Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (225)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் 2017ஆம் ஆண்டின் முதலாவது மடலுடன் உங்களிடம் மனம் திறக்கிறேன். பல எதிர்பார்ப்புகளுடன் 2017 எனும் புதிய புத்தகம் திறக்கப்படுகிறது. ஒவ்வொன்றாக இப்புத்தகத்தில் 12 அத்தியாயங்கள் எழுதப்படப் போகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் எத்தனையோ எதிர்பாராத திருப்பங்கள், ஆச்சரியங்கள் என்பன உள்ளடங்கப் போகின்றன. உலகமெங்கும் ஒரே பரபரப்பான நிலையே தென்படுகின்றன. புதிய அரசியல் தலைமைகள், புதிய அரசியல் திருப்பங்கள் எனப் பல எதிர்பாராத நிகழ்வுகள் கிளப்பிய வினாக்களின் விடையை ஆவலோடு பலரும் எதிர்பார்த்த வண்ணமே இருக்கிறார்கள். மனிதர்களின் நியாயமான ஆசைகள் எனும் இலட்சியம் பேராசை எனும் எல்லைக் கோட்டினை நெருங்கி விட்டது போன்றதோர் உணர்வினுள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

    ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது ஒன்றையே குறியாகக் கொண்டிருந்தோர் தமது ஆவல் எப்போது பூர்த்தியடையும் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனிலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவது தமது பொருளாதாரச் சூழலை எவ்வகையில் பாதிக்கப் போகிறது என்பதைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களாகத் தென்படவில்லை.  மார்ச் மாதம் முடிவடைவதற்குள் வெளியேறுவதற்கான நெறிமுறையினைச் செயல் படுத்துவேன் என்ற பிரித்தானியப் பிரதமரின் வாக்குறுதியை இறுகப் பற்றிக் கொண்டு அதன் எதிர்பார்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் ஐக்கிய இராச்சியத்தின் ஜரோப்பிய யூனியன் வெளியேற்றத்தை முற்று முழுதாக எதிர்த்துக் கொண்டிருக்கும் பகுதியினரோ ஜரோப்பிய யூனியனின் “சிங்கிள் மார்க்கெட்” எனும் வியாபாரத் தளத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் முற்று முழுதாக விலகக் கூடாது எனும் ஏக்க்கத்தோடு ஓர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் விலகுவது எனும் முடிவுக்கு மக்களைத் தள்ளியது கட்டுப்பாடற்ற வெளிநாட்டவரின் குடியேற்றம் எனும் உண்மையின் யதார்த்தத்தை ஏனோ உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் இந்த ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதரம் ஒரு தேக்க நிலையை அடையப் போகிறது எனும் எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நிலவுகிறதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

    ஐக்கிய அமெரிக்கா என்பது ஒரு தனிப்பெரும் நாடு என்பது எந்த அளவிற்கு உண்மையோ , அந்த அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவின் மாற்றங்கள் உலக நாடுகள் அனைத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுவும் உண்மையே!அத்தகையதோர் மாற்றமாகத்தான் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி மாற்றமும் அமைந்துள்ளது. அமெரிக்கா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. இன, மத வேறுபாடுகளைக் கடந்து பலகாத தூரம் சென்று விட்டது எனும் எண்ணமே பல நாடுகளில் காணப்பட்டது. ஆனால் சமீபத்திய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் பிரசாரம் மக்களிடையே பல பேத உணர்வுகளை வளர்த்து விட்டது என்பதுவே வருந்தத்தக்க உண்மையாகிறது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தமது பிரசார மேடைகளில் மிகவும் சர்ச்சைக்குரிய கோஷங்களை முன்வைத்தார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகிறது. அமெரிக்க மக்கள் மனத்தில் இருக்கும் உணர்வுகளையே தான் பிரதிபலித்ததாகவும், தனக்கு எதுவிதமான நிறவேற்றுமைப் பாகுபாடும் கிடையாது என்றும் அவர் கூறினாலும் அவரது கோஷங்களைத் தமது நிறவேற்றுமை மற்றும் இனத்துவேஷ கருத்துக்களுக்குச் சாதகமாக்கப் பல தீவிர வலதுசார அமைப்புகள் முனைந்துள்ளன என்பது உண்மையே. இத்தகைய நிகழ்வுகள் அமெரிக்காவைத் தமது தாயகமாக ஏற்றுக் கொண்டு வாழும் பல ஆசியப் பின்னணி கொண்ட மக்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இன்றைய அமெரிக்க அரசியல் வெள்ளை இனத்தவருக்கும் மர்றைய இனத்தவருக்கும் இடையிலான அரசியலாகப் பரிமளிக்கக்கூடிய ஒரு சூழல் தென்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயமே. இப்படியான பல விடையில்லா வினாக்களைத் தாங்கிக் கொண்டே 2017க்குள் நுழைகிறோம்.

    அடுத்து மற்றைய முன்னணி ஐரோப்பிய நாடுகளான பிரான்சு,ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றிலும் அரசியல் நிலைமை ஒரு நிறவேற்றுமைப் பரிணாமத்தினூடாகவே பயணிக்கிறது. பிரான்சு நாட்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 2017 என்ன முடிவை நல்கப் போகிறது என்பது மிகவும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. பிரான்சு நாட்டில் வாழும் வெளிநாட்டவர் தமது நாட்டின் கலாசாரத்தைப் பின்பற்றாமல் தாம் எங்கிருந்து புலம் பெயர்ந்தார்களோ அந்நாடுகளின் கலாசாரத்தைப் பிரான்சு நாட்டு மக்களின் மீது திணிக்க முயல்கிறார்கள் என்றும் அதனைத் தடுப்பதே தமது அரசியல் என்றும் பிரான்சு நாட்டில் மிகவும் வேகமாக முன்னேறி வரும் தலைவரான லீ பென் எனும் இனவாதக் கட்சியின் தலைவர் பிரசாரம் செய்து வருகிறார். விரும்பியோ, விரும்பாமலோ மற்றைய தலைவர்களும் இவரது பிரசாரத்துக்கு ஈடுகொடுத்துத் தாமும் வெளிநாட்டவர் மீதான பிரசாரங்களை முடுக்கி விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஜேர்மனி நாட்டின் த;லைவரான அஞ்ஞெலா மக்கேல் அவர்களுக்கெதிராகப் போட்டியிட பிரபலமான எவரும் இல்லையெனினும் அந்நாட்டில் இடம்பெறும் தீவிரவாதிகளின் தாக்குதல்களினால் அவர்மீது விமர்சனங்கள் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு மில்லியன் அகதிகளை வரவேற்கிறேன் என்று அவர் விடுத்த அழைப்பினாலேயே மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதும் இவர் மீது விழும் குற்றச்சாட்டு. இவைகளுக்கெல்லாம் முடிவாக 2017 எதைக் கொடுக்கப் போகிறது என்பது அனைவரின் மனங்களிலும் ஊசலாடும் கேள்வியாகவே இருக்கிறது.

    தமிழகத்தைப் பொறுத்த மட்டில் 2016இன் முடிவு பல அரசியல் மாற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.முன்னாள் முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவு அவரது கட்சிக்கு ஒரு புதிய தலைவரையும் அரசியல் வட்டாரங்களில் சில அதிர்வலைகளையும் கிளப்பி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். 2017ஆம் ஆண்டின் வரவோடு தி.மு.க தனக்கு ஒரு புதிய செயல் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களைத் தெரிவு செய்ததும் ஒருவகையான அரசியல் மாற்றம் என்றே கூற வேண்டும். இந்த மாற்றம் தி.மு.க வின் செயல்பாட்டில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பலவகையான மாற்றங்களையும், அவை கொடுத்த பலவகையான எதிர்பார்ப்புகளையும் தன்னுள் சுமந்த வண்ணம் 2017 பிறந்திருக்கிறது. இவ்வாண்டு இவைகளுக்கெல்லாம் விடையளிக்குமா? இல்லை தொடரும் கேள்விக்குறியாக நாம்2018இனுள் நுழையப் போகிறோமா? என்பதற்குக் காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (224)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். ஆண்டின் முடிவிலே, அடுத்தொரு ஆண்டின் ஆரம்பத்திலே எனதி 2016ஆம் ஆண்டின் இறுதி மடலினூடாக உங்களுடன் இணைகிறேன். அடுத்த மடல் உங்களோடு பேசும்போது அது புதியதோர் ஆண்டின் புதுமடலாக மலர்ந்திருக்கும் என்பதுவே உண்மையாகிறது. முடியும் ஒவ்வொரு ஆண்டும் தனக்குள்ளே அவிழ்க்காத பல முடிச்சுக்களை அடுக்கி வைத்துக் கொண்டே மறைகிறது. உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் பல உன்னத நிகழ்வுகளைத் தன்னுள்ளே தாங்கிக் கொள்கிறது. தொட்ட பல மைல் கற்களையும், ஏக்கங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கும் பல நிறைவேறாத எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டினை உதைத்துச் சரித்திரம் எனும் ஆழியினுள் தள்ளிக்கொண்டே அடுத்த ஆண்டு பிறக்கிறது. புதிய உத்வேகம், புதிய எதிர்பார்ப்புகள், புதிய முனைப்போடு எதிர்கொள்ளும் காலச் சவால்கள் என அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டு புதிய ஆண்டினுள் நாம் நுழைகிறோம்.

    2017 எனும் ஆண்டு நான் வாழும் இந்த ஐக்கிய இராச்சியம், உலக நாடுகள் என அனைத்திலும் பல மாற்றங்களை எதிர்நோக்கிக் கொண்டே பிறக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இலக்கு, ஒவ்வோர் எதிர்பார்ப்பு, ஒவ்வோர் இலட்சியம் என பலதரப்பட்ட எண்ணங்களைத் தாங்கிக் கொண்டே நாம் வரும் புது ஆண்டினை எதிர்கொள்கிறோம். இவைகளில் நாம் எதிர்பார்த்தவைகள் எத்தனை நிறைவேற்றப்படப் போகின்றதோ அறியேன். ஆனால் நிச்சயம் எமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அல்லது அதிர்ச்சி தரக்கூடிய மாற்றங்கள் நிச்சயம் அடுத்த ஆண்டில் நிகழத்தான் போகின்றது. நிகழும் அம்மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றை எமக்கு அனுகூலமானவைகளாகவும், எமது வாழ்வை மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் வாழக்கூடியதாகவும் அமைத்துக் கொள்ளும் வல்லமை எமக்கு எந்த அளவில் இருக்கிறது என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது.

    நாமனைவரும் வரும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தாங்கிக் கொண்டு வாழும் தைரியம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் எனும் பிரார்த்தனையோடு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும், எனக்கு ஆக்கமும் ஊக்கமும் ஆதரவும் அளித்து வரும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் எனது அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    ***

    செடியொன்றில் புதுமலர்
    பூப்பது போலவே இங்கு
    ஆண்டொன்று அவனியில்
    அழகாய்ப் புலருது பாரீர்!

    நிறைவேறிய நிகழ்வுகள்
    நிகழ்வுறாக் கனவுகள் என
    நிகழ்வுகள் பலவற்றைத் தாங்கிய
    ஆண்டொன்று மெதுவாய் மறையுது!

    துடித்திடும் உணர்வுகள் எமக்குள்
    துளிர்த்திடும் உன்னத எண்ணங்கள்
    மிளிர்ந்திடட்டும் வருமிந்த இனிய
    பிறந்திடும் வருடத்தில் தோழர்களே!

    ஒவ்வொன்றாய்ப் பல வருடங்கள்
    ஓடியோடிப் புதைந்திட்டன
    தேடி நாம் ஓடிய பயணங்கள்
    தொடர்ந்தும் தேடல்களிலே

    பூக்கட்டும் பல புன்னகைப் பொழுதுகள்
    போகட்டும் வருத்திய பல நிகழ்வுகள்
    சிந்தைநிறை உள்ளங்கள் அனைத்துக்கும்
    சிறப்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    Share
  • 2016 எனும் பாதை நடந்த ஒரு வழிப்போக்கனின் அலசல்

    -சக்தி சக்திதாசன்

    காலவாகனத்தின் சக்கரம் இத்தனை வேகமாகச் சுழன்று விட்டதா ? எதோ 2016 ஜனவரி நேற்றுத்தான் ஆரம்பித்தது போன்றுள்ளது. அதற்குள்ளாகவே பறந்து சென்று டிசம்பர் முடிவில் வந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும்போது எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன், எத்தனையோ ஏக்கங்களுடன், எத்தனையோ கனவுகளைத் தாங்கியவாறு பிறக்கிறது. எப்போது அடுத்த ஆண்டு பிறக்கும் என்று எதிர்பார்க்கும் ஒரு சாரார், ஏன் தான் அடுத்த ஆண்டு பிறக்கப் போகிறதோ என்று எண்ணும் மறுசாரார் என பல்வேறு உள்ளங்களில் இருக்கும் பல்வேறு தாக்கங்களைப் பிரதிபலித்தபடியே ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிறது., ஆனால் அவ்வாண்டின் முடிவில் எதிர்பார்ப்புகளை மனத்தராசில் எடைபோட்டு பார்த்தால் அவை ஏமாற்றங்களாக மிஞ்சுவதும் சகஜமே!

    இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் 2016ஆம் ஆண்டின் ஆரம்பம் பலவிதமான எதிர்பார்ப்புகளுடனேயே ஆரம்பித்தது. ஆமாம் அன்றைய பிரதமராக இருந்த டேவிட் கமரன் அவர்களின் மனதிலும் பல எதிர்பார்ப்புகள். அவ்வெதிர்பார்ப்புகளின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை வலுவாகவே இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியத்தின் அங்கத்துவம் டேவிட் கமரன் தலமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் உள்ளே பலத்த விரிசலைப் பலகாலங்களாகக் கொண்டிருந்தது என்பதுவே உண்மை. டேவிட் கமரன் அவர்கள் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன்னரே அக்கட்சிக்குள் பலவிதமான உட்பூசல்களை ஜரோப்பிய ஒன்றியம் உருவாக்கி விட்டிருந்தது என்பதும் உண்மை.

    ஆனால் முதற்தடவையாக 2010ஆம் ஆண்டு பிரதமரான டேவிட் கமரன் அவர்களால் இவ்விடயத்தில் எதுவுமே செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் அவரது கட்சி தனியாக அரசமைக்கும் வகையில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியடையவில்லை. ஆதலால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர ஆதரவுக் கட்சியான லிபரல் கட்சியுடன் இணைந்த கூட்டரசாங்கமே அவரால் அமைக்க முடிந்தது. அதன் பக்க விளைவாக ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் கோஷமெழுப்பிய நைஜல் வெராஜ் தலைமையிலான யூகிப் (UKIP) எனும் கட்சிக்குப் பல கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.

    இந்த இக்கட்டான சூழல் பிரதமர் டேவிட் கமரன் அவர்களை 2015ஆம் ஆண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்தலில் தமது கட்சி பதவிக்கு வந்து தான் மீண்டும் பிரதமரானால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக நிலைத்திருப்பதா அல்லது வெளியேறுவதா எனும் சர்வஜனவாக்கெடுப்பை மக்கள் மத்தியில் நடத்தி அதன் முடிவுக்குத் தலைசாய்ப்பேன் எனும் கோஷத்தை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட வைத்தது. விளைவாக அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக்கும் மாறாக டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்து டேவிட் கமரன் மீண்டும் பிரதமரானார். அதுவே அவரது அரசியல் வாழ்வுக்கு 2016இல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் எண்ணியிருந்தாரா என்ன?

    இதுவே 2016இன் இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் மாபெரும் அத்தியாயமாயிற்று. தன் நாட்டு மக்கள் நிச்சயமாகத் தமது வாதத்திற்குச் செவிசாய்ப்பார்கள் எனும் நம்பிக்கையில் 2016ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் நிலைத்திருப்பதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார் அப்போதைய பிரதமர் டேவிட் கமரன். நிலைத்திருக்க வேண்டும் எனும் வாதமே வெற்றியடையும் எனப் பல கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்ட போதிலும் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக 52%  மக்கள் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஜனநாயக மரபுகளுக்கமைய தனது வாதத்தை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தனக்கு எதிரான கொள்கையைச் செயற்படுத்தும் அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் தான் இருப்பது முறையல்ல என்றுகூறிப் பிரதமர் பதவி மட்டுமன்றித் தனது பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார் பிரதமர் டேவிட் கமரன்.

    ஐக்கிய இராச்சியத்தை 52% , 48% எனும் விகிதாசாரத்தில் இந்த சர்வஜனவாக்கெடுப்புப் பிரித்து விட்டது என்றே கூறவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் “தனிச் சந்தை” (Single Market) எனும் அமைப்பிலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவது ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தை மிகவும் பின்னோக்கிய நிலை அடையச் செய்யும் எனும் பல பொருளாதார நிபுணர்களின் கருத்துப் பலரது மனங்களிலும் ஒருவகையான அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது என்பதுவே உண்மை.அதுமட்டுமின்றி இந்தச் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்கான காரணம் வெளிநாட்டவரின் கட்டுப்பாடற்ற குடியேற்றம் என்பதே பொதுப்படையான கருத்தாகிறது. இந்த சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரச்சாரங்களில் ஐக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாதிட்டவர்கள் தொடர்ந்து வெளிநாட்டவரின் குடியேற்றக் கட்டுப்பாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்ததினால் இன்று ஐக்கிய இராச்சியத்தில் இனத்துவேஷம் என்றுமில்லாதவகையில் தூண்டிவிடப்பட்டுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் கொள்கையான பல்லினக் கலாசாரத்தை சீரழிக்கத் தொடங்கியுள்ளது. இது ஐக்கியிராச்சியத்தின் அரசியல் வரலாற்றில் 2016ஆம் ஆண்டை ஒரு மிகமுக்கியமான ஆண்டாகப் பதிவுசெய்யப் போகிறது என்பதுவே மறுக்கப்படமுடியாத உண்மையாகிறது.

    2016ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி இங்கிலாந்து வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற லண்டன் மாநகர மேயரின் தேர்தல் முடிவுகளால் அமையப் பெற்றதே அந்நிகழ்வாகும். ஐரோப்பிய நாடுகளிலேயே முதன்முறையாக ஒரு நகரத்தின் மேயராக ஒரு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஆசியப் பின்னணி கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது லண்டன் மாநகரிலேயே எனும் பெருமையை லண்டன் மாநகரம் தட்டிக் கொண்டு தனது அரசியல் வரலாற்றில் அதனைப் பதிவு செய்து கொண்டது. லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் டூட்டிங் எனும் பகுதியின் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு சாதரண பஸ் சாரதியின் மைந்தனான இவர் ஒரு பட்டம் பெற்ற வழக்கறிஞனாவார். மனித உரிமை அமைப்புக்களின் சார்பில் வழக்குரைஞராகச் செயற்பட்டவர். கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான சாக் கோல்ட்சிமித் அவர்களுடன் கடும் போட்டியின் மத்தியில் சாதிக் கான் பலமான பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டினார்.

    அடுத்து 2016 உலக அளவில் கொடுத்த ஒரு பேரதிர்வளிக்கும் நிகழ்வு ஐக்கிய அமெரிக்காவின் பொதுத்தேர்தல் முடிவாகும். யாருமே எதிர்பார்த்திராத, யாராலும் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் மிகவும் அரசியல் நேரோட்டத்துக்கு முரண்பட்ட பெரிய வியாபார முதலாளியும், செல்வந்தருமாகிய டானால்ட் ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையே. இவர் அரசியல் அவதானிகளால் புரிந்து கொள்ளப்படமுடியாத ஒருவராகவே கணிக்கப்படுகிறார். காரணம் இதுவரை இவர் எந்தவொரு அரசியல் பதவியையும் கொண்டிருந்தவரல்ல. எதுவித அரசியல் அறிவோ அன்றி அனுபவமோ அற்றவர். வெற்றியளிக்கும் பல வியாபார நிறுவனங்களை நிர்வகித்த என்னால் ஐக்கிய அமேரிக்காவை ஒரு வெற்றிபெறும் நாடாக அமைக்க முடியும் என்பதே இவரது வாதம். இவரது அரசியல் கொள்கைகள் இதுவரை ஐக்கிய அமேரிக்க ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த அனைவரது கொள்கைகளுக்கும் முரண்பட்டதாகவே காணப்படுகிறது. சர்வதேச அளவில் அரசியல் நாகரீகத்தில் 2016ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாகவே தென்படுகிறது. 

    மேற்கத்திய நாடுகள் என்று கருதப்படும் மேலைநாடுகளின் இன்றைய அரசியல் போக்கு மிகுந்த மனக்கிலேசத்தை உருவாக்குகிறது. பிரான்சு, இத்தாலி, ஜேர்மனி போன்ற ஜரோப்பிய நாடுகளின் அரசியல் காட்சிகள் மிகவும் தீவிர வலதுசாரக் கருத்துக்களுடையதாக மாறுவது போன்றதோர் நிலைமை. வலதுசாரக் கருத்துக்கள் என்று சொல்லும்போது அதன் பின்னணி மிகவும் விசனத்துக்குரியதொன்றாகவே இருக்கிறது.வெளிநாட்டவரின் குடியேற்றத்துக்கு எதிரான கருத்துக்களின் அடிப்படையிலேயே இவ்வரசியல் மாற்றங்கள் நடப்பது போலத் தோன்றுகிறது. இனத்துவேஷம் எனும் உணர்வு ஐரோப்பிய நாட்டு மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றத் தலைப்பட்டுள்ளது. இந்த எண்ணங்களை வளர்த்தெடுப்பதற்கு இனத்துவேஷத்தின் அடிப்படையில் சில அரசியல் கட்சிகள் தாம் தேசிய உணர்வினை முன்னேப்பது போன்ற பாவனையில் தமது பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. மக்கள் மனதிலுள்ள ஐயங்கள் வலுப்பெறுவதற்கு வெளிநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பங்களிக்கவில்லை என்று சொல்ல முடியாது. தமது கலாசார விழுமியங்களைத் தாம் புலம்பெயர்ந்தாலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது எந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாதமோ அதேயளவில் அந்த நோக்கத்தில் தமது கலாசாரங்களை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கிறார்கள் என்று அந்நாட்டு மக்கள் எண்ணும் வகையில் செயற்பாடுகள் அமையக் கூடாது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதோர் வாதமே!

    அது மட்டுமின்றி ஜரோப்பிய நாடுகளான பிரான்ஸ் , பிரஸ்ஸல்ஸ் , மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் மதங்களின் பெயரால் நடத்தப்பட்ட மனிதப்படுகொலைகள் அந்நாட்டு மக்களின் மனங்களில் இத்தகைய செயல்களைப் புரிவோர் அகதிகள் எனும் பெயரில் தம் நாட்டுக்குள் கட்டுப்பாடின்றி நுழைவோர் எனும் எண்ணம் கொடுத்த தாக்கங்கள் அவர்களே எதிர்பார்த்திராத வகையில் இனத்துவேஷ உணர்வுகள் தலையெடுக்கக் காரணமாக இருந்திருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மையாகிறது.

    இவ்வரசியல் மாற்றங்கள் இந்நாடுகளில் எத்தகையதோர் களமாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை 2017ஆம் ஆண்டு பிரான்சு, மற்றும் ஜெர்மனி நாடுகளில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தல் முடிவுகள் பறைசாற்றும். இந்நாடுகளில் வலுப்பெற்று வரும் வலதுசார அரசியல் பிரசாரங்கள் தேர்தல் களத்தில் எண்ணியிருக்க முடியாத தீர்ப்புகளைத் தூக்கிப் போட்டுவிடுமோ எனும் கருத்து அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகின்றன. ஜரோப்பிய நாடுகளில் வாழும் மத்தியதர உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காலம்காலமாக தொடர்ந்து தம்மை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் தமது நலன்களை முன்னெடுக்கத் தவறி விட்டார்கள் எனும் கருத்தினால் முற்றுமுழுதாக ஒரு மாற்றம் வேண்டித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கிறார்கள் என்பதுவே பொதுப்படையான கருத்தாக அமைகிறது.

    இந்த 2016ஆம் ஆண்டில் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டது சிரியா நாடு என்பதும் அதன் போரினால் பாதிப்படைந்த மக்களும் என்பது மறுக்க முடியாத உண்மை. உலக வல்லரசுகள் தமது பலத்தினை நிரூபிப்பதற்கான களமாக சிரியா நாட்டினைப் பயன்படுத்துகின்றனவோ எனும் கருத்து மனதில் எழத்தான் செய்கிறது. மானிட தர்மத்தையும், மக்கள் நலன்களையும் காப்பதற்கான யுத்தங்கள் காலகாலமாக நிகழ்ந்து வந்துதான் இருக்கின்றன. ஆனால் யுத்தத்தின் வெற்றியையும், தமது நிலைப்பாடுகளையும் முதன்மைப்படுத்தி மனிதர்களின் நலனைக் கணிப்பிலெடுக்காது உலக நாடுகளின் முன்னணி நாடுகள் செயற்படுவது போலத் தென்படுகிறது. மக்கள் தமது இல்லங்களையும் தொழில்களையும் இழந்து பலர் அங்கவீனர்களாகி அயல்நாடுகளின் அகதிகள் முகாம்களில் தமது வாழ்வினை வருடக் கணக்கில் நடத்தி வருவது மனிதாபிமானமிக்க உள்ளங்களை வருந்தத்தான் செய்கிறது. இனிவரும் இப்புத்தாண்டிலாவது இந்நாடுகளில் ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்பதுவே அனைவரினது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவ்வாண்டின் அதிமுக்கிய நிகழ்வு அது தனது அரசியல் தலைவியும், முதலமைச்சருமான செல்வி டாக்டர் ஜெயலலிதா அவர்களைக் காவு கொண்டதுவே. இவ்வரசியல் அதிர்வு கொடுத்த அலைகள் இன்னும் ஓய்வில்லாமல் அடித்துக் கொண்டேயிருக்கின்றது. அடுத்து தமிழகத்தின் முன்னணி மூத்த அரசியல் விமர்சகர் திரு சோ அவர்களையும் காலம் கவர்ந்து சென்றது. இந்தியாவின் பிரதமரால் கொண்டுவரப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ரத்து எனும் அறிவித்தல் நாடுமுழுவதும் பரந்து பட்ட விவாதங்களை முன்னெடுத்து வைத்துள்ளது. இதன் பலாபலன்கள் வித்தியாசமானவர்களினால் வித்தியாசமாக விளக்கப்படுகின்றது. இதன் உண்மையான பலன்களைக் காட்டும் ஆண்டாக 2017 அமையப் போகிறது என்பதுவே நிதர்சனமான உண்மை.

    நான் பிறந்த மண்ணான இலங்கையின் அரசியல் மாற்றங்கள் இன்னும் எதிர்பார்ப்புக்களாகவே இருக்கின்றது. அமைதியும், சமாதானமும் கொண்ட சம உரிமை கொண்ட மக்களாக அவர்கள் வாழும் ஒரு நிலையை வருகின்ற 2017ஆம் ஆண்டாவது கொடுக்காதா? எனும் ஏக்கம் எனைப்போன்ற புலம்பெயர் மக்களின் மனங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

    எனது பிரத்தியேக வாழ்வில் 2016  மகிழ்வான,சோகமான, ஆச்சரியமான நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டாகவே அமைந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த எமது வருடாந்த சென்னை விஜயம் ஒரு வெறுமையானதாக அமைந்ததன் காரணம் எனக்குத் திருமணமான காலம் முதல் 2015ஆம் ஆண்டு அவர் மறையும் வரை ஒரு தந்தையாக என்னை ஆதரித்த எனது அன்பு மாமனார், எனது மனைவியின் தந்தை இல்லை என்பதுவே. அதேநேரம் எமது வாழ்வில் ஒரு புதுவரவாக, புது வசந்தமாக வந்திருக்கும் எனது பேத்தியின் வருகை இவ்வருடத்தின் நிகழ்வுகளுக்கு மகுடமாக அமைந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் அவசர வேகத்தில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. போகிற ஆண்டு கொடுத்த அனுபவத்தில் அடுத்துவரும் ஆண்டினை எமக்கு ஏற்ற வகையில் செதுக்கிக் கொள்வோம் எனும் நம்பிக்கையோடுதான் நாமனைவரும் அடுத்த ஆண்டுக்குள் நுழைகிறோம்; ஆனால் அனைத்தும் அனைவரினதும் எண்ணப்படி நடப்பதில்லையே! சில எதிர்பார்ப்புகள் எமாற்றங்களாக முடிகின்றன, சில நிகழ்வுகள் எதிர்பாராதவையாக அமைகின்றன. இதுதான் வாழ்க்கை. இதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காக எமக்கென ஒரு பாதையை வகுக்காது, திட்டங்களில்லாமல் வாழ்வது சாத்தியமாகாது. முயற்சி நம்முடையதாக, நியாயமானதாக,நேர்வழியானதாக இருந்தால் இலக்கை அடைகிறோமோ இல்லையோ எமக்கு வெற்றியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    Share
  • தேவகுமாரன் இயேசுபிரான்

     

    சக்தி சக்திதாசன்

     

    அன்னை மேரி மாதாவின்

    அன்பு மைந்தனாய் உதித்த

    தேவ மைந்தனின் நேசமிகு

    தேனமுதத் துளிகள் இனித்திடும்

     

    அகிலத்தின் அடக்குமுறைகள்

    அனைத்தையும் உடைத்தெறிய

    அன்பெனும் ஆயுதத்தை எமக்கு

    அளித்திட்ட தேவகுமாரன்

     

    நேற்றைகளின் சுமைகளிலிருந்து

    இன்றெமை காத்திட தன்னை

    சிலுவைக்கு இரையாக்கிய

    சித்தர்களுக்கெல்லாம் சித்தன்

     

    அன்றாடம் நாம்புரியும் பாவங்களை

    அன்போடு முட்கிரீடமாய் சுமந்து

    அன்பு ஒன்றே உலகின் மொழியென்று

    ஆணித்தரமாய் உணர்த்திட்ட தேவன்

     

    சுரந்திடும் உணர்வுகளில் மிதந்திடும்

    சுகந்தமான நினைவுகளை எமக்கு

    சுவைத்திடும் வகையில் புகட்டிட்ட

    சுந்தர புருஷன் இயேசுபிரான்

     

    புலர்ந்திடும் நாளைகள் புதிதாய்ப்

    பல புதுமைகளை ஈந்திட என்றும்

    நிறைந்திடும் மனதில் பொழிந்திடும்

    அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (223)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.  கிறீஸ்துமஸ் பண்டிகை jesusவாரத்தில் இம்மடலூடாக உங்களோடு உரையாட விழைகிறேன். வருடம் முழுவதும் ஓயாமல் வாழ்க்கை கொடுக்கும் உளைச்சல்களுக்கு ஒரு நிவாரணம் போல மார்கழி மாதம் வரும் இந்தக் கிறீஸ்துமஸ் பண்டிகை இந்நாட்டு மக்களுக்கு ஒரு உற்சாகத்தையளிக்கிறது. இல்லங்கள் தோறும் கிறீஸ்துமஸ் பண்டிக்கையை முன்னிலைப்படுத்தும் வகையில் சிறிய கிறீஸ்துமஸ் மரங்களை வைத்து அவற்றை மிகவும் சிறப்பான முறையில் வண்ண விளக்குகளாலும், பல வண்ணக் காகித மாலைகளாலும் அலங்கரித்து மகிழ்கிறார்கள்.

    இயேசு கிறீஸ்து அவர்களின் பிறந்தநாள் டிசம்பர் 25 என்பதைக் குறிப்பாகக் கொண்டு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழமைக்கு மாறாக இரவு 9 மணி வரை திறந்திருக்கக் காண்கிறோம். இன்றைய காலகட்டங்களிலே இப்பண்டிகைத் தினம் விற்பனைக் களமாக மாறிவிட்டதோர் நிலையைக் காண்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் பரிசளிப்பது வழமை. ஆனால் இந்தச் சம்பிரதாயம் இப்போது மாறி இப்பரிசளிப்பே இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது. அதுவும் இப்பரிசுகள் சாதாரணமாக இல்லாமல் மிகவும் விலையுயர்ந்த பரிசுகளை எதிர்ப்பார்க்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

    இப்பண்டிகையின் அடிப்படை நிலைப்பாடு என்ன ?  “அன்பு” ஒன்றே உலகில் பிரதானம் என்பதையே தனது குறிக்கோளாகக் கொண்ட இயேசுநாதர் அவர்களின் பிறந்தாளின் அடிப்படை ஆதாரம் அன்பு என்பதை அடியோடு மறந்து விட்டோமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. கிறீஸ்துமஸ் மரங்களை அலங்கரித்துக் கொண்டாடும் வழமையின் பின்னணி என்ன? என்று சிறிது அலசினேன். மிக வியத்தகு விடயங்கள் வெளிப்பட்டன. பழங்குடி மக்கள் எப்போதும் வாடாது இருக்கும் பச்சை மரங்களைப் போற்றினார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வட துருவத்தில் , டிசம்பர் 21ஆம் திகதியே மிகவும் குறைந்த நீளமுள்ள நாள் என்று கணிக்கப்படுகிறது, அன்றைய விஞ்ஞான அறிவு குறைந்த காலத்தில் இத்தினமே சூரியன் தனது அதிக சக்தியை இழந்த நாளாகக் கருதினார்களாம். இதன் பின்பு நாளின் நீளம் அதிகரிப்பதால் சூரியன் மெதுவாக நலம் பெறத் தொடங்குவதாகக் கருதினார்களாம். அத்தினத்தை ஒட்டிய தினங்களில் எப்போதும் தனது பசுமையை இழந்து விடாமல் இருக்கும் செடிகளையும், மரங்களையும் கெளரவித்தார்களாம்.

    இன்றைய கிறீஸ்துமஸ் மர அலங்காரங்கள் 16ஆம்
    நூற்றாண்டில் அன்றைய ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். tree1அலங்கரிக்கப்பட்ட பச்சை மரங்களை இல்லங்களுக்குள் வைக்கும் பழக்கம் இவர்களால் ஏற்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்பழக்கம் அதன் பின்னாலேயே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  அன்றைய இராணுவத் தளபதிகளான வில்லியம் ப்ராட்போர்டு, ஒலிவர் குரோம்வெல் என்பவர்கள் இத்தகைய பண்டிகைகளை எதிர்த்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1659ஆம் ஆண்டு “மசேசுட்ஸ்” (Massachusetts ) எனும் நகரில் டிசம்பர் 25ஆம் திகதி தேவாலயத்தில் நடத்தப்படும் பிரார்த்தனைகளைத் தவிர வெளியே நடைபெறும் எத்தகைய பண்டிகைகளும்,விழாக்களும் குற்றமாக அறிவிக்கப்பட்டது.

    1846ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அன்றைய மகாராணியான விக்டோரியா மகாரணியும் அவரது கணவரும் பிள்ளைகளும் அலங்கரிக்கப்பட்ட கிறீஸ்துமஸ் மரத்தினருகே நிற்கும் படம் பத்திரிகைகளில் வெளியானது. மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த மகாராணியாரால் கொண்டாடப்பட்ட இப்பழக்கம் ஏனைய சமுதாயத்தினிடையே வேகமாகப் பரவியது. அதன் பின்னரே இக்கிறீஸ்துமஸ் மர அலங்கரிப்புகள் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பெருமளவில் கலாசாரமாக்கப்பட்டது.

    இன்று இக்கிறீஸ்துமஸ் பண்டிகையானது புலம்பெயர் மக்கள் மத்தியில் அதுவும் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வேற்று மதக் கலாசாரமாக இருந்தாலும், ஊரோடு ஒத்து வாழ் எனும் பழமொழிக்கேற்ப இந்து மதத்தைச் சார்ந்தவர்களும் இவ்விழாக்களில் பங்கேற்கிறார்கள். இதுகூட ஒருவகையில் கலாச்சாரப் புரிந்துணர்வுக்கு வழிவகுக்கிறது என்று சொல்லலாம்.

    எந்த விழாவை எந்தக் காரணத்திற்காகக் கொண்டாடினாலும் அன்பு, சமாதானம், அமைதி என்பவற்றை முதன்மைப்படுத்தி மனிதாபிமானம் ஒன்றே மனிதர்களுக்குத் தேவையான முக்கியப் பண்பு என்பதை ஏற்றுக் கொண்டால் அதுவே சிறந்ததோர் ஒற்றுமையான வாழ்வுக்கு அத்திவாரம் அமைக்கும் என்பதுவே உண்மையாகிறது.

    உங்கள் பாவங்களை எல்லாம்
    நானே சுமக்கிறேன் என்றான்
    மனிதகுலத்தின் மாபெரும்
    பெருந்தகையாளன் தேவமைந்தன்

    முள்ளில் ஓர் கிரிடம்
    முதுகிலோர் சிலுவை அறைந்து
    உண்மையை மெளனிக்க வைக்க
    உன்மத்தர் செய்த சித்திரவதைகள்

    அறியாமல் செய்கின்றார் மூடர்
    ஆண்டவரே அவரை மன்னித்து விடும்
    அன்பின் புதல்வன் அன்போடு வேண்டினான்
    அண்டசராசரத்தின் ஆண்டவனிடத்தே

    தம்மைத் தாமே அறிந்திட வேண்டித்
    தன்னைத் தானே மெழுகாய் உருக்கிய
    தனியொரு தேவ மைந்தன்
    தவப்புதல்வனாய் மண்ணில் உதித்திட்டான்

    நல்லதோ மக்களாய் நாளும் வாழ்ந்து
    நன்மைபல புரிந்திட்டே வையகத்தில்
    வேதநாயகன் இயேசு உரைத்திட்ட
    அருள்மொழிகளை உள்ளத்தே நிறுத்திட்டு

    நத்தார் புனிததினமதில் அனைவரும்
    நலமாய் வாழ்ந்திட அன்பு வாழ்த்துக்கள்
    அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
    புனித நத்தார் வாழ்த்துக்கள் ஆயிரம்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (221)

    என் இனிய அன்புள்ளங்களே!

    vardahஅன்பான வணக்கங்களுடன் உங்கள் முன்னே அடுத்தொரு மடலுடன் உள்ளம் திறக்கிறேன். உள்ளம் திறக்கிறேன் என்பதை விட எனது தமிழகத்து உறவுகளின் உள்ள உறுதியை நினைந்து வியக்கிறேன் என்று சொல்லுவதே பொருத்தமானது. கலதேவனின் கரங்களில் உருட்டி விளையாடப்படும் பந்தெனப் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துத் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றிவரும் உறவுகளின் உள்ளத்துணிச்சல் அலாதியானது. பணத்தாள்களின் மாற்றத்தினால் வந்த நிதிநிலைத் தாக்குதலுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, அரசியல் சூறாவளியென முதலமைச்சரை இழந்து ஒரு அரசியல் தலைமை வெற்றிடத்தில் சிக்கி மீள முயற்சிக்கையில் “வர்தா” எனும் பெயரில் ஒரு பாரிய புயலின் மூலம் சென்னையை ஒரு மூன்று நாட்கள் முடக்கிய ஒரு இக்கட்டான சூழல். இத்தனையையும் தாங்கித் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றிவரும் உறவுகளின் தீரம் ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

    இன்றைய உலகம் முழுவதுமே ஒரு ஸ்திரமற்ற நிலையை நோக்கி அவசர வேகத்தில் ஓடுவது போன்றதொரு நிலை தென்படுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் அதுவும் குறிப்பாகச் சிரியா நாட்டில் ஏற்படும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் அதனை நோக்கிய சர்வதேச உலகின் அலட்சிய போக்கும் உள்ளத்தின் ஓரத்தில் ஓரளவு கிலேசத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

    ஒவ்வொருநாடும் தமது செயற்பாடுகளின் தாக்கம் தமது நாட்டின் மக்களின் அபிப்பிராயத்தை உள்வாங்கியே நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஆனால் அம்மக்களின் மனதில் உணர்வுகளை நிலைப்படுத்த அவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதிகள் எத்தகைய வாதங்களை முன்வைக்கிறார்கள் என்பதும் அங்கே முக்கியமாகிறது. ஆனால் கடந்தகாலங்களில் இங்கிலாந்து அந்நியநாடுகளில் நடைப்பெற்ற போர்களில் தம்மை ஈடுபடுத்தியதின் பின்னால் உள்ள நோக்கங்களில் உள்ள சுநயலத்தின் விகிதம் எவ்வளவு எனும் விவாதம் கொடுத்த வில்லங்கங்களின் விளைவாக அடுத்தநாடுகளின் உள்நாட்டு யுத்தங்களுக்குள் தமது படைகளை ஈடுபடுத்துவதை மக்கள் முற்றாக விரும்பவில்லை.

    இங்கிலாந்தின் சமீபத்திய “ப்ரெக்ஸிட்” சர்வஜன வாக்கெடுப்பின் முடிவும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவும் எமக்கு ஒன்றைத் தெளிவாக விளக்குகின்றது. அதாவது இன்றைய மேலைதேய நாடுகள் தமது பரந்துபட்ட விசாலமான உலகளாவிய பார்வையினின்றும் விலகித் தத்தமது நாடுகளின் நலனை மட்டும் உள்ளடக்கிய உள்நோக்கிய பார்வையை முதன்மைப்படுத்தும் மனப்பாங்குடைய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுவே இன்றைய பல நாடுகளின் சமுதாயமாகக் காண்கிறோம். அதன் விளைவே இன்றைய பல இக்கட்டான சூழ்நிலைகளில் பலநாடுகள் தலையீடு செய்யாமல் ஒதுங்குவதற்கான காரணமாகின்றது. இன்றைய உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் தெறிக்கும் வினாக்கள் பல விடையின்றித் தவிக்கின்றன. எதிர்காலத்தை நோக்கி நடைபோடும் இன்றைய சர்வதேச சமூகங்கள் பண்டைய காலத்துச் சமூகங்களை விட முற்றிலும் மாறுபட்டவை. அன்றைய சமுதாயங்களில் இன்றைய சமுதாயங்களில் காணப்படும் அளவுக்கு கலாசாரக் கலப்புக்கள் காணப்படவில்லை. வளர்ச்சியான காலகட்டங்களில் ஒரு முன்னேற்றப் பாதையாக,இக்காலாசாரக் கலப்புகள் உருவாக்கிய பல்லினக் கலாச்சாரம் ஒரு நாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.

    ஆனால் இன்றோ ?

    உலகநாடுகள் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் புதைந்திருக்கும் ஒரு காலகட்டம். அன்றைய வல்லின நாடுகளாகக் கருதப்பட்ட நாடுகளின் முக்கியத்துவம் குறைந்து விட்ட நிலை, அன்று வல்லின நாடுகளில் தங்கியிருந்த பல பின்புல நாடுகள் இன்று பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கின்ற ஒரு நிலை. இத்தகைய நிலையில் பொருளாதாரச் சிக்கல்களினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் இப்பல்லினக் கலாச்சாரத்தை காரணமாகக் கொள்வதும், தமது அரசியல் கொள்கைகளின் பலவீனங்களை மறைப்பதற்காகவும்,தேர்தல்களில் தம்மை முன்னிலைப் படுத்துவதற்காகவும் இக்காரணத்தை முன்வைத்துப் பிரசாரம் செய்யும் பல சுயநலவாதிகளின் அரசியலினால் இன்று இந்த நாடுகள் பல ஒருவிதமான இனத்துவேஷ உணர்வுகளுக்குள் தம்மையறியாமல் இழுத்துச் செல்லப்படுகிறார்களோ எனும் ஒரு ஜயப்பாடு எழுகிறது.

    இத்த்கைய ஒரு சூழலில் அந்நியதேசத்தை எமது நிரந்தர நாடுகளாகவும், நாம் அதன் பிரஜைகளாகவும் மாறிவிட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் காலத்தை மிகவும் அவதானிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம். எமக்கும் எமது தமிழகத் தொப்புள்கொடி உறவுகளின் உறுதியும், துணிச்சலும் வேண்டும் என வேண்டிக்கொள்வோம்.

    மீண்டும் அடுத்த மடலுடன்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    ***
    படத்துக்கு நன்றி: இந்தியா டுடே

    http://indiatoday.intoday.in/story/cyclone-vardah-havoc-pictures-tamil-nadu/1/832736.html

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(221)

    அன்பினிய வாசக நெஞ்சங்களே!

    அன்பான வணக்கங்களுடன் ஒரு துயரமிகுந்த வாரத்திலே உங்களுடன் மனம் திறக்கிறேன். காலதேவனின் சக்கரச் சுழற்சி கொடுத்த தாக்கத்திலிருந்து தமிழக மக்கள் இன்னும் விடுபடாத
    %e0%ae%9c%e0%af%86ஒரு நிலை. தமிழகத்தின் தலைவியாய் கோலோச்சி வந்த , “அம்மா” என்று அனைவராலும் பாசத்தோடு அழைக்கப்பட்ட”புரட்சித் தலைவி ” செல்வி டாக்டர் ஜெயலலிதா அவர்கள் இயற்கையோடு சங்கமாகி விட்ட நிகழ்வு அனைவரது நெஞ்சத்திலும் ஒரு தீராத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. பிழைப்பாரா? மாட்டாரா? என்று தவித்துக் கொண்டிருந்த நெஞ்சங்களில் ஓடிய உணர்வலைகளின் பிரதிபலிப்பை பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு தொலைக்காட்சி மூலமாகத்தான் பார்க்க முடிந்தது. மக்கள் தமது குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போலத் தவித்த காட்சிகள். ஒரு நாட்டின் தலைவியாக மட்டுமல்லாமல் ஒவ்வொருவரது வீட்டின் தலைவியாகவும் வீற்றிருந்தவர் செல்வி ஜெயலலிதா என்பதைத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்தது.

    பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளை
    ஓட்டுமொத்தமாக “கண்ணாடிக் கூரை அதாவது ஆங்கிலத்தில் glass ceiling” என்பார்கள். இதன் அர்த்தம் உச்சி தெரியும் ஆனால் அதை எட்டிப்பிடிக்கjayalalithaa சமுதாயத்தில் பெண்கள் என்பதால் பல தடைகள் முட்டுக்கட்டையாக உள்ளது என்பதுவே ! ஆனால் அந்தக் கண்ணாடிக் கூரையை உடைத்துச் சிகரத்தைத் தொட்ட சில பெண்களில் செல்வி ஜெயலலிதா என்று கூறுவது மிகையாகாது. நேற்றைய பல தொலைக்காட்சிச் சேவைகளிலும், ஊடக அறிக்கைகளிலும் அவர் “இரும்பு மனுஷி, iron lady“ என்று விவரிக்கப்பட்டார். அவர் தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தைத் தொடுவதற்கு பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது யாராலும் மறுக்கப்பட முடியாதது. ஆசியாவில் இதுவரை நாட்டின் தலைவர்களாக சில பெண்கள் இருந்தார்கள் அவர்கள் அனைவரை விடவும் செல்வி ஜெயலலிதா ஒருவகையில் மேம்பட்டவர் என்று சொல்லலாம். எப்படி என்கிறீர்களா ?அவர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் பின்னணி இருந்தது.

    உதாரணமாக சிறீமாவோ பண்டாரநாயக்கா , அன்னை இந்திராகாந்தி, பாகிஸ்தான் முன்னைநாள் தலைவி பெனிசீர் பூட்டோ , இவர்கள் அனைவரும் அரசியல் பின்னணியில் வளர்ந்தவர்கள். ஆனால் ஜெயலலிதாவோ சாதாரண கலைக்குடும்பத்து பின்னணியில் இருந்தது தானகவே தன்னை வளர்த்துக் கொண்டவர். தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான உரத்தைத் தான்தேடித் தனக்கு ஊட்டிக் கொண்டவர். எதிர்ப்புகள் எத்தனை வந்திடுனும் தளராத மனத்துடன் அடுத்த கட்ட நகர்வை நோக்கித் தனது திட்டத்தைத் தீட்டும் வல்லமை கொண்டவர்.

    எத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண்ணினாலும் வாழ்வினில் ஒரு தூய இலட்சியத்தை வளர்த்துக் கொண்டால் அதன் சிகரத்தைத் தொடமுடியும் எனும் நம்பிக்கை அனைவரது மனங்களிலும் துளிர்ப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர். இன்றைய மேலைநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் பிரபலமான அரசியல்வாதிகளுக்கும், அவர்கள் காட்டும் அரசியல் பாதைக்கும் எதிரான ஒரு நிலைப்பாட்டை மக்கள் எடுப்பது போன்ற ஒரு காலகட்டத்தில், ஒரு அரசியல்வாதியால் மக்களின் மனதில் இத்தகைய உயரிய இடத்தைப் பிடிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார் செல்வி ஜெயலலிதா. அரசியல் என்பது அரசியல்வாதிகளின் பணி, அதற்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது எனும் கருத்தை மாற்றி அரசியல் எனும் இந்த அரங்கில் சரியான வகையில் செயல்பட்டு வாழ்வின் அடித்தட்டு மக்களுக்கு ஏற்ற திட்டங்களைச் செயற்படுத்தினால் மக்களின் உணர்வுபூர்வமான மதிப்பை பெற்றுவிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டிச் சென்றுள்ளார் செல்வி ஜெயலலிதா.

    இவ்வுலகத்தின் கசப்பான உண்மை ஒன்று. ஒரு மனிதனின் நல்ல பல பண்புகள் அவன் இவ்வுலகை விட்டு மறையும்போதுதான் பேசப்படுகிறது. அதேவகையில் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அவரைப் பற்றிய பதிவுகளில் அவரின் பல தனிப்பண்புகள் வெளிவந்திருக்கின்றன. அவரது இல்லத்தில் அவர் 10000 புத்தகங்களுக்கு மேல் வைத்திருந்தார் என்பதும், பலவகையான புத்தகங்களைப் படிப்பது அவரது பழக்கம் என்றும் அறியும்போது வியப்பாக உள்ளது. அது மட்டுமின்றி அவர் ஒரு எழுத்தாளர் என்பது எனக்கு ஒரு புதுச் செய்தியாக இருந்தது. துக்ளக் பத்திரிகையில் “எண்ணங்கள்” எனும் தலைப்பில் கட்டுரை எழுதியவர். அக்கட்டுரைகளை அவர்தான் எழுதியது என்பதைத் திரு சோ. அவர்கள் பல காலங்களுக்குப் பின்னால் கூறியுள்ளார். அது தவிர சில நாவல்களும் எழுதியதாகக் கேள்விப்பட்டதுண்டு.

    இவரது திறமையை நன்கு மதிப்பிட்டார் புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் அவர்கள். தனக்குப் பின்னால் தனது கட்சியை முன்னேற்றக்கூடிய திறமை வாய்ந்தவர் என்பதனால் இவரை அதிமுகவில் முன்னிலையில் நிறுத்தினார் புரட்சித் தலைவர். ஈழத்துத் தமிழ்மக்களின் இன்னல்களை நன்கு உணர்ந்திருந்தார். ஈழத்துத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இவரது மறைவு தமிழ்பேசும் மக்கள் அனைவரினது இதயங்களிலு,ம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய தேசிய அளவில் பெயர் பெற்ற ஒரு உயரிய தலைவராகத்தான் செல்வி ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசத்தின் பல பாகங்களிலும் இருந்து பல அரசியல் தலைவர்கள் வந்து குவிந்தது ஒன்றே இதற்குச் சாட்சியாகிறது. அரசியல் நாகரீகம் என்பது அழகாய் நிலைநிறுத்தப்படுமளவிற்கு இவரது அரசியல் ஆதிக்கம் இவரை விமர்சித்த எதிர்க்கட்சியாளர்கள் மனதிலும் ஒரு நன்மதிப்பை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பது நிரூபணமாகியிருக்கிறது. கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி என அனைவரும் இவரது அரசியல் திறமையையும், அற்புதத் தைரியத்தையும் பாராட்டி இரங்கல் உரையளித்தது இவரது ஆழ்ந்த அரசியல் அறிவுக்கும், அனுபவத்திற்கும் சான்றாகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அடுத்தடுத்து இரண்டுமுறை தொடர்ந்து வெற்றியீட்டி தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய பெருமை இவரையே சாரும். இன்று தமிழகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை நிறுவி இந்தியாவின் ஒரு முக்கிய கேந்திர நகரமாக சென்னை மாறுவதற்கு இவர் கொடுத்த ஸ்திரமான அரசியல் நிலைப்பாடு ஒரு காரணம் என்று கூறலாம்.

    இதே வாரம் இவரது இறுதிச்சடங்குகள் முடிந்த மறுநாள்%e0%ae%9a%e0%af%8b-%e0%ae%9c%e0%af%86 காலை இவர் மீது அன்பும், பாசமும் கொண்ட மூத்த அரசியல் விமர்சகர்,எழுத்தாளர் திரு சோ அவர்கள் இவ்வுலகத்தை விட்டுச் சென்றது அடுத்த துயரமிகு செய்தியாக எமது காதுகளில் விழுந்தது. பண்பட்ட, நேர்மையான , துணிச்சலான ஒரு தார்மீக பத்திரிகைவாதி திரு.சோ அவர்கள். தனது மனத்தில் பட்டதை ஒளிக்காமல் அப்படியே எடுத்துக்கூறும் பண்பினில் திகழ்ந்தவர் திரு.சோ அவர்கள். அவரது நகைச்சுவைப் பாணி தனித்துவமானது. பூடகமாக அரசியல் கருத்துகளைத் தனது நகைச்சுவை கலந்து அளிக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர் திரு.சோ அவர்கள்.

    மறைந்த இவ்விருவருக்கும் எனது அன்பு கலந்த அஞ்சலிகளை செலுத்திக் கொள்வதோடு அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (220 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பல கோடிகளுக்கு அதிபதியான செல்வந்தர் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தன்னிடம் கோடி, கோடியாகக் கொட்டிக்கிடக்கிறது எனும் இறுமாப்பில் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் சஞ்சலமில்லாமல் தனது இருப்பில் இருக்கும் பணத்தைக் கண்மூடித்தனமாகச் செலவு செய்து வருகிறார். தன் கையிருப்பிலிருக்கும் செல்வம் குறைவற்றது; ஆழியைப் போன்று அடிகாணமுடியாதது. எனவே தனது கண்மூடித்தனமான செலவீனங்கள் எதுவித பாதிப்பும் ஏற்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்துக் கொண்டு வாழ்கிறார். ஆனால் நிதி நிலைமைகள் பற்றிய நன்கு அறிவுபெற்ற அறிஞர்கள் இப்போது அவர் தனது செலவீனங்களைக் கட்டுபடுத்தி வாழாவிட்டால் விரைவில் அவரது நிதிநிலைமை சீர்செய்ய முடியாத அளவுக்கு மோசமாகிவிடும் என்று அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் அச்செல்வந்தரோ அவர்களைப் பொருட்படுத்தாமல் இதுவெல்லாம் வீண்புரளியைக் கிளப்பும் ஆதாரமற்ற செய்திகள் என்று கூறி அனைத்தையும் புறக்கணித்து நடக்கத் தலைப்படுகிறார்.

    மேலே குறிப்பிட்டது ஓர் ஒப்பீட்டுக்காகக் கூறப்பட்ட ஒரு புனைவுச் சம்பவமாகும்.  ஆனால் அப்புனைவுச் சம்பவத்தின் பல நிகழ்வுகள் எமது இன்றைய வாழ்வின் நடைமுறைகளுக்கு உதாரணமாகத் திகழ்கிறது. இப்பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் அதிலே நடமாடும் உயிரினங்களின் உற்பத்திக்கும் காரணம் விஞ்ஞானத்தினால் ஓரளவு விளக்கப்பட்டிருக்கிறது. தனது தோற்றத்திலிருந்து பலவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இவ்வுலகம் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

    காட்டினிலே வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் இன்று நவீன வசதிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே உலகின் ஒரு பகுதியில் மனிதன் இன்னமும் அதே முன்னேற்றமில்லாத, வசதிகளற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பது மறுக்கப்படமுடியாத உண்மை. இந்த மாறுதல்களின் காரணம் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சி என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்குப் பல விஞ்ஞான வளர்ச்சியின் கூலியாக உலகின் இயற்கை வளங்களின் அழிவும் நிகழ்ந்திருக்கிறது என்பதும் உண்மையாகிறது.

    விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதனின் ஆக்கபூர்வமான வளர்ச்சிகள் பலவற்றிற்கு ஆதாரமாக இருக்கும் அதேவேளையில் வசதிகள் எனும் போர்வையில் மனிதனின் அத்தியாவசியமற்ற ஆடம்பரத் தேவைகளின் பெருக்கத்திற்கும் காரணமாக்க இருந்திருக்கின்றன, இன்னமும் இருக்கின்றன. மனித இனத்தின் இந்தத் தொடரும் தேவைகளுக்கான தேடல்கள் உலக இயக்கத்திற்கு ஒரு பெரும் காரணியாக இருப்பினும் கூட, அத்தேடல்களுக்காக அழிக்கப்படும் இயற்கைவளங்கள் மீளக்கட்டியெழுப்பப்பட முடியாத ஒன்று என்பதும் மனவருத்தத்திற்குரிய ஒரு பக்கவிளைவு என்பதும் உண்மையே. 

    இன்றைய உலக்கின் முன்னணி நாடுகள் பல குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தமது பொருளாதாரத்தை முன்னிலைக்குக் கொண்டு வந்து விட்டன. இன்றைய அவர்களது தேவை அம்முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதே! ஆனால் எமது பின்புல நாடுகள் குறிப்பாக ஆசிய முன்னணி நாடுகளான இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா என்பன பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நேரமிது என்பது பொதுப்படையான கருத்தாகும். இம்முன்னேற்றம் அந்நாடுகளின் சமுதாய முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியமானதாக இருப்பினும் அதற்காகக் கொடுக்கப்படும் விலை நியாயப்படுத்தப்படக்கூடியதொன்றா என்பது கேள்விக்குறியே! உகநாடுகளில் ஏறக்குறைய அனைத்தையும் பிரதிநிதிப்படுத்தும் ஜக்கிய நாடுகள் சபையின் இயற்கைவளப் பாதுகாப்புக்கான இலாகாவின் அறிக்கைகள் இன்றைய நாடுகளின் துரித முன்னேற்றத்துக்குக் கொடுக்கப்படும் இயற்கைவளங்களை உள்ளடக்கும் விலையைப் பற்றிச் சஞ்சலம் அடைகின்றன.

    இக்கருத்துகளின் ஒருகோணப்பார்வையாக ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் தமது நாட்டினையும், தமது பொருளாதார வளத்தினையும் முன்னேற்றும்போது இன்று கூறப்படும் இயற்கைவளப்பாதுகாப்புப் பற்றிய ஆய்வுகள் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. இன்று தாம் முன்னேற்றமடைந்துவிட்ட நிலையில் முன்னேற்றப்பாதையில் வேகமாக முன்னேறும் கீழைத்தேச நாடுகளின் மீது இக்கட்டுப்பாடுகளை விதிப்பது எவ்வகையில் நியாயமாகும்? என்பதுவே அது.  ஒருவகையில் பார்த்தால் இக்கேள்வி நியாயமானதுவே! ஆனால் இவ்விவாதத்தினை முன்வைத்து முன்னணி ஆய்வாளர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்து நாம் எமது நாட்டின் செல்வ வளங்களைப் பெருக்குவதற்காக இயற்கை வளங்களை அழித்து எம்மையும் உள்ளடக்கிய இவ்வுலகத்தின் காலநிலைச் சீரழிவினையும் அதனால் உருவாகப் போகும் உலக அழிவுகளையும் எதிர்கொள்வது நியாயமானதா?

    இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்றைய உலகப் பொருளாதார அணியில் முன்னணியில் திகழ்கின்ற அதேவேளையில் இப்பொருளாதார வளர்ச்சி இந்நாடுகளில் சமுதாயத்தின் அடிமட்டத்தில் அல்லலுறும் மக்களைச் சென்றடைகிறதா? அவர்களது வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறதா? என்பதுவே கேள்வியாகிறது. இங்கேதான் இன்றைய அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அரசியல் கண்ணோட்டத்தின் மாற்றம், அம்மாற்றம் அரசியல்வாதிகளல்லாத வியாபார மூலதாரர்களைத் தமது நாடுகளின் தேர்தல்கள் மூலம் தலைவர்களாக்குவது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகிறது. இந்த ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற்ற ஜக்கியநாடுகள் சபையின் உலகக் காலநிலைச்சீர்கேட்டினைப் பற்றி ஆராயும் மகாநாட்டில் முதன்முறையாக ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆமாம்… முதன்முறையாக ஜக்கியநாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் மனிதர்களின் இயற்கைச் சீரழிப்பினை தடுக்காவிட்டால் உலகம் அழிவை நோக்கி அவசரவேகத்தில் போவதைத் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டன. இப்புரிந்துணர்வின் அடிப்படையில் அவர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர்.

    உலகநாடுகள் அனைத்தும் தமது நாட்டின் காலநிலை சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் உலகின் காலநிலையைப் பாதிக்கும் வகையிலான உத்திகளைக் கையாளக்கூடாது என்றும் அதற்காக CO2 எனும் விஷவாயுவைக் கக்கும் வகையிலான இயந்திரங்களின் பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றும், இதற்கான கட்டுப்பாடு இப்போது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்குக் கொஞ்சம் தளர்வான வகையில் அமைக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வுடன்படிக்கை ஒரு இரண்டுவாரகாலத்தின் முன்னால் தான் அமுலுக்கு வந்தது. ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் நாடான அமெரிக்கா இவ்வுடன்படிக்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த டொனால்ட் ட்ரம்ப் அவர்களை தனது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளது. இவ்வுடன்படிக்கையை நோக்கிய அமெரிக்க நாட்டின் புதிய ஜனாதிபதியின் நடவடிக்கையை உலகநாடுகள் மிகவும் அவதானமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.

    “கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா?“ எனும் கேள்வி உள்ளத்தின் ஓரத்தில் எழலாமலில்லை.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 219 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள் அன்பு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும். உலகம் விஞ்ஞான உலகின் விளிம்பைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் அனுகூலத்தினை அளவிலா ஆனந்தத்துடன் அனுபவிப்போர் பலர், அவ்வசதிகளை அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்போர் பலர்.

    sakthi1அவ்வசதிகளில் திளைத்துக் கொண்டும் அவற்றினை அனுபவிக்கத் தெரியாமல் வாழ்வோர் பலர், அனுபவிக்க முடியாமல் திண்டாடுவோர் பலர். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் வறுமைக்கோட்டின் எல்லைக்குக்கீழ் வாழும் மக்களின் வாழ்வை உயர்த்த முயற்சிப்போர் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களே!

    இத்தகைய வசதியான வாழ்வின் அடிப்படையாக மேலைத்தேச நாடுகள் இருக்கின்றன என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த வசதியான வாழ்வினைத் தமக்குத் தக்க வைத்துக் கொள்வதையே பிரதானமாகக் கொண்டு வாழ்வோரே அதிகமாகக் காணப்படுகின்றனர். அதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இத்தகைய சுயநலத்தினை முற்படுத்தி வாழ்வோர் என எண்ணப்படுவோர் மத்தியிலிருந்துதான் மற்றவர் வாழ்க்கையைத் தமது வாழ்க்கையிலும் முதன்மைப்படுத்தும் தன்னலமற்ற தியாகிகளும் தோன்றுகிறார்கள் என்பதுவே உண்மையாகிறது.

    தமது நாட்டின் பெரும்பான்மை மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானதாக இருந்தாலும் மனிதாபிமானம் மதிக்கப்பட வேண்டியது, உலகில் பிறந்த அனைவரும் ஒருதாய் மக்களே எனும் கொள்கையில் வாழ்வோர் பலர் இம்மேலைத்தேச சமுதாய முன்றிலில் மலர்கிறார்கள் என்பது உண்மை. அவர்களது வாழ்வின் நோக்கம் வாழ்வின் அடிமட்டத்தில் அல்லாடுபவர்களின் வாழ்வை உயர்த்துவதை முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    sakthi2நாமனைவரும் உலகில் எங்கே பிறக்கிறோம் என்பது எமது தெரிவில் நடப்பது இல்லை. நாம் பிறக்கும் தேசம் வசதியுடையதா? நாம் பிறந்த குடும்பம் வாழ்வின் மேல்மட்டத்திலிருக்கிறதா அன்றிக் கீழ் மட்டத்திலிருக்கிறதா? என்பது கூட எமது தெரிவிலில்லை. எங்கே பிறக்கிறோமோ அங்கே எமது வாழ்க்கையை எம்மால், எமது திறமைக்கும் வசதிக்கும் உட்பட்ட விதத்தில் மேன்மைப்படுத்திக் கொள்வது மட்டும் எமது கைகளிலுள்ளது. ஆனால் சிலவேளைகளில் நாட்டில் அரசியல்வாதிகளும், நாட்டின் தலைவர்கள் எனப்படுவோரும் எடுக்கும் முடிவுகள் எமது வாழ்வின் போக்கினையே மாற்றி விடுகிறது. 

    விரும்பியோ, விரும்பாமலோ நாட்டின் தலைவிதியோடு  நமது தலைவிதியும் பின்னிப் பிணைந்து ஒரு சுழலில் அகப்பட்ட சருகினைப் போல இழுத்துச் செல்லப் படுகிறோம். அதிர்ஷ்டவசமாக ஓரளவு ஜனநாயகம் எனக்கருதப்படும் அரசியலமைப்பைக் கொண்ட நாடுகள் தம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதினால் அவை போர் எனும் கொடிய நிகழ்வினுள் தள்ளப்படுவதில்லை. சர்வாதிகார அமைப்பினைக் கொண்ட நாட்டின் தலைவர்கள் எனப்படுவோர் தமது பதவிவெறிக்காகத் தமது மக்களின் நலனைச் சூதாடமுனைகிறார்கள். விளைவு? நாம் இன்று உலகின் பலபகுதிகளிலும் காணப்படும் “அகதிகள்”எனும் விசேடத் தகைமை பெற்ற பரிதாபத்துக்குரியவர்கள்.

    எதற்காக இந்த அலசல் எனும் ஒரு கேள்வி உங்களுக்குள் எழுந்தால் தவறில்லை.

    இங்கிலாந்தில் ஒரு பரபரப்பை உருவாக்கிய ஒரு உன்னதப் பெண்மணியைப் பற்றிக் கூறுவதற்காகவே இந்த ஆரம்பம். 1974ஆம் ஆண்டு இங்கிலாந்தின் “யோர்க்‌ஷையர்” எனும் இடத்திலுள்ள “பட்லி” எனும் நகரில் பற்பசைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கும், அவ்வூரில் பள்ளிக் காரியதரிசியாக இருந்த பெண்ணுக்கும் மகளாகப் பிறந்தவர் தான் “ஜோ கொக்ஸ் (Jo Cox ) என்பவர். இவர் தனது கல்விப் பட்டதாரிப் பட்டத்தைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றார். ஆரம்பகாலத்தில் இளம் பட்டதாரியாக லேபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியைத் தொடங்கிய இவர் மனிதாபிமானத்தில் மிதமிஞ்சியவர். இக்காரணத்தினால் ஒக்ஸ் பாம் எனும் தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார். இந்நிறுவனத்திற்காக பெல்ஜியம், மற்றும் ஜக்கிய அமெரிக்கா நாடுகளில் பணியாற்றிய இவர் பல அகதிகளைக் காக்கும் பணிகளிலும் ஈடுபட்டு மத்தியகிழக்கு நாடுகளில் பணியாற்றினார்.

    முந்தைய லேபர் கட்சியின் தலைவரான நீல் கினக், அவரது மனைவி ஜரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கிளினஸ், கோர்டன் பிரவுன் அவர்களின் மனைவி சாரா ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் ஆக்ஸ்பாம் நிறுவனத்தில் பணியாற்றும்போது இவரது கணவரான பிராண்டன் கொக்ஸ் அவர்களைச் சந்தித்து திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. 2015 பொதுத்தேர்தலில் பட்லி அன்ட் ஸ்பென் எனும் நகருக்கு லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 40 வயதே நிறைந்த துடிதுடிப்பான இளம் அரசியல்வாதியான இவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில் தன்னுடைய நகரின் பல்வேறு இனக் கலாசாரத்தின் மேன்மையைப் பற்றி பெருமையாகப் பேசினார். பாலஸ்தீன மக்களின் மீதான தடையை இஸ்ரேலிய அரசாங்கம் நீக்க வேண்டும் எனும் கோரிக்கைக்கும் மிகவும் ஆதரவாகப் பிரசாரம் செய்து வந்தார். தன்னுடைய தொகுதி மக்களுக்கான சேவைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வந்த இவரும், இவரின் குடும்பமும் தேம்ஸ் நதியில் உள்ள ஒரு படகு வீட்டிலேயே வசித்து வந்தார்கள். வசதி மிகுந்த இந்த மேலைநாட்டில் தன்னுடைய வசதியைகளைப் பெருக்கிக் கொள்ளும் சுயநல வாழ்வினை இவரும், இவரது கணவரும் கொண்டிருக்கவில்லை.

    இத்தகைய சூழலில்தான் 2016ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தில் தொடரும் பிரதிநிதித்துவத்தைப் பற்றிய பொதுக்கருத்துக் கணிப்பென அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரசாரத்தில் பல அரசியல் தலைவர்கள் தமது ஜரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான பிரசாரத்தில் இமிகிரேஷன் என்பதை முக்கிய காரணியாக்கினார்கள். இது தெரிந்தோ, தெரியாமலோ மக்களின் மனதில் பொதுவாக வெள்ளை இனத்தவர் மத்தியில் ஒருவகையான இனத்துவேஷத்தைத் தூண்விட்டிருக்கிறது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வினத்துவேஷம் சில இனவெறியர்கள் உள்ளத்தில் ஒரு வெறியைத் தூண்டி விட்டது. ஜரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாகவும்,இமிகிரேஷன் என்பது இங்கிலாந்தின் பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமில்லை என்றும் ஜோ கொஸ் அவர்கள் மிகவும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தார்கள்.

    இவ்வருடம் ஜூன் மாதம் 16ஆம் திகதி சரியாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பொதுஜன வாக்கெடுப்புக்குச் சரியாக ஒருவாரத்திற்கு முன்பாக இவரது தொகுதியைச் சேர்ந்த தொமஸ் மேயர் எனும் இனவெறியனின் கைகளினால் இந்த இளம் துடிதுடிப்பான பாராளுமன்ற உறுப்பினர் இவரது தொகுதி காரியாலத்திற்கு அருகில் தெருவில் வைத்துப் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். உலகின் அநாதரவான மக்களுக்காகப் பிரகாசமாக எரிந்த ஒரு விளக்கு அணைக்கப்பட்டது. மனிதாபிமானத்தின் முக்கிய விலாசம் ஒன்று பலாத்காரமாக அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மீது விழுந்த அனுதாப அலை இங்கிலாந்து இன்னமும் சகிப்புத்தன்மை கொண்ட, மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களையே பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்பதனை உலகுக்கு நிரூபித்தது.

    இவரது கொலைகாரன் ஒரு தீவிர வெறித்தனமிக்க இனவெறியர் என்று நிரூபிக்கப்பட்டது. அவருக்கு நேற்று நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை அதாவது சாகும்வரையில் சிறைத்தண்டனை எனும் கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அறிக்கையளித்த அவரது கணவன் அக்கொலைகாரன் மீது நான் பரிதாபப்படுகிறேன். அவன் மனித இனத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாதி. என்னுடைய மனைவியின் இலட்சியக் கனவுகளை முன்னெடுப்பதற்காகவும் எனது குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகவும் எனது வாழ்நாளைச் செலவிடுவேன் என்றும் குரோதத்தை வெளிப்படுத்த அக்கொலைகாரன் எடுத்த நடவடிக்கை நாட்டிலும், உலகத்திலும் மனிதநேயமிக்க மக்களின் அன்பு அலைகளையே வெளிப்படுத்த உதவியிருக்கிறது என்று அனைவரின் நெஞ்சையும் நெகிழவைக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

    உலகில் பிறந்த அனைவரும் இயற்கையின் குழந்தைகளே! உலகில் அமைதியாகவும் மகிழ்வுடனும் வாழும் உரிமை அனைவருக்கும் சமமாகவே உள்ளது என்பதனையே இது போன்ற உன்னதத் தியாகிகள் நிரூபித்து மறைகின்றனர்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (218)

    அன்பினியவர்களே!

    அடுத்தொரு வாரத்தில் என் அன்பு கலந்த வணக்கங்கள்.  இன்ன பல எண்ணங்களைச் சுமந்து கொண்டு மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன்.  மனித சமுதாயத்தின் வளர்ச்சியும், வரலாறும் பல சரித்திரத் திருப்புமுனைகளை உள்ளடக்கியவை. காலத்துக்குக் காலம் மனிதன் தன்மீது வீசப்பட்ட சவால்களைத் தன் திறமையின் மூலம் எதிர்கொண்டே வளர்ச்சியடைந்திருக்கிறான். ஆனால், அவ்வளர்ச்சிக்கான வரலாற்றுச் சரித்திரத்தினை உள்வாங்கிக் கொண்டு அதனுடைய உண்மையான விளைவினையும் அவ்விளைவினால் மனிதன் அடைந்த மேம்பாட்டு வளர்ச்சியையும் சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றுதான் மனித நாகரிகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.

    remembarance-12ஆதிமனிதன் காட்டுக்குள் வேட்டையாடி வாழ்ந்ததிலிருந்து இன்று செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு மனித அறிவின் வளர்ச்சிக்கான விலைகள் கொடுக்கப்படாமலில்லை. தாம் அடைந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தமது வாழ்வினையும், அதற்கான வசதியையும் உறுதிப்படுத்துவதற்காகவும் அந்நியநாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது மேலைத்தேச நாடுகளின் அன்றைய வரலாற்றுத் தேவையாயிருந்தது. விளைவாக நாடுகளின் பேராசை பெருத்து காட்டைவிட்டு நாட்டுக்குள் வந்த நாகரிகமடைந்த மனிதன் அடுத்த நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அதீதப் பேராசையினால் முதலாம் உலக மகாயுத்தம், இரண்டாம் உலக மகாயுத்தம் எனும் மனிதப் பேரழிவுக்கு அடிவகுத்தான்.

    பேராதிக்க ஆசை கொண்ட நாட்டின் அதிபர்களின்
    அபிலாஷைகளுக்காகத் தமது இன்னுயிரைக் காவு கொடுத்தோர் எண்ணிக்கையிலடங்காதோர். தாம் பிறந்த மண்ணின் பாதுகாப்புக்காக நாட்டின்remembarance-13 தலைவர்களினதும், அரசினதும் ஆணையை ஏற்றுப் போர்க்களத்தினுள் குதித்த பல்லோப லட்ச வீரர்கள் பல போர்களில் தமது இன்னுயிரைத் தமது நாட்டிற்காகத் தியாகம் செய்துள்ளார்கள். அதேவேளை சில சர்வாதிகாரிகளால் அடுத்த நாடுகளின் மீது திணிக்கப்படும் போர்களில் வலுக்கட்டாயமாக ஈடுபட வேண்டிய நிர்பந்தத்திற்குப் பலர் உள்ளாக்கப்படுகிறார்கள். அத்தகையதோர் போர் ஜனநாயகம் எனும் போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகாரத்தினால் இன்ன பல கொடுமைகளைப் புரிந்த ஹிட்லரின் அராஜகத்தைத் தவிர்ப்பதற்காக ஏற்பட்டது சரித்திரத்தில் மாறாத கறையாகப் படிந்துள்ளது.

    சரித்திர நிகழ்வுகளையும், சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளையும் போற்றி அவற்றினை மறக்காது remembarance-14நினைவுபடுத்தி வாழும் நாடுகளில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11ஆம் திகதியை முப்படைகளையும், மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிகளையும் கெளரவிக்கும் தினமாக ஐக்கிய இராச்சியம் கடைப்பிடித்து வருகிறது. நவம்பர் 11ஆம் திகதியை அடுத்து வரும் ஞாயிறு தினத்தை ஒரு நினைவு ஞாயிறு ( Remembarance Sunday ) என்று ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் லண்டன் மாநகரில் அமையப்பெற்ற படைவீரர்கள் நினைவுத்தூபியின் முன்னால் இங்கிலாந்து மகாராணியர் உட்பட அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிழல் அமைச்சர்கள், மற்றும் பல முன்னணி நபர்கள் அணிவகுத்துப் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்கள். பின்னர் அனைவரும் அந்த நினைவுத்தூபியின் அடியில் மலர்வளையம் சாத்தித் தமது நினைவாஞ்சலிகளையும், நன்றியறிதல்களையும் மறைந்த படைவீரர்களுக்குத் செலுத்துவார்கள். படையினரின் அணிவகுப்பின்போது போர்ப்படைகளில் சேவையாற்றி ஓய்வுபெற்ற வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    சரியாக அந்த ஞாயிறு காலை 11 மணிக்கு அனைவரும் தாம் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலிகளைச் செலுத்திக் கொள்வார்கள்.

    இதேபோன்ற நினைவுத்தூபிகள் ஒவ்வொரு நகரிலும் நிறுவப்பட்டுள்ளது. அத்தகையதோர் நினைவுத்தூபி நாம் வாழும் “கென்லி” (Kenley) எனும் நகரிலும் நிறுவப்பட்டுள்ளது.போர்க்காலத்தில் போர்விமானங்கள் தரிக்கும் ஓர் படைத்தள விமான ஓடுபாதை ” கென்லி வான்படைத்தளம்” (Kenley Aerodrome) என்றழைக்கப்படும் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ளது. இத்தூபியின் முன்னால் அஞ்சலி மதியம் ஒருமணிக்குச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நானும், மனைவியும் அவ்விடத்திற்கு மதியம் 12 மணிக்கே வந்து விட்டோம். “அடடா ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து விட்டோமே! “ என்று அங்கலாய்த்தபோது, எமது தினசரி நடைப்பயிற்சியை இங்கேயே செய்து விடுவோமே என்றார் என் மனைவி. சுமார் இரண்டரை மைல் சுற்றளவு கொண்ட அம் மைதானத்தைச் சுற்றி வர சுமார் 45 நிமிடங்கள் பிடித்தது. 12.50க்கு அவ்விடத்தை வந்தடைந்தோம்.

    சுளீரென ஆதவன் தனது கதிர்களை அள்ளிவீசிக் கொண்டிருந்தான். அக்கதிர்கள் எம்மீது விழுந்ததினால் நவம்பர் மாதக் குளிர் கொஞ்சம் விலகிப்போனது. மெதுவாகக் கூட்டம் சேரத் தொடங்கியது. மாநகரக் கவுன்சில் தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், ஆகாயப்படை அதிகாரிகள் எனப் பலரும் குழுமியிருந்தனர். நேரம் ஒன்றைத் தாண்டி விட்டிருந்தது. ஏன் தாமதமாகிறது என்று நாம் சிந்தித்த வேளை குறைடன் நகர மேயரின் வரவுக்காகக் காத்திருப்பதாக அருகிலிருந்தவர் கூறினார். சுமார் 1.15 அளவில் குறைடன் நகர மேயரும், உதவி மேயரும் வந்து சேர்ந்தார்கள்.

    அனைவரும் அணிவகுத்து நிற்க, பிரித்தானிய விமானப்படை சிறியோர் பயிற்சிப் பிரிவினர் தமது அணிவகுப்பினை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக அணிவகுத்து நின்ற அங்கத்தினர்கள் தாம் கைவசம் கொண்டு வந்திருந்த மலர் வளையத்தினை அந்நினைவுத்தூபியின் அடியிலே வைத்துத் தலைவணங்கினர். அதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த சுமார் முந்நூறு பொதுமக்கள் (நாம் உட்பட ) அந்த நினைவுத்தூபின் முன்னால் ஒவ்வொருவராகச் சென்று தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். இறுதியாக விமானப்படை அதிகாரியொருவர் சிறிய கவிதை ஒன்றைப் படித்தார். ஆங்கிலக்கவிதையின் இறுதி வரிகள்,

    ”இந்நினைவை உங்களோடு
    எடுத்துச்
    செல்லுங்கள்
    உங்களின்
    இன்றைகளுக்காக எமது
    நாளைகளை
    நாம் தியாகம் செய்தோம்”
    என்று முடிவடைகிறது.

    இந்நிகழ்வினில் கலந்துவிட்டு வீடு செல்லும்போது நெஞ்சு கனத்தது. உலகம் சுதந்திரமாக இருக்க வேண்டும், உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடிய லட்சக்கணக்கானோர் தமது உயிரை மிகவும் இளமையிலேயே இழந்து போயிருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களில் நாம் இன்று வசதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களை நினைந்து கொள்வதற்காக வருடத்தில் ஒருநாளை ஒதுக்கி அவர்களுக்கான கெளரவத்தை வழங்கி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை முக்கியமாக்கும் ஐக்கிய இராச்சியத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் முயற்சி உள்ளத்தைத் தொடுகிறது. இன்றைய எமது நல்வாழ்வுக்காகத் தமது அன்றைகளைத் தியாகம்செய்த அவர்களின் அளப்பரிய தியாகம் வானளாவி நிற்கிறது.

    அது மட்டுமல்ல, முதலாம் , இரன்டாம் உலகமகாயுத்தங்களில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் நினைவுகூர்வது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (217)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் உங்களுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்கிறேன். வாழ்வின் அதிமுக்கியத் திருப்பத்தை எமது வாழ்நாளில் சந்தித்து விட்டோம் என்று பெருமூச்செறிந்து விட்டுச் சற்றுஅயர்ந்து உட்கார்ந்தால் அது என்ன பெரிய திருப்பம் இதை விடவா ? எனும் வகையில் காலம் எனும் சக்கரம் எம்முன்னே அடுத்தொரு பெரிய திருப்பத்தைத் தூக்கிப் போட்டுவிடுகிறது. ஆம், சரித்திரப் புத்தகத்தில் 2016ஆம் ஆண்டு மேற்குலக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை எனும் வகையில் தன்னுள் இதுவரை எண்ணியிராத பல திருப்பங்களை எம்முன்னே நிகழ்த்திக் காட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த நிகழ்வுகள் எமக்குப் பிடித்தவகையில் அமைந்தனவோ இல்லை எம்மால் ஏற்றுக்கொள்ளாதவைகளாக இருந்தனவோ அவைகளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைக்கு முகம் கொடுப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.

    மேற்குலக ஜனநாயகம் எனும் அரசியல் கோட்பாட்டினுள் சிக்கிச் சுழலும் துகள்களில் எம்மைப்போன்ற புலம்பெயர் தமிழர்களும் அடங்குகிறோம். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இன்று நாம் பிறந்தமண்ணை விட்டு எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் எமது வாழ்வை அமைத்து நாம் வாழும் நாட்டின் பிரஜைகளாக எமை மாற்றிக் கொண்டு வாழும் எமக்குப் பல நிகழ்வுகள் நாடகமேடைக் காட்சிகள் போன்றவையே. ஆனால் யதார்த்த வாழ்வில் அந்நிகழ்வுகளின் தாக்கங்களுக்கு நாமும் உள்ளாகப் போகிறோம் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகிறது.

    trump1கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி இங்கிலாந்து நாட்டின் பெரும்பான்மை மக்களின் தீர்ப்பான ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் முடிவு ஆட்சியிலிருந்த ராசாங்கம், எதிர்க்கட்சி வழமையான அரசியற்கட்சிகள் என்பனவற்றின் எதிர்பார்ப்புகளுக்கும் பல கருத்துக் கணிப்பு அமைப்புகளின் கணிப்புகளுக்கும் முற்றிலும் முரணான ஒரு முடிவைத் தூக்கிப் போட்டது. அதேபோல உலகின் முன்னணிப் பொருளாதார நாடாகவும், உலகில் பல நாடுகளின் முன்னோடி நாடாகவும் விளங்கிய ஜக்கிய அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று காலை கொடுத்த இந்த அதிரடியான, எதிர்பார்ப்புகளுக்கு முரணான முடிவு அகில உலகம் முழுவதுமே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. இவ்வதிர்வலைகள் நேர்மறையானவையா அன்றி எதிர்மறையானவையா என்பது நாட்டிற்கு நாடு வேறுபட்டிருக்கிறது.

    வெளிநாடுகளில் இன்று புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் போன்றவர்களின் முன்னால் இம்முடிவுகளின் பின்னணி பலவகையான கேள்விகளைத் தூக்கிப் போட்டிருக்கின்றன. இவ்வதிரடியான அரசியல் திருப்பங்களின் அடியில் ஒருவகையான தேசிய உணர்வு புதைந்திருப்பதை யாரும் மறுக்கமுடியாது. இத்தேசிய உணர்வின் மீது இனத்துவேஷம் எனும் சாயம் பூசப்பட்டிருக்கிறதா என்பதுவே மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகிறது. அப்படியே தேசிய உணர்வுகளின் மீது இனத்துவேஷம் அடிப்படையாக அமைந்திருக்குமானல் அதன் காரணம்தான் என்ன? 

    வெளிநாட்டிலிருந்து குடியேறுவாசிகளாகவோ அன்றி அகதிகளாகவோ வந்த அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்றுச் சகிப்புத்தன்மைக்கும், புரிந்துணர்வுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்த நாடுகளில் இத்தகைய காழ்ப்புணர்ச்சிகள் ஊடுருவக் காரணம்தான் என்ன? இவற்றிற்கு புலம்பெயர் மக்களாகிய எம் போன்றவர்களின் செயற்பாடுகள் எந்த அளவுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன? இவற்றுக்கெல்லாம் உளச்சுத்தியோடு, நேர்மையாக விடைகளை அலசவேண்டியது எம் அனைவருடைய கடமையாகிறது.

    உதரணத்திற்கு நான் வாழும் இங்கிலாந்தினை எடுத்துக் கொள்வோம். அடிப்படையில் இங்கிலாந்து கிறிஸ்துவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. இந்நாட்டிற்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியநாடுகளில் இருந்து குடியேறுவாசிகளாக வந்த நாம் இந்நாட்டின் மதத்தினை எந்த அளவுக்குக் கௌரவித்து வாழ்கிறோம்? அவர்களது கலாசார விழுமியங்களின் தாத்பரியங்களைச் சரியாக உள்வாங்கி இருக்கிறோமா? எமது கலாசாரத்தையும், எமது மதக்கோட்பாடுகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனும் ஆதங்கத்தில் இந்நாட்டு மக்கள் எமக்கு அளித்த சலுகைகளை அவைகளின் எல்லை மட்டும் கொண்டுசென்று இவர்களது சகிப்புத்தன்மையை சோதிக்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டோமா ? நாம் வாழும் நகரங்கள்தோறும் கோவில்களை அமைப்பதன்மூலம் எமது சமயத்தையும், எமது கலாசாரத்தையும் காப்பாற்றுகிறோம் எனும் பெயரில் அவர்களது கலாசார விழுமியங்களின் அடையாளங்களை அவர்கள் இழப்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டோமா? இவையெல்லாம் எம்முள்ளே எழவேண்டிய கேள்விகள். எமக்கு இந்நாடுகள் வாடகை வீடாக இருப்பது போன்ற உணர்வு இருக்கலாம்; ஆனால் எமது சந்ததியினருக்கு இது அவர்களது சொந்த வீடு அல்லவா ?அவர்களது சொந்த வீட்டிலேயே அவர்கள் நிம்மதியாக வாழமுடியாத வகையில் ஒரு நிலைமையை ஏற்படுத்தி விட்டோமா ?

    “ப்ரெக்ஸிட்” எனும் இங்கிலாந்தின் முடிவும், அமெரிக்க ஜனாதிபதியாக “ட்ரம்ப்” அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதும் முக்கியமான திருப்பங்கள்; ஆனால் இவற்றின் அடிக்கோடாக இனத்துவேஷ உணர்வுகள் இருப்பதகாக் கூறிக் கொள்ளும் அதேநேரம் இந்த “ப்ரெக்ஸிட்” முடிவையும், “ட்ரம்ப்” அவர்கள் ஜனாதிபதியாக வருவதையும் ஆதரித்த எம்மவர் பலரை நான் சந்தித்திருக்கிறேன் என்பதுவே உண்மை. அப்படியாயின் இம்முடிவுகள் எப்படி “இனத்துவேஷம்” கொண்டவையாக இருக்க முடியும்? இதன் காரணங்கள்… ஒன்று இவற்றின் பின்னால் இருக்கும் நாட்டின் பொருளாதார நன்மைகளை உள்வாங்கியதால் எம்மவர் அதரித்திருக்கலாம்; இரண்டாவதாக தம்மை இந்நாடுகளின் பிரஜைகளாகவும், தமக்கும் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய வெள்ளை இனத்தவருக்கும் எதுவித வேறுபாடுமில்லை என்பதனால் எம்மவர் ஆதரித்திருக்கலாம்.

    எது எப்படி இருப்பினும் இந்நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டன என்பதுவே உண்மை. இவை இரண்டின் முடிவுகளுக்கும் எதிரான கருத்துக்களை ஆதரித்தவன் நான்; இருப்பினும் மேற்குலக ஜனநாயகத்தின் அடிப்படையில் இம்மக்களின் இப்பெரும்பான்மை முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனுடன் எம்மை இணைத்துக் கொண்டு வாழ்வது ஒன்றே இயல்பான நிலையாகிறது. “ப்ரெக்ஸிட்” எனும் நிகழ்வின் எதிரொலியாக ஏற்படும் நிலைகளை எமக்குச் சாதகமாக்கி அதன்மூலம் அனுகூலமான வாழ்வினை ஏற்படுத்திக் கொள்வதே புலம்பெயர்ந்தவர்களாகிய எமது கடமையாகிறது. அதேபோல “ட்ரம்ப்” அவர்களின் பிரசாரக் கோஷங்களைக் கேட்டு அவரைப் பற்றி நானெடுத்த கணிப்பு வெற்றியடைந்த பின்னால் அவர் கொடுத்த உரையைக் கேட்டதும் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. ஆம், அமெரிக்க மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் அரசியல் பின்னணி எதுவுமற்ற ஒரு வெற்று வியாபார முதலாளியைத் தமது ஜனாதிபதியாக்கியுள்ளார்கள். அவர்க்குச் சந்தர்ப்பம் அளித்து அவரது செயற்பாடுகளை அவதானிப்பது ஒன்றே இன்றைய எமது தேவையாகிறது. பிரசார மேடைகளில் கர்ஜித்த “ட்ரம்ப்” என்பவருக்கும் ஜனாதிபதியாகப் பதவியேற்கப்போகும் “ட்ரம்ப்” என்பவருக்கும் இடையில் வேறுபடு இருப்பது போலவும் அவ்வேறுபாடு அனுகூலமிக்கது போலவும் தென்படுகிறது.

    “கண்ணாலே காண்பதும் பொய், காதாலே கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் ” எனும் முன்னோர்கள் கூற்றுக்கேற்ப ஜானாதிபதி “ட்ரம்ப்” அவர்களுக்குச் சந்தர்ப்பம் அளித்துப் பார்க்க வேண்டியது ஜனநாயகத்தை நம்பும் அனைவரது கடமையாகிறது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (216)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தாம் வாழும்காலம் மட்டும் உடல்நலக் குறைவுகளை நிவர்த்தி செய்யும் உரிமை ஒரே விதத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியப்படுகிறது என்பது கேள்விக்குறியே! ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார நிலையும் வித்தியாசப்படுவது இயற்கையே. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் வைத்திய வசதிகள் அவர்களின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பது இந்த 20ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வா?

    எமது பின்புல நாடுகளில் பணமிருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தமது வசதிகளுக்கேற்ப நவீன வசதியுடன் சிகிச்சைகளைப் பெறுவதும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் அரசாங்க வைத்தியமனைகளில் கிடைக்கக்கூடிய சிகிச்சையை மட்டுமே பெறும் நிலை காணப்படுவது சகஜமாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இங்கிலாந்தில் இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று 1946ஆம் ஆண்டு முதல் கோஷம் முன்வைக்கப்பட்டது. சிகிச்சையைப் பொறுத்தஅளவில் பொருளாதாரத்தில் எந்நிலையில் இருந்தாலும் அனைவரும் சிகிச்சை பெறுமிடத்தில் ஒரே தராதரத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதன் விளைவாக 1948ஆம் ஆண்டு அது சட்டமாக்கப்பட்டது. அதன் விளைவே இன்று நாம் இங்கிலாந்தில் அனுபவிக்கும் சிகிச்சை வழிகள். இந்த அரசாங்க அமைப்பு “தேசியச் சுகாதார சேவை ( National Health Service – NHS) என்றழைக்கப்படுகிறது.

    பணிபுரியும் அனைவருடமிருந்தும் அவர்களது ஊதியத்தில் ஒரு சிறுஅளவு அரசாங்கத்தினால் தேசியப் பாதுகாப்பு நிதிக்காக அளவிடப்படுகிறது. அதன் காரணமாக நாட்டிலுள்ள அனைவருமே இலவச சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்போது பல கேள்விகள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது. இன்றைய பொருளாதாரச் சிக்கலான காலகட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தினால் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த இலவசச் சுகாதரச் சேவையைத் தொடர முடியும்? என்பது பொதுவான ஒரு கேள்வியாகிறது. சுமார் 60 வருடங்களுக்கு முன்னால் இருந்த இங்கிலாந்துக்கும் இன்றைய இங்கிலாந்துக்கும் இடையில் பல வேறுபாடுகளுண்டு. ஜனத்தொகையின் பெருக்கம் பல மடங்காகியுள்ளது. அது மட்டுமின்றி பல நவீன மருந்துகளினால் மனிதர்களின் வாழ்க்கைக் காலம் நீட்சியடைந்துள்ளது. அதிகமான முதியவர்கள் தமது 90 வயதுகளையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வைத்தியத் தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தினால் இச்சுகாதாரச் சேவைக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரிய பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பல வைத்தியசாலைகளில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குன்றிப்போயுள்ளதாக பல புகார்கள் வந்த வண்ணமுள்ளது. டாக்டர்கள், தாதிமார்கள் மற்றைய பணியாளர்களின் ஊதியம் பலகாலமாக மிகவும் குறைந்த அளவிலான வீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருப்பதால் இத்துறைகளில் பணிபுரிவோர் அதிக அளவில் பணிகளுக்காக அந்நியநாடுகளுக்குச் செல்லும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இத்தகைய ஒரு சூழலில் இப்போது ஒரு பிரச்சனை பூதாகரகமாகக் கிளம்பியுள்ளது. இதுவரைக் காலமும் யாராவது இங்கிலாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சையும் இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சில வருடங்க:ளுக்கு முன்னால் அரசாங்கம் இங்கிலாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளாகவோ அன்றி உறவினர்களைப் பார்ப்பதற்காகவோ வரும் எவரும் இங்கிலாந்துப் பிரஜைகளாக அன்றி இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றவர்களாக இல்லாதவிடத்து வைத்தியச் செலவுகள் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டும் எனும் சட்டம் இயற்றியது. ஆனால் இன்றுவரை இந்தச் சட்டம் முழுமையாக அமுல் நடத்தப்படுவதில்லை என்றும் ஏறத்தாழ 250 மில்லியன் வரையிலான இங்கிலாந்து பவுண்ட்ஸை இங்கிலாந்து வைத்தியத்துறை வருடமொன்றுக்கு இழக்கிறது என்றும் ஒருதரப்பினால் கணிக்கப்பட்டுக் கூறப்படுகிறது.

    இதுபற்றிய செய்தி ஒன்றுக்கு இங்கிலாந்து ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது. இங்கிலாந்தின் ஒரு முன்னணி வானொலி ஊடகமான எல்.பி.சி. எனும் வானொலி நிலையத்தின் நிகழ்வொன்றை நான் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது சமீபத்தில் செவிமடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காலநேரம் திரு. நிக் வெராரி என்பவரால் நடத்தப்படும் ஒரு நேயர்களுடனான சம்பாஷணை நிகழ்வாகும். அப்போது ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட அந்தச் செய்தி ” ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண்  நைஜீரியா நாட்டிலிருந்து விருந்தினராக இங்கிலாந்துக்கு வந்திருக்கும்போது மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறார். அவருக்கான பிரசவ வைத்தியம் இங்கிலாந்து வைத்தியர்களினால் இலவசமாகச் சகல வசதிகளுடனும் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவு 146000 இங்கிலாந்துப் பவுண்ட்ஸ்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. “இந்தப் பணம் ஏன் அவரிடமிருந்து அறவிடப்படவில்லை?” என்பதுதான் ஊடகங்களின் கேள்வியும் குற்றச்சாட்டும்.

    அதுபற்றிய தொடர்ந்த தொலைபேசிச் சம்பாஷணையில் வானொலி நிலையத்தைத் தொடர்பு கொண்ட நைஜீரியப் பின்புலத்தைக் கொண்ட ஒரு நேயர் “நைஜீரியாவைப் பின்புலமாகக் கொண்ட பலர் இந்நாட்டில் சட்டபூர்வமாகப் பணிபுரிந்து அரசாங்கத்துக்கு வரி செலுத்தி வருகிறார்கள், பின் எதற்காக நீங்கள் நைஜீரிய மக்களைப் பற்றிக் குறைவாக விமர்சிக்கிறீர்கள்?” என்று அந்நிகழ்ச்சித் தொகுப்பாளரான நிக் வெராரியிடம் கேட்டார். அதற்கு அவர் மிக அமைதியாக “ஒரு ஊடகவியலாளரின் பார்வையில் எது முக்கியச் செய்தியாகிறதோ அதை அலசுவதே எனது பணி. இம்முக்கியச் செய்தியின் சாரம் அப்பணத்தை அறவிடாத நிர்வாகக் குறையைச் சுட்டிக் காட்டுவதேயன்றி அந்த நைஜீரியப் பெண்மணியின் மீது குற்றம் கூறுவதல்ல. இச்செய்தியில் சம்பந்தப்பட்டவர் நைஜீரியப் பென்மணி அல்லாது ஒரு அவுஸ்திரேலியப் பெண்மணியாக இருப்பினும் விளைவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உங்களைப் போலவே நானும் இந்நாட்டில் சட்டபூர்வமாக வரி செலுத்தி வாழும் பல நைஜீரிய பிரித்தானிய பிரஜைகளை அறிவேன். எனவே தயவுசெய்து இது நைஜீரிய நாட்டினருக்கெதிரான ஒரு விமர்சனம் என்று பார்க்காதீர்கள்”என்றார்.

    இந்நிகழ்வினைக் கேட்டதும் என் மனத்திலும் சிந்தனைகள் பறக்கத் தொடங்கின. இந்நாட்டில் சிறுபான்மையினர் எனும் எண்ணத்தோடு நாம் வாழும்வரைச் செய்திகளில் எம்மவர்கள் சம்பந்தப்பட்டால் அது எம்மீது தொடுக்கப்பட்ட ஒரு கெளரவப்பிரச்சனையாகச் சிந்திக்காமலே முடிவெடுத்து விடுகிறோமோ எனும் எண்ணம் என்னுள் கிளர்ந்தது. இந்நாடு நம் அனைவருக்கும் பொதுவானது. இந்நாட்டின்வளர்ச்சியும், தாழ்ச்சியும் எம்மையும், எமது சந்ததியையும் தான் பாதிக்கப்போகிறது. இந்நாட்டின் நிர்வாகம் சரியாக நடத்தப்படாததையிட்டு நாமும்தான் வருந்த வேண்டும். ஆனால் அதில் எம்மைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் ஏனோ அதனுள் இருக்கும் உண்மையான செய்திகளை மனம் உள்வாங்கிக் கொள்ள மறுப்பது எமது தனிமனிதக் குறைபாடா? இல்லை ஒட்டுமொத்தமாக எமது கலாசாரக் குறைபாடா?

    மீண்டும் அடுத்த மடலில்…
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (215)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். அடுத்தொரு வாரம் ஓடியதும் அடுத்தொரு மடலுடன் நான் உங்களைத் தேடுவதும் காலவேகத்தின் சுழற்சிதானோ! இந்த வாரம் ஒரு முக்கிய நிகழ்வைத் தன்னுள் அடக்கிய ஒரு வாரமாக மிளிர்கிறது.ஆமாம் சனிக்கிழமை 29ஆம் திகதி தீபவளித் திருநாள். அனைத்து இல்லங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு நாள்.

    diwa1அப்போது எனக்கு வயது ஆறு அல்லது ஏழு இருக்கும். ஈழத்தில் எனது தாய், தந்தையருடன் நான் வாழ்ந்திருந்த காலம். வழமை போல வெளியூரில் பணி நிமித்தம் இருக்கும் எனது தந்தை தீபாவளி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். ஒரே கொண்டாட்டமும் , குதூகலமும்தான். தீபாவளிக்கு முந்தைய சாயந்தரம் என்று எண்ணுகிறேன். எனது தந்தையிடம் தீபாவளிக்கு விளக்கம் கேட்டேன். முதலில் அனைவரும் அளிக்கும் இந்துமத இதிகாச நரகாசுரனின் வதை பற்றிக் கூறினார். என் முகத்தில் தோன்றிய குழப்பரேகைகளை அவதானித்திருப்பார் போலும். மெதுவாக என்னை அணைத்துக் கொண்டு இருளைக் கண்டால் பயப்படாது விளக்கை ஏற்றுவதே அறிவான செயல் என எமது முன்னோர் எமக்கு உணர்த்துவதற்கான ஒரு திருநாள் என்றார்.

    அவரது அந்த விளக்கத்தின் சரியான தாத்பரியத்தை நான் பலகாலம் புரிந்து கொள்ளவில்லை என்பதை விட புரிந்து கொள்ள முயலவில்லை என்பதே உண்மை. வாலிபப் பருவத்தின் பருவக்கோளாறுகளின் உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்ததால் வாழ்வில் எமக்குத் தேவையான முக்கியமான விளக்கங்களின் புரிதல்களை ஒதுக்கி விட்டுத் திமிராக நடந்தவேளை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதன் அர்த்தத்தைச் சரியான வகையில் உள்வாங்காமல் வெறும் பாடப்புத்தகத்தின் வரிகளாகப் பார்த்த ஒரு காலம்.

    இன்று நான் அறுபது மைல்கல்லைத் தொட்டு நிற்கும் வேளை.ஒரு மகனுக்குத் தந்தையாக மட்டுமல்லாது ஒரு பேரக்குழந்தைக்குத் தாத்தாவான ஒரு நிலை. அன்று எனக்கு விளக்கம் சொன்ன என் தந்தையிடம் தந்தையே நீங்கள் சொல்லிய விளக்கத்தின் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும் எனும் தேடல் எழுந்திருக்கும் காலம் என்று சொல்ல விரும்பிய போதும், அதைக் கேட்பதற்கு அவர் புவியினில் இல்லை.

    ஆமாம் சமயம், கலாசாரம் என்று எமக்குப் போதிக்கப்பட்டவைகள் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எமக்கு இல்லாவிட்டாலும் கூட தெய்வத்துடன் சம்பந்தப்பட்ட, எமக்கு அப்பாற்பட்ட சக்தியின் பெயரால் புகட்டினால் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்வோம் என்பதற்காகத்தான் அதனை இதிகாசமாக்கித் தந்தார்களோ என்னவோ! எம்மை நாமே நாத்திகவாதிகள் என்று காட்டிக் கொள்வதற்காக எமக்கு முன்னோரால் அளிக்கப்பட்ட இதிகாச,புராணக் கதைகளை ஒருபுறம் தள்ளி வைப்பது மிகவும் இலகுவான காரியமே! ஆனால் அவ்விதிகாசங்களின் உள்ளார்த்தங்களை நாம் சரியாக உணர்ந்து கொண்டால் அக்கதைகளில் வரும் சம்பவங்களைப் பார்த்து நம்பாமல் இருப்பதை விடுத்து அதன் உட்கருத்தின் உண்மையை உள்வாங்கிக் கொள்வது சுலபம்.

    நாமனைவரும் ஒரேமாதிரியான மனோபாவம் உடையவர்கள் அல்லர். அனைவருடைய மனங்களிலும் தெய்வத் தன்மையும் (நற்பண்புகள் ),  அசுரத்தன்மையும் (தீய பண்புகள்) கலந்துதான் இருக்கின்றன. தெய்வப் பண்புகளுக்கும், தீயபண்புகளுக்கும் இடையில் தினமும் யுத்தம் நிகழ்ந்தவண்ணம் தான் உள்ளது. எம் மனங்களிலுள்ள தீய பண்புகளுடன் போரிட்டு நற்பண்புகள் ஜெயிக்குமானால் உள்ளம் நற்காரியச் செயல்களையே நாடுகிறது. இதையே நம் முன்னோர்கள் தேவர்களுக்கும் அன்றி தெய்வங்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தம் என்று கதையாக்கம் செய்திருப்பார்கள் போலும்.

    அத்தகைய ஒரு தீயபண்பினை அளித்து நற்பண்பினை ஓங்க வைக்கும், நிகழ்வே தீபாவளி எனக் கொள்ளலாம். நற்பண்புகளின் வெற்றியைக் குறிப்பிடும் முகமாக இருளை விரட்டும் வகையில் தீபங்களின் மூலம் இல்லமெங்கும் ஒளியேற்றி எமது மனதிலுள்ள இருளினை விலக்குவதன் முக்கியத்துவத்தை நாம் எமக்கு உணர்த்துகிறோம். அறியாமை என்பது இருளே! அறிவு என்பது ஒளி! அறிவு எனும் தீபத்தின் ஒளி கொண்டு அறியாமை எனும் இருளை விரட்டியடிப்பதைக் கொண்டாடுவதே இத்தீபாவளித் திருநாளின் முக்கியத்துவமாகக் கொண்டால் இங்கே ஆத்திக, நாத்திக வாதத்திற்கு இடமேயில்லை.

    என்ன எதனால் இந்த திடீர் ஞானோபதேசம் என்று நீங்கள் எண்ணலாம். இளம்பிராயத்திலிருந்தே ஒரு நம்பிக்கையின் வழி வளர்ந்துவிட்டுப் புலம்பெயர் வாழ்க்கையில் புகுந்து கொண்டேன். இப்புலம்பெயர் வாழ்க்கையிலும் எனது அடிப்படை நம்பிக்கைகளை அசைத்து வாழ்வதை விரும்புவனல்ல நான்.ஆனால் புலம் பெயர்ந்ததும் தமது நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்க முற்படுபவர்கள் பலரின் மத்தியில் வாழவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. என் நம்பிக்கை சிதையாமலும், அதேநேரம் தமது கலாசாரப் போதனைகளை அலசிப்பார்க்க முனைவதற்கு நாத்திகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டு வாழும் நண்பர்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்கக்கூடிய மனோநிலையை வளர்த்துக் கொள்வதற்கும், தேவையான விளக்கங்களைத் தேடும்பொழுது அன்று என் தந்தை கூறிய வார்த்தைகள் இன்று எனக்கு ஒரு புது அர்த்தத்தைக் கொடுக்கிறது.

    என் இனிய வாசக நெஞ்சங்களே! தீபங்களை ஏற்றுங்கள். அறியாமையை அகற்றுங்கள். அறிவே எமது தெய்வம் என்று போற்றுங்கள்.

    அனைவருக்கும் எனது அன்புகனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

    இனியதோர் தினமிது
    அறிவெனும் தீபம் கொண்டு
    இதயமெங்கும் ஒளியேற்றி
    இன்பம் பொங்க வாழ்ந்திடுவோம்
    எண்ணெய் தோய்ந்த திரியொன்று
    எரிகின்ற நிலைகண்டு உள்ளமதில்
    அடுத்தவர் வாழ்வில் ஒளியேற்ற
    தனை அழைக்கும் தியாகம் கண்டோம்
    இருக்கின்றோர் உலகில் சிலரே
    இருக்கின்ற வாழ்க்கையிது!
    இல்லாதோர் வாழ்வினில் பலரே
    சிறக்கின்ற வழிதேட வாரீர்

    மனம் சூழும் இருளகற்றி இங்கே
    மனிதர் வாழ்வில் ஒளியேற்ற
    இல்லங்கள் தோறும் தீபங்களேற்றி
    இசைத்திடுவோம் மானுட கீதங்கள்

    அன்பெனும் விதையை உள்ளத்தில்
    ஆழமாய் நாட்டி வளர்த்திடுவோம்
    அறிவெனும் ஆண்டவனைப் போற்றி
    ஆலயமைப்போம் இதயங்கள் தோறும்

    அரக்ககுணத்தை அடியோடழித்து
    ஆண்டவன் பண்பினைக் காத்திடுவோம்
    இனியதிந்த தீபாவளித் திருநாளில்
    இன்பம்சொரியும் வாழ்த்துக்கள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

      

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (214)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிப்பதுதான் அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளின் முக்கிய கடமையென்பது அனைவர்க்கும் பொதுவான கருத்து என்றே எண்ணுகிறேன். அதேசமயம் மக்களின் நாட்டுக்கான அரசியல் அபிலாஷைகள் ஒரு பொதுவான, பரஸ்பர புரிந்துணர்வுடன் அனைத்து மக்களுடனான நல்லிணக்கணத்தை விட்டு விலகி பிரிவு மனப்பான்மையின் அடிப்படையில் செல்ல விழையும்போது உண்மையான அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் எத்தகைய வடிவை எடுக்கவேண்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இன்றைய காலகட்டத்தில் இருக்கின்றது.

    சர்வதேச நாடுகளுக்கான பயணங்கள் மிகவும் இலகுவாக்கப்பட்டதால் உலகின் எல்லைகள் சுருக்கப்பட்டுவிட்டதைப் போன்ற ஒரு நிலையே இன்று காணப்படுகிறது. இதனால் பொருளாதாரத்திலும், வாழ்க்கை தரத்திலும் வசதியுள்ள நாடுகளாகக் கருதப்படும் மேலைத்தேச நாடுகளை நோக்கி படித்துப் பட்டம் பெற்ற பலர் நகர்வது சகஜமான ஒரு நிகழ்வாகி விட்டது. அது மட்டுமின்றி இத்தகைய பட்டம் பெற்றவர்களின் பற்றாக்குறையினால் இவர்களைத் தேடி தமது நாடுகளில் பணிக்கு அமர்த்துவதில் பல முன்னணி மேலைத்தேச நாடுகள் ஈடுபட்டு வந்தன.
    இது ஒருபுறமிக்க,

    அரசியல் நிலையற்ற பல நாடுகள், குறிப்பாக மத்திய கிழக்குநாடுகளில் உள்நாட்டுப் போர்கள் தீவிரமடைந்ததால் அந்நாட்டிலிருந்து அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. அதேசமயம் அகதிகள் எனும் போர்வையால் பயங்கரவாதச் செயல்களை முடுக்கிவிட சில பயங்கரவாத அமைப்புகள் தமது உறுப்பினர்களை ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவச் செய்தது மட்டுமின்றி பல பயங்கரவாதச் செயல்களை முடுக்கி விட்டுமுள்ளன, விளைவாக பல மேலைத்தேசநாடுகளின் மக்களின் மனதில் பலகாலமாக நிலவிவந்த வெளிநாட்டவரை நோக்கிய பரந்துபட்ட ஆதரவான ஒரு நிலமை மாறி துவேஷ மனப்பான்மை கூடிக்கொண்டு செல்லும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பல குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட தேசியவாதக் கட்சிகளின் தலைவர்கள் இப்பிரிவினைத் துவேஷத்தை கூட்டும் வகையில் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்லும் நிலையை நாம் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.

    இங்கிலாந்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கெதிரான சர்வஜன வாக்கெடுப்பு முடிவு , பிரான்ஸில் வெளிநாட்டவருக்கெதிரான தேசியவாதக் கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பு, ஜெர்மனியிலும் அதேபோல வெளிநாட்டவருக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் தேசியவாதக் கட்சியின் வளர்ச்சி, ஆஸ்ட்ரியா, இத்தாலி போன்ற நாடுகளில் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் இனத்துவேஷ பிரச்சாரத்தின் வேகமான வளர்ச்சி என்பன இதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

    as
    இத்தகைய ஒரு நிலையில் தான் அடுத்தமாதம் எட்டாம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறப் போகிறது. அந்தத் தேர்தல் கூட இதுவரை அமெரிக்கத் தேர்தலில் கண்டிருக்க முடியாத மாற்றங்களை உள்ளடக்கி இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. 2008ம் ஆண்டு ஒபாமா அவர்கள் அமெரிக்க நாட்டின் முதல் கறுப்பு இன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது அமெரிக்க ஜனநாயகத்தில் எனக்கு ஏற்பட்ட அபரிதமான நம்பிக்கை எட்டு வருடங்களில் ஆட்டம் கண்டிருக்கிறது. ஒரு கறுப்பு ஜனாதிபதியைத் தெரிவு செய்யுமளவிற்கு மிகவும் பரந்த புரிந்துணர்வையும் தெளிவான அரசியல் அணுகுமுறையையும் எடுத்துக் காட்டிய அதே அமெரிக்க ஜனநாயகம் இன்று குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அவர்களைத் தெரிவு செய்யுமளவிற்கு பிரிவினை அரசியலுக்குள் தம்மைப் பிணைத்துக் கொண்டதன் காரணம் தான் என்ன ?

    இதற்கு நாம் பல காரணங்களை ஆதாரமாக்கலாம் .

    எட்டு வருடங்களில் ஒபாமா அவர்களால் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவைகள் நிறைவேற்றப்படாமை.

    ஓபாமாவின் மீதான எதிர்பார்ப்புகள் கொடுத்த ஏமாற்றம்.

    பொதுவாக அரசியல்வாதிகள் என்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பு.

    மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையிழப்பு.

    தமது அதிருப்தியை வெளிக்காட்ட வேறுவழியில்லை எனும் விரக்தி.

    இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்குமிடையிலான ஒரேயொரு ஒற்றுமை இதுவரையிலான அமெரிக்க தேர்தல் சரித்திரத்தில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களில் கருத்துக் கணிப்பில் அதிகுறைந்தவர்கள் இவர்கள் இருவருமே என்பதுவே. இனத்துவேஷம் என்று கணிக்கப்படக்கூடிய பல விடயங்களை தனது கொள்கைகளாகப் பிரகடனம் செய்து அதற்கு அவரது கட்சி உறுப்பினர்களிடையே அமோக ஆதரவு பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள். அனைத்தையும் விட மிக முக்கியமான அவரது குறைபாடு பெண்களின் மீது அவர் கொண்டிருக்கும் தாழ்வான அபிப்பிராயமே ! ஆணாதிக்கத்தின் உச்சத்தில் பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தக் கூடிய விதத்தில் அவரது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. சுமார் 11 வருடங்களின் முன்னால் ஒரு பேட்டியின் போது தன்னுடைய செல்வாக்கினால் தாம் விரும்பும் எந்தப் பெண்ணையும் தம் வசமாக்கலாம் எனும் கருத்தில் அவர் கூறியது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கருத்தைக் கொண்டுள்ள ஒருவர் உலகின் மிகப்பெரிய செல்வாக்குள்ள ஒரு நாட்டிற்குத் தலைவராகும் தகைமை உடையவரா என்பதுவே அமெரிக்க வாக்காளர்களின் முன் உள்ள கேள்வி. அவரால் தகாத வகையில் தரக்குறைவாக தீண்டப்பட்டதாக பல பெண்களால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

    அதேசமயம் திருமதி ஹிலரி கிளிண்டன் அவர்கள் மீது நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையில் மின்னஞ்சல்களை பாதுகாப்பற்ற வழிகளில் அனுப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளிண்டனின் மனைவி எனும் வகையில் ஜனாதிபதிப் பதவி ஏதோ தமது ஏகபோக குடும்பச் சொத்து எனும் வகையில் அவர் நடந்து கொள்கிறார் என்றும் எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.. இருப்பினும் திருமதி ஹிலரி கிளிண்டன் தான் இருவரில் தகுதி வாய்ந்தவர் என்பது பெரும்பான்மையோரின் எண்ணம் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. கருத்துக் கணிப்புகளின்படி திருமதி ஹிலரி கிளிண்டன் அவர்களே ஜனாதிபதியாகும் வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி எனும் சரித்திரப் பிரசித்தியை திருமதி ஹிலரி கிளிண்டன் தட்டிக் கொள்ளப் போகிறாரா ? இல்லை அனைத்துக் கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி இதுவரை அமெரிக்கா கண்டிராத வகையில் இதுவரை அரசியலிலேயே ஈடுபடாத வெளிநபரான திரு டொனால்ட் ட்ரம்ப் சரித்திரப் புத்தகத்தில் இடம் பெறப் போகிறாரா எனபதற்கு காலம்தான் விடை பகரும்.

    எது எப்படி இருப்பினும் இது அமெரிக்க அரசியலில் ஏன் உலக அரசியலிலே ஒரு சுவையான (சுமையான?) காலகட்டம்தான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(213)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். ஆயுதபூஜை , விஜயதசமி என முக்கிய தினங்களை முடித்துக் களிப்புடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மடலை எழுத ஆரம்பித்ததிற்கும், எழுதி முடிப்பதற்கும் இடையில் இருந்த இடைவெளி கொடுத்த தாக்கத்தின் பிரதிபலிப்பில் இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்னதான் நடந்தது அவ்விடைவெளியில் என்று நீங்கள் வினவக்கூடும்.

    இதோ!

    1984-ஆம் ஆண்டு முதல் நான் அறிந்திருந்த நன்கு பழகியிருந்த ஒரு அன்புத் தோழர் கடந்த 9ஆம் திகதி அதிகாலை இயற்கையெய்தினார். இன்று காலை அவரது இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தது. . என்னை விட ஏறத்தாழ 6 மாதங்களே வயதில்மூத்த இந்த நல்ல மனிதனின் வாழ்வை எண்ணிப் பார்க்கிறேன். யாழ்மண்ணிலே பிறந்து லண்டனுக்குப் புலம்பெயர்ந்து மாணவனாகத் தனது வாழ்வை ஆரம்பித்த அவர் தானும் தன் வாழ்வு எனும் சிறுவட்டத்திற்குள் தனது வாழ்வை வாழ்ந்து முடித்தவரல்ல.

    jeyamநாடு, சமூகம் எனத் தனக்குமுன்னே இருந்த தனது கடமைகளை முழுமூச்சாக ஆற்றிய ஒரு மனிதர். பெற்றோருக்கு ஒரு நல்ல மைந்தனாக, தங்கைக்கு ஓர் அண்ணனாக, மனைவிக்குக் கணவனாக, அன்புக்குழந்தைகளுக்குத் தந்தையாகத் தனது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது தனது தாய்மண்ணில் தனது சகோதர, சகோதரிகள்படும் துயரைக் கண்டு துடித்தெழுந்து மனிதாபிமான உதவிகளை முன்னின்று வழங்கியவர். அத்தகைய அரிய செயல்களினால் அவர் தன் பிரத்தியேக வாழ்வில் அடைந்த இன்னல்கள் பல; அவையனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர்.

    காலம் அவர்மீது தன் சவால்களைத் தூக்கி வீசத் தவறவில்லை. அவரது உடல் நோய்களினால் தாக்கப்பட்டு நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டபோதும், ஈழத்தில் தமிழ்மக்களின் இன்னல்களுக்குத் தன்னால் என்ன செய்யமுடியு,ம் எனத்துடித்துத் தனது பங்களிப்பைத் தனது உடல் ஈடுகொடுக்குமளவிற்குச் செய்துவந்தவர். தாய்மண்ணில் தனக்குக் கல்வியறிவை ஈந்த பாடசாலை பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து, தனது நாட்டு மாணவர்களின் வாழ்வு மேம்படத் தன்னாலான உதவிகளைப் புரிந்தவர்.

    குடிசை வீட்டில் எரியும் ஒரேயொரு குப்பிவிளைக்கைப் புயற்காற்று அணைத்துவிட்டதைப் போல அவரது மனைவியும், அவரது இரண்டு மகள்களும் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நிலை. இயற்கை அளித்த வாழ்வைத் திரும்ப இயற்கையே பறித்துக் கொள்வது இயற்கையே! ஆனால் பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட அந்தக் காலத்தை எவ்வகையில் வாழ்ந்து முடிக்கிறோம் என்பதிலேயே ஒரு மனிதனின் வாழ்வின் வெற்றி அமைந்திருக்கிறது. ஒரு மனிதனின் கடமை என்பது அவனது பிரத்தியேக சொந்தவாழ்வுடன் முடிந்து விடுவதில்லை. தன் வாழ்வும், சமூகத்தினரின் இன்பதுன்பங்களில் பங்கெடுப்பதும் அம்மனிதனின் கடமைகளில் ஒன்றாகிறது. ஆனால் அதை நிறைவேற்றக்கூடிய வல்லமை, துணிச்சல் அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட துணிச்சலையும் கடமையுணர்வையும் கொண்ட ஓர் உன்னத மனிதனே என் தோழன் வேலாயுதபிள்ளை ஜெயபாலன்.

    உள்ளத்தில் வடியும் ஆறாத துயரத்திற்கு வடிகாலாக இம்மடலை வரைந்து விட்டேன். இவ்வினிய தோழனின் உற்றார், உறவினரின் சாந்திக்காகவும், அவனது ஆத்மசாந்திக்காகவும் அனைத்துக்கும் மேலான, அனைவர்க்கும் பொதுவான இறையை வேண்டுகிறேன்.

    தோல்விகள் உனக்கில்லை தோழா!
    தாய்மண்ணின் கனவுகளை உந்தன்
    நெஞ்சினில் சுமந்தே நடந்தனை
    நேராக நிமிர்ந்தே நின்றனை நீயே!

    ஜெயம் என்பதனை உந்தன் பெயரில்
    ஜெபமாய்க் கொண்டவன் தோழா!
    தோழரின் துணையாக என்றுமவரை அருகில்
    தூணாகத் தாங்கிக்கொண்டே வாழ்ந்தாய்!

    யாழ் கொக்குவில் தனில் உதித்தாய்
    யாழ் இந்துவின் மைந்தனாய் வளர்ந்தாய்
    தமிழ்த்தாயின் பெருமைதனை உணர்ந்ததினால்
    தணியாத வேகத்துடன் தமிழுக்காய் உழைத்தாய்!

    அன்னை மண்ணின் அழிவுகளைத் தடுக்க
    அர்ப்பணித்த ஓர் தோழனாய்க் கண்டேன்
    எதிர்கொண்ட இடர்கள் அனைத்தையும்
    ஏற்றுக்கொண்டே வாழ்ந்தனை நண்பா!

    மறையாத புன்னகை உன் வதனத்தில்
    மாறாத கொள்கைகள் உன் எண்ணத்தில்
    சீரான சிந்தனை என்றும் உன்னுள்ளத்தில்
    தீராத சோகம் இன்று எமது நெஞ்சங்களில்!

    அன்பான மனைவியும் பண்பான மகள்களும்
    ஆண்டவன் உனக்களித்த இனிய பரிசுகள்
    காலத்தின் சோதனை நீ வாழ்வில் கண்ட
    கணக்கற்ற வேதனைகள் தோழா!

    சரீர உபாதைகள் தந்திட்ட தடைகளையும்
    தகர்த்தெறிந்து நீயும் தமிழ்ச் சோதரருக்காய்
    ஆற்றிய பணிகள் பகன்றிடும் உந்தன்
    அனைத்து அகக்குறைகளையும் உடைத்தெறியும்
    ஆற்றல்தனை அன்னை மண்ணின் சொந்தங்களுக்கு

    மரணம் என்பது முடிவல்ல தோழா!
    மரணித்து வாழும் மனிதருள் மாணிக்கம்
    ஆன்மாவின் பயணத்தின் ஒரு பகுதியின் முடிவு
    அனைவரின் நினைவுடனும் உந்தன் ஆன்மிகக் கலப்பு!

    அன்பினிய தோழா! பண்பினிய ஜெயபாலா!
    அன்னை மண்ணின் உறவுகளின் வாழ்வின்
    அமைதி ஒன்றே உனக்கு என்றுமே
    ஆத்மசாந்தி அளித்திடும் என்பதுவே உண்மை!

    அஞ்சலிகளுடன்
    சக்தி சக்திதாசன்

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share