2019 நவராத்திரி கவிதைகள் 10
மரபின் மைந்தன் முத்தையா
(06.10.2019 அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை)
பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற
பண்டிகைதான் நவராத்திரி
பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து
பவனிவரும் சுபராத்திரி
எட்டாத உயரங்கள் எட்டிடவே செய்கின்ற
ஏகாந்த நவராத்திரி
எந்திரத்தில் மந்திரத்தில் தந்திரத்தில் விக்ரஹத்தில்
ஏந்திழையாள் வரும்ராத்திரி
கட்டான குழலோடு பொட்டோடு மலரோடு
கற்பகத்தாள் வரும்ராத்திரி
கயிலையிந்த மயிலையென கபாலிவந்து அமர்கின்ற
குளக்கரையின் அருள்ராத்திரி
எட்டடுக்கு மாளிகைக்கும் ஏழைகளின் குடிசைக்கும்
கொலுவமர வரும்ராத்திரி
என்னென்ன கவலைகளோ- எல்லாமே தீர்கின்ற
ஏற்பாடு நவராத்திரி
——————————————————————————-
ஆயிரம்பேர் பார்த்தாலும் அத்தனைபேர் முகங்களிலும்
அம்பிகையின் ஜாடை இருக்கும்
ஆயிரம்தான் முயன்றாலும் அபிராமி நினைத்தால்தான்
ஆசைவைத்த ஏதும் நடக்கும்
ஆயிரம்தான் வாழ்ந்தாலும் அவள்முன்னர் நின்றால்தான்
ஆகாயம் உன்னில் திறக்கும்
ஆயிரமா நாமங்கள்? அத்தனையும் சொன்னாலும்
அவள்பெருமை மீதமிருக்கும்
———————————————————————————
தேனிருக்கும் பூக்களெல்லாம் தேவதேவி பாதத்தில்
தேனெடுக்க வந்து வீழும்
ஊனிருக்கும் உயிர்களெல்லாம் உத்தமியாள் கண்டவுடன்
உற்றவினை முற்றும் மாளும்
வானிருக்கும் நிறத்தழகி வாத்சல்யம் பழகிவிட்டால்
வாழ்க்கையெல்லாம் லஹரியாகும்
மானிருக்கும் கண்கள்மேல் மயல்பிறக்கும் ஈசனுக்கு;
மந்திரங்கள் மௌனமாகும்
———————————————————————————-
நாடகங்கள் அவள்நடத்த நாமெல்லாம் ஆடுகிறோம்
நாயகிக்குத் தெரியாததா?
பூடகமாய் சிரித்துநிற்கும் புன்னைநல்லூர் மாரியன்னை
பொன்னுள்ளம் கரையாததா?
ஆடகப்பொன் பாதங்கள் அதில்பதியும் வேதங்கள்
அம்பலத்தில் ஆடாததா?
ஏடெடுத்து நாமெழுத எழுத்தாகி வருவாளே
ஏழைமனம் அறியாததா?
—————————————————————————————-
ஜாமங்கள் அடங்குகையில் சலங்கையொலி கேட்கிறதே
சியாமளையாள் வரும்நேரமே
நாமங்கள் மொழிகையிலே நாநடுங்க கண்கலங்க
நாமுருகும் அருள்நேரமே
காமங்கள் மாற்றுகிற காருண்யை அருள்நம்மை
காப்பாற்ற இதுநேரமே
ஓமென்ற ரூபத்தில் ஓங்காரி எழும்நேரம்
ஓயாத வினை ஓயுமே
—————————————————————————————–
விழிகளெனும் சமுத்திரத்தில் விடுகதைகள் ஏந்திநிற்கும்
வித்தகியைப் போற்றுகின்றோம்
மொழியென்ற படகேறி மனமென்ற துடுப்போடு
சக்திகடல் மேவுகின்றோம்
வழிதேடி அழும்போது வீதிமுனை திருப்பத்தில்
விளக்காக நிற்கிறாளே
பழியேதும் சூழாமல் பாவங்கள் நேராமல்
பைரவி காக்கிறாளே
—————————————————————————————–
கிளிநின்ற தோளோடு குயில்வென்ற குரலோடு
கதைபேசக் காத்திருக்கிறாள்
களிநின்ற மனதோடு கைகூப்பும் நேரத்தில்
கண்ணெதிரே பூத்திருக்கிறாள்
வெளிநின்ற கோலத்தில் வெளியெங்கும் நிறைந்தாளே
வெறிகொண்டு ஆடுவாளே
தெளிநின்ற ஞானத்தைத் தருகின்ற பராசக்தி
தினம்நம்மை ஆளுவாளே
—————————————————————————————
தவள் எங்கள் மாசக்தி தயாபரி நிற்கையில்
தயக்கங்கள் நமக்கேதடா
கவளங்கள் ஊட்டுவாள் கவசங்கள் பூட்டுவாள்
கவலைகள் நமக்கேதடா
சிவமெங்கள் தந்தையாம் சக்தியே அன்னையாம்
சஞ்சலம் நமக்கேதடா
நவமாக உயிர்சுடர, தவமாக மனம்பொலிய
நாளுமவள் முகம்பாரடா.