மகிழ்ச்சியைத் தேடலாமே!
நிர்மலா ராகவன்
(நலம், நலமறிய ஆவல் – 169)
நமக்கு யாரைப் பிடித்துப் போகிறது?
நமக்குள் இருக்கும் நற்குணங்களை, திறமைகளை வெளிக்கொணர்பவர்களை.
இது புரியாது, சிலர் தம்மிடம் நெருக்கமாக உள்ளவர்களிடமே தம் `பராக்கிரமத்தைக்’ காட்டுவார்கள்.
குடும்பத்தினரிடம் தம் அதிகாரத்தை (வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ) நிலைநாட்ட முயல்பவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள்?
எனது இக்கேள்விக்கு விரிவாக விளக்கமளித்த உளவியல் நிபுணர், “இவர்கள் எப்போதும் போர்க்களத்திலேயே இயங்குபவர்கள்!” என்றார்.
இவர்களுடைய போராட்டம் தமக்குள்ளேயேதான். ஏதோ ஒருவித பாதுகாப்பின்மையால் உசுப்பப்படுகிறார்கள். இவர்களுக்குச் செல்வம், புகழ், பதவி எல்லாம் இருக்கக்கூடும். ஆனாலும், அவை போதாமல் போய்விடுகின்றன.
போரில் ஈடுபடுகிறவர்கள் தம்மைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள், இல்லையா? எப்படித் தாக்கினால் எதிராளி தன் வசமாவான் என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள். அப்போது அவர்களுடைய மனம், கண் இரண்டிலும் விழிப்புணர்வு கூர்மையாக ஆகிவிடும். பலசாலியாக உணர்வார்கள். அவர்களுக்கு உவகை அளிக்கும் நிலை இது.
ஆனால், எத்தனை நேரம்தான் இந்த நிலையிலேயே இருக்க இயலும்! விரைவிலேயே உடல் களைத்துவிடும். உடனே மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வார்கள். இதுவும் ஒருவித போதைதான்.
இவர்கள் தாமே தம் குறையைப் புரிந்துகொண்டு, திருத்திக்கொள்ள முயன்றால் மாறலாம். ஆனால், தம்மிடம் குறை இருக்கிறதென்று எத்தனைப் பேர் ஒப்புக்கொள்வார்கள்?
ஒருவரை அவருடைய குறைகளுடன் அப்படியே ஏற்கும் தன்மை இருந்தால்தான் இத்தகையவர்களுடன் சேர்ந்து வாழ முடியும். இதுதான் உண்மையான காதல், இதனால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கிறார்கள்.
கதை
Legally blind என்ற அடையாளத்துடன் கண்பார்வை மிகக் குறைந்த நிலையில் இருந்த பெண்ணைக் காதலித்து மணந்தான் தர்மராஜ்.
`இப்படிக்கூட மணப்பார்களா!’ என்று பார்ப்பவர்கள் அதிசயித்தார்கள்.
அப்பெண் திறமைசாலி, எதையும் முன்னின்று நடத்தும் ஆற்றல் அவளுக்கு இருந்தது என்பதைச் சில நிமிடங்களில் அவளுடன் பழகியதுமே எனக்குப் புரிந்தது.
தன் தாயைப் போன்று அன்பைப் பொழிபவள் என்ற உறுதியுடன் தர்மராஜ் அவளைத் தேர்ந்தெடுத்திருந்ததில் வியப்பில்லை. பயந்த சுபாவம் கொண்ட அவனுக்கும் அவள் உறுதுணையாக இருப்பாள்.
`தன்னைப் பிறர் கேலி செய்வார்களோ? பிறர்முன் மனைவியைப் பெருமையாகக் காட்டிக்கொள்ள முடியாதே!’ என்றெல்லாம் தர்மராஜ் குழம்பவில்லை. தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்தான். அதனால் நிறைவு அடைந்தான்.
மனைவியின் குறையால் அவள் என்றும் தன்னைச் சார்ந்திருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இருவருமே தனித்து இயங்கினார்கள். இணைந்தும் செயல்பட்டார்கள். அக்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவியது.
தற்காலத்தில் மனிதன் மகிழ்ச்சியை இழந்துவிட்டு, எங்கெங்கோ அதைத் தேடிக்கொண்டிருக்கிறான்.
இன்றைய உலகம் தொழில் துறையைச் சார்ந்ததாக ஆகிவிட்ட நிலையில், எல்லாவற்றையும் முதலிலேயே திட்டமிடுகிற நிலை வந்துவிட்டது. பலரும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
பெற்றோரைவிட அதிகமாகச் சாதித்துக் காட்டவேண்டும் என்று சிலர் தமக்குத் தாமே விதித்துக்கொள்கிறார்கள். குடும்பம், குழந்தைகளின் கல்வி, அதிலும், எந்த விதமான கல்வி, என்று எதிர்காலத்தைப் பற்றிப் பற்பல யோசனைகள் எல்லா நேரமும். இதனால், எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது.
விடுமுறைக்காக ஓரிடத்திற்குச் செல்லுமுன்கூட, ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லாவற்றையும் திட்டமிட, புதிதாக எதையும் கற்கும் திறனும் ஆர்வமும் மறைந்துவிடுகிறது.
கதை
`நீ தைரியசாலி. புத்திசாலி. எல்லாவற்றிலும் முதலாவதாக விளங்கவேண்டும்,’ என்று பலவாறாக உற்சாகமூட்டப்பட்டு வளர்ந்த பாஸ்கர், நிறைய சாதித்தான். ஆனால், அவனுக்கென்னவோ மகிழ்ச்சி கிடைக்கவில்லை. தன் வளர்ச்சியால் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருகிறோம் என்ற உணர்வுதான் இருந்தது.
`ஏன் எனக்கு எதிலுமே நிறைவில்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.
எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மை வெறியாகவே மாறிவிட்டதை உணர முடிந்தது.
வாழ்க்கை நிரந்தரமில்லை. அதை நம் செய்கையால் கட்டுப்படுத்துவது என்பது நடக்காத காரியம்; எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையிலேயே காலத்தைச் செலவழிப்பதைவிட நிகழ்காலத்தில், தன்னைச் சுற்றி நடப்பதில் கவனம் செலுத்தினால்தான் நிறைவு ஏற்படும் என்ற ஞானம் பிறந்தது.
`இதனால் எனக்கு என்ன ஆதாயம்?’ என்று கேட்டுக்கொண்டுதான் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபடுகிறார்கள் பலரும். `
இது என்ன வாழ்க்கை!’ என்று சலித்துக்கொள்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு காரியத்தைச் செய்தால் புத்துணர்வு பிறக்கும்.
தான தர்மம் செய்பவர்கள் அனைவரும் புகழை எதிர்பார்த்துச் செய்வதில்லை. தம் ஆத்ம திருப்திக்காக நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மனநிறைவு அடைவதே வெற்றிக்கான அறிகுறி.
பாஸ்கரும் இனி போட்டிகளில் கலந்துகொண்டு, பிறரை வீழ்த்தி, அதனால் தான் மகிழக் கூடாது என்று முடிவெடுத்தான். பிறருக்கு உதவுவது போன்ற சிறு விஷயங்களால் மனம் மகிழ்ச்சி அடைந்தது.
சில வயதானவர்களைப் பாருங்கள். பேரங்காடி, பூங்கா போன்ற பொது இடங்களுக்கு வருவார்கள். அதிகமாக நடக்கக்கூட முடியாத நிலையில். அங்குப் போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது வேறு யோசனைக்கு இடமில்லை.
இவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டு, `இப்படிச் செய்திருக்கலாமோ?’ என்று மாற்ற முடியாததைப் பற்றிய வீண் யோசனைகள் செய்யவில்லை. அமைதியை அடைவது எப்படி என்று புரிந்தவர்கள்.
பலருக்கு இது புரிவதில்லை. ஓயாது புலம்பி, தம்மைச் சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் குலைக்கிறார்கள்.
உதாரணமாக, திருமணமாகிச் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பின் ஏதோ காரணத்தால் மனத்தளவில் பிரிகிறவர்கள், வருத்தத்திலேயே ஏன் உழலவேண்டும்? இன்பமாக கழித்த நாட்களையும் அவ்வப்போது நினைக்கலாமே!
கதை
அழகிற்காக பைரவியை மணந்தான் செல்வந்தனான ஜெயன்.
பத்து வருடங்கள் எந்தத் தொல்லையும் இருக்கவில்லை. அதன்பின், அந்த வாழ்க்கை அலுப்புத் தட்ட, சூதாட்டத்தில் இறங்கினான் ஜெயன். சர்வகாலமும் அந்த நினைவிலேயே மனம் சுழல, மனைவியுடன் இருந்த நெருக்கம் குறைந்தது. பணமும் கரைந்தது.
ஆரம்பத்தில் கணவனிடம் பணிவும் மரியாதையுமாக இருந்த பைரவி மாறினாள். சீறினாள். அவளுடைய வாய்வீச்சைத் தாங்க முடியாது, ஜெயன் இன்னும் விலகிப் போனான்.
`எல்லாக் கல்யாணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை!’ என்று கூற ஆரம்பித்தாள் பைரவி. அவளுடைய மனநிலை கெட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் குறை காணத் தோன்றியது.
தான் செய்தது தவறுதான் என்று ஜெயன் ஒப்புக்கொண்டாலும், அப்பழக்கத்தை விடமுடியவில்லை.
ஒரு பதின்ம வயதுப்பெண் பேரங்காடிகளில் நடந்த பல போட்டிகளில் வெற்றிபெற்று, நிறைய சாமான்களை பரிசாகப் பெற்றாள். பல முறை.
அப்படி ஒரு போட்டியில் நானும் வெற்றி பெற்றபோது, அவளுடைய தந்தை என்னிடம் கூறினார், “நாங்கள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. அப்படியே அனாதை இல்லங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்!”
அவர்கள் அப்படியொன்றும் செல்வந்தர்களில்லை.
அவர் கூற்றை ஆதரிக்கிறார் ஒரு சமூக சேவகி. “கிடைப்பதைப் பகிர்ந்துகொண்டால்தான் மகிழ்ச்சி நிலைக்கும். இறைக்கிற கிணறு சுரப்பது இல்லையா? அதுபோல்தான் நாம் கொடுப்பதும் விரைவிலேயே வேறு விதத்தில் கிடைத்துவிடுகிறது”.
இந்த உண்மை புரியாதவர்களே மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
Pic courtesy: https://www.maxpixel.net