திருக்குறளுக்குப் புது விளக்கம் – 6
– புலவர் இரா. இராமமூர்த்தி.
எல்லா நற்செயல்களும், நற் கருத்துக்களும் தமிழரிடையே உருவாயின என்றால் நம் அனைவர்க்கும் மகிழ்ச்சி தானே? நம் பழந்தமிழரின் வாழ்க்கையே பிறவினத்தார் போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்பதை , நம் புலவர்கள் அவ்வப்போது குறித்திருக்கிறார்கள்!
”திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்பது மகாகவி பாரதியின் வரி!
”கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி”
என்ற புறப்பொருள் வெண்பாமாலையின் பாடலடிகள் தமிழக மேடைதோறும் முழங்கப் பெற்றபோது கேட்டு மகிழாத தமிழனும் உண்டோ? ”முதற் குரங்கே தமிழ்க் குரங்கு என்பதில் நம் தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!” என்ற புதுமைப்பித்தன் கருத்தில் கிண்டல் தொனித்தாலும் நம் மனப்பான்மை அதனையும் ஏற்று மகிழ்கிறது!
இத்தகைய மகிழ்ச்சி எனக்குள் புத்துணர்ச்சியை ஊட்டியது. என் கவனத்துக்கு வந்த பிறமொழிக் கருத்துக்கள் நம் தமிழில் முன்னரே இருந்தன, என்ற நிறைவை எப்போதும் என் மனம் அடைந்தது! இந்நிலையில், அனைவரும் நன்றாக அறிந்த இயேசுகிறிஸ்துவின் வரலாறு புதுமையும், செழுமையும் அருமையும் உருக்கமும் கொண்ட வரலாறாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பெற்றது.
”தன்னரிய திருமேனி தவிப்புண்டு நலிவெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகில்லார் தாம்செய்யும் இவர்பிழையை
மன்னியும் என் றருட்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்!”
என்ற இரட்சணிய யாத்திரிகப் பாடல் எனக்குள் பல்வேறு எண்ண அலைகளை உருவாக்கியது! தமக்கு மிகப்பெரிய துன்பம் இழைத்த கொடியோருக்கு எதிராக இயேசுபிரான் செய்த அருட்செயல் போல், நம் தமிழ் மொழி இலக்கியங்களில் ஏதேனும் இருக்கிறதா? நமக்கு ஒருவர் இன்னாத துன்பம் செய்தால், நாம் அவருக்கு நல்லன செய்தல் வேண்டும் என்ற கருத்தில் அமைந்த திருக்குறள் இருக்கிறது.
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்! (312)
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் (314)
மேலும் ,
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? (987)
ஆகிய குறட்பாக்களின் கருத்துக்கள் என் உள்ளத்தில் அலைமோதின! ஆனாலும் இயேசுபிரான் செய்த அருட்செயலுக்கு முழுமையாகப் பொருந்தும் வண்ணம் இந்தத் திருக்குறட்பாக்களின் கருத்துக்கள் அமையவில்லை என்பதை நுட்பமாகச் சிந்திப்பவர் புரிந்து கொள்வர்! ஆம்!
பொதுவாக, நமக்குத் தீமை செய்பவர் நம்மைவிட வலிமை குன்றியவராக இருந்தால் நாம் அவருக்கு தண்டனை வழங்கி விட முடியும்; அவருக்கும் நாம் நல்லதே செய்ய வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து. அதனை,”செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்” என்கிறார். நம்மை விட வலியவர் நமக்குத் தீமை புரிந்தால், அவர்பால் நம்மால் சினம் கொள்ள இயலாது. ஆனால், நம்மை விட மெலிந்தவரிடமும் சினம் கொள்ளக் கூடாது இதனைத் திருவள்ளுவர் ‘
செல்லா இடத்துச் சினம் தீது ; செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற! (302)
என்கிறார். ஆகவே நமக்குத் தீமை செய்தாருக்கு நாமே தண்டனை தரலாம்; அது நன்னயமாக இருக்க வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து. தீயவர் தண்டனை பெற வேண்டும். அந்த தண்டனையை வலியவரே தர முடியும். எப்படி இருந்தாலும் நமக்குத் தீமை புரிந்து துன்பம் தருபவருக்கு அந்தத் தீவினைக் கேற்ற தண்டனையை மேலுலகில் இறைவன் கொடுப்பார் என்பதும், செய்த வினைப் பயன் செய்தவரை உறுதியாகச் சென்று சேரும் என்பதும் உறுதி!
இப்போது மேலே காட்டிய திருக்குறட்பாக்களின் கருத்துப்படி நமக்குத் துன்பம் செய்தவர்க்கு தண்டனை தரும் நிலையில் நாம் இருந்தால், அவர் நாண நன்னயம் செய்தலும், இன்னா செய்தார்க்கும் இனியவை செய்தலும், நல்லவை எனப் புரிந்து கொண்டோம். ஆனால் இயேசுநாதர் செய்ததோ, இவற்றுக்கும் மேலான ஒரு செயல் ஆகும்!
நமக்குத் தீங்கு செய்பவரை நாம் தண்டிக்கலாம்; பெரியவராக இருந்தால் ஆண்டவனிடன் அவருக்கு தண்டனை அளிக்குமாறு வேண்டிக்கொள்ளலாம்! அப்படிச் செய்யாமல், இயேசுநாதர் தம்மைத் துன்புறுத்தியவர் செய்த பாவத்தால், அவர்களை ஆண்டவன் தண்டிப்பது நிச்சயம் என்பதை உணர்ந்துகொண்டு, அந்த தண்டனையை அவர்களுக்கு ஆண்டவன் அளிக்காமல்அவர்களை ”மன்னிக்க வேண்டும்” என்று வேண்டுகிறார். இவ்வாறு தமக்குத் துன்பம் செய்தவர் மேலுலகில் தண்டனை பெறுவாரே என்று வருந்தி அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் அருட்செயல் பற்றித் திருக்குறளில் ஏதும் சொல்லவில்லையோ? என்று என் மனம் தவித்தது!
இந்தத் தவிப்பை என் குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனிடம் கூறி னேன்! அவர் சிரித்தார்! ”நீ திருக்குறள் பரிமேலழகர் உரையைப் படித்திருக்கிறாயா? அதில் ”திறனல்ல தற்பிறர் செய்யினும்” என்ற குறளுக்கு என்ன விளக்கம் அளித்துள்ளார் என்பதைப் படி!” என்றார். அந்தத் திருக்குறள் ,
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று!
என்பதாகும். அந்தத் திருக்குறளில் ”நோநொந்து” என்ற தொடருக்கு, தமக்குத் தீமை செய்தார் அதனால் ”உம்மை எரிவாய் நரகத்து வீழ்வர்கொல் என்றெண்ணிப் பரிவதூஉம் சான்றோர் கடன்” என்றார் போல்வதோர் பரிவு” என்று பரிமேலழகர் பொருள் கூறினார். அந்தத் தொடர் நாலடியாரில் உள்ளது.
”தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றியும்
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
எரிவாய் நரகத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்!”(58)
என்பது அப்பாடல் . இப்பாடல் ‘தமக்குத் துன்பம் செய்ததவர் தம் தீவினைப் பயனாக எரிகின்ற நரகத்தில் வீழ்ந்து துன்பம் அடைவரே, என்று வருந்துவதும் ‘சான்றோரின் கடன்’ என்று கூறுகிறது. இதனால் தமக்குத்துன்பம் செய்தவர், அதனால் நரகத்துன்பம் அடைவர் என்று எண்ணி அவரைக் காப்பாற்ற முயலும் நல்ல உள்ளம் புலப்படுகிறது. பாகவதத்தில் ஒரு முனிவரின் கழுத்தில் ஒரு பாம்பினை எடுத்துச் சூட்டிய மன்னவன் ஒருவனை அந்த முனிவரின் மைந்தன் சபித்தான். அதைக்கண்ட முனிவர் அந்த அரசன் செய்த பாவத்தின் தீய விளைவைத் தடுத்தார் என்ற வரலாறு கூறப் படுகிறது
இன்னலெமக் கிழைத்ததனால் வீடிழந்து
நரகாழ்வா ரெனநி னைந்து
பன்னரிய பெரியர்பிழை பொறுப்பர்பொறார்
தம்பிழையைப் பரம னாற்றான்
முன்னொருவன் செய்தனனென் றவற்கிறப்பச்
செயுமிடரம் முறையி லான்சேய்
பன்னிதம ரையுஞ்சேரு மவர்நமக்கெப்
பிழைசெய்தார் பகராய் நெஞ்சே.
என்ற நீதிநூற்கருத்தின் படி தீமை செய்தோரின் வினைப்பயன் அவர் பரம்பரையினரையும் சென்றடையும் என்பது புலனாகின்றது. ஆகவே இவை அனைத்துடனும் பிற்காலத்தில் நம் நாட்டுக்குள் வந்து பரவிய விவிலியத்தின் இயேசுநாதர் அருள் வரலாற்றையும் உணர்த்தும் வகையில் , ”நோநொந்து” என்ற தொடர் அமைந்த திருக்குறளின் புதிய பொருள் நமக்கு மன நிறைவை அளிக்கிறது!
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (157)