இலக்கியம்கவிதைகள்பத்திகள்

குறளின் கதிர்களாய்…(64)

-செண்பக ஜெகதீசன்

செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்
தில்லாளி னூடி விடும். (திருக்குறள்:1039 – உழவு)

புதுக் கவிதையில்…

நிலத்தைப் பார்த்து
வேலைசெய்ய விவசாயி
நிதம் சென்றால்தான்,
நிறைவாக வயல் விளையும்..

செல்லாமலிருந்தால்,
இல்லாள்போல் ஊடல்கொண்டே
வெறுத்திடும்-
விளையாது நிலமெதுவும்…!

குறும்பாவில்…

நித்தம் நிலத்தைக் கவனிக்காவிடில்,
மனைவிபோல் மனங்கசக்கும்,
மகசூல் வராது…!

மரபுக் கவிதையில்…

நிலமது விளைந்து வளம் பெருக
நித்தம் நித்தம் விவசாயி
புலமது சென்றே பாடுபட்டால்
பயிரது செழித்து வளர்ந்தோங்கும்,
நிலமதைப் பேணிக் காக்காமல்
நினைத்த பலனெதும் கிடைக்காதே,
குலமகள் ஊடல் கொண்டதுபோல்
கோபம் கொள்ளும் நிலமகளே…!

லிமரைக்கூ…

பயிரிடும் நிலமதைப் பார்த்திடு தினம்,
பார்க்காமல் விட்டாலது மாறும்
ஊடல் கொண்ட இல்லத்தரசி இனம்…!

கிராமிய பாணியில்…

நெலத்தப்பாரு நெலத்தப்பாரு
நித்தம்நித்தம் நெலத்தப்பாரு,
நெதம்பாக்கும் வயலப்பாரு
நெல்மணியா வெளயும்பாரு..

வேளாவேள
வெவசாயி போவல்லண்ணா
வெளயாது நெலமெதுவும்,
ஊட்டுகாரி கோவம்போல
வெளநெலமும் கோவிச்சுக்கும்…

அதால,
நெலத்தப்பாரு நெலத்தப்பாரு
நித்தம்நித்தம் நெலத்தப்பாரு…!

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. Avatar

    அனைத்தும் நன்றாக இருக்கிறது இந்தவாரம்.

  2. Avatar

    கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
    அன்பு நண்பர அமீர் அவர்களுக்கு,
    மிக்க நன்றி…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க