இலக்கியம்கட்டுரைகள்

2019 நவராத்திரி கவிதைகள் 6

-மரபின்மைந்தன் முத்தையா

புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[
புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக
புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த
பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக
தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ்
தர்க்கங்கள் தீர்ப்புகள் எல்லாமே
சத்திய நாயகி வாணியவள்- பதச்
சலங்கையின் ஒலியென அறிந்திடுக

அவள்தான் எழுவகை ஸ்வரமமைத்தாள்-இங்கு
அபிநயம் ஆயிரம் வடித்தளித்தாள்
கவிதைகள் காவியம் மலரவைத்தாள்-கருங்
கல்லுக்குள் சிற்பங்கள் ஒளித்துவைத்தாள்
இவரும் அவரும் விருதுபெற -கலை
இயற்றிடும் ஆற்றலும் அவள்கொடுத்தாள்
தவங்கள் செய்ததன் பயனாக -கலை
தேர்ந்திடும் வல்லமை அவள்கொடுத்தாள்

பிள்ளைகள் விரல்களை நாம்பிடித்தே-நல்ல
பசுநெல் பரப்பினில் எழுதுகையில்
கிள்ளைக் குரலினில் அக்‌ஷரமாய்-சிறு
கண்களில் தெரிபவள் கலைமகளே
கொள்ளும் செயல்கள் அனைத்திலுமே- அவள்
கூட வருவாள் எண்ணெழுத்தாய்
விள்ள முடியாப் புதுமையினள் -எங்கள்
வாணியின் திருவடி சரண்புகுவோம்

நுண்கலை வாணர்கள் திரண்டிடுக-பல
நூதனக் கவிஞர்கள் இசைத்திடுக
பண்கலையாளர்கள் பாடிடுக-நடம்
புரிகிற வித்தகர் ஆடிடுக
வண்ணக் கலைமகள் கொண்டாட்டம்-இங்கு
விதந்து கலைகளைப் பேணுதலே
மண்மிசை வானகம் தென்படுக-எங்கள்
மகத்துவக் கலைமகள் அருள் தருக!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க