மரபின்மைந்தன் முத்தையா

காலை திருவாரூர் மாலை திருக்கடவூர்
கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய்
அங்கே கமலாம்பா இங்கே அபிராமி
மங்கலத்தே ஆழும் மனம்.

யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா
ஏகாந்த மாக அபிராமி – ஆகா
விழிகண்ட காட்சி விரித்துரைப்பார் யாரோ
மொழிகொண்டு சேர்க்குமோ மாண்பு.

புற்றிடங் கொண்டார் பொருந்தும் கமலாம்பா
மற்றிங் கமுதீசர் மாண்பரசி – குற்றங்கள்
நீக்கிடுந் தாயர் நயனக் கனிவன்றோ
காக்கும் நமையே கனிந்து.

ஆரத்தி நேரம் அவளே இவளாவாள்
ஓரத்தில் நின்றே உளங்களித்தேன் – சாரத்தில்
சக்தி நிலையங்கள் சாநித்யம் ஒன்றேதான்
பக்தி கனிகின்ற போது.

கீர்த்தனைகள் கேட்டாள் கமலாம்பா பட்டர்முன்
ஆர்த்தெழுந்தே வந்தாள் அபிராமி – சாத்திரங்கள்
காணாத தேவியைக் காட்டுகிற பக்திநலம்
பேணல் பிறவிப் பயன்.

ஆசன மிட்டே அவளிருக்க, நின்றபடி
பூசனைகள் ஏற்றே இவள்சிரிக்க – தேசுடைய
பொன்விளக் கெல்லாமே பூரிக்க நன்னெஞ்சே
என்னிருட்டு நீங்கும் இனி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *