திருக்குறளுக்குப் புது விளக்கம் – 15
– புலவர் இரா. இராமமூர்த்தி.
நட்பினைக் குறித்த திருக்குறள் அதிகாரங்கள் நமக்குப் பல்வகை அறிவுக் கருத்துக்களை வழங்குகின்றன! நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ்சேராமை ஆகிய அதிகாரங்களின் குறட்பாக்கள், இவற்றுடன் காதல் சிறப்புரைக்கும் காமத்துப் பால் குறட்பாக்கள் அனைத்தும் நமக்கு நட்பினைக் குறித்த அனைத்து வகை குணம் குற்றங்களை உணர்த்துகின்றன !
இவற்றுடன் நமக்குத் தேவையான சிறந்த பொது அறிவுக் கருத்துக்களையும் வழங்குகின்றன! நட்பினை பற்றி விதிமுகத்தான் ஐந்து அதிகாரங்களும், பகை பற்றி எதிர்மறை முகத்தான் பன்னிரண்டு அதிகாரங்களும் வள்ளுவரால் பாடப்பெற்றன! இவற்றில் பொறுக்கப் படாத குற்றம் உடையவரது நட்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. நட்பாராய்தல் அதிகாரத்தில் பேதையார், அல்லற்கண் ஆற்றறுப்பார், கெடுங்காலைக் கைவிடுவார் ஆகியோர் நட்புக்கு உரியவர் ஆகார் என்கிறார் வள்ளுவர். அடுத்து தீநட்பு அதிகாரத்தில் தீய குணம் படைத்தவருடன் நட்புக் கொள்ளலாகாது என்கிறார். இந்த அதிகாரத்தில் பண்பிலார், ஒப்பிலார், உறுவது பார்ப்பவர், ஆற்றறுப்பார், அரணாகாத சிறியவர், பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார், வினைவேறு சொல் வேறு பட்டார், மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார், ஆகியோரைத் திருவள்ளுவர் இனங்காட்டுகிறார்! இவர்களைத் தவிர, இயல்பாய்ப் பகைமை பாராட்டும் மனத்துடன், அழிக்கும் வாய்ப்புக் கருதிப் புறத்தால் கூடி ஒழுகுவாரைக் ”கூடாநட்பு” என்ற அதிகாரத்தில் அடையாளம் காட்டுகிறார்!
இவ்வாறு நட்புக்கு உரியவரையும், நட்புக்குத் தகாதவரையும் ஆராய்ந்து அறிவிக்கும் திருவள்ளுவரின் பேரறிவு, நமக்குத் திகைப்பையும், வியப்பையும் உண்டாக்குகின்றன! சமூக விஞ்ஞானம் எனப்படும் மக்கள் தொடர்பின் அடிப்படையை வள்ளுவர்போல் விளக்கியோர் எவரும் இலர் என்றே கருதுகிறோம்!
இந்த நட்பின் தன்மைகளைப் பற்றிக் கூறும்போதே , வள்ளுவப் பெருந்தகை, பல்வகைப்பட்ட அறிவியல் கருத்துக்களை, எந்த ஆயாசமும் இன்றி இயல்பாகவே வழங்குகிறார்! அறிவியலின் ஒரு பகுதியாகிய இயற்பியலின் ஆற்றல் என்ற தனிப்பட்ட வகையைத் தம் ஒரு குறட்பாவில் விளக்கும் அழகு நினைந்து நினைந்து மகிழ வைக்கிறது! புவி ஈர்ப்பு விசை , கீழ் நோக்கி இழுக்கும் தன்மை படைத்தது! ஒரு விசை, கீழ் நோக்கி இயங்கும் ஆற்றலாக வரும்போது புவி ஈர்ப்பு விசையும் அதன் வேகத்தை அதிகமாக்கும்! ஆகவே கீழ் நோக்கி இயங்கும் விசை போகப் போக அதிகம் ஆகும்! விண்ணிலிருந்து மண்மேல்விழும் பொருளின் விசை அதிகரிப்பது குறித்த இயற்பியல் சூத்திரங்கள், பிற்கால அறிவியலாளர்களால் வரையறுக்கப் பட்டுள்ளன! இத்தகைய ஆற்றலின் இருவகைகளை, நிலைப்பாற்றல். (ஸ்டாடிக் ஃபோர்ஸ்), இயங்காற்றல் (கைனடிக் ஃபோர்ஸ்) என்று , நவீன அறிவியலறிஞர்கள் வரையறை செய்துள்ளனர்.
ஓர் இரும்புப் பட்டடையின் கல்மேல், பழுக்கக் காய்ச்சிய இரும்பை வைத்து, மேலிருந்து ஒரு சம்மட்டியால் விரைந்து தாக்கும் போது, மேலிருந்து தாக்கும் விசைக்கு ஈடான விசையைக் கீழிருக்கும் பட்டடைக்கல் உருவாக்கி – தாங்குவது போல் தாக்கும்!- என்ற தாக்குவிசையாற்றல் பற்றித் தமிழர் அறிந்து வைத்திருந்தனர் என்று நாம் அறிந்து கொள்கிறோம்! இந்த அறிவியலின் அடிப்படையில்தான் தாங்கும் ஆற்றல், அதாவது நிலை யாற்றல் (ஸ்டாடிக் ஃபோர்ஸ்), தாக்கும் ஆற்றல் , அதாவது இயங்காற்றல் (கைனடிக் ஃபோர்ஸ்) என்ற விசைபற்றிய அறிவியல் கொள்கை உருவாயிற்று!
புலால் உணவினை, இரும்புப் பட்டடை இட்ட அடிமரத்தில் வைத்துச் சிதைத்து வெட்டுவதை , சீவக சிந்தாமணி, ”ஊனமர் குறடு போல இரும்புண்டு” என்ற தொடரால் விளக்குகிறது! இதற்கு, இவ்வாறு உரை எழுதியவர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார்! அக்காலத்தில் ஊன் சிதைக்கும் அடிமரமும் ,’பட்டடைக் கல்’ என்று வழங்கப் பெற்றது போலும்!
இதனை மிகவும் நன்றாக அறிந்து வைத்திருந்த வள்ளுவப் பேராசான் இந்த இயற்பியல் கருத்தைக் ” கூடா நட்பு” என்ற அதிகாரத்தின் முதல் பாடலில் அமைத்திருக்கும் அழகு போற்றுதற்குரியதாகும்! ”நம்முடன் அகத்தால் கூடாமலிருந்தே, வாய்ப்பு வரும் வரை கூடியவர் போல் நடிக்கும் கீழோர் நட்பு , சீரான இடத்தைப் பெற்றால், இடையில் அகப்பட்ட பொருளை முழு வேகத்துடன் தாங்கித் தாக்கும் பட்டடை போன்று, பகை தீர்த்துக் கொள்ளும் வகையினது!” என்ற கருத்தமைந்த பாடலை அளித்துள்ளார் ! அப்பாடல் ,
”சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு” (821)
என்பதாகும்!
இத்தகைய பட்டறிவால் பெற்ற அறிவியற் கருத்துக்கள் திருக்குறளில் ஆங்காங்கே ஒளிவீசித் திகழ்வதை ஊன்றிப் படிப்போர் உணர்ந்து மகிழலாம்! அறிவியல் ஆற்றலை, நட்பின் திறத்துடன் ஒப்பிட்டுக் காட்டும் திருவள்ளுவரின் பேரறிவு நம்மை வியந்து மகிழ்ந்து போற்ற வைக்கிறது!