Author: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 15

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    நட்பினைக் குறித்த திருக்குறள் அதிகாரங்கள் நமக்குப் பல்வகை அறிவுக் கருத்துக்களை வழங்குகின்றன! நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ்சேராமை ஆகிய அதிகாரங்களின் குறட்பாக்கள், இவற்றுடன் காதல் சிறப்புரைக்கும் காமத்துப் பால் குறட்பாக்கள் அனைத்தும் நமக்கு நட்பினைக் குறித்த அனைத்து வகை குணம் குற்றங்களை உணர்த்துகின்றன !

    இவற்றுடன் நமக்குத் தேவையான சிறந்த பொது அறிவுக் கருத்துக்களையும் வழங்குகின்றன! நட்பினை பற்றி விதிமுகத்தான் ஐந்து அதிகாரங்களும், பகை பற்றி எதிர்மறை முகத்தான் பன்னிரண்டு அதிகாரங்களும் வள்ளுவரால் பாடப்பெற்றன! இவற்றில் பொறுக்கப் படாத குற்றம் உடையவரது நட்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. நட்பாராய்தல் அதிகாரத்தில் பேதையார், அல்லற்கண் ஆற்றறுப்பார், கெடுங்காலைக் கைவிடுவார் ஆகியோர் நட்புக்கு உரியவர் ஆகார் என்கிறார் வள்ளுவர். அடுத்து தீநட்பு அதிகாரத்தில் தீய குணம் படைத்தவருடன் நட்புக் கொள்ளலாகாது என்கிறார். இந்த அதிகாரத்தில் பண்பிலார், ஒப்பிலார், உறுவது பார்ப்பவர், ஆற்றறுப்பார், அரணாகாத சிறியவர், பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார், வினைவேறு சொல் வேறு பட்டார், மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார், ஆகியோரைத் திருவள்ளுவர் இனங்காட்டுகிறார்! இவர்களைத் தவிர, இயல்பாய்ப் பகைமை பாராட்டும் மனத்துடன், அழிக்கும் வாய்ப்புக் கருதிப் புறத்தால் கூடி ஒழுகுவாரைக் ”கூடாநட்பு” என்ற அதிகாரத்தில் அடையாளம் காட்டுகிறார்!

    இவ்வாறு நட்புக்கு உரியவரையும், நட்புக்குத் தகாதவரையும் ஆராய்ந்து அறிவிக்கும் திருவள்ளுவரின் பேரறிவு, நமக்குத் திகைப்பையும், வியப்பையும் உண்டாக்குகின்றன! சமூக விஞ்ஞானம் எனப்படும் மக்கள் தொடர்பின் அடிப்படையை வள்ளுவர்போல் விளக்கியோர் எவரும் இலர் என்றே கருதுகிறோம்!

    இந்த நட்பின் தன்மைகளைப் பற்றிக் கூறும்போதே , வள்ளுவப் பெருந்தகை, பல்வகைப்பட்ட அறிவியல் கருத்துக்களை, எந்த ஆயாசமும் இன்றி இயல்பாகவே வழங்குகிறார்! அறிவியலின் ஒரு பகுதியாகிய இயற்பியலின் ஆற்றல் என்ற தனிப்பட்ட வகையைத் தம் ஒரு குறட்பாவில் விளக்கும் அழகு நினைந்து நினைந்து மகிழ வைக்கிறது! புவி ஈர்ப்பு விசை , கீழ் நோக்கி இழுக்கும் தன்மை படைத்தது! ஒரு விசை, கீழ் நோக்கி இயங்கும் ஆற்றலாக வரும்போது புவி ஈர்ப்பு விசையும் அதன் வேகத்தை அதிகமாக்கும்! ஆகவே கீழ் நோக்கி இயங்கும் விசை போகப் போக அதிகம் ஆகும்! விண்ணிலிருந்து மண்மேல்விழும் பொருளின் விசை அதிகரிப்பது குறித்த இயற்பியல் சூத்திரங்கள், பிற்கால அறிவியலாளர்களால் வரையறுக்கப் பட்டுள்ளன! இத்தகைய ஆற்றலின் இருவகைகளை, நிலைப்பாற்றல். (ஸ்டாடிக் ஃபோர்ஸ்), இயங்காற்றல் (கைனடிக் ஃபோர்ஸ்) என்று , நவீன அறிவியலறிஞர்கள் வரையறை செய்துள்ளனர்.

    ஓர் இரும்புப் பட்டடையின் கல்மேல், பழுக்கக் காய்ச்சிய இரும்பை வைத்து, மேலிருந்து ஒரு சம்மட்டியால் விரைந்து தாக்கும் போது, மேலிருந்து தாக்கும் விசைக்கு ஈடான விசையைக் கீழிருக்கும் பட்டடைக்கல் உருவாக்கி – தாங்குவது போல் தாக்கும்!- என்ற தாக்குவிசையாற்றல் பற்றித் தமிழர் அறிந்து வைத்திருந்தனர் என்று நாம் அறிந்து கொள்கிறோம்! இந்த அறிவியலின் அடிப்படையில்தான் தாங்கும் ஆற்றல், அதாவது நிலை யாற்றல் (ஸ்டாடிக் ஃபோர்ஸ்), தாக்கும் ஆற்றல் , அதாவது இயங்காற்றல் (கைனடிக் ஃபோர்ஸ்) என்ற விசைபற்றிய அறிவியல் கொள்கை உருவாயிற்று!

    புலால் உணவினை, இரும்புப் பட்டடை இட்ட அடிமரத்தில் வைத்துச் சிதைத்து வெட்டுவதை , சீவக சிந்தாமணி, ”ஊனமர் குறடு போல இரும்புண்டு” என்ற தொடரால் விளக்குகிறது! இதற்கு, இவ்வாறு உரை எழுதியவர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார்! அக்காலத்தில் ஊன் சிதைக்கும் அடிமரமும் ,’பட்டடைக் கல்’ என்று வழங்கப் பெற்றது போலும்!

    இதனை மிகவும் நன்றாக அறிந்து வைத்திருந்த வள்ளுவப் பேராசான் இந்த இயற்பியல் கருத்தைக் ” கூடா நட்பு” என்ற அதிகாரத்தின் முதல் பாடலில் அமைத்திருக்கும் அழகு போற்றுதற்குரியதாகும்! ”நம்முடன் அகத்தால் கூடாமலிருந்தே, வாய்ப்பு வரும் வரை கூடியவர் போல் நடிக்கும் கீழோர் நட்பு , சீரான இடத்தைப் பெற்றால், இடையில் அகப்பட்ட பொருளை முழு வேகத்துடன் தாங்கித் தாக்கும் பட்டடை போன்று, பகை தீர்த்துக் கொள்ளும் வகையினது!” என்ற கருத்தமைந்த பாடலை அளித்துள்ளார் ! அப்பாடல் ,

    சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு” (821)
    என்பதாகும்!

    இத்தகைய பட்டறிவால் பெற்ற அறிவியற் கருத்துக்கள் திருக்குறளில் ஆங்காங்கே ஒளிவீசித் திகழ்வதை ஊன்றிப் படிப்போர் உணர்ந்து மகிழலாம்! அறிவியல் ஆற்றலை, நட்பின் திறத்துடன் ஒப்பிட்டுக் காட்டும் திருவள்ளுவரின் பேரறிவு நம்மை வியந்து மகிழ்ந்து போற்ற வைக்கிறது!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 14

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    ஒருவனுக்கு அறிவு இயல்பாகவே இருக்கும். அதனைத் திருவள்ளுவர் உண்மையறிவு என்கிறார்!

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்” (373)

    என்ற திருக்குறள் அதனைக் குறிக்கிறது! உயிர் மரபு வழிப்பட்ட அறிவினைப் பிறவிதோறும் தொடர்ந்து பெறும். ஆனால் கல்வி கேள்விகளால் ஒரு மனிதன் பெறுகின்ற அறிவு அவனை இம்மையில் உயர்த்தும். மறுமைக்கும் உதவும். இந்த அறிவைப் பற்றித் திருவள்ளுவர், கல்வி, கல்லாமை , கேள்வி ஆகிய மூன்று அதிகாரங்களில் மிகவும் செப்பமாகக் கூறுகிறார்!

    அவர் கல்வி என்ற அதிகாரத்தின் முதற் குறட்பாவாக,

    ”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக ”(391)

    என்ற பாடலைக் கூறுகிறார். இந்தக் குறட்பாவுக்கு உரை வரைந்தோர் அனைவரும் மிகச்சிறப்பாகவே உரையெழுதியுள்ளனர். அவற்றுடன் இங்கு நான் அளிக்கும் புதிய பொருளும் அன்பர்களுக்குச் சுவையுடையதாகவே அமையும் என நம்புகிறேன். திருவள்ளுவர் முதலில் ‘கற்க’ என்று விருப்பத்துடன் கேட்டுக் கொள்கிறார்! அவர் கற்க என்று சொல்வது யாரை? அக்காலத்தில் அரசனும், அமைச்சனும், அந்தணனும் கல்வி கற்பார்கள்! அவர்களையே கற்க என்று வள்ளுவர் கூறினார் ஆனால், இக்காலத்தில் எல்லாருமே அரசுபுரியும் தகுதி பெறலாம்; அமைச்சுப்பணியைப் புரியலாம்; அந்தணராக வேதம் ஓதலாம்; அனைத்துத் தொழில்களையும் வாணிகத்தினையும் கற்றறியலாம்! ஆகவே கல்வி எல்லாருக்கும் உரியது என்று இன்று ஆகிவிட்டது.

    ஆகவே ‘கற்க’ என்பது இப்போது கட்டாயம் ஆக்கப் பெற்றது அவ்வகையில் எந்த எதிர்வினாவுமின்றிக் கற்க என்கிறார் வள்ளுவர். அதாவது நம் ஆரம்பக் கல்வியில் ஆசிரியர் சொல்லவதை அப்படியே கேட்டுக் கற்கிறோம். ஆகவே கற்க என்பதன் பொருள் ஆரம்பக் கல்வியைக் குறிக்கிறது!

    அடுத்துக் ‘கசடறக் கற்’ என்கிறார்! இதற்கு இருவகையான பொருள் உண்டு. கற்கும் கல்வியை ஐயம் திரிபின்றித் தெளிவாகக் கற்க என்பதொன்று; கல்வியால் நாம் உள்ளத்தின் மாசுகள் நீங்கும்படிக் கற்க என்பது மற்றொன்று. இது உயர்பள்ளிக் கல்வியில் சாத்தியமாகும். ஆகவே கசடற என்பது, உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் குறிக்கும்; இக்கல்வியின் தொடர்ச்சி மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வி. ஆதலால் கற்பவை கற்க என்ற வள்ளுவர் விழைவு, நம் அறிவுக்குத் தேவையான, நமக்கு ஏற்றக் கல்வி பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கற்கும் மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வியைக் குறிக்கிறது! அடுத்து ‘கற்றபின் நிற்க அதற்குத் த’ என்பது பட்டமேற்படிப்பு , மற்றும் வாழ்க்கைப் பணி குறித்தது.

    இவ்வகையில் கற்க என்பது தொடக்கக் கல்வியையும், கசடற என்பது உயர்பள்ளிக் கல்வியையும், கற்பவை என்பது மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வியையும், கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது பட்டமேற்படிப்பு, மற்றும் வாழ்க்கையையும் தொடர்ச்சியாகக் குறிக்கிறது! இந்தப் பொருள் பதிய கல்விநிலைக்குப் பொருத்தமாக உள்ளதல்லவா?

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 13

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாக்கள், தனிச்சிறப்பு வாய்ந்தவை! ஒரு மதத்திற்கோ, ஓர் இனத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ உரியதான கடவுளைப் பெயர் கூறி வாழ்த்தாமல், எல்லா மதத்துக்கும், எல்லா இனத்துக்கும், எல்லா நாட்டுக்கும் உரிய கடவுளுக்கு அவர் வாழ்த்துக் கூறுகிறார்! அவர் கடவுளை உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் எண்ணி வணங்கும், அருமையை அவரது ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தில் காணலாம்!

    இந்த அதிகாரப் பாடல்களில் நற்றாள், மாணடி, அடி, தாள் என்றெல்லாம் கூறியமையால் இறைவன் ‘உருவத்திருமேனி’ உடையநிலையில் அவனுடைய திருவடிகள் இவை எனக் காட்டப் பெறுகின்றன! “நின்னிற்சிறந்தன, நின் திரு வடியவை” என்று பரிபாடல் கூறுகிறது! நாம் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், அதற்கும் மேலே பன்னிரண்டங்குலம் உயர்ந்த இடத்தில், அதாவது ”துவாதசாந்தப் பெருவெளியில்” இறைவன் திருவடி உயர்ந்து நிற்கும் என்பது ஞானிகளின் துணிபு! ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்று போற்றப் பெறும் நிலையில் விளங்கும் இறைவன் பொறி, புலன்களுக்கு அகப்படாமையால் ‘அருவத் திருமேனி’ உடையவன் என்பதை உணர்கிறோம் இறைவன் என்பதற்கு எங்கும் நிறைந்தவன் என்பது பொருள்; அறிவே உருவான அவனை ”வாலறிவன்” என்றும் கூறுகிறார். ஆகவே அறிவால் அறிந்து கொள்ளத் தக்க உருவமற்றவனாகவும், எங்கும் நிறைந்த உருவம் உடையவனாகவும் இறைவன் விளங்குவதால், அவன் ‘அருவுருவத் திருமேனியை ‘ உடையவன் என்பதும் விளங்குகின்றது,

    முதல் அதிகாரத்தில் இறைவன் எல்லாவற்றுக்கும் முதன்மையானவன் என்கிறார். இதனை அனைத்துலகுக்கும் முதல்வனான ‘ஆதிபகவன்’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்! இறைவனை நாம் வணங்கும் நம் மதங்கள் காட்டும் திருவுருவங்களில் அவர் காணவில்லை. இறைவனைப் பேரறிவுடையவனாகத் திரு வள்ளுவர் காட்டுகிறார்! ‘வாலறிவன்’ என்பது அவர் இறைவனை அழைக்கும் பெயர்! வேண்டுவார்களின் மனமாகிய பீடத்தில் விரைந்து வந்து அவன் அமர்ந்து கொள்கிறான்! அவனை ‘மலர்மிசை ஏகினான்’ என்று போற்றுகிறார் வள்ளுவர்! எல்லாவுயிர்களிடத்தும் ஒரே தன்மைத்தான அருளை வழங்குபவன் இறைவன்! அவனுக்குத் தனித்த விருப்பமோ, வெறுப்போ சற்றும் இல்லை, இதனை ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்ற தொடரால் குறிப்பிடுகிறார்! சிறந்த பொருளை உடைய புகழைக் கூறாமல், வேண்டாத இழிந்த பொருளுடைய புகழ்ச்சியை எப்போதும் கூறலாகாது! அதனால் இருள் நிறைந்த நரகத்துள் உழல வேண்டியிருக்கும்; ஆதலால் உயர்ந்த, உண்மையான, சிறந்த பொருளை உடைய புகழ்ச்சியாகிய இறைவனைப் புகழும் புகழ்ச்சியையே எப்போதும் பேசி இருவகை வினைகளாகிய நல்வினை, தீவினைகளிலிருந்து நீங்க வேண்டும்; இதனை, ‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்ற குறட்பாவில் வள்ளுவர் கூறுகிறார்.

    இறைவன் நம்மைப் போல ஐம்புலன்களின் வழியே அறிவைச் செலுத்தி அலைபாயும் உள்ளம் கொண்டவர் அல்லர்; அவர் ‘பொறிவாயில் ஐந்தவித்தவர்!’ என்கிறார்! தம்முடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும், அருளுக்கும் இணையாக வேறு எவரையும் கூறவியலாத, தனித் தன்மை வாய்ந்த தலைவர் அவர். இவரைத் திரு வள்ளுவர், ‘தனக்குவமை இல்லாதான்’ என்று போற்றுகிறார்! இறைவன் எல்லா அறங்களும் பாய்ந்து நிரம்பிய கடல் போன்றவன்! ஆனால் நாம் காணும் உப்புக்கடலை விடச் சிறந்தவன்! தம்மையே பிறருக்கு வழங்கி மகிழும் தன்மை வாய்ந்த கடல் போன்றவன் அவன்! தம்மை அடைந்தாரைச் சுழலில் சிக்கவைத்து, ஆழத்தில் அழுத்தி, ஆபத்து விளைவிக்கும் கடலை விடப் பலவகைகளில் சிறந்தவன்! அறத்தை அருளிப் பொருளையும் இன்பத்தையும் தருபவன், ஆதலால் இறைவனை வள்ளுவர், ‘அறவாழி அந்தணன் ” என்கிறார்!

    இறைவன், எட்டுவகையான குணங்கள் கொண்டவன் என்று சமய இலக்கியங்கள் கூறுகின்றன! இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன், முற்றறிவுடையவன், வரம்பில் ஆற்றல் உடையவன், வரம்பில் இன்பமுடையவன், முதலான எட்டுக் குணங்கள் அவனுக்கு உண்டு என்று பரிமேலழகர் எழுதுவார். பிங்கலந்தை நிகண்டு பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை , ஒருவினையின்மை, குறைவில் அறிவுடைமை என்ற எட்டு குணங்கள் பெற்றவன் கடவுள். என்று கூறுகிறது.
    அதனை,

    “பவமின்மை இறவின்மை பற்றின்மை பெயரின்மை
    உவமை யின்மை ஒருவினை யின்மை
    குறைவிலறிவுடைமை கோத்திரமின்மை என்று
    இறைவனிடத்தில் எண்குணம் இவையே.” (பிங்கலந்தை)

    என்ற நூற்பாவால் அறியலாம்.

    நாம் இங்கே இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவர் காட்டும் ஒரு நுட்பத்தைக் காணத் தவறுகிறோம்! இறைவனின் குணங்கள் எட்டினையும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் முதல் எட்டுப்பாக்களிலும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்! அவை, 1 அனைத்துக்கும் முதன்மை, 2.சிறந்த ஞானம் உடைமை, 3. அடைதற்கு எளிய நிலை, 4. பற்றற்ற நிலை, 5.எங்கும் நிறைந்தநிலை, 6. பொய்தீர் ஒழுக்கமுடைமை, 7. தனக்குவமை இன்மை , 8. அறத்தின் இருப்பிடமான நிலை ஆகிய எண்வகைப் பண்புகளையும் வரிசையாக அவரே குறிப்பிட்ட பின்னர், ஒன்பதாம் குறட்பாவில், தாம் முன் கூறியவற்றைத் தொகுத்து ”எண் குணத்தான் ” என்று கூறும் நுட்பம் சிந்தித்து மகிழ்தற்குரியது! ஆதலால் திருவள்ளுவர் குறிக்கும் எண்குணமும் முதல் எட்டுக்குறட்பாக்களில் குறிப்பிடப் பெற்றனவே என்பதைப் புரிந்து கொண்டு ஒன்பதாம் குறட்பாவைப் படிக்கிறோம்!

    ”கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை”

    என்ற குறட்பாவின், எண்குணத்தான் ‘ என்ற தொடர் , நமக்குப் புதிய பொருளைத் தந்து மகிழ்விக்கின்றது ! பின்னர் எண்குணத்தான் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவரே பிறவிக் கடலைக் கடந்து கரையேறுவர் என்பதைப் பத்தாம் பாடலில் புரிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 12

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    திருக்குறளில் ஒப்புரவறிதல், ஈகை ஆகிய இரண்டு அதிகாரங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன! ஒப்புரவு அறிதல் என்ற தொடரின் பொருள் ஈகையிலிருந்து வேறு பட்டது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே, இவற்றை வள்ளுவர் அடுத்தடுத்து வைத்தார்! ஈகைக்கும் ஒப்புரவுக்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாடு அறிந்து மகிழ்தற்கு உரியது. பரிமேலழகர் ஒப்புரவறிதல் இம்மை நோக்கியது; ஈகை மறுமை நோக்கியது என்கிறார்!

    ஒப்புரவு என்பது உலகத்தாரோடு ஒத்துச் செய்கின்ற சிறந்த தொழில். அதாவது ஒரு தொழிலைச் செய்பவன் அதனால் தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் வருகின்ற பயனை மட்டும் கருதிச் செய்யாமல் தம்முடன் வாழும் உலகினர்க்கும் பயன்படும்படிச் செய்தல்! இதனை மேலும் விளக்குவோம்! உழவுத்தொழில், நெசவுத்தொழில், வீடுகட்டும் தொழில் போன்ற, இவ்வுலக வாழ்விற்கு உதவும் தொழில்களைச் செய்வோர், தமக்கு மட்டுமே என்று கருதாமல் மற்ற மக்களுக்கும் பயன்படும்படி அத்தொழிலைச் செய்தல்! நெசவு நெய்வோன் தனக்கு மட்டுமே தேவையான துணியை நெய்து கொள்வதில்லை, பிறருக்கும் நெய்து தருகிறான். உழவுத் தொழில் செய்வோன் குடும்பத்துக்குத் தேவையான உணவை மட்டும் உற்பத்தி செய்வதில்லை, பிறருக்கும் உணவு தருகிறான். உடை தைப்பவர் தனக்கு மட்டுமே சட்டை தைத்துக் கொள்வதில்லை, பிறருக்கும் தைத்துத் தருகிறார். ஊதியம் கருதும் தொழிலாக இவற்றைக் கருத இயலாது! ஊதியத்தை நாடாமல் பிறருக்கு உதவும் பொருட்டே இவற்றைச் செய்வார் உலகில் உளர்! இவ்வாறு இவ்வுலக வாழ்க்கையில் எல்லாருக்கும் பயன் தரும் சிறந்த தொழிலை உபகாரமாகச் செய்தாலே ஒப்புரவறிதல்! ஒப்புரவால்தான் உலகின் நடைமுறை சிறப்பாக அமைகிறது!

    வேதம் இன்னது செய் என்று விதித்திருந்த அறங்களைச் செய்தல் வேறு; ஒப்புரவு அறிதல் வேறு. வேதம் விதித்த அறங்களைச் செய்யாத போது அதற்குரிய கழுவாய் உண்டு! ஆனால் உலக நடை வழுவி விட்டால் கழுவாய் இல்லை; ஆதலால்

    ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்!(214)

    என்று திருவள்ளுவர் கூறுகிறார்! இந்த அதிகாரத்தில் ஒப்புரவினைப் பற்றி நான்கு உவமைகள் கூறப்படுகின்றன! அவை திருவள்ளுவரின் நுட்பமான புலமைக்குச் சான்றாவன! முதல் உவமை மேகங்கள் போன்று மழைநீரை வழங்குபவர்கள் கைம்மாறு கருதாதவர் ஆவர். மழை வழங்கும் மேகத்துக்கு நன்றியாக மீண்டும் மேகத்துக்கு நாம் ஏதும் செய்ய இயலாது! தவிர்க்க முடியாத ஒப்புரவைக் கடப்பாடு என்கிறார் திருவள்ளுவர்.

    அடுத்து அவர் கூறும் மூன்று உவமைகள் ஒப்பற்றவை! முதல் உவமை ”ஊருணி நீர் நிறைந்தற்றே,” அடுத்த உவமை ”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்று” அதற்கடுத்த உவமை ”மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” என்பனவாகும்.

    1) ஊர்மக்கள் தாகம் தீரக் குடிப்பதற்கும் பசிதீர உணவு சமைத்து உண்பதற்கும் உரிய நீரைக் குறிக்கின்ற வள்ளுவர்,” ஊர் பருகி” என்று கூறாமல் ”ஊருணி” என்றார்! மக்கள் தமக்கு வேண்டிய அளவு நீரை, வேண்டிய நேரத்திலெல்லாம் தாமே சென்று முகந்து கொள்வதற்கேற்ப ஏரி, குளம் போன்ற ஊருணி நீர் நிரம்பிக் கிடந்தாற் போல்பவன் உதவுகிறான் என்கிறார் வள்ளுவர். இந்த உவமையில் பேரறிவாளனுக்குக் கிட்டிய பெருஞ்செல்வம் நீர் நிறைந்த ஊருணி போன்றது என்கிற போது, நீர்நிலை எந்த முயற்சியும் செய்யாமல் தானாக வந்த நீரை எல்லாரும் எடுத்துக் கொள்ளுமாறு கிடந்த சிறப்பினை உணர்த்துகிறார்.

    2) அடுத்து, நன்கு பழுத்த பழமரம், ஊரின் நடுவே வளர்ந்து, அனைவர்க்கும் உண்ணக் கனிகளை உதவுவது போல, ஒப்புரவு உடையவனிடம் உள்ள செல்வம் உதவும் என்கிறார். இந்த உவமையின் தனித்தன்மை யாதெனில், பழமரத்தை உள்ளூரில் உள்ளவர்கள் நீரூற்றி வளர்க்காவிட்டாலும், வழியில் செல்வோருக்கு அப்பழமரம் கனிகளைத் தரும். இவ்வகையில் அம்மரத்தை வழியில் பழுத்த பனைமரத்தையே இந்த உவமை குறிக்கும்! இதனை, நாலடியார்,

    ”நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
    படுபனை அன்னவர் பலர்நச்ச வாழ்வார்
    குடிகொழுத் தக்கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை”

    என்று பாடுகிறது! இத்தகைய பனைமரமும் வளர்ப்பாரின்றி உயர்ந்து பழம் தரும்!

    இந்த இரண்டு உவமைகளையும் கம்பர் ,

    ”ஊருணி நிறையவும் உதவும் மாடுயர்
    பார்கெழு பழுமரம் பழுத்தற் றாகவும்
    கார்மழை பொழியவும் கழனி பாய்நதி
    வார்புனல் பெருகவும் மறுக்கின் றார்கள்யார்?”

    என்று பாடுகிறார்

    3) அடுத்து எல்லாப்பிணிகளையும் நீக்கும் மருந்து மரம் , மக்களின் பார்வைக்குத் தப்பாமல் வளர்ந்து, தன் கொழுந்து, இல்லை, பூ, பட்டை , வேர், காய், கனி, கொட்டை, கட்டை ஆகிய உறுப்புக்களை வழங்குவது போன்றது ஒப்புரவறிந்தான் செய்யும் உதவியை வள்ளுவர் கூறுகிறார்! இந்த உவமையின் தனிச்சிறப்பு யாதெனில், மருந்துமரம் எப்படியோ, எங்கோ, நம் இல்லத்தருகிலும், மலைமேலும், காட்டினுள்ளும் யாரும் நீரூற்றாமல் தானே வளர்ந்து நம் பார்வைக்குள் அகப்பட்டுத் தன் எல்லா உறுப்புக்களையும், மக்களின் நோய்தீர்க்க உதவும் பெரிய செயலைச் செய்கிறது!

    ஏரிநீர் தானாகச் சேர்ந்த செல்வம்; பழமரம் பிறர் பராமரித்தமையால் வளர்ந்து பயன் தருவது; மருந்துமரம் யாரும் நீரூற்றாமல் , வேர்களால் முயன்று நீரைத்தேடி வளர்ந்த மரம். இவை மூன்றும் முன்னோர்செல்வம், பிறர் உதவியால் சேர்த்த செல்வம், தானாக மிகவும் முயன்று சேர்த்த செல்வம் ஆகிய மூவகைச் செல்வங்களை உணர்த்துகின்றன! மேலும் சிந்தித்தால் புதிய பொருள்களை இந்த மூன்று குறட்பாக்களும் தரும்! சிந்திப்போம்!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 11

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    இவ்வுலகின் உறவுகளில் மிகச்சிறந்த உறவு நட்பேயாகும்! தாய் – மகள், தந்தை – மகன், கணவன் – மனைவி, அண்ணன்- தம்பி, அக்கா- தங்கை, ஆண்டவன்- அடியார், தோழன்- தோழி போன்ற உறவுகள் நம் சமுதாயத்தில் நாம் பெறும் இடத்தினை வரையறுக்கின்றன! இவற்றுள் சிறந்த உறவாகிய நட்பின் பெருமையைத் திருவள்ளுவர், நட்பு, நட்பாராய்தல், தீநட்பு, கூடாநட்பு, சிற்றினஞ்சேராமை, பெரியாரைத் துணைக்கோடல் ஆகிய அதிகாரங்களில் பல்வேறு அணுகுமுறைகளில் நிலைநாட்டியுள்ளார்!

    மேலும், ஆணும் பெண்ணும் கொள்ளும் அன்பில் மலர்ந்த நட்பே, காதலாகும் என்கிறார் திருவள்ளுவர்! அவர்
    ”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொ டெம்மிடை நட்பு” (1122)

    என்ற குறட்பாவில் இருவருக்கும் இடையில் பிறவிதோறும் தொடர்ந்த நட்புகளைக் கூறுகிறார்! ஆகவே நட்பு என்பது பிறவிதோறும் தொடரும் தன்மை உடையதாகும். இத்தகைய இணைபிரியாத நட்புறவை நாம் பலவகையிலும் ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். கூடாநட்பு, தீநட்பு, சிற்றினத்தார் தொடர்பு ஆகியவற்றை அறிந்து நாம் நீக்க வேண்டும்! ஆராய்ந்து நட்புக்கொள்ளாவிடில், அது பெரிய துன்பத்தை அது உண்டாகி விடும்! இதனை ,

    ”ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்!” (792)

    என்ற குறட்பா மூலம் அறுதியிட்டுவிடுகிறார்! ஒரு நடைமுறைப் பழக்கமாகிய நட்பினை வழக்கமாக்கிக் கொள்ளத்தக்க ஒழுக்கமாகத் திருக்குறளில் ஆறு அதிகாரங்களுக்கு மேல் இந்த நட்பு கூறப் பெறுகிறது! மக்களிடையே அறிமுகமாகி, நீங்காத நெருக்கத்தை உண்டாக்குவது நட்பென்னும் பேருறவாகும்! பெற்ற தாயாரிடமும் கூறவியலாத செய்திகளை ஒருவன் நண்பனிடம்தான் கூறுவான்!

    மக்களின் ஒழுக்கத்தை அவர்களின் செயல்கள் வெளிப்படுத்தும்! இவை, அவனுக்குப் பிறவியிலேயே தாய் தந்தையரிடமிருந்து மரபு வழியில் வந்து விடும்! அத்தகைய பண்புநலன்களை ஆராய்ந்து அதன்பின் நல்ல நட்பை உருவாக்கிக் கொள்ளலாம். அவன் வாழும் சூழ்நிலை அவனுடைய பண்புகளை உருவாக்கும்! அவனுடன் பேசிப் பழகும் நண்பர்களின் வழியே அவனுடைய குணங்கள் அமைந்து விடும்! இவற்றை ஆங்கில நூலார் மரபுப்பண்பு, சூழ்நிலைப் பண்பு என்பர். ஆங்கிலத்தில் அவை ஹெரிடிட்டி, என்விரான்மெண்ட் என்று கூறப் பெறும்! ”தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்ற பாடல் ஒருவனுக்கு இனமரபு வழியே வந்த பண்பைக் குறிக்கும்! சமூகப் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்து கொண்டு கடைப்பிடிப்பவனே பிறருடன் நெருங்கிப் பழகுவான்!

    நட்பினை உருவாக்கிக் கொள்ள வேண்டியவன் முதலில் தன் நண்பனின் பண்புநலன்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும்; அவை அவனுக்கு அவன் பிறந்த குடிமரபின் வழியே உருவாகி அமைந்திருக்கும்! அடுத்து, அவனிடம் ஏதேனும் குற்றமும் அமைந்திருக்கலாம்! குறையில்லாதவர் எவரும் இலர்! இக்குற்றம் அவன் யாருடன் பழகுகின்றானோ, அவரால் உருவாகியிருக்கும்! அதனால் ஒருவனின் குணநலன்களுக்குக் காரணமாக இருப்பது பெரும்பாலும் அவன் பிறந்த மரபாகும்! அதே போல் குற்றம் உருவாகப் பெரிதும் காரணமாக அமைவது அவனுடைய சூழ்நிலையேயாகும்! அதனால்தான் சிற்றினம் சேராமை மிகவும் நல்லது என்று தனி அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்! இதையே ”குன்றா ” இனனும் அறிந்து நட்புக் கொள்க! என்கிறார்! அந்தக் குறள்தான்,

    “குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு.” (793)

    என்ற குறட்பாவாகும்! இப்பாடலில் …
    1. குணமும் என்பதற்குக் குற்றமில்லாத நற்பண்புகள் என்றும்,
    2. குற்றமும் என்பதற்குக் குற்றம் குறைந்த அளவில், அதாவது பொறுத்துக் கொள்ளத்தக்க அளவில் பெற்றுள்ள என்றும்,
    3. குடிமையும் என்பதற்கு உயர்குடியில் பிறந்த என்றும்,
    4. இனனும் என்பதற்கு உறவினருடன் ஒற்றுமை உடைய என்றும்

    பரிமேலழகர் பொருளுரைத்தார். இதனை ஒருவனின் நற்குணத்தையும், அதற்குப் பெரிதும் காரணமாக இருக்கும் நல்லமரபையும், குற்றத்தையும் அதற்குப் பெரிதும் காரணமாக இருக்கும் உற்றார், உறவினர் மற்றும் இனத்தாரையும் என்று சற்று மாற்றிப் பொருள் கொண்டால், ஒருவனது நற்குணத்தின் அடிப்படை அவன் பிறந்த குடியே என்பதையும், ஒருவனுடைய தீய குணத்துக்குப் பெரிதும் அடிப்படை, அவனைச் சூழ்ந்தோரே என்பதையும் இக்கால சமுதாயச் சிந்தனை வழியில் புரிந்து கொள்ளலாம்!

    ஆகவே ஒரு மனிதனின் மரபும், சூழ்நிலையுமே அவனது நற்பண்பையும், குற்றத்தையும் வடிவமைக்கின்றன! என்ற மானுடவியல் கருத்தினை, இந்தத் திருக்குறள் புதியதாய் வெளிப்படுத்துவதை உணரலாம்! வள்ளுவப் பேராசானின் மானுடவியல் தீர்க்க தரிசனத்தைப் புதுமையாக விளக்குவது இத்திருக் குறளே என்பதை நாம் அறிந்து கொண்டு பின் உணர்கிறோம்!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 10

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    ஓர் அரசனுக்குப் பொருள் இன்றியமையாதது! பொருளாதாரம் அரசாட்சிக்குத் தேவை! இந்தப் பொருளை அரசன் எவ்வாறெல்லாம் ஈட்டலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்! நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்க அரசன் இயற்கைச்செல்வத்தை முறைப்படி, தேவையான பொருளாக மாற்றிக் கொள்ளலாம்!

    பொருள் என்பதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் சிறந்தது! நாட்டால் ஆக்கவும், அரணால் காக்கவும் படுவதாகியபொருள் என்கிறார் அவர்! நாட்டின் இயற்கை வளங்களால் உருவாக்கப்படும் பொருள், நாட்டால் ஆக்கப்படுவது; நாட்டின்மக்களின் உழைப்பால், வயலிலும், கடலிலும், தொழிற்சாலைகளிலும் ஈட்டப் பெறுவது! இப்பொருளை அறவழியில் ஈட்டவேண்டும்! அறவழியில் பொருளீட்டி அறவழியில் இன்பத்தை நுகரவேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் அதேவரிசையில் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன!

    இந்தப் பொருள் உருவாதற்கு உரிய செயல்களை அரசன் ஊக்குவிக்க வேண்டும்! நாட்டுமக்கள் வரிப்பணமாக வேளாண்மை வருவாயில் ஆறில் ஒரு பங்கைச் செலுத்துவர் அந்த ஆறில் ஒருபங்கு என்பது

    ”தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்என்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”(43)

    என்ற குறட்பாவில் கூறிய ஐந்துடன், ஆறாவது பங்காகக் கருதப் பெற்றது! இந்த வரியையும் நிலம் விளையாதவிடத்தும், பஞ்சகாலத்திலும் வாங்காமல் வரி விலக்களித்து, அரசன் பொருள் ஈட்டவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதனை திறனறிந்து, தீதின்றி வந்தபொருள் என்ற பாடற்பகுதியால் விளக்குகிறார்!

    ”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு ” (385)

    என்ற திருக்குறள் அரசன் தொழிலை வளர்த்தல், பொருளை ஈட்டல், சேமித்தல், உரியவாறு நாட்டின் நலனுக்காகப் பிரித்துஅளித்தல் ஆகிய பொருளியல் சிந்தனையைக் கூறுகிறது! ஆக, ஓர் அரசன் தனது நாட்டை மேம்படுத்துவதற்குப் பொருள்சேர்த்தல் தேவை! அதற்கு வயல் வளமும் அதனைச் சார்ந்த தொழில்களும் தேவை! இதற்கு அடிப்படை நீர்வளம் என்கிறார்!

    ”இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற் குறுப்பு ”(737)

    என்ற குறளில் இருபுனல் என்பது கீழ்நீர், மேல்நீர் ஆகியவை என்கிறார் பரிமேலழகர்! அவற்றுள் கீழ் நீர் கிணறு, குளங்களையும், மேல்நீர் ஏரி , ஆறுகளையும் குறிக்கும்! வாய்த்த மலை என்பது அரணாகவும், மலைவளத்தின்அடிப்படையாகவும், மழைக்காலத்தில் சேர்த்த நீரை அருவியாகத் தருவதாகவும் அமைந்துள்ளது!மலையிலிருந்து வரும்நீர், ”வருபுனல்”! இவை பஞ்சகாலத்திலும் உதவுபவை! இவற்றால் முறையாக வரும் வருவாய் உள் நாட்டிலிருந்துவருபவை !

    ஆறிலொரு பங்காகிய வரி வருவாயுடன், மேலும் மூன்று வழிகளில் அரசனிடம் பொருள் வந்து சேரும் என்கிறார்திருவள்ளுவர்! அவை உறுபொருள் அதாவது, உடையவர் இல்லாத நிலையில் யாருக்கும் உரிமையின்றிக் கிடந்தபுதையல், வாரிசற்ற செல்வம் ஆகியவை. அடுத்து உல்கு பொருள், அதாவது நாட்டின் பொருளாதாரச் சமநிலையைத் தடுமாறவைக்கும் வகையில், நாட்டின் செல்வத்தை எடுத்துச் செல்லும் வணிகர்களிடம், சுங்கவரி, முதலான வரிகளைவிதித்து ஈட்டும் செல்வம்; அடுத்து, ஒன்னார்த் தெறு பொருள் அதாவது பகைவரை எதிர்த்துப் போரில் வென்று பெறும்பொருள் ஆகிய மூன்றும் வேந்தனின் பொருள் என்கிறார்!

    அண்டை நாட்டின்மேல் படையெடுத்து வென்ற அரசன், அந்த நாட்டின் பொருளை அடைவதே, ”ஒன்னார்த் தெறு பொருள்”!திருவள்ளுவர் ஒரு வேந்தன் கொடுங்கோலனாக மக்கள் செல்வத்தைப் பறிக்கக் கூடாது என்கிறார்! அறமற்ற வழியில்பொருளீட்டல் தவறு என்கிறார். ஆனால் அடுத்த நாட்டு அரசன் மேல் படையெடுத்து வென்றதால் வரும் பொருளைக்கவர்ந்து கொள்வதை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரே! அஃது எவ்வாறு சரியானதாகும்?

    ”உறுபொருளும் உல்குபொருளும் தன் ஒன்னார்த்
    தெறு பொருளும் வேந்தன் பொருள்” (756)

    என்ற பாட்டு நம்மை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறது ! அண்டை நாட்டை ஆக்கிரமித்து அந்த நாட்டுச் செல்வத்தைவாரி விழுங்கும் ஏகாதிபத்தியச் செயலைத் திருவள்ளுவர், அரசனுக்குப் பொருள் வந்து சேரும் வழியாக ஏன் கூறுகிறார்? சிந்திக்க வேண்டும்! அறவழியில் வாராத பொருளை அரசன் ஏற்றல் தவறு என்பதை,

    ”அருளோடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல் ” (755)

    என்ற பாட்டில் விளக்கும் அவர், அடுத்தநாட்டுக்கு உரிய பொருளை ”வேந்தன் பொருள்” என்று ஏற்பது எவ்வாறு?அவ்வாறாயின் இதற்கு வேறு பொருள் உள்ளதா? இந்தக் குறட்பாவை மீண்டும் ஒருமுறை எழுத்தெண்ணிப் படிப்போம்!

    இக்குறட்பாவில் ஒன்னார்த் தெறுபொருள் என்ற தொடருக்கு முன், தன் என்ற முன்னொட்டு அமைந்திருப்பதைநோக்குங்கள்! தான் ஒன்னாரைத் தெறுதல் என்பது தானே அண்டை நாட்டார் மேல் படைஎடுத்தலைக் குறிக்கும் ஆனால்தன் ஒன்னார்த் தெறுதல் என்பது தன்மேல் அண்டை நாட்டார் படையெடுத்துவரும்போது அவரைத் தற்காப்புக்காகஎதிர்ப்பதைக் குறிக்கும்! ஆகவே அண்டை நாட்டின் மேல் ஆதிபத்தியம் செலுத்துவது வேறு;அண்டை நாட்டார்படையெடுத்து வந்தபோது எதிர்ப்பது வேறு! இவ்வகையில் தம், மேல் படையெடுத்து வந்த ஒன்னாரை எதிர்த்துப் போரிட்டுவெல்லும் போது, அவர்கள் வீழ்ந்தால், அந்த நாட்டை ஆளும் உரிமையை மேற்கொண்டு அந்தநாட்டின் வருவாயை எடுத்துஅவர்களுக்கே தந்து ஆளும் வகையில், ‘தன்’ ஒன்னார்த்தெறுபொருளை, வென்ற வேந்தன் தன் பொருளாகக் கொள்வதுதவறாகாதல்லவா?

    மக்கள் அளிக்கும் ஆறில் ஒருபங்கு வருவாயைத் தவிர மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேர்க்க மாட்டான்; மற்றும்தன்னுடன் மாறுபட்ட மனம் கொண்டு படையெடுத்து வரும் பகைவர்களை எதிர்த்து அடிமைப்படுத்துவானேயன்றி, தானேஎவர்மீதும் படையெடுத்துச் சென்று அழிப்பதில்லை!” என்ற பொருளில் சூளாமணி என்ற தோலாமொழித் தேவரின்இலக்கியம் கூறும் பாடலாகிய

    ஆறிலொன்றறமென அருளினல்லதொன்று
    ஊறுசெய்து உலகினில் உவப்பதில்லையே!
    மாறுகொண் டெதிர்ப்பவர் வணக்கின் அல்லதை
    சீறி நின்று எவரையும் சிதைப்ப தில்லையே!” 

    என்ற பாடல் இக்கருத்துக்கு அரண் செய்வதைக் காணலாம்! ”தான்” என்பது-” தன்” என்று குறுகியதால், விரிந்த புதிய பொருள்இது!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 9

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    உலகினர் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள், அவரவர் நிலைக்கேற்ப வேறுபடும்! இல்லறத்தார், மூத்த சான்றோர், துறவியர் ஆகியோருக்கு உரிய அறங்கள் என்று அவை பிரித்துணரப் படும்! ‘வெகுளாமை இன்னா செய்யாமை, கொல்லாமை ” என்ற மூன்று அதிகாரங்களில் திருவள்ளுவர், இவற்றை இல்லறத்தார் செய்யத்தக்க அறங்கள், செய்யத்தகாதவை; மூத்த சான்றோர் அல்லது வானப்பிரஸ்தர் செய்யத்தக்க அறங்கள், செய்யத் தகாதவை; துறவியர்க்குரிய அறங்கள்; அவர் செய்யத் தகாதவை என்ற மூவகைகளைக் குறிப்பிடுவார்!

    வெகுளி அறம் சார்ந்தும் வரும்! இதனை தர்மாவேசம் என்பார்கள்! “அறத்துக்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை” என்பார் திருவள்ளுவர்! இல்லறத்தார்க்கு அன்பின்மை, விருந்தினரைக் காணாமை, தீய சொல் கூறல், நன்றிமறத்தல், அடங்காமை, ஒழுங்கீனம், பிறனில் விழைதல், ஆகியவற்றைக் கண்டால் வெகுளியாகிய சினம் உண்டாகலாம்! அந்தச் சினம் எல்லை கடவாத வரையில் ஏற்புடையதே! ஆனால் ஒரு காரணத்தாலோ அறியாமையாலோ தமக்குத் தீமை செய்யும் போது சினம் வரும்! அப்போது பொறுமை காட்டுதல் நன்று இதனை வள்ளுவர் பொறையுடைமை என்கிறார்.

    இந்தப் பொறையுடைமைக்கும், வெகுளாமைக்கும் இடையில் பரிமேலழகர் வேறுபாடு காண்கிறார்! பொறையுடைமை, பிறர் தீயன செய்தபோது சினத்தைக் காட்டாமை! வெகுளாமை என்பது எப்போதும் சினம் கொள்ளக் கருதாமை! சினம் கொள்ளுதலுக்கும் சினத்தையே நினையாமைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. களவு, பொய், வெகுளி, கொடியசெயல், கொலை ஆகியவற்றை இல்லறத்தார் செய்து, அதன் விளைவாகப் பாவியர் ஆகலாம்; ஆனால் இவற்றை மனத்தாலும் நினையாத நிலையே துறவாகும்; அதனால்தான் வெகுளாமை அதிகாரம் துறவறவியலில் அமைந்தது. இதுபோலவே இன்னாசெய்யாமை என்பது தீயன செய்யக் கருதாமை; கொல்லாமை என்பது, கொலையைச் சற்றும் நினையாமை! அதனால் இவை துறவறவியலில் அமைந்தன!

    இங்கே கொல்லாமை அதிகாரத்தில் கொலைசெய்ய நினையாமை என்ற துறவொழுக்கம் கூறப்படுகிறது. துறவி தமக்குக் காட்டில் கிட்டியதை உண்பார். அவை கந்த மூல பலங்கள் எனப்படும். அவை இலை, கிழங்கு, பழங்களாகும்! இவற்றையும் அவை காய்ந்து, பழுத்து உதிரும் நிலையில் ஏற்று உண்ண வேண்டும்! இவற்றையும் விருந்தினருடன் பகிர்ந்து உண்ணுதல் துறவிக்குரிய விருந்தோம்பலாகும்! இராமன் காட்டில் தவம் புரிந்தபோது வந்த விருந்தினருக்குப் பச்சிலை, கிழங்கு, பழம் இவற்றைத் தந்தாராம்! இதனைக் கம்பர்,

    ”பச்சிலை, கிழங்கு, காய் பரமன் நுங்கிய
    மிச்சிலே மிசைவது, வேறு வேண்டிலேன்”
    என்று இலக்குவன் வாயிலாகவும்,

    ”அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்றழுங்கும்
    விருந்து கண்டபோது என் உறுமோ என்று விம்மும்”
    என்று அசோகவனச் சீதை வாயிலாகவும் கம்பர் உணர்த்துகிறார்!

    துறவியரிடத்தில் அறுசுவை விருந்தை எதிர்பார்க்க இயலாது! அங்கே இருக்கும் கனி, கிழங்கு, காய்களை மட்டுமே பகிர்ந்து உண்ண முடியும்; அவர்கள் வெகுளி, இன்னாதன செய்தல், கொலை ஆகியவற்றை அறவே துறந்தவர்கள்!

    எல்லாவுயிர்களையும் நேசிக்கும் அருளுடைமை துறவிகளின் பண்பாகும். தேவர், மனிதர், நரகர்,மிருகம், பறவை, பாம்பு முதலானோர் தொடுகை, சுவை, நாற்றம், காட்சி, கேட்டல் ஆகிய ஐயறிவை உடை யவர்!
    தும்பி , வண்டு , நண்டு, தேனீ ஆகியவை தொடுகை, சுவை,நாற்றம்,காட்சி, ஆகிய நான்கறிவைப் பெற்றவை;
    செல், எறும்பு, ஈசல், அட்டை ஆகியவை தொடுகை நாற்றம்,காட்சி ஆகிய மூவறிவைப் பெற்றவை;
    சிப்பி, சங்கு, கிளிஞ்சல் ஆகியவை தொடுகை, நாற்றம் ஆகிய ஈரறிவைப் பெற்றவை;
    உல், மரம், புதல், கொடி, புழு ஆகியவை தொடுதலாகிய ஓரறிவு மட்டும் பெற்றவை!
    இவற்றை ஐவகைப்பட்ட உயிர்கள் என்று தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிடுகிறார்.

    இவ்வகைப்பட்ட எல்லா உயிர்களின் பாலும் அருளுடைய மக்கள் துறவியர்! இத்தகைய அருளுணர்வு அனைவர்க்குமே தேவை! ஆதலால் திருவள்ளுவர் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் கொலை செய்தலைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாத ஒரு பாடலை எழுதுகிறார்! அப்பாடல்

    ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை! (322)

    என்பதாகும்! இந்தக் குறட்பாவில் கொல்லுதல், கொல்லாமை என்ற பொருளுடைய எந்தச் சொல்லும் இல்லை! இக்குறளில் மிகுந்த நூல்களைக் கற்றவர்கள் தொகுத்து வைத்த அறச்செயல்கள் என்ற பகுதியும், இருப்பதைப் பிறவுயிர்களுக்குப் பகிர்ந்தளித்தல் என்ற பகுதியும் மட்டிலுமே இடம் பெற்றன. இவை கொல்லாமை எனப்படும் உயிரிரக்கம் பற்றிய செய்தி எதுவும் இப்பாடலில் இல்லை! இதில் நூலோர் தொகுத்த அறங்கள் பற்றிய கருத்தும், விருந்தோம்பல் பற்றிய கருத்துமே இடம் பெற்றுள்ளன! உயிர்க்கொலை பற்றிய கொல்லாமை அதிகாரத்தில் நூலறிவு, விருந்தோம்பல் பற்றிய கருத்தடங்கிய இக்குறள், தனித்த கவனத்துக்கு உரியது! இதில் துறவியர்க்குரிய நூலறிவும், இல்லறத்தார்க்குரிய விருந்தோம்பலும் இணைந்து விளங்குகின்றன! துறவியர் விருந்தோம்பலாம்! இல்லறத்தார் நூலறிவு பெறலாம்! ஆதலால் இப்பாடல் துறவறவியலுக்குள் இல்லறவியலையும் இணைத்துக் கொள்கிறது!

    பொதுவாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஜீவகாருண்யத்தினைச் சிறந்த அறமாகக் காட்டியமையால், இக்குறட்பா இல்லறத்தார்க்கும் உரியதாகிப் பிற்காலத்தில் சமரச சன்மார்க்கசங்கம் நிறுவிய வள்ளலாரின் உயிரிரக்கக் கொள்கைக்கு வழிகாட்டுகிறது! புலாலுண்ணாமைக் கருத்தினைக் கொல்லாமை யில் இணைத்து நாட்டுமக்கள் அனைவர்க்கும் உரிய நல்லறத்தினை இக்குறட்பா விளக்கிப் புதிய பொருள் கொள்கிறது!

    இருப்பதைப் பகுத்துண்டு பசித்திருப்பவர் இல்லறநிலையிலிருந்து முன்னேறி வானப்பிரஸ்த நிலை அடைவதை, ”பகுத்துண்டு ” என்ற தொடர் குறிக்கிறது! அடுத்துப் ”பல்லுயிர் ஓம்புதல்” என்ற தொடர், விருந்தோம்பல் நிலையிலிருந்து உயர்ந்து எல்லாவுயிர்கள் பாலும் அருள் செலுத்தும் துறவு நிலையைக் குறிப்பிடுகிறது! ”நூலோர் தொகுத்தவற்றுள் ” கற்றறிந்த சான்றோர் தொகுத்த நல்லறங்களைக் குறிக்கிறது! இதுவும் இல்லறத்தார்க்குரிய கல்வி, கேள்வி ஆகியவற்றையும் குறிக்கிறது! ஆகவே இந்தக் குறளின் புதிய பொருளாக – தம்மிடம் இருப்பதை, வந்தவருடன் பகிர்ந்து கொண்டு, பல்வகைப்பட்ட உயிர்களை யும் கொல்லாமல் பாதுகாத்து வாழ்ந்து, வாழ்வித்தல், கற்றறிந்த சான்றோர்கள் சிறந்த அறங்களாகத் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய பண்பாகும் ” என்பதாகும். இதனை மேலும் வலியுறுத்தவே வள்ளுவர்,

    ”யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற” (300)
    என்று வாய்மையை உயர்த்திப் பாடிய பின்னர்,

    ”ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று !”(323)
    கொல்லாமையை உயர்த்திப் பாடினார்! ஆகவே பகுத்துண்ணுதலும் கொல்லாமையே ஆகும்.

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 8

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    மனிதன் எப்போதும் இன்பத்தையே நாடுகிறான். இன்பம் – துன்பம் ஆகிய இரண்டுக்கும் இடையில் அவன் வாழ்க்கை அமைகிறது. ஓர் ஆங்கிலப் பழமொழி வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறது; ”வாழ்க்கை என்ற பெண்டுலம், அழுகைக்கும் சிரிப்புக்கும் இடையில் ஊசலாடுகிறது!” என்பது அந்தப் பழ மொழியாகும்! ஒருபக்கத்தில் சிரிப்பும் மறு பக்கத்தில் அழுகையும் மாறி மாறி அமைந்துள்ளன! இவற்றுக்கிடையில் ஊசலாடும் வாழ்க்கைதான் எல்லாருக்கும் அமைகின்றது. துன்பநீக்கத்தையே இன்பமாகக் கருதும் மனப்பான்மை, இன்பதுன்பங்களை எடைபோடத் தவறி விடுகிறது! நல்ல இன்பம், நீடித்த இன்பம், எல்லாருக்கும் பொதுவான இன்பம் ஆகியவையே உண்மையான இன்பம் ஆகும். சொல்லப்போனால் இன்பம் என்பது மன நிறைவே! ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே!” என்பது மூத்தோர் சொல்.

    இன்பம் எக்காலத்திலும் பிறரை, பிறவுயிர்களைத் துன்புறுத்துவதால் உண்டாகாது! ஒரு பொருளை அதுதரும் இன்பம் கருதி அடைவதும், அப்பொருளால் வரும் நன்மையை அனுபவிப்பதாகிய இன்பமும் எல்லாருக்கும் இயற்கையான விழைவாகும். விருப்பம் என்பதன் விரிந்த சொல்லே விழைவு! அதுவும் எல்லை கடக்குமானால் ஆசை, அவா என்ற பெயர்களை அடையும்! வாழ்க்கையில் ஐம்புல இன்பங்களையும் நேர்மை வழியில் அடைந்து தொடர்ந்து மகிழ்வதே இல்லறம் என்னும் இன்பப் பூங்கா ஆகும்!

    ”அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
    புறத்த புகழும் இல (39)

    அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள் (754)

    என்ற திருக்குறட்பாக்கள் இதனையே குறிக்கின்றன. நியாயமான இன்பம் தரும் பொருள்களும் காலப் போக்கில் நமக்குச் சிறுசிறு துன்பங்களைத் தரும் சமுதாய நலமாகிய இன்பத்தை விரும்பி அதனை அடைய முயலும் பொதுநலத் தொண்டர்கள் சிறுசிறு துன்பங்களை அடைதல் இயற்கையேயாகும்! இதனைத் திருவள்ளுவர் ,

    குடிசெய்வல் என்னும் ஒருவன் மடிசெய்து
    மானம் கருதக் கெடும்! (1023)

    என்ற குறட்பாவால் விளக்குகிறார்! தம் குடியை வாழ்விக்கக் கருதுபவனுக்குச் சோம்பலும், மான அவமானம் கருதுதலும் தேவையற்றவை என்பது இதன் கருத்து! ஆகவே தனக்கு வரும் தன்னல இன்பத்தை ஒருவன் நாடாமல், செய்யும் தொண்டுகளால் சமுதாயத்துக்கு வரும் இன்பத்தையே நல்ல தொண்டன் விரும்புவான் என்பது அவர் கருத்து! இதனை அவர்,

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்! (615)

    என்ற திருக்குறளில் குறிப்பிடுகிறார்! ஆகவே இன்பத்தை நாடி ஒரு பொருளை அடைய விரும்புதல் நல்லறமே என்றாலும் , அந்தப் பொருளால் ஓர் உயிருக்கு அறத்தால் வரும் புண்ணியம், பொன்விலங்கு போல் நல்ல பிறவிக்குக் காரணம் ஆகும். நல்ல பிறப்பும் வாழ்க்கையின் பந்தமே யாகும். அதனால்தான் பற்று விடற்குப் பற்றற்றான் தாளினைப் பற்ற வேண்டும் என்று வள்ளுவர் கூறினார்! வாழ்க்கையின் இன்பத்துக்காக வேண்டியபொருள்களைப் பற்றிக் கொண்ட வர்களைத் துன்பங்கள் பற்றிக்கொள்ளும்; மேலும் அவை அவரை விடாமல் பற்றிக் கொள்ளும். இதனைத் திருவள்ளுவர் ,

    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர்க்கு. (347)

    என்று பாடுகிறார். “பற்று” என்ற சொல்லை நாம் சொல்லிப் பார்த்தால், முதலில் நம் இதழ்கள் மூடிக் கொள்ளும்; அதாவது பற்றிக் கொள்ளும்! ஆசை என்ற சொல்லும், அவா என்ற சொல்லும் நம் திறந்த வாயை மூட விடாமல் விரித்தே வைத்திருக்கும். இந்தப் பேராசையாகிய அவா உண்டானால், நமக்கு மன நிறைவு அதாவது திருப்தி உண்டாகாது. இதனைத் திருவள்ளுவர் ”ஆரா இயற்கை அவா” என்கிறார். இதனை நாம் நீக்கிவிட வேண்டும். அப்போது நமக்கு  உரிய வீடுபேறு கிட்டும். அதனால் எவ்வகையிலும் எப்பொருளின் மேலும் நம் பற்றினை நாம் நீக்கிக் கொள்ள வேண்டும். உணவின்மேல் ஆசை அதிகமானால் நோயில் கொண்டுபோய் நம்மை விட்டு விடும். உடலாசை அதிகமானால் பால்வினை நோய்கள் படை எடுத்து நம்மை வாட்டும்; ஐம்புல ஆசைகளே துன்பத்துக்குக் காரணம்! ஆதலால், எந்த எந்தப் பொருளிலிருந்து நம் அவாவை விலக்கிக் கொள்கிறோமோ, அந்த அந்தப் பொருளால் உண்டாகும் துன்பம் நமக்கில்லை! இதனையே …

    ”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன் ” (341)

    என்று திருவள்ளுவர் கூறுகிறார்!

    ”ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
    ஆசை விடவிட ஆனந்தம் ஆமே ! ”

    என்பது திருமூலரின் திருமந்திரம் ! இந்தத் திருக்குறளின் தனிச் சிறப்பு என்னவென்றால், இதனை உரைக்கும்போது நம் வாயின் உதடுகள் ஒட்டவே மாட்டா! ஒட்டாமல் விலக விலக துன்பமும் விலகும்; இன்பம் வரும். இந்தச் செய்தியை நமக்குக் கூறும் திருக்குறளும் இதழ்கள் ஒட்டினால் துன்பமும் இதழ்கள் ஒட்டாமல் விலகினால் இன்பமும் வரும் என்பதைத் தாம் பாடும். ”துறவு” என்ற அதிகாரத்துக்கு ஏற்ப நுட்பமாகக் கூறும் இக்குறளின் பொருள் நம் உள்ளத்திலும் உடலிலும் துறவு மனப்பான்மையை உருவாக்கி, மனத்தாலும் துறவின் மாட்சியை விளக்குகிறது!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 7

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    திருக்குறளின் கருத்துக்கள் அது தோன்றிய காலத்தில் இருந்த முடியாட்சித் தத்துவத்தை அடியொற்றியே விளங்கின! அக்காலத்தின் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதில்லை; ஆனால் திருக்குறட் கருத்துக்கள் அது தோன்றிய காலத்தைக் கடந்து இக்காலத்துக்கும், இனி வருங்காலத்துக்கும் பொருந்தித் திகழ்வதே அதன் பெருமைக்குச் சான்றாகும்.

    நூல்களை மேனாட்டறிஞர்கள் மூவகைப் படுத்துவர். அவை BOOK FOR THE HOUR , BOOK FOR EVER , BOOK FOR NEVER எனப்படும். அவ்வப்போது நிகழும் அன்றாடச்சிறு நிகழ்ச்சிகளின் விளக்கமாக அமைந்து, அடுத்த நாளுக்கும், மாதத்துக்கும், ஆண்டுக்கும் பொருந்தி வராத நூல்கள் BOOK FOR THE HOUR என்ற வகையைச் சேர்ந்தவை. கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கில் வெளிவந்த சுவையற்ற, கவைக்குதவாத சிறுகதைகள், சிறு கவிதைகள், இவ்வகையில் அடங்கும்!

    சில நூல்கள் காலம் கடந்து எக்காலத்துக்கும் இசைந்த, சொல், பொருள், நயமும் மிக்க வாழ்வியல் கருத்துக்களை உடைய பேரிலக்கியங்களாக விளங்கும்; அவை, எக்காலத்துக்கும் உரிய BOOK FOR EVER வகையைச் சேர்ந்தவை. அந்தச் சிறப்பைப் பெற்ற நூல்கள் திருக்குறள் போன்ற நூல்களாகும்! சற்றும் தகுதியற்ற , கற்போர்க்கு அருவெறுப்பை உருவாக்கும் ஆபாசமும், தீய கருத்துக்களும் கொண்ட நூல்கள் எக்காலத்துக்கும் பொருந்தாத BOOK FOR NEVER வகையைச் சேர்ந்தவை. இவ்வகை நூல்கள் ஆபாசஎண்ணங்களைப் பரப்பும் மஞ்சள் பத்திரிகைகளாகும்.

    முடியாட்சிக் காலம் மறைந்து குடியாட்சிகள் பெருகி வரும் காலம், இக்காலம்; இந்த குடியாட்சிக் காலத்திலும், முடியாட்சிக் காலக் கருத்துக்களைப் பொருத்தமுறக் கூறியவர் திருவள்ளுவராவார். திருக்குறளின் பொருட்பால் கருத்தக்கள் பெரும்பாலும் சமுதாய வாழ்க்கையின் சிறப்புக்களைப் படம்பிடித்துக் காட்டும். இந்த நூலில் கூறப்பெற்ற முடியாட்சி அரசுகளைப் பற்றிய விளக்கங்கள் இக்காலக் குடியாட்சி அமைப்பிற்கும் பொருந்தி வரும்.

    அரசாங்கம் என்று இக்காலத்தில் நாம் கூறும் அரசின் அங்கங்கள் முடியாட்சி முறையில், திருவள்ளுவர் கூறிய அங்கவியல் என்ற இயலில் கூறப் பெற்றவையே என்பது உண்மையாகும்.
    அரசின் அங்கங்களாகிய …
    (1) அமைச்சு அதாவது நிருவாகம்;
    (2) நாடு அதாவது குடிமக்கள்;
    (3) கூழ் அதாவது பொருளாதாரம்;
    (4) அரண் அதாவது எல்லைகள்;
    (5) படை அதாவது உள்நாட்டுப் பகையினை எதிர்த்தழிக்கும் காவல், மற்றும் வெளிநாட்டுப் பகையினை எதிர்த்தழிக்கும் ராணுவம்;
    (6) நட்பு அதாவது அயல்நாட்டு உறவு
    ஆகிய அறுவகை அங்கங்களையும் அதாவது துறைகளையும் வரிசையாகத் திருவள்ளுவர் வகுத்துள்ளார்!

    இந்த வரிசைப்படியே அரசின் அங்கங்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன! இவற்றின் முறைவைப்பினைப் பரிமேலழகர் மிகவும் சரியாக விளக்கி உரை வகுத்துள்ளார்!
    பாயிரம் நான்கதிகாரங்கள்;
    அறத்துப்பால் முப்பத்து நான்கதிகாரங்கள்;
    பொருட்பால் எழுபது அதிகாரங்கள்;
    காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்கள்
    ஆக நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள். இவை அனைத்தின் கூட்டுத் தொகையும் ஏழு! அனைத்து அதிகாரங்களின் எண்ணிக்கைக் கூட்டுத்தொகையும் ஏழே! ஒரு திருக்குறளின் சீர்கள் ஏழு! இந்த அமைப்பினை உடைய திருக்குறள், படிப்பதற்கும், மனனம் செய்வதற்கும் ஏற்றதாய் அமைந்துள்ளதைப் பரிமேலழகர் உரை நிறுவுகின்றது! இவ்வாறே திருவள்ளுவர் ஏழு என்ற எண்ணைத் திருக்குறளில் பயன் படுத்தியுள்ள அழகையும், பொருட்சிறப்பையும் நுட்பமாக ப் படித்தறிந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறேன்!

    பொருட்பாலின் முதற்குறள் காட்டும் சுவை மிக்க, புதிய பொருட்சிறப்பை இங்கே விளக்கி எழுத விரும்புகிறேன்; ஒருமுறை திருக்குறள் அறநூலா? இலக்கியமா? என்ற தலைப்பில் ஒரு பட்டிமண்டபம் நடை பெற்றது. அந்தப் பட்டிமண்டபத்தில் மிகவும் கார சாரமான விவாதம் நடை பெற்றது! அதில் அறநூலே என்ற அணியின் தலைவர் திருக்குறளில் நான் ஒரேஒரு குரலை எடுத்துக் காட்டிகிறேன் அது அறநூல் என்பதற்கு அந்தத் திருக்குறளே மிகச் சரியான எடுத்துக்காட்டாகும் ; என்று கூறிப்

    ”படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள்; ஏறு ! ”

    என்ற திருக்குறளை இரண்டுமுறை பிரித்துக் கூறி, ”இதில் வெறும் பட்டியல்தானே இருக்கிறது? இதில் இலக்கிய நயம் எங்கே இருக்கிறது? இந்தத் திருக்குறளில் உள்ள இலக்கிய நயத்தை எதிர்க்கட்சியினர் விளக்கி விட்டால் , நானும் அதனை ஏற்றுக் கொண்டு இனிமேல் பட்டிமண்டபத்திற்கு வந்து வாதாடுவதை நிறுத்திக் கொள்கிறேன்! ” என்று சவாலும் விட்டார்! அவர் ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது! எதிர்க்கட்சித் தலைவரோ, மேலே நான் எழுதியதைப்போல் திருக்குறளை எண்ணிஎண்ணிப் படித்தவர் ! அவர் நிதானமாக எழுந்து, ”இந்தத் திருக்குறள் ஒரு வெறும் பட்டியல்தான் ” என்று கூறி என் சிந்தனையைத் தூண்டி விட்ட பேராசிரியருக்கு என் நன்றி!” என்று தொடங்கினார்!

    ”திருவள்ளுவர் அறநூலாகத் தம் நூலை எழுதினாலும், அதனைப் படிப்போர், சுவைபடப் பயின்று உணரும் வகையில் இலக்கியச் சுவை மிக்க நூலாகவும் படைப்பார்! அந்தத் திறமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் கூறிய திருக்குறளே தகுந்த எடுத்துக் காட்டாகும்! இந்தத் திருக்குறளில் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற அரசின் ஆறு வகை அங்கங்களையும் பட்டியலாக வரிசைப் படுத்தி யுள்ளார் இதனை மேம்போக்காகப் படித்தால் எந்த இலக்கிய நயமும் இல்லாதது போலவே தோன்றும்! ஆனால் திருக்குறளை முழுமையாகப் பயின்றவர்க்கே இதில் அமைந்த இலக்கிய நயம் புலப்படும்! ஆம்! இந்தத் திருக்குறள் வெறும் பட்டியல் அன்று; இலக்கிய நயம் மிக்கதாகும்!” என்று உரத்த குரலில் கூறிக் கேட்போரை நிமிர்ந்து அமர வைத்தார்!

    அடுத்து அவர் கூறிய திரிகடுகப் பாடல் அரசனுக்கு உரிய அங்கங்களின் சிறப்பை எடுத்துக் காட்டியது! அந்தப் பாடல் …

    “பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
    எத் திசையும் அஞ்சா எயில் அரணும், வைத்து அமைந்த
    எண்ணின் உலவா இரு நிதியும், – இம் மூன்றும்
    மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு.”

    என்பதாகும்! இப்பாடல், ராஜவிசுவாசம் மிக்க படையும், பலரும் இணைந்து கூடி எதிர்த்து வந்தாலும் உடையாமல் நாட்டைக் காக்கும் அரணும், இவற்றின் இடையில் என்றுமே குறையாத எல்லாவகைச் செல்வங்களும் ஆகிய மூன்றும் மண்ணாலும் அரசனுக்கு உரிய சிறந்த அங்கங்களாகும்! என்ற பொருள் அமைந்துள்ளது! இந்ததிரிகடுகப் பாடலின் வழியில் ”படை, குடி” எனத் தொடங்கும் திருக்குறலின் பொருளை நுட்பமாகத் தெரிந்து கொண்டால் இதன் இலக்கியச் சிறப்புப் புலப்படும்!

    திருக்குறளின் பொருட்பாலில், இறைமாட்சிக்கு அடுத்த அங்கவியலில், அரசனின் அங்கங்களை வள்ளுவர் வரிசைப்படுத்துகின்றார்! அதன் படி முதலில், அமைச்சு, அடுத்து இரண்டாவதாக நாடு; இதில் குடிமக்களும், மூன்றாவதாகப் பொருளாதாரமாகிய கூழும் அடங்கும்; அடுத்து நான்காவதாக அரணும்,ஐந்தாவதாகப் படையும், ஆறாவதாக நட்பும் அமைந்துள்ளன! இந்த வரிசைப்படித்தான் அரசின் அங்கங்களைத் திருவள்ளுவர் அடுக்குகிறார்! ஆனால் இந்தத் திருக்குறளில் படை முதலிலும் குடி, கூழ், அமைச்சு, நட்பு ஆகிய நான்கையும் இடையிலும் இறுதியில் எல்லையாகிய அரணையும் வரிசை மாற்றி அமைத்தமைக்குக் காரணம் என்ன தெரியுமா?” என்று கேட்டு அவையினரின் சிந்தனையைத் தூண்டுகிறார்!

    கூர்ந்து கவனியுங்கள் வள்ளுவரே தாம் பாடிய அங்கவியலில் கூறிய வரிசையை மாற்றியமைத்து இந்தக் குறட்பாவை இயற்றியுள்ளார்! அதற்குக் காரணத்தை நான் முன்னர்க் கூறிய திரிகடுகப் பாடலின் மூலம், தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்! திரிகடுகத்தில் முதலில் படையும் நடுவில் மற்றவையும் இறுதியில் அரணும் அமைந்து இலக்கியச் சுவையுடன் பாடியுள்ளார். திருவள்ளுவர் அமைத்த புதிய வரிசையில் ஓர் இலக்கிய நயம் இருப்பதை உணர்ந்தே திரிகடுகத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. ஆம்! மற்றைய நான்கு அங்கங்களையும் முன்னும் பின்னும் இருந்து காப்பாற்றுவன, படையும் அரணுமே ஆதலால் அவற்றை வரிசை மாற்றித் திருவள்ளுவர் பாடி ஆறு அங்கங்களின் இலக்கியச் சிறப்பை இந்த ஏழுசீர்களுக்குள்ளே அமைத்துத் தந்து விட்டார் ” என்று அவர் நிறுத்திய போது அவையினரின் மகிழ்ச்சி ஆரவாரம் மேலோங்கியது!

    அங்கங்களின் சிறப்பால் உயர்ந்த சிங்கம் இந்த அரசன் என்பதைக் குறிப்பதற்காகவே அரசருள் ஏறு என்று திருவள்ளுவர் சிறப்பித்தார் ஆகவே படை குடி எனத்தொடங்கும் திருக்குறள் புதிய பொருள் பெற்று விளங்குகிறது!

     

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 6

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    எல்லா நற்செயல்களும், நற் கருத்துக்களும் தமிழரிடையே உருவாயின என்றால் நம் அனைவர்க்கும் மகிழ்ச்சி தானே? நம் பழந்தமிழரின் வாழ்க்கையே பிறவினத்தார் போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்பதை , நம் புலவர்கள் அவ்வப்போது குறித்திருக்கிறார்கள்!

    ”திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்பது மகாகவி பாரதியின் வரி!

    ”கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
    முன் தோன்றி மூத்த குடி”

    என்ற புறப்பொருள் வெண்பாமாலையின் பாடலடிகள் தமிழக மேடைதோறும் முழங்கப் பெற்றபோது கேட்டு மகிழாத தமிழனும் உண்டோ? ”முதற் குரங்கே தமிழ்க் குரங்கு என்பதில் நம் தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!” என்ற புதுமைப்பித்தன் கருத்தில் கிண்டல் தொனித்தாலும் நம் மனப்பான்மை அதனையும் ஏற்று மகிழ்கிறது!

    இத்தகைய மகிழ்ச்சி எனக்குள் புத்துணர்ச்சியை ஊட்டியது. என் கவனத்துக்கு வந்த பிறமொழிக் கருத்துக்கள் நம் தமிழில் முன்னரே இருந்தன, என்ற நிறைவை எப்போதும் என் மனம் அடைந்தது! இந்நிலையில், அனைவரும் நன்றாக அறிந்த இயேசுகிறிஸ்துவின் வரலாறு புதுமையும், செழுமையும் அருமையும் உருக்கமும் கொண்ட வரலாறாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பெற்றது.

    ”தன்னரிய திருமேனி தவிப்புண்டு நலிவெய்திப்
    பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
    இன்னதென அறிகில்லார் தாம்செய்யும் இவர்பிழையை
    மன்னியும் என் றருட்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்!”

    என்ற இரட்சணிய யாத்திரிகப் பாடல் எனக்குள் பல்வேறு எண்ண அலைகளை உருவாக்கியது! தமக்கு மிகப்பெரிய துன்பம் இழைத்த கொடியோருக்கு எதிராக இயேசுபிரான் செய்த அருட்செயல் போல், நம் தமிழ் மொழி இலக்கியங்களில் ஏதேனும் இருக்கிறதா? நமக்கு ஒருவர் இன்னாத துன்பம் செய்தால், நாம் அவருக்கு நல்லன செய்தல் வேண்டும் என்ற கருத்தில் அமைந்த திருக்குறள் இருக்கிறது.

    கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்! (312)

    இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல் (314)

    மேலும் ,
    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு? (987)

    ஆகிய குறட்பாக்களின் கருத்துக்கள் என் உள்ளத்தில் அலைமோதின! ஆனாலும் இயேசுபிரான் செய்த அருட்செயலுக்கு முழுமையாகப் பொருந்தும் வண்ணம் இந்தத் திருக்குறட்பாக்களின் கருத்துக்கள் அமையவில்லை என்பதை நுட்பமாகச் சிந்திப்பவர் புரிந்து கொள்வர்! ஆம்!

    பொதுவாக, நமக்குத் தீமை செய்பவர் நம்மைவிட வலிமை குன்றியவராக இருந்தால் நாம் அவருக்கு தண்டனை வழங்கி விட முடியும்; அவருக்கும் நாம் நல்லதே செய்ய வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து. அதனை,”செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்” என்கிறார். நம்மை விட வலியவர் நமக்குத் தீமை புரிந்தால், அவர்பால் நம்மால் சினம் கொள்ள இயலாது. ஆனால், நம்மை விட மெலிந்தவரிடமும் சினம் கொள்ளக் கூடாது இதனைத் திருவள்ளுவர் ‘

    செல்லா இடத்துச் சினம் தீது ; செல்லிடத்தும்
    இல்லதனின் தீய பிற! (302)

    என்கிறார். ஆகவே நமக்குத் தீமை செய்தாருக்கு நாமே தண்டனை தரலாம்; அது நன்னயமாக இருக்க வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து. தீயவர் தண்டனை பெற வேண்டும். அந்த தண்டனையை வலியவரே தர முடியும். எப்படி இருந்தாலும் நமக்குத் தீமை புரிந்து துன்பம் தருபவருக்கு அந்தத் தீவினைக் கேற்ற தண்டனையை மேலுலகில் இறைவன் கொடுப்பார் என்பதும், செய்த வினைப் பயன் செய்தவரை உறுதியாகச் சென்று சேரும் என்பதும் உறுதி!

    இப்போது மேலே காட்டிய திருக்குறட்பாக்களின் கருத்துப்படி நமக்குத் துன்பம் செய்தவர்க்கு தண்டனை தரும் நிலையில் நாம் இருந்தால், அவர் நாண நன்னயம் செய்தலும், இன்னா செய்தார்க்கும் இனியவை செய்தலும், நல்லவை எனப் புரிந்து கொண்டோம். ஆனால் இயேசுநாதர் செய்ததோ, இவற்றுக்கும் மேலான ஒரு செயல் ஆகும்!

    நமக்குத் தீங்கு செய்பவரை நாம் தண்டிக்கலாம்; பெரியவராக இருந்தால் ஆண்டவனிடன் அவருக்கு தண்டனை அளிக்குமாறு வேண்டிக்கொள்ளலாம்! அப்படிச் செய்யாமல், இயேசுநாதர் தம்மைத் துன்புறுத்தியவர் செய்த பாவத்தால், அவர்களை ஆண்டவன் தண்டிப்பது நிச்சயம் என்பதை உணர்ந்துகொண்டு, அந்த தண்டனையை அவர்களுக்கு ஆண்டவன் அளிக்காமல்அவர்களை ”மன்னிக்க வேண்டும்” என்று வேண்டுகிறார். இவ்வாறு தமக்குத் துன்பம் செய்தவர் மேலுலகில் தண்டனை பெறுவாரே என்று வருந்தி அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் அருட்செயல் பற்றித் திருக்குறளில் ஏதும் சொல்லவில்லையோ? என்று என் மனம் தவித்தது!

    இந்தத் தவிப்பை என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனிடம் கூறி னேன்! அவர் சிரித்தார்! ”நீ திருக்குறள் பரிமேலழகர் உரையைப் படித்திருக்கிறாயா? அதில் ”திறனல்ல தற்பிறர் செய்யினும்” என்ற குறளுக்கு என்ன விளக்கம் அளித்துள்ளார் என்பதைப் படி!” என்றார். அந்தத் திருக்குறள் ,

    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று!

    என்பதாகும். அந்தத் திருக்குறளில் ”நோநொந்து” என்ற தொடருக்கு, தமக்குத் தீமை செய்தார் அதனால் ”உம்மை எரிவாய் நரகத்து வீழ்வர்கொல் என்றெண்ணிப் பரிவதூஉம் சான்றோர் கடன்” என்றார் போல்வதோர் பரிவு” என்று பரிமேலழகர் பொருள் கூறினார். அந்தத் தொடர் நாலடியாரில் உள்ளது.

    ”தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றியும்
    எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
    எரிவாய் நரகத்து வீழ்வர்கொல் என்று
    பரிவதூஉம் சான்றோர் கடன்!”(58)

    என்பது அப்பாடல் . இப்பாடல் ‘தமக்குத் துன்பம் செய்ததவர் தம் தீவினைப் பயனாக எரிகின்ற நரகத்தில் வீழ்ந்து துன்பம் அடைவரே, என்று வருந்துவதும் ‘சான்றோரின் கடன்’ என்று கூறுகிறது. இதனால் தமக்குத்துன்பம் செய்தவர், அதனால் நரகத்துன்பம் அடைவர் என்று எண்ணி அவரைக் காப்பாற்ற முயலும் நல்ல உள்ளம் புலப்படுகிறது. பாகவதத்தில் ஒரு முனிவரின் கழுத்தில் ஒரு பாம்பினை எடுத்துச் சூட்டிய மன்னவன் ஒருவனை அந்த முனிவரின் மைந்தன் சபித்தான். அதைக்கண்ட முனிவர் அந்த அரசன் செய்த பாவத்தின் தீய விளைவைத் தடுத்தார் என்ற வரலாறு கூறப் படுகிறது

    இன்னலெமக் கிழைத்ததனால் வீடிழந்து
    நரகாழ்வா ரெனநி னைந்து
    பன்னரிய பெரியர்பிழை பொறுப்பர்பொறார்
    தம்பிழையைப் பரம னாற்றான்
    முன்னொருவன் செய்தனனென் றவற்கிறப்பச்
    செயுமிடரம் முறையி லான்சேய்
    பன்னிதம ரையுஞ்சேரு மவர்நமக்கெப்
    பிழைசெய்தார் பகராய் நெஞ்சே.

    என்ற நீதிநூற்கருத்தின் படி தீமை செய்தோரின் வினைப்பயன் அவர் பரம்பரையினரையும் சென்றடையும் என்பது புலனாகின்றது. ஆகவே இவை அனைத்துடனும் பிற்காலத்தில் நம் நாட்டுக்குள் வந்து பரவிய விவிலியத்தின் இயேசுநாதர் அருள் வரலாற்றையும் உணர்த்தும் வகையில் , ”நோநொந்து” என்ற தொடர் அமைந்த திருக்குறளின் புதிய பொருள் நமக்கு மன நிறைவை அளிக்கிறது!

    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று. (157)

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 5

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    ஈதல் என்ற மனிதகுலக் கடமைகளுள், விருந்தோம்பல் என்ற இல்லறத்தார் கடமை அடங்கும்! ஒருவர் மனைவியுடன் இல்லறம் நடத்துவதே தம்மை நாடி வரும் விருந்தினர்களுக்கு உணவுபடைத்து, மகிழ்வதற்கேயாகும்! இதனைத் திருவள்ளுவர்,

    ”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு!”(81)

    என்று விருந்தோம்பல் அதிகாரத்தின் முதற்குறட்பாவில் குறித்துள்ளார்! தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்பதே இல்லத்தரசியரின் ஏக்கமும், நோக்கமும் ஆகும்! இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பலவிடங்களில் உள்ளன! விருந்தினர் வருவதை முன்னரே காக்கை கரைந்து அறிவிக்கும் என்பது நம் குடும்ப மரபு சார்ந்த நம்பிக்கை. காக்கை கரைந்ததைக் கேட்ட தோழி தலைவியிடம், பிரிந்து சென்ற கணவன் விரைவில் மீளுவான் என்று கூறியதாகக் குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. அந்தப் பாடலில் காக்கையைப் பற்றிச் சிறப்பித்துப் பாடியமையால் அப்படலாசிரியர் ”காக்கைப் பாடினியார்” என்று அழைக்கப் பெற்றார்!

    இந்த விருந்தோம்பல் அதிகாரத்தின் எல்லாக் குறட்பாக்களும் தனித்த சிறப்பு வாய்ந்தவை! இல்லறத்தின் ஐந்து கடமைகளுள் விருந்தோம்பலும் ஓன்று. இதனைத் திருவள்ளுவர் ,

    ”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
    கைம்புலத்தார் ஓம்பல் தலை! ” (43)

    என்ற குறட்பாவில் தெளிவிக்கிறார்! விருந்தோம்பல் நம் தமிழகத்தின் சைவ வைணவ சமயங்களின் கடமையாக அறிவிக்கப் பெற்றன! சைவத்தில் விருந்தோம்பல், ”மாகேசுர பூசை ” என்றும், வைணவத்தில் “ததியாராதனம்” என்றும் வழங்கப் பெறும். பொதுவாக இந்திய உபநிடதங்கள், ”மாத்ரு தேவோ பவ: பித்ரு தேவோ பவ: ஆசார்ய தேவோ பவ: அதிதி தேவோ பவ: ” என்று விருந்தோம்பலை மனித குலக் கடமையாக அறிவிக்கின்றன! சிலப்பதிகாரத்தில் கண்ணகி …

    ”அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”

    என்று தன் கடமைக் குறித்துக் கோவலனிடம் கூறுகிறாள்! விருந்தோம்பல் தொல்லோர் சிறப்பித்த பெருமை பெற்றதாகும். இங்கே புதிய விளக்கம் பெற அமைந்த திருக்குறள் ,

    ”வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்” (85)

    என்பதாகும். இக்குறளுக்கு, ”வந்த விருந்தினருக்கு உணவிட்டபின் எஞ்சிய உணவை உண்டு மகிழும் இல்லறத்தானது விளைநிலத்தில் விதை விதைக்க வேண்டா; அந்நிலத்தில் பயிர்கள் தாமே விளையும் ” என்ற பொருளையே எல்லாரும் கூறினர்! இறைவன் திருவருள் விருந்தோம்பும் இல்லறத்தானின் நிலத்தில் தேவையான பயிர் விளைச்சலை உண்டாக்கும், என்பது உண்மைதான். ஆனாலும், இந்த விளக்கம் சற்றே மிகையாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

    பெரிய புராணம், வைணவ வியாக்யானங்கள் ஆகியவற்றில் இந்த விருந்தோம்பல் பற்றிய வரலாறுகளைப் படித்த பின் இந்தக் குறட் பாவுக்குப் புதுமையான விளக்கம் புலப்பட்டது. சைவத்தின் பேரிலக்கியமான பெரிய புராணத்தில் ”இளையான்குடி மாற நாயனார்” புராணத்தில் ஒரு நிகழ்ச்சி உள்ளது! அந்த மாறனார் இல்லத்தை நோக்கி வந்த அடியாருக்கு உணவிட்டு விருந்தோம்பும் வகையில் அவரில்லத்தில் வசதி இல்லை; வறுமை கொடிய தாண்டவ மாடியது! இந்த நிலையிலும், அவர் வீட்டுப் பொருள்களை விற்றும் கடன் வாங்கியும் விருந்தினரைப் பேணினார்! இவர்தம் சிறப்பை உலகத்தார் உணரும் பொருட்டு , இறைவனே சிவனடியாராக அந்த இளையான்குடி மாறனின் இல்லம் நோக்கி எழுந்தருளினார். வீட்டில் ஒரு மணியரிசி கூட இல்லை! அடுத்த போகத்துக்கு உ ரிய விதைநெல்லை வயலை உழுது விதைத்திருந்தார்! நள்ளிரவில் பசியுடன் வந்த சிவனடியாரின் நிலைமையைக் கண்டு உள்ளம் உருகிய மாற நாயனார். மனைவியிடம் யோசனை கேட்டார். அந்த மங்கையர் திலகம், வயலில் விதைத்த நெல்லை வழித்தெடுத்துச் சேர்த்துக் கொண்டு வந்தால், தம்மால் இயன்ற வகையில் அமுதாக்குவதாகக் கூறினார். அந்த ஈரநெல்லை வறுத்து, உரலில் குத்தி அரிசியாக்கி உணவு சமைத்து அடியாருக்கு அமுது படைத்த அருள் வரலாறு என் உள்ளத்தை உருக்கியது! அதே நேரத்தில் இந்தத் திருக்குறளுக்குப் புதிய பொருளும் புலப்பட்டது!

    வந்த விருந்தினருக்கு உணவிட்டு எஞ்சியதைப் புசிக்கும் அறவோராகிய அவர் , அடுத்த போகத்துக்கு விதைத்த நெல்லையே எடுத்து அடியாருக்கு உணவு சமைத்து வழங்கினார். ஆகவே அவர் நிலத்தில் வித்தினை இட்டுப் பயிராக்க விரும்பவில்லை! இதனை,”அவர் வயலில் வித்து இடுதலையும் வேண்டுவாரோ?” என்ற கேள்வி கேட்டு விளக்குகிறார் . இந்த வகையில், விருந்தோம்பி மிச்சில் மிசைவானாகிய இல்லறத்தான் வித்து இடலும் வேண்டும் கொல்லோ? என்று சொற்களை மாற்றிப் போட்டுப் பொருள் கொள்ளல்லாமே? என்று கருதினேன். ஆகவே இத்திருக்குறளின் புதிய பொருளைப புரிந்து கொண்டேன்! அதன்படி ,”விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் (விளைநிலத்தில்), (அடுத்த போகத்துக்கு) வித்தும் இடல் , வேண்டும் (விரும்புவான்) கொல்லோ? (விரும்ப மாட்டான்!! ) என்று பொருள் கொண்டேன்! வித்திட வேண்டா; தாமே விளையும் என்ற மிகைப்படுத்தப் பெற்ற பொருள் இங்கே வேண்டாததாகி விடுகிறது , அல்லவா?

    இதற்கு ஆதரவாக வைணவ வியக்கியானத்திலும் ஓர் அழகிய வரலாறு உண்டு. ஸ்ரீ இராமானுஜருக்கு அணுக்கத்தொண்டனாகிய பிள்ளை உறங்காவில்லி தாசரின், அன்புக்குரிய மனைவி பொன்னாச்சி. அவள் ஒருமுறை தன் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், அடியாருக்கு ததியாரா தனம் செய்ய, வீட்டில் அடுத்த போகத்துக்கு விதை இடுவதற்கு வைத்திருந்த முற்றிய நெல்லை இடித்து அரிசியாக்கி அமுது படைத்து விட்டாள்! இதனை அறிந்த உறங்காவில்லி தாசர் ‘ஏன் ?’ என்று கேட்டார்! அதற்குப் பொன்னாச்சி, ”சுவாமி இந்த நெல்லை, அடியாருக்கு இட்டதன் மூலம் இனி, நாம் செல்ல விருக்கும் சொர்க்கபூமியில் விதைத்து விட்டேன்!” என்று விடை கூறி அடியாரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விட்டார்! ஆகவே விருந்தோம்பலுக்குச் செலவிட்ட நெல் சொர்க்கத்தில் விதைக்கப் படும். ஆகையால் இங்கே இந்த பூமியில் வித்திட வேண்டா! ‘ என்பது புலனாகின்றது!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 4

    புலவர் இரா. இராமமூர்த்தி.

     

     

    உலகில் எல்லாராலும் போற்றப் பெறும் நல்ல உள்ளம், கொடை உள்ளமே யாகும்! நம் வாழ்கையின் பயனே கொடுத்துப் புகழ் பெற்று வாழ்தல் ஆகும் இதனை வள்ளுவர்,

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு!

    என்ற குறட்பாவில் குறிப்பிடுகிறார்! இருப்பதை எடுத்து இல்லாருக்கு வழங்கும் ஈகையைப் பற்றித் திருவள்ளுவர் கூறும் பத்துப் பாடல்களும் பொருட்செறிவு மிக்கவை ஆகும்.

    ஈகை அதிகாரத்தின் முதற் குறளே, தனித் தன்மை வாய்ந்தது.வறியவர் ஒருவருக்கு நாம் கொடுக்கும் பொருளை வள்ளுவர் ‘ஓன்று’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் ஒன்று என்ற சொல்லுக்கு, – தேவையான ஓன்று, விரும்பிய ஓன்று என்றெல்லாம் விளக்கம் கூறுவார்கள்! தம்மிடம் இருக்கும் பொருட் செல்வத்தையும் அது குறிக்கும்! ஒருவர் எந்தப் பொருளில் வறியவராக இருக்கிறாரோ, அந்தப் பொருளை வழங்குவதே ஈகை ஆகும். இந்தப்பொருள் செல்வம், உணவு, ஆகியவற்றை மட்டுமே குறிக்கும். ஆனால் அறிவில் வறியவராய் இருப்போர்க்கு அறிவை வழங்குவதும் ஈகையே ஆகும்! ஆகவே,

    ”ஆங்கோர் எழைக்கு எழுத்தறிவித்தல்” என்று மகாகவி பாரதியார் பாடிய கல்வியை வழங்குவதும் ஈகையே ஆகும் . ”வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகை ” என்ற தொடரில் உள்ள ஒன்று என்ற சொல் விரிந்த பொருளுடையதாகும்! எழுத்தறிவில்லார்க்குக் கல்வி யும், பசித்தோர்க்கு உணவும், ஊக்கம் குறைந்தோருக்கு உரிய எழுச்சிதரும் அறிவுரையும், வழங்க வேண்டும் என்பதையே பாரதியார் பாடினார்.

    இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
               இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
               ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
    பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
               பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
               ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.

    என்று கல்விக் கொடை பற்றிப் பாடிய பாரதியார் ,

    நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்!
               நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
    அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
               ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர் !

    என்ற பாடற்பகுதியில் பொற்குவை, காசுகள், வாய்ச்சொல், உடலுழைப்பு ஆகிய வற்றைக் கொடைப் பட்டியலில் சேர்க்கிறார்.

    ஆகவே ஈகை பற்றிய திருக்குறள் காட்டும் ‘ஓன்று’ என்ற பொருள் பொதிந்த சொல்லின் பொருளின் விரிவு புலனாகின்றது!

    அந்த ”ஒன்றையும்” கொடுக்கும்போது, ஈகை புரிபவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரத்தின் மூன்றாவது குறட் பாவில் கூறுகிறார்!

    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையார் கண்ணே உள! (223)

    என்பது அப்பாடல்! இந்தப் பாடலுக்குப் பரிமேலழகர் , இலன் என்னும் எவ்வம் உரையாயாமையும் , ஈதலும் ஆகிய இரண்டும் நற்குடிப் பிறந்தாரின் நற்பண்புகள் ஆகும் என்கிறார். உள என்னும் பன்மைச் சொல் இவை இரண்டையும் குறிக்கிறது என்பார் அவர். இவ்வாறு அவர் உரை கூறக் காரணம் மற்றோர் உரைகாரர், வறியவனான ஒருவன் தன்னிடம் பொருள் வேண்டி வந்த ஒருவனிடம் யான் இல்லாதவன் ஆயினேன் என்று தன் வறுமை நிலையைச் சொல்லாமல், எவ்வாறாயினும் ஈதல் வேண்டும் என்று ஒரே செயலாகக் கூறிய உரையே! அதனை இந்தப் பன்மை விகுதியைக் காட்டி மறுத்தார்!

    இவ்வுரையின் சிறப்பு பரிமேலழகர் காட்டிய சிறந்த செயல்களுக்கும் மேலே பல பொருள்களைத் தருகிறது. சிவஞானமுனிவர் தம் நன்னூல் உரையில் , ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை” என்ற தொடருக்கு,
    (1) தம்மிடம் பொருள் பெற்ற ஒருவன் மீண்டும் பிறர்பால் சென்று தன்னிடம் ஏதுமில்லை என்று கூறாத வகையில் பெரும் பொருள் ஈதல் வேண்டும் என்றும்
    (2) தான் பெரும்பொருளை ஈந்தபின் ஈந்தவன் பொருளிழப்பால் வறுமை அடைந்து பிறர்பால் ”இலன் ஆயினேன் என்று தன் துன்பத்தைக் கூறாத வண்ணம் அளவறிந்து கொடுத்தல் என்றும் இரண்டு பொருள் கூறினார்!

    இனி, இக்குறளுக்கு மேலும் பல பொருள்கள் விரிவதை இங்கே காணலாம்!

    (1) தன்னை நாடி வந்தவனிடம், தன்னிடத்துள் உள்ள வறுமையை ”இலன்” என்று கூறி வந்தவனிடம் தன் துன்பத்தை கூறாமல் ஈதல் என்றும்,

    (2) வந்தவன் தன்னிடம் ஏதுமில்லை என்று கூறும் முன்னரே பசித்தோன் முகம் பார்த்துக் குறிப்புணர்ந்து தானே முன்வந்து ஈதல் என்றும்,

    (3) வந்தவனிடம் உள்ள வறுமையைச் சுட்டிக்காட்டி ‘இவன் ஏதுமே இல்லாதவன்” என்று இகழ்ந்து கூறாமல் கொடுத்தல் என்றும் ,

    (4) தன்னிடம் பொருள் பெற்றவன், தன்னைப் போலவே வறியவராக வருவோரிடத்தில் அவர்கள் கேட்கும் முன்னதாகத் தானே ஈயும் வண்ணம் பெரும் பொருள் ஈந்து தனது ஈகைப்பண்பைப் பெற்றவனிடத்திலும் உருவாக் குதல் என்றும் பொருள் தருகிறது

    தன்னிடம் கொடை பெற்றவன், மீண்டும் கொடுத்தவனின் கொடைப் பண்பை உடனே பெற்ற நிகழ்ச்சி வில்லிபாரதத்தில் உள்ளது. வறியவனாக வேடம் புனைந்து கர்ணனை நோக்கி வந்த கண்ணபிரான், கர்ணனின் செய் புண்ணி யத்தைப் பெற்ற பின், தாமே கர்ணனை நோக்கி” உனக்கு என்ன வரம் வேண்டும்? ” என்று கேட்டாரே! அதுதான் கொடைப் பண்பு பரவும் முறை!

    முன்னாளில் யாருமற்ற அனாதையாக இருந்த கர்ணனே தனக்கு அங்க தேசத்தை வழங்கிய துரியோதனனிடம் கொடைப்பண்பை மேலும் வளர்த்துக் கொண்டான் என்று பாரதக்கதை கூறுகிறது.

    இக்குறட் பாவுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறலாம். வாசகர்கள் முயற்சி செய்க ! பின்னர் நானே ஆதாரங்களுடன் விளக்குவேன்!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 3

    – புலவர் இரா.  இராமமூர்த்தி.

    காலம்தோறும் புதுப் புதுப் பொருள்தருவது நல்ல நூலுக்குரிய தனித்தன்மை! திருக்குறள் உருவான காலத்தில் முடியாட்சிமுறையே நாட்டில் நிலவியது! சேர சோழ பாண்டியர் அரசாண்டகாலம்தான் அது. ஆனால் திருவள்ளுவர் இந்த மூவேந்தர்களைப் பற்றிய எந்தக் குறிப்பையும் தம் நூலில் குறிப்பிடவில்லை! அது மட்டுமல்ல தமிழ் மொழியிலேயே எழுதப் பெற்ற திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை. இதற்குக் காரணம், இந்த நூல் எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் உரிய பொது மறை என்பதை நுட்பமாக விளக்கவே என்பதாகும்!

    இந்த நூல், முதற்குறள், ‘அகர’ எனத் தமிழின் முதல் எழுத்தில் தொடங்கி, இறுதி 1330- ஆம் குறளில் ‘பெறின்!’ என்ற ஈற்றுச்சீர் தமிழ் மொழியின் இறுதிஎழுத்தாகிய ‘னகரத்தில் நிறைவு பெறுகிறது. அதனால் இந்த நூலின் மொழி தமிழே என்பதை வள்ளுவர் நுட்பமாகப் புலப்படுத்துகிறார். மேலும், கடவுள் வாழ்த்தில் எந்தக் குறிப்பிட்ட மதத்துக்கும் உரிய கடவுளர் பெயரைக் குறிக்கவில்லை; ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்ற பொதுவான பெயர்களால் மட்டுமே இறைவனைப் பற்றி அறிமுகம் செய்கிறார்! அதனால் இந்நூல் எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்பதை புலப் படுத்துகிறார்! ஆனால் இதே அதிகாரத்தில் கடவுளின் மாணடி , நற்றாள், தாள், இறைவனடி என்ற சொற்களால் இறைவனின் திருவுருவத்தையும், அவன் திருவடியையும் குறிப்பிட்டு இந்துக் கடவுளரின் உருவ வழிபாட்டை நுட்பமாகப் புலப்படுத்துகிறார்! அதனால் இந்த நூல் இந்தியநாட்டில் , சிறப்பாகத் தமிழ் நாட்டில் நிலவிய இந்துமதம் சார்ந்த நூல் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்! மேலும் இந்துசமய இதிகாச புராண வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த தொடர்களையும் ஆங்காங்கே அமைத்துப் பாடுகிறார்!

    இராமாயணம் இந்திய தேசத்தின் உயர்ந்த இதிகாசம். இந்தக் கதை இந்திய நாடெங்கும் பரவி, எல்லா மொழி மக்களாலும் புரிந்து கொள்ளப் பெற்றதாகும். இதனை சமஸ்கிருத மொழியில் வான்மீகியும், தமிழ் மொழியில் கம்பரும், இந்தியில் துளசிதாசரும், தெலுங்கிலும், மலையாளத்திலும் பலராலும் எழுதப் பெற்றுப் படித்துப் புரிந்து கொள்ளப் பெற்றது! இந்த இராமாயணத்தின் கதைத்தலைவராகிய இராமர், கடவுளின் அவதாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட கதை நிகழ்ச்சி நமக்குப்
    புலப்படுத்துகிறது! அதாவது இராமன் விசுவாமித்திர முனிவருடன் முதன் முதலாக மிதிலை நகர் நோக்கிச் செல்லும்போது, அவருடைய கால்தூசு பட்டுக் கல்லாய்க் கிடந்த அகலிகை சாப விமோசனம் பெற்று எழுகிறாள்! இந்த நிகழ்ச்சியைப் பழந்தமிழ் இலக்கியமாகிய பரிபாடலின் பத்தொன்பதாம் பாடல் குறிப்பிடுகிறது.

    ‘‘இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
    சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
    ஒன்றிய படி இது‘ என்று உரை செய்வோரும்:
    இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,”

    இப்பகுதியில் அகலிகை, கவுதம முனிவன் ஆகியோர் வரலாறு கூறப்படுகிறது. கவுதம முனிவன் கொடுத்த சாபத்தால் அகலிகை கல்லாய் மாறிக்கிடந்த காட்சி அந்த எழுநிலை மாடத்தில் ஓவியமாய்த் திகழ்ந்தது! இதனைத் திருவள்ளுவர் அறிந்து கொண்டு, ஒரு குறட்பா இயற்றியுள்ளார்! அக்குறள்,

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி!

    என்பதாகும். மற்றும்,

    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தா னிடை

    என்ற குறட்பாவும், இந்திர பதவி பெற்ற நகுஷன் தன சிவிகையைத் தாங்கி வந்த குறுமுனி அகஸ்தியரை , ”விரைந்த,விரைந்து ” என்ற பொருளில் ”சர்ப்ப, சர்ப்ப” என்றான். அகத்தியர் அவ்வாறே நீ சர்ப்பம் ஆவாயாக என்று சபித்தார். அறவோராக விளங்கிய அகஸ்திய முனிவர் அன்போடு சிவிகை சுமந்தார்; ஆனால் சிவிகை மேலிருந்த நகுஷன் அறவுணர்வு சிறிதுமில்லாமல், அன்பின்றி முனிவரை ஏவினான். சிவிகை பொறுத்த அகத்தியர் மூலமும், சிவிகை ஊர்ந்த நகுஷன் மூலமும் அறத்தின் நெறி இதுவென்று நம்மால் விளங்கி கொள்ள இயலாது.

    இவ்வகையில் இந்திய இதிகாச புராணங்களைத் திருவள்ளுவர் தேவையான விளக்கம் தர எடுத்துக் கொண்டார்; இனி அவர் இயற்றிய வேறொரு திருக்குறளுக்குப் புதிய விளக்கம் காண்போம்! வாமனனாக வந்த திருமால் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். அவருடைய வாமன உருவம் குட்டையானது. அந்த உருவத்தின் காலடியால் மூன்றடி நிலம் என்பது மிகவும் சிறியது! ஆனால் அதே திருமால் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்த போது , இரண்டடியால் மூன்று உலகங்களையும் அளந்தார்; பின்னர் மூன்றாம் அடி வைக்க இடமில்லாமையால் மகாபலி தன் தலையையே தந்தான்! இங்கே,
    அனைத்துலகங்களையும், மகாபலி தலையையும் அளந்து எடுத்துக் கொண்ட திருமால் வஞ்சனை செய்தார்; ஆனால் எவ்வித வஞ்சனையும் செய்யாமல் ஓர் அரசன் சோம்பலின்றி அரசாண்டால், அவன மிக எளிதாகத் திருமால் வஞ்சனையால் அடைந்த மூவுலகங்களையும் தப்பாமல் அடைவான், என்று திருவள்ளுவர் கூறுகிறார். அக்குறள்,

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு!

    என்பதாகும். இக்குறளுக்குப் பொருள் காணும் போது, அடியளந்தான் (வஞ்சனையால்) தாஅயதெல்லாம் ஒருங்கே , மடியிலா (வஞ்சனையில்லாத) மன்னவன் எய்தும் என்று பொருள் கொண்டால், மடியில்லாதவன் வஞ்சனை செய்யாத அறவோனாகவும் விளங்குவான் என்பது புலனாகும்! மடிஎன்னும் சோம்பலுடையவனிடம் மிக்க வஞ்சனை புரியும் மூதேவி தங்கிவிடுவாள்; ஆனால் சோம்பலற்றவனின், முயற்சியாகிய தாளின்கீழ் திருமகளே உறைவாள்” என்ற பொருளில், அடுத்த அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் குறளைப் பயின்றால் மடியின்மையுடன் அறவுணர்வு நீங்காமல் இருக்கும் என்பது புலனாகும்!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 2

    புலவர் இரா.  இராமமூர்த்தி.

     

     

    ”நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.” (783)

    என்னும் திருக்குறளின்படி , நம் வாழ்வில் ஒருமுறை படித்த நூலை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நம் தனிப்பட்ட, மற்றும் சமுதாய வளர்ச்சிக் கேற்பப் புதிய புதிய பொருள்களைத் தந்து மகிழ்விக்கிறது. அதனால்தான் நாம் இளமையில், பள்ளி வகுப்புக்களில் அன்று படித்த பாடத்தின் இன்றைய பயன்பாடு நமக்கு உதவுகிறது. அன்று கற்ற நூலின் அனுபவப் பாடம் இன்று நமது உள்ளார்ந்த ஆன்மிகப் பயிற்சிக்கு உறுதுணை ஆகிறது.

    ”இதன் விளக்கத்தை வல்லார்வாய்க் கேட்டறிக”, என்ற உரையாசிரியர்களின் கருத்து, அந்த நூலை மீண்டும் கற்றறிந்த நூல்வல்லார் ஒருவருடன் இணைந்து மீண்டும் பயில வேண்டும் என்பதை நிறுவுகிறது. அவ்வகையில் ஆன்மிக அனுபவங்களை – சிலவகை தியானம், யோகம், ஆகியவற்றை- தக்க வழிகாட்டி- குரு , ஒருவரிடம் முறையாகக் கற்றுப் பயிலவேண்டும் என்று தத்துவ நூல்கள் வலியுறுத்துகின்றன! இதனை,

    ”உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்;
    கடையரே கல்லா தவர்”(395)

    என்ற குறட் பாவும் வலியுறுத்துகிறது. இல்லார் உடையார் முன் சென்று, நின்று, வேண்டிப் பெறுவதுபோல் ஆசிரியரிடம் சென்று நின்று, பலமுறை வேண்டி வேண்டி, அறிவைப் பெற வேண்டும் என்பது இதன் பொருள்.

    ”பொங்கரில் நுழைந்து வாவி
              புகுந்து பங்கயம் துழாவிப்
    பைங்கடி மயிலை முல்லை
              மல்லிகைப் பந்தர் தாவிக்
    கொங்கலர் மணம்கூட் டுண்டு
              குளிர்ந்து மெல்லென்று தென்றல்
    அங்கங்கே கலைகள் தேறும்
              அறிவன்போல் இயங்கும் அன்றே!”

    என்ற திருவிளையாடற் புராணப் பாடல் அறிவைத் தேடுபவன் எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் முயன்று அங்கங்கே தேவைப்பட்ட அறிவைப் பெறுகிறான் என்பதை, வீசும் காற்றை உவமையாக வைத்து விளக்குகிறார் (இதன் விளக்கத்தை வேறொரு கட்டுரையில் எழுதவிருக்கிறேன்!).

    பலமுறை படித்துப் பொருள் புரிந்து கொள்ள முயற்சி செய்த போதெல்லாம் திருக்குறளின் பொருள் புதுப்புதுப் பொலிவுடன் வளர்வதைக் கண்டுள்ளேன்! அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை வருகிறது. தக்கவர் ஒருவரிடம் ஒரு திருக்குறளின் பொருளைக் கேட்டறிந்து, மிக்க மகிழ்ச்சி யடைந்து இதனை எழுதுகிறேன்!

    ”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா வுயிரும் தொழும்” (260)

    என்பதே அத்திருக்குறள்! இந்தக் குறட்பாவுக்குப் பொருள்காண முற்பட்டால், உயிர்களைக் கொல்லாதவனையும், அவற்றின் புலாலை உண்ணமாட்டேன் என்று மறுத்தவனையும், அதாவது உயிரிரக்கம் காட்டுபவனையும், புலால் மறுத்தவனையும், எல்லாவுயிரும் கைகூப்பித்தொழும் என்று பொருள் அமைகிறது! இதில், ‘எல்லாவுயிரும்’ என்ற தொடர் எந்தெந்த உயிர்களைக் குறிக்கிறது? விலங்குகளைக் கொன்று தின்பதுதானே புலாலுண்ணுதல்? விலங்குகளைக் கொல்லாமல், அவற்றைச் சமைத்துத் தின்னாமல் இருப்பவனை விலங்குகள் எவ்வாறு கைகூப்பித் தொழும்? அவ்வாறு தொழும் செயலை எல்லாவுயிர்களும் செய்யுமா? என்ற வினாக்கள் எனக்குள் எழுந்தன! ”இதற்குத் தக்க விளக்கம் தேடினேன்” என்று கவிமாமணி இலந்தை இராமசாமியிடம் கேட்டேன்! உடனே அதற்குத் தகுந்த விளக்கத்தை அவர் அளித்தார்! அவருக்கு என் நன்றியைப் புலப்படுத்துவது என் கடமை! திரு. இராமசாமி, கைகூப்பி’ என்பதை ” எல்லாவுயிரும்” என்ற தொடரில் இணைத்து ஏன் தடுமாறுகிறீர்கள்?

    புலாலைக் கைகூப்பி மறுத்தானை என்று அமைத்துக் கொள்ளுங்கள்! பொதுவாக எதனையும் வேண்டவே வேண்டாம் என்று மறுப்பவர், இருகரமும் கூப்பி , ‘எனக்கு இது வேண்டா!’ என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் என்றுதான் கூறுவர். அவ்வகையில் புலாலுணவு வேண்டாதவர் ”இது வேண்டா’ என்று கூறும்போது பணிவுடன் கைகூப்புவதுதானே வழக்கம்? ஆகவே கொல்லானை, புலாலைக் கைகூப்பி மறுத்தானை எல்லாவுயிரும் தொழும் என்று அமைத்துக் கொள்ள வேண்டும்! இங்கே எல்லாவுயிரும் என்ற தொடர் ‘எல்லாச் சான்றோரும்’ என்ற பொருளில் மனிதவுயிர்களை மட்டுமே சிறப்பிக்கும்! ”மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்” (457) என்ற குறட்பாவிலும், ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல (1012) என்ற குறட்பாவிலும், ”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு, என்ற குறட்பாவிலும் உயிர்கள் உயர்திணை மக்களையே குறித்தது!

    இவ்வகையில் திருக்குறளுக்குப் புதிய பொருள் காண்கிறோம். இன்னும் காண்போம்.

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 1

    புலவர் இரா.  இராமமூர்த்தி.

    திருவள்ளுவரின் ஆன்மிகக் கொள்கை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பது. அவர் இறைவன் , உயிர், தளை ஆகியவற்றைப் பற்றித் தனிச்சிறப்புடைய கருத்துக்களை வழங்கியுள்ளார். இறைவன் பற்றிய இந்துமதத்தின் புராணக் கருத்துக்களை இடையிடையே விளக்கியுள்ளார்.

    அவர் ”மடியின்மை” அதிகாரத்தில்,

    “மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅயது எல்லாம் ஒருங்கு.”

    என்ற திருக்குறளிலும்,

    ”ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி”

    என்ற திருக்குறளிலும்,
    ”மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு மூவுலகையும் அளந்த திருமாலின் வாமனாவதாரக் கதையையும், இராமாயணத்தில் அகலிகை சாபம் பெறக் காரணமான இந்திரன் இறைவனிடம் தண்டனை பெற்ற வரலாற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

    முதல் திருக்குறளில், ” மடியிலா மன்னவன்” என்ற தொடரின் பொருளை – என்றும் முழுமையான சுறுசுறுப்புடன், வஞ்சனை இன்றி உழைக்கும் மன்னவன் – என்று பொருள் கொண்டால், மாபலி முன் குறளனாய்த் தோன்றி ” மூன்றடி மண் வேண்டும்” என்று வரம் கேட்டபின், யாருமே நினைந்திராத பேருயரம் பெற்று வளர்ந்து, தான் கேட்ட மூன்றடி நிலத்தின் அளவை மாற்றி வஞ்சனை செய்த வாமனன் அளந்து பெற்ற மூவுலகையும், வள்ளுவர் காட்டும் மடியிலாத சுறுசுறுப்புடைய வஞ்சனையில்லாத மன்னவன் பெறுவான் என்று புதுப் பொருள் கொள்ளலாம் !

    இதனை, இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குறிப்பாக விளக்குகிறார்…

    ”மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
    தாவிய சேவடி சேப்பத் தம்பியோடும் கான்போந்து
    சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
    சேவகன்!”

    என்ற பாடற்பகுதியில், ”முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி ” என்ற தொடரின் பொருளாக, ”முறைமை நிரம்பாத வஞ்சனைச் செயலால் தாவிய சேவடி” என்ற கருத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டதை உணர்கிறோம்! அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வஞ்சனையால் தாவிய சேவடிக்கு தண்டனை தந்து கொண்டு , பெருமாளே தம் சேவடி சிவக்கச் சிவக்க நடந்தார் – என்ற பொருளில் அவர் எழுதியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்! ஆதலால், வாமனன் வஞ்சனையால் அடைந்த மூவுலகையும், மடியின்றி நேர்மமையாக அரசாளும் மன்னவன் எய்துவான் என்ற புதுப்பொருள் நமக்கு உரிய வகையில் நல்ல விளக்கத்தைத் தருகிறது.

    திருவள்ளுவரும் ஏனைய சான்றோர்களும் உலகில் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறக்கும் உயிரின் நிலையை மிகவும் துன்பமுடையது என்றே கூறுகின்றனர். திருக்குறளில்,”பிறவிப் பெருங்கடல்”(10) , வாழ்நாள் வழியடைக்கும் கல்”(38), ”வாழ்க்கை வழி எஞ்சல்”(44) , எழுபிறப்பும் ”(62, 107), ”இழிந்த பிறப்பு”133) , ”தோன்றின் புகழோடு ”(236), ”சாக்காடு, பிறப்பு”(339) ”பிறப்பறுக்கல்”(345), ”பிறப்பறுக்கும்”(349), முதலான நாற்பத்து நான்கு குறட்பாக்களில் பிறப்பின் இழிவைத் திருவள்ளுவர் கூறியுள்ளார்!

    இந்த பிறப்பிறப்புத் தொடர்ச்சியை மாணிக்கவாசகர்,

    ”பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் ”,

    ” புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் ” என்றும் ,

    ”மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே” என்றும் பாடுகிறார்…

    இந்தப் பிறப்பினுள் பலவகைப்பட்ட துன்பங்களை நாம் அனுபவிப்போம், இவை பிறக்கும் முன்னரே உருவாகி, நம்மை அச்சுறுத்தும் என்கிறார் மாணிக்க வாசகர்.

    பிறப்பதற்கு முன்னர் தாயின் கருப்பையுள் கிடக்கும் குழவி, ஒவ்வொரு திங்களும் எத்தகைய துன்பச் சூழ்நிலையிலிருந்து தப்பிப் பிழைக்கிறது என்பதை அவர் துன்பங்களை

    யானை முதலா எறும்பு ஈறு ஆய,
    ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
    மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
    ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
    ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
    இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
    மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
    ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
    ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;
    ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
    தக்க தச மதி தாயொடு தான் படும்
    துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

    என்றும் பாடுகிறார். மேலும் பிறந்து வளரும்போது எத்தனைத் துன்பங்களிலிருந்து ஓர் உயிர் பிழைக்கிறதுஎன்பதையும் அவரே பாடுகிறார்…

    ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
    ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
    காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
    வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
    கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
    ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
    கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
    எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
    ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
    கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
    பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
    மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
    கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
    செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
    நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;
    புல் வரம்பு ஆகிய பல துறை பிழைத்தும்
    தெய்வம் என்பதோர் சித்த முண்டாகி
    என்று பாடுகிறார்.

    இவ்வாறு தாயின் கருப்பைக்குள்ளும், பிறந்தபின் வெளி உலகிலும் இந்த உயிர் படும் பாட்டை பிறவித்துன்பங்கள் என்று சான்றோர் கூறுவர்.

    ”கருப்பத்தூறிப் பிறவாதே கனக்கப் பாடுற்று உழலாதே” என்று அருணகிரிநாதர் பாடுகிறார்! இவற்றுக்கெல்லாம் மூலகருத்தைத் திருக்குறள் அழகாகக் கூறுகிறது. நாம் பிறப்பதற்கு உரிய கருவி, தாயின் கருப்பை. இந்தக் கருப்பைக்குள் உயிரை இட்டு இறைவனே வளர்க்கிறார்! இனி, தனிச் சிறப்புடைய இரண்டு குறட்பாக்களை இங்கே ஆராய்வோம்

    ”வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல ”

    என்ற குறட்பாவுக்கு, ”விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் திருவடியை வழிபாடு செய்தோருக்கு, எக்காலத்தும், என்றும் பிறவித் துன்பங்கள் இல்லை!” என்றே அனைவரும் இதுகாறும் பொருள் கூறி வந்தனர். மேலே நாம் கண்ட பிறப்புத் துன்பங்களைப் பற்றிய கருத்துக்களின் படி, ”இடும்பை ” என்ற சொல்லை – இடும்+ பை – என்று பிரித்து நாம் புதிய பொருளைக் காணலாம்! இதன் படி இடும் பை என்பது நம்மை ஏற்றுத் தாங்கிப் பிறப்பிக்கும் கருப்பையைக் குறிக்கும்! விருப்பு வெறுப்பற்ற இறைவனை வழிபட்டார்க்கு எக்காலத்தும் இனிப் பிறப்புத் துன்பம் இல்லை; அதாவது இடும் (கருப்)பை இல! என்று இத் திருக்குறளுக்குப் புதிய , பொருத்தமான பொருளைக் காணலாம் ! இவ்வாறே,

    ”நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும் ”(138)

    என்ற திருக்குறளுக்கும் இவ்வாறே புதிய பொருளைக் காணலாம்!மேலும் …

    ” இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
    கையாறாக் கொள்ளாதாம் மேல்” (627)

    என்ற திருக்குறளையும் இவ்வாறே காணலாம். திருக்குறளுக்குப் பொருள் காணும் முறைகளுள் இதுவும் ஒருவகையே! அதற்காக இடும்பை என்ற சொல் துன்பம் என்ற பொருளில் அமைந்த மற்ற குறட்பாக்களுக்கும் இடும்+பை என்று பொருள் கொள்ளுதல் தவறாகும்.

    திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
    ஆலந்தூர், சென்னை 600 016.

    Share