நெல்லைத் தமிழில் திருக்குறள் – 66
-நாங்குநேரி வாசஶ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள்
65.வினைத் தூய்மை
குறள் 651:
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
ஒருத்தனுக்கு நல்ல கூட்டாளிங்களால செல்வம் கெடைக்கும். சேந்து செய்யுத நல்ல காரியங்களால எல்லா நன்மையும் கெடைக்கும்.
குறள் 652:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
புகழையும், அறத்தையும் தராத கெட்ட செயல்கள எந்த நெலமயிலயும்செய்யாம விட்டுப் போடணும்.
குறள் 653:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்
ஒசத்தியான வாழ்க்க வாழ ஆசப்படுதவங்க தான் செய்யுத காரியத்தால புகழுக்கு பாதகம் வராம பாத்துக்கிடணும்.
குறள் 654:
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
தடுமாறுத கொணம் இல்லாதவங்க சங்கடத்துல மாட்டிக்கிட்டாலும் தாழ்த்தியான செயல செய்ய மாட்டாங்க.
குறள் 655:
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
இப்டி செஞ்சுட்டோமேனு நோகுத அளவு செயலச் செய்யக் கூடாது. ஒருக்க செஞ்சிட்டா அத மறுபடி செய்யாம இருக்கது நல்லது.
குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
பெத்த ஆத்தா பசிச்சிருக்கதப் பாத்தாலும் அதுக்காவ பழிபாவத்த செய்யக் கூடாது.
குறள் 657:
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை
பழி பாவத்தச் செஞ்சு வக்கணைய வாழுததக் காட்டிலும் நல்லதச் செஞ்சிப்போட்டு ஏழையா வாழுதது மேல்.
குறள் 658:
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
ஆவாது னு ஒதுக்கி வச்ச செயல ஒருத்தன் செஞ்சுமுடிச்சாலும் அதால அவனுக்கு சங்கடந்தான் வெளையும்.
குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
மத்தவன அழுவ வச்சி சேத்த சொத்து பூராவும் அழுதுகிட்டே உட்டுப்போயிடும். நல்ல மொறையில சேத்தது கைவிட்டுப் போச்சுதுன்னாலும் திரும்ப வந்து சேந்துக்கிடும்.
குறள் 660:
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
தப்பான மொறையில பொருளச் சேத்து காப்பாத்த நெனையுதது பச்ச மண்ணால செஞ்ச பாத்திரத்துல தண்ணி மோந்து வச்சது கணக்கா தான்.
(அடுத்தாப்லையும் வரும்…)