— சுடர்மதி மலர்வேந்தன். 

முன்னுரரை:
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
கவியரசரால் எழுதப்பட்ட தீர்க்கமான வரிகள்.

சரித்திரப் பக்கங்களில் இடம்பெற்ற ஒரு மனிதரின் … திருத்தம்… தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப் பற்றியதோர் கட்டுரை. தொட்டவை அனைத்தும் வெற்றிகளாகவே வந்து மடியில் தவழ, இவர் என்ன அதிசயப் பிறவியா? கேள்விகள் இன்றும் கூட இப்படித்தான் கேட்கப்படுகின்றன. இவரைப்பற்றி அறியும்பொழுது, 20-ம் நூற்றாண்டில் பிறந்து, இன்றளவும் நம் உணர்வோடு உறவாடும் மா மனிதர்… மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வருகிறார்… நம்மோடு இந்தக் கட்டுரையில்!

விடிவெள்ளியின் உதயம்:
ஜனவரி 17, 1917 கண்டியில் பிறந்த நம் தலைவர் அங்கேயே வளர்ந்து… வாழ்ந்து… உதிர்ந்திருக்க முடியும். கடவுள் நினைத்தார் போலும் “தமிழகமே நம்மை தூற்றும் இச்சக்ரவர்த்தியை அங்கு கொண்டு சேர்க்காவிடில்” என்று! கோபால மேனன், சத்ய பாமா தம்பதியருக்கு ஐந்தாம் பிள்ளையாய் பிறந்தார். ஐவரில் ஒருவன் என்பது போலாகாது.. கையின் கட்டை விரலாய் சிறப்புப் பெற்றார்.

வறுமை:
“இளமையில் வறுமை கொடுமை” இலட்சக் கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்த செம்மல், தன் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத அளவு, வறுமையில் உழன்றவர். தன் இரண்டு வயதில் தந்தையின் அரவணைப்பை இழந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தாயின் வளர்ப்பிலும், வறுமையின் தவிப்பிலும் வளர்ந்தவர். குடந்தை நகரை அடைந்து இம்மண்ணில் கால் பதித்தார். பின்பு மக்களின் மனதிலும் கூட என்பது உலகறிந்த ஒன்று!

கலை வாழ்க்கை:
தன் ஏழு வயதில் நாடகத்துறையில் நுழைந்தபொது எண்ணியிருக்க மாட்டார்… ஆம்… இந்த உலகம் எனும் நாடக மேடையிலும், தான் கதாநாயகனாக வலம் வரப் போகிறோம் என்று! பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் காலத்தின் கட்டாய சூழ்நிலையால் தள்ளப்பட்டு, நாடகங்களில் நடிக்கவந்தவரைப் போல் தெரியவில்லை. ஆர்வமும் தன்னம்பிக்கையும் மிளிர்ந்தன. தன் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல, தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை அனைவரைக்காட்டிலும் மிகச் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார். உடலையும் மனதையும் ஒருசேர வடிவமைத்துக் கொண்டார்.

“கல்லுக்குள் உளி செலுத்தி சிற்பத்தைப் பெற வேண்டும்… ஆனால், இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது” மதுரை ஒரிஜினல் பாய்ஸ் குழுமத்தில்…

திரையுலகம்:
அக்காலத்தில் நாடகத்தில் ஒளிரும் மணிகள், பட்டைத்தீட்டப்பட்டு, அடுத்த கட்டமாக இடம்பெறப் போவது திரைத்துறை எனும் கிரீடத்தில் தான் காத்துக் கொண்டிருந்தது போலும். எம்.ஜி.ஆர். தம் வருகைக்காக! ஆரம்ப காலத்தில் சினிமா, ரோஜா மேத்தைபோல அமையவில்லை… முட்களாய் குத்தின தவறிய வாய்ப்புகள். ஆயினும், அம்முட்களையே தன் ஊன்றுகோலாக்கி முன்னேறினார் எம்.ஜி.ஆர் அவர்கள். 1936ல் தொடங்கிய திரை வாழ்க்கையை கைவிட மனமில்லாது, தான் முதல் அமைச்சர் ஆனா பின்னரும்கூட அதனைத் தன்னோடு அதனை இணைத்துக் கொண்டார். கடமை, பற்று என்பது இதுதானா என்று வியக்க வைத்தவரும் இவரே! அரசியல் கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போதே, நல்ல கருத்துக்களை, இதுவரை தான் சொல்லிவந்த திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர எண்ணினார்.

1936 முதல் 1977 வரை கலை உலகில் அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள், அவரைப் புரட்சி நடிகராக மட்டுமில்லாமல், புரட்சித் தலைவராகவும் மக்களைப் பார்க்கச் செய்தது. தங்கள் அபிமான நடிகராக மட்டுமின்றி, நம்பிக்கை நட்சத்திரமாகவும் எதிர்பார்த்தனர்.

வெற்றி நாயகன்:
மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன், குலேபகாவலி, விவசாயி, அடிமைப்பெண், அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன் .. போதும் போதும்! வெற்றிப் படங்களின் பட்டியலிடவே பல ஏடுகள் வேண்டும்! நல்லக் கதைகளையும் கற்பனைத் திறனையும் சுமந்து நின்ற இயக்குனர்களுக்குக் கிடைத்த ஒப்பற்றக் கலைஞன். தயாரிப்பாளர்களின் அட்சயப்பாத்திரம்! முதலில் நாடகம், பின்பு சினிமா, அடுத்து அரசியல் என தன் நிறங்களை மாற்றிக்கொள்ளவில்லை எம்.ஜி.ஆர்.

தன் பணிகளுக்கிடையே இடையூறு வராத வகையில் 1977வரையிலும் மக்களை மகிழ்விக்கும் கலைஞனாகவும் திகழ்ந்தார். இயக்குனர், தயாரிப்பாளர் என தான் தொட்ட துறைகளெல்லாம் வெற்றிப் பூக்களை மலர்ச் செய்தார்.

தடைகள் துகள்களாக:
முடியவே முடியாது! அவரா? கெடுபிடியான அந்த மனிதர் இதற்கெல்லாம் இணங்க மாட்டார்! ஒரு முதல்வர் சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா? சாத்தியப்படாத செயல். இவர் யாராக இருக்கக் கூடும்? 1977ல் பிரதமரான மொரார்ஜி தேசாய் தான் அவர்.. ஆம் .. எம்.ஜி.ஆர். தான் தொடர்ந்து நடிக்கப்போவதாக அறிவித்தபோது, இத்துணை எதிர்மறையான உறுதியுரைகளை சுற்றியிருந்தோர் கூறினார்.

மறுநாள், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி அத்துனைப் போரையும் மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்தது. “தன் பணிகளுக்கு குந்தகம் நேராமல், திரு எம்.ஜி.ஆர் நடிப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” எனக் கூறியிருந்தார் மொரார்ஜி.

இது உண்மைதானா? உண்மை ஆக்கியவர் எம்.ஜி.ஆர். மற்றொரு சம்பவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1972ல் தானே இயக்கிய “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். கட்சியைத் தொடங்கியாயிற்று. எதிர்த்து நிற்பது கருணாநிதி எனும் அரசியல் சிகரம்! இருந்தபோதிலும் படப்பிடிப்பு வேளைகளில் சற்றும் சுணக்கம் காட்டவில்லை. தி.மு.க. மதுரை மாவட்டச் செயலாளர் முத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “உலகம் சுற்றும் வாலிபன்” நம் ஊருக்கு வர மாட்டான். வந்தாலும் ஒரு நாள் கூட ஓடாது. நான் கூறியது தவறானால், சேலைக் கட்டிக் கொள்கிறேன்’ என்றார். படம் திரையானது. ஓடியது.. உசேன் போல்ட் போல மிக பிரம்மிப்பான அளவில்! தமிழகத்தில் மட்டுமல்ல அயல் நாடுகளில் திரையிடப்பட்ட ஒருசில திரைப்படங்களுக்குள் அதுவும் ஒன்று என்ற பெருமையையும் தட்டிச்சென்றது!

இப்படியும் இருப்பாரா?:
இருந்தார்… எம்.ஜி.ஆர். 1967-ல் மக்கள் போற்றும் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் சுடப்பட்டார். தகவலறிந்து அதிர்ந்தது தமிழகம். சுட்டவர் எம்.ஆர்.ராதா … “தன் பண பலத்தால், குண்டர்களை வைத்து காமராசரை கொலை செய்ய முயன்றார் எம்.ஜி.ஆர். என்பதுதான் அவர் சார்பாக வைக்கப்பட்ட வாதம்” .எம்.ஆர். ராதா கூறிய அந்த பண பலமும், மக்கள் மன்றத்தில் அவர் பெற்றிருந்த இடமும் அப்போது, எம்.ஜி.ஆரிடம் அதீதமாகவே இருந்தது. ஆனால், ஒரு மாநாட்டு மேடையிலே, “காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி” என்று தெளிவு படுத்திய எம்.ஜி.ஆர்… எவ்வாறு இப்படி ஒரு செயலை நினைப்பார்? கடுஞ்சொல் கூறியவனையே துரோகி… எதிரி என்று சொல்லும் நபர்களுக்கிடையே எம்.ஆர். ராதா அவர்களைத் தொடர்ந்து தன் நண்பராகவும்… சக பணியாளராகவும் மட்டுமே பார்த்தார் தலைவர் அவர்கள்.

தி.மு.கவில் பங்களிப்பு:
1953 தொடக்கம் முதல் 1972 வரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தவிர்க்க முடியாத, தடுக்க முடியாத ஓர் பிரபலமாகவே ஜொலித்தார். கருணாநிதி இறங்கி மைக்கைப் பிடித்தால் ஆர்ப்பரித்தது கூட்டம். எம்.ஜி.ஆர். இறங்கினார். மைக்கைப் பிடிக்க எழுந்தாலே அரங்கம் கர்ஜித்தது. அடுக்கு மொழி வசனங்களால் மக்களை வசியமாக்கும் கலைகளில் வல்லமை பெற்றவர்கள் திராவிடத் தலைவர்கள். தனக்கென்ற தனி பாணியில் மக்களிடையே சென்றார் எம்.ஜி.ஆர். பிரசார பீரங்கியாக சென்ற இடங்களில் எல்லாம் வாக்குகளோடு, மக்களின் தனி அன்பையும் பெற்றுக் கொண்டு தனக்கான ஓர் இடத்தையும் அவர்களிடையே விட்டுச் சென்றார்.

“நான் உங்கள் வீட்டுப்பிள்ளை… இது ஊரறிந்த உண்மை… நான் செல்லுகின்ற பாதை… பேரறிஞர் காட்டும் பாதை” அண்ணாவின் இதயக்கனி ஆனார் மக்கள் திலகம்.

உதயமானது அஇஅதிமுக … பேரறிஞரின் பாதையிலே!

1967ல் மேலவை உறுப்பினர்…1969ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் என பல உயரிய பதவிகள் வகித்தாலும், கட்சியின் சாதாரணத் தொண்டனாகவே தன்னைக் கருதினார். தி.மு.கவின் ஒவ்வொரு படி வளர்ச்சியிலும் தன் அயராத உழைப்பை அடித்தளமாக்கினார். கொள்கைகளை விரும்பிய எம்.ஜி.ஆர் அதே சமயத்தில் உள்ளிருக்கும் சில களைகளையும் நீக்க நினைத்தார். அனைத்து தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினரும்… தங்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் சொத்து மதிப்புகளையும் கணக்குகளையும் கட்சியின் முன்பாக பட்டியிலிட வேண்டும் என்று எண்ணினார். அத்துணை பெரும் ஒப்புக் கொள்ளவில்லை. மக்கள் மன்றத்தின் முன் இந்தக் கோரிக்கையை வைக்கப் போவதாகத் தெரிவித்தார். ஆண்டுகளாகக் காத்திருந்த எதிரிகளுக்குக் கிடைத்துவிட்டது துருப்புச் சீட்டு! வெளியேற்ற எத்தனித்தார்கள்.. ஜெயித்தார்கள்.. நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.!

நான் ஆணையிட்டால்… அது நடந்து விட்டால்… இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்! 17, அக்டோபர் 1972ல் உதயமானது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தன் ரசிகர் மன்றங்களை கட்சி அலுவலகங்களாக மாற்ற அழைத்தார். 20,000 கட்சி அலுவலகங்களோடு ஆரவாரமாக பறக்கிறது இரட்டை இலை.. எம்.ஜி.ஆரின் அரசியல் கனவுகளுக்கு சுருக்குக் கயிறு என்று எண்ணியவர்களைக் கண்டு பரிதாபம் மட்டுமே கொள்ள முடிகிறது. அது அவருக்கு அணிவிக்கப்பட்ட வெற்றி மாலை என அவர்கள் புரிந்து கொள்ள வெகு காலம் ஆகவில்லை.

வெற்றி முழக்கம்:
கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் தேடிவந்தது முதலமைச்சர் அரியணை. தி.மு.கவிற்கு அதிமுக எவ்வகையிலும் சளைத்ததல்ல என்பதனைச் சொல்லாமல் சொல்லியது அந்த வெற்றி.

“அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” … அதுவரை தி.மு.க. செய்யாத அல்லது செய்ய முடியாத ஒன்று! தமிழகம் சார்பாக இருவரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். இந்திரா, மொரார்ஜி… என எந்த அரசு மத்தியில் அமர்ந்தாலும் அவர்களுடன் ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்:
எண்ணிலடங்கா சாதனைக் குவியலிலிருந்து சில… தமிழக்கத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த சத்துணவுத் திட்டம்… பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் மேம்பாடு. 1,20,000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை உறுதி செய்த பெருமைக்குரிய செயல்பாடு.

நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு இரு பெரும் சிறப்புகள் ஒன்று தஞ்சை இராச ராசனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். மற்றொன்று 1981ல் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசால் நிறுவப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்…

“ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்…” என்பார்களே அதுபோல தான் இவ்விரண்டும்!

தமிழர் தலைவர்:
“நீங்க நல்லா இருக்கணும்… நாடு முன்னேற…
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற!

சென்ற இடங்களிலெல்லாம் புகழ்! வெற்றியின் கூக்குரல்! தமிழகத்திற்கு நன்மை செய்தாரா இந்த முதல்வர்? இல்லை… தமிழர்களுக்குச் செய்தார்… அண்டை நாடான இலங்கையில் மண்ணோடு மண்ணாக அழிந்து வரும் நம் தமிழனத்தின் துயர் கண்டு, வெகுண்டது தமிழகம்… ஆனால், இலங்கையில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்! வேறு நாட்டில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து சென்றவர்கள். அனுதாபங்களை அள்ளி வீசுவோம் என்றது இந்திய அரசு! செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் விரைந்தார் டில்லியை நோக்கி… பதிலாக, ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியையும் அளித்தது இந்திய அரசு. கடமை முடிந்தது என்பது போல் நினைக்கவில்லை நம் தலைவர். இயக்கங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார்… நேரடியாக! புலிகளின் முன்னேற்றத்திற்காக… விடுதலை வேட்கைக்காக… நான்கு கோடி தேவைப் பட்டது. அரசாங்க ரீதியாக வழங்க தடைஎற்பட்டபோது, தன் சொந்தப் பணத்தை கரங்கள் சிவக்க அள்ளி வழங்கியவர்.

அமெரிக்காவை எதிர்நோக்கிய நெஞ்சங்கள்:
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது, இனி வரமாட்டார்… என்று ஒரு வதந்தி வந்த வேளையில் தமிழகமே இருளானது போல ஒரு மாயை! வதந்திகளும் அவதூறுகளும் புதிததல்ல! பொய்க் கூற்றுகளைத் தவிடுபொடியாக்கினார். நின்றார் ஆண்டிப்பட்டித் தொகுதியில் அமெரிக்காவில் இருந்தபடியே வேட்புமனு பெறப்பட்டது. அபாரமான வெற்றி! அனுதாப வெற்றி என்றார்கள் அறியாதவர்கள். ஆழிப் பேரலையாய் எழுந்து நின்றது தமிழகம். தலைவர் இல்லம் திரும்புகையில் வெற்றிடத்தையும் வெற்றி இடங்களாய் புரட்டிப் போட்டார்!
1977 முதல் 1987ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து நீண்ட காலமாக இருந்த ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர். என்ற சிறப்பை இன்றளவும் தன்னோடு மட்டுமே வைத்திருக்கிறார் இந்த மகான்!

மீளாத் துயர்:
டிசம்பர் 24, 1987 அதிகாலை 3.30 மணி அத்துணை நெஞ்சங்களையும் சோக வெள்ளத்திலே மூழ்கடித்தது அந்தத் தகவல்! எங்கும் வன்முறை… கதறல், ஸ்தம்பித்தது.. தமிழகம்! வந்த துக்கம் தொண்டையை அடைத்தது! செய்வதறியாது திகைத்த மக்கள், துயரச் செய்தி தாளாது மாண்டோர் பலர்.

எம்.ஜி.ஆர் ஒரு நபராகவோ… கட்சித் தலைவராகவோ பார்த்திருந்தால் ஏற்பட்டிருக்காது இப்படி ஓர் நிகழ்வு! அனாதைகளாக்கிவிட்டு இம்மண்ணுலகைவிட்டு மட்டுமே சென்றிருந்தார் மக்கள் திலகம்!

கலைத்துறையில் தேசிய விருதுகள்… இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” என நூற்றுக்கணக்கான விருதுகளின் சொந்தக்காரர் மட்டுமல்ல… தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கொள்ளைக்காரரும் கூட!

முடிவுரை:
எம்.ஜி.ஆர். அவர்தம் வாழ்வின் சிறப்பைப் பேச எனக்குக் கிடைத்த இந்த 1300 வார்த்தைகள் போதுமா? நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், முதல்வர் … என்னவாக தோற்றம் கொண்டாலும், அவர் மக்கள் திலகம்! இதய தெய்வம்! தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழர்களுக்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்தவர்!

தொண்டர்களைத் தன் தோழர்களாக பாவித்தவர். எளிமையும் உண்மையும் நெஞ்சில் கொண்ட கொள்கையும் அவரை தமிழக முதல்வர் எனும் சிம்மாசனத்தில் அமரச் செய்தது. சாத்தியமே இல்லை என்பவற்றைக்கூட தன் சட்டைப்பையில் சகஜமாக வைத்திருப்பார்! முடியுமா என்பவற்றை முடித்துவிட்டேனே என புன்முறுவல் பூத்தவர்!

காலனே! எம்.ஜி.ஆர். என்பவர் உலகில் இல்லை என்று நீ எண்ணினால், ஏளனம் செய்யும் தமிழகம்! இல்லை இல்லை.. தமிழினம்! அஸ்தமிக்கும் சூரியனுக்கும் பஸ்பமாக்கும் உஷ்ணம் உண்டு… நன்றி மறந்தோர் அல்லர் தமிழர்! வழங்கிய கொடிகளும் அவர் நிறுவிய படைகளும் எக்காலமும் முக்காலமும் பறைசாற்றும் உந்தன் பெருமைகளை!

நினைக்க கோடி உண்டு.. மறக்க ஒன்றே ஒன்று தான் – அவர் மறைவு

இது முடிவுரை.. இந்தக் கட்டுரைக்கு மட்டுமே!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனதில் நிறைந்த மக்கள் திலகம்

Leave a Reply

Your email address will not be published.