Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(156)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    ஒருவார இடைவெளியின் பின்னால் உங்களுடன் இந்த மடல் மூலம் இணைகிறேன். வாழ்க்கை எனும் இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகள்தான் நாம். எம்மைக் காலம் எனும் குதிரை ஓட்டுனர் இயற்கை வகுத்த வழிகளில் இழுத்துக் கொண்டு ஓடுகிறார்.

    நான் செய்ய எத்தனிக்கும் விடயங்கள் நாம் எண்ணும் போது செய்து முடிக்க முடியாமல் போய் விடுகிறது.

    எது இப்போது நடைபெறாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் நிகழ்ந்து விடுகிறது.

    ஆம் எம்மனைவருக்கும் தெரிந்த வாழ்க்கைக் கணக்கைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

    சீட்டாட்டத்தில் ஒவ்வொருவருக்கும் சீட்டுக்கள் வீசப்படுகின்றன. யாருக்கு என்ன சீட்டு விழப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது கையில் கிடைக்கும் அந்த சீட்டுக்களை வைத்துக் கொண்டு எதிராளியை திணறப்பண்ணுவதே சீட்டாடத்தின் திறமை.

    அதேபோல எமது ஒவ்வொவருக்கும் எவ்வகையான வாழ்க்கை அமையப் போகிறது என்பது எவருக்குமே முன்னால் தெரிவது இல்லை.

    அப்படித் தெரிந்தால் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் தானோ என்னவோ அது மறைத்து வைக்கப்படுகிறது ?

    எமக்கு கிடைப்பவைகளை வைத்து ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை, தமது எண்ணத்தின் படி, தமக்கு வசதியாக அமைத்துக் கொள்வதற்காகப் போராடுகிறார்கள்.

    சிலர் அதில் வெற்றியடைகிறார்கள். பலர் அதை நோக்கிய தமது போராட்டத்தை முடிக்காமலே தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

    என்னடா இது ? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் என்று எண்ணுகிறீர்களா ?

    வேறொன்றுமில்லை பதினெட்டு வருடங்களின் பின்னால் முதன் முதலாக கன்சர்வேடிவ் கட்சி தமது வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆமாம், 2015 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டிய டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அநேக எதிர்பார்ப்புகளுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது.

    என்ன கடந்த முறையும் டேவிட் கமரன் தானே பிரதமராகவிருந்தார். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களுக்கும் இப்போது சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் எழுவது இயற்கை… கடந்த டேவிட் கமரன் தலைமையிலான அரசு ஒரு கூட்டரசாங்கம். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட அத்தனை வரவு செலவுத் திட்டங்களும் லிபரல் கட்சியின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்டதினால் பல கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வரமுடியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் தனித்துவமாக அரசமைத்திருப்பதால், தமது கொள்கைப் பிரகடனங்களை முன்னிறுத்தி இவ்வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அவதானிகள் வேறொரு முக்கிய விடயத்தையும் முன்வைக்கிறார்கள். டேவிட் கமரன் அவர்கள் தாம் இம்முறை பிரதமரானால் இதுவே தமது கடைசிமுறை என்றும் தான் அக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி விடுவதாகவும் அறிவித்திருந்தார். விளைவு ! ஐந்து வருடங்களின் பின்னால் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி வெற்றிடமாகும். அதற்கு போட்டியிடுவதற்கு இப்போதைய நிதியமைச்சர் ஜார்ஜ் ஒஸ்போன் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் என்றும், இந்த வரவு செலவுத் திட்டம் அதற்கான முதல் அடி இது என்பதே அக்கருத்தாகும்.

    budget-Osborne 2015

    சரி அப்படி என்ன முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது ?

    # இங்கிலாந்தின் கடன் தொகையைக் குறைத்து 2020ம் ஆண்டு கணக்கில் செலவை விட வரவை அதிகரிக்கப்பண்ணும் கொள்கையில் இவ்வருடத்திற்கு 12 பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் இங்கிலாந்து அரசால் மீதப்படுத்தப்பட வேண்டும்.

    # அரச உதவி பெறும் வேலையற்ரொருக்கான உதவிப்பணம் வருடமொன்றுக்கு ஒரு இல்லத்திற்கு 23000 பவுண்ஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    # 18 – 21 வயது கொண்ட இளையோர் மேற்படிப்புக்குச் செல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உதவிப் பணம் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் வேலை ஒன்றைத் தேடிக் கொள்ள வேன்டும் இல்லையெனில் ஏதாவது ஒரு துறையில் தமது பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.

    # பலர் பகுதிநேர வேலையில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதுவரை வருடத்திற்கு 6500 பவுண்ஸ்க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு அரச உதவி கிடைத்து வந்தது. அதை இப்போது 3500 பவுண்ஸ் ஆக குறைத்துள்ளார்கள்.

    # தேசிய அளவிலான அதிகுறைந்த ஊதியம் மணியொன்றுக்கு 7 பவுண்ஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இனி சட்டமூலமாக்கப்ப்படுகிறது.

    இப்படியாக பலவழிகளில் அரசாங்கச் செலவினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள்.

    அதே நேரம் முதல் 12000 பவுண்ஸ் வரை வரி அளவிடப்படமாட்டாது என்று அதன் அளவைக் கூட்டி அடிமட்டத் தொழிலாளர்களுக்கு தாம் உதவி புரிந்துள்ளோம் என்கிறார்கள்.

    இத்திட்டங்களுக்கு சார்பாகவும், எதிராகவும் பலமுனைகளில் இருந்து வாதங்கள் கிளம்புகின்றன. பொதுவாக எடுத்துப்பார்த்தால் ஓய்வூதியம் பெறுவோரும், வாழ்வின் மத்தியதர வர்கத்தினரின் கூடுதலான ஆதரவாகவும்; மாணவர்கள், வேலையற்றோர், இளையோர் எனும் பகுதியினர் எதிராக இருப்பது போலவும் தென்படுகிறது.

    அடுத்த பிரதமராக வேண்டும் எனும் இலட்சியத்தில் முதல் அடி எடுத்து வைத்துள்ள நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போன் அவர்களின் கனவு நனவாகுமா? இல்லையேல் கனவாகவே கலைந்து விடுமா?

    மக்கள் குரலே மகேசன் குரல் !

    மீண்டும் அடுத்தவார மடலுடன்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 6

    சி. ஜெயபாரதன்.

    kahlil-gibran

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    காதல் சேயிடம் என் இதயம் கேட்டது : “அன்பே ! எங்கே நான் மனநிறைவைக் காண்பேன் ? உன்னுடன் சேர இங்கு அது வரப் போவதாய்க் கேள்விப்பட்டேன்.”

    காதல் சேய் அதற்குப் பதில் உரைத்தாள் : “பேராசையும், லஞ்சமும் முதன்மையான நகருக்கு மன நிறைவு ஏற்கனவே உபதேசம் செய்யப் போய் விட்டாள். நமக்கு அவள் தேவை யில்லை.”
    – கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)

    “உனக்கு வலி உண்டாகும், நீ புரிந்து கொண்ட அறிவுக் கோட்டை தகர்க்கப்படும் போது.”
    – கலில் கிப்ரான்

    “நான் ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : தம்மையே விற்று அதே பணத்திற்குத் தம்மை விடத் தாழ்வான ஆன்மீக அல்லது உலோகாயுதப் பொருட்களை வாங்கும் மனிதரின் முகத்தைக் காணாமல் இருப்பதற்கு !”
    – கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

     

    மரணமே கவிஞன் வாழ்வு

    வருவாய் அழகிய மரணமே !

    வாஞ்சை யோடு
    ஏங்கிடும் உன்னைத்தான்
    என் ஆத்மா !
    வா என்னை நெருங்கி !
    வந்தென் வாழ்க்கையின்
    இரும்புத்
    தளைகளை அவிழ்த்திடு !
    களைத்துப் போனேன்
    அவற்றின்
    கனத்தைச் சுமந்து !
    வருவாய் இனிய மரணமே !
    வந்தென்னை விடுவிப்பாய்
    வழிப் போக்கனாய்
    என்னை நோக்கிடும்
    பக்கத்துச் சொந்த
    பந்தங்களிருந்து !
    என்னெனில் நான் அவருக்கு
    விளக்கிச் சொல்வேன்
    தேவதை களின் வாசகத்தை !

    வருவாய் மௌன மரணமே !
    இருட்டு மூலை
    மறதியில்
    விட்டுச் சென்ற என்னை கடத்திச் செல்
    இந்தக் கும்பலிட மிருந்து !
    எனெனில்
    எளியவர் குருதியை நான்
    அவரைப் போல்
    பிழிந்திட மாட்டேன் !

    வருவாய் சாந்த மரணமே !
    இழுத்துக் கொள்
    என்னை
    உந்தன் வெள்ளை
    இறக்கைக் குள்ளே !
    ஏனெனில்
    என்னாட்டு மாந்தருக்கு
    இனி நான்
    தேவை யில்லாதவன் !

    தழுவிடு என்னை மரணமே !
    முழுப் பரிவோடு அன்பு
    கொண்டு !
    உன் உதடுகள் தொடட்டும்
    என் உதடுகளை !
    அன்னையின் முத்தங்கள்
    சுவைக் காதவை !
    தங்கையின் கன்னத்தைத்
    தடவா தவை !
    அருமைக் காதலியின்
    விரல் நுனிகளை
    வருடா தவை !
    வா வந்தென்னை
    ஏற்றுக் கொள்
    என்னினிய மரணக் காதலி !

    (From : “A Poet’s Death is His Life” By Kahlil Gibran)

     

    உன்னிதயம் ஓர் எரிமலையாக இருக்குமேயானால் அதிலிருந்து பூக்கள் மலரும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம் ?”

    “அழ முடியாத அறிவு, புன்னகை சிந்தாத வேதாந்தம், குழந்தைகள் முன் பணியாத உன்னதம் ஆகியவற்றிலிருந்து நீ விலகி நில்.”

    “விடுதலை இல்லாத வாழ்வு ஆன்மா இல்லாத உடம்பை ஒத்தது.”

    “ஆன்மா ஆழ்ந்து செழிப்புறுவதைத் தவிர நட்பில் வேறெந்தக் குறிக்கோளும் இருக்கக் கூடாது.”
    – கலில் கிப்ரான்

    கவிஞன் யார் ?

    இந்த உலகிற்கும் எதிர்கால உலகிற்கும்
    இணைப்புப் பாலம் அவன்.
    தாகமுற்ற ஆத்மாக்கள்
    தண்ணீர் குடிக்க வந்திடும்
    தடாகத் தூய நீர் ஊற்று அவன்.
    எழில் நதி நீர் பாய்ச்சிப்
    பசித்தோர் பசி அடக்கும்
    பழங்கனி காய்க்கும் மரம் அவன்.

    இன்னிசைக் கானம் பாடி
    மனத்தாழ்வை ஒழிக்கும் வானம் பாடி !
    விண்வெளி முகம்
    முழுதும் நிரம்பும் வரை
    அடிவான் மீது
    மேலும் கீழும்
    தோன்றும் வெண்முகில் அவன்.
    பின்பு ஒளியை அனுமதிக்க
    வாழ்வுத் தள மலர்கள் மேல் படிந்து
    இதழ்களை விரிப்பான் !

    தெய்வம் அனுப்பிய தேவன் அவன்
    மெய்யான உபதேசம்
    செய்திட வந்தவன்.
    இருள் வெல்லாத
    ஒளிச்சுடர் விளக்கு !
    புயல் அணைக்காத ஒளி விளக்கு.
    காதல் தேவதை
    எண்ணை ஊற்றி
    இசைக் கீதம் ஏற்றிய தீபம் !

    ஏகாந்த வாதி அவன் !
    பரிவோடு
    எளிய உடை
    உடுப்பவன் அவன் !
    உள்ளெழுச்சி தனைத்
    தூண்டி விட
    இயற்கை மடி மீது
    அமர்பவன் அவன் !
    ஆத்மீகம் வரவேற்கக்
    காத்திருந்து
    இரவு மௌனத்தில்
    தியானிப் பவன் !

    தனது இதயத்தில்
    விதைகளை நட்டு வைத்து
    வன வயல்களில் பரிவு விதை
    விதைப்பவன்.
    மனித இனம் அவற்றை
    அறுவடை செய்யும்
    தமக்குணவாய் ஊட்டித்
    தான் வளர்வதற்கு !

     

     

    Share
  • காலம் (13)

     

    மீ.விசுவநாதன்

    vallamai111-300x15011111

     

    மலையில், இலையில், மணிக்கிளிப் பொந்தில்,
    அலைகடல் மீதில், அழகுச் சிலையென
    அத்தனை மீதுமே ஆதவன் பட்டாலும்
    சுத்தமே என்றும் சுடர். (121) 30.04.2015

    குற்றாலம் என்றால் குளிரருவி எண்ணந்தான்
    முற்றாக உள்ளிருக்கும் ! மோனத்தில் முற்றாய்க்
    கலந்தால் , “கருணையே” கண்ணொளியாய் நன்கு
    மலர்ந்து சிரிக்கும் மலர். (122) 01.05.2015

    ஒவ்வொரு நாளுமே ஓரோர் அனுபவம்
    கவ்விப் பிடித்துக் கலக்குவதில் ஜிவ்வென்றே
    உள்ளுள்ள தேன்கூட்டில் ஓர்துளி சிந்துவதால்
    அள்ளிக் களிக்கு(ம்) அகம். (123) 02.05.2015

    குழந்தையின் கண்களில் கோகுலக் கண்ணன்
    கழலினைக் காண்கிறேன் ! காதல் பழகி
    பகையை மறக்கிறேன் ! பாப்பா முகத்து
    நகையே புதுமை நகை. (124) 03.05.2015

    பேச்சில், சிரிப்பில், பிரிய நடிப்பிலே,
    கூச்சமே இல்லாக் குலவலில் சீச்சீ
    இவர்போல் கபடதாரி எங்கடா சொல்லு ?
    எவர்க்குள்ளும் கொஞ்ச(ம்) இவர். (125) 04.05.2015

    போதையில் வீழ்ந்து புரண்டு கிடக்கிறான்
    பாதையில் ! எப்படியோ பாரிலே “மேதைகளும்,
    ஞானியரும், நண்பருடன் நானும்” புகழ்போதை
    மானிடத் தோற்றத்து மாசு. (126) 05.05.2015

    இருக்கின்ற நாள்வரை எல்லோர்க்கும் நன்மை
    பெருக்கிடும் வார்த்தையே பேசி வருவோம் ;
    செருக்கின்றி பண்பும் சிறப்புமாய்ச் செல்ல
    பெருமாள் கருணை பெரிது (127) 06.05.2015

    மலரும் தினத்தில் மனதின் சிறுமை
    உலரும் படியாய் ஒளியோன் அருள்க !
    பலரும் இணைந்து பலமாய் இருந்தால்
    புலரும் உலகே புதுசு. (128) 07.05.2015

    தேர்வில் மதிப்பெண் திகட்டிடப் பெற்றாலும்
    ஊரிலே கல்லூரி ஒன்றிலும் சேர
    முடியாதாம் ! சாதிகள் முட்டி முனகும்
    பிடிவாதப் போக்கே பிழைப்பு. (129) 08.05.2015

    சிறகை விரித்தேன் சிறுநொடிப் போதில்
    திறந்த வெளியில் திரிந்து பறந்தேன் !
    அடடா ! அடடா ! அடைமழை , வெய்யில்
    இடையிலே தானே இதம். (130) 09.05.2015

    Share
  • நீ என்னென்ன சொன்னாலும் கவிதை …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

    பாடல் தோன்றிய கதை:
    ennenna2ஆற்காடு முதலி தெரு, தி.நகரில் மக்கள் திலகம் இல்லத்திலிருந்து புறப்படுகையில் புலவர் புலமைப்பித்தன் வந்து சேர்கிறார். தமிழைத் தன் உயிராய் நேசித்த தலைவன் அல்லவா? உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், , நா.காமராசன் என கவிஞர் பெருமக்களைக் கவர்ந்திழுந்த கதாநாயகன் அல்லவா? புலவரைக் கண்டதும் புளகாங்கிதம் அடைகிறார்! நல விசாரிப்புகள் தொடர்கின்றன.

    அடுத்து புலவரை நோக்கி, நான் மதிய உணவிற்கு இங்குதான் வருகிறேன். நீங்கள் இங்கு தங்கியிருந்து ஒரு இனிய பல்லவியை எழுதி வையுங்கள்! அந்தப் பல்லவி என்னை அசத்தும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துப் புறப்படுகிறார்.

    புலவர் கையில் ஏடெடுத்து, எழுதும் கோலெடுத்து, கற்பனை வானில் உலா வருகிறார். பொன்மனச்செம்மலின் புகழ்மணம் பற்றி புதிதாய் என்ன சொல்ல? அவரின் புற அழகை வர்ணிக்கவா? அக அழகை எண்ணிப்பூரிக்கவா? என்ன எழுதலாம் என்று எண்ணத்தேரோட்டம் நடத்துகிறார். தமிழன்னையின் இனிய முகவரி அது! என்னென்ன சொன்னாலும் கவிதைதானே!! கிடைத்துவிட்டது பல்லவி!!

    நீ என்னென்ன சொன்னாலும் …

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை … இனிமை… இளமை…

    புரட்சித்தலைவர் மதிய உணவிற்கு இல்லம் திரும்புகிறார். வாசலிலே நின்று வரவேற்ற புலவரை, எங்கே பல்லவி என்று கேட்க, ஏடெடுத்து தான் எழுதி வைத்ததைக் காட்ட, உச்சிமுகந்து மெச்சிப்புகழ்ந்த பல்லவியாய் அது ஆனது!

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை

    பல்லவியைத் தொடர்ந்து சரணங்களை மதிய உணவிற்குப் பின் எழுதிவிடுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூற, புலவரோ, தலைவா எந்த ஒரு புலவனும் பசித்திருக்கும்போது சிந்தனைப் பிரவாகமெடுக்கும்! நீங்கள் குளித்துவிட்டு உணவு மேசைக்கு வரும் முன்னர் எழுதிவிடுகிறேன் என்றார்!
    அவ்வண்ணமே பாடல் முழுமை அடைகிறது!

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை ( நீ )

    சின்னஞ் சிறுமலர் பனியினில் நனைந்து
    என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
    முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
    முத்துச் சரமென குறுநகை புரிந்து ( நீ )

    பொன்னில் அழகிய மனதினை வரைந்து
    பொங்கும் தமிழினி ல்கவிதைகள் புனைந்து
    பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
    கங்கை நதியென உறவினில் கலந்து
    உறவினில் கலந்து… ( நீ )

    வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
    வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
    உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
    இந்த உலகினை ஒருகணம் மறந்து
    ஒருகணம் மறந்து… ( நீ )

    சுகமான தமிழல்லவா? சுந்தர மொழியல்லவா? தன் நெஞ்சில் நிறைந்து அன்பில் ஆளும் தலைவனுக்காக இசையமைப்பாளர் அருகில் இல்லாமல், தயாரிப்பாளர் அருகில் இல்லாமல், இயக்குனர் கூட அருகில் இல்லாமல் எந்த நெருக்கடியும் இல்லாமல் தமிழே அருவியாய் பொழிந்த மழை! இது “நேற்று இன்று நாளைக்காக!!” ஆம்… மூன்று காலத்திற்கும் பொருந்தும் கவிதையை, காதல் கீதத்தை மெல்லிசை மன்னரின் கூட்டணியில் பாடும் குயில்களாக டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா பாட இதோ …

    காணொளி: https://youtu.be/AKVgl3X95ow

    https://youtu.be/AKVgl3X95ow

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
    உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்,
    பாடிக்கை கூப்புகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
    வாடிக்கை யாளனாக வா”….

    ஒழுக உறிவெண்ணை, உனைத்தொடர்ந்து வந்த,
    பழகு பயல்கள் பதுங்க -அழுத,
    விழியோடன்(று) ஆய்ச்சியர் வீட்டிலகப் பட்டுப்,
    பழியோடு நிற்கும் பரம்’’….

    அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
    உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
    குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
    இடையன் இணைப்பில் இரு’’….கிரேசி மோகன்….

    Share
  • தல விருட்சம்

    பவள சங்கரி

    201411241735412096_TreeShiva_SECVPF

    அனைத்து கோவில்களிலும் தல விருட்சம் என்று இருக்கிறதே. அதன் தாத்பரியம் என்ன என்று தெரியுமா? ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் காடுகளில் குடில் அமைத்து கூட்டமாக வாழ்த்து வந்தனர். பெரிய கட்டிடங்கள் எல்லாம் இல்லை. அந்த காலத்தில் மரத்தினடியில் இறை உருவை எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில், காடுகள், நாடு, நகரமாகவும் மாறி, கட்டிட அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. பிரம்மாண்டமான ஆலயங்களும் உருவாயின. மரத்தடியில் இருந்த தெய்வச் சிலைகள் ஆலயங்களில், மூலத்தானத்தில் வைக்கப்பட்டபோது, ஆண்டவனுக்கு அடைக்கலமான மரங்கள் தல விருட்சங்களாக பாதுகாக்கப்பட்டு வருவதாக ஐதீகம்…. சுவையான தகவல் அல்லவா?

    சிவன் கோவிலில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: யார்க்கானும் அஞ்சுவார்க் கில்லை யரண்

     

    வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து
    தஞ்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ
    மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
    அஞ்சுவார்க் கில்லை யரண்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
    தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?
    மஞ்சு சூழ் சோலை மலை நாட! யார்க்கானும்
    அஞ்சுவார்க்கு இல்லை, அரண்.

    பொருள் விளக்கம்:
    வலிமை உள்ளவர்களைச் சார்ந்து இருப்பவராக இருந்தாலும், அவருக்கு வலிமையூட்டி, தனது சொந்த வலிமை இல்லாத ஒருவரைப் புகழ் பெறச் செய்தல் இயலுமா? மேகங்கள் தவழ்ந்து செல்லும் சோலைகளுடைய மலைநாட்டைச் சேர்ந்தவரே, யாராக இருப்பினும் அஞ்சி நடுங்குபவருக்கு எந்த அரண் தரும் பாதுகாப்பினாலும் பயனில்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சி நடுங்கும் ஒருவருக்கு எந்த அரணும் பாதுகாப்பு அளிக்காது, அதுபோல தனக்கே துணிவில்லாத ஒருவருக்கு அடுத்தவர் தரும் பாதுகாப்பு என்றும் உதவாது. இந்த உண்மையை எடுத்துரைக்கும் வள்ளுவர் தரும் குறள்,

    அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு. (குறள்: 534)

    பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் அதனால் எந்த ஒரு பயனுமில்லை. அதைப் போலவே மறதி உடையவர்க்கு நல்லதொரு நிலை வாய்த்தாலும் அதனால் அவருக்கு பயன் இருக்காது என்று விளக்குகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”ஈருயிர் ஓர்தலையாய் இந்தப் பசுமாடு,
    சீராயர் கோவிந்தன் சேவடி, -சேராது,
    கனைத்திளங்கன் றுக்காய், நனைக்குமோநப் பின்னை,
    மனைத்தலத்தைப் பாலின் மடி”….கிரேசி மோகன்….

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 5

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    ஈதல் என்ற மனிதகுலக் கடமைகளுள், விருந்தோம்பல் என்ற இல்லறத்தார் கடமை அடங்கும்! ஒருவர் மனைவியுடன் இல்லறம் நடத்துவதே தம்மை நாடி வரும் விருந்தினர்களுக்கு உணவுபடைத்து, மகிழ்வதற்கேயாகும்! இதனைத் திருவள்ளுவர்,

    ”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு!”(81)

    என்று விருந்தோம்பல் அதிகாரத்தின் முதற்குறட்பாவில் குறித்துள்ளார்! தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்பதே இல்லத்தரசியரின் ஏக்கமும், நோக்கமும் ஆகும்! இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பலவிடங்களில் உள்ளன! விருந்தினர் வருவதை முன்னரே காக்கை கரைந்து அறிவிக்கும் என்பது நம் குடும்ப மரபு சார்ந்த நம்பிக்கை. காக்கை கரைந்ததைக் கேட்ட தோழி தலைவியிடம், பிரிந்து சென்ற கணவன் விரைவில் மீளுவான் என்று கூறியதாகக் குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. அந்தப் பாடலில் காக்கையைப் பற்றிச் சிறப்பித்துப் பாடியமையால் அப்படலாசிரியர் ”காக்கைப் பாடினியார்” என்று அழைக்கப் பெற்றார்!

    இந்த விருந்தோம்பல் அதிகாரத்தின் எல்லாக் குறட்பாக்களும் தனித்த சிறப்பு வாய்ந்தவை! இல்லறத்தின் ஐந்து கடமைகளுள் விருந்தோம்பலும் ஓன்று. இதனைத் திருவள்ளுவர் ,

    ”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
    கைம்புலத்தார் ஓம்பல் தலை! ” (43)

    என்ற குறட்பாவில் தெளிவிக்கிறார்! விருந்தோம்பல் நம் தமிழகத்தின் சைவ வைணவ சமயங்களின் கடமையாக அறிவிக்கப் பெற்றன! சைவத்தில் விருந்தோம்பல், ”மாகேசுர பூசை ” என்றும், வைணவத்தில் “ததியாராதனம்” என்றும் வழங்கப் பெறும். பொதுவாக இந்திய உபநிடதங்கள், ”மாத்ரு தேவோ பவ: பித்ரு தேவோ பவ: ஆசார்ய தேவோ பவ: அதிதி தேவோ பவ: ” என்று விருந்தோம்பலை மனித குலக் கடமையாக அறிவிக்கின்றன! சிலப்பதிகாரத்தில் கண்ணகி …

    ”அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”

    என்று தன் கடமைக் குறித்துக் கோவலனிடம் கூறுகிறாள்! விருந்தோம்பல் தொல்லோர் சிறப்பித்த பெருமை பெற்றதாகும். இங்கே புதிய விளக்கம் பெற அமைந்த திருக்குறள் ,

    ”வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்” (85)

    என்பதாகும். இக்குறளுக்கு, ”வந்த விருந்தினருக்கு உணவிட்டபின் எஞ்சிய உணவை உண்டு மகிழும் இல்லறத்தானது விளைநிலத்தில் விதை விதைக்க வேண்டா; அந்நிலத்தில் பயிர்கள் தாமே விளையும் ” என்ற பொருளையே எல்லாரும் கூறினர்! இறைவன் திருவருள் விருந்தோம்பும் இல்லறத்தானின் நிலத்தில் தேவையான பயிர் விளைச்சலை உண்டாக்கும், என்பது உண்மைதான். ஆனாலும், இந்த விளக்கம் சற்றே மிகையாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

    பெரிய புராணம், வைணவ வியாக்யானங்கள் ஆகியவற்றில் இந்த விருந்தோம்பல் பற்றிய வரலாறுகளைப் படித்த பின் இந்தக் குறட் பாவுக்குப் புதுமையான விளக்கம் புலப்பட்டது. சைவத்தின் பேரிலக்கியமான பெரிய புராணத்தில் ”இளையான்குடி மாற நாயனார்” புராணத்தில் ஒரு நிகழ்ச்சி உள்ளது! அந்த மாறனார் இல்லத்தை நோக்கி வந்த அடியாருக்கு உணவிட்டு விருந்தோம்பும் வகையில் அவரில்லத்தில் வசதி இல்லை; வறுமை கொடிய தாண்டவ மாடியது! இந்த நிலையிலும், அவர் வீட்டுப் பொருள்களை விற்றும் கடன் வாங்கியும் விருந்தினரைப் பேணினார்! இவர்தம் சிறப்பை உலகத்தார் உணரும் பொருட்டு , இறைவனே சிவனடியாராக அந்த இளையான்குடி மாறனின் இல்லம் நோக்கி எழுந்தருளினார். வீட்டில் ஒரு மணியரிசி கூட இல்லை! அடுத்த போகத்துக்கு உ ரிய விதைநெல்லை வயலை உழுது விதைத்திருந்தார்! நள்ளிரவில் பசியுடன் வந்த சிவனடியாரின் நிலைமையைக் கண்டு உள்ளம் உருகிய மாற நாயனார். மனைவியிடம் யோசனை கேட்டார். அந்த மங்கையர் திலகம், வயலில் விதைத்த நெல்லை வழித்தெடுத்துச் சேர்த்துக் கொண்டு வந்தால், தம்மால் இயன்ற வகையில் அமுதாக்குவதாகக் கூறினார். அந்த ஈரநெல்லை வறுத்து, உரலில் குத்தி அரிசியாக்கி உணவு சமைத்து அடியாருக்கு அமுது படைத்த அருள் வரலாறு என் உள்ளத்தை உருக்கியது! அதே நேரத்தில் இந்தத் திருக்குறளுக்குப் புதிய பொருளும் புலப்பட்டது!

    வந்த விருந்தினருக்கு உணவிட்டு எஞ்சியதைப் புசிக்கும் அறவோராகிய அவர் , அடுத்த போகத்துக்கு விதைத்த நெல்லையே எடுத்து அடியாருக்கு உணவு சமைத்து வழங்கினார். ஆகவே அவர் நிலத்தில் வித்தினை இட்டுப் பயிராக்க விரும்பவில்லை! இதனை,”அவர் வயலில் வித்து இடுதலையும் வேண்டுவாரோ?” என்ற கேள்வி கேட்டு விளக்குகிறார் . இந்த வகையில், விருந்தோம்பி மிச்சில் மிசைவானாகிய இல்லறத்தான் வித்து இடலும் வேண்டும் கொல்லோ? என்று சொற்களை மாற்றிப் போட்டுப் பொருள் கொள்ளல்லாமே? என்று கருதினேன். ஆகவே இத்திருக்குறளின் புதிய பொருளைப புரிந்து கொண்டேன்! அதன்படி ,”விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் (விளைநிலத்தில்), (அடுத்த போகத்துக்கு) வித்தும் இடல் , வேண்டும் (விரும்புவான்) கொல்லோ? (விரும்ப மாட்டான்!! ) என்று பொருள் கொண்டேன்! வித்திட வேண்டா; தாமே விளையும் என்ற மிகைப்படுத்தப் பெற்ற பொருள் இங்கே வேண்டாததாகி விடுகிறது , அல்லவா?

    இதற்கு ஆதரவாக வைணவ வியக்கியானத்திலும் ஓர் அழகிய வரலாறு உண்டு. ஸ்ரீ இராமானுஜருக்கு அணுக்கத்தொண்டனாகிய பிள்ளை உறங்காவில்லி தாசரின், அன்புக்குரிய மனைவி பொன்னாச்சி. அவள் ஒருமுறை தன் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், அடியாருக்கு ததியாரா தனம் செய்ய, வீட்டில் அடுத்த போகத்துக்கு விதை இடுவதற்கு வைத்திருந்த முற்றிய நெல்லை இடித்து அரிசியாக்கி அமுது படைத்து விட்டாள்! இதனை அறிந்த உறங்காவில்லி தாசர் ‘ஏன் ?’ என்று கேட்டார்! அதற்குப் பொன்னாச்சி, ”சுவாமி இந்த நெல்லை, அடியாருக்கு இட்டதன் மூலம் இனி, நாம் செல்ல விருக்கும் சொர்க்கபூமியில் விதைத்து விட்டேன்!” என்று விடை கூறி அடியாரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விட்டார்! ஆகவே விருந்தோம்பலுக்குச் செலவிட்ட நெல் சொர்க்கத்தில் விதைக்கப் படும். ஆகையால் இங்கே இந்த பூமியில் வித்திட வேண்டா! ‘ என்பது புலனாகின்றது!

    Share
  • கவிஞானி ரூமியின் கவிதைகள்

    கவிஞானி ரூமி (கி. பி. 1207-1273)

    கவிதை -2 பாகம் -2

    மதுக்குடி அங்காடி (The Tavern)

    ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ஒயின் உள்ளது
    பெரிய அண்டாவில் !
    ஆயினும்
    கிண்ணங்கள் இல்லை !
    அவ்வித மாயின் சரி !
    உடம்பு மினுமினுக்கும்
    ஒவ்வோர்
    காலைப் பொழுதிலும் !                            rumi
    மேனி மிளிரும் எமக்கு
    மீண்டும்
    மாலைப் பொழுதில் !

    +++++++++++

    எதிர்காலம்
    எமக்கில்லை என்று
    இடித்துரைப்பார்
    அவரெல்லாம் !
    அப்படிச் சொல்வது சரிதான் !
    அதனை
    ஒப்புக் கொள்ளும்
    எமதுள்ளம் !

    +++++++++

    வாடிக்கை
    குடிபோதை இனமொன்று
    ஒன்றுள்ளது !
    அத்துடன் சேர்ந்து நீவீர்
    பித்துடன் மகிழ்வீர் !
    கூச்சல் வீதியில் நடப்பீர்
    கூக்குரல் நாயகர் ஆகி !
    ஆசை தீரும் மட்டும்
    அருந்துவீர்
    தம்மைத் தாமே
    அவமதித்துக் கொண்டு !

    +++++++++

    இரு கண்களை மூடிக் கொள்
    மறு கண்ணால் நீ பார்த்திட !
    கரங்களை விரித்திடு
    கைகளைக் குலுக்க வரும் போது !
    வட்டத்தில் நீ வந்து
    உட்கார் !
    ஓநாய் போல் நடிப்பதைத்
    தவிர்த்திடு !
    ஆட்டிடையன்
    பரிவு
    உள்ளத்தில் நிரம்புவதை
    உணர்ந்திடு !

    +++++++++++++

    இரவு வேளையில்
    உன்னருங் காதலி
    திரிகிறாள் உன்னைத் தேடி !
    ஆறுதல் அளிக்க வருவோரை
    ஏற்றுக் கொள் ளாதே !
    வாயை மூடிக் கொள்,
    வாய்க்குள்
    உண்டியைத் திணித்த பிறகு !
    உன் காதலி வாயை
    உன் வாயால் சுவைத்திடு !

    ++++++++++++++

    “என்னை விட்டுப் போனாள்
    அவள்”
    “என்னை விட்டுப் போனான்
    அவன்”
    என்று முணுமுணுத்து
    நொந்தால்
    இருபது பேர் உன்னை
    நெருங்குவார் !
    கவலை படுவதைக் காலி செய் !
    மனக்கவலை
    உனக்குத் தருபவன் யாரென
    நினைத்திடு !

    ++++++++++++

    சிறைக் குள்ளே நீ ஏன்
    தங்கி யுள்ளாய்
    அறைக் கதவு முழுவதும்
    திறந்துள்ள போது ?
    முக்கோணப் பயத்தில்
    முடங்காது நீ வெளிச் செல் !
    சிந்தித்து
    மௌனமாய் வாழ்ந்திடு !

    +++++++++++

    வாழ்வு வட்டத்தை விரிவாக்கித்
    தாழ்ந்து பணிவாய்
    எப்போதும் !
    விரைந்து செல் தணிவாய் !
    எந்தன் தலையில் கொந்தளிக்கும்
    விந்தை,
    பறவைகள் பயணம் பற்றி !
    ஒவ்வோர் அணுவும்
    தனக்குள் சுழலும் ! எனது
    மனத்தின் காதல் அவைதான் !

    +++++++++++++

    காவல் துறை அதிகாரியைக்
    கண்டு அஞ்சுவார்
    குடிகாரர் !
    ஆனால் காவல் துறை
    அதிகாரியும் குடிக்கின்றார் !
    இங்குள்ள மக்கள்
    நேசிப்பர்
    மது மண்டும் இருவரையும்
    மாறு பட்ட
    சதுரங்கக்
    காய்கள் போல் !

    ***************************

    தகவல் :

    1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

    Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

    1. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
    2. Life of Rumi in Wikipedia

    +++++++

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (21)

    வையவன்

    மனிதர்கள்!

    ஆண்டாண்டு காலத்துக்குத் தாம் வாழப் போகிறோம் என்பதில் ஒவ்வொருவருக்கும் என்ன நிச்சயம்! எவ்வளவு நம்பிக்கை!

    சாலையிலும் வீதியிலும் மரணம் அவர்களைச் சந்திக்கிறது.
    ஹலோ சொல்லுகிறது. ஞாபகம் இருக்கிறதா என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது. கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்யும் தமிழ் சினிமாப் பட்டாணியன் போல் மிரட்டுகிறது. விபத்துக்களின் கோரைப் பற்கள் இளிக்கின்றன.

    ஆனால் மனிதர்கள்?
    கொஞ்சம் வெலவெலக்கிறார்கள். வியர்க்கிறார்கள். நான் அங்கிருந்தால்… என்று கற்பனை செய்கிறார்கள்.

    இறந்து போனவர்களிடம் தங்கள் இடம் மாற்றிப் பார்க்கிறார்கள். அப்பாடா, நல்லவேளை. அது நானில்லை என்று நிம்மதி அடைகிறார்கள். நகர்கிறார்கள்.

    மீண்டும் மீண்டும் மரணம் எதிர்கொள்கிறது. நம்பிக்கைகள் கொஞ்சம் நெளிந்து கொடுக்கின்றன. ஆனாலும் என்ன? அவை மீண்டு விடுகின்றன.

    எல்லாம் ஒரு நாளைக்கு மாறிவிடும். இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும். அது அவர்களுக்கும் தெரியும்.

    அந்த உண்மையை அவர்களுக்குச் சந்திக்கப் பிரியமில்லை. கூடுமானவரை உண்மையைத் தள்ளிப் போடவே அவர்கள் விரும்புகிறார்கள்.

    தன்நலம்… தன் சுகம்… தன் பாதுகாப்பு… தன் எச்சரிக்கை… தான்… தான்… தான். அதற்கு எங்கே குந்தகம் வந்தாலும் அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. வேறு வேலை இருப்பது, அவசரம் காத்திருப்பது கவனம் வருகிறது.

    சாலையிலே ஒரு டூரிஸ்டு பஸ் கவிழ்ந்து விழுந்திருக்கிறது.
    நொறுங்கிய கண்ணாடிச் சிதறல்; இரத்தம் குட்டையாய்த் தேங்கியிருக்கிறது. முனகல்கள்.. ஊசலாடும் உயிர்களின் ஓலம்.

    சாலையில் இரவு நேர லாங் ரூட் பஸ்கள் போகின்றன. நிற்பதில்லை லாரிகள் போகின்றன. நிற்பதில்லை. கார்கள் பறக்கின்றன. நிற்பதில்லை.

    தான், தன் பாதுகாப்பு, தன் அவசரம், கடிகார முட்களில் கட்டப்பட்டு விட்ட யந்திர வாழ்க்கையில் ஓடு ஓடு என்று நியமிக்கப்பட்ட ஒரு கற்பித ஓட்டப் பந்தயத்திற்கு குந்தகம் வந்து விடும்.

    போலீஸ்… வழக்கு… கோர்ட்… சம்மன்..
    “வண்டியை விடுப்பா”
    ஓரிரண்டு வாகனங்கள் நிற்கின்றன. வேடிக்கை பார்க்க. பிரயாணிகளுக்கும் ‘தான்’ ஞாபகம் வந்து விடுகிறது.

    “அடுத்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்லே போய் ரிப்போர்ட் பண்ணுவோம். வண்டியை எடுப்பா.”
    ‘விபத்தில் சில மனித உயிர்கள் போயிருக்கின்றன. போய்க் கொண்டிருக்கின்றன. ப்சப்… புவர் சாப்ஸ்… போலீஸ் இருக்கிறது. வந்து பார்த்துக் கொள்ளும்.’

    ‘அது போலீஸோட கடமை புவர் சாப்ஸ்… வர வர டூரிஸ்ட் வண்டிக்காரனுங்க ராத்திரி தூக்கமில்லாம தண்ணி அடிச்சிட்டு வண்டியை விடறானுங்க.’

    எல்லாருமே இப்படித்தானா?

    இதயம்… இரக்கம்… உணர்ச்சிகள்… எல்லாவற்றையும் எலக்ட்ரானிக் கடிகார எண்கள் சாப்பிட்டு விட ஒரு நிமிஷத்தை விட்டு அடுத்த நிமிஷத்துக்கு ஓடுவதிலேயே மனித நாகரீகம் கண்ணும் கருத்துமாக இருக்கிறதா?

    இல்லை.
    சாலையில் ஒரு ஜீப் வருகிறது.
    அதில் ஓர் ஆணும் பெண்ணும். அவர்கள் வண்டியை நிறுத்துகிறார்கள். ரத்தக் குட்டையை, மரண ஓலங்களை, சிதைந்த அங்கங்களைப் பற்றிப் பயமில்லாமல் பஸ்ஸில் விழுந்திருப்பவர்களை ஒவ்வொருவராக இழுத்து வெளியேற்றுகிறார்கள்.

    குழந்தைகளை, கிழவிகளை வெலவெலத்து உயிருடன் இருக்கும்போதே செத்து விட்டதாக விழுந்திருக்கும் நபர்களை இறக்குகிறார்கள்.

    ஏழெட்டு பிணங்கள் விழுந்துவிட்டன. முன் ஸீட் பக்கமாக உட்கார்ந்திருந்தவர்கள் பத்துப் பதினைந்து… இல்லை இருபது பேருக்கு மேல் பலமான அடி.

    “பிரீதா… நீ இங்கே தனியா நிக்கிறியா… நான் ஏழெட்டுப் பேரை அள்ளிப் போட்டுக்கிட்டுப் போயி கேஷûவாலிட்டிலே அட்மிட் பண்ணிட்டு வர்றேன்!”
    “ஓ… எஸ்”
    “வண்டி ஏதாவது வந்தா நிறுத்து… கை காட்டு… விஷயத்தைச் சொல்லு! ஏ.பி. பார்டர் தானே இது… ஐ வில் கோ டு சித்தூர் ஹாஸ்பிடல்.”
    வண்டியில் அவள் அவன் காயமடைந்த உடல்களை ஏற்றுவதற்கு உதவி செய்கிறாள். வண்டி கிளம்புகிறது.

    அவள் மட்டும் தனியாக ஒரு தீரமான உள்ளத்தோடு அடிபட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு நிற்கிறாள்.

    முக்கால் மணி நேரத்தில் சாலையில் சென்ற பல லாரிகளை நிறுத்தும் முயற்சியில் தோற்றுப் போய் அவள் காத்திருக்கிறாள்.

    இரண்டாவது ‘சிங்கிள்’ அடிக்க அவன் ஜீப்போடு வருகிறான்.
    “ப்ளாகார்ட்ஸ்… ஹாஸ்பிடலா நடத்தறானுங்க. நோபடி கேர்ஸ்… டூட்டி முடிஞ்சு போச்சு! டாக்டர் பர்மிஷன் வேணும்… இல்லாத ரூல்ஸ் பேசறானுங்க. போலீஸ் வான் எடுத்துட்டு வாங்கய்யான்னா கமிஷனர் கிட்டே போன்லே பரிமிஷன் வாங்கிட்டு வர்றோம்னு சொல்றாணுங்க” அவன் வெறுப்போடு திட்டித் தீர்க்கிறான்.

    “டோன்ட் வேஸ்ட் டைம்… இந்த சிங்கிள்ளே நானும் வர்றேன். மனுஷங்களை சபிச்சு திட்டி ஒரு புண்ணியமுமில்லே வேஸ்ட் ஆஃப் டைம்… வேஸ்ட் ஆஃப் எனர்ஜி”
    ஹாஸ்பிடலுக்குப் போய் ‘பிரயாணிகளை’ இறக்கி விட்டு விட்டு நர்ஸுகளைச் சந்தித்து, டாக்டரைச் சந்தித்து என்னமோ படபடவென்று பேசுகிறாள்.

    அவள் செம்மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கிறாள். அவள் முகத்தில் சொட்டுச் சொட்டாகக் குறைந்து கொண்டு போகும் அந்த ‘ஸோ-கால்ட்’ மனிதாபிமானம் ஜுவாலை வீசுகிறது. அதன் உண்மை தகிக்கிறது.

    அவ்வளவு அழகான, இளமையான, கவர்ச்சியான நர்ஸாக இருக்கின்ற ஒரு பெண் பேசும்போது தான் மனிதாபிமானம் என்ற சரக்குக்கு ஒரு விலை மதிப்பு வருகிறது.

    ஒரு பட்டாளம் டாக்டர்கள் நர்ஸுகள் ஓடி வருகிறார்கள்… ஸ்ட்ரெச்சர்கள்… ‘பெட்’கள்.
    “இன்னும் ஒரு சிங்கிள் அடிச்சுடலாமா தாமு!”

    “ஓ…எஸ்”
    “பாவம், யூ அர் வெரி டயர்ட்”
    “இல்லே… ஐம் வெரி ஹாப்பி… நமக்கு ஒரு சில நிமிஷமாவது மனுஷனா வாழற ஒரு சான்ஸ் கிடைச்சுதே!”
    அதுதான் அவன் பேசிய கடைசிப் பேச்சு.

    மூன்றாவது சிங்கிளில் எக்கச் சக்கமாக சிக்கிக் கொண்டிருந்த ஒரு பிணத்தை இழுத்து வெளியேற்றும் போது நாலைந்து பேர் ஏறி தங்கள் உடமைகளை அவசரமாக இழுத்து வெளியேற்றுகிற கலவரத்தில், விழுகிற நிலைக்கு வந்திருந்த ஓர் இரும்புப் பெட்டி நச்சென்று அவன் தலையைக் குறிப்பார்த்த மாதிரி வந்து விழுந்தது.

    தாமுவையும் கேஷûவாலிட்டிக்குக் கொண்டு போகிறார்கள். காப்பாற்ற வந்தவனுக்கு விபத்து நேர்ந்த பரிதாபம் எல்லோரையும் நெகிழ வைக்கிறது.

    “ஸ்கல் ஃப்ராக்சர். இங்கே கருவிகள் கிடையாது. வேறே வசதிகள் கிடையாது. சி.எம்.சிக்கு எடுத்துட்டு போயிடுங்க. நிலைமை சீரியஸ்” என்று சித்தூர் கை விரிக்கிறது.

    ஜீப்பில் இரண்டு பேர் துணையுடன் அவனை சி.எம்.சிக்குக் கொண்டு வருகிறார்கள்.
    அடுத்த இருபத்தி நாலு மணி நேரம்.

    அவளுக்கு நம்பிக்கையும் பயனும் அந்தரத்தில் தொங்கும் கம்பி ரயில் பயணமாக மாறி மாறி வருகின்றன.

    உலகின் எந்த மூலையில், எந்த சிகரத்தில், எந்த சமுத்திரத்தில், எந்தக் கட்டிடத்தில், உயிரை மண்ணோடு கட்டி வைக்கிற மஹாசக்தி இருக்கிறது?
    அவள் எல்லாவற்றையும் வேண்டுகிறாள்.

    அவன் அவளைக் காதலித்ததில்லை.
    அவளும் அவனைக் காதலித்ததில்லை.
    இரவுகளிலும் பகல்களிலும் ஒருவர் உடம்பும் உள்ளமும் மற்றவருக்குத் தேவைப்பட்டன.
    இதைத் தவிர வேறு பந்தம் இல்லை.

    எனினும் அவள் பெண். கற் பாறையை ஊடுருவி உயிரின் வேர்களை பந்தம் கொண்டாட விடும் பூமி.
    வானத்தில் பறந்துவிடத் துடிக்கும் உயிர்களை தன் கருணையின் ஈரத்தில், கனிவின் அமிர்தத்தில் கட்டிப் போடும் ஆகர்ஷணம்.

    அவளுக்கு இறந்த காலம் ஒன்று இருந்தது. நேசித்தவை எல்லாம் – பிரியமானவை எல்லாம் – கையிலிருந்து பறிக்கப்பட்ட சபிக்கப்பட்டதொர இறந்த காலம்.

    அவன் எதிர்காலம் ஒன்றிற்கு வாக்குறுதி அளித்திருந்தான். அவள் அந்த இறந்த காலங்களின் குவிந்த சாம்பல் மேட்டின் முன் மண்டியிட்டாள்.

    ‘எனிக்கு இத்ர மதி. பகவானே ரக்ஷிக்கு ரக்ஷிக்கு’ பிரார்த்தித்தாள் உருகினாள்.

    ஆனால் பிரார்த்தனைகளின் சிறகுகளுக்கு உயரமான எல்லை விரைவில் தட்டுப்படுவதில்லை.
    அவை முன்னும் பின்னுமற்ற, முடிவும் தொடக்கமுமற்ற ஆகாயத்தில் அனாதைகளாகப் பறக்கின்றன.
    சில சமயம் தொடுவானம் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்புறம் வெறிச்சிட்டிருக்கிறது.

    நீலமாய்… சாம்பலாய்… நித்தியத்துவம் என்ற நிற உருவமற்ற சூன்யமாய், பிரார்த்தனைகள் பறந்து கொண்டே செல்கின்றன.

    சிவா வரும்போது எல்லாம் முடிந்து விட்டிருந்தது. ‘மார்ச்சுவரி’யில் பாண்டேஜ் போடப்பட்டு செலுத்த வேண்டிய பில் கட்டணத்தை எதிர்பார்த்து தாமுவின் உடம்பு டெலிவரி செய்யப்படுவதற்காகக் காத்திருந்தது.

    அவன் போன பத்து நிமிஷத்தில் மதனபள்ளியிலிருந்து தர்மராஜ ரெட்டிகாருவின் உறவினர்கள் ஒரு மெடாடரில் வந்து இறங்கினர்.

    பில் கட்டப்பட்டதும் ஸ்ட்ரெச்சரில் தாமுவின் உடல் லேசாகத் தூக்கித் தூக்கிப் போடப்பட வந்து சேர்ந்தது.
    இதுதான் தாமு.

    விசாலமான இருதயம். வைராக்கியம், நேசம், தொழில் திறமை.. தான் தான் என்று சுழலும் சுயநலச் சக்கர அச்சிலிருந்து சந்தர்ப்பம் வரும்போது துண்டித்துப் பிரிந்து வரும் துணிவு.

    மிச்சம் எல்லாம் போர்வை போர்த்தப்பட்ட இந்த உடம்புதான். மீதியெல்லாம் இவ்வளவு தான்.
    சிவா நொறுங்கிப் போனான்.

    பிரீதா சில்லு சில்லாகச் சிதறியவள் போல் நின்றாள். அவள் சிவாவைப் பார்த்து தலையசைத்தாள். அழவில்லை. கதறவில்லை.

    அவையெல்லாம் நேர்ந்துள்ள இழப்பின் முன்னே கொச்சையானவை. அந்த வெளியீடுகளில் நேர்ந்த நஷ்டத்தின் துக்கத்தை செலவிட முடியாது.

    மதனபள்ளியில் கட்டிலின் மீது படுத்துக் கொண்டே தாமுவின் தந்தை அவன் தனக்கு செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை பிறர் அவனுக்குச் செய்வதைப் பார்த்தார்.

    செய்தி வேட்டைக்காரர்கள், புகைப்படம் பிடித்தார்கள். மறுநாள் கொட்டை எழுத்துக்களில் இயந்திரங்கள், இயந்திர மயமாய்விட்ட வாழ்வில் மனிதர்கள் மிச்சமிருக்கும் அதிசயத்தை அச்சடித்தன.
    மயானத்திற்கு கூட்டங் கூட்டமாய் மனிதர்கள் வந்தார்கள். தாமுவின் அந்த அந்தஸ்திற்காக வந்தார்கள் சிலர்.

    மனிதன் ஒருவன் மாண்ட வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டோர் பலர்.
    செங்குட்டுவன் வந்தான்.

    ராயப்பேட்டையிலிருந்து மலர் வளையங்கள் வந்தன.
    புண்ணியகோட்டி வந்தார். திஷ்யா வந்தாள்.
    தந்திகள் வந்தன.
    தபால்கள் வந்தன.

    சிவாவுக்கு சுயநிலை மீள மூன்று நாளாயிற்று. கரை தெரியாமல் இருண்டு விட்ட சமுத்திரத்தில் மரணம் என்ற சூறாவளியின் ஆர்ப்பரிப்பும், உணர்ச்சிகள் சுழன்றடிக்கும் ஊர்த்துவ வேகமும் மட்டும் அவனுக்கு நினைவிருந்தன.

    எப்படிப் போயின அந்த மூன்று நாட்கள்!
    பிரீதா எங்கே இருந்தாள்? என்னவானாள்?
    வந்தவர்கள் எப்படிப் போனார்கள்?
    போனவர்கள் எங்கே மறைந்தார்கள்? எதையும் அவனால் சொல்ல முடியவில்லை.

    அந்த மூன்று நாட்கள் அவன் எங்கே சாப்பிட்டான்? எவ்வாறு விழித்தான்? எதுவும் திருப்பிச் சொல்ல முடியாத அனிச்சை செயல்கள் மாதிரி நடந்தன.

    நாலாவது நாள் கட்டிலில் படுத்திருந்த தர்மராஜ ரெட்டிகாரு முன்னிலையில் விவகாரம் பேசினார்கள். அன்று சிவா சிவாவானான்.

    “ராயப்பேட்டா ஒர்க்ஷாப் கணக்கு வழக்கெல்லாம் ஒனக்கு நல்லாத் தெரியுமா?” தாமுவின் மாமா கேட்டார்.

    “எல்லாம் கரெக்டா எழுதி அப்டுடேட்டா வச்சிருக்கேன்…”
    “ஒர்க்ஷாப்பை மறுபடியும் நடத்தணுமா மாமா?” அவர் கட்டிலில் படுத்திருந்த தர்மராஜ ரெட்டிகாருவிடம் அபிப்பிராயம் கேட்டார் தெலுங்கில்.

    கட்டிலின் மீது ஒரு மார்பு இரண்டு மூன்ஙறு முறை குலுங்கிற்று. ஒரு மேல் துண்டு வாய் ஓசை வெளிவராமல் தான் வாங்கிக் கொண்டது.

    “இப்புடு தேனிகிஅதந்தா அடுகுதாரு?”
    அதை இப்போது கேட்க வேண்டாம் என்று யாரோ தடுத்தார்கள்.
    தர்மராஜ ரெட்டிகாரு ‘வேண்டாம்’ என்று கையசைத்தார்.

    ‘வொர்க்ஷாப் ஒத்து” என்று அவர் குழறிய குரலில் சொன்னதை எவரோ தெளிவாகத் திருத்திச் சொன்னார்.

    “ஒர்க்ஷாப்பை மூடிடலாம்னு சொல்றார்.”
    ‘இல்லை. ஒர்க்ஷாப் நடக்க வேண்டும்! அது தாமுவின் நினைவுச் சின்னம். வெறுங்கையுடன் சென்னைக்கு வந்த இளைஞன் ஒருவனின் வெற்றிச் சின்னம். தயவு செய்து அதை மூடாதீர்கள்.’
    சிவா எழுந்து கத்தப் போனான். ஏதோ ஒரு கை அவனைப் பிடித்தது. பிரீதா.

    அவள் அவன் மனசிலிருந்ததைப் புரிந்து கொண்டவள் போன்று அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். பின்பு மெதுவாக அதைத் தடுப்பது போல் தலையாட்டினாள்.

    தான் அதில் மானேஜர் என்பது அப்புறம் சிவாவுக்கு ஞாபகம் வந்தது. எழுந்து பேசினால் தன் உத்தியோகம் போய்விடும் என்று சொல்வதாக எடுத்துக் கொள்வார்கள்.

    தாமு போனபின் நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கிற அக்கறை அவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன?
    தன் தாமு வேறு.
    அவர்கள் தாமு வேறு.

    அவர்கள் தங்கள் தாமுவின் சொத்தைக் குறித்து விவகாரம் பேசுகிறார்கள். அதில் தலையிடுவதற்கு தனக்கோ பிரீதாவுக்கோ எவ்வித உரிமையுமில்லை.

    அங்கே விவகாரம் பேசப்பட்ட பதினெட்டாவது நாளில் தாமு நிறுவிய ஒர்க்ஷாப் அதன் குட்வெல்லோடும் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களோடும் இருபது லட்ச ரூபாய்க்குக் கை மாறியது.

    சிவாவின் கணக்கு வழக்குகள் அப்பழுக்கின்றி இருந்ததை மீடியேட்டராக இருந்த ஆடிட்டர் எல்லார் முன்னிலையிலும் பாராட்டினார்.

    அவனது மாதச் சம்பளத்தோடு ஒரு தொகை சேர்த்துக் கணக்கிட்டு கவரில் வைத்து அவனிடம் நீட்டினார்கள்.

    ஒர்க்ஷாப் நடுவில் சமீபத்தில் பிரேம் செய்து, பெரிதாக மாலை போட்டிருந்த தாமுவின் போட்டோவை சிவா திரும்பிப் பார்த்தான்.

    ‘தட்ஸ் ஆல் சிவா..தாங்க்யூ. தாங்க்யூ ஃபார் எவ்ரிதிங்.’

    போட்டோவில் திடமாக தீர்க்கமாக மரணத்தால் அழிக்க முடியாத உயிர்ச் சக்தியின் நினைவு போல் தாமு சிரித்தான்.

    தொடரும்

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் சேமிப்பு

    – எஸ். நித்யலக்ஷ்மி.

    பென்டிரைவ் (Pen Drive) போல தகவல்களை சேமிக்கும் மென்பொருள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    முன்னுரை :
    டிராப்பாக்ஸ் (Dropbox) என்பது நம்முடைய ஃபைல்களை இண்டர்நெட்டில் பாதுகாப்பாகச் சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதனால் நமக்குத் தேவையான தகவல்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. உங்களுடைய முக்கிய தகவல்கள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை, அவை பத்திரமாக டிராப் பாக்ஸ் Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

    DropboxLogo

    வழிமுறைகள் :
    முதலில் டிராப் பாக்ஸ் இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணினியில் டிராப் பாக்ஸ் ஸினால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் கணினியில் டிராப் பாக்ஸ் என்ற ஒரு Folder உருவாக்கி இருக்கும். இனி நீங்கள் அந்த டிராப் பாக்ஸ் folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணைய இணைப்புள்ள எந்தக் கணினியில் இருந்தும் www.Dropbox.com என்ற தளத்தின் வழியாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள டிராப் பாக்ஸ் மென்பொருளினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். டிராப் பாக்ஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன் Public, Photos என்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும்.

    தகவல்களை பரிமாற வழிகள் :
    Public :
    இதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்தக் கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copy செய்து email மூலமாக அல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

    Photos :
    அதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder ஐ போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link ஐ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

    Sharing :
    மேலும் டிராப் பாக்ஸ் இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல் நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்

    முடிவுரை :
    டிராப் பாக்ஸ் இனுள் Public , Photos எனும் இவ்விரு Folderகள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. டிராப் பாக்ஸ் இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் டிராப் பாக்ஸ் கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை டிராப் பாக்ஸ் இல் இணைப்பதன் மூலம் உங்கள் சேமிப்பிடத்தைப் 8GB வரை அதிகரிக்க முடியும் .

    Share
  • சிகரம் நோக்கி (12)

    சுரேஜமீ

    தெளிவு

    peak111111

    இன்றைய குழந்தைகள் பலருக்கும் ஒற்றைக் குறிக்கோளாக இருப்பது,

    ஒன்று பெற்றவர்களின் எண்ணத் திணிப்பு;

    அல்லது சக மனிதத் திணிப்பு!

    என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    புற்றீசல் போல எங்கும் பரவிக் கிடக்கும், எண்ணற்ற பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் இடங்களின் எண்ணிக்கை,, தேர்ச்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதும்,

    பெரும்பாலான மாணவர்கள்,

    ஏதேனும் ஒரு பொறியியல் சார்ந்த படிப்பு, எப்படியும் ஒரு கணிணிப் பயன்பாட்டு நிறுவனத்தில் பணி கிடைப்பதற்கு ஏதுவாகி விடும்;

    என்ற எண்ணப் போக்கும், இன்றைய கல்வி நிலையில் ஒரு பொருளாதாரச் சிந்தனையை வித்திட்டு விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

    இதனால் பாதிக்கப்பட்டது ஒட்டு மொத்த சமூகமேயன்றி தனி மனிதன் மட்டுமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். மிகச் சில பெற்றோர்களே, தம் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களின் வழியில் செல்லவிட்டு, அந்தக் குழந்தைகளின் சாதனைக்குச் சான்றாக இருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

    இதற்கு என்ன அடிப்படைக் காரணம்?

    யோசித்துப் பார்த்தால், ஒன்று நம்முடைய அறியாமையாக இருக்கும்; இல்லையெனில், கற்ற கல்வி உடனடியாக நம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற குறுகிய காலச் சிந்தனையாக இருக்க வேண்டும்.

    கல்வியைப் பற்றி நம் இலக்கியங்களில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நாலடியார்’ கல்வி எப்படி கற்க வேண்டும் என்று சொல்வதைத் தெரிந்து கொள்வோமா?

    …..தெள்ளிதின்

    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

    பாலுண் குருகின் தெரிந்து!

    எப்படி அன்னப் பறவை, நீரைப் பிரித்துப் பாலை மட்டும் உண்ணுகிறதோ, அதைப்போல, நாம் எண்ணங்களை ஏற்றம் பெறச் செய்யும் நூல்களைத் தெரிந்தெடுத்து கற்றல் அவசியம்!

    அப்பொழுதுதான் வாழ்வில் உயர்வடைய முடியும். அதை விடுத்து, ஒரு பொருளியல் சார்ந்த சிந்தனையிலோ, அல்லது ஒரு பட்டம் பெறவேண்டும் என்ற நோக்கிலோ படித்தால், கற்றலின் பயன் வாழ்வில் உய்ய வழி வகுக்காது!

    சரி நமக்கு என்ன படிப்பது? எதைத் தேர்ந்தெடுப்பது? என்று தெரியவில்லையென்று வைத்துக்கொள்வோம்.

    அடுத்து என்ன செய்ய வேண்டும்? நம்மில் கற்றறிந்த மக்களை உற்று நோக்குதல் அவசியம்.

    நான் படித்தது முகவை மாவட்டத்தில், இராமநாதபுரத்திற்கும், இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட ஒரு சிற்றூர். நான் படித்த காலத்தில், கிழக்கு முகவை என்று சொல்லக் கூடிய, மேற்கூறிய இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் இருந்த ஒரே மேல்நிலைப் பள்ளிக் கூடம், நான் படித்த கடுக்காய் வலசை என்னும் கிராமம் தான். அந்தக் கால கட்டத்தில், ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவே. மேலும், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், என எல்லாவற்றிலும் பின் தங்கிய ஒரு மாவட்டம் என்பதால், அரசு ஊழியர்களுக்குத் தண்டனைக்குரிய பகுதியாகக் கருதப்பட்டதால், அது சார்ந்த சிக்கல்களும் உண்டு.

    அத்தகைய சூழலில், என்னால் தேவையான மதிப்பெண்களை, பள்ளி இறுதி வகுப்பில் பெற முடியவில்லை; அப்பொழுதே, முடிவு எடுத்தேன் மேல்நிலை வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படிக்க வேண்டும் என்பதையும், அதற்குப் பின் பட்டயக் கணக்காளர் படிப்புதான் படிக்க வேண்டும் என்பதும்!

    இதற்கு உறுதுணையாக இருந்தது நான் அடிக்கடி விடுமுறைக் காலங்களில் காரைக்குடிக்குச் செல்வதும், அங்கே கற்றறிந்தவர்களுடனான நட்பும் என்றால் சாலப் பொருந்தும்!

    அதைத்தான் பின் வரும் பாடலில் உணர்த்துகிறது!

    ……….கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே!

    கற்றறிந்தவர்களுடைய நட்பு என்பது கரும்பை நுனியிலிருந்து சுவைப்பத் போன்று, நம் வாழ்க்கை கரும்பை ருசிப்பதற்கு உதவும். இதையெல்லாம், இளம் வயதில் நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு வழிகாட்டியாக இருந்தால், நிச்சயம் எந்த சிகரத்தையும் வரும் தலைமுறை அடையும் என்பதில், எள்ளளவும் ஐயமில்லை!

    சமீபத்திய செய்தி ஒன்று!

    apooja

    இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த பதினேழே வயதான மாணவி பூஜா சந்திரசேகருக்கு, அமெரிக்காவில் உள்ள முதல்நிலைப் பல்கலைக் கழகங்கள் பதிநான்கில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    இவருக்கு எப்படி இந்த வாய்ப்பு கிட்டியது என்றால்,

    இவர் மறதி நோய் எனப்படும் பார்க்கின்சன் எனும் நோயை, ஒருவர் பேசும் முறையை வைத்தே கண்டறியப் படும் ஒரு முறையக் கண்டுபிடித்துள்ளார் என்ற சிறப்பே!

    அவரிடம் எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று வினவியதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?

    ‘என்னால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நான் நம்பியதுதான்!’ என்றார்.

    ஆக, ஒவ்வொருவரும் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்பதைத் தான் படித்த நூல்களின் வாயிலாகவோ,

    நம் பெற்றோர்களின் அனுபவத் துணையோடோ, அல்லது

    கற்றறிந்த மேதைகளின் நட்பு மூலமாகவோ,

    நாம் விரும்பும் படிப்பைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் தனிப்பெரும் சிறப்புப் பெறவேண்டும் என்ற முனைப்பும், தன்னம்பிக்கையும் கொண்டு முயன்றால்,

    தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் எனும் வள்ளுவனின் கூற்று,

    உங்களைச் சிகரங்களை நோக்கிப் பயணிக்க வைக்கும்!!

    -தொடர்ந்து சிந்திப்போம்!

    அன்புடன்

    சுரேஜமீ

    Share
  • காதல் நாற்பது – 43

     

    உன்னை நேசிப்பது எவ்விதம் ?

    மூலம்: எலிஸபெத் பிரௌனிங் (1806-1861)

    தமிழாக்கம் :   சிஜெயபாரதன்கனடா

     

    1. Free Verse

    எவ்விதம் நேசிப்பது உன்னை ?
    எத்தனை வழிகள் உள்ளன வென்று
    எண்ண வேண்டும் நான் !
    என் காதல் ஆழ மானது !
    அது விரிவது !  அது உயர்வது  !                 browning
    உணர்ச்சி மறைந்துள்ள போது,
    உயிரினத்தின் முடிவாய்,
    ஒப்பிலா நளினத்தில்
    உன்னை எட்டித் தொடும்
    என் ஆத்மா!

    பகற் பொழுதில், மங்கிடும்
    இரவு வெளிச் சத்தில்
    அவசியம் நேசிப்பேன் உன்னை
    அனுதின முடிவு வரை  !
    மனத் தடுப்பின்றி
    உனைக் காதலிக் கிறேன்,
    மானிட உரிமைத் தேடலாய் !
    தூய மனதுடன் நேசிப்பேன்,
    என் புகழின் திருப்பமாய் !
    முந்தைய துக்கங்க ளோடு
    குழந்தையின்
    பிடிவாத நம்பிக்கை யோடு
    பித்தானேன் உன் மீது !

    இழந்த புனிதரிடம்
    நழுவிப் போன எந்தன் காதல்
    நாடுகிறது உன்னை !
    கண்ணீர், பெருமூச்சு, முறுவல்
    காட்டி விடும் எனது
    காதலை !
    வாழ்வு பூராவும் நேசிப்பேன் !
    முடிவிலே
    கடவுளின் விதி அதுவாயின்,
    உறுதியாய் இருக்கும்
    காதல் மட்டும்,
    உன்மேல்
    சாதலுக்குப் பிறகும் !

    +++++++

    2. Sonnet Style

    எப்படி நேசிப்ப துன்னை ? எண்ண வேண்டும் வழிகளை
    என் காதல் ஆழ்ந்தது, அகண்டது, உயர்ந்தது, உன்மேல்
    எட்டித் தொடும் என் ஆத்மா பிரிவை உணரும் போது
    உயிரின வாழ்வின் முடிவாய், உன்னத நளின மதில்
    அனுதினம் இயலும் வரை நானுனை நேசிப்பேன்
    பரிதி வெளிச்சம், இரவு விளக்கில் அமைதிக் கவசியம்
    தடையிலா நேசம் மனித உரிமை முயற்சி போல்
    தூய தென் நேசம் பிறரது புகழின் திருப்பமாய்
    நேயம் உணர்ச்சி வசப்படும், பயன் படுத்தப் படும்
    பழைய துயரொடு, என் குழந்தை நினைப்பொடு
    இழந்த காதலை மீட்டு நேசிப்பேன் பாசமுடன்
    நழுவிய புனிதருடன் நேசிப்ப துன்னை, மூச்சுடன்
    கண்ணீர், முறுவல் ஆயுள் வரைக் கடவுள் விதியெனின்
    உன்னைத்தான் நேசிப்பேன் மேலாய்ச் சாதலுக்குப் பிறகும்

    ++++++++++++

    Poem -43

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    How do I love thee? Let me count the ways
    I love thee to the depth and breadth and height
    My soul can reach, when feeling out of sight
    For the ends of Being and ideal Grace
    I love thee to the level of everyday’s
    Most quiet need, by sun and candle-light
    I love thee freely, as men strive for Right;
    I love thee purely, as they turn from Praise
    I love thee with the passion put to use
    In my old griefs, and with my childhood’s faith
    I love thee with a love I seemed to lose
    With my lost saints,–I love thee with the breath,
    Smiles, tears, of all my life!–and, if God choose,
    I shall but love thee better after death

     

    Share
  • உலகமெங்கும் ஒரே மொழி …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    உலகமெங்கும் ஒரே மொழி …

    உலகமெங்கும் ஒரே மொழிகாலவெள்ளத்தில் கரைந்துபோகாதது காதல் ஒன்றுதான்! உள்ளங்கள் பேசுவதற்காகவே உலகில் தோன்றிய மொழி! இந்த மொழியை எந்த மனிதனும் பேசாமல் இல்லை! அப்படிப் பேசமறந்தவன் மனிதனுமில்லை! ஜீவராசிகளில் மனிதனால் மட்டுமே வழிவழியாக மொழியப்படுவதுடன், கவிதைகளாய், காவியங்களாய், கலை வடிவங்களாய் பதிவுகள் செய்யப்பட்டுவரும் உன்னத மொழி காதல்!

    அன்பின் மறுவடிவம் காதல் என்பதை அறுதியிட்டுச் சொல்வதற்கு ஆதாம் ஏவாள் முதல் இன்றுவரை காதலர்கள் படையெடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அங்கு இங்கு என்று பேதம் இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கிற காதலை உலகமெங்கும் காண முடிகிறதல்லவா?

    இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் இனிமைதவழும் தென்றல்காற்று இதயத்தில் பரவிநிற்கும்! எளியதமிழில் கவிதைமுழங்கும் காதலின் ஊர்வலம்!

    கவியரசரின் கைவண்ணத்தில் ஒவ்வொரு வரியிலும் உன்னதம் தென்படுகிறது! மகத்தான சக்தியாய் விளங்கும் காதலின் மாண்புகள் புரிகிறது! அள்ளி எடுத்த பின்னும் இன்னும் அமுதசுரபியாய் விளங்குவது காதல் என்கிற சுகவரியில் கொஞ்சம் மூழ்கலாமே!

    நாடோடி திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மீட்டிய இசையில், கண்ணதாசன் கவிதைமழையில், கானக்குயில்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடிய கீதம்! காதலுக்கு இது ஒரு வேதம்!!

    உலகமெங்கும் ஒரே மொழி
    உள்ளம் பேசும் காதல் மொழி
    ஓசையின்றிப் பேசும் மொழி
    உருவமில்லா தேவன் மொழி
    (உலகம்)

    பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
    பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
    இரவு ஒன்று பருவங்கள் வேறு
    இன்பம் ஒன்று உருவங்கள் வேறு

    கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
    காதல் வேகம் காற்றிலும் இல்லை
    உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
    ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
    (உலகம்)

    ஒன்றே வானம் ஒன்றே நிலவு
    ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
    காதல் பேசி கவிதையில் ஆடி
    கலைகள் தேடி கலந்தவர் கோடி

    கோடி மனிதர் தேடிய பின்னும்
    குறைவில்லாமல் வளர்வது காதல்
    நாடு விட்டு நாடு சென்றாலும்
    தேடிச் சென்று சேர்வது காதல்
    தேடிச் சென்று சேர்வது காதல்
    (உலகம்)

    காணொளி: https://youtu.be/O2j_0yaXZkM

     

    https://youtu.be/O2j_0yaXZkM

     

    Share