-மேகலா இராமமூர்த்தி

பக்கவாதத்தை வெல்வோம்!

உலக மக்களை அதிகம் தாக்கும் நோய்களில் இரண்டாமிடத்தில் இருப்பது பக்கவாதம் (stroke) அல்லது பாரிசவாதம் எனும் நோயாகும்.

மூளைக்குச் செல்லும் இரத்தவோட்டம் தடைப்படும்போதோ அல்லது இயல்பான அளவுக்கு மிகக் குறைவாக இருக்கும்போதோ மூளைக்குக் கிடைக்கவேண்டிய உயிர்வளியின் (oxygen) அளவு குறைந்துபோவதால் மூளைச் செல்கள் இறக்கத்தொடங்குகின்றன. அதன் காரணமாகப் பேச்சுக் குழறுதல் (slurry speech), உடலின் ஒருபக்கம் செயலற்றுப் போதல் (paralysis) போன்றவை ஏற்படுகின்றன. பொதுவாக, மூளையின் எப்பகுதி தாக்கத்துக்கு உட்படுகிறதோ அதற்கு எதிரான உடலின் பகுதியே பாதிப்புக்குள்ளாகின்றது.

முதலில், பக்கவாதத்திற்கான அறிகுறிகளையும் அதற்கான காரணிகளையும் அறிந்துகொள்வோம்.

அறிகுறிகள்:

1. மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளுவதில் குழப்பம், பேசும்போது   நாக்குழறுதல்.

2. முகம், கை கால்கள் திடீரென்று மரத்துப்போதல், குறிப்பாக உடலின் ஒரு பகுதி செயலிழந்து போதல். (Sudden numbness, weakness or paralysis in face, arm or leg, especially on one side of the body.)

3. ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோ பார்வைக் குறைபாடு ஏற்படுதல், உருவங்கள் மங்கலாகவோ அல்லது இரண்டிரண்டாகவோ தெரியத் தொடங்குதல். (Blurred vision or the person may see double).

4. தலைசுற்றல் மற்றும் வாந்தியோடு சேர்ந்தவரும் கடுமையான திடீர்த் தலைவலி.

5. எதிர்பாராமல் ஏற்படும் மயக்கம், நடக்கும்போது சமநிலை தவறிப்போதல் (loss of balance), தசைகள் ஒருங்கிணைந்து வேலைசெய்யாமற் போவதல்(loss of coordination/ataxia).

இவையெல்லாம் பக்கவாதத்தின் அறிகுறிகளாகும்.

இனி, பக்கவாதம் ஏற்படுவதற்கான வாழ்வியல் மற்றும் உடல்சார் காரணிகளைக் கண்டறிவோம்.

அதிக உடல் பருமன், உடலுழைப்பின்றிச் சோம்பி இருத்தல், அளவுக்கு அதிகமாய் மது அருந்துதல், கோகெயின் (cocaine) உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு அடிமையாதல் போன்றவை பக்கவாதம் ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

அதுபோலவே, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவுநோய், இதயநோய்கள், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, உறங்கும்போது உயிர்வளியின் அளவைத் தடைப்படுத்தும் Obstructive Sleep Apnea எனும் நோய் முதலியவையும் பக்கவாதம் வருவதற்கு முக்கியக் காரணங்களாக அமைபவை.

இவையல்லாமல், மரபு சார்ந்தும் இந்நோய் வரலாம். அதிலும் ஆப்பிரிக்கர்களுக்கு மற்ற இனத்தவரைக் காட்டிலும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது மருத்துவ அறிவியல். பெண்களைக் காட்டிலும் ஆண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படும்போதிலும், நோய்த் தாக்கத்துக்குட்பட்டவர்களில் பெண்களே அதிக எண்ணிக்கையில் இறப்பைச் சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பக்கவாதத்திற்கான (மேற்சொன்ன) அறிகுறிகள் நோயாளியின் உடலில் தென்படும்போதே உடனடியாக அவரை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Department) சேர்த்துச் சிகிச்சை அளிக்கவேண்டும். இதன்மூலம் நோயாளியின் இறப்பையோ அல்லது அவரது உடலில் ஏற்படும் இயக்கக் குறைபாடுகளையோ தொடக்கத்திலேயே தவிர்க்க இயலும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு ஏற்பட்டிருப்பது பக்கவாதம்தானா என்பதை உறுதிசெய்து கொள்வதற்குப் பல பரிசோதனைகள் மருத்துவர்களால் செய்யப்படும். அவற்றில் சில…

நோயாளியின் இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, இன்ன பிற…   ஆகியவற்றை அறிந்துகொள்ள இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும்.

மூளையின் நிலையை, அதன் பாதிப்பை அறிந்துகொள்ள மூளையில் எக்ஸ் கதிர்களைச் (X-rays) செலுத்திக் கணினியின் துணையோடு CT (Computed Tomography) பரிசோதனை செய்யப்படும்.

மின்காந்த அலைகளைச் செலுத்தி (radio waves) MRI (Magnetic Resonance Imaging) பரிசோதனை செய்யப்படும். இதன்மூலம் மூளைச் செல்களிலுள்ள பாதிப்பு தெளிவாய்த் தெரியும்.

கழுத்திலுள்ள கரோட்டிட் தமனிகளில் (Carotid Arteries) அடைப்புள்ளதா என்பதை அறிவதற்கு ஒலி அலைகளைச் (sound waves) செலுத்தி Carotid Angiogram செய்யப்படும்.

மூளையிலும், கழுத்திலுமுள்ள தமனிகளின் செயல்பாட்டைத் துல்லியமாக அறிவதற்கு மற்றொரு பரிசோதனையான Cerebral Angiogram செய்யப்படும்.

ஒலி அலைகளைச் செலுத்தி இதயத்தைப் பரிசோதிக்கும் முறையான Echocardiogram செய்யப்படும்.

இவ்வாறு பல பரிசோதனைகள் (பக்கவாதத்திற்கான அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்) நோயாளிகளுக்குச் செய்யப்படுவது வழக்கம்.

மருந்துகள் என்று பார்த்தால், இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆஸ்பிரின் (Aspirin) மருந்தே நோயாளிக்கு முதலில் தரப்படும். பின்பு நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள், அறுவை சிகிச்சை முதலியவை பரிந்துரைக்கப்படும்.

பக்கவாதம் கண்ட நோயாளிகள் மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகு புனர்வாழ்வு மையங்களுக்கு (Rehabilitation Center) அனுப்பப்படுவர். அங்கே நோயின் தாக்கத்திற்குத் தக்கபடி பல்வேறு வகையான உடற்பயிற்சிகள், பேச்சுப்பயிற்சி போன்றவை அவர்களுக்கு அளிக்கப்படும்.

நண்பர்களே! பக்கவாதம் குணப்படுத்த முடியாத நோயன்று. மருத்துவ அறிவியலின் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இஃது எளிதில் குணப்படுத்தக்கூடியதே. எனவே இந்நோய் கண்டவர்கள் மனத்தளர்ச்சியோ விரக்தியோ கொள்ளாமல் மருத்துவர் வழிகாட்டுதலின்படித் தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொண்டால் விரைவில் பூரண குணம்பெறலாம்.

எனினும், வருமுன்னர்க் காப்பது எப்போதுமே சாலச் சிறந்தது (prevention is better than cure) அல்லவா? ஆகையால் உடலுக்கும், வயதுக்கும் ஏற்ற உணவு, உடற்பயிற்சி, மரபுசார்ந்த நோய்களைக் கட்டுக்குள் வைத்திருத்தல், மனவளம் தரும் தியானம், யோகா முதலியவற்றைப் பழகுதல் என்ற முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இதுபோன்ற கொடிய நோய்கள் அண்டாமல் உடலைக் காக்கலாம். மகிழ்ச்சியோடு வாழலாம்!

***

கட்டுரைக்குத் துணைநின்ற தளங்கள்:

http://www.mayoclinic.org/diseases-conditions/stroke/diagnosis-treatment/diagnosis/dxc-20117291

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *