மாட்டான். வந்தாலும் ஒரு நாள் கூட ஓடாது. நான் கூறியது தவறானால், சேலைக் கட்டிக் கொள்கிறேன்’ என்றார். படம் திரையானது. ஓடியது.. உசேன் போல்ட் போல மிக பிரம்மிப்பான அளவில்! தமிழகத்தில் மட்டுமல்ல அயல் நாடுகளில் திரையிடப்பட்ட ஒருசில திரைப்படங்களுக்குள் அதுவும் ஒன்று என்ற பெருமையையும் தட்டிச்சென்றது!

    இப்படியும் இருப்பாரா?:
    இருந்தார்… எம்.ஜி.ஆர். 1967-ல் மக்கள் போற்றும் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் சுடப்பட்டார். தகவலறிந்து அதிர்ந்தது தமிழகம். சுட்டவர் எம்.ஆர்.ராதா … “தன் பண பலத்தால், குண்டர்களை வைத்து காமராசரை கொலை செய்ய முயன்றார் எம்.ஜி.ஆர். என்பதுதான் அவர் சார்பாக வைக்கப்பட்ட வாதம்” .எம்.ஆர். ராதா கூறிய அந்த பண பலமும், மக்கள் மன்றத்தில் அவர் பெற்றிருந்த இடமும் அப்போது, எம்.ஜி.ஆரிடம் அதீதமாகவே இருந்தது. ஆனால், ஒரு மாநாட்டு மேடையிலே, “காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி” என்று தெளிவு படுத்திய எம்.ஜி.ஆர்… எவ்வாறு இப்படி ஒரு செயலை நினைப்பார்? கடுஞ்சொல் கூறியவனையே துரோகி… எதிரி என்று சொல்லும் நபர்களுக்கிடையே எம்.ஆர். ராதா அவர்களைத் தொடர்ந்து தன் நண்பராகவும்… சக பணியாளராகவும் மட்டுமே பார்த்தார் தலைவர் அவர்கள்.

    தி.மு.கவில் பங்களிப்பு:
    1953 தொடக்கம் முதல் 1972 வரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தவிர்க்க முடியாத, தடுக்க முடியாத ஓர் பிரபலமாகவே ஜொலித்தார். கருணாநிதி இறங்கி மைக்கைப் பிடித்தால் ஆர்ப்பரித்தது கூட்டம். எம்.ஜி.ஆர். இறங்கினார். மைக்கைப் பிடிக்க எழுந்தாலே அரங்கம் கர்ஜித்தது. அடுக்கு மொழி வசனங்களால் மக்களை வசியமாக்கும் கலைகளில் வல்லமை பெற்றவர்கள் திராவிடத் தலைவர்கள். தனக்கென்ற தனி பாணியில் மக்களிடையே சென்றார் எம்.ஜி.ஆர். பிரசார பீரங்கியாக சென்ற இடங்களில் எல்லாம் வாக்குகளோடு, மக்களின் தனி அன்பையும் பெற்றுக் கொண்டு தனக்கான ஓர் இடத்தையும் அவர்களிடையே விட்டுச் சென்றார்.

    “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை… இது ஊரறிந்த உண்மை… நான் செல்லுகின்ற பாதை… பேரறிஞர் காட்டும் பாதை” அண்ணாவின் இதயக்கனி ஆனார் மக்கள் திலகம்.

    உதயமானது அஇஅதிமுக … பேரறிஞரின் பாதையிலே!

    1967ல் மேலவை உறுப்பினர்…1969ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் என பல உயரிய பதவிகள் வகித்தாலும், கட்சியின் சாதாரணத் தொண்டனாகவே தன்னைக் கருதினார். தி.மு.கவின் ஒவ்வொரு படி வளர்ச்சியிலும் தன் அயராத உழைப்பை அடித்தளமாக்கினார். கொள்கைகளை விரும்பிய எம்.ஜி.ஆர் அதே சமயத்தில் உள்ளிருக்கும் சில களைகளையும் நீக்க நினைத்தார். அனைத்து தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினரும்… தங்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் சொத்து மதிப்புகளையும் கணக்குகளையும் கட்சியின் முன்பாக பட்டியிலிட வேண்டும் என்று எண்ணினார். அத்துணை பெரும் ஒப்புக் கொள்ளவில்லை. மக்கள் மன்றத்தின் முன் இந்தக் கோரிக்கையை வைக்கப் போவதாகத் தெரிவித்தார். ஆண்டுகளாகக் காத்திருந்த எதிரிகளுக்குக் கிடைத்துவிட்டது துருப்புச் சீட்டு! வெளியேற்ற எத்தனித்தார்கள்.. ஜெயித்தார்கள்.. நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.!

    நான் ஆணையிட்டால்… அது நடந்து விட்டால்… இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்! 17, அக்டோபர் 1972ல் உதயமானது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தன் ரசிகர் மன்றங்களை கட்சி அலுவலகங்களாக மாற்ற அழைத்தார். 20,000 கட்சி அலுவலகங்களோடு ஆரவாரமாக பறக்கிறது இரட்டை இலை.. எம்.ஜி.ஆரின் அரசியல் கனவுகளுக்கு சுருக்குக் கயிறு என்று எண்ணியவர்களைக் கண்டு பரிதாபம் மட்டுமே கொள்ள முடிகிறது. அது அவருக்கு அணிவிக்கப்பட்ட வெற்றி மாலை என அவர்கள் புரிந்து கொள்ள வெகு காலம் ஆகவில்லை.

    வெற்றி முழக்கம்:
    கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் தேடிவந்தது முதலமைச்சர் அரியணை. தி.மு.கவிற்கு அதிமுக எவ்வகையிலும் சளைத்ததல்ல என்பதனைச் சொல்லாமல் சொல்லியது அந்த வெற்றி.

    “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” … அதுவரை தி.மு.க. செய்யாத அல்லது செய்ய முடியாத ஒன்று! தமிழகம் சார்பாக இருவரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். இந்திரா, மொரார்ஜி… என எந்த அரசு மத்தியில் அமர்ந்தாலும் அவர்களுடன் ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

    சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்:
    எண்ணிலடங்கா சாதனைக் குவியலிலிருந்து சில… தமிழக்கத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த சத்துணவுத் திட்டம்… பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் மேம்பாடு. 1,20,000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை உறுதி செய்த பெருமைக்குரிய செயல்பாடு.

    நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு இரு பெரும் சிறப்புகள் ஒன்று தஞ்சை இராச ராசனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். மற்றொன்று 1981ல் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசால் நிறுவப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்…

    “ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்…” என்பார்களே அதுபோல தான் இவ்விரண்டும்!

    தமிழர் தலைவர்:
    “நீங்க நல்லா இருக்கணும்… நாடு முன்னேற…
    இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற!

    சென்ற இடங்களிலெல்லாம் புகழ்! வெற்றியின் கூக்குரல்! தமிழகத்திற்கு நன்மை செய்தாரா இந்த முதல்வர்? இல்லை… தமிழர்களுக்குச் செய்தார்… அண்டை நாடான இலங்கையில் மண்ணோடு மண்ணாக அழிந்து வரும் நம் தமிழனத்தின் துயர் கண்டு, வெகுண்டது தமிழகம்… ஆனால், இலங்கையில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்! வேறு நாட்டில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து சென்றவர்கள். அனுதாபங்களை அள்ளி வீசுவோம் என்றது இந்திய அரசு! செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் விரைந்தார் டில்லியை நோக்கி… பதிலாக, ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியையும் அளித்தது இந்திய அரசு. கடமை முடிந்தது என்பது போல் நினைக்கவில்லை நம் தலைவர். இயக்கங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார்… நேரடியாக! புலிகளின் முன்னேற்றத்திற்காக… விடுதலை வேட்கைக்காக… நான்கு கோடி தேவைப் பட்டது. அரசாங்க ரீதியாக வழங்க தடைஎற்பட்டபோது, தன் சொந்தப் பணத்தை கரங்கள் சிவக்க அள்ளி வழங்கியவர்.

    அமெரிக்காவை எதிர்நோக்கிய நெஞ்சங்கள்:
    எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது, இனி வரமாட்டார்… என்று ஒரு வதந்தி வந்த வேளையில் தமிழகமே இருளானது போல ஒரு மாயை! வதந்திகளும் அவதூறுகளும் புதிததல்ல! பொய்க் கூற்றுகளைத் தவிடுபொடியாக்கினார். நின்றார் ஆண்டிப்பட்டித் தொகுதியில் அமெரிக்காவில் இருந்தபடியே வேட்புமனு பெறப்பட்டது. அபாரமான வெற்றி! அனுதாப வெற்றி என்றார்கள் அறியாதவர்கள். ஆழிப் பேரலையாய் எழுந்து நின்றது தமிழகம். தலைவர் இல்லம் திரும்புகையில் வெற்றிடத்தையும் வெற்றி இடங்களாய் புரட்டிப் போட்டார்!
    1977 முதல் 1987ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து நீண்ட காலமாக இருந்த ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர். என்ற சிறப்பை இன்றளவும் தன்னோடு மட்டுமே வைத்திருக்கிறார் இந்த மகான்!

    மீளாத் துயர்:
    டிசம்பர் 24, 1987 அதிகாலை 3.30 மணி அத்துணை நெஞ்சங்களையும் சோக வெள்ளத்திலே மூழ்கடித்தது அந்தத் தகவல்! எங்கும் வன்முறை… கதறல், ஸ்தம்பித்தது.. தமிழகம்! வந்த துக்கம் தொண்டையை அடைத்தது! செய்வதறியாது திகைத்த மக்கள், துயரச் செய்தி தாளாது மாண்டோர் பலர்.

    எம்.ஜி.ஆர் ஒரு நபராகவோ… கட்சித் தலைவராகவோ பார்த்திருந்தால் ஏற்பட்டிருக்காது இப்படி ஓர் நிகழ்வு! அனாதைகளாக்கிவிட்டு இம்மண்ணுலகைவிட்டு மட்டுமே சென்றிருந்தார் மக்கள் திலகம்!

    கலைத்துறையில் தேசிய விருதுகள்… இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” என நூற்றுக்கணக்கான விருதுகளின் சொந்தக்காரர் மட்டுமல்ல… தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கொள்ளைக்காரரும் கூட!

    முடிவுரை:
    எம்.ஜி.ஆர். அவர்தம் வாழ்வின் சிறப்பைப் பேச எனக்குக் கிடைத்த இந்த 1300 வார்த்தைகள் போதுமா? நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், முதல்வர் … என்னவாக தோற்றம் கொண்டாலும், அவர் மக்கள் திலகம்! இதய தெய்வம்! தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழர்களுக்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்தவர்!

    தொண்டர்களைத் தன் தோழர்களாக பாவித்தவர். எளிமையும் உண்மையும் நெஞ்சில் கொண்ட கொள்கையும் அவரை தமிழக முதல்வர் எனும் சிம்மாசனத்தில் அமரச் செய்தது. சாத்தியமே இல்லை என்பவற்றைக்கூட தன் சட்டைப்பையில் சகஜமாக வைத்திருப்பார்! முடியுமா என்பவற்றை முடித்துவிட்டேனே என புன்முறுவல் பூத்தவர்!

    காலனே! எம்.ஜி.ஆர். என்பவர் உலகில் இல்லை என்று நீ எண்ணினால், ஏளனம் செய்யும் தமிழகம்! இல்லை இல்லை.. தமிழினம்! அஸ்தமிக்கும் சூரியனுக்கும் பஸ்பமாக்கும் உஷ்ணம் உண்டு… நன்றி மறந்தோர் அல்லர் தமிழர்! வழங்கிய கொடிகளும் அவர் நிறுவிய படைகளும் எக்காலமும் முக்காலமும் பறைசாற்றும் உந்தன் பெருமைகளை!

    நினைக்க கோடி உண்டு.. மறக்க ஒன்றே ஒன்று தான் – அவர் மறைவு

    இது முடிவுரை.. இந்தக் கட்டுரைக்கு மட்டுமே!

    Share
  • காதல் நாற்பது – 35 வேதனையே காதல்

     

    unnamed

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    என்னுடைமை அனைத்தும் நானுனக்கு

    அன்புடன் அளித்தால்

    அதற்கு மாற்றாக நீ

    எனக்கு உரிமையாய் ஆவாயா ?

    தினம் ஒவ்வொருவர் முத்தமுடன்

    இல்வாழ்வு ஆசியோடு

    விந்தையாக எண்ணப் படாது

    சொந்த மாவதை

    இழக்காமல் இருப்பேனா ?

    விழித்துப் புத்தரங்கை மேல்நோக்க

    வேறொரு வீட்டின்

    புதிய சுவர்களும், வெளி முற்றமும்

    எதிர்ப்படும்,

    என் இல்லம் தாண்டி !

    நிகழும் மாறுதலைக் காணாது

    மூடிய கண்களுடன்

    தேடி நிரப்பினோர்,

    இடத்தை நான் நிரப்ப நீ

    விடுவாயா ?

    கடின மானது அது !

    காதலைப் பற்றிக் கொள்ள

    முயன்றால்

    சோகத்தை முறிப்பது

    கூடுகிறது !

    எல்லாம் எனக்கு நிரூபிப்பது :

    வேதனை மெய்யாய்க்

    காதலென்று;

    சோகம் நிழலாய்த் தொடரும்.

    அந்தோ

    துக்கத்தில் உழன்றவள் நான்,

    ஆதலால்

    காதலிக்கக் கடின மானவள் !

    ஆயினும் நீ

    நேசிக்கிறாய் அல்லவா

    என்னை ?

    நெஞ்சை அகலத் திறந்து

    அணைத்துக் கொள்

    நனைந்த இறக்கை யுள்ள

    உனது புறாவை !

    ************

    Poem -35

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    If I leave all for thee, wilt thou exchange

    And be all to me? Shall I never miss

    Home-talk and blessing and the common kiss

    That comes to each in turn, nor count it strange,

    When I look up, to drop on a new range

    Of walls and floors, another home than this?

    Nay, wilt thou fill that place by me which is

    Filled by dead eyes too tender to know change?

    That’s hardest. If to conquer love, has tried,

    To conquer grief, tries more, as all things prove;

    For grief indeed is love and grief beside.

    Alas, I have grieved sol am hard to love.

    Yet love me–wilt thou? Open thine heart wide,

    And fold within the wet wings of thy dove.

    **********

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”கால்காட்டிக் கண்ணக் கனியிருக்கக் கன்றுக்காய்,
    மேல்காட்டும் பாசம் மதுரமேமேற்க், -கோள்காட்ட,
    காக்கைக்குத் தன்குஞ்சு கட்டிப்பொன் குஞ்சென்பேன்:
    வாழ்க்கைக்குத் ‘தாய்’யாத வம்’’….கிரேசி மோகன்….

    Share
  • ஆடல் காணீரோ – பகுதி 2

    -மேகலா இராமமூர்த்தி

    சிலம்பில், மாதவி ஆடியதாய் இளங்கோவடிகள் குறிப்பிடும் பதினோரு ஆடல்களும் அசுரரைக் கொல்ல அமரர் (தேவர் மற்றும் கடவுளர்) ஆடிய பதினோரு வகைக் கூத்துக்களே ஆகும். இந்த ஆடல்கள், நின்றாடல் (நின்றுகொண்டு ஆடுவது), படிந்தாடல் (தரையில் வீழ்ந்து ஆடுவது) என இருவகைப்படும்.

    இவையனைத்துமே புராணக் கதைகளை மையமாக வைத்து மாதவியால் ஆடப்பட்டவை. (புராணக் கதைகளின் தாக்கம் சிலப்பதிகாரக் காலத்திலேயே மிகுந்திருந்ததை இஃது உறுதி செய்கின்றது).

    கூத்தில் வல்லானாகிய சிவபெருமான் ஆடியதாய்க் கூறப்படும் ’கொடுகொட்டி, பாண்டரங்கம்’ எனும் இரு கூத்துக்களை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆடி அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தாள் மாதவி.

    ’அசுரர்களின் திரிபுரத்தை (முப்புரம்) எரித்துத் தம்மைக் காக்கவேண்டும்!’ madavi2எனும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுத் ’தீ’அம்பைச் செலுத்தித் திரிபுரத்தை எரித்தவரும், தேவர்கள் யாவரினும் உயர்ந்த தேவாதி தேவருமான சிவபெருமான், சுடுகாட்டரங்கிலே ஆடுகின்ற கொற்றவையைப்போல், உமையவள் தன் ஒரு பக்கத்தே இருந்து, பாணி, தூக்கு, சீர் முதலிய தாளங்களைச் செலுத்த (மாதொருபாகனாய்) வெற்றிக் களிப்பில் கைகொட்டி நின்று ஆடிய ஆடலே ‘கொடுகொட்டி’ ஆகும்.

    பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
    எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
    உமையவ
    ளொருதிற னாக வோங்கிய
    இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் என்கிறார் இளங்கோ.

    கொடுகொட்டி ஆடிய இறைவன் பின்பு ஓர் தேரில் ஏறிக்கொண்டு, தம் கோலத்தையும் பைரவிபோல் மாற்றிக்கொண்டு (பெண்வேடங்கொண்டு) அத்தேரைச் செலுத்தும் தேர்ப்பாகனாய் நின்றிருந்த நான்முகன் காணும்படித் தம் உடலெங்கும் வெண்ணீற்றையணிந்து ஆடிய ஆடலே பெரிய பாண்டரங்கக் கூத்தாகும். (தேராக விளங்கியவர்கள் தேவர்கள்; தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகள் நான்மறைகள் என்னும் புராணக் கருத்தும் ஈண்டுக் கூறப்படுகின்றது.)

    தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
    பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும் என்கிறது சிலம்பு.

    சிவனார் ஆடிய இக்கொடுகொட்டிக் கூத்தையும், பாண்டரங்கக் கூத்தையும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலும் விரிவாய் விளக்கிச்செல்வது இங்கு நினைந்தின்புறத்தக்கது.

    படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
    கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குற்
    கொடிபுரை நுசுப்பினாள்கொண்டசீர் தருவாளோ

    மண்டமர்பலகடந்து மதுகையா னீறணிந்து
    பண்டரங்க
    மாடுங்காற்பணையெழி லணைமென்றோள்
    வண்டரற்றுங்கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ.

    இவை கற்றறிந்தார் ஏத்தும் கலியில் இடம்பெற்றுள்ள கவின்மிகு வரிகளாகும்.

    சீர்த்திமிகு சிவதாண்டவங்களைத் தொடர்ந்து அஞ்சனவண்ணனாகிய திருமால், கஞ்சனின் (கம்சன்) சூழ்ச்சிகளை வென்று அவன் அனுப்பிய யானையின் கொம்பை ஒடித்து மகிழ்ச்சியோடு ஆடிய ஆடல்களுள் ஒன்றான ‘அல்லியத் தொகுதி’யையும், கஞ்சன் ஏவிய அவுணனை (வாணாசுரன்) அழித்தற்பொருட்டு நிகழ்த்திய ’மற்கூத்தை’யும் அடுத்தடுத்து ஆடி அரங்கத்தோர் கண்களுக்குப் பெருவிருந்து படைத்தாள் கலைமாது மாதவி.

    கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
    அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
    அல்லியத் தொகுதியும் அவுணற் கடந்த
    மல்லின்
    ஆடலும்… இவை அல்லியத் தொகுதி மற்றும் மற்கூத்து குறித்துக் காப்பியம் சுட்டும் செய்திகள்.

     

    madaviமாயோனைத் தொடர்ந்து மேடையில் (மாதவி உருவில்) ஆடவந்தவர் சேயோனாகிய முருகப்பெருமான். கடல் நடுவில் ஒளிந்த சூரனை (சூரபதுமனை) வென்ற வேலன், கரியகடலின் நீரலைகளையே அரங்கமாகக் கொண்டு ’துடி’ (உடுக்கை) எனும் வாத்தியத்தை வாசித்தபடி ஆடியதே ’துடிக்கூத்து’ ஆகும். அத்துடிக்கூத்தைத் துடியிடையாள் மாதவி ஆடிய நேர்த்தியானது பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கச்செய்தது.

    தொடர்ந்து வந்தது, முருகப்பெருமான் ஆடிய மற்றோர் ஆடலான ’குடைக்கூத்து’. தன்னோடு போர்புரிந்த அவுணர்களின் படைக்கலங்களையெல்லாம் காற்றில் பறக்கச்செய்த முருகவேள், அவர்கள் நிராயுதபாணிகளாய்ச் செய்வதறியாது துன்புற்றுநின்ற வேளையில் குடை ஒன்றைத் தன்முன்பக்கமாக வைத்துக்கொண்டு ஆடிய ’குடைக்கூத்தை’ தத்ரூபமாக மேடையில் ஆடினாள் அந்த ஆடலரசி.

    …………………………………மாக்கடல் நடுவண்
    நீர்த்திரை
    அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
    சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்
    படைவீழ்த்
    தவுணர் பையு ளெய்தக்
    குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும் என்பன துடிக்கூத்து மற்றும் குடைக்கூத்தை விளக்கும் சிலப்பதிகார வரிகள்.

    செம்பஞ்சுக் குழம்பணிந்த மென்பாதங்கள் ஆடுதலால் மேலும் சிவக்க, கண்டிருந்தோர் நெஞ்சங்கள் ஆடல்கண்டு பெரிதும் உவக்க, மாதவிப் பொன்மயிலாள் அடுத்து ஆடிய ஆடலென்ன…?

    தொடரும்…

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 158

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    இரத்தினக் கடைத்தெரு

    குற்றங்கள் பன்னிரண்டுள்
    மிகவும் கொடுமையானதான
    காகபாதம் களங்கம் விந்து இரேகை
    இவை நான்கும் நீங்கி,

    குணங்களில் குன்றாத வண்ணம்
    நூலோர் கூறும் சிறப்புகளான
    மிக்க நுண்மையுடைய முனைகளையும்        gems
    நால்வகை நிறத்தையும்
    நன்மைமிக்க ஒளியையும் உடைய
    வைரக்கற்கள் இருந்தன.

    இரேகை மாலை இருள் எனும்
    குற்றங்கள் நீங்கிய
    இளங்கதிர்களையுடைய பச்சைநிற
    மரகத மணியால் ஆன மாலைகள் இருந்தன.

    பூச மீனின் வடிவினையுடைய,
    பொன்னைக் களங்கமில்லாமல்
    தெளித்துவைத்தது போன்ற
    புருடராக மணிவகைகள் இருந்தன.

    நூலோர் விதித்த முறைப்படி
    குற்றமற்று விளங்கும்
    பதுமம், நீலம், விந்தம், படிதம் எனும்
    நால்வகை மாணிக்கக் கற்களும் இருந்தன.

    குற்றமில்லாத கதிரவன் ஒளியும்
    தேன்துளி நிறமும் இழைந்த
    வைடூரிய மணிகளும்
    இருளைத் தெளிய வைத்தது போன்ற
    நீலமணிகளும் இருந்தன.

    ஒன்றுபட்ட பிறப்பினை உடையனவும்
    வண்ணங்களால் ஐந்து வகைப்பட்டனவாகவும் இருக்கின்ற
    நன்மை பொருந்திய
    மாணிக்கம் புருடராகம் வைடூரியம் நீலம் கோமேதகம்
    இந்த மணிகளும் இருந்தன.

    காற்று, மண், கல், நீர்
    இவற்றால் ஏற்படும் குற்றங்கள்
    சிறிதும் இல்லாமல்
    வெள்ளியைப் போல வெண்மை நிறமும்
    செவ்வாயைப் போலச் செம்மை நிறமும் கொண்ட
    உருண்டு திரண்ட முத்துவகைகளும் இருந்தன.

    நடுவே துளை கொண்டவையும்
    கல்லிடுக்கில் புகுந்து வளைவு கொண்டவையும்
    திருகல் முருகல் ஆகிய குற்றங்கள் நீங்கிய
    சிவப்பு நிறமுடைய கொடிப்பவளங்களும்
    அந்த வீதியில் குவிந்து கிடந்தன.

    இந்த நவரத்தினங்களின்
    பிறப்பும் சிறப்பும் அறிந்து சொல்லக்கூடிய
    வணிகர்களையும் மிகுதியாகக் கொண்ட
    அந்த இரத்தினவீதி
    பகைவர்களால் எக்காலத்துக்கும்
    அழிக்கப்படாத வண்ணம்
    சிறப்பில் மேலோங்கி இருந்தது.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 180 – 200
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: http://www.thebesthotels.org/room-photo-gems-ID263760.htm

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ஏகமவன், ஏவலிடும் ஏரார்ந்த கண்ணியின்கை,
    ரேகையவன், காதலி ராதையின், -போகமவன்,
    ஏகாக்ரம் கொண்டோர்சாய் ஏகாந்தத் தூணவன்,
    பூகாக்க வந்த பரம் ….கிரேசி மோகன்….

    Share
  • அன்னை அந்தாதி

    கிரேசி மோகன்
    ———————-

    காப்பு
    ——–

    images

    துலங்குவெண் நீறு துனிப்பிறை கோடு துணைக்கரங்கள்annapoorna-204x300
    இலங்கரன் பாகம் இடப்புறம் ஏகும் இமையவளின்
    வளம்புகழ் வீரம் வணங்கியந் தாதி யினிலுரைக்க
    களம்புகுந் தானை முகத்தனைக் கொன்றோன் பதமரணே….(1)….

    அரனும் அரியும் அயனும் அளிக்க இயன்றிடாத
    வரம்தரும் கற்பக வல்லியின் பாதம் வழுத்திடுவோர்
    நரனாய்ப் பிறந்து நடைபிண வாழ்வில் நலிந்திடாது
    பரணப் பரத்துப் பதவியால் வெல்வர் பிறப்பிறப்பே….(2)….

     
    பிறவா வரம்தரும் மாறிப் பிறந்தால் எமன்கரத்தால்
    இறவா திருந்திடச் செய்யும் இதய குகைதனிலே
    மறவா தெழுந்தரு ளும்பார், மகனே எனவழைத்து
    உறவாம் அபிராமி மாதா உறவிந் துலகினிலே….(3)….

     
    உலகவள் நெற்றி விழிவந்து காய்ந்த ஒளித்துகளே
    திலகமாய் அங்கு திகழும் பரிதியும் திங்களுமே
    உலவிடும் செவ்வாய் புதன்வ்யாழன் வெள்ளி கிரகமெலாம்
    கலகங்கள் செய்யா கதியென் றவள்பாதம் கொள்ளுமினே….(4)….

     
    கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்durga_face
    சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
    செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
    நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே

    (OR)தோழி எனஅவளே….(5)….

     
    அவளை நினைத்து அவலை இடித்தால் அவளசையாள்
    அவளைத் துதித்தல் அவளை ஸ்மரித்தல் அவளருளே
    அவளே நமக்குள் அவளாய்த் திளைத்தால் அதுயிகமே
    அவளில் கலந்து அவளாய் முடிந்தால் அதுபரமே….(6)….

     
    பரசிவ வெள்ளம் பராசக்தி உள்ளம் புரிந்துணர்தல்
    பெறுதவம் ஆகும் பிரபஞ்சம் வந்து பிறந்திறக்கும்
    உறுமவம் நீங்கும் உலகிதன் மாய உருவொழிந்து
    சருவமும் சக்தி உருவெனும் உண்மை வசப்படுமே….(7)….

     

    வசமான சித்தி விஷமாம்அதனைவிரும்பிடாதே
    நிசமான கூலி யசமானி அம்மா நிழல்துணையே
    அசலான தெய்வம் அவளுண்டு வேறே அணுக்கமெலாம்
    பசையாகக் கம்பளிப் போர்வையில் ஒட்டும் பிசுபிசுப்பே….(8)….

    Goddess Parvati

    பிசுபிசுத் தோடும் பிறவிப் பிணிகள் கொசுக்கடியாய்
    தசகத் தலைகள் துணித்தவன் தங்கை திருவடிமுன்
    திசையெட்டு தீவளி அப்புமண் எங்கும் திகழ்பவளை
    வசனித்த பட்டர் அபிராமி அந்தாதி வாழ்த்துமினே….(9)….

     
    வாழ்த்த வயதுண்டு வல்லாள் அவளென்றும் வாலையடா
    பாழ்தவம் பூணும் விரதங்கள், பக்தியே போதுமடா
    நாழ்பட நாழ்பட நம்பிக்கை சேர்த்திடும் நாயகிமுன்
    தாழ்வு உயர்வெலாம் தாயவள் கண்முன் தளசமமே….(10)….

     

     

     

     

     

    சமமவள் நோக்கு சரியோ தவறோ சரணடைய477339
    இமையெனக் காத்து இருகரம் நீட்டி இகபரத்தை
    அமைவுறச் செய்வாள் அபிராமி அன்னை அவளிருக்க
    சமயமாய் வீணே சடங்குகள் செய்தல் சிரிசிரிப்பே….(11)….

     
    சிரித்திட மாதுளை, சம்புமுன் கொவ்வை, சினமடைந்து
    முறைத்திட பாகல், முறுவலில் முல்லை, முனிகணங்கள்
    சிரத்தினில் காய்ந்து சிவப்பழம் ஆகிடும் செவ்விதழை
    தரித்திடும் தாய்முன் தலைவணங் கித்தாள் தொழல்தவமே….(12)….

     
    தவமறியேன் தான தர்ம மறியேன் திருமுறைகள்
    விவரமாய் கூறும் வழிய றியேன்தாள் வணங்கிடுவோர்
    சிவமறியேன் சக்தி வழிபா டறியேன் சலித்திடும்
    அவமறிந்தேன் அம்மா அதனால் வந்தேன் அருள்பெறவே….(13)….

     
    பெறவந்தேன் பேரின்பம் பிச்சி யுனைப்போற்றி பாசுரங்கள்
    அரவிந்த தாதுவை அள்ளும் அளிபோலே அம்பிகையே
    குறவன்தன் பெண்வள்ளி கொண்டவன் கையில்வேல் கொள்ளவன்றுimages (1)
    தரவந்த துள்ளலில் தந்தருள இங்கு வாவுமையே….(14)….

     
    (உமையாளை ஈசன் சுமையாளை பக்தர் படுந்துயர்க்கு
    குமைவாளை கண்கள் இமையாளை கஷ்டம் களையபக்கம்
    அமைவாளை சொல்லில் சமையாளை இல்லா உவமையாளை)

    வாயுண்ட தாம்பூலம் சிந்த வரதன் வரகவியாம்
    வாயென்றும் பேசாத மூகனோ வாக்கிற்(கு) அதிபதியாம்
    வாயென்ற பட்டர்க்கு வானத்தில் வந்த வளர்பிறையே
    தாயென்ற போர்வையில் தந்தைக்(கு) இணையான தத்துவமே….(15)….

     
    தத்துவக் கோலுக்குத் தேறா தருகற் பகமவளாம்
    சத்தியம் தர்மங்கள் சார்ந்தோர் சிந்தையிலும் சிக்கவொணா
    பத்தினி பக்தர்தம் பித்துக்(கு) அடிமையாம் பிச்சியவள்
    உத்தமி ஈசர்தம் உடலி டபாகம் உற்றவளே….(16)….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 23, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள்

    Narayanan1

    “தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கவும், குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் மற்றும் குற்றங்களுக்கு தண்டனை பெற்ற குழந்தைகளைப் பாதுகாக்கவும் இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. நிர்வாக சீர்கேடு காரணமாக இந்த இல்லங்கள் சிறுவர்களை சீரழிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்”

    என்ற செய்தி நாளிதழில் வெளியானால் திரைப்படம், அரசியல், வன்முறை போன்ற கருத்தைக் கவரும் அல்லது சர்ச்சைக்குரிய செய்தியாக இல்லாத காரணத்தால் படிப்போர் பலரது கவனத்தையே இச்செய்தி கவராது. சிலர் தலைப்பை மட்டும் படித்துவிட்டு மறு வினாடி மறந்துவிடுவார்கள், மேற்கொண்டு அவர்கள் நினைவில் அது தங்காது. மற்றும் சிலர் படிப்பார்கள் செய்திக்காக கொஞ்சம் அக்கறையுடன் கவலைப்படுவார்கள், பிறகு அதைப்பற்றி நினைப்பதில்லை. ஆனால் ஒருவருக்குக் கூட யார் இந்த சமூக ஆர்வலர்கள், இப்படி தனது நேரத்தையும் உழைப்பையும் அக்கறையுடன் பயன்படுத்தி சமூகத்தில் யாரும் அக்கறை கொள்ளவே விரும்பாத ஒரு சிலருக்காக இப்படிப் போராடுகிறார்களே என்று சிந்திக்காமல் போவதே இன்றைய நடைமுறை வாழ்க்கையின் நிலை. ஆங்கிலத்தில் “Unsung Hero” என்று நாம் குறிப்பிடும் அது போன்று “புகழப்படாத நாயகர்”தான் இந்தவாரத்தின் வல்லமையாளர் சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள்.

    சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள், மனித நேயம் நிறைந்த உள்ளத்துடன் சமூக அவலங்களில் மாட்டித்தவிக்கும், தன்னைக் காத்துக் கொள்ள குரலெழுப்ப இயலாத உயிர்களுக்காக அக்கறையுடன் பொதுநல வழக்குகளாகத் தொடுத்து பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடிவருபவர். அவரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற வாரம் “சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன” என்று இவர் தொடுத்த பொதுநல வழக்கில் அக்குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதுமட்டுமின்றி, மேலும் இவரது இரு குறிப்பிடத்தக்க பொதுநல வழக்குகளில், யாருமே ஆதரவு தராத நிலையில் சமுதாயத்தில் அல்லலுறும் மேலும் இரு குழுவினருக்கும் நியாயம் கிடைக்க இந்த மாதம் வழி பிறந்துள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கின் விளைவாக தமிழகத்தில் சென்ற வாரம், மார்ச் 15 முதல் இதற்கான தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. விசாரணைக் கைதிகளின் பாதுகாப்பிற்காக காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுகொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது.

    ‘பாடம்’ நாராயணன் அவர்கள் மாற்றம் இந்தியா(Change India) என்ற அமைப்பின் இயக்குநரும், ஒரு கல்வியாளரும், முன்னர் வெளிவந்த பாடம் என்ற சமூக அக்கறை கொண்ட மாத இதழின் ஆசிரியரும் ஆவார். இவரது சமூகப்பணிகளை, பொதுநல வழக்குகள் பற்றிய நாளிதழ் செய்திகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், திருமிகு சுபாஷிணி ட்ரம்மல் மற்றும் திரு. ராம் காமேஸ்வரன் ஆகியோர்.

     

    “பாடம்” நாராயணனின் முக்கியமான பொதுநல வழக்குகள் சிலவற்றைப் பற்றிய தகவல்கள் நாளிதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டு  அவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

    சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களில் உள்ள குழந்தைகளின் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மாதம் இரு முறை பெற்றோர்கள் குழந்தைகளை பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதால் தற்கொலை அல்லது வன்முறைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் கோபம், பயம், நம்பிக்கையின்மை மற்றும் குழப்பமான மனநிலையோடு வெளியே வருகின்றனர். இது அவர்கள் மீண்டும் குற்றங்களைச் செய்ய தூண்டுகின்றன. குழந்தை இல்லங்களில் போதுமான பாதுகாப்பு அலுவலர்களும் உளவியல் ஆலோசகர்களும் இல்லை. பல இடங்களில் மேற்பார்வையாளர்களே மாவட்ட குழந்தை பாது காப்பு அலுவலர்களாக உள்ளனர். இது போன்ற சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன என்பது சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களைப் பற்றி இவர் தொடுத்த பொதுநல வழக்கு.

    கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செய்யக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் “பாடம்” நாராயணன் ஒரு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” எனவும் எச்சரித்தது. பாடம் நாராயணன் அவர்கள் தொடுத்த பொதுநல வழக்கின் காரணமாக, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை போடப்பட்டுள்ளது, இத்தடை தமிழகத்தில் மார்ச் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள் சில வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கிவிட்டு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    பாடம் நாராயணன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் (1,567 காவல் நிலையங்களிலும்), கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். விசாரணைக் கைதிகளை காவல்துறையின் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பொதுநல வழக்கிற்கு பதில் அளிக்க தாமதமான காரணத்தால் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் அளித்தது. அத்துடன், பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுகொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது.

    இவரது பொதுநல வழக்கின் காரணமாக, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்துபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் வாகன சோதனையில் ஈடுபதுவதற்குத்  தடை கூறப்பட்ட பொழுது, வாகன சோதனை மேற்கொள்ள குறுக்கே நின்ற அத்தடையை அகற்றி  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவை நீக்கக் கோரி பாடம் நாராயணன் மற்றும் சில தொண்டு அமைப்பினர் மனு தாக்கல் செய்து தடை நீக்கத்தைக் கைவிடக் கேட்டுக் கொண்டனர்.

    தமிழக அரசு ஏற்படுத்திய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் கால தாமதம் ஏற்பட்டு இயங்காமல் இருந்தது. கமிஷன் முழு அளவில் இயங்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி “பாடம்’ நாராயணன் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன், வருடத்திற்கு 20 சதவீதம் மது விற்பனை குறைப்பும், ஞாயிறு கட்டாய விடுமுறையும் முக்கிய அம்சமாக  இருக்க வேண்டும் என்று அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடி வருகிறார்.

    கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் தவிர்த்த தனியார் அறக்கட்டளைப் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் இட ஒதுக்கீடுகோரி மனுதாக்கல் செய்தார்.

    இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவான வாசகத்தை தனக்கு முன்னும் பின்னுமாக அணிந்துகொண்டு தன் மகளுடன் கண்காட்சியில் கருத்து சுதந்தரத்தை ஆதரித்தும், எழுத்தாளருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதத்திலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்

    மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து அரசின் முடிவுகளை கண்டிக்கும் விதமாக கல்வியாளர் என்ற முறையில் தனது எதிர்ப்பைத்  தொலைக்காட்சி ஊடகம் வழியே வெளிப்படுத்தினார்.

     Narayanan newsNarayanan0

    கீழு ள்ள செய்திகள் நாளிதழ் தளங்களில் இருந்து திரட்டப்பட்டு, சமீபத்திய நிகழ்வுகளில் தொடங்கி ‘இன்று முதல் அன்று வரை’ என காலவரிசைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது:

     

    குழந்தைகளை சீரழிக்கின்றனவா சிறார் சீர்திருத்த இல்லங்கள்?- சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
    March 20, 2015
    தி இந்து
    http://tamil.thehindu.com/tamilnadu/article7014450.ece

    மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை: தமிழகத்தில் மார்ச் 15 முதல் அமல்
    March 12, 2015
    தி இந்து
    http://tamil.thehindu.com/tamilnadu/article6985539.ece

    காவல் நிலையக் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்
    March 10, 2015
    தினமணி
    http://www.dinamani.com/latest_news/2015/03/10/காவல்-நிலையக்-கண்காணிப்பு-க/article2707005.ece

    பெருமாள் முருகனை ஆதரிப்போம்
    January 14, 2015
    வலைப்பதிவு: Amudhan RP, vaediyappan
    http://supportperumalmurugan.blogspot.com/2015/01/blog-post_84.html

    கழிவறை இல்லாததால் பெண் வன்கொடுமை அதிகரிக்கிறதா?
    June 7, 2014
    தினமலர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=993303

    ஆறாக ஓடத் தயாராகிறது சரக்கு
    April 28,2014
    தினமலர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=964118

    மனித கழிவுகளை சுத்தம் செய்வதில் 30 பேர் பலி: தமிழகத்தில் நிரந்தர தீர்வு தேவை
    September 23, 2013
    தினமலர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=810064

    குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன்: முழு அளவில் செயல்படுவது எப்போது?
    June 30, 2013
    தினமலர்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=746519

    Plastic ban: constraints and challenges
    April 30, 2013
    The Hindu
    http://www.thehindu.com/news/cities/chennai/plastic-ban-constraints-and-challenges/article1475244.ece

    வாகன சோதனை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்குத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
    ஏப்ரல் , 02 , 2011
    மின் செய்தி மாலை

    “பாடம்” நாராயணன் தனது சமூக அக்கறையை பொதுநல வழக்கு தொடர்வதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாளிதழ்களில் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறார். அவரது தளத்தில் தொகுக்கப்பட்டுள்ள அக்கட்டுரைகள், கட்டுரைகளின் மையக் கருத்துகளுடன் இப்பதிவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் சமூக ஆர்வலரான இவரது சமூக அக்கறையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். நலிந்தோருக்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து பொதுநல வழக்குகள் தொடரும் “பாடம்” நாராயணனை வல்லமையாளராகப் பாராட்டி அவர் தம னது சமூக நலப் பணிகளில் தொடர்ந்து வெற்றியடைய வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    மேலும் தகவலுக்காக:
    Blog:
    http://paadam-pm.blogspot.com/
    http://www.paadamnarayanan.blogspot.com/
    Facebook: https://www.facebook.com/paadam.narayanan/

    பாடம் (மாத இதழ்) ஆசிரியர் : அ.நாராயணன்
    http://www.paadam.in/

    காணொளி: Thanthi TVhttps://youtu.be/HEGlajEViXg

     

     

    செய்தித்தாள் கட்டுரைகள்:
    Dinamani (25-05-2009): கட்டுரைகள் – அழுவதா? சிரிப்பதா? – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-25-05-2009.html
    …கூவமும், தமிழகமெங்கும் இருக்கும் ஓடைகளும், நீர்நிலைகளும், ஆற்றுப்படுகைகளும் நிலத்தடி நீரும் இன்னும் பாழ்படாமல் தடுப்பதற்குத் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.

    Dinamani (23-03-2010): கட்டுரைகள் – குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-23-03-2010.html
    …கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, மாசுக்கட்டுப்பாடு, கழிப்பிடப்புரட்சி, இயற்கை பாதிப்பில்லாத வளர்ச்சி போன்ற எல்லா சுற்றுச்சூழல் நடவடிக்கையுமே சமூக நீதிக்கான ஒரு பயணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

    Dinamani (02-07-2010): கட்டுரைகள் – மீண்டும் லாட்டரி ஓநாய்களா? – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-02-07-2010.html
    …தமிழகத்தில் லாட்டரி விற்பனை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பும், தமிழக அரசுக்கு ரூ. 500 கோடி வருமானமும் கிடைக்கும் என்றும் இந்த முதலாளிகள் கூறுகின்றனர். லாட்டரி முதலாளிகளின் இக்கூற்று, சிறுவர்களுக்காக நீதிக்கதைத் தொகுப்புகளில் தவறாமல் இடம்பெறும் கதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதுதான் வெள்ளாடுகள் மழையில் நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை.

    Dinamani (21-5-2010): கட்டுரைகள் – நெஞ்சில் உரமும் இல்லை; நேர்மைத் திறமும் இல்லை! – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-21-5-2010.html
    …டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால், 35,000 ஊழியர்களின் வேலை போய் விடும் எனும் முதலமைச்சரின் விளக்கம், பாரதியின் இந்தக் கவிதை வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.””நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.”

    Dinamani (29-04-2010): கட்டுரைகள் – அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே! – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-29-04-2010.html
    …தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தினால் தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.
    அதேசமயத்தில் பிளாஸ்டிக் தடையினால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களையும் வேலையிழப்பிலிருந்தும், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்தும் பாதுகாக்க முடியும்.

    Dinamani (15-11-2010): கட்டுரைகள் – சாலைகள் நரபலி பீடங்களா? – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-15-11-2010.html
    …குடித்துவிட்டு ஓட்டுபவருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 6 மாதம் சிறைத் தண்டனை அளிக்க முடியும். குடித்துவிட்டு, விபத்து ஏற்படுத்துபவருக்கு, செக்ஷன் 304(ஏ) பிரிவின்படி, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க முடியும். ஆனால், தமிழக அரசும், உள்துறையும், அதன் அங்கமான டாஸ்மாக் நிர்வாகமும், பார் உரிமையாளர்களும் இணைந்து, மது விற்பனையை அதிகரிக்க வெளிப்படையாகவே பல சட்ட மீறல்களில் ஈடுபடுவதோடு, குடித்து விட்டு ஓட்டுவதற்கும் தாராளமாக அனுமதிக்கின்றனர்.

    Dinamani (10-08-2010): கட்டுரைகள் – முள்வேலி இல்லாத அகதி முகாம்கள்! – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-10-08-2010.html
    … 5,000 ஏழைக் குடும்பங்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த கொள்கை வகுக்க நினைப்பதே ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆரோக்கியமற்ற சிந்தனை.
    கொள்கைகூட வகுக்காமல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று 22,000 குடும்பங்களை முகாம்கள் போன்ற வளாகங்களில் முடக்கியதற்கு பிராயச்சித்தம் தான் என்ன?
    வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள்.

    Dinamani (14-10-2010): கட்டுரைகள் – பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க! – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-14-10-2010.html
    …சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.

    Dinamani (20-9-2010): கட்டுரைகள் –தமிழக அரசின் “ஜிம் க்ரோ’ சட்டங்கள் – அ.நாராயணன்
    http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-20-9-2010.html
    …அரசின் பெரும்பாக்கம் பிரம்மாண்ட மறு குடியமர்வுத் திட்டம் என்பது நியாயமற்றது – விழுமியமற்றது, குறிப்பாக யோசனையற்றது. நாளை பிறக்க இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இன்றைய அரசும், பெரிய நிறுவனங்களும் இணைந்து செய்யும் கூட்டுத் துரோகம்.

    Share
  • எழுதுகோல் எடு!

    வேதா. இலங்காதிலகம்

    images

    ஆ வரைந்து மொழியறிந்த காலம்
    பூ வரைந்து ரசித்ததொரு காலம்
    பா வரைந்து திளைப்பதிக் காலம்.
    ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.
    எழுதுகோல் எடுத்திடு! எழுதுவோம் கவி.
    பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி
    கழுவிட வழிகள் பலவாய்க் குவி!
    நழுவிடாதே நடுவோம் நற் கவி!

    தேட்டம் தொடர்! பாட்டை வடி!
    நாட்டமுடன் பல இதழ்கள் படி!
    வாட்டம் தொலை! வாழ்வின் படி
    ஆட்டம் காணாது இறுகப் பிடி!
    வல்லமையாய் மொழிக் கடலுள் ஆழ்ந்து
    நல்ல பாக்கள் பல குவித்து
    வல்லாங்கு அறிவில் திறன் கலந்து
    வெல்ல வேண்டும் வெற்றியை அணைத்து.

    Share
  • தாகூரின் கீதப் பாமாலை – 2

    unnamed

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    போகட்டும் என் கண்மணி !
    போகட்டும் !
    காதல் என்பது புளுகு மூட்டை
    இனிக்கும் வேதனை !
    வலிக்கும் ஆலிங்கனம் !
    புரிய வில்லை அது புகல்வது !
    பூக்களின் கோர்ப்பை
    ஊக்கிடும் என் விழிகள்
    பொழியும் கண்ணீர் துளிகள் !
    சுயச் சமர்ப்பணத் துக்கு
    முயலும் இதயம்
    வேறொன்றை வணங்கிட :
    ‘ஏற்றுக் கொள் என்னை
    ஏற்றுக் கொள் என்னை’
    என்று யாசிக்கும் மாற்றான்
    முன் மண்டியிட்டு !

    ஆண்டாண்டு தோறும் நாம்
    துயரம் அடைவது —
    எப்போ தாவது நின்று
    ஒருகணம்
    ஒருவரை ஒருவர்
    கண்டு களிப்பது, இருவரும்
    கட்டிப் பிடிப்பது —
    கண்ணீர்க் கடலில் மிதப்பது
    மற்றவருக் காகப் புன்சிரிப்புகள்
    இவை எல்லாம் ஏற்புடைத்தா ?
    வாழ்க்கை ஆனந்தமே
    குறிக்கோளாய்த் தேடுவ தெல்லாம்
    ஒருவன் வாழ்வுப் பூரிப்பை
    அடியோடு
    கெடுத்து விடுவது !

    +++++++++++++++++++
    பாட்டு : 313 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). கவர்ச்சிக் கானங்கள். காதலிக்கத் தேடிக் கிடைக்காத பெண்கள்

    Source

    1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

    from Bengali & Introduced By : Kalpana Bardhan

    2. A Tagore Testament,
    Translated From Bengali By Indu Dutt
    Jaico Publishing House (1989)
    121 Mahatma Gandhi Road,
    Mombai : 400023

    *********************

    Share
  • படக்கவிதைப் போட்டி (5)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11075315_10205201894081371_1963618067_n

     

    அமுதா ஹரிஹரன்
    அமுதா ஹரிஹரன்

    அமுதா ஹரிஹரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப்          பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • ஆடல் காணீரோ – பகுதி 1

    -மேகலா இராமமூர்த்தி

    ஆய கலைகள் அறுபத்து நான்கில் காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அவர்தம் கண்களுக்கும், கருத்துக்கும் ஒருங்கே விருந்து படைப்பவை ஆடற்கலையும், நாடகக் கலையுமே! அதிலும் மெய்ப்பாடுகள் (உடலில் தோன்றும் உணர்வு வெளிப்பாடுகள்; வடமொழியில் இதனை ‘ரசங்கள்’ என்பர்) சிறப்பாய் வெளிப்படுவது ஆடற்கலையிலேயே என்றால் அது மிகையன்று. மெய்ப்பாடுகளை எட்டு என்று கொள்வர் ’ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்; வடநூலாசிரியர்கள் இவற்றை ஒன்பது என்று கொண்டு ’நவரசங்கள்’ என்பர்.

    இன்று மிக உயர்ந்ததாய்ப் போற்றப்படும் ஆடற்கலை முற்காலத்தில் இத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கவில்லை. இக்கலை ‘கணிகையர்க்கே’ உரியது என்பதுபோல் குலமகளிரால் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதை இலக்கியங்கள் நமக்கு அறியத்தருகின்றன.  கலைகளில் உயர்ந்த இவ்வாடற்கலையில் நல்ல தேர்ச்சிபெற்று, தன் ஈடிணையற்ற கலைத்திறனால் அனைவரையும் பெரிதும் கவர்ந்த ‘ஆடலரசி’ ஒருத்தியைச் சிலப்பதிகாரம் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. அவள் வேறுயாருமல்லள்! சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய்க் கணிகையர் குலத்தில் பிறந்தும் ஒப்பற்ற கற்பரசியாய் வாழ்ந்த ‘மாதவியே’ அம்மாதரசி!

    madhavi2சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்று காதை’ மாதவியின் நாட்டியச் சிறப்பையும், நளினத்தையும் அற்புதமாய் விளக்குகிறது. தேவமகளிரில் ஒருத்தியான ஊர்வசியின் மரபைச் சேர்ந்தவளாய்க் கருதப்படும் மாதவி, ‘ஆடல், பாடல், அழகு’ என்ற மூன்றிலும் ஒன்றில்கூடக் குறைவுபடாதவள் என்று இளங்கோவடிகளால் போற்றப்படுகின்றாள். தன்னுடைய 5-ஆம் அகவையில் ’தலைக்கோல் ஆசான்’ என்று அழைக்கப்பெறும் நாட்டிய ஆசிரியரிடம் நடனம் பயிலத்தொடங்கிய அவள் 7 ஆண்டுகள் இடைவிடாப் பயிற்சிக்குப்பின் தன் 12-ஆம் அகவையில் சோழமன்னன் முன்னிலையில் நாட்டிய அரங்கேற்றத்தை வெகுசிறப்பாய் நிகழ்த்துகின்றாள்.

    ”ஆடலும் பாடலும் அழகும் என்றிக்
    கூறிய மூன்றில் ஒன்றுகுறை படாமல்
    ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டிற்
    சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி…”
    என்று அவள் அரங்கேற்றம் பற்றிப் பேசுகிறது அரங்கேற்று காதை.

    அவள் ஆடலின் அற்புதத்தைக் கண்டு வியந்த சோழமன்னன் அவளுக்குச் சிறந்த ஆடலரசி என்ற பொருளில் தரப்படும் ’தலைக்கோலி’ பட்டத்தையும், ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னையும், பச்சைமாலை ஒன்றையும் பரிசாய்த் தருகின்றான்.  

    ”தலைக்கோ லெய்தித் தலையரங்கு ஏறி,
    விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு
    ஒரு முறையாகப் பெற்றனள்”
    என்பது அடிகள் வாக்கு.

    மாதவியின் ஆடலை மன்னன் மட்டுமல்லாது, மேட்டுக்குடியைச் சேர்ந்த பிரமுகர் பலரும் வைத்தவிழி வாங்காமல் கண்டுகளித்திருந்தனர். அதில் ’ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடியை’ச் சேர்ந்த கோவலனும் ஒருவன். அவள் ஆடலிலும் அழகிலும் கள்ளுண்ட வண்டாய் மயங்கியிருந்த அவனை மாதவியும் கவனிக்கத் தவறவில்லை.

    madhavi3கலைநுணுக்கம் அறிந்தவனாய்த் தன் நாட்டியத்தை இரசித்த அவன்மீது அவளுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அவன் உள்ளத்தை இன்னும் தெளிவாய் அறிந்துகொள்ள விரும்பியவள், தான் பரிசாய்ப் பெற்ற பச்சைமாலையைக் கூனி ஒருத்தியின் கையிற்கொடுத்து ‘இம் மாலை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெறுவது; இவ்வளவு பொன் கொடுத்து இதனைப் பெறுவோர் மாதவிக்கு மணமகனாவர்’ எனக் கூறச்செய்து, நகரத்து  நம்பியர்(ஆண்கள்) திரிகின்ற வீதியில் அவளை நிற்கச் செய்திருந்தாள்.

    அவள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அழகன் கோவலனும் அம்மாலையை ஆவலுடன் வாங்கிக் கூனியுடன் மாதவி மனையை அடைந்தான். அதன்பின்னர், தன்னருமை மனைவி கண்ணகியையும், அவளோடு நடாத்திக்கொண்டிருந்த இல்லறத்தையும் முற்றும் மறந்தான்; மாதவியை விட்டு நீங்கா விருப்புடையவன் ஆயினான் என்று அவன் மனநிலையைத் தெளிவாய் விளக்குகிறது சிலப்பதிகாரம். இவ்வாறு கோவலனும் மாதவியும் மனமொத்த இணையராய், மலரும் மணமும்போல் வாழ்ந்துவரும் வேளையில், ஒவ்வோராண்டும் வெகுசிறப்பாய்ப் புகாரில் கொண்டாடப்படும் ‘இந்திரவிழா’ தொடங்கியது.  சித்திரை முழுமதி நன்னாள் தொடங்கி 28 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் அவ்விழாவின் 27-ஆம் நாள் வந்தது.

    அன்று நடைபெறவிருந்த மாதவியின் ஆடலைக் காண்பதற்காகப் புகார் நகரமே ஆவலோடு திரண்டிருந்தது ஆடரங்கில். புகார் நகரத்து மக்கள் மட்டுமா அவள் ஆடலைக் காண வந்திருந்தனர்? இல்லை…இல்லை…தேவலோகத்தைச் சேர்ந்த விஞ்சையன் ஒருவனும் (விஞ்சையர்கள் பதினெண் கணங்களில் ஒருவர்; இவர்கள் இசைவல்ல தேவச் சாதியர்) அவன் காதலியும் புகாரில் நடைபெற்றுக் கொண்டிருந்த புகழ்வாய்ந்த இந்திரவிழாவைக் காண மானிட உருவில் அங்கு வந்திருந்தனர்.  தோரணங்களாலும், மாலைகளாலும் பொலிவுற்று விளங்கிக்கொண்டிருந்த புகாரை இரசித்துக் கொண்டே வந்துகொண்டிருந்த அவர்கள் ஓரிடத்தில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தைக் கண்டதும் சற்று நின்றனர்.

    அப்போதுதான் மாதவியின் ஆடல் அங்கே தொடங்குவதாயிருந்தது. அதோ! இருமுக எழினி (double-sided curtain) விலகுகின்றது. வழக்கமாய் வானில் தோன்றும் முழுமதி அப்போது மேடையில் தோன்றியது கண்டு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதுமட்டுமா? அம்முழுமதி தன் தேனொழுகும் குரலில் அனைவருக்கும் முகமன் கூறி அவர்களை வரவேற்கவும் செய்தது. 

    பேசும் பொற்சித்தரமாய் மேடையில் ஒளிர்ந்த மாதவியைக் கண்டதும் ’சட்டென்று’ அடையாளம் கண்டுகொண்ட விஞ்சையன் பரவசத்தோடு தன் காதலியிடம், ”இவள் யாரென்று தெரிகிறதா?” எனக்கேட்க, அவளோ ”தெரியவில்லை” என்பதாகத் தலையசைத்தாள். நீ கட்டாயம் இவளைத் தெரிந்துகொள்ள வேண்டும். சாதாரணப் பெண்ணா இவள்? தேவ மாதான ‘ஊர்வசி’யின் மரபில் வந்த ஆரணங்கு! ஆடற்கலைக்கு இலக்கணம் வகுத்த கலையரசி மாதவியிவள்!” என்று மாதவியைப் பற்றித் தன் காதலியிடம் கூறியவன், ”சரியான நேரத்துக்குத்தான் இங்கு வந்திருக்கின்றோம். இவள் ஆடலைக் கண்டுகளித்துவிட்டுச் செல்வோம்!” என்று பரபரப்போடு கூறிவிட்டு அவளோடு சென்று பார்வையாளர்கள் வரிசையில் கலந்து அமர்ந்துகொண்டான்.

    ஆடல் தொடங்குவதற்குமுன் தேவபாணி (கடவுள் வாழ்த்து) இசைக்கப்பட்டது. அடுத்து மாதவி ஆடியவை அதிஅற்புதமான பதினோருவகை நடனங்கள்! அவற்றை நாமும் கண்டுகளிக்க வேண்டாமா?

    வாருங்கள்…அரங்கத்திற்குள் செல்வோம்!

    தொடரும்…

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(64)

    -செண்பக ஜெகதீசன்

    செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்
    தில்லாளி னூடி விடும். (திருக்குறள்:1039 – உழவு)

    புதுக் கவிதையில்…

    நிலத்தைப் பார்த்து
    வேலைசெய்ய விவசாயி
    நிதம் சென்றால்தான்,
    நிறைவாக வயல் விளையும்..

    செல்லாமலிருந்தால்,
    இல்லாள்போல் ஊடல்கொண்டே
    வெறுத்திடும்-
    விளையாது நிலமெதுவும்…!

    குறும்பாவில்…

    நித்தம் நிலத்தைக் கவனிக்காவிடில்,
    மனைவிபோல் மனங்கசக்கும்,
    மகசூல் வராது…!

    மரபுக் கவிதையில்…

    நிலமது விளைந்து வளம் பெருக
    நித்தம் நித்தம் விவசாயி
    புலமது சென்றே பாடுபட்டால்
    பயிரது செழித்து வளர்ந்தோங்கும்,
    நிலமதைப் பேணிக் காக்காமல்
    நினைத்த பலனெதும் கிடைக்காதே,
    குலமகள் ஊடல் கொண்டதுபோல்
    கோபம் கொள்ளும் நிலமகளே…!

    லிமரைக்கூ…

    பயிரிடும் நிலமதைப் பார்த்திடு தினம்,
    பார்க்காமல் விட்டாலது மாறும்
    ஊடல் கொண்ட இல்லத்தரசி இனம்…!

    கிராமிய பாணியில்…

    நெலத்தப்பாரு நெலத்தப்பாரு
    நித்தம்நித்தம் நெலத்தப்பாரு,
    நெதம்பாக்கும் வயலப்பாரு
    நெல்மணியா வெளயும்பாரு..

    வேளாவேள
    வெவசாயி போவல்லண்ணா
    வெளயாது நெலமெதுவும்,
    ஊட்டுகாரி கோவம்போல
    வெளநெலமும் கோவிச்சுக்கும்…

    அதால,
    நெலத்தப்பாரு நெலத்தப்பாரு
    நித்தம்நித்தம் நெலத்தப்பாரு…!

     

    Share
  • பெண்ணியம்!

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    logoகனகமணி ஆசிரியர். பெண்ணிய கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.

    கணவர் வீட்டு வேலைகள் செய்வதற்காக மலையகத்திலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். கனகமணி இல்லாத சமயங்களில் அவர் அவளுடன் சில்மிஷம் புரிந்தார்.

    “அம்மாவிடம் சொல்வேன்” என்பாள். வேலை பறிபோய்விடும் என்பதால் சொல்லுவதில்லை.

    எல்லை மீறியபோது ஒருநாள் போட்டுடைத்தாள்.

    “இஞ்சை வரும் போது என்னிடம் கேட்டுவிட்டா வந்தாய்? நீயும் அவரும் பட்டது பாடு” என்றாள் கனகமணி.

    Share
  • கருவின் வலி!

    -மெய்யன் நடராஜ்

    உன் அந்தரங்கங்கள்
    வெளிச்சத்துக்கு வந்துவிடுமென்று
    வெளிச்சத்துக்கு வரவேண்டிய
    என்னை அந்தரங்கமாகவே
    அழித்துப் போட்டவளே…

    பருவத்தின் பசி தீர்த்த உனது
    பாவத்தின் சம்பளமாக என்னைக்
    கைகளில் வாங்காமல்
    கருவறைக்குள்ளேயே
    கல்லறைக்குள் தள்ளி விட்டது
    என்ன நியாயம்?

    விதைத்தவர்கள் எல்லாம்
    அறுவடைக்குக் காத்திருக்க
    எவனோ விதைக்க
    நிலமான நீ
    என்னை அறுவடையாக்க
    அருவருப்பு அடைந்தவளே!
    நீ களங்கப் பட்டதால்
    உன்னால் கருவறையின் புனிதமும்
    களங்கப்படுத்தப் பட்டதை
    அறியாயா நீ?

    யாரோ எழுதிய கவிதை என்று
    எவரும் வாசிக்காமல்
    போகக் கூடுமென்றும்
    நீ எழுதிய கவிதையை
    நீயே அழித்துவிட்டு
    நிம்மதி கொண்டவளே…

    உனக்குத் தெரியுமா
    நீ அழித்தது ஒரு
    மகாத்மாவோ இல்லை
    புத்தனோ காந்தியோ
    அன்னை தெரேசாவோ
    என்ற உண்மை?

    விதைத்தது எல்லாம்
    முளைக்க ஆசைவைக்கும்
    விவசாயிகள் கொண்ட பூமியில்
    உன் குடிசை விவசாயத்தில்
    முளைக்கும் முன்பே என்னைக்
    கருவறுத்தவளே…

    வெளிச்சத்தின் விலாசம்
    நான் காணும் முன்னால்
    இருட்டின் இருப்பிடத்தைப்
    பரிசளித்துக் குளிர்ந்தாய் நீ…!

    குஞ்சு பொரிக்கத் தெரியாத போதும்
    காக்கையின் கூட்டில்
    முட்டையிட்டு ஒதுங்கிக் கொள்ளும்
    குயிலின் மனசுகூட
    உனக்கிலாத போது
    நீ மானிடமாய்ப் பிறந்தது
    மாபெரும் பாவம்!

    கர்ப்பத்துக்கே
    கொள்ளி வைக்கும்
    உன் காதகத்தனத்தால்
    என் கனவுகள்
    சிதைக்கப்பட்ட போதும்
    கனவுகளே இல்லாதிருக்கும்
    என் தம்பி தங்கைகளை
    உன் இச்சைகளால்
    செதுக்கி நீ சிதைக்காதே!

    கருச்சிதைவின் போது
    உனது வலி ஒரு நேரம்தான்
    உருச் சிதைந்த எனது
    உயிரின் வலியோ
    ஒவ்வொரு ஜென்மத்துக்கும்!
    உன் உருவிற்கு
    உருகும் மனமில்லாதபோது
    நீ சுமந்த
    கருவிற்கு அது ரொம்பத் தாராளம்!

    அதனால்
    மறவாதே நீ…
    விதைப்புகள் சிதைப்புகளுக்கல்ல
    விதைபுகழ் சிதைபுகழும் அல்ல!
    அது வேர்களைத் தாங்கும்
    நிலங்களின் தார்மீகம்!

     

    Share