இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(269)

-செண்பக ஜெகதீசன்

அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய                                  வல்லார்நட் பாய்ந்து கொளல்.

  –திருக்குறள்795(நட்பாராய்தல்)

புதுக் கவிதையில்

தீச்செயல் செய்ய நினைக்கையில்

வருந்தும்படிச் சொல்லித் தடுத்தும்,

செய்தால்

மீண்டும் செய்யாதவாறு கண்டித்து

உலக ஒழுகலாற்றை அறியச்செய்யும்

வல்லமை படைத்தோரை

ஆய்ந்தறிந்து நட்புக்கொள்ள வேண்டும்…!

குறும்பாவில்

தீதுநினைக்கையில் வருந்தச்சொல்லித் தடுத்தும்,

இடித்துரைத்து நல்வழிகாட்டும் வல்லமையுடையோரை    

ஆய்ந்தறிந்து நண்பராக்கிக்கொள்…!

மரபுக் கவிதையில்

தீய வழியில் செலநினைத்தால்

    திருந்த வருந்திடச் சொல்லியேதான்

போயவர் செயலைத் தடுத்திடுவார்,

    போனா லவரை இடித்துரைத்தே

தீயன வெல்லாம் தெரிந்திடவே

    தரணியில் நல்வழி காட்டிடுவார்,

தூயவ ரிவரை ஆய்ந்தறிந்தே

    துணிந்து கொண்டிடு நட்பினையே…!

லிமரைக்கூ..

வருந்தச் சொல்லித் தடுத்தே,        

தவறினால் இடித்துரைத்து நல்வழிகாட்டுபவரை

நண்பராக்கு தெரிந்து எடுத்தே…!

கிராமிய பாணியில்

நண்பனாக்கு நண்பனாக்கு

நல்லவனாப் பாத்துத்

தெரிஞ்செடுத்து நண்பனாக்கு..

கெட்டது செய்ய நெனைக்கயில

வருத்தப்படப் பேசி

தவறு செய்யாமத் தடுத்திடுவான்,

தவறுனா கண்டிச்சி

நல்ல வழியக்காட்டிடுவான்,

நல்லவன் இவன ஆராஞ்சி

நண்பனா நீயும் ஆக்கிப்புடு..

அதால

நண்பனாக்கு நண்பனாக்கு

நல்லவனாப் பாத்துத்

தெரிஞ்செடுத்து நண்பனாக்கு…!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comment here