-மலர் சபா

மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

இரத்தினக் கடைத்தெரு

குற்றங்கள் பன்னிரண்டுள்
மிகவும் கொடுமையானதான
காகபாதம் களங்கம் விந்து இரேகை
இவை நான்கும் நீங்கி,

குணங்களில் குன்றாத வண்ணம்
நூலோர் கூறும் சிறப்புகளான
மிக்க நுண்மையுடைய முனைகளையும்        gems
நால்வகை நிறத்தையும்
நன்மைமிக்க ஒளியையும் உடைய
வைரக்கற்கள் இருந்தன.

இரேகை மாலை இருள் எனும்
குற்றங்கள் நீங்கிய
இளங்கதிர்களையுடைய பச்சைநிற
மரகத மணியால் ஆன மாலைகள் இருந்தன.

பூச மீனின் வடிவினையுடைய,
பொன்னைக் களங்கமில்லாமல்
தெளித்துவைத்தது போன்ற
புருடராக மணிவகைகள் இருந்தன.

நூலோர் விதித்த முறைப்படி
குற்றமற்று விளங்கும்
பதுமம், நீலம், விந்தம், படிதம் எனும்
நால்வகை மாணிக்கக் கற்களும் இருந்தன.

குற்றமில்லாத கதிரவன் ஒளியும்
தேன்துளி நிறமும் இழைந்த
வைடூரிய மணிகளும்
இருளைத் தெளிய வைத்தது போன்ற
நீலமணிகளும் இருந்தன.

ஒன்றுபட்ட பிறப்பினை உடையனவும்
வண்ணங்களால் ஐந்து வகைப்பட்டனவாகவும் இருக்கின்ற
நன்மை பொருந்திய
மாணிக்கம் புருடராகம் வைடூரியம் நீலம் கோமேதகம்
இந்த மணிகளும் இருந்தன.

காற்று, மண், கல், நீர்
இவற்றால் ஏற்படும் குற்றங்கள்
சிறிதும் இல்லாமல்
வெள்ளியைப் போல வெண்மை நிறமும்
செவ்வாயைப் போலச் செம்மை நிறமும் கொண்ட
உருண்டு திரண்ட முத்துவகைகளும் இருந்தன.

நடுவே துளை கொண்டவையும்
கல்லிடுக்கில் புகுந்து வளைவு கொண்டவையும்
திருகல் முருகல் ஆகிய குற்றங்கள் நீங்கிய
சிவப்பு நிறமுடைய கொடிப்பவளங்களும்
அந்த வீதியில் குவிந்து கிடந்தன.

இந்த நவரத்தினங்களின்
பிறப்பும் சிறப்பும் அறிந்து சொல்லக்கூடிய
வணிகர்களையும் மிகுதியாகக் கொண்ட
அந்த இரத்தினவீதி
பகைவர்களால் எக்காலத்துக்கும்
அழிக்கப்படாத வண்ணம்
சிறப்பில் மேலோங்கி இருந்தது.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 180 – 200
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

படத்துக்கு நன்றி: http://www.thebesthotels.org/room-photo-gems-ID263760.htm

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *