அண்ணாகண்ணன்

எழுத்தாளராக, இதழாளராக 50 ஆண்டுகளைக் கடந்துள்ள மாலன் நாராயணன், பண்பு மிகுந்த, துணிவு மிகுந்த உரையாடல்களால் என்னைப் பெரிதும் கவர்ந்தவர். சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், அரங்கச் சொற்பொழிவுகள், நேர் உரையாடல்கள் என எந்தக் களத்திலும் இனிமையாகவும் கூர்மையாகவும் பதற்றமின்றியும் கருத்துகளை எடுத்து வைப்பவர்.

அரசியல் வெம்மையின் அனல் பறக்கும் போர்க்களத்தில், போலிகளையும் பொய்யுரைகளையும் முரண்பாடுகளையும் உள்நோக்கம் உள்ள வதந்திகளையும் சற்றும் சளைக்காமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் சுட்டிக் காட்டிச் செல்கிறார். இதை நான் ஒரு கடமையாகச் செய்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். இதற்காகக் கடுமையான வசைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டபோதும் கர்ம யோகியாய் அவர் முன்னோக்கிச் செல்கிறார். அவரைத் தாக்குவதற்கு வேறு காரணங்கள் கிடைக்காதவர்கள், அவரது சாதியைப் பற்றிக்கொண்டு உலுக்கும்போது, அவர்களின் தோல்வியை அங்கே கண்டேன்.

இந்தச் சச்சரவுகளுக்கு ஆட்படாமல், சர்ச்சைகளில் சிக்காமல், ஆபத்தில்லாத தலைப்புகளில் எழுதி, பேசி, அனைவருக்கும் இனியராக, நெரிசலில் எதன் மீதும் எவர் மீதும் இடித்துவிடாமல், அவர் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், உண்மையின் பக்கம் நின்று, அதை உறுதி செய்வதற்காக, தன் நேரத்தை, உழைப்பை, மன அமைதியைப் பணயம் வைத்துக் கேள்வி எழுப்புவதோடு, ஒவ்வொருவர் கேள்விக்கும் பதில் சொல்லுகையில் அவரை ஒரு போராளியாகவே பார்க்கிறேன்.

பொய்யை அம்பலப்படுத்துவதுடன், நாட்டில், சமுதாயத்தில் ஒரு நற்செயல் நடக்கும்போது, அதை உச்சியில் ஏந்திக் கொண்டாடுபவர், அவர். எப்போதும் எதிர்ச்செய்திகளையே எதிர்பார்த்து, உருவாக்கி, பரப்பி, அதையே பூதாகாரமாக்கி, நாடே அழிவில் சென்றுகொண்டிருப்பதுபோல் நம்ப வைப்போருக்கு மத்தியில், மாலன் ஒரு குறிஞ்சி மலர். அறத்தின் பக்கம் நிற்கும் அண்ணன் மாலன் வாழ்க, அவரால் இந்த மாநிலம் மேலும் மேலும் பயனுறுக.

======================================

அக்டோபர் 8 – மாலனின் பிறந்த நாள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *