Blog

  • மாலன் வாழ்க!

    மாலன் வாழ்க!

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளராக, இதழாளராக 50 ஆண்டுகளைக் கடந்துள்ள மாலன் நாராயணன், பண்பு மிகுந்த, துணிவு மிகுந்த உரையாடல்களால் என்னைப் பெரிதும் கவர்ந்தவர். சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், அரங்கச் சொற்பொழிவுகள், நேர் உரையாடல்கள் என எந்தக் களத்திலும் இனிமையாகவும் கூர்மையாகவும் பதற்றமின்றியும் கருத்துகளை எடுத்து வைப்பவர்.

    அரசியல் வெம்மையின் அனல் பறக்கும் போர்க்களத்தில், போலிகளையும் பொய்யுரைகளையும் முரண்பாடுகளையும் உள்நோக்கம் உள்ள வதந்திகளையும் சற்றும் சளைக்காமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் சுட்டிக் காட்டிச் செல்கிறார். இதை நான் ஒரு கடமையாகச் செய்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். இதற்காகக் கடுமையான வசைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டபோதும் கர்ம யோகியாய் அவர் முன்னோக்கிச் செல்கிறார். அவரைத் தாக்குவதற்கு வேறு காரணங்கள் கிடைக்காதவர்கள், அவரது சாதியைப் பற்றிக்கொண்டு உலுக்கும்போது, அவர்களின் தோல்வியை அங்கே கண்டேன்.

    இந்தச் சச்சரவுகளுக்கு ஆட்படாமல், சர்ச்சைகளில் சிக்காமல், ஆபத்தில்லாத தலைப்புகளில் எழுதி, பேசி, அனைவருக்கும் இனியராக, நெரிசலில் எதன் மீதும் எவர் மீதும் இடித்துவிடாமல், அவர் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், உண்மையின் பக்கம் நின்று, அதை உறுதி செய்வதற்காக, தன் நேரத்தை, உழைப்பை, மன அமைதியைப் பணயம் வைத்துக் கேள்வி எழுப்புவதோடு, ஒவ்வொருவர் கேள்விக்கும் பதில் சொல்லுகையில் அவரை ஒரு போராளியாகவே பார்க்கிறேன்.

    பொய்யை அம்பலப்படுத்துவதுடன், நாட்டில், சமுதாயத்தில் ஒரு நற்செயல் நடக்கும்போது, அதை உச்சியில் ஏந்திக் கொண்டாடுபவர், அவர். எப்போதும் எதிர்ச்செய்திகளையே எதிர்பார்த்து, உருவாக்கி, பரப்பி, அதையே பூதாகாரமாக்கி, நாடே அழிவில் சென்றுகொண்டிருப்பதுபோல் நம்ப வைப்போருக்கு மத்தியில், மாலன் ஒரு குறிஞ்சி மலர். அறத்தின் பக்கம் நிற்கும் அண்ணன் மாலன் வாழ்க, அவரால் இந்த மாநிலம் மேலும் மேலும் பயனுறுக.

    ======================================

    அக்டோபர் 8 – மாலனின் பிறந்த நாள்

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 10

    2019 நவராத்திரி கவிதைகள் 10

    மரபின் மைந்தன் முத்தையா

    (06.10.2019 அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை)

    பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற
    பண்டிகைதான் நவராத்திரி
    பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து
    பவனிவரும் சுபராத்திரி
    எட்டாத உயரங்கள் எட்டிடவே செய்கின்ற
    ஏகாந்த நவராத்திரி
    எந்திரத்தில் மந்திரத்தில் தந்திரத்தில் விக்ரஹத்தில்
    ஏந்திழையாள் வரும்ராத்திரி
    கட்டான குழலோடு பொட்டோடு மலரோடு
    கற்பகத்தாள் வரும்ராத்திரி
    கயிலையிந்த மயிலையென கபாலிவந்து அமர்கின்ற
    குளக்கரையின் அருள்ராத்திரி
    எட்டடுக்கு மாளிகைக்கும் ஏழைகளின் குடிசைக்கும்
    கொலுவமர வரும்ராத்திரி
    என்னென்ன கவலைகளோ- எல்லாமே தீர்கின்ற
    ஏற்பாடு நவராத்திரி

    ——————————————————————————-

    ஆயிரம்பேர் பார்த்தாலும் அத்தனைபேர் முகங்களிலும்
    அம்பிகையின் ஜாடை இருக்கும்
    ஆயிரம்தான் முயன்றாலும் அபிராமி நினைத்தால்தான்
    ஆசைவைத்த ஏதும் நடக்கும்
    ஆயிரம்தான் வாழ்ந்தாலும் அவள்முன்னர் நின்றால்தான்
    ஆகாயம் உன்னில் திறக்கும்
    ஆயிரமா நாமங்கள்? அத்தனையும் சொன்னாலும்
    அவள்பெருமை மீதமிருக்கும்

    ———————————————————————————

    தேனிருக்கும் பூக்களெல்லாம் தேவதேவி பாதத்தில்
    தேனெடுக்க வந்து வீழும்
    ஊனிருக்கும் உயிர்களெல்லாம் உத்தமியாள் கண்டவுடன்
    உற்றவினை முற்றும் மாளும்
    வானிருக்கும் நிறத்தழகி வாத்சல்யம் பழகிவிட்டால்
    வாழ்க்கையெல்லாம் லஹரியாகும்
    மானிருக்கும் கண்கள்மேல் மயல்பிறக்கும் ஈசனுக்கு;
    மந்திரங்கள் மௌனமாகும்

    ———————————————————————————-

    நாடகங்கள் அவள்நடத்த நாமெல்லாம் ஆடுகிறோம்
    நாயகிக்குத் தெரியாததா?
    பூடகமாய் சிரித்துநிற்கும் புன்னைநல்லூர் மாரியன்னை
    பொன்னுள்ளம் கரையாததா?
    ஆடகப்பொன் பாதங்கள் அதில்பதியும் வேதங்கள்
    அம்பலத்தில் ஆடாததா?
    ஏடெடுத்து நாமெழுத எழுத்தாகி வருவாளே
    ஏழைமனம் அறியாததா?

    —————————————————————————————-

    ஜாமங்கள் அடங்குகையில் சலங்கையொலி கேட்கிறதே
    சியாமளையாள் வரும்நேரமே
    நாமங்கள் மொழிகையிலே நாநடுங்க கண்கலங்க
    நாமுருகும் அருள்நேரமே
    காமங்கள் மாற்றுகிற காருண்யை அருள்நம்மை
    காப்பாற்ற இதுநேரமே
    ஓமென்ற ரூபத்தில் ஓங்காரி எழும்நேரம்
    ஓயாத வினை ஓயுமே

    —————————————————————————————–

    விழிகளெனும் சமுத்திரத்தில் விடுகதைகள் ஏந்திநிற்கும்
    வித்தகியைப் போற்றுகின்றோம்
    மொழியென்ற படகேறி மனமென்ற துடுப்போடு
    சக்திகடல் மேவுகின்றோம்
    வழிதேடி அழும்போது வீதிமுனை திருப்பத்தில்
    விளக்காக நிற்கிறாளே
    பழியேதும் சூழாமல் பாவங்கள் நேராமல்
    பைரவி காக்கிறாளே

    —————————————————————————————–

    கிளிநின்ற தோளோடு  குயில்வென்ற குரலோடு
    கதைபேசக் காத்திருக்கிறாள்
    களிநின்ற மனதோடு கைகூப்பும் நேரத்தில்
    கண்ணெதிரே பூத்திருக்கிறாள்
    வெளிநின்ற கோலத்தில் வெளியெங்கும் நிறைந்தாளே
    வெறிகொண்டு ஆடுவாளே
    தெளிநின்ற ஞானத்தைத் தருகின்ற பராசக்தி
    தினம்நம்மை ஆளுவாளே

    —————————————————————————————

    தவள் எங்கள் மாசக்தி தயாபரி நிற்கையில்
    தயக்கங்கள் நமக்கேதடா
    கவளங்கள் ஊட்டுவாள் கவசங்கள் பூட்டுவாள்
    கவலைகள் நமக்கேதடா
    சிவமெங்கள் தந்தையாம் சக்தியே அன்னையாம்
    சஞ்சலம் நமக்கேதடா
    நவமாக உயிர்சுடர, தவமாக மனம்பொலிய
    நாளுமவள் முகம்பாரடா.

    Share
  • மகிழ்ச்சியைத் தேடலாமே!

    மகிழ்ச்சியைத் தேடலாமே!

    நிர்மலா ராகவன்

    (நலம், நலமறிய ஆவல் – 169)

    நமக்கு யாரைப் பிடித்துப் போகிறது?

    நமக்குள் இருக்கும் நற்குணங்களை, திறமைகளை வெளிக்கொணர்பவர்களை.

    இது புரியாது, சிலர் தம்மிடம் நெருக்கமாக உள்ளவர்களிடமே தம் `பராக்கிரமத்தைக்’ காட்டுவார்கள்.

    குடும்பத்தினரிடம் தம் அதிகாரத்தை (வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ) நிலைநாட்ட முயல்பவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள்?

    எனது இக்கேள்விக்கு விரிவாக விளக்கமளித்த உளவியல் நிபுணர், “இவர்கள் எப்போதும் போர்க்களத்திலேயே இயங்குபவர்கள்!” என்றார்.

    இவர்களுடைய போராட்டம் தமக்குள்ளேயேதான். ஏதோ ஒருவித பாதுகாப்பின்மையால் உசுப்பப்படுகிறார்கள். இவர்களுக்குச் செல்வம், புகழ், பதவி எல்லாம் இருக்கக்கூடும். ஆனாலும், அவை போதாமல் போய்விடுகின்றன.

    போரில் ஈடுபடுகிறவர்கள் தம்மைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள், இல்லையா? எப்படித் தாக்கினால் எதிராளி தன் வசமாவான் என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள். அப்போது அவர்களுடைய மனம், கண் இரண்டிலும் விழிப்புணர்வு கூர்மையாக ஆகிவிடும். பலசாலியாக உணர்வார்கள். அவர்களுக்கு உவகை அளிக்கும் நிலை இது.

    ஆனால், எத்தனை நேரம்தான் இந்த நிலையிலேயே இருக்க இயலும்! விரைவிலேயே உடல் களைத்துவிடும். உடனே மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வார்கள். இதுவும் ஒருவித போதைதான்.

    இவர்கள் தாமே தம் குறையைப் புரிந்துகொண்டு, திருத்திக்கொள்ள முயன்றால் மாறலாம். ஆனால், தம்மிடம் குறை இருக்கிறதென்று எத்தனைப் பேர் ஒப்புக்கொள்வார்கள்?

    ஒருவரை அவருடைய குறைகளுடன் அப்படியே ஏற்கும் தன்மை இருந்தால்தான் இத்தகையவர்களுடன் சேர்ந்து வாழ முடியும். இதுதான் உண்மையான காதல், இதனால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கிறார்கள்.

    கதை

    Legally blind என்ற அடையாளத்துடன் கண்பார்வை மிகக் குறைந்த நிலையில் இருந்த பெண்ணைக் காதலித்து மணந்தான் தர்மராஜ்.

    `இப்படிக்கூட மணப்பார்களா!’ என்று பார்ப்பவர்கள் அதிசயித்தார்கள்.

    அப்பெண் திறமைசாலி, எதையும் முன்னின்று நடத்தும் ஆற்றல் அவளுக்கு இருந்தது என்பதைச் சில நிமிடங்களில் அவளுடன் பழகியதுமே எனக்குப் புரிந்தது.

    தன் தாயைப் போன்று அன்பைப் பொழிபவள் என்ற உறுதியுடன் தர்மராஜ் அவளைத் தேர்ந்தெடுத்திருந்ததில் வியப்பில்லை. பயந்த சுபாவம் கொண்ட அவனுக்கும் அவள் உறுதுணையாக இருப்பாள்.

    `தன்னைப் பிறர் கேலி செய்வார்களோ? பிறர்முன் மனைவியைப் பெருமையாகக் காட்டிக்கொள்ள முடியாதே!’ என்றெல்லாம் தர்மராஜ் குழம்பவில்லை. தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்தான். அதனால் நிறைவு அடைந்தான்.

    மனைவியின் குறையால் அவள் என்றும் தன்னைச் சார்ந்திருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இருவருமே தனித்து இயங்கினார்கள். இணைந்தும் செயல்பட்டார்கள். அக்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவியது.

    தற்காலத்தில் மனிதன் மகிழ்ச்சியை இழந்துவிட்டு, எங்கெங்கோ அதைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

    இன்றைய உலகம் தொழில் துறையைச் சார்ந்ததாக ஆகிவிட்ட நிலையில், எல்லாவற்றையும் முதலிலேயே திட்டமிடுகிற நிலை வந்துவிட்டது. பலரும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை.

    பெற்றோரைவிட அதிகமாகச் சாதித்துக் காட்டவேண்டும் என்று சிலர் தமக்குத் தாமே விதித்துக்கொள்கிறார்கள். குடும்பம், குழந்தைகளின் கல்வி, அதிலும், எந்த விதமான கல்வி, என்று எதிர்காலத்தைப் பற்றிப் பற்பல யோசனைகள் எல்லா நேரமும். இதனால், எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது.

    விடுமுறைக்காக ஓரிடத்திற்குச் செல்லுமுன்கூட, ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லாவற்றையும் திட்டமிட, புதிதாக எதையும் கற்கும் திறனும் ஆர்வமும் மறைந்துவிடுகிறது.

    கதை

    `நீ தைரியசாலி. புத்திசாலி. எல்லாவற்றிலும் முதலாவதாக விளங்கவேண்டும்,’ என்று பலவாறாக உற்சாகமூட்டப்பட்டு வளர்ந்த பாஸ்கர், நிறைய சாதித்தான். ஆனால், அவனுக்கென்னவோ மகிழ்ச்சி கிடைக்கவில்லை. தன் வளர்ச்சியால் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருகிறோம் என்ற உணர்வுதான் இருந்தது.

    `ஏன் எனக்கு எதிலுமே நிறைவில்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.

    எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மை வெறியாகவே மாறிவிட்டதை உணர முடிந்தது.

    வாழ்க்கை நிரந்தரமில்லை. அதை நம் செய்கையால் கட்டுப்படுத்துவது என்பது நடக்காத காரியம்; எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையிலேயே காலத்தைச் செலவழிப்பதைவிட நிகழ்காலத்தில், தன்னைச் சுற்றி நடப்பதில் கவனம் செலுத்தினால்தான் நிறைவு ஏற்படும் என்ற ஞானம் பிறந்தது.

    `இதனால் எனக்கு என்ன ஆதாயம்?’ என்று கேட்டுக்கொண்டுதான் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபடுகிறார்கள் பலரும். `

    இது என்ன வாழ்க்கை!’ என்று சலித்துக்கொள்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு காரியத்தைச் செய்தால் புத்துணர்வு பிறக்கும்.

    தான தர்மம் செய்பவர்கள் அனைவரும் புகழை எதிர்பார்த்துச் செய்வதில்லை. தம் ஆத்ம திருப்திக்காக நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மனநிறைவு அடைவதே வெற்றிக்கான அறிகுறி.

    பாஸ்கரும் இனி போட்டிகளில் கலந்துகொண்டு, பிறரை வீழ்த்தி, அதனால் தான் மகிழக் கூடாது என்று முடிவெடுத்தான். பிறருக்கு உதவுவது போன்ற சிறு விஷயங்களால் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

    சில வயதானவர்களைப் பாருங்கள். பேரங்காடி, பூங்கா போன்ற பொது இடங்களுக்கு வருவார்கள். அதிகமாக நடக்கக்கூட முடியாத நிலையில். அங்குப் போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது வேறு யோசனைக்கு இடமில்லை.

    இவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டு, `இப்படிச் செய்திருக்கலாமோ?’ என்று மாற்ற முடியாததைப் பற்றிய வீண் யோசனைகள் செய்யவில்லை. அமைதியை அடைவது எப்படி என்று புரிந்தவர்கள்.

    பலருக்கு இது புரிவதில்லை. ஓயாது புலம்பி, தம்மைச் சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் குலைக்கிறார்கள்.

    உதாரணமாக, திருமணமாகிச் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பின் ஏதோ காரணத்தால் மனத்தளவில் பிரிகிறவர்கள், வருத்தத்திலேயே ஏன் உழலவேண்டும்? இன்பமாக கழித்த நாட்களையும் அவ்வப்போது நினைக்கலாமே!

    கதை

    அழகிற்காக பைரவியை மணந்தான் செல்வந்தனான ஜெயன்.

    பத்து வருடங்கள் எந்தத் தொல்லையும் இருக்கவில்லை. அதன்பின், அந்த வாழ்க்கை அலுப்புத் தட்ட, சூதாட்டத்தில் இறங்கினான் ஜெயன். சர்வகாலமும் அந்த நினைவிலேயே மனம் சுழல, மனைவியுடன் இருந்த நெருக்கம் குறைந்தது. பணமும் கரைந்தது.

    ஆரம்பத்தில் கணவனிடம் பணிவும் மரியாதையுமாக இருந்த பைரவி மாறினாள். சீறினாள். அவளுடைய வாய்வீச்சைத் தாங்க முடியாது, ஜெயன் இன்னும் விலகிப் போனான்.

    `எல்லாக் கல்யாணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை!’ என்று கூற ஆரம்பித்தாள் பைரவி. அவளுடைய மனநிலை கெட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் குறை காணத் தோன்றியது.

    தான் செய்தது தவறுதான் என்று ஜெயன் ஒப்புக்கொண்டாலும், அப்பழக்கத்தை விடமுடியவில்லை.

    ஒரு பதின்ம வயதுப்பெண் பேரங்காடிகளில் நடந்த பல போட்டிகளில் வெற்றிபெற்று, நிறைய சாமான்களை பரிசாகப் பெற்றாள். பல முறை.

    அப்படி ஒரு போட்டியில் நானும் வெற்றி பெற்றபோது, அவளுடைய தந்தை என்னிடம் கூறினார், “நாங்கள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. அப்படியே அனாதை இல்லங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்!”

    அவர்கள் அப்படியொன்றும் செல்வந்தர்களில்லை.

    அவர் கூற்றை ஆதரிக்கிறார் ஒரு சமூக சேவகி. “கிடைப்பதைப் பகிர்ந்துகொண்டால்தான் மகிழ்ச்சி நிலைக்கும்.   இறைக்கிற கிணறு சுரப்பது இல்லையா? அதுபோல்தான் நாம் கொடுப்பதும் விரைவிலேயே வேறு விதத்தில் கிடைத்துவிடுகிறது”.

    இந்த உண்மை புரியாதவர்களே மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    Pic courtesy: https://www.maxpixel.net

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 9

    2019 நவராத்திரி கவிதைகள் 9

    -மரபின் மைந்தன் முத்தையா
    வெண்ணிறப் பாற்கடல் மத்தியிலே
    வெண்ணிலவாக எழுந்தவளாம்
    தண்ணந் துழாயணி கேசவனின்
    திருமார் பினிலே அமர்ந்தவளாம்
    எண்ணிய யாவையும் நிகழ்ந்திடவே
    என்றும் இன்னருள் பொழிபவளாம்
    வண்ணத் திருமகள் திருவடிநம்
    வாசலில் வைத்தால் வாழ்ந்திடுவோம்
    பாம்பணை துயில்கிற பேரழகி
    பிள்ளைகள் பசியைப் போக்கிடுவாள்
    தேம்பும் மனங்களை தேற்றிவைத்து
    தேடரும் செல்வங்கள் ஆக்கிடுவாள்
    தாம்புக் கயிற்றினில் கட்டுண்ட
    தாமோதரனின் மனையரசி
    ஆம்நம் அன்பினில் சிறைப்படுவாள்
    ஆயிரம் நன்மைகள் அளித்திடுவாள்
    செக்கச் சிவந்த தாமரையே
    சிம்மா சனமாம் அவளுக்கு
    தக்க தருணத்தில் தனம்தான்யம்
    தருவது வழக்கம் அவளுக்கு
    பக்கம் இருந்து பாலூட்டி
    புகழ்வரும் விதமாய் ஆளாக்கி
    எக்கணமும் எமை ஆண்டிடுக
    இலட்சுமி  தேவியே காத்திடுக!!
    Share
  • சனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக் கூட்டு கண்டுபிடிப்பு

    சனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக் கூட்டு கண்டுபிடிப்பு

    New Organic Compounds Found in Enceladus Ice Grains

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++++++++++++

    NASA Cassini Satellite that found New Organic Compounds in Enceladus

    enceladua-water-springs

    Saturn’s Moon Enceladus]

    NASA ‘S Satellite Cassini identifying the Water Sprays

    ++++++++++++++

    சனிக்கோளின் துணைக்கோளில்
    பனித்தளம் அடித்தளக் கடலாகக்
    கொந்தளிக்கும் தென் துருவம் !
    தரைத்தளம் பிளந்து
    வரிப்பட்டை  வாய்பிளக்கும் !
    முறிவுப் பிளவுகளில்
    பீரிட்டெழும்
    வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் !
    முகில் மயமான  அயான் வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    அமினோ அமிலமாய்
    விண்வெளியில் பீச்சி எழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும் மீண்டும் திறக்கும் !
    நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் !
    வாயிலை வெப்ப மாக்கும் !
    அடித்தளப் பனிக்கடல்  உருகி
    எப்படித் தென்துருவ ஆழத்தில் 
    வெப்ப நீரானது ?
    ஊற்று நீரெழுச்சியாய் வெளியேற,
    உந்துவிசை அளிப்பது எது ?
    குளிர்க்கோளில் விந்தை  நீரூற்றுகள் !
    புரிந்தும் புரியாத
    பிரபஞ்ச நீர்மயப் புரட்சி !

    ++++++++++++++++++++

    Enceladus Ocean Sprays with Amino Acids

    என்சிலாடஸின் சக்தி வாய்ந்த உந்து ஊற்றுகள் என்சிலாடஸிஸ் சிறு  ஊற்றுகளாக எளிதில் வெளியாகி விடும் .  நமது பூமியில் இதுபோல்  ஆற்றல் மிக்க நீர் ஊற்றுகள் புதிய கண்டுபிடிப்பான அமினோ அமில மூலக்கூறுகளோடு சேர்ந்து, உயிரினத் தோற்றம் உருவாக ஏதுவாகிறது.  அமினோ அமிலங்கள் நைட்டிரஜன், ஆக்சிஜன் சேர்ந்த மூலக்கூறுகள்.

    enceladus-water-springs

    என்சிலாடஸ் துணைக்கோளில் நீரெழுச்சி ஊற்றுகள்

    காஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளை 24 முறை சுற்றி வந்து சுழலீர்ப்பு உந்துவிசை [Gravity Swing Flyby Force]  மிகையாகி, அவற்றில் ஏழுமுறைத் தென்துருவ நீரெழுச்சி ஊற்றுகள் [Water Geysers] ஊடே புகுந்து ஆழமாய் ஆய்வுகள் செய்தது.  பாதி விஞ்ஞான ஆய்வுகள் முடிவதற்குள், சில சமயம் வேறான திசையில் சென்று, எதிர்பாராத அற்புதக் கண்டுபிடிப்புகள் நேர்ந்துள்ளன.  அவ்வாறே காஸ்ஸினியின் சின்னஞ் சிறிய காந்தப் பரிமாணக் கருவிச் சமிக்கை [Magnetometer Signal] அபூர்வமாய்த் துணைக்கோளில் நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.

    சக்தி  வாய்ந்த மனிதர்

    லிண்டா ஸ்பில்கெர் [நாசா காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி]

    முக்கிய விளைவு : சூரிய மண்டலத்திலே எதிர்பாராத விதத்தில் உயிரின வசிப்புச் சூழ்வெளித் தகுதி [Habitable Environments] பெற்றுள்ள கோள்கள்  உள்ளன.  என்சிலாடஸ் துணைக்கோள் தள உஷ்ணம் சுமார் [-180 C] [-292 F].  ஆனால் வியப்பாக அத்தளத்தின் கீழே  திரவநீர்க் கடல் உள்ளது.

    லுசியானோ ஐயஸ் [Luciano Iess] காஸ்ஸினி  தலைமை ஆய்வாளி

    காஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளைச் சுற்றிவந்து உந்துவிசை மிகையாகும் சமயத்தில் ஈர்ப்புவிசை மாற்றத்தை அளக்க முயலும் போது, அதன் மாறுபாட்டுக்கு ஏற்ற முறையில் விண்ணுளவியின் வேகத்தில் தடுமாற்றம் பதிவாகிறது. [Gravity changes due to Liquid water presence near South pole]. இந்த வேக மாற்றம் வானலை அதிர்வு [Radio Frequency] மாற்றமாகப் பதிவாகிறது.

    ஸாமி ஆஸ்மார் [ Co-Author NASA Jet Propulsion Laboratory,California] 

    Image result for enceladus hidden ocean

    சனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததன் குறிப்புணர்வு,  நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராதவாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான  வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே.   என்செலாடஸ் மேல்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F].  ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர்.   கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே  உள்ளது என்று கணிக்கப்படுகிறது.  கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில்,  பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.

    லுசியானோ  ஐயஸ்  [ரோம், ஸபைன்ஸா பல்கலைக்கழகப் பதிவுத் தலைமை ஆசிரியர்] 

    திரவக்கடல் துணைக்கோள் தென் துருவக் கோளத்தில், பனித்தட்டுக்குக் கீழே தொடங்கி, மத்திய ரேகை வரை பரவி இருக்கலாம்.  அது கோள் முழுதும் நிரம்பி இருக்கலாம் என்னும் கருத்து நிராகரிக்கப்படவில்லை.  அந்தக் கடல் நீரே துணைக்கோளில் நீரெழுச்சிகளாக, உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான கார்பன் சேர்ந்த ஆர்கானிக் கலவைகளுடன் வெளியேறுகின்றன. அவையே விண்வெளியில் பனித்துண்டங்களாக, நீரக ஆவியாகச் [Ice & Water Vapor] சனிக்கோளைச் சுற்றி வளையங்களாக அமைந்துள்ளன.

    டேவிட் ஸ்டீவென்சன் [Co-Author, California Institute of Technology]

    Image result for enceladus hidden ocean

    அபூர்வ மின்னலைச் சமிக்கை நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது

    2017 பிப்ரவரி 19இல் வெளியான விஞ்ஞான அறிக்கையில், நாசா விண்ணுளவி காஸ்ஸினியின் காந்தப் பரிமாணக் கருவி [Magnetometer], சனிக்கோளின் துணைக்கோளான என்சிலாடஸைச் சுற்றி ஈர்ப்பு விசையால் வேகம் மிகையாகி, மின்னலை மாற்றச் சமிக்கை [Change in Radio Singnal] பெற்ற போது, தென் துருவக் கோளப் பகுதியில் நீர்க்கடல் இருப்பது மெய்யானது.  அந்த அபூர்வச் சமிக்கை குளிர்ந்து போன, வாயு இல்லாத துணைக் கோளைக் காணவில்லை.  அதற்குப் பதிலாக நீர் ஆவி, வாயுக்கள் வெளியேற்றும் வால்மீன் போன்ற, ஓர் இயக்கமுள்ள அண்டத்தைக் கண்டார்.  சனிக்கோள், அதைச் சூழ்ந்த துணைக்கோள், காந்தவிசையைக் காணும் விண்ணுளவியின் காந்தப் பரிமாணக் கருவி, தென் துருவப் பகுதியைக் கடக்கும் போது காந்தப் பரிமாணத்தில், ஏற்ற இறக்கத் தடுமாற்றம் தெரிந்தது. அதாவது தென் துருவத்தில் காணப்பட்ட நீரெழுச்சி ஊற்றுகளை வெளியேற்றுவது, உள்ளே ஒளிந்துள்ள ஓர் திரவ நீர்க்கடல் என்பது நிரூபிக்கப்பட்டது.  பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸ்ஸில் திரவக்கடல் இருக்க வெப்பசக்தி எங்கிருந்து, எப்படி எழுகிறது?  நீரெழுச்சி ஊற்றுகள் விட்டுவிட்டு வருவதற்குக் காரணம் என்ன?

    என்சிலாடஸ் பனிக்கோள் உள்ளே, திரவக்கடல் நிலைப்பட, வெப்பம் உண்டாக்க ரேடியம் போல் கதிர்வீச்சு உலோகங்கள் பேரளவில் இருக்கலாம்.  நீர்க்கடல் உஷ்ணம் பெருகி அழுத்தம் மிகுந்து நீர் எழுச்சிகள் உருவாக ஏதுவாகலாம். என்சிலாடஸ் துணைக்கோள் உண்டாக்கும் வெப்பசக்தியின் அளவு 15.8 கெகா வாட்ஸ் [gega watts] என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.  இவைபோன்ற காரணங்கள், ஆய்வுகள் மூலம் இனிமேல் தீர்மானிக்கப்படலாம்.

    துணைக்கோள் என்சிலாடஸ்ஸின் தென்துருவ நீர்க்கடல் 6 மைல் [10 கி.மீ.] ஆழம் உள்ளது, திரவக்கடல் பனித்தளம் 19 –  25 மைல் [30 -40 கி.மீ] கீழ் இருக்கிறது  என்று கணிக்கப்படுகிறது.  இந்த வெப்ப நீர்க்கடல் உப்புக்கடல் என்றும், உயிரினம் வாழத் தகுதி உடையதென்றும் அறியப்படுகிறது.

    ++++++++++++++++++

    Encyladus geysers -2

    சனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததன் குறிப்புணர்வு,  நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராதவாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான  வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே.   என்செலாடஸ் மேல்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F].  ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர்.   கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே  உள்ளது என்று கணிக்கப் படுகிறது.  கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில்,  பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.

    Encyladus geysers -1

    நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீட்டர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள்  இருப்பது நிரூபணம் செய்யப்பட்டது.   அவை உராய்வு உஷ்ணம் அல்ல.  தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது.   இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது :   நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை;  நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது.  மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேல்தள நிகழ்ச்சிகள் அல்ல! அவை துணைக்கோள்  ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை.

    காரலின் போர்கோ [காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி]

    fig-3-cassini-space-probe-orbiting-saturn

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்செலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்ததைப் போல் பிரமிக்கத் தக்க நிகழ்ச்சி வேறில்லை!  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது!  அங்கே பீரிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுகளின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்படவில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டுக் காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டுக் காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப் போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    Enceladus Erupts

    “என்சிலாடஸிலிருந்து பீரிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக்கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    Encyladus Icy Moon

    பனிக்கோள் என்செலாடஸில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் கண்டுபிடிப்பு

    2014 ஜூலை 28 இல், நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி  சனிக்கோளின் சிறிய சந்திரன் என்செலாடஸின் தென்துருவத்தில்  101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகளைப் [101 Geysers] படமெடுத்து அனுப்பியுள்ளது.   என்செலாடஸ் ஒரு பனிக்கோள்.  நாசா விஞ்ஞானிகள்  பனிக்கோளின் அடித்தளத்தில் ஒரு கடல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.   அத்தகைய வெந்நீர் ஊற்றுகள் வெடித்தெழுவதைப் பற்றித்  தற்போது வெளிவந்துள்ள வானியல் வெளியீட்டில் இரு அறிவிப்புகள் பதிவாகியுள்ளன.  காஸ்ஸினி விண்ணுளவி கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, என்செலாடஸின் தென் துருவத்தைக் கூர்ந்து நோக்கி வருகிறது.   அந்த ஆய்வுகளின் விளைவாக  நான்கு புலிப் பட்டடைகள் போல் [Four Tiger Stripes] தளப்பிளவுகள் தென் துருவத்தில் தென்பட்டு அவற்றிலிருந்து வெந்நீர்த் திவலைகள் ஆவியுடன் [Water Particles & Vapour]  பத்தாண்டுகட்கு முன்னரே வெளிவரக் கண்டனர்.   இப்போது அவற்றின் எண்ணிக்கை 101 என்று தெளிவாகக் கூறுகிறார்.   அவ்வாறு வெளிவரும் வெந்நீர் ஊற்றுகளின் வாயில் சூடாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார்.  2005 ஆண்டில்தான் முதன்முறை வெந்நீர் ஊற்றுகள் இருப்பு அறியப்பட்டது.   சனிக்கோளின் அலைகள் ஓட்டமே அதனைச் சுற்றும் என்செலாடஸில் இத்தகைய கொந்தளிப்பை உண்டாக்கி  இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    fig-1-saturns-moon-enceladus

    நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீட்டர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள்  இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது.   அவை உராய்வு உஷ்ணம் அல்ல.  தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது.   இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது :   நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை;  நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது.  மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல !   அவை துணைக்கோள்  ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை என்று காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி, காரலின் போர்கோ கூறுகிறார்.

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Fountains -1


    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீரிட்டெழும் பிரமிப்பான ஊற்றுகளையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீரிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுகளைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுகள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

    fig-1a-geysers-in-saturns-moon-enceladus1

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடானு கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்துகொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடி புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப்பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005ஆம் ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுகள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது !

    Encyladus geysers -4

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீரிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீய்ச்சிடும் ஊற்றுகளில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப்படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழம்வரை படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீரிடும் ஊற்றுகளின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.

    பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீட்டர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்க குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுகள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது?

    fig-1c-how-the-geyser-does-function

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.  காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப்பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்தத்தை மிகையாக்கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுகள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீரிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியாழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.

    Image result for enceladus hidden ocean

    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீட்டர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்

    2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்தக் கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!

    fig-3-water-springs

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீரிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மையுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுகள் பீரிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கியிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது!

    Cassini Space Probe -1

    காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக், காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:

    1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?

    2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ?

    3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ?

    4. முப்பத்தொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா? [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]

    fig-5-saturns-moons

    5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா?  பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா?  2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன?

    6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது? அதன் மூலப் பிறப்பிடம் எது?

    7. டைடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை?

    8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது?

    9. டைடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ?

    10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ?

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html(Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html(Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html(Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32. http://www.space.com/25340-saturn-moon-enceladus-ocean-discovery.html [April 3, 2014]

    33. http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-246&utm_source=iContact&utm_medium=email&utm_campaign=NASAJPL&utm_content=cassini20140728  [July 28, 2014]

    34.  http://thetechjournal.com/space/nasas-spacecraft-cassini-spotted-101-geysers-saturns-icy-moon-enceladus.xhtml  [July 31, 2014]

    35.  http://www.techtimes.com/articles/11504/20140731/nasa-cassini-saturn-probe-spots-101-geysers-on-enceladus.htm[July 31, 2014]

    36. http://www.nbcnews.com/science/space/enceladus-hidden-sea-hot-enough-harbor-life-study-says-n321091 [March 11, 2015]

    37.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/strange-signal-picked-up-by-nasas-cassini-spacecraft-at-south-pole-of-saturns-enceladus-revealed-hid.html [February 19, 2017]

    38. http://astrobiology.com/2019/10/new-organic-compounds-found-in-enceladus-ice-grains.html

    39.  https://en.wikipedia.org/wiki/Enceladus [NASA Cassini Sattelite]

    40. https://solarsystem.nasa.gov/missions/cassini/overview/

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [October 6, 2019]

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 66

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 66

    -நாங்குநேரி வாசஶ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    65.வினைத் தூய்மை

    குறள் 651:

    துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்

    ஒருத்தனுக்கு நல்ல கூட்டாளிங்களால செல்வம் கெடைக்கும். சேந்து செய்யுத நல்ல காரியங்களால எல்லா நன்மையும் கெடைக்கும். 

    குறள் 652:

    என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
    நன்றி பயவா வினை

    புகழையும், அறத்தையும் தராத கெட்ட செயல்கள எந்த நெலமயிலயும்செய்யாம விட்டுப் போடணும். 

    குறள் 653:

    ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
    ஆஅது மென்னு மவர்

    ஒசத்தியான வாழ்க்க வாழ ஆசப்படுதவங்க தான் செய்யுத காரியத்தால புகழுக்கு பாதகம் வராம பாத்துக்கிடணும்.

    குறள் 654:

    இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்

    தடுமாறுத கொணம் இல்லாதவங்க சங்கடத்துல மாட்டிக்கிட்டாலும் தாழ்த்தியான செயல செய்ய மாட்டாங்க. 

    குறள் 655:

    எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று

    இப்டி செஞ்சுட்டோமேனு நோகுத அளவு செயலச் செய்யக் கூடாது. ஒருக்க செஞ்சிட்டா அத மறுபடி செய்யாம இருக்கது நல்லது. 

    குறள் 656:

    ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை

    பெத்த ஆத்தா பசிச்சிருக்கதப் பாத்தாலும் அதுக்காவ பழிபாவத்த செய்யக் கூடாது. 

    குறள் 657:

    பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
    கழிநல் குரவே தலை

    பழி பாவத்தச் செஞ்சு வக்கணைய வாழுததக் காட்டிலும் நல்லதச் செஞ்சிப்போட்டு ஏழையா வாழுதது மேல். 

    குறள் 658:

    கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்

    ஆவாது னு ஒதுக்கி வச்ச செயல ஒருத்தன் செஞ்சுமுடிச்சாலும் அதால அவனுக்கு சங்கடந்தான் வெளையும்.  

    குறள் 659:

    அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
    பிற்பயக்கும் நற்பா லவை

    மத்தவன அழுவ வச்சி சேத்த சொத்து பூராவும் அழுதுகிட்டே உட்டுப்போயிடும். நல்ல மொறையில சேத்தது கைவிட்டுப் போச்சுதுன்னாலும் திரும்ப வந்து சேந்துக்கிடும்.

    குறள் 660:

    சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
    கலத்துணீர் பெய்திரீஇ யற்று

    தப்பான மொறையில பொருளச் சேத்து காப்பாத்த நெனையுதது பச்ச மண்ணால செஞ்ச பாத்திரத்துல தண்ணி மோந்து வச்சது கணக்கா தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(269)

    குறளின் கதிர்களாய்…(269)

    -செண்பக ஜெகதீசன்

    அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய                                  வல்லார்நட் பாய்ந்து கொளல்.

      –திருக்குறள்795(நட்பாராய்தல்)

    புதுக் கவிதையில்

    தீச்செயல் செய்ய நினைக்கையில்

    வருந்தும்படிச் சொல்லித் தடுத்தும்,

    செய்தால்

    மீண்டும் செய்யாதவாறு கண்டித்து

    உலக ஒழுகலாற்றை அறியச்செய்யும்

    வல்லமை படைத்தோரை

    ஆய்ந்தறிந்து நட்புக்கொள்ள வேண்டும்…!

    குறும்பாவில்

    தீதுநினைக்கையில் வருந்தச்சொல்லித் தடுத்தும்,

    இடித்துரைத்து நல்வழிகாட்டும் வல்லமையுடையோரை    

    ஆய்ந்தறிந்து நண்பராக்கிக்கொள்…!

    மரபுக் கவிதையில்

    தீய வழியில் செலநினைத்தால்

        திருந்த வருந்திடச் சொல்லியேதான்

    போயவர் செயலைத் தடுத்திடுவார்,

        போனா லவரை இடித்துரைத்தே

    தீயன வெல்லாம் தெரிந்திடவே

        தரணியில் நல்வழி காட்டிடுவார்,

    தூயவ ரிவரை ஆய்ந்தறிந்தே

        துணிந்து கொண்டிடு நட்பினையே…!

    லிமரைக்கூ..

    வருந்தச் சொல்லித் தடுத்தே,        

    தவறினால் இடித்துரைத்து நல்வழிகாட்டுபவரை

    நண்பராக்கு தெரிந்து எடுத்தே…!

    கிராமிய பாணியில்

    நண்பனாக்கு நண்பனாக்கு

    நல்லவனாப் பாத்துத்

    தெரிஞ்செடுத்து நண்பனாக்கு..

    கெட்டது செய்ய நெனைக்கயில

    வருத்தப்படப் பேசி

    தவறு செய்யாமத் தடுத்திடுவான்,

    தவறுனா கண்டிச்சி

    நல்ல வழியக்காட்டிடுவான்,

    நல்லவன் இவன ஆராஞ்சி

    நண்பனா நீயும் ஆக்கிப்புடு..

    அதால

    நண்பனாக்கு நண்பனாக்கு

    நல்லவனாப் பாத்துத்

    தெரிஞ்செடுத்து நண்பனாக்கு…!

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 8

    2019 நவராத்திரி கவிதைகள் 8

    மரபின்மைந்தன் முத்தையா

    காலை திருவாரூர் மாலை திருக்கடவூர்
    கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய்
    அங்கே கமலாம்பா இங்கே அபிராமி
    மங்கலத்தே ஆழும் மனம்.

    யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா
    ஏகாந்த மாக அபிராமி – ஆகா
    விழிகண்ட காட்சி விரித்துரைப்பார் யாரோ
    மொழிகொண்டு சேர்க்குமோ மாண்பு.

    புற்றிடங் கொண்டார் பொருந்தும் கமலாம்பா
    மற்றிங் கமுதீசர் மாண்பரசி – குற்றங்கள்
    நீக்கிடுந் தாயர் நயனக் கனிவன்றோ
    காக்கும் நமையே கனிந்து.

    ஆரத்தி நேரம் அவளே இவளாவாள்
    ஓரத்தில் நின்றே உளங்களித்தேன் – சாரத்தில்
    சக்தி நிலையங்கள் சாநித்யம் ஒன்றேதான்
    பக்தி கனிகின்ற போது.

    கீர்த்தனைகள் கேட்டாள் கமலாம்பா பட்டர்முன்
    ஆர்த்தெழுந்தே வந்தாள் அபிராமி – சாத்திரங்கள்
    காணாத தேவியைக் காட்டுகிற பக்திநலம்
    பேணல் பிறவிப் பயன்.

    ஆசன மிட்டே அவளிருக்க, நின்றபடி
    பூசனைகள் ஏற்றே இவள்சிரிக்க – தேசுடைய
    பொன்விளக் கெல்லாமே பூரிக்க நன்னெஞ்சே
    என்னிருட்டு நீங்கும் இனி.

    Share
  • நிம்மதியே நின்பாதம் தாயே!

    நிம்மதியே நின்பாதம் தாயே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
    கசடகல என்றும் துணைநீயே தாயே
    உள்ளமதில் என்றும் உறுதிநிறை தாயே
    உன்கமல பாதம் சரணடைந்தேன் தாயே!

    வாய்மையுடன் வாழ வரமருள வேண்டும்
    வாழும்வரை நோய்கள் வராதிருக்க வேண்டும்
    தாழ்வு மனப்பாங்கு தளர்ந்துவிட வேண்டும்
    தாயே உன்பாதம் பற்றுகிறேன் நாளும்!

    வாதமது செய்யும் மனமகல வேண்டும்
    போதைநிறை எண்ணம் பொசுங்கிவிட வேண்டும்
    காதலுடன் உன்னைப் பாடிவிட வேண்டும்
    கடைக்கண்ணால் என்னைப் பார்த்துவிடு தாயே!

    ஆவேசம் கொள்ளுவதை அழித்துவிடு தாயே
    ஆசையுடன் அலைவதைநீ அகற்றிவிடு தாயே
    நீசரது சகவாசம் நீக்கிவிடு தாயே
    நிம்மதியே எந்தனக்கு நின்பாதம் தாயே!

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 7

    2019 நவராத்திரி கவிதைகள் 7

    மரபின் மைந்தன் முத்தையா

    சூரியனை, சந்திரனை, சூடுகிற தோடாக்கி
    சுந்தரி நீ நிற்கிறாய்
    சூட்சுமங்கள் நிகழ வைத்து சாட்சியங்கள் இல்லாமல்
    சுடராக ஒளி  பூக்கிறாய்
    காரியங்கள் அத்தனையும் கணப்பொழுதில் ஆக்கிவிட்டு
    கல் வடிவில் ஏன் நிற்கிறாய்
    காண வரும் பக்தர் நலம் பேணுகின்ற அபிராமி
    காண்பதெல்லாம் நீ ஆகிறாய்
    காரிகையே உன்னுடைய காலசையும் ஜதியினிலே
    கூத்தனவன் புன்னகைக்கிறான்
    காலகாலன் மனம்நெகிழும் காதலிலே நீபோடும்
    கட்டளைக்கே ஆட்படுகிறான்
    பேரிகையின் ஒலியெல்லாம் பேரழகே உனைப்பாடும்
    பெரியவிழா நவராத்திரி
    பேணுமொரு தாயாகி புவனமெலாம் காக்கின்ற
    பேரரசி அபிராமியே!

    துந்துபிகள் ஒலிசெய்ய தும்பிகளும் களிசெய்ய
    துதிக்கின்ற சுகம்போதுமே
    தந்ததிமி தாளங்கள் திசையதிரும் மேளங்கள்
    தரிசன சுகம்போதுமே
    சிந்துரத் திருநுதலில் சிரிக்கின்ற குங்குமம்
    சுகந்தத்தின் சுகம்போதுமே
    சுடர்வீசும் தீபங்கள் இடர்தீரும் நேரங்கள்
    சரணென்று விழும் நேரமே
    வந்தவினை  தரியாமல் சென்றவழி தெரியாமல்
    விடைபெற்று விரைந்தோடுமே
    வந்தனைக்குச் செந்தமிழும் வண்ணவண்ண சந்தமுடன்
    வரிசையில் சுழன்றாடுமே
    கந்தனைப் பயந்தவளே கண்பதியைத் தந்தவளே
    ககனத்தின் அன்னைநீயே
    கரும்பேந்தி நிற்கின்ற கற்பக விருட்சமே
    கலையேயென் அபிராமியே!

    குங்கிலியக் கலயரின் கைகளிட்ட தூபங்கள்
    காற்றிலின்றும் மணம்வீசுதே
    கடவூரின் தெருவெங்கும் நாயன்மார் பாதங்கள்
    கல்வெட்டு போல்நின்றதே
    குங்குமத்தின் வாசத்தில் குறைமறந்த பட்டர்முன்
    கோலநிலா  எழுகின்றதே
    குற்றமிலா மார்க்கண்டன்  முற்றத்தில் தொழுதவிதம்
    கண்ணுக்குத் தெரிகின்றதே
    பொங்கியெழும் கடலோசை புண்ணிய  வடிவேஉன்
    புகழ்பாடித் திரிகின்றதே
    பொன்னெழுந்த பாவனையில் மின்னெழுந்த திருக்கோலம்
    பார்வையை நிறைக்கின்றதே
    இங்கும்நீ அங்கும்நீ எங்கெங்கும் நீயேதான்
    எனக்கின்று புரிகின்றதே
    இதழோரம் நகைவீசி என்னோடு கதைபேசி
    எனையாளும் அபிராமியே!

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.2 (சிற்றில்பருவம்- ஆண்பால்)

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.2 (சிற்றில்பருவம்- ஆண்பால்)

    – மீனாட்சி பாலகணேஷ்

    சிறுமிகளின் சிற்றில் விளையாட்டு பல கூறுகளைக் கொண்டதாகும். ‘பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்1,’ எனும் நற்றிணை வரிகள் சிற்றில்பருவ விளையாட்டுப் பலவகைப்பட்டதெனக் கூறாமல் கூறும். பொய்யாக, பாவனையாக, சிறு மணல்வீடுகளைக் கட்டுதல், அதில் தாய்மார்கள் செய்வதுபோல, அடுப்பில் சமையல் செய்து குடும்பத்தோர்க்குச் சோறிடுதல், பாவைகளைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றைப் பேணிப் பராமரித்தல், அவற்றிற்கு மணம் பேசுதல், திருமண விருந்து சமைத்தல் ஆகியன இதன்பாற்படும். இனிமையான சிறுமிப்பருவத்தில் உடலுடன் மனமும் வளர்ச்சியடைந்து குழந்தை இளம்பெண்ணாக மாறிக்கொண்டு வருவதன் அடையாளம் இதுவே!

    அரிதாகப் பாடப்பட்ட பெண்பால் பிள்ளைப்பருவங்களாக, சிற்றில் பருவத்தின் பல வடிவங்களை,  சிறுவீட்டுப் பருவம் (சிற்றில் இழைத்தல்), சிறுசோற்றுப்பருவம், பாவைவிளையாடல் பருவம் எனச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் கண்டு களிக்கலாம்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இவை பற்றிய கருத்துக்கள், அதாவது பெண்குழந்தைகள் ஆகிய சிறுமியர் சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைத்துப் பாவைகளைக் கொண்டு மணம்பேசி விளையாடுவது பற்றிய செய்திகள் சிற்றில்பருவப் பாடல்களில் விரவிக் கிடப்பதனைக் கண்டோம்;

    மேலும் இனிமையான கருத்துக்கள் சிலவற்றையும் காண்போம்.

    திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் சிறுமியர் முருகனிடம் தங்கள் சிற்றிலை அழித்தல் வேண்டாம் என வேண்டும் பாடல் சுவைவாய்ந்தது.

    “நீ எங்கள் சிற்றிலை அழிப்பதற்காக நாங்கள் வருந்தவில்லை! சிற்றிலை இழைத்த மணலின் சிறு முத்துக்கள் உனது பூம்பாதங்களை உறுத்தி நோகச்செய்யாதோ?

    “பிறை முடித்த சோதியாகிய உன் தந்தை சிவபெருமான் உன்னை ஆசையுடன் எடுத்து முகத்தோடு சேர்த்து அணைத்துத் தோளில் இருத்திக் கொஞ்சிடும்போது உன் உடலிலிருக்கும் புழுதி அவருடைய தோளில் படியாதோ?

    “அனைத்து உலகங்களையும் ஈன்றெடுத்தும் வயது முதிராத இளங்கன்னியாகிய உன் தாய் உன்னைத் தனது மடியிலிருத்திக்கொண்டு ஆசையாக முலைப்பாலை அருத்துவிக்கும்போது உனது கழற்கால்களில் உள்ள சிவந்த சிறு மணற்துகள்கள் (எம் சிற்றிலை நீ சிதைத்தபோது அதில் பதிந்த துகள்) அவள்மீதும் படியாதோ?

    “ஆகவே முருகா! எம் சிற்றிலை நீ சிதைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று வேண்டுகின்றனராம். இதுவும் ‘சிற்றிலை அழிக்காதே’ என்பதற்காக சிறுமியர் மேற்கொள்ளும் நல்ல உபாயம்!

     தையல் மடவார் இழைத்தவண்டல்
    தன்னை அழிக்கும் அதுக்கல்ல
    தரளம் உறுத்தி உனது பொற்பூந்
    தண்டைத் திருத்தாள் தடியாதோ
    ………………………………………………..
    வையம் அனைத்தும் ஈன்றெடுத்தும்
    வயது முதிரா மடப்பாவை
    மடியில் இருத்தி முலையூட்டி
    வதனத் தணைக்கில் உன்கழற்காற்
    செய்ய சிறுதூள் செறியாதோ
    சிறியேம் சிற்றில் சிதையேலே2

    திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழில் வேறொரு நயத்தைக் காணலாம். சிறிது அறிவார்ந்த சிறுமிகள் சிற்றிலிழைக்கின்றனர். அதனை அழிக்க வரும் முருகப்பெருமானிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றனர்: “எம்தந்தை செய்யும் ஐந்தொழில்களில் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அழிப்பதும் ஒன்றாகும்; அதனை யானும் செய்வேன் என நீ இங்குவந்தால், மற்ற நான்கினையும் எவர் செய்வார்கள் எனக் கூறுவாயாக! அழிப்பது இறைவனின் இளைப்பாற்றும் கருணை என்பர்; ஆனால்  உனது அழிக்கும்தொழிலானது எங்களுக்கு மிக்க இளைப்பினைத் தருகின்றது,” எனக்கூறுவர்.

    அழிக்குந் தொழினந் தந்தைதொழி லதனு
    லியானு மதுபுரித
    லறனே யெனின்மற் றொருநான்கு மார்செய்
    தொழிலெங் களுக்குரைத்தி
    கழிக்கு மதுவு மிளைப்பாற்று கருணை
    என்பார தற்குமறை
    கரிநீ யியற்றுன் தொழிறானெங் களுக்கு
    மிகவு மிளைப்பேற்றும்
    …………………………..3

    மேலும், “நீ உலகை அழிக்கும் பிரானின் மகனென்று பெருமைபேசி, நாங்கள் வருந்தி இழைத்த எமது சிற்றிலை அழிப்பாய். அப்பிரானின் உயிராகிய அன்னையோ எனில் அண்டம் முழுவதனையும் சிறுவீடாக ஆக்கி மகிழ்வாள்; அவளுடைய மகனான நீ எங்களிடம் சிற்றிலை அழகுறப் படைக்குமாறு கட்டளையிட்டால் தகாதா? பழியுண்டாகுமா என்ன?” எனக் கேட்கின்றனர்.

    மேவியுலக முழுதழிக்கும் விமலன் மகன்யா
    னென் றெளியேம்
    விரும்பி வருந்தி யியற்றுசிறு வீட்டை
    யழிப்பா யனையபிராற்
    காவி யனைய பெருமாட்டி யண்ட
    முழுதும் சிறுவீடென்
    றாக்கி மகிழ்வா ளவண்மகனீ யலையோ
    ……………………………….
    பாவி யேங்கள் சிறுவீட்டைப் படைக்கு
    மாறே பணித்தேகில்
    பழியுண்டாமோ………………….4

    இவையனைத்தும் சிறுமியரின் உளநோக்கில் அமைந்த அழகான, சுவையான எண்ணச் சிதறல்களைக் கொண்டமைந்த பாடல்கள்.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் வேறொரு காட்சியைக் கண்முன் விரிக்கின்றது. சிறுமியர் கூடிப் பாவை விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். தத்தம் பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, விருந்து படைக்க, சிறுசோறு சமைக்கின்றனர். அப்போது அங்குவரும் சுவாமிநாதனாகிய குமரப்பெருமான் அவர்கள் சிற்றிலை அழிக்க முற்படுகிறான். சிறுமியர் அவனிடம் கூறுவதாக அமைந்த இனியபாடல் கருத்துநயமும் இலக்கியச்சுவையும் பொதிந்து இலங்குகின்றது. தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரின் கதையையும் உரைக்கின்றது.

    “உனது தந்தை ஒருபெண்ணின் மணத்தை முன்பு தடுத்து நிறுத்தினார். புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் மகள் சுந்தரரை மணக்க இருந்ததனைச் சிவபெருமான் தடுத்தார். அந்தப் பாவத்திற்காக கால்களில் கல்லும் மண்ணும் குத்தி உறுத்த, திருவாரூர் வீதிகளில் சுந்தரருக்காகப் பரவையிடம் தூது சென்றலைந்தார். அதனை நீ அறியாயோ? நாங்கள் முயன்று பாவைகளுக்குத் திருமணம் முடிக்க எண்ணும் இவ்வேளையினில் வந்து எங்கள் சிற்றிலைச் சிதைக்கின்றனையே! இந்தப் பாவத்திற்காக எத்தனை பெண்களிடம் கால்கள் வருந்த நீ தூதாகச் செல்ல வேண்டிவருமோ?” எனக் கேட்பதாக அமைந்துள்ளது.

    ‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
    ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
    முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
    முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
    வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்கால் சிவக்க எத்தனைகால்
    மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ?5 என்பது பாடல்.

    பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும் எனலாம்.

    சிறுபெண்கள், “சிற்றிலை அழிக்காதே,” என வேண்டுவதாக அமைந்த பாடல்கள் மட்டுமின்றி, ஆன்மீகத்திலாழ்ந்த புலவர் பெருமக்கள், சைவசித்தாந்தக் கருத்துக்களையும் அமைத்துப் பாடல்களை இயற்றியுள்ளனர். சிதம்பர அடிகள் இயற்றியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழில் பலபாடல்கள் இவ்வண்ணம் அமைந்தவை. இந்நூலில் சிற்றிற்பருவம் ஒன்பதாம் பருவமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மலங்கள் நீக்கப்பட்ட தமது அழகிய மனத்தினை அடியவர்கள் சிறுவீடாகக் கொண்டுள்ளனர். இதில் அன்பு, பொறுமை, ஆசைகளை நீக்குதல் ஆகியவற்றால் அடுப்பினை அமைக்கின்றனர். ஆணவமலமாகிய விறகினில் சிவஞானம் எனும் தீயை மூட்டுகின்றனர்; என்றும் நிலைபெறும் உயிரினைப் பானையாக்கி அதில் பொங்கி வழியுமாறு திருவருள் எனப்படும் உலைநீரை நிரப்புகின்றனர். பெருமைவாய்ந்த சிவானந்தம் எனும் இனிமையான சோற்றினை நாள்தோறும் அதில் சமைக்கின்றனர். என்றென்றும் ஒளியாத தற்போத இருள் அகலுமாறு சகசநிட்டை எனும் விளக்கினை ஏற்றிவைத்து, அவ்வடியவரின் நிலையில் தானும்நின்று அருளுபவன் முருகன். சிற்றில் விளையாடும் கீழ்மையிலிருந்து நீங்கிய உள்ளத்தோரால் புகழப்படும் அவன் உமையின் திருமகன். அவனிடம், அத்தகைய பெருமையும் புகழும் வாய்ந்தவனிடம் தாமிழைத்த சிற்றிலை அழிக்க வேண்டா எனச் சிறுமியர் வேண்டுவதாக அமைந்த பாடலிது.

    ‘அடியார் நிமலத் திருவகத்துள்
    அன்பு பொறுமை யவாவறுத்தல்
    அடுப்பாங் கமைத்து மலக்காட்டத்
    ததிக ஞானக் கனல்மூட்டி
    மடியா திருந்த உயிர்க்கலசம்
    …………………………
    மாறாப் பெருமைச் சிவானந்த
    மதுரச் சோறு தினம்பொங்கி
    விடியாச் சீவ போதஇருள்
    வீய………………6 என்பன பாடல் வரிகளாம்.

    சிறுவர்களின் சிற்றில் விளையாட்டினைப் பொருளாக்கி அதனைச் சிவானந்தம் எனும் தேனில் தோயும் அடியவரின் நிலைக்கு உவமையாக்கிக் கூறிய இது அருமையான பாடலாகும்.

    குருந்தமலை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்துப் பாடல்களில், ‘சிற்றிலை அழியேல்,’ எனச் சிறுமியர் வேண்டும்போது, சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவன் முருகனைத் தெய்வமென அவர்கள் உணர்ந்தமையால், தாம் அவனுக்கு வழியடிமை என்றும், எமது உள்ளத்திற் பொருந்தியிருந்து, எங்களுக்கு நன்னெறியை உணர்த்தி, மாயை, கன்மம் ஆகிய மலங்களை நீக்கி, உள்ளத்தில் குடிகொள்ளும் உருவமாகவும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அருவமாகவும் உணர்ந்து வழிபடும்படிக்கு எம்மைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுவதாக அமைந்துள்ளது.

    ‘வழி அடியோம் குடி முற்றவும் ஆட்கொண்டருளும் குமரா!7 என்றும்,

    ‘…………………………………..கதி
    காட்டி, மாயை கன்மம் அறக்
    கடத்தி, புறத்தில் அகத்தில் இசை
    கண்டம் அகண்டமயம் பொருந்தத்
    திருத்தும் கமலச் சேவடியால்…8,’

    என்றும் அமைந்த பாடல்களைக் காணலாம். தாம் குழந்தையாகக் கண்டு மகிழ்ந்து களிக்கும் இறைவனே தமது முத்திக்கும் வித்தாவான் எனும் பேருண்மையை அறிந்த அடியார்கள் அதனைப் பாடல்களிலும் பதிவுசெய்துள்ளமை உள்ளத்தைத் தொடுவதாகும்.

    வைணவப் பிள்ளைத்தமிழ் நூலாகிய அழகர் பிள்ளைத்தமிழ் காட்டும் சிறுமியர் தங்கள் சிற்றிலை அழிக்கவரும் திருமாலழகனான சிறுவனிடம் உரைப்பது சிந்தைக்கு விருந்தாகின்றது: தெய்வத்தின் திருவடி தீட்சையால், பரிசத்தால் அனைத்துயிர்களும் முத்தி எனும் பெருநிலையினை அடையலாம்.

    “வரிசையாக மணிப்பந்தினையும், பொற்கழங்கினையும் ஆடும் சிறுமியரும், செய்குன்றமமைத்தும், வண்டல் மண்ணையிழைத்தும் பொன்னூசலை உதைத்தும் விளையாடும் இளம்சிறுமியரும், மேலும் அவர்கள் விளையாடும் இடங்களில் தேன்சொரியும் பருத்த குரவமரங்களும், அவரவர்கள் கொல்லைகளில் குதித்துவிளையாடும் ஆவின் இளம்கன்றுகளும், பச்சைக் கிளிப்பிள்ளைகளும் ஆகிய இவையனைத்தும் (சிற்றிலை அழிக்க முற்படும்) உன் பாதத்தூளிபட்டு முத்தியாகிய பெருவீட்டினை அடைந்தால் எங்களுடைய இந்தப் பொய்தல் விளையாட்டு அழிந்து படுமே! தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனை உனது உந்தியில் உற்பவித்த தேவே! எமது சிற்றிலை அழிக்க வேண்டா!” என வேண்டும் கருத்தமைந்த பாடல் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்.

    கோவை மணிப்பந் தெறிந்தாடும்
    கொடிபொற் கழங்கு பனல்வாவி
    கொட்குங் கிரணச் செய்குன்று
    கொய்பூந் தளவப் பந்தல்வண்டற்
    பாவை யுகைக்கும் பொன்னூசல்
    பராரைக் குரவந் தேன்கொழுக்கும்
    படப்பை குதிக்கு மான்கன்று
    பசும்பொற் கிள்ளைப் பிள்ளையிளம்
    பூவை யிவையுன் பதத்தூளி
    பொதியப் பெருவீ டுறிலடியேம்
    பொய்த லொழியு மலர்வனசப்
    பொகுட்டி லிருக்கு நான்குமுகத்
    தேவைத் திரவுந் தியிலளித்த
    சிறுவன் சிற்றில் சிதையேலே9

    பல விதமான தொன்மங்களை இணைத்தும் சிற்றிலிழைப்பதுடன் பொருந்தக்காட்டும் உவமைகள் பெருக அழகான பாடல்கள் புனையப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றினைக் கண்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்.

    அரும்பாத்தை வேத விநாயகனைிடம் தம் சிற்றிலை அழிக்க வேண்டாமென வேண்டும் சிறுமியர் இன்னொரு புத்திசாலித்தனமான கூற்றை முன்வைக்கின்றனர்.

    “சேரமான் பெருமாள் நாயனார் குதிரைமீதேறிச் சென்று கயிலையை அடையுமுன்பே, சிந்தையுருகிப் பைந்தமிழால் கவிபாடி உன்னை வழுத்திப் பூசிக்கும் மேனிமெலிந்த அவ்வையாரை நீ உன் தும்பிக்கையால் தூக்கியெடுத்துக் கயிலாயத்துச் சேர்த்து மேல்வீடளித்தனை; சிறுமிகளாகிய எங்களுக்கு நாங்கள் பாடுபட்டு இழைத்துள்ள இவ்வீட்டினையாவது அழியாது அளிக்கவேண்டாமோ?’ என்கின்றனராம்.

    ‘சேரற் கிறைவன் வாம்பரிமேற்
    சென்றுகயிலை புகுமுன்னே
    சிந்தை யுருகிப் பைந்தமிழ்நூல்
    செப்பி வழுத்து மப்பொழுது
    வீரத் துதிக்கை கொண்டேந்தி
    மேனி மெலிந்தவ் வையாருக்கு
    மேல்வீ டளித்தாய் சிறுமியர்க்கிவ்
    வீடு மளிக்க வேண்டாமோ?10

    இவ்வாறு பலப்பல நயங்கள் நிறைந்த பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்கள்தோறும் கண்டு, படித்து மகிழலாம்.

    (வளரும்)

                            ______&_______

    பார்வை நூல்கள்;

    1. நற்றிணை
    2. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்
    3. திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ்- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
    4. மேலது.
    5. திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- கு. நடேச கவுண்டர்
    6. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிதம்பர அடிகள்
    7. குருந்தமலை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ்- தவத்திரு கந்தசாமி சுவாமிகள்
    8. மேலது
    9. அழகர் பிள்ளைத்தமிழ்- கவி குஞ்சரம் ஐயர்
    10. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 65

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 65

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    65.சொல்வன்மை

    குறள் 641:

    நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத் துள்ளதூஉம் அன்று

    காரியத்த சாதிக்குத மாரி பேசுததும் ஒரு சொத்து தான். அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

    குறள் 642:

    ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

    ஒருத்தனுக்கு நல்லதும் கெட்டதும் அவன் பேசுத பேச்சுனால வாரதால சொல்லுத வார்த்தையில கொறையில்லாமப் பாத்துக்கிடணும். 

    குறள் 643:

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்

    கேக்குதவங்கள வசப்படுத்தி, கேக்காதவங்களும் கேக்கணும்னு விரும்புத அளவுக்கு பேசுததே சொல்வன்மை.  

    குறள் 644:

    திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங் கில்

    என்ன பேசுதோம்னு உணந்துக்கிட்டு பேசணும். அந்த சொல்வன்மையப் போல அறமும் பொருளும் வேற இல்ல.

    குறள் 645:

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

    தான் சொல்லுதத செயிக்க வேற சொல்லு இல்லன்னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு தான் அத சொல்லணும். 

    குறள் 646:

    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்

    மத்தவங்களுக்குபிடிச்சா மாரி பேசுததும், அவுக பேசுதப்போ கவனிச்சி புரிஞ்சிக்கிடுததும் தான் அறிவாளிங்களோட செயல். 

    குறள் 647:

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது

    தான் நெனைக்குதத மத்தவங்க ஏத்துக்கிடதாப்போல சொணக்கமில்லாம சொல்லி, துணிச்சக்காரனாவும் இருக்கவன எதித்து யாராலயும் செயிக்க முடியாது.

    குறள் 648:

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்

    வகையா இனிக்கப் பேசுதவர் ஏவுத வேலய ஒலகத்தார் உடனடியா கேட்டு நடப்பாங்க. 

    குறள் 649:

    பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்

    தப்பில்லாம கொஞ்சமா பேசி விளங்க வைக்கத்தெரியாதவங்க புரிய வைக்கதுக்காவ நெறையா பேசிக்கிட்டேயிருப்பாக.  

    குறள் 650:

    இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரிந்துரையா தார்

    தான் படிச்சத மத்தவுக விளங்கிக்கிடுத அளவுக்கு எடுத்துச் சொல்லத் தெரியாதவங்க கொத்துக் கொத்தா பூத்திருந்தாலும் வாசனை இல்லாத பூ கணக்கா தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • சேக்கிழார்  பா நயம் -49

    சேக்கிழார்  பா நயம் -49

    திருச்சி   புலவர்  இராமமூர்த்தி

    திருவாரூரில்  திருக்கோயில்  வழிபாட்டுக்குத்  தோழியருடன் சென்ற  பரவை  நாச்சியாரைச்   சுந்தரர் கண்டார். பரவை நாச்சியாரின் அழகிய கோலம்  சுந்தரர் உள்ளத்தை மிகவும் ஈர்த்தது. புற்றிடங்  கொண்டாரை வழிபட்டு  மீளும் பொழுது, அவ்வழிபாட்டின்   உடனடிப்  பயனாய்த்  தம்முன்தோன்றிய பேரழகு வாய்ந்த பரவையாரைக் கண்டுமகிழ்ந்தார். அவரைப் போலவே பரவையாரும் கண்டார் , இந்நிகழ்ச்சி,  காண்டல்  என்ற  அகப்பொருள்   துறையைச்  சார்ந்த நிகழ்ச்சியாகும். சுந்தரரின் ஒளிபொருந்திய தோற்றம் பரவையாரை  வியக்கச் செய்தது . இவர்கள்   இருவருக்கும்   இடையில் காதலுணர்வைத்  தூண்டக் காமக்  கடவுளாகிய மன்மதன் நின்றான், என்கிறார்     சேக்கிழார்!

    இறைவன்  திருவருளை   மட்டுமே பெரிதும்   விழைந்து   வழிபட்ட பரவையார் கண்முன்னே  சுந்தரர்   தோன்றிய   காட்சி கண்கொள்ளாத  ஒளியாக விளங்கிப் பரவையாரின்  இயல்பான  அடக்கத்தை மீறி,   அச்சம்,  மடம் , நாணம் , பயிர்ப்பு  என்ற நால்வகை குணங்களையும்   அடக்கி விட்டன!

    தன்முன்னே வியப்பளிக்கும் பேரொளியுடன் தோன்றிய சுந்தரரின்  தோற்றத்தைக்   கண்ட   பரவையார்,  இவர்   செவ்வேள் எனப்படும்முருகனோ? என்று  ஐயுற்றாள்!  பின்னர், தனக்கு   நிகரில்லாத மன்மதவேளோ?  என்றும், வாடாமாலை  அணிந்த விஞ்சையருள் ஒருவனோ? என்றும், மின்னு   செஞ்சடைப்  பெருமானின் அருள்பெற்றவனோ? என்றும்  கருதினாள். இவ்வா றெல்லாம்  என் மனத்தை  ஊசலிடவைத்த இவர்யாரோ?  என நினைத்தாள்

    பரவையாரின்  மனவோட்டங்களை நமக்கு அறிவிக்கும் சேக்கிழார் பாடல்,

    “முன்னேவந்   தெதிர்தோன்றும்  முருகனோ?   பெருகொளியால்
    தன்னேரில்   மாரனோ?  தார்மார்பின்   விஞ்சையனோ?
    மின்னேர்செஞ்   சடையண்ணல்  மெய்யருள்பெற்   றுடையவனோ?
    என்னேஎன்    மனந்திரித்த  இவர்யாரோ ?  எனநினைத்தார்!

    என்பதாகும்.  அவ்வாறு அவர்  எண்ணிய போது,  முதலில் ஒளிபொருந்திய முருகப்பிரானோ, என்றுஎண்ணினாள். முன்பே இருவரை மணந்துகொண்ட முருகப் பிரான்  தன்    பெண்மை நலம் கவரக் காரணம்   இல்லையே!  ஆதலால் , தம்மைக்கவரும்  பொருட்டுத் தனக்கு நிகரில்லாத மன்மதனே  வந்தானோ? என்று எண்ணினாள்.

    இந்திர ஞாலம்போல வந்தருளி, யெவ்வெவர் தன்மையும் தன்வயிற்படுத்துத், தானேயாகிய தயாபர னெம்மிறை“ என்பது விஞ்சையின் இயல்பு. உருத்திரகணிகையராய் அடியவர்க்கு ஆளாம் தன்மையராயினும் இதுவரை எந்த அடியார்பாலும் எய்தாத வேட்கை விளைவித்தமையின் இந்தச்

    சைவவிடங்கு விஞ்சையனோ? என்ற குறிப்பாம். மேலே கண்டவாற்றால் முருகனுமல்லன், மாரனுமல்லன் ; என்னவே இவன் வேறு விஞ்சை வல்லவனோ  என்று அடுத்து நினைந்தார். இதனைத்

    ‘’தன்னேரில்   மாரனோ ?  தார்மார்பின்   விஞ்சையனோ?”

    என்ற அடி   புலப்படுத்துகிறது.

    முன்பே  திருக்கயிலையில்  தான் கொண்ட  பத்தித்திறன்  நினைவுக்கு  வந்தது. அத்தகைய  பக்தியுடைய  என்னையும்  கவர்ந்த இவன் உண்மையில்  மிகுந்த சிவனருள்  பெற்றவன்தானோ   என எண்ணினாள்.  அதனால் என்னை இந்நிலை செய்தலின் அவனருள் பெற்றவனே யாதல்வேண்டும்!  இதனை

    “ மின்னேர்செஞ்   சடையண்ணல்  மெய்யருள்பெற்   றுடையவனோ?”

    என்ற அடி  விளக்குகின்றது.

    இதுவரை திரியாது, நாண் முதலியவற்றை மண் கொள்ளாவகை காத்து, இறைவனிடத்தே செலுத்திய எனது மனத்தையும் கவர்ந்ததே!  இது என்னே ?’’  என்கிறாள் .

    “முருகன் இச்செயலுக் கிசையான். மாரனும் விஞ்சையனுமோ அடியாரிடத்துச் செயல் செய வலியிலர். ஆதலின் அருள் பெற்றுடையார் ஒருவரேயாதல்வேண்டும். ஆயின் இவர் இன்னார் என்ற

    துணிவு பெறமாட்டாமையின் யாரோ? என்றார். ஒரு நாயகனைப் பலர் மணத்தல் இந்நாட்டுத் தொன்றுதொட்டு வந்த நெறியாதலின இத்தலைவி, முன்னே ஒவ்வொரு தலைவியரை மணந்த முருகன் மாரன் முதலிய ஒருவரோ என நினைத்தல் இழுக்காகாது.” என்பது சி.கே . எஸ்  கருத்து

    ‘கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று நம்பிகள் நினைத்தமைக்கேற்பவே, பூத்தல் ஒழிந்து பாழ்பட்டுக் கிடந்த அதனைப் பூக்கச்செய்தவன் விண் குடியேற்றிய முருகனே யாதலால் முருகனோ என்ற நினைவு பரவையார் மனத்து எதிர் உருவமாய்க் கிளம்பியது. “காமன் பெருவாழ்வு“ எனும்  நம்பிகளின் நினைவு மாரனைப் பரவையார் மனத்திற் புகுத்தியது. நம்பிகள் “பொற்பின் புண்ணியமோ“ என்றமை (சிற்றின்பத்தைப் பேரின்பமாக்கும் புண்ணியமுடையார் விஞ்சையராதலின்) விஞ்சையனோ என்ற கருத்தை விளைத்தது.சிவனருளே என்று நம்பிகள் முடித்தமையே அவர் மெய்யருள் பெற்றுடையவனோ எனுந் தன்மையைப் பரவையார் உள்ளப் பளிங்கிற் பதித்தது. இந்நினைவுகள் முன் இல்லாது, இப்போது பளிங்கிற் பவளம் பதித்ததுபோல மனத்திற் பதித்தமையால் மனந்திரித்த எனப் பெற்றதாம்.அவர் அறியேன் என்றபடி இவர் யாரோ என்றார். ஆயினும் அருள் பெற்றவனே என்ற துணிபுபற்றி இதனை ஐயத்தின் முடிபாக இறுதியிற் குறித்தார்.” என்பதும் அவர்   உரைத்திறன் ஆகும்.

    Share
  • 2019 நவராத்திரி கவிதைகள் 6

    2019 நவராத்திரி கவிதைகள் 6

    -மரபின்மைந்தன் முத்தையா

    புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[
    புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக
    புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த
    பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக
    தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ்
    தர்க்கங்கள் தீர்ப்புகள் எல்லாமே
    சத்திய நாயகி வாணியவள்- பதச்
    சலங்கையின் ஒலியென அறிந்திடுக

    அவள்தான் எழுவகை ஸ்வரமமைத்தாள்-இங்கு
    அபிநயம் ஆயிரம் வடித்தளித்தாள்
    கவிதைகள் காவியம் மலரவைத்தாள்-கருங்
    கல்லுக்குள் சிற்பங்கள் ஒளித்துவைத்தாள்
    இவரும் அவரும் விருதுபெற -கலை
    இயற்றிடும் ஆற்றலும் அவள்கொடுத்தாள்
    தவங்கள் செய்ததன் பயனாக -கலை
    தேர்ந்திடும் வல்லமை அவள்கொடுத்தாள்

    பிள்ளைகள் விரல்களை நாம்பிடித்தே-நல்ல
    பசுநெல் பரப்பினில் எழுதுகையில்
    கிள்ளைக் குரலினில் அக்‌ஷரமாய்-சிறு
    கண்களில் தெரிபவள் கலைமகளே
    கொள்ளும் செயல்கள் அனைத்திலுமே- அவள்
    கூட வருவாள் எண்ணெழுத்தாய்
    விள்ள முடியாப் புதுமையினள் -எங்கள்
    வாணியின் திருவடி சரண்புகுவோம்

    நுண்கலை வாணர்கள் திரண்டிடுக-பல
    நூதனக் கவிஞர்கள் இசைத்திடுக
    பண்கலையாளர்கள் பாடிடுக-நடம்
    புரிகிற வித்தகர் ஆடிடுக
    வண்ணக் கலைமகள் கொண்டாட்டம்-இங்கு
    விதந்து கலைகளைப் பேணுதலே
    மண்மிசை வானகம் தென்படுக-எங்கள்
    மகத்துவக் கலைமகள் அருள் தருக!

    Share
  • குட்டி ரெட்ட ஜடை – நவராத்திரி பாடல்கள்

    குட்டி ரெட்ட ஜடை – நவராத்திரி பாடல்கள்

    -விவேக்பாரதி

    அவளுக்குத்தான் எத்தனை உருவம். எத்தனை வடிவம். எதுதான் அவள் வயது? முதுக்கிழவியாய்த் தெரியும் அவளே மறுகணத்தில் முறுவலிக்கும் குழந்தையாகிறாள்! ஆ! அந்தக் குழந்தைதான் எத்தனை அழகு…

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்!

    குட்டி ரெட்டஜட கட்டிக்கிட்டு ! ஒரு
    கோலச் சிங்காரியும் வந்தாளாம் – ஒரு
    பொட்டுன்னு நெத்தியில் வட்டத்த வெச்சவ
    போட்டி நிலாவுக்கு என்றாளாம்

    சின்னப் பதத்துல வண்ணச் சலங்க
    சினுங்க சினுங்க நடந்தாளாம் – ஒரு
    மின்னலப் பிடிச்சு பாலில் கொழச்சு
    மேனியில் பூசித் திரிஞ்சாளாம்!

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்

    தத்தித் தத்தி வெளையாடுறப்ப முத்து
    தரையில் விழுந்ததாம் நட்சத்திரம் – மொகம்
    பொத்திப் பொத்திவெச்சு போக்குகாட்டி அவ
    பொக்குன்னு சிரிக்கும் விசித்திரம்!

    கலுக்கு கலுக்குன்னு சிரிச்சுத் தொலைக்குற
    காளி தேவியிங்க வந்தாளாம் – அண்டம்
    குலுக்கிப் பிடிக்கிற கோவக்காரி! ஒரு
    குட்டிப் பெண்ணுருவில் வந்தாளாம்!

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்

    அள்ளி அணைச்சிட கையொசத்தி! நம்ம
    ஆட்டிப் படைக்குற ராசாத்தி – அந்தக்
    கள்ளி ஒறவுல சிக்கிக்கிட்டா! இனி
    காலத்துக்கும் அவ அரசாட்சி

    தத்துபித் துன்னவ பேசிடுவா! அதில்
    தத்துவம் இருக்கும் கேட்டுக்கணும் – கொஞ்சம்
    கத்தி அழுது முரண்பிடிப்பா! அதில்
    காரணம் இருக்கும் தாங்கிக்கணும்!

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்

    என்னென்னவோ சொல்லி என்னென்னவோ செஞ்சு
    ஏட்டிக்குப் போட்டி படுத்திடுவா – அதில்
    ஒன்னொன்னும் ஒருரகம் ஒன்னுக்கும் ஒருகத
    ஓயாம பேசிச் சலிச்சிடுவா!

    அட்டக் கருப்பியாம் பார்வைக்குத்தான்! அதில்
    அத்தனை அத்தனை வண்ணமடி – வந்து
    ஒட்டிக்கிட்டதொரு நாழிகைதான் இன்னும்
    ஓடுது ஓடுது எண்ணமடி!!

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்!!

    -விவேக்பாரதி
    01.10.2019

    அருமையான படங்களைக் கொடுத்த இன்ஸ்டாகிராம் ரமேஸ் ஹரிகிருஷ்ணசாமி க்கும் பாடிக்கொடுத்த நித்யா அக்காவுக்கும் நன்றி…

    https://youtu.be/V06JMmGEWVM

    Share