-மேகலா இராமமூர்த்தி

அழகிய ஆட்டுக்குட்டிகளை தம் ஒளிப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பவர் திருமிகு நித்தி ஆனந்த். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. இவர்கள் இருவரும் என் நன்றிக்கு உரியவர்கள்!

ஆட்டுக்குட்டிகளின் இளங்கழுத்தை இறுக்கி வதைக்கும் கயிற்றைக் காண்கையில் நம் மனம் பதைக்கின்றது. இவற்றின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அது விதைக்கின்றது. இலையும் தழையும் கிடைத்தாலும் தலைக்கு ஆபத்து எப்போது வருமோ எனும் அச்சத்தோடு வாழும் நிலையில்  உயிர்களுக்கு நிறைவேது? நிம்மதியேது?

இந்தப் படம் நம் கவிஞர்களின் உளத்துள் எத்தகைய எண்ணங்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றது என்பதை அவர்கள் கவிதைவழி அளந்தறிவோம் வாருங்கள்!

*****

”ஆட்டை வளர்த்து அதன் உயிரைப் போக்குகின்ற கேட்டைச் செய்யும் மனிதரை யார் கேள்வி கேட்பது?” என்று ஆதங்கத்தோடு வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

ஆட்டுக் குட்டிகளாய்…

ஆட்டை வளர்ப்பான் அறுத்திடவே
அதிக விலைக்கு விற்றிடவே,
கேட்டைத் தந்திடும் இச்செயலைக்
கேட்க ஆளிலை அவனியிலே,
ஆட்டுக் குட்டிகள் அறியாமல்
அவனை நம்பி யிருக்கின்றன,
காட்டும் இலைகளில் மயங்கிடுதல்
காணலா மின்று மனிதரிலே…!

*****

”மானுடரே! கறுப்பு ஆடு, முள் குத்திற்று என்று தம் தவற்றுக்கெல்லாம் பிறர்மேல் களங்கம் சுமத்தும் கலையை எங்குக் கற்றீர்? எம் இனத்தின்மீது சுமத்திய வீண்பழியை ஒழிப்பீர்!” என்று கலகக்குரல் எழுப்பும் ஆட்டைத் தன் முதல் கவிதையில் காட்டுகின்ற திரு. சீ. காந்திமதிநாதன், தம்முடைய மற்றொரு கவிதையில், ”மனிதர்களே! தீநுண்மித் தொற்றுநோய் முடியும் வரையிலாவது என் ஊன்மீது கொண்ட பற்றினை ஒழிக்கலாகாதா? என்று பரிதாபமாய்க் கேட்கும் ஆட்டின் குரலைப் பதிவுசெய்திருக்கின்றார்.

கறுப்பு நிற ஆட்டின் முறையீடு:
இள ஆடும் பயம் அறியாது
நல விரும்பியாக நீயிரு
குலம் செழிக்க வாழ்த்துவேன்
பலம் பெற்ற காளிதாசன் பாட்டால்

ஆட்டை மேய்த்தவனின் பாட்டை
நாட்டை ஆண்டவனின் கோட்டை
கோட்டை விடாது கொண்டதால்
பாட்டுடைக் கவியோ நாட்டுடைமை

ஆடென எள்ளி நகை ஆடாதே – நாங்கள்
நாடாண்ட பரம்பரை சிந்தி!

வணிகத்தில் புகுந்தது
ஆங்கிலேயக் கறுப்பு ஆடு
கணித சாஸ்திரக் கலாசாரம்
கண்டதோ கறுப்பு ஏடு!

மனிதநேய பாரத
பலமே ஆனது கேடு!

தனித்தனி பிரித்தாளும் சூழ்ச்சி
பாரதத்தில் வெள்ளையன் ஆட்சி!

கோட்டையைக் கோட்டைவிட்ட
ஒற்றுமை யின்மைக்கு
வைத்துக் கொண்டதோ
கறுப்பு ஆடென
என் இனப் பெயர்
தீராத பழியப்பா

இனத்தை அழிப்பது பாவம்
இனத்தைப் பழிப்பதோ மகாபாவம்!

வாயில்லா ஜீவன் என்பதால்
வழக்காட இயலவில்லை

உலக மனித உரிமைக்
கழகம் இருந்தும்
கலகம் செய்யும்
இனப் படுகொலையைத்
தடுக்க முடியலையே!

களங்கம் சுமத்தும்
கலை எங்குக் கற்றீர்?

முள் குத்திற்று
கள்ள ரயில்
கல் தடுக்கிற்று
கறுப்பு பணம்
கறுப்பு ஆடு

மானிடா என்று நீ
உன்னை உன்னுள்
தேட முயலுகிறாயோ
அன்று தான்
வீண்பழி சுமத்த மாட்டாய்!

தன் பழி தாங்கிட முடியும்
பலிகடா வாகிய என்னால்
என் இனப்பழி முடியலை
அதனாலே இந்த முறையீடு

*****

கருணை மனு….

தேசப் பிதாவிற்குப் பால் கொடுத்தேன்
உனக்கோ தோள் கொடுக்கிறேன்
என் தோல் நீ உரிக்கலாமா?

உன் நலன் என் நலன்
உன்றனக்குத் தெரியுமா?

நெல்லை என்றால் அல்வா
தில்லை என்றால் நடராசர்
முல்லை என்றால் பாரி
எல்லை என்றால் கண்காணிப்பு

சைவம் என்றால் காய்கறி
அசைவம் என்றால் நானா?

என் கொழுப்பு மனித தேகத்தில்
அதிக நாட்கள் உறையுமாமே!
அதிக உயிர்ப்பலி வாங்குகிற
கொவைட்19 தீநுண்மி நோய்த்தொற்று
அதிக பட்சம் என் ஆயுளோ
மூவாறு ஆண்டுகள் அறிவாயோ?
மூவிரு திங்களாவது தின்னாது
வாயது கையது உன்னைக் கட்டாது
கயிறது என் கழுத்தில் பாவமே

என் படைப்பு உனதான பின்பு
தின்பதை நிறுத்து என் ஊன்
தீநுண்மி நோய்த்தொற்று
மடியும் வரையில்…

*****

”தழைகொடுத்து ஆட்டின் தலைகொய்யும் வஞ்சக எசமானர் போன்றோரே அன்பளிப்புத் தந்து அப்பாவி வாக்காளனை ஏமாற்றி ஓட்டு வாங்கும் அரசியலாளரும்” எனும் நடப்பியலைத் தம் படக்கவிதையில் பொருத்திக் காட்டுகின்றார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.

வாக்காளனுக்கு?

அன்போடு இரண்டு
ஆடுகள் அளவளாவின!

ஓராடு சொல்லிற்று,
போராடும் வாழ்க்கை
பிற உயிர்க்கெல்லாம்
நமக்கோ வேளாவேளை
நற்றளிர்கள், பசும்புற்கள்
நாவூறும் இலை தழைகள்!

நமது எசமான் இனி
நாம் தொழும் இறை
நினைவில் நீ கொள்
நம்முயிர் பிரியும் வரை!

அடுத்திருந்த ஆடு
ஆதங்கத்தோடு
பிதற்றிய ஆட்டின்
பேதைச் செவியில்
உணரும் வண்ணம்
உரக்கச் சொன்னது!

இரையும் புல்லும்
இனிதாய்க் கொடுத்து
வளர்ந்த பின்பு
வாளால் கொல்வர்
கழுத்தில் இருக்கும்
கயிறே சாட்சி!

சிரத்தைக் கொய்யும்
சிந்தை கொண்டே
ருசிக்கத் தருவர்
புசிக்கப் பலவும்!

உணர்ந்த ஆடு
உரைத்தது மெல்ல
உலகில் யாரும்
உளரோ நமைப்போல்?

ஏளனத்தோடு எள்ளி
ஏனில்லை உலகில்
இரண்டாம் ஆடு
இரைந்து சொன்னது!

அரசியல்வாதியிடம்
அன்பளிப்புப்பணம்
பெற்று வாக்களிக்கும்
பேதை வாக்காளனும்
நம்மினமே, நன்றாக
நீ உணர்வாய்.

வரையாட்டிற்குப் புரிந்தது
வாக்காளனுக்கு?

*****
”குளிர் காலத்தில் கம்பளியாகிறாய்; கொண்டாட்டங்களில் விருந்தாகின்றாய்” என்று ஆட்டின் அவலநிலைக்கு வருந்தும் திருமிகு சுதா மாதவன், கர்த்தர் உம்மை இரட்சிப்பார் என்று ஆடுகளுக்கு நம்பிக்கையூட்டவும் தவறவில்லை.

ஆகாரத்தில் நீங்கள் ஓர் அங்கம்
அசைவப் பிரியர்களுக்கு

மிரள்கின்ற உன் பார்வை
இப்படியானோமே என்றா?

குளிர்காலத்தில் கம்பளியாகிறாய்
கொண்டாட்டங்களில் விருந்தாகிறாய்

சாணத்தை உரமாக்கினாய்
பாலினைச் சத்தாக்கினாய்

கன்னங்களில் அசைப்போட்டு
மந்தையாய்ச் செல்லும் கூட்டம்

வரிசையாய் அழகாய் செல்லும்
உங்கள் ஆட்டு மந்தைக் கூட்டம்

கர்த்தரின் கைகளில் நீங்களே…
காத்து ரட்சிப்பர் அவரே
நீர் தாழ்ச்சியடையீர்!!

*****

”பலிபீடத்தில் நின்றுகொண்டு பச்சைத் தழையை இச்சையோடு உண்டுகொண்டிருக்கும் நாம் வரவிருக்கும் ஆபத்தை உணரவில்லை” என்று ஆடுகளுக்கும் ஆட்களுக்கும் சேர்த்து இரட்டுறமொழிகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்!

பலியாடுகள்

உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை
பிழைப்புக்கேற்ற தொழிலும் இல்லை
களைத்து ஒதுங்கக் குடிலும் இல்லை
வறுமையைத் தீர்க்க வழியும் இல்லை
போதை தீர்ந்த நேரம் இல்லை
பாதை காணத் திறனும் இல்லை
நாளை குறித்து திட்டம் இல்லை
பிரரைக் குறைசொல்லி வாழ்ந்துவிட்டோம்

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அதிகாரம் மாற்ற வாய்ப்பிருந்தும் -அதை
ஆயிரம் ஐநூறுக்கு விற்றுவிட்டு
எதிர்காலம் தொலைத்து விட்டோம்…

பலிபீடத்தில் நின்றுகொண்டு
பச்சைத்தழை இலைகள் உண்டு
வரும் கொடுமை உணராத
பலியாட்டு மந்தைகள் நாம்…

*****

ஆட்டுக்குட்டிகளை வைத்து நாட்டுமக்களுக்கு(ம்) நல்லறிவூட்டியிருக்கின்றார்கள் சிந்தனை வளம்செறிந்த வல்லமைக் கவிஞர்கள்; பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து வருகின்றது…

தன்னம்பிக்கை!

அம்மாவைக் காணோமே தம்பி – அட
அதற்காயேன் அழவேண்டும் வீணாக வெம்பி?
எம்மா துயர் வந்த போதும் – துணிந்(து)
இருப்போம் நாம் எப்போதும் எம்மையே நம்பி!

கண்ணாகக் காத்திட்டாள் அம்மை – நாம்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தது உண்மை!
எண்ணாமல் தன் நெஞ்சில் எம்மை – அவள்
எங்கு போய் மாண்டாளோ! எவர் செய்த தீமை?

ஆயிரம் துயர் வந்த போதும் – நாம்
அழுவதாற் பயனில்லை கலங்காதே தம்பி!
தாயவள் பாலினி இல்லை – நாம்
தழைகுழை யுண்டுதான் வாழணும் தம்பி!

காய்கின்ற வயிற்றுடன் அன்னை – வந்து
கட்டியணைத்துப் பால் தருவாளென்றெண்ணி
சேய்கள் நாம் இனிவாழலாமோ – இல்லை
தேடுவோம் உணவினை முயற்சிகள் பண்ணி!

கயிற்றினால் கட்டி வைத்துள்ளார் – நாம்
கட்டினை அறுத்துவிட் டோடுவோம் தம்பி
வயிற்றிலே பசியோடு வாடி – நாம்
வாடவோ வா உடன் சேர்ந்தறுத் தெறிவோம்!

துள்ளித் திமிறிடுவோம்நாம் – எங்கள்
சுதந்திரம் காணத் துடித்தெழுவோம் நாம்
அள்ளி அணைத்தவெம் அன்னை – தன்னை
அறுத்தபா தகர்தனை நம்பிடலாமோ?

”அன்னை வந்து பால்தருவாளென்று காய்கின்ற வயிற்றுடன் சேய்கள் நாம் இனியும் வாழலாகாது. நாமே முயன்று உணவினைத் தேடுவோம்; அதற்கு முதலில் அன்னையை அறுத்துக் கொலைசெய்த பாதகரிடமிருந்து தப்பிச் செல்வோம்” என்று ஆட்டுக்குட்டிகள் தீட்டும் திட்டத்தைத் தம் பாடலில் அழகாய் வடித்துக் காட்டியிருக்கும் திரு. சித்தி கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்

  1. வல்லமை படக்கவிதைப் போட்டியில் எனது கவிதையை வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிந்து பாராடடியமைக்கு வல்லமை பப்ளிக்கர் குழுமத்திற்கும், நடுவர் மேகலா இராமமூர்த்திக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். பங்குபற்றிய அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.