சு. கோதண்டராமன்

17 சமயப் பிளவு

vallavan-kanavu

வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி 
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின் 
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் 
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே

-குலசேகர ஆழ்வார்

ஆதன் உலோகக் கட்டிகளைச் சுமந்து கொண்டு தன் ஊரை நோக்கிப் புறப்பட்டான். வழியில் மகேசனைப் பார்த்துத் தகவல் தெரிவிக்கலாம் என்று தில்லைக்குச் சென்றான்.

மகேசன் இவனுடைய தொழில் பயிற்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டறிந்தான். “இங்கேயே இருந்துவிடு, உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன்” என்றான்.  ஆதன் ஒப்புக் கொண்டான்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர். அவர்களுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆடும் நிலையில் ஒரு இறை வடிவம் உருவானால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தனர். செய்தி ஊர் பூராவும் பரவியது.

தில்லைச் சோழிய அந்தணர்களில் கோவிந்த பட்டர் என்று ஒருவர் இருந்தார். அவர் சித்திரகூடம் விண்ணகரத்தில் பூசை செய்பவர். அவருக்குச் சித்திரகூட வளாகத்தில் சிவலிங்கம் வைக்கப்பட்டதில் விருப்பம் இல்லை. என்றாலும் அவருக்குச் சாதகமாகப் பேசக்கூடியவர் மிகுதியாக இல்லாததால் அவர் முணுமுணுத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார்.

ஆடற்பெருமானின் உருவச்சிலை செய்வதற்கு ஏற்பாடு நடக்கிறது என்ற செய்தி அவருக்குக் கவலை தந்தது. ‘ஏற்கெனவே ஒரு லிங்கத்தை விண்ணகர வளாகத்தில் வைப்பதற்கு அனுமதி கொடுத்துவிட்டோம். இதை இப்படியே விட்டால் விண்ணகரம் முழுவதும் இவர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள். மயானத்தாடி என்பது வேதத்தில் இல்லாதது. இந்த அவைதிகம் பரவினால் ஒரு காலத்தில் கோவிந்தராஜாவையே கடலில் தூக்கி எறிந்தாலும் எறிந்துவிடுவார்கள்’ என்று நினைத்தார். விண்ணகரத்துக்கு வருபவர்களிடம் எல்லாம் இதைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தார். சிலர் அவர் சொல்வது நியாயம்தான் என ஒப்புக் கொண்டார்கள்.

‘முன்னர் ஒரு தடவை அவைதிக மதத்தவர்கள் தில்லையை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அதனால் பிராமணர்கள் எல்லாரும் நாட்டை விட்டே ஓட வேண்டியிருந்தது. மூன்று தலைமுறைகளுக்குப் பின் இப்பொழுதுதான் திரும்ப வந்திருக்கிறோம். இனி ஒரு முறை இந்த அவைதிகம் தலைதூக்க இடம் கொடுக்கக் கூடாது. முளையிலேயே கிள்ள வேண்டும்’ என்றனர்.

கோவிந்த பட்டர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருந்தார்கள். “எது ஐயா அவைதிக மதம்? வேத ருத்ரன்தான் சிவன். அவரே ஆடற்பெருமான்” என்றனர்.

ஊர் பூராவும் இதே பேச்சு. கோவிந்த பட்டருக்குச் சாதகமாகச் சிலரும் எதிர்ப்பாகச் சிலரும் அணி திரண்டனர். ஆங்காங்கு வாதப் பிரதி வாதங்கள், பூசல்கள், கைகலப்புகள் ஏற்பட்டன. இது நாள் கணக்கில் தொடர்ந்தது.

ஒரு நாள் கோவிந்த பட்டர் தன் ஆதரவாளர்கள் விண்ணகரத்தில் கூடியிருக்கும் போது கர்ப்பக்கிரகத்தின் மேல்தளத்தில் நின்று கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “நாம் உயிரைக் கொடுத்தாவது நமது சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவோம் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும். நாராயணனே வேதப் பிரதிபாத்யமான தெய்வம். இது சத்தியம்” என்று சொல்லிக் கொண்டே யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்து தலைகீழாக விழுந்தார். மண்டை சிதறி உயிர் துறந்தார். கூட்டம் திகைத்து நின்றது. அடுத்த கணம் அவர்களிடம் ஒரு வெறி கிளம்பியது. ‘நானும் உயிர் விடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு சிலர் மேலே ஏறினார்கள். மற்றவர்கள் அவர்களைத் தடுத்து, ‘கோவிந்த பட்டரின் லட்சியத்தை நிறைவேற்ற நாம் உயிருடன் இருந்தாக வேண்டும்’ என்பதை நினைவுபடுத்தினர்.

பட்டரின் மரணம் ஊரில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது, மக்கள் ஆடற்பெருமானின் ஆதரவாளர், எதிர்ப்பாளர் என இரண்டு அணிகளாகப் பிரிந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வெவ்வேறு அணிகளில் போய்ச் சேர்ந்தனர்.  பழம் தமிழ்ச் சமயம் சைவம் வைணவம் என இரண்டாகப் பிளந்தது.

இந்தச் சூழ்நிலையில் இங்கு இருந்துகொண்டு சிலை வடிப்பது சாத்தியம் இல்லை என்று மகேசன் கருதினான். கொள்ளிடம் தாண்டி அக்கரையில் சிவலிங்க வழிபாட்டாளர்கள் நிறைய இருக்கிறார்கள், அங்கு போய்விடலாம் என்று ஆதனுடன் கிளம்பினான். அவர்களுடன் மேலும் ஐம்பது இளைஞர்கள் வந்தார்கள். எல்லோரும் காழியை நோக்கிப் புறப்பட்டனர்.

அரசருக்கு ஒற்றர் மூலம் இந்தச் செய்தி கிடைத்தது. ஆடற்பெருமான் விஷயம் மக்களிடையே இவ்வளவு கலவரத்தை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பாராதால் மிகுந்த வருத்தம் அடைந்தார். அதற்காக சிலை வடிக்கும் வேலை தடைபடக்கூடாது என்று விரும்பினார். தில்லையிலிருந்து வருபவர்களுக்குத் தேவையான உணவு அளிக்க ஏற்பாடு செய்யுமாறும் வீடு கட்டித் தருமாறும் காழி ஊர்த்தலைவருக்கு உத்திரவிட்டார். காழி நகருக்குக் கிழக்கே கடல் பின்வாங்கியதால் ஏற்பட்ட புதிய நிலம் புல் பூண்டு முளைத்து இருந்தது. அங்கு தில்லையிலிருந்து வந்தவர்களுக்குக் கூரை வீடுகள் கட்டப்பட்டன.

தில்லையில் ஏற்பட்ட பிளவு நாடு முழுவதும் பரவியது. சைவத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையே ஆங்காங்கு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. சமய அடிப்படையில் குடும்பங்கள் உடைந்தன. ஒரே குடும்பத்தில் அண்ணன் ஒரு கட்சியும் தம்பி ஒரு கட்சியுமாயினர். தந்தை ஒரு பக்கமும் மகன் ஒரு பக்கமுமாக இருந்த நிலை பல இடங்களில் காணப்பட்டது. இது பிராமணர்களிடையே மட்டும்தான் இருந்தது. மற்றவர்கள் ‘பிராமணர்கள் வேதத்தைப் பற்றி என்னவோ சண்டை போட்டுக் கொள்கிறார்கள், நமக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று இருந்தனர்.

மயிலாடுதுறைக்குக் கிழக்கே பறியலூர் (பரசலூர்) என்ற ஊரில் தக்கன் (தட்சன்)* என்றொரு செல்வந்தர். அவர் சிவன் வேத தெய்வம் அல்ல என்ற கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஒரு முறை வேள்வி செய்ய விரும்பினார். அதில் வழக்கமாக அவிர்ப்பாகம் பெறும் தெய்வங்களான இந்திரன், அக்னி, விஷ்ணு ஆகியோருக்கு ஆகுதி அளிக்க ஏற்பாடு செய்தார். அவரைச் சூழ இருந்தவர்கள் சிவனுக்கும் அவிர்ப்பாகம் கொடுக்க வேண்டும் என விரும்பினர்.  சிவன் என்றொரு தெய்வம் வேதத்தில் இல்லை என வாதாடினார் அவர். ருத்ரன்தான் சிவன் என்றனர் இவர்கள். ருத்ரன் என்றால் அவருக்குக் கடைசியாக மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் அதைத்தான் கொடுக்க வேண்டும் என்று சதபத பிராமணம் கூறுகிறது. எனவே கடைசியாகப் பார்க்கலாம் என்றார் அவர். சைவ வாதிகளோ விஷ்ணுவுக்கு உள்ள மரியாதை சிவனுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்றனர்.

அவரது பெண் சதி தேவியும் மாப்பிள்ளையும் சைவ வாதிகள். தான் சொன்னால் தன் தந்தை ஒப்புக் கொள்வார் என சதி நினைத்தாள். தட்சன் அதற்கும் மசியவில்லை. அவள் அவமானப்படுத்தப்பட்டாள். உடனே அவள் யாகத் தீயில் குதித்து உயிர் விட்டாள். சைவ வாதிகள் வெறி கொண்டு எழுந்தனர். அவர்களில் வீரபத்திரன் என்பவர் யாகத் தீயை அணைத்து, மட்பாண்டங்களை உடைத்து யாகத்தை அழித்தார். யாகத்தில் பங்கு கொண்டவர்கள் யாவரும் தாக்கப்பட்டனர். தக்கன் தலை அறுபட்டுக் கீழே விழுந்தார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் ஆங்காங்கு நடைபெற்று வந்தன.

ஒரு நாள் தில்லைச் சைவ அந்தணர்கள் ஊர் எல்லையில் கூடினர். அப்பொழுது அவர்களுக்குத்  தலைமை ஏற்றவர் பேசினார்,

“ஆடற்பெருமானின் சிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சிற்பியும் அவருக்குத் துணையாக இருப்பவர்களும் இரவு பகல் ஊண் உறக்கமின்றி அதில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் வெற்றி பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

“சிலை செய்யப்பட்டு விட்டாலும் அதை இங்கே கொண்டுவருவதற்கு எதிர்ப்பு கடுமையானதாக இருக்கும். உயிரைக் கொடுத்தாவது நாம் அதை முறியடித்தே ஆக வேண்டும். அதற்காக நாம் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும்.”

“கோவிந்த பட்டர் போலவா?” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.

“அது போலத் தற்கொலை செய்து கொள்வதால் எந்தப் பயனும் விளையாது. ஆடற்பெருமானை இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யும் முயற்சியில் எதிரிகளால் கொல்லப்பட்டு உயிர் போவதானால் போகட்டும். நாமாக உயிரைப் போக்கிக் கொள்ளுதல் சாஸ்திர விரோதம், நடைமுறைக்கும் பயன்படாது.

“இந்தச் சித்திரகூட விண்ணகர வளாகத்தில் நம் அனைவருக்கும் உரிமை உண்டு. நாம் இதுவரை மலைநாட்டில் இருந்தோம். அங்கு இருப்பது போல இங்கும் ஒரு அம்பலத்தை ஏற்படுத்தி அதில் ஆடலரசனை அமர்த்தி வைப்போம். அதுவரையில் நாம் நெய், பால் ஆகிய பொருட்களைத் தவிர்த்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்போம். ஆயுள் முழுவதும் ஆடற்பெருமானுக்கே அடிமை செய்து வாழ்வோம். உங்களில் எத்தனை பேர் இந்த தீக்ஷையை எடுத்துக் கொள்வீர்கள்?” என்று கேட்டார்.

கூட்டம் முழுவதும் ஒருவர் மிச்சமில்லாமல் ‘ஓம் நமச்சிவாய’ என்றது.

“எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது எனக்கு நம்பிக்கையும் வலிமையும் அளிக்கிறது. நம்மை எதிர்ப்பவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்ட ஒரு அடையாளம் தேவை. எனவே நாம் அனைவரும் நம் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வோம்.”

“எப்படி?” என்றது கூட்டம்.

“சோழியர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் முன் குடுமி வைத்திருக்கிறோம். வடமர்கள் பின் குடுமி வைத்திருக்கிறார்கள். ஈசனைப் பற்றிய விஷயத்தில் நமக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை இருந்தாலும் ஆடற்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்போம் என்று தீக்ஷை எடுத்துக் கொண்டவர்கள் என்ற முறையில்  நாம் அவர்களிடமிருந்தும் நம்மை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். எனவே நாம் இனிக் குடுமிகளைப் பக்கவாட்டில் முடிந்து கொள்வோம்.”

‘ஓம் நமச்சிவாய’ என்று கோஷம் எழுப்பி கூட்டம் அதை ஆமோதித்தது.

தில்லை அந்தணர்கள் மேற்கு மலைநாட்டுக்குக் குடிபெயர்ந்த பிறகு சமணர்கள் சித்திரகூட வளாகத்தில் கோவிந்தராஜருக்கு வடக்கில் சுதையால் செய்யப்பட்ட ஒரு யக்ஷி உருவத்தை பிரதிஷ்டை செய்திருந்தனர். அவர்கள் சம்பிரதாயப்படி யக்ஷர்களும் யக்ஷிணிகளும் குபேர வம்சத்தைச் சேர்ந்தவர்கள், செல்வத்தைக் காப்பவர்கள். யக்ஷிணிகளில் இருபத்து நான்கு வகை உண்டு. இங்கு வைக்கப்பட்டது சாமுண்டா என்ற வகையைச் சேர்ந்தது. அச்சுறுத்தும் தோற்றம் கொண்டது.  மலைநாட்டிலிருந்து அந்தணர்கள் திரும்பி வந்து சித்திரகூட வளாகத்தைக் கைப்பற்றிய பிறகு  பழம் தமிழ்ச்சமயத்தார் அந்த யக்ஷியைக் காளி என்ற பெயரில் வணங்கலாயினர்.**

அதற்கு வடக்கில்தான் மூலநாதர் லிங்கம் வைக்கப்பட்டிருந்தது. சமணப் பள்ளிகளின் சமாதி மீது ஆலயங்கள் கட்டுவது வழக்கமாக இருந்ததால் யக்ஷிணி ஆலயத்தின் மேல்தான் ஆடற்பெருமானைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று தீக்ஷிதர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அதைக் காளி என்று சிலர் வணங்கியதால் அதை அங்கிருந்து அகற்றுவதற்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து அதைத் தீர்க்க விரும்பினார்கள்.

தீக்ஷிதர்கள் ஒவ்வொரு சாதியின் முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேசினார்கள். “காளி என்ற பெயரால் வணங்கப்பட்டாலும் இது சமண தெய்வம். அதனால் அதை இந்த வளாகத்திலிருந்து அகற்ற வேண்டும். வேண்டுமானால் நாம் ஒரு காளி விக்கிரகம் ஏற்படுத்தி ஊர் எல்லையில் வைக்கலாம். கிராமிய தெய்வங்கள் ஊர் எல்லையில்தான் இருப்பது வழக்கம்” என்று சொன்னார்கள். அது சமணர்கள் பூசித்தது என்பதை முதியோர்கள் உறுதிப்படுத்தியதால் மற்ற சாதியினர் ஒப்புக் கொண்டார்கள்.

யக்ஷிணி செல்வத்தின் காவலாளி. எனவே அதை முற்றிலுமாக மூடக் கூடாது என தீக்ஷிதர்கள் தீர்மானித்தனர். “அதன் மேலே அம்பலத்தை அமைத்து விடுவோம். யக்ஷிணி சன்னிதிக்குச் சென்று வரத் தனிச் சுரங்க வழி  ஏற்படுத்துவோம்” என்று தீக்ஷிதர்கள் தீர்மானித்தனர்.

——————————– ———————————————- ——————————————–

* தக்கன் கதை அம்மையாரால் குறிப்பிடப்படவில்லை. எனவே அம்மையார் காலத்துக்குப் பின் இது நிகழ்ந்திருக்கலாம்.

** சிதம்பரத்தில் ஆடற்பெருமானின் சன்னிதி அருகில் உள்ள ரகசியம் என்று சொல்லப்படும் இடத்தின் கீழ் ஒரு நிலவறை உள்ளது, அதன் நுழைவாயிலை அடைத்து ஒரு மண் சுவர் அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் புனுகுமாலை சாத்தப்பட்டுப் பூசை நடக்கிறது. அங்கு ஒரு காளி கோயில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது ஆ. பத்மாவதி எழுதிய சைவத்தின் தோற்றம், வை. தட்சிணாமூர்த்தி எழுதிய ஸ்ரீநடராச தத்துவம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *