இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (215)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். அடுத்தொரு வாரம் ஓடியதும் அடுத்தொரு மடலுடன் நான் உங்களைத் தேடுவதும் காலவேகத்தின் சுழற்சிதானோ! இந்த வாரம் ஒரு முக்கிய நிகழ்வைத் தன்னுள் அடக்கிய ஒரு வாரமாக மிளிர்கிறது.ஆமாம் சனிக்கிழமை 29ஆம் திகதி தீபவளித் திருநாள். அனைத்து இல்லங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு நாள்.

diwa1அப்போது எனக்கு வயது ஆறு அல்லது ஏழு இருக்கும். ஈழத்தில் எனது தாய், தந்தையருடன் நான் வாழ்ந்திருந்த காலம். வழமை போல வெளியூரில் பணி நிமித்தம் இருக்கும் எனது தந்தை தீபாவளி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். ஒரே கொண்டாட்டமும் , குதூகலமும்தான். தீபாவளிக்கு முந்தைய சாயந்தரம் என்று எண்ணுகிறேன். எனது தந்தையிடம் தீபாவளிக்கு விளக்கம் கேட்டேன். முதலில் அனைவரும் அளிக்கும் இந்துமத இதிகாச நரகாசுரனின் வதை பற்றிக் கூறினார். என் முகத்தில் தோன்றிய குழப்பரேகைகளை அவதானித்திருப்பார் போலும். மெதுவாக என்னை அணைத்துக் கொண்டு இருளைக் கண்டால் பயப்படாது விளக்கை ஏற்றுவதே அறிவான செயல் என எமது முன்னோர் எமக்கு உணர்த்துவதற்கான ஒரு திருநாள் என்றார்.

அவரது அந்த விளக்கத்தின் சரியான தாத்பரியத்தை நான் பலகாலம் புரிந்து கொள்ளவில்லை என்பதை விட புரிந்து கொள்ள முயலவில்லை என்பதே உண்மை. வாலிபப் பருவத்தின் பருவக்கோளாறுகளின் உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்ததால் வாழ்வில் எமக்குத் தேவையான முக்கியமான விளக்கங்களின் புரிதல்களை ஒதுக்கி விட்டுத் திமிராக நடந்தவேளை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதன் அர்த்தத்தைச் சரியான வகையில் உள்வாங்காமல் வெறும் பாடப்புத்தகத்தின் வரிகளாகப் பார்த்த ஒரு காலம்.

இன்று நான் அறுபது மைல்கல்லைத் தொட்டு நிற்கும் வேளை.ஒரு மகனுக்குத் தந்தையாக மட்டுமல்லாது ஒரு பேரக்குழந்தைக்குத் தாத்தாவான ஒரு நிலை. அன்று எனக்கு விளக்கம் சொன்ன என் தந்தையிடம் தந்தையே நீங்கள் சொல்லிய விளக்கத்தின் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும் எனும் தேடல் எழுந்திருக்கும் காலம் என்று சொல்ல விரும்பிய போதும், அதைக் கேட்பதற்கு அவர் புவியினில் இல்லை.

ஆமாம் சமயம், கலாசாரம் என்று எமக்குப் போதிக்கப்பட்டவைகள் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எமக்கு இல்லாவிட்டாலும் கூட தெய்வத்துடன் சம்பந்தப்பட்ட, எமக்கு அப்பாற்பட்ட சக்தியின் பெயரால் புகட்டினால் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்வோம் என்பதற்காகத்தான் அதனை இதிகாசமாக்கித் தந்தார்களோ என்னவோ! எம்மை நாமே நாத்திகவாதிகள் என்று காட்டிக் கொள்வதற்காக எமக்கு முன்னோரால் அளிக்கப்பட்ட இதிகாச,புராணக் கதைகளை ஒருபுறம் தள்ளி வைப்பது மிகவும் இலகுவான காரியமே! ஆனால் அவ்விதிகாசங்களின் உள்ளார்த்தங்களை நாம் சரியாக உணர்ந்து கொண்டால் அக்கதைகளில் வரும் சம்பவங்களைப் பார்த்து நம்பாமல் இருப்பதை விடுத்து அதன் உட்கருத்தின் உண்மையை உள்வாங்கிக் கொள்வது சுலபம்.

நாமனைவரும் ஒரேமாதிரியான மனோபாவம் உடையவர்கள் அல்லர். அனைவருடைய மனங்களிலும் தெய்வத் தன்மையும் (நற்பண்புகள் ),  அசுரத்தன்மையும் (தீய பண்புகள்) கலந்துதான் இருக்கின்றன. தெய்வப் பண்புகளுக்கும், தீயபண்புகளுக்கும் இடையில் தினமும் யுத்தம் நிகழ்ந்தவண்ணம் தான் உள்ளது. எம் மனங்களிலுள்ள தீய பண்புகளுடன் போரிட்டு நற்பண்புகள் ஜெயிக்குமானால் உள்ளம் நற்காரியச் செயல்களையே நாடுகிறது. இதையே நம் முன்னோர்கள் தேவர்களுக்கும் அன்றி தெய்வங்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தம் என்று கதையாக்கம் செய்திருப்பார்கள் போலும்.

அத்தகைய ஒரு தீயபண்பினை அளித்து நற்பண்பினை ஓங்க வைக்கும், நிகழ்வே தீபாவளி எனக் கொள்ளலாம். நற்பண்புகளின் வெற்றியைக் குறிப்பிடும் முகமாக இருளை விரட்டும் வகையில் தீபங்களின் மூலம் இல்லமெங்கும் ஒளியேற்றி எமது மனதிலுள்ள இருளினை விலக்குவதன் முக்கியத்துவத்தை நாம் எமக்கு உணர்த்துகிறோம். அறியாமை என்பது இருளே! அறிவு என்பது ஒளி! அறிவு எனும் தீபத்தின் ஒளி கொண்டு அறியாமை எனும் இருளை விரட்டியடிப்பதைக் கொண்டாடுவதே இத்தீபாவளித் திருநாளின் முக்கியத்துவமாகக் கொண்டால் இங்கே ஆத்திக, நாத்திக வாதத்திற்கு இடமேயில்லை.

என்ன எதனால் இந்த திடீர் ஞானோபதேசம் என்று நீங்கள் எண்ணலாம். இளம்பிராயத்திலிருந்தே ஒரு நம்பிக்கையின் வழி வளர்ந்துவிட்டுப் புலம்பெயர் வாழ்க்கையில் புகுந்து கொண்டேன். இப்புலம்பெயர் வாழ்க்கையிலும் எனது அடிப்படை நம்பிக்கைகளை அசைத்து வாழ்வதை விரும்புவனல்ல நான்.ஆனால் புலம் பெயர்ந்ததும் தமது நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்க முற்படுபவர்கள் பலரின் மத்தியில் வாழவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. என் நம்பிக்கை சிதையாமலும், அதேநேரம் தமது கலாசாரப் போதனைகளை அலசிப்பார்க்க முனைவதற்கு நாத்திகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டு வாழும் நண்பர்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்கக்கூடிய மனோநிலையை வளர்த்துக் கொள்வதற்கும், தேவையான விளக்கங்களைத் தேடும்பொழுது அன்று என் தந்தை கூறிய வார்த்தைகள் இன்று எனக்கு ஒரு புது அர்த்தத்தைக் கொடுக்கிறது.

என் இனிய வாசக நெஞ்சங்களே! தீபங்களை ஏற்றுங்கள். அறியாமையை அகற்றுங்கள். அறிவே எமது தெய்வம் என்று போற்றுங்கள்.

அனைவருக்கும் எனது அன்புகனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

இனியதோர் தினமிது
அறிவெனும் தீபம் கொண்டு
இதயமெங்கும் ஒளியேற்றி
இன்பம் பொங்க வாழ்ந்திடுவோம்
எண்ணெய் தோய்ந்த திரியொன்று
எரிகின்ற நிலைகண்டு உள்ளமதில்
அடுத்தவர் வாழ்வில் ஒளியேற்ற
தனை அழைக்கும் தியாகம் கண்டோம்
இருக்கின்றோர் உலகில் சிலரே
இருக்கின்ற வாழ்க்கையிது!
இல்லாதோர் வாழ்வினில் பலரே
சிறக்கின்ற வழிதேட வாரீர்

மனம் சூழும் இருளகற்றி இங்கே
மனிதர் வாழ்வில் ஒளியேற்ற
இல்லங்கள் தோறும் தீபங்களேற்றி
இசைத்திடுவோம் மானுட கீதங்கள்

அன்பெனும் விதையை உள்ளத்தில்
ஆழமாய் நாட்டி வளர்த்திடுவோம்
அறிவெனும் ஆண்டவனைப் போற்றி
ஆலயமைப்போம் இதயங்கள் தோறும்

அரக்ககுணத்தை அடியோடழித்து
ஆண்டவன் பண்பினைக் காத்திடுவோம்
இனியதிந்த தீபாவளித் திருநாளில்
இன்பம்சொரியும் வாழ்த்துக்கள்!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

  

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *