Tag: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அழகிய ஆட்டுக்குட்டிகளை தம் ஒளிப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பவர் திருமிகு நித்தி ஆனந்த். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. இவர்கள் இருவரும் என் நன்றிக்கு உரியவர்கள்!

    ஆட்டுக்குட்டிகளின் இளங்கழுத்தை இறுக்கி வதைக்கும் கயிற்றைக் காண்கையில் நம் மனம் பதைக்கின்றது. இவற்றின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அது விதைக்கின்றது. இலையும் தழையும் கிடைத்தாலும் தலைக்கு ஆபத்து எப்போது வருமோ எனும் அச்சத்தோடு வாழும் நிலையில்  உயிர்களுக்கு நிறைவேது? நிம்மதியேது?

    இந்தப் படம் நம் கவிஞர்களின் உளத்துள் எத்தகைய எண்ணங்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றது என்பதை அவர்கள் கவிதைவழி அளந்தறிவோம் வாருங்கள்!

    *****

    ”ஆட்டை வளர்த்து அதன் உயிரைப் போக்குகின்ற கேட்டைச் செய்யும் மனிதரை யார் கேள்வி கேட்பது?” என்று ஆதங்கத்தோடு வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆட்டுக் குட்டிகளாய்…

    ஆட்டை வளர்ப்பான் அறுத்திடவே
    அதிக விலைக்கு விற்றிடவே,
    கேட்டைத் தந்திடும் இச்செயலைக்
    கேட்க ஆளிலை அவனியிலே,
    ஆட்டுக் குட்டிகள் அறியாமல்
    அவனை நம்பி யிருக்கின்றன,
    காட்டும் இலைகளில் மயங்கிடுதல்
    காணலா மின்று மனிதரிலே…!

    *****

    ”மானுடரே! கறுப்பு ஆடு, முள் குத்திற்று என்று தம் தவற்றுக்கெல்லாம் பிறர்மேல் களங்கம் சுமத்தும் கலையை எங்குக் கற்றீர்? எம் இனத்தின்மீது சுமத்திய வீண்பழியை ஒழிப்பீர்!” என்று கலகக்குரல் எழுப்பும் ஆட்டைத் தன் முதல் கவிதையில் காட்டுகின்ற திரு. சீ. காந்திமதிநாதன், தம்முடைய மற்றொரு கவிதையில், ”மனிதர்களே! தீநுண்மித் தொற்றுநோய் முடியும் வரையிலாவது என் ஊன்மீது கொண்ட பற்றினை ஒழிக்கலாகாதா? என்று பரிதாபமாய்க் கேட்கும் ஆட்டின் குரலைப் பதிவுசெய்திருக்கின்றார்.

    கறுப்பு நிற ஆட்டின் முறையீடு:
    இள ஆடும் பயம் அறியாது
    நல விரும்பியாக நீயிரு
    குலம் செழிக்க வாழ்த்துவேன்
    பலம் பெற்ற காளிதாசன் பாட்டால்

    ஆட்டை மேய்த்தவனின் பாட்டை
    நாட்டை ஆண்டவனின் கோட்டை
    கோட்டை விடாது கொண்டதால்
    பாட்டுடைக் கவியோ நாட்டுடைமை

    ஆடென எள்ளி நகை ஆடாதே – நாங்கள்
    நாடாண்ட பரம்பரை சிந்தி!

    வணிகத்தில் புகுந்தது
    ஆங்கிலேயக் கறுப்பு ஆடு
    கணித சாஸ்திரக் கலாசாரம்
    கண்டதோ கறுப்பு ஏடு!

    மனிதநேய பாரத
    பலமே ஆனது கேடு!

    தனித்தனி பிரித்தாளும் சூழ்ச்சி
    பாரதத்தில் வெள்ளையன் ஆட்சி!

    கோட்டையைக் கோட்டைவிட்ட
    ஒற்றுமை யின்மைக்கு
    வைத்துக் கொண்டதோ
    கறுப்பு ஆடென
    என் இனப் பெயர்
    தீராத பழியப்பா

    இனத்தை அழிப்பது பாவம்
    இனத்தைப் பழிப்பதோ மகாபாவம்!

    வாயில்லா ஜீவன் என்பதால்
    வழக்காட இயலவில்லை

    உலக மனித உரிமைக்
    கழகம் இருந்தும்
    கலகம் செய்யும்
    இனப் படுகொலையைத்
    தடுக்க முடியலையே!

    களங்கம் சுமத்தும்
    கலை எங்குக் கற்றீர்?

    முள் குத்திற்று
    கள்ள ரயில்
    கல் தடுக்கிற்று
    கறுப்பு பணம்
    கறுப்பு ஆடு

    மானிடா என்று நீ
    உன்னை உன்னுள்
    தேட முயலுகிறாயோ
    அன்று தான்
    வீண்பழி சுமத்த மாட்டாய்!

    தன் பழி தாங்கிட முடியும்
    பலிகடா வாகிய என்னால்
    என் இனப்பழி முடியலை
    அதனாலே இந்த முறையீடு

    *****

    கருணை மனு….

    தேசப் பிதாவிற்குப் பால் கொடுத்தேன்
    உனக்கோ தோள் கொடுக்கிறேன்
    என் தோல் நீ உரிக்கலாமா?

    உன் நலன் என் நலன்
    உன்றனக்குத் தெரியுமா?

    நெல்லை என்றால் அல்வா
    தில்லை என்றால் நடராசர்
    முல்லை என்றால் பாரி
    எல்லை என்றால் கண்காணிப்பு

    சைவம் என்றால் காய்கறி
    அசைவம் என்றால் நானா?

    என் கொழுப்பு மனித தேகத்தில்
    அதிக நாட்கள் உறையுமாமே!
    அதிக உயிர்ப்பலி வாங்குகிற
    கொவைட்19 தீநுண்மி நோய்த்தொற்று
    அதிக பட்சம் என் ஆயுளோ
    மூவாறு ஆண்டுகள் அறிவாயோ?
    மூவிரு திங்களாவது தின்னாது
    வாயது கையது உன்னைக் கட்டாது
    கயிறது என் கழுத்தில் பாவமே

    என் படைப்பு உனதான பின்பு
    தின்பதை நிறுத்து என் ஊன்
    தீநுண்மி நோய்த்தொற்று
    மடியும் வரையில்…

    *****

    ”தழைகொடுத்து ஆட்டின் தலைகொய்யும் வஞ்சக எசமானர் போன்றோரே அன்பளிப்புத் தந்து அப்பாவி வாக்காளனை ஏமாற்றி ஓட்டு வாங்கும் அரசியலாளரும்” எனும் நடப்பியலைத் தம் படக்கவிதையில் பொருத்திக் காட்டுகின்றார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.

    வாக்காளனுக்கு?

    அன்போடு இரண்டு
    ஆடுகள் அளவளாவின!

    ஓராடு சொல்லிற்று,
    போராடும் வாழ்க்கை
    பிற உயிர்க்கெல்லாம்
    நமக்கோ வேளாவேளை
    நற்றளிர்கள், பசும்புற்கள்
    நாவூறும் இலை தழைகள்!

    நமது எசமான் இனி
    நாம் தொழும் இறை
    நினைவில் நீ கொள்
    நம்முயிர் பிரியும் வரை!

    அடுத்திருந்த ஆடு
    ஆதங்கத்தோடு
    பிதற்றிய ஆட்டின்
    பேதைச் செவியில்
    உணரும் வண்ணம்
    உரக்கச் சொன்னது!

    இரையும் புல்லும்
    இனிதாய்க் கொடுத்து
    வளர்ந்த பின்பு
    வாளால் கொல்வர்
    கழுத்தில் இருக்கும்
    கயிறே சாட்சி!

    சிரத்தைக் கொய்யும்
    சிந்தை கொண்டே
    ருசிக்கத் தருவர்
    புசிக்கப் பலவும்!

    உணர்ந்த ஆடு
    உரைத்தது மெல்ல
    உலகில் யாரும்
    உளரோ நமைப்போல்?

    ஏளனத்தோடு எள்ளி
    ஏனில்லை உலகில்
    இரண்டாம் ஆடு
    இரைந்து சொன்னது!

    அரசியல்வாதியிடம்
    அன்பளிப்புப்பணம்
    பெற்று வாக்களிக்கும்
    பேதை வாக்காளனும்
    நம்மினமே, நன்றாக
    நீ உணர்வாய்.

    வரையாட்டிற்குப் புரிந்தது
    வாக்காளனுக்கு?

    *****
    ”குளிர் காலத்தில் கம்பளியாகிறாய்; கொண்டாட்டங்களில் விருந்தாகின்றாய்” என்று ஆட்டின் அவலநிலைக்கு வருந்தும் திருமிகு சுதா மாதவன், கர்த்தர் உம்மை இரட்சிப்பார் என்று ஆடுகளுக்கு நம்பிக்கையூட்டவும் தவறவில்லை.

    ஆகாரத்தில் நீங்கள் ஓர் அங்கம்
    அசைவப் பிரியர்களுக்கு

    மிரள்கின்ற உன் பார்வை
    இப்படியானோமே என்றா?

    குளிர்காலத்தில் கம்பளியாகிறாய்
    கொண்டாட்டங்களில் விருந்தாகிறாய்

    சாணத்தை உரமாக்கினாய்
    பாலினைச் சத்தாக்கினாய்

    கன்னங்களில் அசைப்போட்டு
    மந்தையாய்ச் செல்லும் கூட்டம்

    வரிசையாய் அழகாய் செல்லும்
    உங்கள் ஆட்டு மந்தைக் கூட்டம்

    கர்த்தரின் கைகளில் நீங்களே…
    காத்து ரட்சிப்பர் அவரே
    நீர் தாழ்ச்சியடையீர்!!

    *****

    ”பலிபீடத்தில் நின்றுகொண்டு பச்சைத் தழையை இச்சையோடு உண்டுகொண்டிருக்கும் நாம் வரவிருக்கும் ஆபத்தை உணரவில்லை” என்று ஆடுகளுக்கும் ஆட்களுக்கும் சேர்த்து இரட்டுறமொழிகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்!

    பலியாடுகள்

    உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை
    பிழைப்புக்கேற்ற தொழிலும் இல்லை
    களைத்து ஒதுங்கக் குடிலும் இல்லை
    வறுமையைத் தீர்க்க வழியும் இல்லை
    போதை தீர்ந்த நேரம் இல்லை
    பாதை காணத் திறனும் இல்லை
    நாளை குறித்து திட்டம் இல்லை
    பிரரைக் குறைசொல்லி வாழ்ந்துவிட்டோம்

    ஐந்தாண்டுக்கு ஒருமுறை
    அதிகாரம் மாற்ற வாய்ப்பிருந்தும் -அதை
    ஆயிரம் ஐநூறுக்கு விற்றுவிட்டு
    எதிர்காலம் தொலைத்து விட்டோம்…

    பலிபீடத்தில் நின்றுகொண்டு
    பச்சைத்தழை இலைகள் உண்டு
    வரும் கொடுமை உணராத
    பலியாட்டு மந்தைகள் நாம்…

    *****

    ஆட்டுக்குட்டிகளை வைத்து நாட்டுமக்களுக்கு(ம்) நல்லறிவூட்டியிருக்கின்றார்கள் சிந்தனை வளம்செறிந்த வல்லமைக் கவிஞர்கள்; பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து வருகின்றது…

    தன்னம்பிக்கை!

    அம்மாவைக் காணோமே தம்பி – அட
    அதற்காயேன் அழவேண்டும் வீணாக வெம்பி?
    எம்மா துயர் வந்த போதும் – துணிந்(து)
    இருப்போம் நாம் எப்போதும் எம்மையே நம்பி!

    கண்ணாகக் காத்திட்டாள் அம்மை – நாம்
    கவலைகள் இல்லாமல் வாழ்ந்தது உண்மை!
    எண்ணாமல் தன் நெஞ்சில் எம்மை – அவள்
    எங்கு போய் மாண்டாளோ! எவர் செய்த தீமை?

    ஆயிரம் துயர் வந்த போதும் – நாம்
    அழுவதாற் பயனில்லை கலங்காதே தம்பி!
    தாயவள் பாலினி இல்லை – நாம்
    தழைகுழை யுண்டுதான் வாழணும் தம்பி!

    காய்கின்ற வயிற்றுடன் அன்னை – வந்து
    கட்டியணைத்துப் பால் தருவாளென்றெண்ணி
    சேய்கள் நாம் இனிவாழலாமோ – இல்லை
    தேடுவோம் உணவினை முயற்சிகள் பண்ணி!

    கயிற்றினால் கட்டி வைத்துள்ளார் – நாம்
    கட்டினை அறுத்துவிட் டோடுவோம் தம்பி
    வயிற்றிலே பசியோடு வாடி – நாம்
    வாடவோ வா உடன் சேர்ந்தறுத் தெறிவோம்!

    துள்ளித் திமிறிடுவோம்நாம் – எங்கள்
    சுதந்திரம் காணத் துடித்தெழுவோம் நாம்
    அள்ளி அணைத்தவெம் அன்னை – தன்னை
    அறுத்தபா தகர்தனை நம்பிடலாமோ?

    ”அன்னை வந்து பால்தருவாளென்று காய்கின்ற வயிற்றுடன் சேய்கள் நாம் இனியும் வாழலாகாது. நாமே முயன்று உணவினைத் தேடுவோம்; அதற்கு முதலில் அன்னையை அறுத்துக் கொலைசெய்த பாதகரிடமிருந்து தப்பிச் செல்வோம்” என்று ஆட்டுக்குட்டிகள் தீட்டும் திட்டத்தைத் தம் பாடலில் அழகாய் வடித்துக் காட்டியிருக்கும் திரு. சித்தி கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • இத்தாலிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்!

    இத்தாலிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்!

    -மேகலா இராமமூர்த்தி

    ஆஸ்திரியா, பிரான்ஸ் என்று பல ஐரோப்பிய நாடுகளின் பிடியில் சிக்கி, தாழ்வுற்று விடுதலை தவறிக்கெட்டு நின்ற இத்தாலியின் விடுதலைக்குப் பாடுபட்டோர் மூவர். ஒருவர் மாஜினி (Giuseppe Mazzini); அடுத்தவர் கரிபால்டி (Giuseppe Garibaldi); மற்றொருவர் காவுர் (Cavour). இவர்களில் இத்தாலியின் ஆயுதமாகக் கரிபால்டியும், அறிவாகக் காவூரும், ஆன்மாவாக மாஜினியும் திகழ்ந்தனர் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரிடித் (George Meredith).  

    இந்தியாவுக்கு மகாத்மா காந்தி எப்படியோ, ரஷ்யாவுக்கு லெனின் எப்படியோ அப்படியே இத்தாலிக்கு மாஜினி. இவர்களை நாம் ஒரே தராசில் வைத்து நிறுக்க முடியாதுதான்; எனினும் இவர்களிடத்தே காணப்பட்ட  சில அபூர்வமான பண்புகளின் அடிப்படையில் இவர்களை நாம் ஒன்றுபடுத்தலாம். இவர்கள் அரசியல்வாதிகளாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்; ஆனால் அதற்காக இவர்கள் போற்றப்படவில்லை. மனிதத் தன்மையில் மேம்பட்டவர்கள் என்பதற்காக, அந்த மனிதத்தன்மையானது தங்கள் நாட்டினரிடத்தில் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து நாட்டினரிடத்தும் நிறைந்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது உழைத்ததற்காகப் போற்றப்படுகிறார்கள்.

    இத்தாலிய விடுதலை வேள்விக்குப் பாடுபட்டவரும் புதிய ஐரோப்பாவை நிர்மாணித்தவர்களில் ஒருவர் என்று கருதப்படுபவருமான ஜோசப்  மாஜினி இத்தாலியிலுள்ள ஜெனோவா நகரில் 1805ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் நாள் பிறந்தார்.

    குழந்தைப் பருவத்திலேயே மிகவும் புத்திக்கூர்மை கொண்டவராகத் திகழ்ந்த மாஜினி, தம் தொடக்கக் கல்வியை வீட்டிலேயே ஓர் ஆசிரியரிடம் பயின்றார். மாஜினிக்கு பத்து வயதாக இருந்தபோது, பிரான்சில் நெப்போலியனுடைய ஏகாதிபத்தியம் வீழ்ந்துபட்டது. அந்த ஆண்டில் ஐரோப்பிய வல்லரசுகளின் ஒப்புதலின்பேரில் லிகூரியா (Liguria) மாகாணத்திலிருந்த ஜெனோவா நகரத்தை பீட்மாண்ட் (Piedmont) மன்னன் தன்வசப்படுத்திக்கொண்டான். இதனை ஜெனோவாவாசிகள் அடியோடு வெறுத்தனர். இதுகுறித்தெல்லாம் மாஜினி வீட்டில் அடிக்கடி பேச்சுகள் நடைபெற்றன. இவை மாஜினியின் இளம் உள்ளத்தில் புரட்சிக் கனலை அப்போதே உண்டுபண்ணத் தொடங்கின. 

    அவர் ஒருநாள் தம் தாயோடும் வேறொரு நண்பரோடும் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களைத் தொடர்ந்து ஒருவன் வந்தான். நல்ல உயரமும் கருமையான தாடியும் கூர்த்த பார்வையும் கொண்டிருந்த அவன் இவர்களருகில் வந்து ஒரு கைக்குட்டையை விரித்து, “சட்ட விரோதிகளான இத்தாலியர்களுக்கு” என்று சொல்லவும், மாஜினியின் தாயும் அருகிலிருந்த நண்பரும் அக் கைக்குட்டையில் சில காசுகளைப் போட்டனர். அவன் நன்றி சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

    இதனைக் கண்ட மாஜினி வியப்போடு, ”அம்மா இவர் யார்? இவருடைய தோற்றமும் கம்பீரப் பார்வையும் என்னைக் கவர்கின்றன. இவர் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்?” என்று வினவ, அவருடைய தாய், “மகனே! சில நாள்களுக்கு முன் பீட்மாண்ட் பிரதேசத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து கார்போனாரி (Carbonari) எனும் அமைப்பைச் சேர்ந்தோர் ஒரு புரட்சி செய்தார்கள். ஆனால் அரசாங்கத்தார் அதனை ஆரம்பத்திலேயே அடக்கிவிட்டார்கள். எனவே அரச தண்டனைக்குப் பயந்து இப்புரட்சியாளர்கள் தப்பித்து ஜெனோவாவுக்கு ஓடிவந்துவிட்டனர்; அவர்களில் இவரும் ஒருவர் என்றார்.

    ”இவர்களுடைய புரட்சி ஏன் தோல்வியுற்றது?” என்று கேட்டார் மாஜினி. ”சரியான முன்னேற்பாடும் ஒழுங்கான தலைமையும் இன்மையே அதற்குக் காரணம்” என்றார் அவரின் தாயார்.

    ”இவர்கள் ஏன் ஜெனோவாவுக்கு வந்தனர்?” என்று அடுத்த வினாவை மாஜினி தொடுக்க, ”கையில் காசில்லாமல் ஓடி வந்துவிட்ட இவர்கள் ஸ்பெயின் முதலிய நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு வசதியாகத் துறைமுக நகரமான ஜெனோவாவுக்கு வந்திருக்கின்றனர். கப்பல் செலவுக்குத்தான் இப்போது பணம் வசூலிக்கின்றனர்” என்றார் மாஜினியின் தாய்.

    இந்தச் சம்பவம், மாஜினியின் மனத்தில் ஆழப் பதிந்து, தாய்நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்குத் தன்னையும் அர்ப்பணிக்க வேண்டும் எனும் தீவிர எண்ணத்தை அவருள் விதைத்துவிட்டது.

    இதற்கிடையில் 1827ஆம் ஆண்டு கல்லூரியில் சட்டம் படித்து வழக்கறிஞரானார் மாஜினி. ஏழைகளின் வழக்கறிஞர் (Poor man’s lawyer) என்று சொல்கின்ற வகையில் வசதியற்ற ஏழைகளுக்காக வாதாடினார் அவர். என்னதான் அவர் வழக்கறிஞராகத் திறம்படப் பணியாற்றினாலும் அவருடைய ஆர்வம் கவிதையிலும் வரலாற்றிலுமே அதிகம் இருந்தது. இலக்கியத்திலும் அரசியலிலும் ஆர்வங்கொண்ட நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு சங்கம் ஆரம்பித்தார். அரசாங்கத்தால் தடுக்கப்பட்டிருந்த பல நூல்களை அவர் இரகசியமாக வரவழைத்து நண்பர்களைப் படிக்கச் செய்தார். இத்தாலிய மகா கவிஞராகிய தாந்தேயிடத்திலும் (Dante), ஆங்கில மகா கவிஞராகிய பைரனிடத்திலும் (Byron) மாஜினிக்குச் சிறப்பான ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தன. இக்காலத்தில் அவர் இதயத்திலிருந்து ஊற்றெடுத்த தேசிய எண்ணங்கள், இலக்கியப் போர்வை போர்த்துக்கொண்டு ஜெனோவாவில் வெளியான சில பத்திரிகைகளில் கட்டுரைகளாக மலர்ந்தன.

    பின்னர், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது என்ற எண்ணத்தில் தம் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அரசாங்கத்துக்கு எதிரான கார்போனாரி இரகசியச் சங்கத்தில் சேர்ந்தார் மாஜினி. அந்தச் சங்கத்தின் ஒழுங்கற்ற தன்மையை அவர் அறிந்திருந்தும்கூட வேறு வழியின்றி அதில் தம்மை இணைத்துக்கொண்டார்.

    இச்சமயத்தில், அதாவது 1830ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பிரான்சை அப்போது ஆண்டுகொண்டிருந்த பத்தாம் சார்லஸ் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி நடைபெற்றது. இப்புரட்சியானது மற்ற நாடுகளிலுள்ள தேசியவாதிகளுக்கும் ஓர் உந்துசக்தியையும், தங்கள் நாட்டில் புரட்சியை உண்டுபண்ணுவதற்கான வாய்ப்பையும் அளித்தன.

    ஆனால் இதுபோன்றதொரு பெரிய புரட்சியை கார்போனாரி சங்கத்தால் இத்தாலியில் நடத்த முடியாதென்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார் மாஜினி. ஒரு புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு உயர்ந்த இலட்சியங்களோடு கூடிய ஓர் அமைப்பு அவசியம் என்று எண்ணிய அவர், அப்புதிய அமைப்பை உருவாக்கும் பொறுப்பு தம்முடையதே என்பதையும் அறிந்தார். இங்ஙனம் வேறோர் அமைப்பிலிருந்துகொண்டே புதிய அமைப்பைத் தோற்றுவிக்க அவர் முயன்றுகொண்டிருந்த வேளையில், இத்தாலியக் காவல்துறையினரின் சந்தேகப் பார்வை மாஜினி மீது விழுந்தது. அவரைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த காவல்துறையினர், 1830ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தம் புதிய அமைப்புக்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்தபோது கைதுசெய்து ஜெனோவாவின் மேற்கேயிருந்த ஸாவோனா (savona) எனும் நகரத்தின் சிறைச்சாலையில் அடைத்தனர்.

    தம்முடைய எதிர்கால வேலைகளுக்குத் தேவையான திட்டங்களையெல்லாம் சிறையிலேயே தயார்செய்திருந்த மாஜினி, 1831ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாவோனா சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தார். ஆனால் அத்திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்த இயலாவண்ணம் அதிகாரிகள் அவரை பிரான்சிலுள்ள மார்சேல் நகரத்துக்கு நாடுகடத்திவிட்டார்கள்.

    தம்முடைய 26ஆவது வயதில் மார்சேல் (Marseille) நகரத்துக்கு வந்தார் மாஜினி. இத்தாலியில் நடைபெற்ற முந்தைய புரட்சிகளில் கலந்துகொண்டு நாடுகடத்தப்பட்ட இத்தாலியர்கள் சிலர் ஏற்கனவே மார்சேல் நகரில் இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிய மாஜினி, தம்முடைய திட்டங்களை அவர்களிடம் விளக்கினார். இவற்றை நிரல்பட நிறைவேற்றினால் ஒரு தலைமுறைக்குள் இத்தாலியைச் சுதந்தர நாடாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்தார். அவர்களும் மாஜினியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள், அனைவரும் சேர்ந்து ஒரு சிறு அறையை வாடகைக்குப் பிடித்தார்கள். அதில்தான் மாஜினியின் புகழ்பெற்ற ‘இளைய இத்தாலி’ (Giovine Italia/ youth Italy) என்ற சங்கம் உதயமாயிற்று. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

    சுமார் இரண்டாண்டு காலம் இச்சங்கத்தார் சலியாது உழைத்தனர். தங்களுக்கென்று சொந்தமாக ஓர் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் தங்கள் கருத்துகளை அச்சிட்டு, இத்தாலிக்கு இரகசியமாக அனுப்பிவந்தார் மாஜினி. இவைதவிர தீவிரப் போக்குடைய பலநாட்டுப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் எழுதினார் அவர். இத்தாலியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாஜினியின் எழுத்தாலும் மாசற்ற தேசப்பற்றாலும் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைக்காக எதையும் இழக்கச் சித்தமாயினர்; அவர்கள் மாஜினியின் சித்தாந்தங்களை நாடெங்கும் பரப்பினர். இத்தாலியில் இளைய இத்தாலியின் கிளைகள் பல தோன்றலாயின.

    ஈராண்டுகளுக்குள் சுமார் அறுபதினாயிரம் பேர் இச்சங்கங்களில் அங்கத்தினர்களாயினர். இவ்வாறு இளைய இத்தாலி இயக்கத்தின் செல்வாக்கு பெருகி வருவதை ஆஸ்திரிய அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் இச்சங்கத்தில் சேர்வது குற்றமென்றும், அவ்வாறு சேருவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அது அறிவித்தது.

    பீட்மாண்ட் அரசனும் மாஜினிக்கும் அவனுடைய இளைய இத்தாலி சங்கத்தார்க்கும் எதிராகப் பல அடக்குமுறைகளைக் கையாண்டு அவர்களை ஒடுக்கினான். இதனால் மாஜினி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சிறிது காலம் சுவிட்சர்லாந்தில் மறைந்துவாழ்ந்த அவர், தம்முடைய 32ஆவது வயதில் இங்கிலாந்திலுள்ள இலண்டன் நகருக்கு வந்தார்.  அங்கேயும் கையில் பொருளின்றி அல்லலுற்றிருந்த அவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்தது சிறந்த அறிஞரான தாமஸ் கார்லைலுடன் (Thomas Carlyle) ஏற்பட்ட நட்பு. அதுபோலவே ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) எனும் அறிஞருடைய நட்பும், இன்னும்  அறிஞர்கள் பலரின் நட்பும் மாஜினிக்கு அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டன.  இவை அவருக்கு ஆறுதலையும் மனஅமைதியையும் அளித்தன.

    இந்த நண்பர்களின் முயற்சியின் பேரில் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு மாஜினி எழுதிவந்த கட்டுரைகளுக்கு அதிகமான வருவாய் கிடைக்கத் தொடங்கியது, அதனைக் கொண்டு தொழிலாளர்களின் நலனுக்காக ’Apostolato popolare’ (Apostleship of the People) எனும்  பத்திரிகையை ஆரம்பித்தார். அதனை ஆரம்பிப்பதற்கு முன்பே இலண்டனில் வசித்துக்கொண்டிருந்த இத்தாலியத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்கென்று ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார். அந்தச் சங்கத்தின் ஓர் அங்கமாகவே இந்தப் பத்திரிகையை மாஜினி வெளியிட்டார். அதில்தான் ’மனிதனின் கடமைகள்’ (On the Duties of Man) எனும் அவருடைய புகழ்வாய்ந்த கட்டுரைகளின் முதல் ஆறு பகுதிகள் வெளிவந்தன.

    1848ஆம் ஆண்டு ஐரோப்பாவில் புரட்சிகள் மிகுந்த ஆண்டாக விளங்கியது. இத்தாலியின் மக்களும் ஒன்றுபட்டு, ஆஸ்திரிய ஆதிக்கத்திற்கெதிராகப் புரட்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றனர். அதனை அறிந்த மாஜினி, இங்கிலாந்திலிருந்து மகிழ்ச்சியோடு இத்தாலி திரும்பினார். ஆனால் மக்களின் வெற்றியும் மாஜினியின் மகிழ்ச்சியும் நெடுநாள் நீடிக்கவில்லை. அப்போது இத்தாலியோடு எவ்வித நேரடி மோதலும் இல்லாத பிரான்ஸ்,  இத்தாலிக்கு எதிராகப் போரில் இறங்கியது. பிரெஞ்சுப் படையை எதிர்த்து புரட்சியாளர் கரிபால்டி (Garibaldi) தலைமையில் இத்தாலியப் படை வெகுதீரத்துடன் போராடிய போதிலும், அளவிலும் ஆற்றலிலும் மிக்கிருந்த பிரெஞ்சுப் படையை எதிர்க்க முடியாமல் அது தோல்வியைத் தழுவியது. கரிபால்டி, பிரெஞ்சு வீரர்களிடம் சரணடைய விரும்பாமல் உரோமை விட்டு வெளியேறினார்.

    இந்நிகழ்வுகள் மாஜினியை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கின. நம்பிக்கையிழந்த மாஜினி மீண்டும் இங்கிலாந்து போய்ச்சேர்ந்தார். இத்தாலியின் விடுதலைப் போருக்கு இங்கிலாந்தில் உள்ளோரின் ஆதரவைப் பெறும்பொருட்டு, இத்தாலியின் நண்பர்கள் சங்கம் (the Friends of Italy) என்ற சங்கத்தை 1851இல் ஆரம்பித்து அதில் இத்தாலி குறித்துத் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்திவந்தார்.

    எவ்வளவு முயன்றும் தம் வாழ்நாளுக்குள் இத்தாலியில் குடியாட்சியை நிறுவ மாஜினியால் இயலவில்லை. போராட்டத்திலேயே பிறந்து போராட்டத்திலேயே வளர்ந்த மாஜினியின் உடல் முதுமையால் தளர்ந்தது. ”உழைத்து உழைத்துக் களைத்துப்போன இந்த வாழ்க்கை எந்திரம் எனக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது” என்று கூறி வருந்தினார் அவர். அவரோடு அன்பு பாராட்டிப் பழகியவர்களெல்லாம் அவருடைய அந்திமக் காலத்தில் அவருக்குப் பகையாகிப் போனார்கள். அவரோடு அரசியல் போராட்டங்களில் கைகோத்திருந்த கரிபால்டிக்கும் அவருக்கும்கூட மனத்தாங்கல் ஏற்பட்டது. எனினும் இவற்றையெல்லாம் மாஜினி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

    இத்தாலியத் தொழிலாளிகளுக்கு அவர் கடைசியாக உபதேசித்தது இதுதான்! “பெருமை வாய்ந்த ஆனால் துரதிர்ஷ்டம் மிகுந்த நமது தாய்நாட்டை நேசியுங்கள்! அதன் மேன்மைக்காக அயராது உழையுங்கள்! இதுவே நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்.”

    தம் வாழ்நாளெல்லாம் இத்தாலிய விடுதலைக்காகப் போராடிய மாஜினி,1872ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி ஜெனோவாவுக்கு அருகிலுள்ளதும், சாய்வுகோபுரத்திற்குப் பெயர்பெற்றதுமான பைசா நகரத்தில் உயிர்நீத்தார். பின்னர் அவர் விருப்பப்படியே ஜெனோவா நகரத்திலிருந்த அவருடைய தாயாரின் கல்லறைக்கு அருகில் அவருடல் அடக்கம் செய்யப்பட்டது.

    உலகத்தில் அகத்தூய்மைக்கும் மனிதத் தன்மைக்கும் மதிப்பிருக்கின்ற வரையில், அதிகாரத்தையும் வெற்றியையும் காட்டிலும் தன்னலத் துறவும், கடமையுமே உயர்ந்தது என்று மன்பதை எண்ணுகின்ற வரையில், தமக்கென வாழாது தம் நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதர் மாஜினியின் பெயரும் நிலைத்திருக்கும்!

    ***********************************************

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://www.britannica.com/biography/Giuseppe-Mazzini
    2. https://en.wikipedia.org/wiki/Giuseppe_Mazzini
    3. மாஜினி – வெ.சாமிநாத சர்மா நூல்திரட்டு 5 – தமிழ்மண் பதிப்பகம்

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 259

    படக்கவிதைப் போட்டி – 259

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (24.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 258இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 258இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    தெருவில் நிற்கும் பெற்றத்தை (மாடு) இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குப் படமாகப் பெற்றிருக்கின்றோம். இந்த ஒளிப்படத்தை எடுத்த திருமிகு. ஷாமினிக்கும், இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து போட்டிக்கு வழங்கியிருக்கும் திருமிகு. ராமலக்ஷ்மிக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

    இந்தப் பசுவின் மருண்ட பார்வையில் தெரிவது என்ன?

    கன்றைப் பிரிந்த கலக்கமா?

    எசமானரைப் பிரிந்த ஏக்கமா?

    வழிமாறி வந்துவிட்ட வருத்தமா?

    கவிஞர்களைக் கேட்டு விடையறிவோம்! வாருங்கள்!

    *****

    மனிதா! நீ இயந்திரத்தை இயக்கிய நாளே இந்திய விவசாயம் கீழிறங்கிய நாள்! என் சாணியே விவசாயத்திற்கு அச்சாணி! அது முறிந்ததால் அல்லவோ உன் உடம்பு விதவிதமாய்ப் பல நோய்கட்கு ஆளானது” என்று மாட்டின்மூலம் மானுடரின் பகுத்தறிவற்ற செயல்களை வகுத்துரைக்கும் திரு. காந்திமதிநாதன், தம்முடைய மற்றொரு கவிதையில் மன்னராட்சியில் மணி நீதிக்கு; மக்களாட்சியிலோ money அநீதிக்கு என்று வார்த்தைகளோடு விளையாடி இன்றைய வாழ்க்கையை விளங்கவைக்கின்றார்.

    இந்திய விவசாயின் நிலைமை

    இறைவனுக்கு அடுத்து விவசாயியே என
    முறைப்படுத்தினான் அறத்தை வள்ளுவன்

    வள்ளுவன் போற்றிய உழவுத் தொழிலுக்கு
    மூடுவிழா நட்த்தி விட்டுவிட்டு
    அடிமைத் தொழிலுக்கு பெருநகரம் வந்த
    குடிசைவாழ் என் எஜமானரைத் தேடுகிறேன்!

    விவசாயி விலாசத்தைத் தொலைக்க வைக்க
    வகை செய்த பெரியோரே கண்டீர்களா?

    அவரும் நானும் வானும் நிலவும் போல
    நானில்லாது இருளாகிப் போனார்!

    மண்ணில் ஏர் நின்றால்
    என் துணை கைக்கொண்டால்
    மண்வளம் செழிக்கும்
    மக்கள் நலம் ஜொலிக்கும்

    என்று எங்களைத் துறந்து விளைநிலத்தில்
    இயந்திரத்தை இயக்கிய நாள் …அன்றே
    இந்திய விவசாயம் கீழ் இறங்கிய நாள்!
    விவசாயியை நீங்கள் மறந்த நாள்
    பசுமையோ மண்ணைத் துறந்த நாள்
    விவசாயியின் உயர்வைக் கறந்த நாள்!

    மானிடா கேள்!
    நான் சாணி போட்டால் உரமாகி
    விவசாயத்திற்கோ அச் சாணி அச்சாணி
    என் சாணி மறந்ததால் அச்சாணி முறிந்தது
    எண் சாண் உடம்புக்குள் விதவிதமாய் நோயினில்
    என் சாணியாய்க் காய்கிறாயே……பயிர்கள்
    காய்க்க வேண்டிய விளைநிலமோ மருத்துவமனைகளாய்!

    மும்மலத்தின் ஏகபோகப் பிரதிநிதியே!
    நும் மலமோ துர்நாற்றம்
    எம் மலமோ மலர்சூடும்….நீ என்னைப்
    பிள்ளையார் பிடிக்கும்போது
    சிந்திக்க மறந்தாயே என்ன பிள்ளையப்பா நீ?
    ஆமாம்…
    யாரப்பா சொன்னா உனக்கு
    ஓர ரறிவு அதிகமாமே என்னை விட
    அதுவும் பகுத்தறிவாமே…?!
    வெளியில் சொல்லாதே
    ஓர ரறிவும் எள்ளி நகையாடும்….!

    *****

    நீதிக்கு வீதி

    என் தொழுவத்தில் பிறந்தவர்
    ஒரு கன்னத்தில் அடித்தால்
    மறு கன்னத்தைக் காட்டு என்றார்
    அதை ஏன் மறந்தீர் என்றேன்

    குழல் ஊதிய வண்ணமே கருநிறக்
    குழலாள் ராதைக் கண்ணன் பாரதக்
    குலம் பாரினுக்குப் பரிசளித்த கீதை
    வலம் வராதது ஏன் என்றேன்

    மன்னனின் மகனால் தேர்க்காலில்
    என் இனச் செல்வம் மாண்டதை
    மன்னராட்சியிலே நீதி கேட்டதை
    மன்னவனே மணி ஓசை கேட்டு

    மணி கட்டி வைத்து நீதியை
    மக்களுக்கும் மாக்களுக்கும்
    சமம் என்ற திருநாட்டில்
    நீதி கேட்டால் தெரு வீதியில்

    மன்னராட்சி மணி நீதிக்கு
    மக்களாட்சி MONEY அநீதிக்கோ??????

    *****

    ”கெடாமலே பட்டணம் சேர்ந்த மனிதர்களோடு கூடவந்த நானோ வீதியில்; அவர்களோ தொற்றுநோய்க்கு அஞ்சி வீட்டுக்குள்!  இவர்கள் வாழ்க்கை என்று விடியும்?” என்ற சிந்தனையை அசைபோட்டு நின்றிருக்கும் மாடிது என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    விடியுமா…

    கெட்டும்
    பட்டணம் சேர் என்றார்கள்..

    இவர்கள்
    கெடாமலே கெடுவதற்காகப்
    பட்டணம் வந்தவர்கள்,
    பசுமாடும் கூடப்
    பயணம் வந்தது..

    பட்டண வாழ்க்கை
    வழக்கம்போல் ஓடியது
    வேகமாய்,
    வந்தது கொரோனா
    வாழ்வுமுறை மாறியது,
    வீட்டுக்குள் மனிதர்கள்
    வெறிச்சோடியது வீதி..

    விதியை எண்ணி
    வீதியில் பசுமாடு,
    காட்டில் மேய்ந்த
    கடந்த காலத்தை அசைபோட்டு..

    விடியுமா
    இவர்கள் வாழ்க்கை…!

    *****

    ”தொற்றுநோய் உனைப் பற்றிடாதிருக்கத் தொழுவத்துக்குச் சென்றுவிடு! கால்கடுக்கச் சாலைதனில் நின்றிடாதே” என்று பசுவுக்கு அறிவுறுத்தும் திருமிகு. சுதா மாதவன், ”பசுவதையைத் தடுத்திடவே விதி செய்வோம்! மேதினியில் பசுவினையே காத்திடுவோம்!” என்று மக்களுக்கும் நல்லுரை நவில்கின்றார்.

    கன்றினைத் தேடும் உன் பார்வை
    கனிவு மட்டுமே அதன் போர்வை
    உனையே தான் தேடிவரும் உன் கன்று
    சாலையில் நீ நிற்பது நல்லதன்று!

    கொடிய நோய் உனையும் கொன்றிடாது
    தொழுவத்தில் தனித்திருந்து காத்துக் கொள்!
    சாலைகளில் திரிந்தலைந்து நிற்பதனால்
    நீ சாதிக்கப் போவது என்ன என்ன?

    பதறிப் போய் உன் எஜமானர் தேடுகின்றார்
    பதவிசாய் அவருடனே சென்று விடு
    கால்கடுக்கச் சாலைதனில் நின்றிடாதே

    பசுவதையைத் தடுத்திடவே விதி செய்தோம்
    பாரெங்கும் மேதினியில் உனைக் காப்போம்
    கோமாதா எங்கள் குலமாதா
    என்றுமே நீ ஜகன்மாதா

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    பாசுரங்கள் உனைப் பாடித் துதித்திடவே
    காமதேனு வடிவினிலே எமைக் காப்பாய்
    உலகில் பால் வளமும் ஆறாகப் பெருகச் செய்வாய்

    *****

    ”மேய்ச்சல்நிலம் காய்ந்ததென்று புலம்பெயர்ந்து வந்த நாங்கள் அடிமாடாய்  அவலம் எய்தி வாழுகின்றோம்; இனி சொந்தமண்ணே சொர்க்கமென்று திரும்புகின்றோம்!” என்றுணர்ந்துரைக்கும் மாட்டைக் காணுகின்றோம் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனின் கவிதையில்.

    அடிமாடு

    மேய்ச்சல் நிலம் காய்ந்ததென்று
    விளைநிலம் சீர்கெட்டுப் போனதென்று
    வயக்காடு வீட்டுமனையானதென்று
    ஊரைவிட்டுப் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்…

    வந்த இடம் தந்தமிச்சம் உண்டு வாழ்ந்தோம்
    சொந்தமென்று ஏதுமின்றிச் சுற்றி வந்தோம்
    பந்துபோல அடிபட்டு ஓடிநின்றோம்
    சொந்தமண்ணே சொர்க்கமென்று திரும்புகின்றோம்….

    உழைப்பதனை உறிஞ்ச விட்டு
    உயிர் மட்டும் மிச்சம் கொண்டு
    வீடு நோக்கிச் செல்கின்றோம் – இங்கு
    அடிமாடாய் வாழுகின்றோம்…

    மாட்டை வைத்து நல்ல கருத்துள்ள பாட்டுக்களை எழுதியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பசுவின் கேள்வி?
    பிறந்து வளர் சிறு மழலைகள் – அறிவு
    சிறந்து ஒளிர் பெரியீர் இப்பாரில் பலரும்
    ருசித்துப் பருகிடப் பால் சுரக்கும் எமக்கு
    புசிக்க நற்பசும்புற்கள் அருகி நிலமெங்கும்
    நெகிழி சூழ் உலகாக்கி முப்பொழுதும்
    மகிழ்ந்தே மிகு கேளிக்கையால் குலவி
    மனம் போன போக்கதனில் நிதம் உழலும்
    மானிடப் பதர்களே இன்றியமையாதது
    நீரும் உழவுமென நெஞ்சில் நிலைநிறுத்தி
    நீவிர் மனம் மாறுவது எப்போது ?

    ”மானிடர்களே! மழலையர் முதல் பெரியோர்வரை அனைவரும் பருகிடச் சுவையான பாலளிக்கும் பசுவின்பால் அன்பின்றி பசும்புல்லை அழித்து, நெகிழிகளைப் பெருக்கி, மனம்போன போக்கில் வாழும் நீவிர், உழவின் அருமை உணர்ந்து திருந்துவதெப்போது?” என்று வினவி நிற்கும் பசுவினைத் தம் பாட்டில் காட்டியிருக்கும் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 258

    படக்கவிதைப் போட்டி – 258

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 257இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 257இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சிந்தனை முகத்தினராய்ச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கும் மூவரை ஒளிக்காட்சியாக்கிப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. அவருக்கு என் நன்றி!

    அகத்தின் அழகை மட்டுமன்று கலக்கத்தையும் முகம் துலக்கமாகவே வெளிக்காட்டும் என்பதை இம்மூவரின் முகங்களும் நன்றாகவே புலப்படுத்துகின்றன. எதனால் வந்த கலக்கமிது என்று நாம் யோசிப்பதைவிடவும் நம் கவிஞர்கள் சரியாக யோசித்துப் பதில் சொல்வார்கள் என்பதால் அவர்களையே கேட்போம்! புறப்படுங்கள்!

    *****

    ”வண்ணமிட்ட எம் கைகளுக்கு அன்னமிட யாருமில்லை; கோவில் சுவரே எங்கள் கூடுமிடம். இதுவரை நீராகாரமே எம் உணவு; இனி நீரே ஆகாரமாகும் நிலைவருமோ?” என்று நொந்த சிந்தையோடு அமர்ந்திருப்பவர்கள் இவர்கள் என்கிறார்  திரு.  ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.

    நம்பிக்கை

    வேகமான நகரத்தில்
    விரைவாக செல்வோரே
    சோகமே எங்களது
    சொத்தாகும் அறிவீரோ ?

    ஆழக் குழி தோண்டி
    அஸ்திவாரமிட்டு – பிறர்
    வாழக் கட்டிடங்கள்
    வாகாய்க் கட்டிடுவோம் !

    வானம் கைகுலுக்கும்
    வண்ணக் கட்டிடங்கள்
    எத்தனையோ நாங்கள்
    எடுத்துக் கட்டி விட்டோம் !

    சொந்தக் குடிசை என்று
    சொல்ல எதுவுமில்லை
    வண்ணமிட்ட கைகளுக்கு
    அன்னமிட யாருமில்லை !

    கோவில் சுவர் எங்கள்
    கூடும் இடமாகும் – எம்
    நாவில் உணவு படவே
    நாட்கள் பலவாகும் !

    ஆளுக்கு அரைக்குவளை
    அளவாக நீர் உண்டு
    தாவிக் குடித்தே பசித்
    தாகம் தீர்த்திடுவோம்

    நீராகாரம் முன்பு நாங்கள்
    நிதமும் பருகிடுவோம்
    நீரே ஆகாரமாகும்
    நிலை வந்து விடுமோ ?

    எங்களுக்குள் பயம்
    எட்டிப்பார்க்கும் நிதம்
    கண்களில் நீர் தாரை
    கொட்டித்தீர்க்கும் !

    தாளாப் பசியினிலும்
    தளராது எங்கள் மனம்
    உள்ளுணர்வு வந்து
    உரைத்தது மெதுவாக

    வந்துவிட்ட ஊரடங்கு
    விரைவாகத் தகருமென !
    எங்கள் வாழ்க்கை
    இயல்பாக நகருமென !

    நாங்கள் மூவருமே
    நன்று உணர்ந்திட்டோம்
    நம்பாமை இனி தாழ்வு
    நம்பிக்கையே வாழ்வு !

    *****

    ”அழையாக் கொடுநோயால் அகிலம் அல்லலுற்றாலும் உழைப்போர்க்கு உண்டி கிடைத்திட நாம் வழிகண்டிட வேண்டும்!” எனும் நியாயமான கவலையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உதவிடு உழைப்பவர்க்கு…

    உழைப்பவர் ஓய்வில் அமர்ந்திடலாம்
    ஊதியம் உழைப்பு இரண்டுமிலை,
    அழைத்திடும் வயிறு பசியினிலே
    அடங்கா ததுதான் வெறும்நீரில்,
    அழையாக் கொடுநோய் வந்ததாலே
    அல்லல் படுவார் அனைவருமே,
    உழைப்போர் உண்டிட வழிவகுத்தே
    உயிர்க்கொலும் நோயையும் ஓட்டுவோமே…!

    *****

    இரு கவிதைகளைப் படக்கவிதைப் போட்டிக்குப் படைத்துத் தந்திருக்கும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய முதற்கவிதையில், ”குடல் தின்னும் திரவமதில் மயங்கும் மானிடா! குடும்ப மானம் பறிவோவதை நீ எண்ணவில்லையா? நன்னெறிக்குத் திரும்பு! உன்னத வாழ்க்கையை விரும்பு!” என்று அறிவுறுத்துகின்றார்.

    இரண்டாவது கவிதையில், ”அரசின் வருவாய்ப் பெருக மதுக்கடலில் மக்கள் வீழ்வதா? என்று வினாவெழுப்பி, மதுவை எதிர்த்துவெல்லும் மனவுறுதி கொள்வோம்!” என்று வலியுறுத்துகின்றார்.

    எப்போது திறக்குமென்று காத்திருக்கிறாயோ?
    ஏன் இப்படியானோமென நினைக்கிறாயோ?
    கொரோனாவை அழிக்குமென இதை குடிக்கிறாயோ?
    குடும்பத்தில் நிம்மதியை குலைக்கிறாயோ?

    காடுமேடுக் காட்டில் நிற்கிறாயோ?
    காசுபணம் நிரம்ப வைத்திருக்கிறாயோ?
    குடல் தின்னும் திரவமதில் மயங்குகிறாயோ?
    குடும்ப மானம் பறிபோக நினைக்கிறாயோ?

    உன் சுற்றங்கள் நினைவில்தான் வரவில்லையோ?
    குதூகலமாய் உன் மழலைமுகம் தெரியவில்லையோ?
    தாலி கட்டியவள் கண்ணீரை நிறுத்தவில்லையோ?

    மௌனமாய் இருப்பதால் நீ
    ஞானியல்ல!
    மடைதிறந்த மது உனக்கு நல்லதல்ல!
    உடற்பயிற்சி யோகா தினம் உடனே செய்க!
    உன்னத நிலை அடைந்திடு வாழ்வை இனிதே வெல்ல!!!!!

    *****

    அரசின் வருவாய்ப் பெருக
    மதுக்கடலில் மக்களா?
    எதிர்ப்பு சக்தி தரும் என்கிறார்களே
    அதை எதிர்க்கும் சக்தி நம்மிடம் இல்லையா?
    உன் வாழ்க்கை உன் கையில்
    அமர்ந்திருந்து யோசி
    ஆவாய் நீ சன்யாசி
    புதுமைமிகு எண்ணம் எழும்
    பொலிவு பெறும் இது திண்ணம்!

    *****

    பாடுபடும் பாட்டாளிகளெல்லாம் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அவதியுறும் நிலைகண்டு குமுறி, ”நாட்டு மக்கள் நலங்காணத் திட்டம் தீட்ட வகையின்றி ஓட்டதனைக் காசுக்குப் பெறும் குடியாட்சி ஒன்றே போதும்!” என்று அங்கதமாய் நாட்டின் கேடுகெட்ட நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    போதுமென்ற மனம்!

    பாடுபட்டு தானுழைக்கும் பாட்டாளிக்குக்
    காடு வேண்டாம் கழனி வேண்டாம்
    பட்டுச் சட்டை பீதாம்பரம் வேண்டாம்
    மேலுடுத்தி மானங்காக்க ஆடை போதும்!

    வீடு கட்டி வாழ வைக்கும் உழைப்பாளிக்குக்
    கோட்டை வேண்டாம் கொத்தளம் வேண்டாம்
    தங்கம் வெள்ளி பித்தளை வேண்டாம்
    ஓய்வொடுக்க கூரை வீடு அஃதே போதும்!

    சோறு போட்டு உயிர் காக்கும் விவசாயிக்குக்
    கூழ் கஞ்சி இருந்தால் போதும்!
    பாதை போடும் தொழிலாளியை தெருவில்
    நடக்க அனுமதி தந்தால் போதும்!

    நாட்டு மக்கள் நலங்காண
    திட்டம் தீட்ட வகையின்றி
    ஓட்டதனைக் காசுக்குப் பெறும்
    குடியாட்சி ஒன்றே போதும்!

    கனவு கொண்டு முயற்சி இன்றி
    மதுக்கடையில் வாழ்வு தொலைத்து
    இலவசத்தில் வாழ்ந்திருந்தால்
    போதுமென்ற மனமே போதும்!

    *****

    விழிப்புணர்வூட்டும் வீரியமிகு சிந்தனைகளை வார்த்தைகளில் ஏற்றித் தம் கவிதைகட்குப் பொலிவூட்டியிருக்கும் கவிஞர்களைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்ந்தெடுத்திருப்பது…

    சிந்திக்கவைக்கும் மூன்று கவிதைகளை நான் சிறந்த கவிஞராக இவ்வாரம் தேர்ந்தெடுத்திருப்பவர் போட்டிக்குத் தந்திருந்தாலும் அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை இங்கே பதிவிடுகின்றேன்.

    மூவரும் உழைப்பால் மட்டுமே ஒன்றான வர்கள் அல்லர்
    உறவுமுறையிலும்

    அப்பா மகன் மருமகன்
    ஆலோசனையில் அதுவும்
    அதிதீவிர ஆலோசனையில்

    நாற்பது நாட்கள் குடியை மறந்திருந்தோம் குடிசையில்
    குடியிருந்ததோ பூரண நிம்மதி

    மறக்க முடிந்தது மதுவை
    துறக்க முடிந்தது போதையை
    வியக்கக் கண்டது புதிய பாதையை

    திறக்கட்டும் மீண்டும் கையாலாகாத அரசுகள்

    துறந்தது துறந்ததுதான்
    மறந்தது மறந்தது தான்
    மது எதற்கு இனி என்றான பின்பு
    இலவசமாய்த் தந்தாலும் மது மலமே!

    மாமா நீ உழைக்கவே வேண்டாம்
    குடிக்காம இரு பிள்ளைக்கு அப்பனாய்
    பாடம் நடத்தி விட்டாள் பெஞ்சாதி!

    குடி குடியைக் கெடுக்கும்
    வாசகம் அரசுக்குப் பொருந்தாதா?
    ஆறு வயசுப் பையன் கேட்கிறான்!

    உழைப்பவன் உயர்வாகச் சிந்திக்க மறக்கடிக்கவே மது
    அரசியல் சதுரங்கத்தில்
    உழைப்பாளிகளைத்தான்
    பகடைக்காய்களாக
    உருட்டி விளையாடுகின்றன
    ஆளுங்கட்சியும்
    எதிர்க்கட்சியும்!

    இருகட்சிகளுமே கூட்டணி
    அமைப்பர் மது விசயத்தில்!

    அமாவாசை அன்று மூடிய மதுக்கடைகளை மீண்டும்
    ஒளிமயமான பவுர்ணமி அன்று அரசு திறக்கலாம்
    குடும்பத்தை அமாவாசை இருட்டாக்கும் மதுவிற்கு
    தர்ப்பணம் பண்ணியாச்சு!

    தனிமனிதன் திருந்திய பின்பு
    எவன் குரல் எதற்கு?

    மதுக்கடைகளை மூடிப் பாரு
    முதலில் விபத்துக்கள் குறையும்
    மருத்துவமனைக்கு வேலையில்லை
    குற்றங்கள் குறையும்
    தேசபக்தி வளரும்!

    குடி குடியைக் கெடுக்கும்
    அரசும் சிந்தனை கொண்டால்
    குடி மாநிலத்தைக் கெடுக்கும்
    குடி நாட்டைக் கெடுக்கும்

    மூவர் நாங்கள் சிந்தித்து விட்டோம்
    சிந்திய வியர்வைத் துளிகள்
    பெண்டாட்டி பிள்ளைகளுக்கே!
    அவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும் மதுவிற்கல்ல!

    *****

    பூட்டிய டாஸ்மாக் இரும்பு கேட்டினை (gate) திறந்து மக்களுக்குக் கேட்டினை அளிக்கும் மதுவைத் தமிழக அரசு மீண்டும் அனுமதித்ததை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில்,  

    மறக்க முடிந்தது மதுவை
    துறக்க முடிந்தது போதையை
    வியக்கக் கண்டது புதிய பாதையை
    திறக்கட்டும் மீண்டும் கையாலாகாத அரசுகள்!

    துறந்தது துறந்ததுதான்
    மறந்தது மறந்தது தான்
    மது எதற்கு இனி என்றான பின்பு
    இலவசமாய்த் தந்தாலும் மது மலமே!” என்ற வரிகள் பொட்டில் அடித்ததைப்போல் மதுக்கடைகளைத் திறப்பதை அரசும், மது அருந்துவதை மக்களும் முற்றாகக் கைவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.  இன்றைய சூழலுக்கு அவசியமானதொரு கவிதையைப் படைத்தளித்திருக்கும் திரு. காமாட்சிநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • நாட்டார் படைப்புகளை நாடறியச் செய்த பண்பாளர்!

    நாட்டார் படைப்புகளை நாடறியச் செய்த பண்பாளர்!

    -மேகலா இராமமூர்த்தி

    அறக் கருத்துகளையும் சிறந்த வாழ்வியல் விழுமியங்களையும் தம் படைப்புகள் வாயிலாக வலியுறுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் மு. வரதராசனார் எனும்  மு.வ., என்றால் நாட்டார் படைப்புகளுக்கும் மார்க்சியச் சிந்தனைகளுக்கும் கல்விக் கழகங்களில் இடம்பெற்றுத் தந்தவர் என்ற வகையில் நம்  போற்றுதலுக்குரியவர் நா. வானமாமலை எனும் நா.வா.                                                                                                                                                                     

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் திசம்பர் 7, 1907இல் பிறந்தவர் நா.வானமாமலை. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புகுமுகப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பையும் முடித்தார். சென்னையிலுள்ள சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் பட்டம் பெற்றார். பின்னாளில் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் கார்மேகக் கோனாரின் அறிவுறுத்தலின்படி, முதுகலைப் படிப்பையும் முடித்தார். 1942 தொடங்கி சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

    சமூக ஆர்வம் காரணமாக அப் பணியிலிருந்து விலகிய அவர், அக்காலக்கட்டத்தில் முதல் தலைமுறையாகப் படிக்க வந்தவர்களுக்குத் தனிப்பயிற்சி நிலையங்களே (tuition centers) துணைநிற்பதை அறிந்து, 1948-இல் பாளையங்கோட்டையில் தனிப்பயிற்சி நிலையத்தை தொடங்கினார். அதேநேரத்தில், நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயற்பட்டார்.

    கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் நா.வா. முன்னின்றார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கல்விப் பிரிவின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

    முதல் விடுதலைப் போரின் நூற்றாண்டு விழா 1957-இல் கொண்டாடப்பட்டபோது கம்யூனிஸ்ட் தலைவர் பூர்ணசந்த்ர ஜோஷி அவர்கள், நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டார். புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை செவ்விலக்கியங்கள். ஆனால் பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்கள். எனவே பாமர மக்களின் வாழ்க்கையை அறிய நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கவேண்டிய பணி இன்றியமையாத ஒன்றே.  அதனை நன்குணர்ந்த ஜோஷி அவர்கள் தமிழிலுள்ள நாட்டுப்புறப்பாடல்களைச் சேகரித்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை மேற்கொள்ளுமாறு நா.வாவைப் பணித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நா.வா., தமிழ்நாட்டில் பரவலாக வழங்கப்பட்டுவரும் நாட்டுப்பாடல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

    அக்காலக்கட்டத்தில், வானமாமலையைப் போன்றே கி.வா.ஜகந்நாதன், செ. அன்னகாமு, பெரியசாமித்தூரன், சோமலெ போன்றவர்களும் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும், நாட்டுப்புறப் பாடல்களை அவற்றின் பொருண்மை, நிலவியல், சூழல் அடிப்படையில் வகைதொகைப்படுத்திய பெருமை நா.வா.வையே சாரும். மேலும், பாடியோர், பாடல் வழங்கும் இடம், சேகரித்தோர் பெயர் போன்ற விவரங்களையும் குறிப்பிட்டவர் அவரே. இந்தப் புதிய முறையோடு, தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்(1960), தமிழர் நாட்டுப் பாடல்கள்(1964) ஆகிய இரண்டு தொகுப்புகளை  அடுத்தடுத்து அவர் வெளியிட்டார்.

    ’தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்ற நா.வா.வுடைய நூலில் அதுவரை ஏட்டுக்கு வராத பாமரர்களின் பாடல்கள் பல பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அப்பாடல்கள் நம் சமூகத்தின் அடித்தட்டில் வாழுகின்ற உழைக்கும் மக்கள் வாழ்வில் நிகழும் அனைத்தையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

    குறிப்பாக இப்பாடல்களில் சாதிப் பிரிவினைகளால் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளும், அவற்றை எதிர்த்து அம்மக்கள் எழுப்பும் உரிமைக்குரலும் ஓங்கி ஒலிக்கின்றன எனலாம். இவற்றையெல்லாம் படித்தறிந்தால் மட்டுமே பாமர மக்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏனையோர்க்கும் தெரியவரும்.

    சான்றாகப் பொழுதடைந்த பின்பும் வீடுசெல்ல முடியாமல் முதலாளியின் பண்ணையில் மாடாய் உழைத்துக்கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளி ஒருவன் மிகவும் தயக்கத்தோடும் பணிவோடும் முதலாளியிடம் கூலி கேட்பதை விளக்கும் பாடலிது:

    வீடு ரெண்டுங் காரவீடு
    வேட்டி ரெண்டும் வெள்ளை வேட்டி
    இரக்கமுள்ள புண்ணியர்க்குப்
    பிறக்கிறது ஆண்குழந்தை!

    சம்பளமும் கட்டுதில்லை
    சாதியுள்ள மாணிக்கமே

    எங்க இர(ற)க்கம் பார்த்து
    ஏத்த கூலி போடுமையா!

    பொழுது அடைஞ்சிருச்சே

    பூமரமும் சாஞ்சிருச்சே
    இன்னம் இரங்கலையோ
    எசமானே உங்க மனம்?

    இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும் ஓர் ஏழைத் தொழிலாளியின் இரங்கத்தக்க வறுமைநிலையும், முதலாளிக்கு அஞ்சியும் அவரைக் கெஞ்சியும் அவன் கூலிபெறவேண்டிய அவலமும் படிப்போர் நெஞ்சை மட்டுமல்லாது கண்களையும் கலங்கச் செய்கின்றன.

    ’தமிழர் நாட்டுப்பாடல்கள்’ என்ற நா.வா.வின் மற்றொரு நூலும் சிறப்பான ஒன்றாகும். இந்நூல் நமக்கு அறியத்தரும் செய்திகளில் சில:

    தமிழ் மக்களிடையே வழங்கிவரும் கதைப்பாடல்களை நாம் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

    1. இதிகாசத் துணுக்குகள்
    2. கிராம தேவதைகளின் கதைகள்
    3. சமூகக் கதைகள்
    4. வரலாற்றுக் கதைகள்

    இதிகாசங்கள் என்றும் இந்தியக் காப்பியங்கள் என்றும் போற்றப்படுகின்ற இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல கதைப்பாடல்கள் தோன்றியிருக்கின்றன. கிராம மக்கள் இராமாயணத்தைவிடவும் மாபாரதத்தையே அதிகம் விரும்பிக் கேட்கிறார்கள். அதில் வரும் வீமனும் அர்ச்சுனனும் கண்ணனும் கன்னனும் (கர்ணன்) அவர்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கும் நா. வானமாமலை, சமூகக் கதைப் பாடல்களும் மக்கள் மத்தியில் புழங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்லதங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியன. இவையாவும் தமிழ்நாட்டுப் பாட்டாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைகளின் தலைமாந்தர்களாகக் கொண்டவை என்கிறார்.

    இந்நூல், தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், கேரளப் பல்கலைக்கழகத்திலும், தமிழ்த்துறையின் மூல நூலாக (source book) பயன்படுகின்றது. ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் நாட்டுப்பாடல் துறையின் சிறந்த நூலென இந்நூலைக் கருதுவது இதன் சிறப்பையும் மதிப்பையும் உணர்த்துகின்றது.

    அரிதின் முயன்று, பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து நா.வா.வும் அவருடைய மாணாக்கர்களும் சேகரித்து வெளியிட்டவை வீரபாண்டிய  கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, பழங்கதைகளும் பழமொழிகளும் போன்றவை.

    வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலின் முன்னுரையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்முவின் வாழ்க்கைச் சித்திரத்தை விரிவாகத் தந்திருக்கின்றார் நா.வானமாமலை.  கட்டபொம்மு, பாளையத்து மக்களிடம் ஈவு இரக்கமின்றி நடந்துகொண்டதையும், அதனால் அவர் அம்மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டதையும் நாட்டுப்பாடல்கள் பேசுகின்றன எனக் குறிப்பிடும் வானமாமலை, கட்டபொம்முவின் போக்கு பிடிக்காததால் அவன் வெள்ளையரை எதிர்த்தபோதும் பாளையத்து மக்கள் அவனுக்குப் பெரிதாக ஆதரவளிக்கவில்லை என்பதையும், எனினும் அவன் வெள்ளையரால் தூக்கிலிப்பட்டது அவன்மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியதையும் பதிவுசெய்திருக்கின்றார். திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட ’உயர்ந்த மனிதன்’ எனும் பிம்பம் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து மாறுபட்டவராகவே உண்மையான கட்டபொம்மு இருந்திருக்கின்றார் என்பது நாமறிய வேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.

    பன்மொழிப் புலவர் தொ.பொ. மீனாட்சிசுந்தரனார் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, நா.வா.வின் கதைப்பாடல் தொகுப்புகளை, அப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல் ஆகிய ஆறு நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டவையே ஆகும். 

    ”நாட்டார் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக இருப்பதே சிறப்பு; அவற்றை ஏட்டில் எழுதிவைத்தால் அவை நாட்டார் பாடல்கள் எனும் தகுதியை இழந்துவிடும்” எனும் விமரிசனம் சிலரால் முன்வைக்கப்பட்டபோது, அதை மறுத்த நா.வா., நாட்டார் பாடல்களையும் படைப்புக்களையும் ஏட்டில் எழுதிவைத்தால் மட்டுமே அவை அழியாமல் காக்கப்படும். இல்லையேல் அவை விரைவில் மறக்கப்படுவதோடு அழிந்தும் போய்விடும்.  ஏட்டில் எழுதிவைக்கப்படும் நாட்டார் படைப்புக்கள்கூட அப்படியே வாழும் என்று கூறுதற்கில்லை; பண்பாட்டு மாறுதல்கள் காலப்போக்கில் நிகழும்போது அவையும் தம்முடைய வடிவை மாற்றிப் புத்துருக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

    ‘Folklore’ என்பதற்கு ’நாட்டுப்புறவியல்’ என்ற மொழிபெயர்ப்பு முதலில் உருவாக்கப்பட்டது. அதற்கு ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற  மாற்றுப் பெயரைச் சூட்டி அழகுபார்த்தவர் நா. வானமாமலை.

    தமிழ்மொழி இலக்கிய ஆய்வுகளை, வரலாறு, தொல்லியல், மானுடவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பிற துறைகளுடன் இணைந்த பல்துறைக் கூட்டாய்வுகளாக வளர்த்தெடுத்ததிலும் நா.வா.வின் பங்கு முதன்மையானது. நாட்டார் வழக்காற்றியலைப்போலவே மார்க்சியம் இன்று கல்விப்புலத்தில் ஒரு முறையியலாகவும், அணுகுமுறையாகவும் நிலைபெற்றிருப்பதற்கு வித்திட்டவரும் அவரே.

    மக்கள் தம் நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் நேரிய நோக்கையும் சீரிய போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திவர் நா.வா.

    ”இந்திய நாட்டு வரலாற்றைக் கருத்தில்கொண்டால், வேத காலமே பொற்காலம் என்பர் ஆரியர்; சங்க காலமே தங்க காலம் என்பர் தமிழர். ஆனால் இவை எவையுமே உண்மையில்லை. ஏனெனில் ஒரு நாட்டின் உண்மையான வரலாறு என்பது அந்நாட்டில் வாழும் செல்வர், வறியவர், ஆண்டான், அடிமை, மேலோர் கீழோர் ஆகியோரிடையே நடந்த வர்க்கப் போராட்டங்களைப் பேசும் வரலாறே ஆகும். இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும்.  இவ்வரலாற்றைத் தனி ஒருவர் எழுதுதல் இயலாது.

    நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள், தமிழறிஞர்கள், மார்க்சியவாதிகளின் கூட்டுமுயற்சியால் இவ்வரலாறு உருவாகவேண்டும். தொடக்கத்தில் பல கருத்துவேற்றுமைகள் தோன்றுதல் இயல்பே. பல கருத்துமோதல்களின் விளைவாகவே உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் வரலாற்றை தொடக்கம் முதல் இடைக்காலம் வரை ஆராய்ந்து எழுதுதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.” என்பது மார்க்சியச் சிந்தனையாளரான வானமாமலையின் கருத்தாகும்.

    அடிப்படையான அறிவியல் நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர் நா.வா.  காகிதத்தின் கதை, இரும்பின் கதை, ரப்பரின் கதை முதலிய அறிவியல் நூல்களைச் சிறுவர்களுக்கென எழுதியவர். விண்வெளி ரசாயனம், விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியும் அதன் விளைவுகளும் போன்றவை நா.வா.வின் றிவியல் நூல்களில் குறிப்பிடத்தக்கவை.

    தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் துணை விளைவாக ‘அனைத்தும் ஆங்கிலம்’ என மாறிய சூழலில், சி. சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம் போன்ற அரசியலாளர்கள், தமிழில் அறிவியல் பாடநூல்கள் குறித்து அக்கறையும் ஆர்வமும் கொண்டனர். அத்தருணத்தில் ‘தமிழில் முடியும்’ என்னும் தொகுப்பு நூல் ஒன்றை நா.வா. வெளிக்கொணர்ந்தார்.

    1967இல் ‘நெல்லை ஆய்வுக் குழு’ என்னும் அமைப்பை உருவாக்கினார். கற்றலில்  ஆர்வம், ஆய்வில் ஈடுபாடு, அறிவியல் நோக்குடையவர்கள் எவர் வேண்டுமானாலும் இக்குழுவில் உறுப்பினராகலாம். இந்த ஆய்வுக் குழுவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்கவும் 1969இல் ‘ஆராய்ச்சி’ என்னும் ஆய்விதழைத் தொடங்கினார் நா.வா. பல்துறை அறிஞர்களின் கட்டுரைகளுடன், ஆராய்ச்சிக் குழுவினரின் கட்டுரைகளும் இந்த இதழில் வெளிவந்தன.

    தமிழகத்தில் மட்டுமன்றி ஈழ, மலேசியத் தமிழர்கள் மத்தியிலும்  மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தார் நா. வானமாமலை. அவரது இலக்கியப்பணிகளைக் கௌரவிக்கும் வகையில், அவருடைய மறைவுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அவருக்கு  “இலக்கியக் கலாநிதி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

    முதுபெரும் ஆராய்ச்சியாளர், பல துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்த புதுமைவாதி; முற்போக்கு இலக்கியவாதி; பாட்டாளி மக்களின் தோழர்; இளம் எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்த ஆசான் எனப் பல்வேறு சிறப்புகளுக்கும் உரியவராய்த் திகழ்ந்தார் நா.வானமாமலை.

    அரசர்களின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிராமல் சாமானிய மக்களின் சமூக வாழ்க்கையை, அவர்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நா.வா., மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடைமைச் சமுதாயம் நம் மண்ணில் மலர்வதே வர்க்க பேதங்களுக்குச் சாவுமணி அடிக்கும் செயலாக அமையும் என்று திடமாக நம்பியவர்.

    குழந்தைகளுக்கு நீதிநூல்களையும் புராணக் கதைகளையும் அறிமுகப்படுத்துவதைவிடவும் அறிவியல் நூல்களை அறிமுகப்படுத்துவது சிறந்தது என்பது அவரது எண்ணம். அவ்வாறே பிறநாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்வதிலும் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கின்றது. நா.வானமாமலையின் 22 நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழக மக்களுக்கு ஒல்லும் வகையிலெல்லாம் நல்லறிவு கொளுத்திச் சென்றிருக்கும் அவ்வறிஞரின் சிந்தனைகளைப் போற்றுவதும், அவர் வகுத்தளித்த பொதுவுடைமைப் பாதையில் பயணிப்பதும், அவர் விரும்பியபடி, சமூக உண்மைகளைப் பாசாங்கின்றிப் பிரதிபலிக்கும் வகையிலான தமிழர் வரலாற்றை அனைத்துத்துறை அறிஞர்களும் ஒருங்கிணைந்து எழுதுவதும் அன்னாருக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறாக அமையும்.

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் – நா. வானமாமலை, எம்,ஏ., எல்.டி., என்சிபிஎச் பிரைவேட் லிமிடெட், சென்னை – 2
    2. தமிழர் நாட்டுப் பாடல்கள் – தொகுப்பாசிரியர் – நா. வானமாமலை, எம்.ஏ., எல்.டி., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 98
    3. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் – பதிப்பாசிரியர் – நா.வானமாமலை, எம்,ஏ., எல்.டி., அச்சிட்டோர் நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை – 2
    4. https://www.hindutamil.in/news/opinion/columns/178979-.html
    Share
  • படக்கவிதைப் போட்டி – 257

    படக்கவிதைப் போட்டி – 257

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (10.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 256-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 256-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டைத் தம் படக்கருவிக்குள்  பத்திரப்படுத்திவந்து படக்கவிதைப் போட்டி 256க்கு வழங்கியிருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள படமிது. திருமிகு. ராமலக்ஷ்மிக்கு என் நன்றி!

    ”கொரோனா வைரசுக்குப் பயந்து பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது; சிறுத்தையே வெளியில் வா!” என்று நாம் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ந்து பாடும்நாள் எந்நாளோ தெரியவில்லை.

    சிந்தனையைத் தூண்டும் இந்தப் படத்திற்கு கவிவடித்துத் தர நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

    *****

    ”பணிபோனதால் பூட்டும் போனது; வாட்டும் நோயது தொற்றிடாமல் வீட்டிலிருப்போம் பாதுகாப்பாய்!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வீட்டிலிருப்போம்…

    பூட்டும் போனதே பணியின்றி
    புதிதாய் வந்தநோய்ப் பகையாலே,
    வீட்டைப் பூட்டத் தேவையில்லை
    வெளியே செல்ல வேண்டாமே,
    வாட்டும் நோயது தொற்றிடாமல்
    வருந்திடா திருப்போம் வீட்டினுள்ளே,
    ஓட்டி யதனை விரட்டும்வரை
    ஒன்றா யிருப்போம் ஒட்டாமலே…!

    *****

    பூட்டின் உபயோகத்தை, மனிதர்கள் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் இந்த இக்கட்டான காலத்திலும் பூட்டு சுதந்தரமாக வெளியுலகைப் பார்க்கும் வேடிக்கையை, திருடனிடம் செல்லுபடியாகாத பூட்டின் சாமர்த்தியத்தை எனப் பூட்டு குறித்த தம் சிந்தனைகளை மூன்று கவிதைகளில், வெவ்வேறு கோணங்களில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. காந்திமதிநாதன்.

    கவிதை 1

    ஒருநாள் தேவைப்படுவாய் என்றுதான் பூட்டே உன்னை வேலியினில் பத்திரமாக்கி இருக்கிறேன்…

    வேண்டாத பொருளென எதுவும் இல்லாத உலகில்
    வேண்டும் பொருளாகிய உன்னைப் பார்வை படும்படி பத்திரப்படுத்தி இருக்கிறேன்!

    அறிவைத் திறப்பது நூல் என்றால் உன்னைத் திறப்பது சாவி!

    அன்பைத் திறப்பது மனிதநேயம் என்றால் உன்னைத் திறப்பதும் சாவி!

    மவுனம் கடைப்பிடிக்க வாய்க்கு வார்த்தை பூட்டு என்றால் தேவைப்படும் நேரத்தில் பூட்டே நீ பூட்ட தேவைப்படுவதால் இப்போது கண்முன்னே பூட்டப்பட்டு இருக்கிறாய்!

    தனிமைச்சிறையில் நீ மட்டுமில்லை என் பூட்டே

    உலக மாந்தர்கள் பலர் ஊரடங்கு தனிமைச் சிறையில்!

    நீயாவது வெளி உலகைக் காண்கிறாய்

    உன்னை தொங்கவிட்டு வீட்டிற்குள் யானோ ஒரு மண்டலம் நோக்கி!

    *****

    கவிதை 2

    உபயோகமில்லை என நினைக்காதே! உபயோகப்படுவாய் என நினைத்தே பாதுகாப்பான இடத்தில்! பாதுகாக்க இடமா இல்லையெனக் கேட்கலாம்.. பத்திரமாக உன்னை வைத்து இருப்பதே யான் கொரானாவில் இருந்து தப்பிக்கவே…காலை மதியம் இரவு மூன்று வேளையும் உணவு உண்ண வருவார்கள் வீடற்றோர்..வீடிருந்தும் கையில் காசற்றோர்..வெளி மாநில என் இந்திய சொந்தங்கள்…காலை ஆறு மணிக்கு உன்னைத் திறந்து இரவு பத்து மணி வரையில்தான் பாதுகாப்பாக இங்கே தொடங்குகிறாய்!

    எந்தக் கைரேகையும் உன்மீது பட்டு நான் தொட்டுவிட்டால் எனது தொண்டு தடைப்படுமே என்பதாலே
    எவர் கண்ணிலும் படாமல் என் கண்களுக்கு படும்படி!

    *****

    கவிதை 3

    சாவி இல்லையேல் பூட்டே நீயில்லை..யாரிடம் சாவி இருக்கிறதோ அவருக்கே நீ சொந்தம்..திருடனிடம் செல்லாது உனது வைராக்கியம்.. குறுக்கு வழியில் செல்வதற்குத்தான் நீயும் வழி விடுகிறாய்..பலப்பல பூட்டுகள் உடைக்கப்பட்டு தான் கொலை கொள்ளைகள்…உடைபட வேண்டாமே என்பதற்காகப் பாதுகாப்புத் தேடிக் கொண்டாயோ?

    *****

    பசுமைச் செடிக்குக் காவலாய்ப் பூட்டுப் போட்டது சரியே என்று தம்முடைய முதல் கவிதையில் உரைக்கும் திருமிகு. சுதா மாதவன், பூட்டினைப் போட்டுப் பசுமையைக் காக்கும் காலத்தின் கோலத்திற்கு வருந்திப் பசுமையை எங்கும் கொணர்ந்து பாரதத்தைச் செழிக்கச் செய்வோம் எனச் சூளுரைக்கின்றார் இரண்டாவது கவிதையில்.

    கவிதை 1

    பசுமைச் செடிக்குக் காவல்போடப் பூட்டு
    சரியே
    இல்லையெனில்
    வரைபடம் வரைந்து வானுயரடுக்கு மாடி ஆகிடுமோ?
    விலைக்கு வாங்கக் கூட்டம் ஏராளமிருக்க
    பசுமைச் செடிக்குப் பூட்டு
    சரியே!

    *****

    கவிதை 2

    பசுமைச் செடிகளைப் பார்க்கும்போது
    பரவசம் மனதில் தோன்றுதே!
    செழுமையின் பிரதிபலிப்பேயெனச்
    சிந்தனை கொள்ளத் தோன்றுதே

    பூட்டினைப் போட்டுப் பசுமையைக் காக்க
    இன்றைய காலம் உருவானதே
    வளமிகு ஆற்றின் மணலை அள்ளி
    பணம் தினம் பார்க்கத் தோணுதே!

    பாய்ந்தோடும் நதிக்கரையினிலே
    பலமிகு வீடுகள் உருவானதே
    ஏரினை உழுதுச் சோற்றினைப் புடைக்கும்
    விவசாயி கண்ணில் ஏக்கம்தான் தெரியுதே!

    இவைகளைத் தவிர்த்து எங்கும் பசுமையைக் கொணர்ந்து
    வளமிகு வாழ்வை உருவாக்குவோம்!
    நோயினாலான சிவப்பு மண்டலம்
    பசுமையாய் மாற்றிப்
    பாரதம் செழிக்க உதவுவோம்!
    நாம் இந்தியரென்றே உணர்த்துவோம்!

    *****

    கொரோனாவை எதிர்த்துக் கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் இந்த உலக யுத்தத்தில் மானுட வாழ்க்கையே வீட்டுக்குள் முடங்கிப்போனது! வேலியில் இட்ட பூட்டு நம் வழி அடைத்ததை விளக்க எவருமில்லை. எனினும், இந்தப் பூட்டைத் திறக்க நாளை புதிய சாவி கிட்டும்! பூமிப்பந்து மீண்டும் புதிதாய்ச் சுற்றும் என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    கத்தியின்றி ரத்தமின்றி
    யுத்தமொன்று நடக்குது
    இருட்டுக்குள் எதிரியைத்தேடி
    என்னென்னவோ நடக்குது

    வெறிச்சோடிய வீதிகளில்
    விலங்குகள்தான் அலையுது
    வீட்டிற்குள் முடங்கிக் கிடந்து
    விரக்தியிலே மனம் தவிக்குது

    மூக்குமூடி வாய்பொத்தியே
    திருமணங்கள் நடக்குது
    எடுத்துச் செல்ல ஆட்களின்றி
    இறுதி யாத்திரைகள் நகருது

    பாதிக்கப்பட்டோர்
    பலியானோர்
    மீண்டோர்
    பட்டியலைப் பார்த்துப் பார்த்து
    பார்வை கூட மங்குது

    மூன்று திங்களாய்க்
    கொரானா என்னும்
    ஒற்றைச் சொல்லில்தான்
    உலகம் முழுமையும் சுழலுது

    எங்கிருந்தோ எதிலோ வந்து
    எங்கிருப்போர் உயிரையெல்லாம்
    ஏலம் விட்டுச் சிரிக்குது
    உலகாண்ட தேசமெல்லாம்
    செயல் மறந்து நிற்கிறது

    வேலியில் இட்ட பூட்டு அது
    வழி அடைத்தது எவ்வாறு
    விபரம் சொல்ல எவருமில்லை
    நாளை இந்த நிலை் மாறுமென
    நம்பிக்கைத் தரவும் யாருமில்லை

    ஆனாலும்
    பூட்டைத் திறக்க
    புதிய சாவியொன்று
    நிச்சயமாய்க் கிடைக்கும்
    பூமிப்பந்து அன்று
    புதிதாய்ச் சுற்றும்!

    *****

    பழமைப் பூட்டுக்கு இடப்பட்ட புது வேலியிது என்று மொழியும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன், அமைதியை அகிம்சையை அடிமைத்தனமென்று ஒதுக்கி வன்மத்தை, வன்முறையை வீரமென்று உரைக்கும் நம் புன்மையைச் சாடுகின்றார் தம் கவிதையில்.

    புது வேலி

    புதுமைகள் புகும் நல்வேளையிலே
    கலாசாரக் காவலன் நாமென்று கூவிப்
    பழமை என்னும் பூட்டுக்குப்
    புது வேலி செய்து காவலிட்டோம்..

    கண்ணியமான அன்பதனைக்
    கடிவாளம் போட்டு ஒதுக்கி வைத்தோம்
    காமக்களிக் கூத்தினையே – உண்மைக்
    காதல் என்றே காட்சி செய்தோம்..

    அமைதி சாந்தி அகிம்சையெலாம்
    அடிமைத்தனம் என்றொதுக்கி
    வன்மமும் வன்முறையும் வீரமென்று
    வருந்தலைமுறைக்குப் பாடம் சொன்னோம்..

    உண்மை நேர்மை என்பதெல்லாம்
    வெற்றிக்குதவா வீண்செயலாக்கி
    பொய்யும் புரட்டும் திறமையென – புதுத்
    தத்துவம் சொல்லி வாழுகின்றோம்…

    *****

    பூட்டுக்குள்ளே நல்ல கருத்துக்களென்னும் அதிர்வேட்டுக்களை வைத்து வெடிக்கச் செய்திருக்கும் கவிவலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பூட்டு

    எங்கெங்கோ தேடுகிறேன்
    இங்கேயா நீயிருந்தாய் ?
    வேலியின் மீதுன்னை
    வேண்டாமெனத் தொங்கவிட்டோம்

    வண்ணக் கதவுகளை உன்னை
    வைத்துப் பூட்டிடலாம் – எங்கள்
    எண்ணக் கதவுகளை – எதைவைத்துப்
    பூட்டுவது ?

    என்னுள்ளே எண்ணங்கள் வந்து
    ஏதேதோ பந்தலிடும் – ஒன்றிரண்டு
    உன்னிடத்தில் நான் இங்கு
    உரைத்திட வந்துள்ளேன்!

    எப்படிக் கேட்பதன்று பூட்டே உனக்கு
    ஏன் இத் தயக்கம் ? உனக்குத்தான்
    இரு செவிக்கு பதில் ஓர் துளை
    இருக்கிறதே! கேள்.

    இயற்கையை மறந்து விட்டு
    இயந்திரமாகிவிட்டோம்…
    விழிகளை விற்று விட்டு
    வீண் ஓவியங்கள் வாங்கிவிட்டோம்

    உல்லாச வாழ்வதனில்
    உயர் மூத்தோர் சொல் மறந்தோம்
    கொரோனாவின் கரங்களால்
    கோரமாகிப் போய் விட்டோம்.

    ஊரடங்கு வந்து எங்கள் காதுகளில்
    உரைத்தது, அது எங்களுக்கும் உறைத்தது
    விண்ணகத்து மூத்தோர் உரை
    விரைவாகப் புரிந்து கொண்டோம்

    சுத்தமும், விலகலுமே
    சுகமென்று அறிந்து கொண்டோம்
    திறவுகோலைக் கண்டுகொண்டு
    திறந்து விட்டோம் மனப் பூட்டை

    சீர்க் காவலரும், மருத்துவரும் ,
    செவிலியரும், துப்புரவுத் தோழர்களும்
    பாங்காக உழைத்தார்கள் பாரினிலே
    பூட்டே எங்களுக்குப் புரிந்தது தெளிவாக.

    வேட்கைகளை விட்டொழித்தோம்
    விடியல் வரக் காத்திருந்தோம்
    அன்பு சூழ் உலகு என்று
    அனைவருமே அறிந்து கொண்டோம்.

    ”பூட்டே கேள்!” என்று விளித்து, உல்லாச வாழ்வதனில் உயர் மூத்தோர் சொல் மறந்தோம்! ஊரடங்கு எங்கள் காதில்வந்து உரைத்ததும்தான் மூத்தோர் மொழியின் அருமை எங்களுக்கு உறைத்தது! மனப்பூட்டைத் திறந்துவிட்டோம்! அன்புசூழ் உலகே அழகானது என்று உணர்ந்துவிட்டோம்!” என்று இன்றைய வாழ்க்கைச் சூழலை எதார்த்தமாகத் தம் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 256

    படக்கவிதைப் போட்டி – 256

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கருமுகில்களுக்குப் பின்னே காய்கதிர்ச் செல்வன் தன் ஒளிமுகத்தை ஒருசிறிதே காட்டுவதைத் தம் புகைப்படக் கருவிக்குள் பத்திரப்படுத்தி வந்திருப்பவர் திரு. பார்கவ் கேசவன். இந்தப் படத்தை படக்கவிதைப் போட்டி 255க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    இந்தப் படத்தைக் காணும்போது எனக்குக் கபிலர் பெருமான் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதனினும் விஞ்சுபுகழ் கொண்டவன் வாழியாதன் என்று அவனை விதந்தோதுவது நினைவுக்கு வருகின்றது.

    ”……ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
    கடந்தடு தானைச் சேரலாதனை
    யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
    பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
    மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி

    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.”
    (புறம் – 8)

    இனி இப்படம் குறித்து நம் இனிய கவிஞர்களின் கற்பனைத் திறத்தினைக் கண்டு வருவோம்!

    *****

    மூன்று முத்தான கவிதைகளை வடித்திருக்கும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய முதற் கவிதையில் அக்னி குண்டமாய்த் தழல்வீசும் வானில் எட்டிப்பார்க்கும் நிலவைத் தம்மோடு கைகோத்து இல்லம்வர அழைக்கின்றார்.

    இரண்டாவது கவிதையில் வானில் தெரிவது சந்திரனா சூரியனா என்று ஐயவினாவெழுப்பி இவையிரண்டும் மந்திரமும் தந்திரமுமாக வாழ்வை இயக்குபவை என்று முடிக்கின்றார்.

    மூன்றாவது கவிதையில் ”நிலவே நீ முழுதாய் முகம் காட்டு! அந்தி இருள் ஓட்டு!” என்று நிலவை வாஞ்சையாய் அழைக்கின்றார்.

    செந்தழல்
    புடத்திலிட்ட தங்கம்
    அக்னிக் குண்டம்
    செங்கதிர்
    இவைகளின் வர்ணம்
    இவ்வழகிய புகைப்படத்தில்

    இதனூடே எட்டிப் பார்க்கிற சந்திரன்
    உலகின் இரவு நேர ஒளிக்குத் தயாராகி
    அதிகாலை வரை வானில் தவழ்ந்து
    இளம் மாலை வரை ஓய்வெடுத்து
    இரவுக்கு தயாராவான் தினமும்

    அழகிய நிலவே
    என் கைகளைக் கோத்துக் கொள்
    என்னுடனே வா என் இல்லம் செல்ல
    ஏகபோக உரிமை எனதாக்கிக் கொள்ள!

    *****

    காலைநேரக் கதிரவனா?
    மாலைநேரச் சந்திரனா?
    தகதகக்கும் நிறம் இரண்டும்
    மினுமினுக்கும் ஒளி இரண்டும்
    கதகதக்கும் குளிர் இரண்டும்
    கொதிகொதிக்கும் தணல் இரண்டும்
    இடைவிடாது உலகை இயக்கும் இவர்களே
    மனித வாழ்வில் மாற்றங்களைத் தரும் கோள்களே
    ஆம் கதிரவன் சந்திரன்
    வாழ்வின் மந்திரம் தந்திரம்!

    *****

    தங்க நிலா வெள்ளி நிலா
    வட்ட நிலா வடிவழகு நிலா
    மாய நிலா மவுசு நிலா
    ஒளிரும் நிலா எண்ணத் துளிரும் நிலா

    நிலா நிலா நீ இலா இலா
    நாள் இலா இலா வா அருகில் நிலா நிலா
    செவ்வான மேகங்களோடே
    கடலலையினூடே
    முகத்தை மட்டும் காட்டிடாமல்
    முழுவதுமாய் வா
    மாலை நேரம் மறைந்து
    இரவு வரக் காத்திருக்கு
    இருளை அகற்று ஒளியை ஏற்று!

    *****

    படத்திலிருப்பது கதிரா மதியா என்ற ஐயத்தோடு புகைப்படத்தை அணுகும் திரு. கருணானந்தராஜா, ”நீ கதிராயின் சீறியெழுந்து கொரோனா கிருமியைக் கொன்று உன் திறமையைக் காட்டிடுவாய்!” என்று ஆதவனுக்கு அறைகூவல் விடுக்கின்றார்.

    கதிரே உதவு!

    எல்லையிலாத இவ்வான விளிம்பில்
    இருந்தொளிர் வெண்சுடரே – நீ
    அல்லை (இரவு) முடிக்கப் பிறந்த கதிரோ
    அல்லது வெண்மதியோ
    மெல்ல மறைந்திடப் போகுதியோ இல்லை
    மீண்டெழப்போகுதியோ – என்ன
    சொல்வது என்று புரிகிலன் நானுமுன்
    தோற்றம் புரிந்திலனே.

    ஆதவனாயின் விழித்தெழு -இந்த
    அகிலம் தனை அழிக்க
    பூதமென வந்த பூஞ்சையிலும் சிறு
    பொல்லாக் கொரோனாவெனும்
    பாதி உயிரின் பரவல் தடுத்து இப்
    பாரைச் சுகப்படுத்தும்
    வேதியற் சூழலை ஆக்கிடு நீ இந்தத்
    தீதினைப் போக்கிடற்கே.

    தீச்சுடர் வீசி இவ் வானப்பரப்பினுள்
    சீறி எழுந்திடுவாய் – அலை
    பாய்ச்சி உலகை இயக்கிச் சுகம்பெறப்
    பாதையமைத் திடுவாய்
    மூச்சினில் காற்றில் முகவழியெங்கிலும்
    மூர்க்கமுடன் பரவி – பெரும்
    தீச்செயல் செய்யும் கிருமியைக் கொன்றுன்
    திறமையைக் காட்டிடுவாய்.

    *****

    ”அந்திக் கருக்கும் வானத்திலே சந்திரனை வரவேற்க இயற்கை விரித்த செந்நிறக் கம்பளம் அல்லவோ இது!” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மந்திரக் கோலம்

    அந்திக் கருக்கும் வானத்திலே
    சிந்தை மயங்கும் வேளையிலே
    சந்திரன் தன்னை வரவேற்க –
    இயற்கை செந்நிறக் கம்பளம் இட்டிருக்கும்

    விந்தைகள் ஆயிரம் செய்து தினம்
    இரவின் வாசலில் செந்நீர் தெளிக்கும்
    முந்தைய தினத்தைப் போல அன்றி – புதுச்
    சிந்தைகள் தோன்றிட வழிவகுக்கும்

    எந்திர வாழ்க்கை மறந்திடுவே
    மந்திர ஜாலங்கள் செய்து தினம்
    சுந்தர நிகழ்வைச் செய்திருக்கும்
    தந்திரன் யார் நீ சொல்லிடுவாய்!

    *****

    ”அந்திவானில் ஆதவனுக்கு மேகங்கள் முகக்கவசம் ஆகி அவனைக் காத்திட, நந்தவனத் தேராய் நிலா வானில் உலாவரும்! பாரினில் நாளும் அரங்கேறும் நாடகமிது!” என்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க
    உன் கடமை ஆற்றிட
    ஓயாமல் உதித்தெழுந்து
    கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
    தினந்தோறும் ஓடிட
    மெல்ல நகரும் மேகம்
    முகக்கவசமாய் மாறி
    கதிரவன் உன்னைக் காத்திட
    கதிர்வீசும் கரங்களை மடக்கி
    அந்தி சாய்ந்திடும் நேரம்
    நீல வானும் இங்கே
    நிறம் மாறும்
    நந்தவனத் தேராய் வரும்
    நிலவே உன்னழகு மட்டும் மிளிரவே
    இருள் சூழ்ந்து இரவாகும்
    நாளும் இதே நாடகம்
    பாரெல்லாம் அரங்கேறும்
    பகல் இரவாய்
    காலை முதல் மாலை வரை
    வேலை ஏதும் இன்றியே
    இரவு நேரப் பணியாய்
    நிலவு வந்து போகும்
    இயற்கை எனும் நிறுவனத்தில்!

    *****

    செக்கர்வானில் தெரியும் ஒளிப்பிழம்பைக் கதிராகவும் மதியாகவும் வைத்து அழகிய கற்பனைகளைக் குழைத்துக் கவிபுனைந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    இன்ப நாடகம்

    அந்தி வானை
    அழகாக்குகிறது
    அடையும் சூரியன்!

    வந்தவேலை முடித்த
    பகலவனுக்கு
    வாழ்த்துச் சொல்லும்
    பணி நிறைவுப்
    பாராட்டு விழாவுக்கு
    வானமெங்கும்
    வண்ணத் தோரணங்கள்!

    வந்துவிட்டான் தலைவனென
    வானமகளின் வதனத்தில்
    வெட்கச் சிவப்பு!

    இது
    இன்றல்ல நேற்றல்ல,
    காலம் காலமாய்த் தொடரும்
    இயற்கையின்
    இன்ப நாடகம்-
    கண்டு களிப்போமே!

    ”வந்தவேலை முடிந்ததெனப் புறப்படும் கதிரவனுக்கு வானில் தோரணங்களோடு பணிநிறைவுப் பாராட்டுவிழா நடக்கின்றது; தலைவனின் வருகை கண்டு வானமகள் நாணிச் சிவக்கின்றாள்” எனும் அழகிய கற்பனையைக் கவிதையில் செருகியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • அறவாழ்வைப் போற்றிய அறிஞர் – மு. வரதராசனார்

    அறவாழ்வைப் போற்றிய அறிஞர் – மு. வரதராசனார்

    -மேகலா இராமமூர்த்தி

    கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணியாற்றிச் சென்றிருப்போர் எத்தனையோ பேர். அவர்கள் அனைவரையும் மாணவர்கள் நினைவில் வைத்துப் போற்றுகின்றார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களில் மிகச் சிலரையே மாணவருலகம் என்றும் நன்றியோடு போற்றுகின்றது; நினைந்து மகிழ்கின்றது; அத்தகையோரில் ஒருவர்தாம் மு.வ. என்றழைக்கப்படும் மு.வரதராசனார்.

    1912-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25-ஆம் நாள்  வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் முனிசாமி, அம்மாக்கண்ணு இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் மு.வ. திருவேங்கடம் என்று ஏழுமலையானின் பெயரும், வரதராசன் என்று அவருடைய பாட்டனாரின் பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டன. வீட்டிலே திருவேங்கடமாகவும் வெளியுலகுக்கு வரதராசனாகவும் திகழ்ந்தார் அவர்.  

    திருப்பத்தூர் நகராட்சிப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும் முறையே தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் பெற்றார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் உரைநடையால் ஈர்க்கப்பட்ட மு.வரதராசனார், அவருடைய நூல்களை இடையறாது கற்றார்; அவருடைய சொற்பொழிவுகளிலும் உளம்தோய்ந்து, திரு.வி.க. எங்கு பேசினாலும் அங்குச் சென்று அவர் பொழிவுகளைத் தவறாது கேட்டார். திரு.வி.க.வோடு நெருங்கிப் பழகும் நற்பேறும் மு.வ.வுக்கு வாய்த்தது. மு.வ.வுடனான தம் நட்பைப் பற்றித் திரு.வி.க.வும் மிகவும் உயர்வாகத் தம்முடைய வாழ்க்கைக் குறிப்புக்களில் பதிவுசெய்துள்ளார் என்பது எண்ணத்தக்கது.

    1928-ஆம் ஆண்டு, தம் பதினாறாம் அகவையில், பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மு.வ., அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராய்ச் சிலகாலம் பணியாற்றினார். அங்கே கடுமையாக உழைத்ததனால் அவருடைய உடல்நலம் குன்றியது. எனவே பணியிலிருந்து விடுபட்டு வேலம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவர் தங்கியிருந்த மூன்று ஆண்டுகளையும் தமிழுக்கே அர்ப்பணித்து எண்ணற்ற தமிழ் நூல்களைத் தாமே முயன்று கற்றார்.

    1934-ஆம் ஆண்டு வித்துவான் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றார். 1935-ஆம் ஆண்டு தம்முடைய உறவினர் மகளாகிய இராதா அம்மையாரை மணமுடித்தார். திருமணத்தன்றுகூட ஆடம்பர உடை உடுத்தவில்லை மு.வ.
    மாமனார் உடை தைக்கவென்று அவருக்குக் கொடுத்த ஐம்பது உரூபாயில் முப்பது உரூபாய்க்குக் கதராடை வாங்கிக்கொண்டு, மீதமிருந்த இருபது உரூபாயை மாமனாரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

    உடுக்கவும் உண்ணவும் வழியின்றி எத்தனையோ ஏழை மக்கள் இம்மண்ணில் வாடி இருக்கையில் பட்டாடை முதலிய பகட்டை நாடுவதை அந்த நற்பண்பாளாரின் மனம் விரும்பாததே அதற்குக் காரணம். மாமனார் வீட்டில் எதைச் சுரண்டலாம், எவ்வளவு வரதட்சணை வாங்கலாம் என்பதிலேயே குறியாயிருக்கும் இன்றைய மணமகன்கள், எளிமைக்கும், மாமனார் செல்வத்தை நயவாத பெருந்தன்மைக்கும் மு.வ.விடம் பாடம் பயிலவேண்டும்.

    இல்லறத்தில் நுழைந்ததனால் கல்வியைக் கைவிடவில்லை வரதராசனார். மணமுடித்த கையோடு வித்துவான் இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சிபெற்றுத் திருப்பனந்தாள் காசிமடம் வழங்கிய தமிழ் முதன்மைக்கான 1000 உரூபாய்ப் பரிசைப் பெற்றார். 1934 முதல் 39 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

    1939-இல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்; அதே ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை விரிவுரையாளராக (tutor) பணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு அவருக்கு “கீழ்த்திசை மொழிகளின் விரிவுரையாளர்” (Lecturer in Oriental Languages) எனும் பொறுப்பு அக்கல்லூரியில் வழங்கப்பட்டது.

    1944-இல் “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்” (Origin and development of verbs in Tamil) என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1945-ஆம் ஆண்டு  பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார்.

    1948-ஆம் ஆண்டு  ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை (The treatment of Nature in Sangam Literature) என்பதை ஆய்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்றார் மு.வரதராசன். இதில் குறிப்பிடத்தக்க செய்தி யாதெனில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதன்முதலில் தமிழ்த்துறையில் முனைவர்ப் பட்டம்பெற்ற பெருமைக்குரியவர் மு. வரதராசனாரே என்பதுதான்.

    பச்சையப்பன் கல்லூரியில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பி.ஓ.எல். வகுப்பு மாணவர்களுக்கு மொழியியல் பாடமாக வைக்கப்பட்டது. ஆனால் அதனைக் கற்பிப்பதற்குரிய நூல்கள்அப்போது தமிழில் இல்லை. எனவே மொழியியல் கற்பிக்க வேண்டியிருந்த அவரே மொழியியல் நூலை எழுதும் கடமையையும் மேற்கொண்டார்.  கற்பிக்கும் பாடத்தை நூலாக்குவதும், நூலாக்கும் பாடத்தைக் கற்பிப்பதும் இரட்டை நன்மைகள் ஆயின. அவ்வகையில் வரதராசனாருடைய ’மொழியியல்’ என்ற நூல் 1947ஆம் ஆண்டிலும், மொழியியற் கட்டுரைகள், மற்றும் மொழி வரலாறு எனும் இரு நூல்களும் 1954ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. இவ்வாறு மொழியியல் கலையை முதலில் நாடெங்கும் பரப்பிய நல்லறிஞர் மு.வ. ஆவார்.

    1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய மு.வ., 1971-இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய்ப் பொறுப்பேற்று 1974 வரை அங்கே சிறப்புறப் பணியாற்றினார்.

    1972-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி (The college of Wooster) அவருக்கு டி.லிட். என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட்.  பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வரதராசனாரே என்பது நாம் எண்ணி மகிழத்தக்கது.

    மு.வ.வின் தமிழுள்ளத்திலிருந்து முதன்முதலில் வெளிப்பட்ட இலக்கிய ஆய்வுநூல், ’தமிழ் நெஞ்சம்’ என்பதாகும். பண்டைத் தமிழ்ப் புலவோரின் வாழ்வினை அவர்கள் பாடிய புறப்பாடல்களின் துணையோடு பல்வேறு கோணங்களில் ஆய்ந்திருக்கும் இந்நூல், சென்னைப் பல்கலைக்கழத்தில் இரண்டுமுறை பாடமாக வைக்கப்பட்டது. இரண்டாம் முறை பாடமாக வைக்கப்பட்டபோது கிட்டிய வருவாய் அனைத்தையும், சென்னை, ஷெனாய் நகரிலுள்ள திரு.வி.க. உயர்நிலைப்பள்ளிக்கு அள்ளிக் கொடுத்தது மு.வ.வின் தமிழ் நெஞ்சம்.

    வரதராசனாரின் பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகள் பல்வேறு நூல்களாகத் தொடர்ந்து வெளிப்பட்டன. இவற்றுள் ‘அளிநிலை பொறாஅது’ எனத் தொடங்கும் 28 அடி நீளமுள்ள அகநானூற்றுப் பாடலை விளக்க எழுந்ததே 179 பக்கங்கள் கொண்ட ’ஓவச்செய்தி’ என்ற அவருடைய நூல்.

    ’கொங்குதேர்’ என்று தொடங்கும் குறுந்தொகை இரண்டாம் பாடலை விளக்க எழுந்ததே ’கொங்குதேர் வாழ்க்கை’ எனும் நூல். ஒரே ஒரு பாடலை விளக்க எழுந்த இவ்விரு நூல்களைப் போலவே, ஒரே துறையால் அமைந்தது ’புலவர் கண்ணீர்’ என்ற நூல்; ஒரே திணையை விளக்க வந்தது ‘முல்லைத் திணை’ என்ற நூல். ஒரே பொருளால் அமைந்தது ’மணல் வீடு’ எனும் மற்றொரு நூல். இவ்வாறே நற்றிணை விருந்து, குறுந்தொகை விருந்து, மாதவி, கண்ணகி, இளங்கோவடிகள், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், குறள்காட்டும் காதலர் என்று எண்ணிறந்த இலக்கிய ஆராய்ச்சி நூல்களை எழுதிக் குவித்திருக்கின்றார் வரதராசனார்.

    இவையத்தனையையும் விஞ்சி இன்றும் மு.வ.வுக்குத் தனித்ததோர் அடையாளமாய்த் திகழ்வது திருக்குறளுக்கு அவர் வரைந்த தெளிவுரையே ஆகும். விற்பனையில் மிகப் பெரிய சாதனைபடைத்த இந்நூல், பல போட்டிகளுக்கும் கையடக்கப் பரிசாக இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது.

    மனித வாழ்வில் மடல்கள் எனப்படும் கடிதங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தொலைபேசிகளும் திறன்பேசிகளும் இல்லாத அக்காலத்தில், ஒருவரோடு ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளக் கடிதங்களே தூதுவர்களாய்ச் செயற்பட்டன. ஆனால் பெரும்பாலோர் கடிதங்களை வெறும் குடும்பச் செய்திகளின் கொள்கலமாக ஆக்கிவிடுவதே வழக்கம். அவ்வாறின்றி அவற்றை உலகச் செய்திகளையும் உயர் விழுமியங்களையும் தாங்கியவையாக மாற்றிய பெருமைக்குரியோர் மிகச்சிலரே.

    பண்டித நேரு தம் மகளார் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலக வரலாற்றைச் சுமந்திருக்கும் கருத்துப் பேழைகள் ஆயின; மறைமலையடிகள் எழுதிய கோகிலாம்பாள் கடிதங்கள் சிறந்த இலக்கியமாயின. அவைபோலவே பேராசிரியர் மு.வ. அவர்கள் அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என்ற தலைப்புகளில் எழுதிய கடிதங்கள், அறவிழுமியங்களை அறிவுறுத்தும் அறிவுப் புதையல்களாகவும், சிறந்த வாழ்க்கை வழிகாட்டிகளாகவும் விளங்குகின்றன.

    நாவல், நாடகம், சிறுகதை போன்ற துறைகளிலும் முத்திரை பதித்தவர் மு.வ. அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் பதின்மூன்று. அவற்றில், காதலின் பல்வேறு கோணங்களைச் சித்திரித்தது ’செந்தாமரை’; தாய்மையின் மகத்துவத்தைப் புலப்படுத்தியது ’பெற்ற மனம்’; பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை எடுத்துக்காட்டியது ’கள்ளோ காவியமோ?’; கலைமனத்தின் உணர்வுகளைப் படம்பிடித்தது ’கரித்துண்டு’; உணர்ச்சிக்கும் அறிவுக்குமிடையே கிடந்து அல்லலுறும் இளைஞர்களின் அவலப்போக்கை வெளிச்சமிட்டது ’அகல்விளக்கு’; அரசு அலுவலங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்டியது ‘கயமை’. மலர்விழி, அல்லி, நெஞ்சில் ஒரு முள் போன்றவை குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை விவரித்தன.

    இவற்றில் கள்ளோ காவியமோ எனும் நாவல் புனைகதை உலகில் மு.வ.வுக்கு நல்ல புகழை ஈட்டித் தந்தது. அகல்விளக்கு நாவல் 1962-இல் சாகித்ய அகாதமியின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினை வென்றது. மு.வ.வின் நாவல்களைப் படிக்கவிரும்புவோர் முதலில் படிக்க வேண்டியது அகல்விளக்கு என்பார்கள்.

    இவையல்லாமல் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், விடுதலையா, மொழிநூல் ஆகிய மூன்று நூல்களும் தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் பரிசைப் பெற்றன. பெற்ற மனம் என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும் 1960-இல் வெளிவந்தது.

    வரதராசனாரின் நாவல்கள், நாவலுக்கான இலக்கணங்களைக் கொண்டிருக்கவில்லை; அவை கருத்துரை நாவல்களாக உள்ளன என்ற விமரிசனமும் சிலரால் வைக்கப்படுவதுண்டு.

    ”நாவலை நான் வெறும் பொழுதுபோக்குக்காகப் படைக்கவில்லை; இடையிடையே ஓரிரு நிகழ்வுகளை வாசகர்களைக் கவரும்நோக்கில் நாவலில் வைத்தாலும், வாழ்வியல் முன்னேற்றக் கருத்துக்களையும் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் எடுத்துச்சொல்வதாகவும், அதே சமயத்தில் வெறும் நீதி போதனை நூலாக இல்லாதவகையிலும் நாவலை உருவாக்குவதே என்னுடைய நோக்கம்” என்று அவரே ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பது மேற்கண்ட  விமரிசனத்துக்கான விடையாகவும் அமையக்கூடியது.

    படைப்பிலக்கியங்களைப் பொதுவாகக் கலைப்படைப்புகள் என்றும் ஆய்வுப்படைப்புகள் என்றும் இரண்டாகப் பிரிப்பர். கலைப்படைப்புகளில் உணர்ச்சிகள் முக்கியத்துவம் பெறும்; ஆய்வுப் படைப்புகளில் நுண்ணிய அறிவு இன்றியமையா இடம்பெறும். படைப்பாளர்கள் ஆய்வாளர்களாக வெற்றிபெறுவது கடினம்; ஆய்வாளர்கள் படைப்பாளர்களாவதும் அரிது. ஆனால் வரதராசனாரோ கலைப்படைப்பாளராக மட்டுமன்றி ஆய்வுப்படைப்பாளராகவும் திகழ்ந்த சாதனையாளர்.

    1967-ஆம் ஆண்டு நடுவண் அரசு மு.வ.வுக்கு பத்மஸ்ரீ பட்டம் நல்கியது. ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய இந்தியை எதிர்த்தோரைக் கொடுமைக்கு ஆளாக்கிய அவ் அரசிடமிருந்து, அவ்வுயரிய பட்டம்பெற மு.வ. விரும்பாததால் பத்மஸ்ரீயை வேண்டாமெனத் துறந்தார். இச்செயல் அவருடைய மொழிப்பற்றுக்குச் சிறந்த சான்றாகும்.

    1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மதுரைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தரான மு.வ.வுக்கு அன்று எதிர்பாராதவிதமாக நெஞ்சில் கடுமையான வலியேற்பட்டதால் பட்டமளிப்புவிழா உரையைக்கூட நின்றுபேச இயலாமல் அமர்ந்தவாறே படித்தார். பின்னர் சென்னைக்கு வந்தவர், அங்கே தம் வீட்டில் நடக்கவும் இயலாமல் ஓய்ந்து படுத்துவிட்டார். மருத்துவர்களாகப் பணிபுரிந்த அவருடைய புதல்வர்களும், அவர்பால் பேரன்பு கொண்டிருந்த மாணாக்கர்களும் ஆங்கில மருத்துவடச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடல் நலம் பெறலாம் என்று அவரை வற்புறுத்தியும், இளமை முதலே இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருந்த மு.வ, அதனை ஏற்க மறுத்துவிட்டார். ஓரிரு நாள்களில் அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே, அனைவரின் வற்புறுத்தலையும் ஏற்று மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே அவருக்குப் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. எனினும் அவர் உடல் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை அக்டோபர் 10, 1974-இல் அவர் நல்லுயிர் அமைதியுற்றது.

    அகல்விளக்காய்த் தம் எளிய வாழ்வைத் தொடங்கிய மு.வ., சீரிய உழைப்பாலும், கூரிய அறிவாலும் கலங்கரை விளக்காய் ஒளிர்ந்து, தமிழறிஞர்கள் பலரையும் தமிழுலக்குக்கு உருவாக்கித் தந்த தகைமையாளர். அறவாழ்வையும் நற்பண்பையும் தம் இருகண்களாய்க் கொண்டு, அளப்பரிய தமிழ்ப்பணிகளை ஆற்றிச்சென்றிருக்கும் அத்தமிழ்ச் சான்றோரைப் போற்றுவோம்; அவர்தம் படைப்புக்களைக் கற்றுப் பயன்கொள்ளுவோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://ta.wikipedia.org/wiki/மு._வரதராசன்
    2. பெருந்தகை மு.வ.  – டாக்டர். சி. பாலசுப்பிரமணியன், எம்.ஏ, எம்.லிட், பிஎச் டி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    3. https://www.hindutamil.in/news/blogs/216584-10-2.html

    Share
  • படக்கவிதைப் போட்டி – 255

    படக்கவிதைப் போட்டி – 255

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் கலைவண்ணத்தில் உருவான இந்த நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 254க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. நிழற்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!

    ”புன்னகையால் அன்னையை மட்டுமல்லாது
    அகிலத்தையே மயக்கிடும் ஆற்றல்பெற்றது கனிமழலை!
    என்றென்றும் நிலைக்கட்டும் இந்த அழகின் சிரிப்பு!” என்று வாழ்த்திவிட்டு, இப்படத்திற்குக் கவிஞர்கள் வடித்துத் தந்திருக்கும் கற்கண்டுக் கவிதைகளைச் சுவைத்துவரப் புறப்படுவோம்!

    *****

    ”அன்னையைப்போல் அல்லாமல் நீ படிப்பில் சிறக்க வேண்டும்; உயர்ந்த நிலையும் கண்டிட வேண்டும்” என்று மழலையிடம் மனந்திறக்கும் அன்னையைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    உயர் நிலை…

    அன்னை யென்றே ஆக்கியேதான்
    அடுத்த நிலைக்கே உயர்த்திவிட்டாய்,
    என்னைப் போலப் படிப்பறிவில்
    எளிய நிலையிலே விட்டிடாமல்
    உன்னை நானும் படிக்கவைத்தே
    உயர்ந்த நிலையில் வைத்திடுவேன்,
    தன்னை யறிந்திடத் தங்கமேயுனைத்
    தகுந்த முறையில் வளர்ப்பேனே…!

    *****

    அச்சமற்ற பெண்ணாய், மங்காத பொன்னாய், தாழ்வகற்றும் தண்ணிழலாய், மடமையிருள் போக்கும் மாவிளக்காய்த் தன் பிள்ளைக்கனி திகழவேண்டும் என விரும்பும் அன்புத் தாயை நம் கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. ச. கண்மணி கணேசன்.

    பிள்ளைக்கனி

    செல்லம்மா – நீ சாதித்துப் பேர்வாங்கப் பிறந்தவள்; உன்சாதனை
    நாலுபேருக்கு வழிகாட்டி ஒளியூட்டுவதாய் இருக்கட்டும்!

    முத்தம்மா – நீ முன்னேறி மின்னப் பிறந்தவள்; உன்பாதை
    தடைக்கற்களைப் படிக்கட்டுகளாக்கும் வித்தையைச் சொல்லட்டும்!

    சின்னம்மா – நீ பதினாறும் பெறப் பிறந்தவள்; உன்இல்லறம்
    ஆலாய்த்தழைத்து அறுகாய்வேரோடி நல்லறம் ஆகட்டும்!

    அன்னம்மா – நீ நிமிர்ந்து நிற்கப் பிறந்தவள்; உன்ஆளுமை
    நாண்அச்சமின்றி மானிடம் மணக்க மிளிரட்டும்!

    தங்கம்மா – நீ என்றுமென் பேர்சொல்லப் பிறந்தவள்; உன்வாழ்வு
    மங்காத பொன்னாய்ப் புடம்போட்டு ஒளிரட்டும்!

    தாயம்மா – நீ தாழ்வகற்றத் தண்ணிழலாய் உதித்தவள்; உன்பிறவி
    சேயாகித் தரணியெங்கும் தமிழ்ப்புகழ் கூட்டட்டும்!

    நல்லம்மா – நீ எதையும் எதிர்கொள்ளப் பிறந்தவள்; உன்மேனி
    வெல்லும் அழகொடு திடம்பெற்றுப் பொலியட்டும்!

    பொன்னம்மா – நீ இலக்குநோக்கிப் பாயப் பிறந்தவள்; உன்மனம்
    மன்னும்விளக்காய் ஆயிரமாயிரம் அகலொளி ஊட்டட்டும்!

    கண்ணம்மா – நீ கற்றுக் கரைசேரப் பிறந்தவள்; உன்கல்வி
    மண்ணின் இருள்போக்கும் மாவிளக்காய்த் திகழட்டும்!

    அமிர்தம்மா – நீ சமைத்துப் பசியாற்றவும் பிறந்தவள்; இப்போது
    என்னிடம் வாநாம் ‘பப்பு கடஞ்சி’ விளையாடுவோம்!

    *****

    ”பாசப் பந்தே! பரிமளமே! பூடணம் வேண்டா ஆடகப் பொன்னே! சாதிக்கப் பிறந்தவள் நீ! உலக சரித்திரம் படைத்துவிடு!” என்று மங்கல மொழிகளால் மழலையை வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    பாசப்பந்து நீதானே
    பரிமளமாய் இருப்பவளே
    முளைப்பற்கள் வருமுன்னே
    முகம் சாய்த்துச் சிரிப்பவளே

    தத்தி நடக்கும் கால்களோடு
    தாவிப் பிடிக்கும் கைகளும்
    தாயும் பாசப்பரிவோடு உனை
    தாங்கித் தான் பிடிக்கிறாளோ?

    தங்கம் வெள்ளி உனக்கெதற்கு?
    சர்வ பூஷணம் நீதானே!
    கவலைகள் நூறிருப்பினும் உனைக்
    கொஞ்சி மகிழும் தாயவள்!

    அவள் கனவு என்னவென்று
    கேட்டு நீயும் வளர்ந்திடு
    சாதிக்கப் பிறந்தவள் நீ
    சரித்திரம் படைத்திடு
    உலக மகா சரித்திரம் படைத்திடு!

    *****

    ”அன்னை மடி மெத்தையிலே ஆடிடும் தத்தை எனக்கு அன்னையின் அன்பே உயிர்காப்பு!” என்று தாயின் உயர்வைப் போற்றிடும் சேயைக் காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    அன்பின் அரிச்சுவடி

    அன்னைமடி மெத்தையிலே
    ஆடுமொரு தத்தை நான்!
    இத்தரையில் பிறந்தவரில்
    ஈடுஇணை அற்றவள் நான்!
    உத்தமராய் இவருமெனை
    ஊட்டி தினம் வளர்த்திடவே
    எத்தனையோ பிறவிக்கடன்
    ஏட்டினிலும் எழுதவொண்ணா
    ஐயிரு திங்கள் வைத்தீன்று
    ஒப்புரவுடனே வாழ்வதற்கு
    ஓயாமல் காத்து நிற்கும்
    ஒளடதமாம் இவர் அன்பெனும்
    ஆயுதமேயென் உயிர் காப்பு!

    *****

    தாய் சேய் உறவை அற்புதமாய்த் தம் பாக்களில் நெய்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    உன்னுதட்டில் தெறிப்பதெல்லாம்
    என்னுயிரின் சிரிப்பு!
    உன்னுருவம் தானடி
    என் விழியின் சிலிர்ப்பு!

    குயிலும் குருவியும்
    சிரிக்கிறது மேலே
    உந்தன் மொழியோ
    புரிந்தது போலே!

    ஆழி அருவியின்
    ஆலாபம் சங்கீதம்
    அத்தனையும் அடங்கியதே
    அழகியுன் ரீங்காரம்!

    மகளே நீயே
    மாயக் கண்ணாடி!
    எந்தன் மறுவுருவைக்
    காட்டிவிட்டாய் முன்னாடி!

    அம்மாவென நானலற – நீ
    ஒருமுறை பிறந்தாயடி!
    அம்மாவென நீயழைக்க – நான்
    ஒவ்வொருமுறையும் பிறக்கிறேனடி!

    ”மகளே! நீயே என் உயிரின் சிரிப்பு, விழியின் சிலிர்ப்பு! மாயக் கண்ணாடியான உன்னில் என்னைக் காண்கிறேன்! நான் அம்மாவென்று அலற நீ பிறந்தாய்! நீ அம்மாவென்று அழைக்கும் ஒவ்வொரு முறையும் நான் பிறக்கிறேன்!” என்று மகளுக்கும் அன்னைக்குமிடையே பின்னிப் பிணைந்திருக்கும் உன்னத உறவை உணர்வுபூர்வமாய் விவரித்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 254

    படக்கவிதைப் போட்டி – 254

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share