-மேகலா இராமமூர்த்தி

சிலம்பில், மாதவி ஆடியதாய் இளங்கோவடிகள் குறிப்பிடும் பதினோரு ஆடல்களும் அசுரரைக் கொல்ல அமரர் (தேவர் மற்றும் கடவுளர்) ஆடிய பதினோரு வகைக் கூத்துக்களே ஆகும். இந்த ஆடல்கள், நின்றாடல் (நின்றுகொண்டு ஆடுவது), படிந்தாடல் (தரையில் வீழ்ந்து ஆடுவது) என இருவகைப்படும்.

இவையனைத்துமே புராணக் கதைகளை மையமாக வைத்து மாதவியால் ஆடப்பட்டவை. (புராணக் கதைகளின் தாக்கம் சிலப்பதிகாரக் காலத்திலேயே மிகுந்திருந்ததை இஃது உறுதி செய்கின்றது).

கூத்தில் வல்லானாகிய சிவபெருமான் ஆடியதாய்க் கூறப்படும் ’கொடுகொட்டி, பாண்டரங்கம்’ எனும் இரு கூத்துக்களை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆடி அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தாள் மாதவி.

’அசுரர்களின் திரிபுரத்தை (முப்புரம்) எரித்துத் தம்மைக் காக்கவேண்டும்!’ madavi2எனும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுத் ’தீ’அம்பைச் செலுத்தித் திரிபுரத்தை எரித்தவரும், தேவர்கள் யாவரினும் உயர்ந்த தேவாதி தேவருமான சிவபெருமான், சுடுகாட்டரங்கிலே ஆடுகின்ற கொற்றவையைப்போல், உமையவள் தன் ஒரு பக்கத்தே இருந்து, பாணி, தூக்கு, சீர் முதலிய தாளங்களைச் செலுத்த (மாதொருபாகனாய்) வெற்றிக் களிப்பில் கைகொட்டி நின்று ஆடிய ஆடலே ‘கொடுகொட்டி’ ஆகும்.

பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவ
ளொருதிற னாக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் என்கிறார் இளங்கோ.

கொடுகொட்டி ஆடிய இறைவன் பின்பு ஓர் தேரில் ஏறிக்கொண்டு, தம் கோலத்தையும் பைரவிபோல் மாற்றிக்கொண்டு (பெண்வேடங்கொண்டு) அத்தேரைச் செலுத்தும் தேர்ப்பாகனாய் நின்றிருந்த நான்முகன் காணும்படித் தம் உடலெங்கும் வெண்ணீற்றையணிந்து ஆடிய ஆடலே பெரிய பாண்டரங்கக் கூத்தாகும். (தேராக விளங்கியவர்கள் தேவர்கள்; தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகள் நான்மறைகள் என்னும் புராணக் கருத்தும் ஈண்டுக் கூறப்படுகின்றது.)

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும் என்கிறது சிலம்பு.

சிவனார் ஆடிய இக்கொடுகொட்டிக் கூத்தையும், பாண்டரங்கக் கூத்தையும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலும் விரிவாய் விளக்கிச்செல்வது இங்கு நினைந்தின்புறத்தக்கது.

படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குற்
கொடிபுரை நுசுப்பினாள்கொண்டசீர் தருவாளோ

மண்டமர்பலகடந்து மதுகையா னீறணிந்து
பண்டரங்க
மாடுங்காற்பணையெழி லணைமென்றோள்
வண்டரற்றுங்கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ.

இவை கற்றறிந்தார் ஏத்தும் கலியில் இடம்பெற்றுள்ள கவின்மிகு வரிகளாகும்.

சீர்த்திமிகு சிவதாண்டவங்களைத் தொடர்ந்து அஞ்சனவண்ணனாகிய திருமால், கஞ்சனின் (கம்சன்) சூழ்ச்சிகளை வென்று அவன் அனுப்பிய யானையின் கொம்பை ஒடித்து மகிழ்ச்சியோடு ஆடிய ஆடல்களுள் ஒன்றான ‘அல்லியத் தொகுதி’யையும், கஞ்சன் ஏவிய அவுணனை (வாணாசுரன்) அழித்தற்பொருட்டு நிகழ்த்திய ’மற்கூத்தை’யும் அடுத்தடுத்து ஆடி அரங்கத்தோர் கண்களுக்குப் பெருவிருந்து படைத்தாள் கலைமாது மாதவி.

கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும் அவுணற் கடந்த
மல்லின்
ஆடலும்… இவை அல்லியத் தொகுதி மற்றும் மற்கூத்து குறித்துக் காப்பியம் சுட்டும் செய்திகள்.

 

madaviமாயோனைத் தொடர்ந்து மேடையில் (மாதவி உருவில்) ஆடவந்தவர் சேயோனாகிய முருகப்பெருமான். கடல் நடுவில் ஒளிந்த சூரனை (சூரபதுமனை) வென்ற வேலன், கரியகடலின் நீரலைகளையே அரங்கமாகக் கொண்டு ’துடி’ (உடுக்கை) எனும் வாத்தியத்தை வாசித்தபடி ஆடியதே ’துடிக்கூத்து’ ஆகும். அத்துடிக்கூத்தைத் துடியிடையாள் மாதவி ஆடிய நேர்த்தியானது பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கச்செய்தது.

தொடர்ந்து வந்தது, முருகப்பெருமான் ஆடிய மற்றோர் ஆடலான ’குடைக்கூத்து’. தன்னோடு போர்புரிந்த அவுணர்களின் படைக்கலங்களையெல்லாம் காற்றில் பறக்கச்செய்த முருகவேள், அவர்கள் நிராயுதபாணிகளாய்ச் செய்வதறியாது துன்புற்றுநின்ற வேளையில் குடை ஒன்றைத் தன்முன்பக்கமாக வைத்துக்கொண்டு ஆடிய ’குடைக்கூத்தை’ தத்ரூபமாக மேடையில் ஆடினாள் அந்த ஆடலரசி.

…………………………………மாக்கடல் நடுவண்
நீர்த்திரை
அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்
படைவீழ்த்
தவுணர் பையு ளெய்தக்
குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும் என்பன துடிக்கூத்து மற்றும் குடைக்கூத்தை விளக்கும் சிலப்பதிகார வரிகள்.

செம்பஞ்சுக் குழம்பணிந்த மென்பாதங்கள் ஆடுதலால் மேலும் சிவக்க, கண்டிருந்தோர் நெஞ்சங்கள் ஆடல்கண்டு பெரிதும் உவக்க, மாதவிப் பொன்மயிலாள் அடுத்து ஆடிய ஆடலென்ன…?

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆடல் காணீரோ – பகுதி 2

  1. மேகலா அவர்களே, அற்புதமான இலக்கியக் கலை விருந்து படைக்க ஆரம்பித்துள்ளீர்கள். வளரட்டும். படித்து வியந்து ரசிப்போம். வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *