இந்த வார வல்லமையாளர்!
மார்ச் 23, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள்
“தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கவும், குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் மற்றும் குற்றங்களுக்கு தண்டனை பெற்ற குழந்தைகளைப் பாதுகாக்கவும் இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. நிர்வாக சீர்கேடு காரணமாக இந்த இல்லங்கள் சிறுவர்களை சீரழிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்”
என்ற செய்தி நாளிதழில் வெளியானால் திரைப்படம், அரசியல், வன்முறை போன்ற கருத்தைக் கவரும் அல்லது சர்ச்சைக்குரிய செய்தியாக இல்லாத காரணத்தால் படிப்போர் பலரது கவனத்தையே இச்செய்தி கவராது. சிலர் தலைப்பை மட்டும் படித்துவிட்டு மறு வினாடி மறந்துவிடுவார்கள், மேற்கொண்டு அவர்கள் நினைவில் அது தங்காது. மற்றும் சிலர் படிப்பார்கள் செய்திக்காக கொஞ்சம் அக்கறையுடன் கவலைப்படுவார்கள், பிறகு அதைப்பற்றி நினைப்பதில்லை. ஆனால் ஒருவருக்குக் கூட யார் இந்த சமூக ஆர்வலர்கள், இப்படி தனது நேரத்தையும் உழைப்பையும் அக்கறையுடன் பயன்படுத்தி சமூகத்தில் யாரும் அக்கறை கொள்ளவே விரும்பாத ஒரு சிலருக்காக இப்படிப் போராடுகிறார்களே என்று சிந்திக்காமல் போவதே இன்றைய நடைமுறை வாழ்க்கையின் நிலை. ஆங்கிலத்தில் “Unsung Hero” என்று நாம் குறிப்பிடும் அது போன்று “புகழப்படாத நாயகர்”தான் இந்தவாரத்தின் வல்லமையாளர் சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள்.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள், மனித நேயம் நிறைந்த உள்ளத்துடன் சமூக அவலங்களில் மாட்டித்தவிக்கும், தன்னைக் காத்துக் கொள்ள குரலெழுப்ப இயலாத உயிர்களுக்காக அக்கறையுடன் பொதுநல வழக்குகளாகத் தொடுத்து பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடிவருபவர். அவரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற வாரம் “சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன” என்று இவர் தொடுத்த பொதுநல வழக்கில் அக்குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, மேலும் இவரது இரு குறிப்பிடத்தக்க பொதுநல வழக்குகளில், யாருமே ஆதரவு தராத நிலையில் சமுதாயத்தில் அல்லலுறும் மேலும் இரு குழுவினருக்கும் நியாயம் கிடைக்க இந்த மாதம் வழி பிறந்துள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கின் விளைவாக தமிழகத்தில் சென்ற வாரம், மார்ச் 15 முதல் இதற்கான தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. விசாரணைக் கைதிகளின் பாதுகாப்பிற்காக காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுகொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது.
‘பாடம்’ நாராயணன் அவர்கள் ‘மாற்றம் இந்தியா’(Change India) என்ற அமைப்பின் இயக்குநரும், ஒரு கல்வியாளரும், முன்னர் வெளிவந்த பாடம் என்ற சமூக அக்கறை கொண்ட மாத இதழின் ஆசிரியரும் ஆவார். இவரது சமூகப்பணிகளை, பொதுநல வழக்குகள் பற்றிய நாளிதழ் செய்திகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், திருமிகு சுபாஷிணி ட்ரம்மல் மற்றும் திரு. ராம் காமேஸ்வரன் ஆகியோர்.
“பாடம்” நாராயணனின் முக்கியமான பொதுநல வழக்குகள் சிலவற்றைப் பற்றிய தகவல்கள் நாளிதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டு அவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
– சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களில் உள்ள குழந்தைகளின் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மாதம் இரு முறை பெற்றோர்கள் குழந்தைகளை பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதால் தற்கொலை அல்லது வன்முறைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் கோபம், பயம், நம்பிக்கையின்மை மற்றும் குழப்பமான மனநிலையோடு வெளியே வருகின்றனர். இது அவர்கள் மீண்டும் குற்றங்களைச் செய்ய தூண்டுகின்றன. குழந்தை இல்லங்களில் போதுமான பாதுகாப்பு அலுவலர்களும் உளவியல் ஆலோசகர்களும் இல்லை. பல இடங்களில் மேற்பார்வையாளர்களே மாவட்ட குழந்தை பாது காப்பு அலுவலர்களாக உள்ளனர். இது போன்ற சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன என்பது சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களைப் பற்றி இவர் தொடுத்த பொதுநல வழக்கு.
– கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செய்யக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் “பாடம்” நாராயணன் ஒரு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” எனவும் எச்சரித்தது. பாடம் நாராயணன் அவர்கள் தொடுத்த பொதுநல வழக்கின் காரணமாக, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை போடப்பட்டுள்ளது, இத்தடை தமிழகத்தில் மார்ச் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள் சில வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கிவிட்டு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
– பாடம் நாராயணன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் (1,567 காவல் நிலையங்களிலும்), கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். விசாரணைக் கைதிகளை காவல்துறையின் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பொதுநல வழக்கிற்கு பதில் அளிக்க தாமதமான காரணத்தால் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் அளித்தது. அத்துடன், பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுகொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது.
– இவரது பொதுநல வழக்கின் காரணமாக, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்துபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
– தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் வாகன சோதனையில் ஈடுபதுவதற்குத் தடை கூறப்பட்ட பொழுது, வாகன சோதனை மேற்கொள்ள குறுக்கே நின்ற அத்தடையை அகற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவை நீக்கக் கோரி பாடம் நாராயணன் மற்றும் சில தொண்டு அமைப்பினர் மனு தாக்கல் செய்து தடை நீக்கத்தைக் கைவிடக் கேட்டுக் கொண்டனர்.
– தமிழக அரசு ஏற்படுத்திய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் கால தாமதம் ஏற்பட்டு இயங்காமல் இருந்தது. கமிஷன் முழு அளவில் இயங்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி “பாடம்’ நாராயணன் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
– அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன், வருடத்திற்கு 20 சதவீதம் மது விற்பனை குறைப்பும், ஞாயிறு கட்டாய விடுமுறையும் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடி வருகிறார்.
– கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் தவிர்த்த தனியார் அறக்கட்டளைப் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் இட ஒதுக்கீடுகோரி மனுதாக்கல் செய்தார்.
– இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவான வாசகத்தை தனக்கு முன்னும் பின்னுமாக அணிந்துகொண்டு தன் மகளுடன் கண்காட்சியில் கருத்து சுதந்தரத்தை ஆதரித்தும், எழுத்தாளருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதத்திலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்
– மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து அரசின் முடிவுகளை கண்டிக்கும் விதமாக கல்வியாளர் என்ற முறையில் தனது எதிர்ப்பைத் தொலைக்காட்சி ஊடகம் வழியே வெளிப்படுத்தினார்.
கீழு ள்ள செய்திகள் நாளிதழ் தளங்களில் இருந்து திரட்டப்பட்டு, சமீபத்திய நிகழ்வுகளில் தொடங்கி ‘இன்று முதல் அன்று வரை’ என காலவரிசைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது:
குழந்தைகளை சீரழிக்கின்றனவா சிறார் சீர்திருத்த இல்லங்கள்?- சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
March 20, 2015
தி இந்து
http://tamil.thehindu.com/tamilnadu/article7014450.ece
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை: தமிழகத்தில் மார்ச் 15 முதல் அமல்
March 12, 2015
தி இந்து
http://tamil.thehindu.com/tamilnadu/article6985539.ece
காவல் நிலையக் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்
March 10, 2015
தினமணி
http://www.dinamani.com/latest_news/2015/03/10/காவல்-நிலையக்-கண்காணிப்பு-க/article2707005.ece
பெருமாள் முருகனை ஆதரிப்போம்
January 14, 2015
வலைப்பதிவு: Amudhan RP, vaediyappan
http://supportperumalmurugan.blogspot.com/2015/01/blog-post_84.html
கழிவறை இல்லாததால் பெண் வன்கொடுமை அதிகரிக்கிறதா?
June 7, 2014
தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=993303
ஆறாக ஓடத் தயாராகிறது சரக்கு
April 28,2014
தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=964118
மனித கழிவுகளை சுத்தம் செய்வதில் 30 பேர் பலி: தமிழகத்தில் நிரந்தர தீர்வு தேவை
September 23, 2013
தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=810064
குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன்: முழு அளவில் செயல்படுவது எப்போது?
June 30, 2013
தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=746519
Plastic ban: constraints and challenges
April 30, 2013
The Hindu
http://www.thehindu.com/news/cities/chennai/plastic-ban-constraints-and-challenges/article1475244.ece
வாகன சோதனை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்குத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஏப்ரல் , 02 , 2011
மின் செய்தி மாலை
“பாடம்” நாராயணன் தனது சமூக அக்கறையை பொதுநல வழக்கு தொடர்வதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாளிதழ்களில் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறார். அவரது தளத்தில் தொகுக்கப்பட்டுள்ள அக்கட்டுரைகள், கட்டுரைகளின் மையக் கருத்துகளுடன் இப்பதிவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் சமூக ஆர்வலரான இவரது சமூக அக்கறையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். நலிந்தோருக்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து பொதுநல வழக்குகள் தொடரும் “பாடம்” நாராயணனை வல்லமையாளராகப் பாராட்டி அவர் தம னது சமூக நலப் பணிகளில் தொடர்ந்து வெற்றியடைய வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
மேலும் தகவலுக்காக:
Blog:
http://paadam-pm.blogspot.com/
http://www.paadamnarayanan.blogspot.com/
Facebook: https://www.facebook.com/paadam.narayanan/
பாடம் (மாத இதழ்) ஆசிரியர் : அ.நாராயணன்
http://www.paadam.in/
காணொளி: Thanthi TV– https://youtu.be/HEGlajEViXg
செய்தித்தாள் கட்டுரைகள்:
Dinamani (25-05-2009): கட்டுரைகள் – அழுவதா? சிரிப்பதா? – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-25-05-2009.html
…கூவமும், தமிழகமெங்கும் இருக்கும் ஓடைகளும், நீர்நிலைகளும், ஆற்றுப்படுகைகளும் நிலத்தடி நீரும் இன்னும் பாழ்படாமல் தடுப்பதற்குத் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.
Dinamani (23-03-2010): கட்டுரைகள் – குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-23-03-2010.html
…கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, மாசுக்கட்டுப்பாடு, கழிப்பிடப்புரட்சி, இயற்கை பாதிப்பில்லாத வளர்ச்சி போன்ற எல்லா சுற்றுச்சூழல் நடவடிக்கையுமே சமூக நீதிக்கான ஒரு பயணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.
Dinamani (02-07-2010): கட்டுரைகள் – மீண்டும் லாட்டரி ஓநாய்களா? – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-02-07-2010.html
…தமிழகத்தில் லாட்டரி விற்பனை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பும், தமிழக அரசுக்கு ரூ. 500 கோடி வருமானமும் கிடைக்கும் என்றும் இந்த முதலாளிகள் கூறுகின்றனர். லாட்டரி முதலாளிகளின் இக்கூற்று, சிறுவர்களுக்காக நீதிக்கதைத் தொகுப்புகளில் தவறாமல் இடம்பெறும் கதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதுதான் வெள்ளாடுகள் மழையில் நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை.
Dinamani (21-5-2010): கட்டுரைகள் – நெஞ்சில் உரமும் இல்லை; நேர்மைத் திறமும் இல்லை! – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-21-5-2010.html
…டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால், 35,000 ஊழியர்களின் வேலை போய் விடும் எனும் முதலமைச்சரின் விளக்கம், பாரதியின் இந்தக் கவிதை வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.””நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.”
Dinamani (29-04-2010): கட்டுரைகள் – அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே! – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-29-04-2010.html
…தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தினால் தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.
அதேசமயத்தில் பிளாஸ்டிக் தடையினால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களையும் வேலையிழப்பிலிருந்தும், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்தும் பாதுகாக்க முடியும்.
Dinamani (15-11-2010): கட்டுரைகள் – சாலைகள் நரபலி பீடங்களா? – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-15-11-2010.html
…குடித்துவிட்டு ஓட்டுபவருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 6 மாதம் சிறைத் தண்டனை அளிக்க முடியும். குடித்துவிட்டு, விபத்து ஏற்படுத்துபவருக்கு, செக்ஷன் 304(ஏ) பிரிவின்படி, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க முடியும். ஆனால், தமிழக அரசும், உள்துறையும், அதன் அங்கமான டாஸ்மாக் நிர்வாகமும், பார் உரிமையாளர்களும் இணைந்து, மது விற்பனையை அதிகரிக்க வெளிப்படையாகவே பல சட்ட மீறல்களில் ஈடுபடுவதோடு, குடித்து விட்டு ஓட்டுவதற்கும் தாராளமாக அனுமதிக்கின்றனர்.
Dinamani (10-08-2010): கட்டுரைகள் – முள்வேலி இல்லாத அகதி முகாம்கள்! – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-10-08-2010.html
… 5,000 ஏழைக் குடும்பங்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த கொள்கை வகுக்க நினைப்பதே ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆரோக்கியமற்ற சிந்தனை.
கொள்கைகூட வகுக்காமல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று 22,000 குடும்பங்களை முகாம்கள் போன்ற வளாகங்களில் முடக்கியதற்கு பிராயச்சித்தம் தான் என்ன?
வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள்.
Dinamani (14-10-2010): கட்டுரைகள் – பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க! – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-14-10-2010.html
…சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.
Dinamani (20-9-2010): கட்டுரைகள் –தமிழக அரசின் “ஜிம் க்ரோ’ சட்டங்கள் – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-20-9-2010.html
…அரசின் பெரும்பாக்கம் பிரம்மாண்ட மறு குடியமர்வுத் திட்டம் என்பது நியாயமற்றது – விழுமியமற்றது, குறிப்பாக யோசனையற்றது. நாளை பிறக்க இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இன்றைய அரசும், பெரிய நிறுவனங்களும் இணைந்து செய்யும் கூட்டுத் துரோகம்.
நண்பர் பாடம் நாராயணன், பொதுநல அக்கறை மிகுந்த தொழிலதிபர். சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதில் நம்பிக்கையும் நேர் எண்ணங்களும் கொண்டவர். மது ஒழிப்பு முதல் மனிதக் கழிவுகளை அகற்றுவது வரை நீதிமன்ற வழக்குகள், ஊடகங்களில் கருத்துப் பரிமாற்றம், சமூகச் செயற்பாடுகள்… என விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தனித்துவம் மிக்க மனிதநேயர்.
வல்லமையாளரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
வல்லமையாளரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்