பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி:  உமிக்குற்றுக் கைவருந்துமாறு

 

தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற
தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்?
இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட
உமிக்குற்றுக் கைவருந்து மாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!
உமிக் குற்றுக் கை வருந்துமாறு.

பொருள் விளக்கம்:
தனக்கு ஏற்பட்டதாகவே கருதி, தன்னை அடைந்த சுற்றத்தார்க்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை தனக்கு ஏற்பட்டது போல உணர்ந்து உதவாத உறவினரால் என்னதான் ஆகப் போகிறது? தொடர்ந்து அருவிநீர் பாய்வதால் பொன் கொழிக்கும் விளைச்சல் தரும் ஈரநிலத்தைக் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, உமியைக் குற்றி கை சலித்துப் போவதை ஒத்த பயனற்ற செயல் (உதவாத உறவினரிடம் சென்று உதவி பெற நினைக்கும் செயல்)

பழமொழி சொல்லும் பாடம்: உறவினரின் துயர் களைய உதவிடாத அன்பற்ற உறவினரிடம் உதவி கேட்டுச் செல்வது கைவலிக்க உமியைக் குற்றுவதை ஒத்த வீண் செயல். எனவே ஒருவருக்கு அமையும் சுற்றம் எவ்வாறாக இருத்தல் வேண்டும் என்று விளக்க முற்படும் வள்ளுவர்,

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். (குறள்: 522)

அன்பு நீங்காத உறவினர் ஒருவருக்கு அமைந்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் பயப்பதாக அமையும் என்று கூறுகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *