பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: யார்க்கானும் அஞ்சுவார்க் கில்லை யரண்
வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து
தஞ்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
அஞ்சுவார்க் கில்லை யரண்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?
மஞ்சு சூழ் சோலை மலை நாட! யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை, அரண்.
பொருள் விளக்கம்:
வலிமை உள்ளவர்களைச் சார்ந்து இருப்பவராக இருந்தாலும், அவருக்கு வலிமையூட்டி, தனது சொந்த வலிமை இல்லாத ஒருவரைப் புகழ் பெறச் செய்தல் இயலுமா? மேகங்கள் தவழ்ந்து செல்லும் சோலைகளுடைய மலைநாட்டைச் சேர்ந்தவரே, யாராக இருப்பினும் அஞ்சி நடுங்குபவருக்கு எந்த அரண் தரும் பாதுகாப்பினாலும் பயனில்லை.
பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சி நடுங்கும் ஒருவருக்கு எந்த அரணும் பாதுகாப்பு அளிக்காது, அதுபோல தனக்கே துணிவில்லாத ஒருவருக்கு அடுத்தவர் தரும் பாதுகாப்பு என்றும் உதவாது. இந்த உண்மையை எடுத்துரைக்கும் வள்ளுவர் தரும் குறள்,
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. (குறள்: 534)
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் அதனால் எந்த ஒரு பயனுமில்லை. அதைப் போலவே மறதி உடையவர்க்கு நல்லதொரு நிலை வாய்த்தாலும் அதனால் அவருக்கு பயன் இருக்காது என்று விளக்குகிறது.