-கிரேசி மோகன்
’’பகவான் உவாச!”
‘’அந்தர்(உள்ளே)யாம் நானுன் அருகிருந்தும், பின்னாடி
பந்தர்(ஹிந்தி) அரனார்(மாருதி ருத்ராம்ஸம்) பலமிருந்தும் – உந்தன்
மனச்சோர்(வு) எதுவோ! மகனேகேள் , சாகும்(மனித இனம்)
இனத்தோர்மேல் ஏனிந்த ஈர்ப்பு!”
-கிரேசி மோகன்
’’பகவான் உவாச!”
‘’அந்தர்(உள்ளே)யாம் நானுன் அருகிருந்தும், பின்னாடி
பந்தர்(ஹிந்தி) அரனார்(மாருதி ருத்ராம்ஸம்) பலமிருந்தும் – உந்தன்
மனச்சோர்(வு) எதுவோ! மகனேகேள் , சாகும்(மனித இனம்)
இனத்தோர்மேல் ஏனிந்த ஈர்ப்பு!”
-மேகலா இராமமூர்த்தி
மனிதன் ஒரு சமூக விலங்கு. தனித்து வாழ்வதினும் பிறரோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலேயே அவன் வெற்றி அடங்கியிருக்கின்றது. சமூக அறம் இருவகைப்பட்டது. ஒன்று இல்லறம்; மற்றது துறவறம். ஆசைகளையும் தேவைகளையும் துறந்து பற்றற்ற நிலையில் வாழும் துறவென்னும் அறம் எல்லார்க்கும் எளிதில் வாய்ப்பதன்று; ஆனால் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியாய் இணைந்து வாழும் இல்லறம் சாமானியர் பின்பற்றுதற்கு எளிது; அதனால் பலராலும் விரும்பப்படுவது.
இறந்தோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் இவர்களோடு தம்மையும் பேணும் பணி இல்லறத்தார்க்கு உரியதாய் வகுக்கப்பட்டுள்ளதால் பற்றற்று வாழும் துறவறத்தினும் அனைவர்மீதும் பற்றுக்கொண்டு வாழும் இல்லறமே சிறந்தது என்பது வள்ளுவப் பெரியாரின் துணிபு.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (குறள்: 43)
ஆன்றோர் போற்றும் இந்த இனிய இல்லறத்தைத் தொடங்கிவைப்பது ஒத்த தலைவனுக்கும் தலைவிக்குமிடையே நிகழும் மணவினையே ஆகும். அத் திருமணம் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துப்பழகியபின் நிகழும் காதல் மணமாகவும் இருக்கலாம்; பெற்றோர் கூட்டுவிக்கின்ற கடிமணமாகவும் இருக்கலாம்.
இவ்விரு மணங்களில் குமுகத்தில் மிகுதி எது என்று ஆராய்ந்தால் தமர் என்று சொல்லப்படும் பெற்றோரும் உற்றாரும் கூட்டுவிக்கும் மணங்களே மிகுதி என்று சொல்லலாம். எனினும், நாடக வழக்கிலும், பாடல்சான்ற புலனெறி வழக்கிலும் படிப்போர்க்குச் சுவைகூட்டுதற்பொருட்டு காதல் மணங்களே ’அன்பின் ஐந்திணை’ எனும் பெயரில் நம் புலவர் பெருமக்களால் விதந்தோதப்பட்டுள்ளன.
தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் சந்தித்து, மனங்கலந்து பின் அவர்கள் மணவுறவில் கலப்பதையே கவிஞர்தம் கவியுள்ளம் உள்ளியது என்பதற்கு நம் சங்கப் புலவர்கள் வடித்துத் தந்துள்ள அகத்திணைப் பாடல்களே அங்கை நெல்லியாய்ச் சான்றுபகர்கின்றன. சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 473 என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் அகம் பாடிய புலவர்களின் எண்ணிக்கை மட்டுமே 373. அகத்திணைப் பாடல்கள்பால் தம் அகத்தினை நற்றமிழ்ப் புலவர்கள் நனிசெலுத்தினர் என்பது இதன்வாயிலாய்த் தெற்றெனப் புலப்படுகின்றது!
”உலகின் பிறநாட்டாரெல்லாம் காதலை வெறும் ஆண்பெண் உறவு என்றே (மலினமாய்) நினைத்திருந்த வேளையில், அதனையும் தாண்டிய உள்ளத்து உணர்வு அது என்பதைத் தமிழர்தாம் அடையாளம் கண்டிருக்கின்றனர். அஃது ஒருவித மனநிலை என்பதே அவர்கள் துணிபு.” என்று கூறும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்,
”புறத்தை ஒரு மரம் என்று கொண்டால் அகமாகிய இல்லற வாழ்வே அதன் வேர்கள். வேர்கள் வெளியில் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவையின்றி மரமேயில்லை. அதுபோல் குடும்பம் நன்றாக அமைந்தால்தான் சமூகம் நன்றாய் அமையும்” என்று அகத்தின் பெருமையைச் சகத்துக்கு அறைகின்றார்.
மானுடக் காதலையே பெரிதுவக்கும் நம் சங்கத்தமிழ் நூல்கள் பாடல்களின் அடியெல்லையின் அடிப்படையில் அவற்றை எட்டுத்தொகையாகவும் பத்துப் பாட்டாகவும் பகுத்தன.
”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் கற்றறிந்தார்
ஏத்தும் கலியொடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை” என்பது எட்டுத்தொகைக்கான பட்டியல்.
இதில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, என அகத்தை மட்டுமே பாடிய நூல்கள் ஐந்து. புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறச்செய்திகளைப் பேசுவன. பரிபாடல் அகமும் புறமும் விரவியது.
எட்டுத்தொகை நூல்களுள் உரையாசிரியர்களால் அதிகம் எடுத்தாளப்பட்டுள்ள பெருமைக்குரிய நூல் குறுந்தொகையே. நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையும் கொண்ட குறுந்தொகை 205 புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்புக்குரியது. இந்நூல், காதலையும் அதுசார்ந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் மையப்படுத்திய நூலாயினும், மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இயற்கை குறித்த செய்திகளுக்கும் இதில் பஞ்சமில்லை.
நிவந்தோங்கிய மலைகள், அதிலிருந்து வீழும் வெண்துகில் நிகர்த்த அருவிகள், மரங்களில் தூங்கும் தேனிறால்கள், பாய்ந்துசெல்லும் காட்டாறுகள், பிளிறிச்செல்லும் பெருங்களிறுகள், வேட்டையாடும் வேங்கைகள், மருண்டு நோக்கும் மான்கூட்டங்கள், மனமயக்கும் மஞ்ஞைகள், கருங்கண் தாக்கலைகள், காமர் மந்திகள், அவற்றின் கல்லா வன்பறழ்கள், சித்தம் மயக்கும் புத்தம்புது மலர்கள், தினைக்கதிர் தின்னவரும் கிளிகள், கிழங்குகளை அகழ்ந்தெடுக்கும் காட்டுப் பன்றிகள் எனக் குறுந்தொகை நம் கண்முன் விரிக்கும் காட்சிகள் கவினார் உலகுக்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வன.
இயற்கை வளத்தையும் தாவர சங்கமத்தையும் இழந்து நாம் வறிஞராய் இன்று நிற்கும் பேரவலம் குறுந்தொகையைப் படிப்போர் உள்ளத்தில் பொங்கியெழுவது தவிர்க்கவியலாதது. எனினும், இப்பாடல்கள் வழியேனும் அவற்றை மீட்டும் நினைவுகூர்வது சற்றே ஆறுதலளிப்பதாகும்.
பழந்தமிழரின் காதல் வாழ்வையும், விழுமியங்களையும், இயற்கையோடு அவர்கட்கிருந்த அகலாப் பெரும்பிணைப்பையும், இன்னபிற செய்திகளையும் நறுந்தேனாய் இனிக்கும் குறுந்தொகைவழிச் சுவைப்போம் சிறிது; புறப்படுங்கள்!
[தொடரும்]
க. பாலசுப்பிரமணியன்
அந்தரத்திலும் அப்பாலும் அவனே
ஒருமுறை ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறுவன் கையில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிக்கொண்டு ஒரு கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அந்தத் துறவி அந்தச் சிறுவனை நிறுத்தி வினவினார்: “சிறுவனே, இந்த மெழுகுவத்தியில் இருக்கும் ஒளி எங்கிருந்து வருகின்றது?
உடனே அந்தச் சிறுவன் அவரைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு வாயினால் ஊதி அந்த மெழுகுவத்தியை அணைத்தான். பின்பு அந்தத் துறவியைப் பார்த்து “இந்த ஒளி எங்கே சென்றது?” என திருப்பிக்கேட்டான். அந்தத் துறவி பதிலளிக்க முடியாது திகைத்து நின்றார். உடனே அந்தச் சிறுவன் “இந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அந்த இடத்துக்கே அது சென்றுவிட்டது.” என பதிலளித்தான். அந்தத் துறவி உடனே அவன் கால்களில் விழுந்து “நீ எனக்கு குருவானாய். ஒரு மிகப் பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக எனக்கு விளக்கிவிட்டாய்” என்றுரைத்தார்.
இந்த அழகிய தத்துவத்தை விளக்கும் வண்ணம் திருமூலர் இறைவனின் ஒன்றுபட்ட தன்மையை கீழ்கண்ட பாடலில் வெளிப்படுத்துகின்றார்
தானே படைத்திடுந் தானே அளித்திடுந்
தானே துடைத்திடுந் தானே மறைத்துடுந்
தானே இவை செய்து தான்முத்தி தந்திடுந்
தானே வியாபித் தலைவனு மாமே.
அருள் வடிவாக நின்று எல்லாச் செயல்களுக்கும் பொறுப்பேற்று நம்மை ஆட்கொள்ளும் இறைவனின் அன்பினை வார்த்தைகளில் வடிக்கவும் முடியுமோ ?
இந்தக் கருத்தின் உண்மையை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது கம்பனின் பாடல்:
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே”
அந்த ஒருவனே பல வண்ணங்களில் பல வடிவங்களில் பலவிதமாகத் தோன்றும் பொழுது அவனை நாம் எப்படி வர்ணிக்க முடியும் ? அந்த பலவித வடிவங்களும் நமக்கு எப்படிப்பட்ட ஆனந்தத்தைக் கொடுக்கும்? இந்த அனுபவத்தை எடுத்துரைக்கும் வண்ணம் மாணிக்க வாசகர் பாடுகின்றார்:
துண்டப் பிறையான் மறையான பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலா மா ஊர்தியான்
கண்டம் கரியான் செம் மேனியான் வெள் நீற்றான்
அண்டம் முதல் ஆயினான் அந்தம் இலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்
அண்டம் வியப்பு உறுமா படும் காண் அம்மானாய்
வள்ளலாரோ இந்த ஆனந்தத்தை வலியுறுத்தும் வண்ணம் பாடுகின்றார்
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்
அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.”
இத்தனை வடிவங்களிலும் இடங்களிலும் இருப்பவன் நம் கண்ணுக்குப் புலப்படாமல் “மரத்துள் மறைந்த மாமத யானையாக” இருக்கையில் அவனை வெறும் கற்சிலைகளிழும் ஐம்பொன் சிலைகளில் மட்டும் காணமுடியுமா? இந்த ஐயத்தை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கண்ட பாடல்:
சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லினு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர்
இல்லுலு மென்ப ரிடத்துலு மீசை னிருக்குமிடங்
கல்லினுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே.
கல்லிலும் செம்பிலும் காணக்கிடைக்காத இறைவன் நம் உள்ளில் இருப்பதை எப்படி உணர முடியும்? இதற்க்கு ஒரே வழி நம்மிடம் உறைந்து கிடைக்கும் ஆணவ மலத்தை அடியோடு நீக்குவதே. அந்த ஆணவமலம் அகலும் பொழுது எல்லாம் அவன் செயல் என்ற உணர்வு மட்டுமின்றி “நான்”, “தான்” என்ற நினைப்பு நீங்கி உள்ளில் உலா வரும் உத்தமனை உண்மையின் உருவை தரிசிக்கவும் அனுபவிக்கவும் முடியும் இதை விளக்கும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்
நானன்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்றுந் தானென் றிரண்டிலை யென்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
இத்தனை சக்திவாய்ந்த அருளின் வடிவான ஒளிப்பிழம்பை உள்ளும் புறமும் பறந்து விரிந்து நின்று ஆளுகின்ற அமரனை நாம் எப்படிப் போற்றுவது? வார்தைகளாலா, பூசைகளாலா அல்லது நமது செயல்களாலா? அது எப்படி இருந்தால் என்ன? எல்லாமே அவன் கொடுத்தது. எனவே அவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியது .
அப்பர் பெருமான் கூறியபடி “வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்” அதில் எதன் மூலமாக அவனைப் போற்றினாலும் வாங்கிக்கொள்ளாமல் மறுக்கவாபோகிறான்?
தொடருவோம்
இரா.சந்தோஷ் குமார்
கோழையாக உணர்கிறேன்.
வெட்கப்பட்டு கொள்கிறேன்.
புரட்சி என்றெல்லாம்
எழுதுவது எதுவும் வீரம் தான்.
எழுதுவது மட்டுமே வீரமல்ல.
ஒவ்வொரு கொடுமைக்கும்
ஒவ்வொரு உரிமை மறுப்புக்களுக்கும்
உண்மையில் மனம் வெம்பி எழுதினாலும்
பொய்யாக கூட..
போலியாக கூட
செஃல்பி எடுத்து விளம்பரமாக கூட
அநீதி என சாலை மறியல் செய்ததில்லை.
அநியாயத்தின் கண்களில்
குரல் விரல் நீட்டி குத்தும்
ஒரு அறப்போராட்டத்தில் பங்கேற்றதில்லை.
மெரீனாக் கடற்கரைக்கு
காற்று வாங்க சென்றிருக்கிறேன்
காதலைப் பெற சென்றிருக்கிறேன்.
கவிதை எழுத சென்றிருக்கிறேன்
ஒரு முறை கூட
போராட்டமென சென்றதில்லை.
ஆனாலும் எழுதுகிறேன்
வீர தீர மானம் தன்மானம்
சுயமரியாதை சமூகநீதி என
ஏதோ புலம்புகிறேன்.
காக்கிச் சட்டைக்காரர்களின்
அதிகார தாக்குதலை
ஒரு முறை சுவைத்தால் போதும்..
தாக்குதலே ஒரு போதையென
ஒராயிரம் போராட்டத்திற்கு
முன் நிற்கும் தலைமை தைரியம் வருமாம்.
ஆனால் ஏனோ காகித புலி
களத்தில் நின்ற சரித்திரமில்லை.!
சே குவேராவை வாசித்தவனுக்கு
பாரதியை பாரதிதாசனை நேசித்தவனுக்கு
வீதியில் இறங்கி போராடும்
அஞ்சாமை இல்லை எனும் போது
நான் கோழையாகிறேன்
எழுதுவதால்
வெட்கப்படுகிறேன்.
புரட்சி என்றெழுதினால் மட்டுமே
பற்றி எரியாது காகிதம் தானே ?
பெருவை பார்த்தசாரதி
நிலையில்லா உலகினிலே நீடித்து வாழ்வதற்கே..
……….நில்லாமல் பெரும்பொருளீட்ட ஓயாமல் ஓடுவார்.!
நிலையில்லாத உடல்தனையே நித்தம் ஓம்புவார்..
……….நாறுகின்ற மெய்யுடலை நாளும்பேணிக் காப்பார்.!
நிலத்தில் புதையும் பிணத்தை மெய்யெனநினைத்து..
……….நெடுநாட்கள் வாழும்கனவில் தலைகீழாய் நிற்பார்.!
நிலைக்கும் என்றே நினைப்பார்.!எதுவுமிவ்வுலகில்..
……….நிலையிலை! என்பதைறியார் தம்வாழ்வு முடிவுவரை.!
மாறுகின்ற உலகினில் மாற்றமொன்றே நிரந்தரமாம்..
……….மனதினிலிக் கருத்தை இறுத்தியே பழகவேணுமப்பா.!
வீறுகொண்ட இளமைகூட சட்டெனக் கழிந்துவிடுமது..
……….வீணாகமல் வாழ்க்கையில் கடமை யாற்றவேண்டும்.!
வேறுலக்கு வெற்றுடனே போவோமென அறிந்தும்..
……….ஊரையே விலைக்குவாங்க நினைப்பார்கள் மூடர்.!
நீறாகு இவ்வுடலைநம்பி நிலையில்லாது மனம்தாவ..
……….நினையாதீர்..! எதுவுமிவ்வுலகில் நிலைக்கும் என்றே.!
இனத்திலொற்றுமை ஓங்கவே இப்பிறவி எடுத்தோம்..
……….எனுமுணர்வு நிலைக்கவே..இறைவனருள் வேண்டும்.!
மனதிலிவ்வுறுதி யசையாமல் நிலைத்து விட்டால்..
……….மாந்தரில் வேற்றுமை முற்றிலுமென்றும் ஒழிந்துவிடும்.!
குணத்தில் குன்றுபோல் நிலையாகவோங்க…..மனித..
……….குலத்தின் மகத்துவம் அறியுமெண்ணம் வேண்டும்.!
பணத்தினாலும்….ஈட்டும் பொருளினாலும் மட்டுமே..
……….நிலைக்குமென்ற யாக்கை நிலைக்குமொரு பொய்யே.!
மலருக்குத் தெரிகிறதா..? அதன்வாச மதுபோலே..
……….மானுடப்பிறப்பின் தத்துவம் அறியார் மாந்தர்கள்.
பலருக்கும் பற்றுண்டாம் உலகினி லனைத்திலுமே..
……….பாருக்குள்ளே பலவழியில் வாழ நினைப்பார்கள்.!
சிலருக்கு மட்டுமே புரியும் சித்தர்களின் சூட்சுமம்..
……….சிந்தனையில் கொள்வீரேல் உம்சித்தம் தெளிவடைவீர்.!
உலகினில் சிறந்த மானிடப்பிறப்பதன் ரகசியமதை..
……….உணர்வீரெதுவும் நிலைக்காது என்ற.! மெய்யறிவீர்.!
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::04-09-17
நன்றி:: படம் கூகிள் இமேஜ்
-இன்னம்பூரான்
செப்டம்பர் 5, 2017
2003ஆம் வருடம் ஒரு தீநிமித்தம். கதிரவன் உதிக்கும் முன், முன்னூறுக்கு மேற்பட்ட சராசரி கிராமத்தினர் இரு சடலங்கள் எரிந்து சாம்பலாவதைக் கண்டுகளிக்கக் கூடியிருந்தனர், விருத்தாசலத்துக்கு அருகில் இருக்கும் புதுக்கீரைப்பேட்டை என்ற கிராமத்தின் வெட்டவெளியில். மரணச் சான்று பெற, ஆதார் போன்ற மண்ணாங்கட்டிகள் எல்லாம் கிடையாது. தேவையுமில்லை அப்பனும் ஆத்தாளும் இருந்தால் கூட அவை அனாதைப்பிணங்கள். கூடப்பிறந்த அண்ணனும், அருமைச் சுற்றமும், அக்கம்பக்கத்து பிசாசுகளும், கண்ணகி என்ற பட்டதாரி பெண்ணை நஞ்சு உண்ணவைத்து அவள் மரணத்தைக் கொண்டாடினார்களாம். அவள் வன்னியர் குலத்தவள். அவள் காதலித்து மணந்த முருகேசன் என்ற கெமிகல் எஞ்சினியர் அருகில் உள்ள குப்பநத்தத்தில் நசுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து முன்னுக்கு வந்தவர். காதலித்து மணந்த இந்த ஜோடிக்கு தினந்தோறும் மரணபயம்.
முருகேசன் கண்ணகியை மூங்கில்துறைப்பட்டு என்ற கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் பாதுகாப்புடன் வைத்துவிட்டு, வண்ணான்குடிக்கடவு என்ற கிராமத்துக்கு சென்றார். அவருடைய மாமன் மூலமாக இதைத் துப்பறிந்த வன்னியர்குலப் பெருந்தகைகள், நைச்சியமாக அவர்மூலம், முருகேசனைத் தருவித்து அவரை, கோயில் அருகில் ஒரு கம்பத்தில் கட்டினார்கள். கண்ணகியின் ரத்த உறவு அவரை விளாசித்தள்ள, வலி பொறுக்கமுடியாமல், அவர் கண்ணகி தஞ்சம் புகுந்த இடத்தை சொல்லிவிட்டார். 12 நபர்கள் கொண்ட படையை ஏற்றிக்கொண்டு கார்கள் பறந்தது. நம் கிராமவாசிகள் ஏழைகள். டில்லியில் கூத்தடிப்பார்கள். ஆனால், கார் மோர் எல்லாம் அத்துபடி. கந்துவட்டியும் அத்துபடியாக இருக்கலாம். அவள் வலுக்கட்டாயமாகக் கொணரப்பட்டாள். நஞ்சு ஊட்டப்பட்டு அவர்கள் இருவரும் -இளம்தம்பதிகள் – செத்துப்போனார்கள். Gleeயுடன் கொளுத்தப்பட்டார்கள். என்ன உலகமடா?
அப்பனும் அண்ணனும் கண்ணகிக்கு நஞ்சு புகட்டியதாகவும், அப்பனும், மாமனும் முருகேசனுக்கு நஞ்சு புகட்டியதாகவும் விருத்தாசலம் போலீஸ், விடுதலைச் சிறுத்தை படையின் தலைவர் திருமாவளவன் தலையிட்டபின் சொல்கிறார்களாம். இந்தப்பக்கம் நான்கு பேர், அந்தப்பக்கம் நான்கு பேர். கைதாம், என்னே சமச்சீர்? 14 வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 2017 இறுதியில் கடலூரில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இரண்டு சாட்சிகள் முரண் சாட்சிகள் ஆயினர்.
கடந்த அறுபது வருடங்களில், ‘வர வர மாமியார் கழுதைபோல் ஆன கதையாக‘ தமிழ்நாட்டு மக்கள், ஈ.வே.ரா. அவர்களின் சமத்துவ அறிவுரைகளைக் குப்பையில் போட்டுவிட்டு, ராஜாஜியின் விமோசனத் தொண்டுகளை மறந்துவிட்டு, காமராஜரின் பொது அறிவைக் கடாசிவிட்டு, காந்திஜியின் போதனைகளை முற்றும் உதறிவிட்டு, திரு.வி.க. அவர்களின் சீரிய கருத்துக்களைக் கொளுத்தி அழித்துவிட்டு, கொள்ளிவாய்ப் பிசாசுகளாக நடந்துகொண்ட கதை இது.
ஈ.வே.ரா. அவர்களின் வழித்தோன்றல்கள் அறுபது ஆண்டுகளாகச் சாதி அடிப்படையில் ஆட்சி நடத்தியபோது, இவை அதிகரித்தன. போலீசிடம் கொடுத்த புகாரும், அவசர உதவி கேட்ட வேண்டுகோளையும் காவல்துறை கண்டுகொள்ள மறுத்ததாம். இந்த அழகில் நாம் என்றோ இதிகாசத்தில் சொல்லப்பட்ட உபகதை – துரோணன் என்ற பார்ப்பன க்ஷத்திரியர் ஏகலைவனிடம் கட்டை விரலை தக்ஷிணையாக கேட்டதாக சொன்னப்பட்டதை நினைவில் கொணர்ந்து கொதித்துப் போகிறோம். பாரதியார் அதனால் தான் பழங்கதைகளை தனக்குள்ளே பேசி மாய்ந்து போகவேண்டாம் என்று சொன்னார். கேட்பார் இல்லையே!
தமிழ்நாட்டுக்குத் திரும்புவோம். கடந்த மூன்றாண்டுகளில் இந்த மாதிரி ‘சூடு, சுரணை காக்கும்’81 கொலைகள் நடந்துள்ளன. இப்படித்தான் கெளசல்யாவை மணந்த சங்கரை உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில், மக்கள் மன்றத்தில் நடுவில் அரிவாளால் வெட்டி கொன்றார்கள்.
வெளிநாடுகளில் சொகுசாக அமர்ந்துகொண்டு தமிழ்நாட்டை, ட்விட்டர், ஃபேஸ்புக், லொட்டு, லொசுக்கு, மண்ணங்கட்டி செய்திகளை நம்பிப் பட்டி மன்றம் நடத்தும் நண்பர்களே! எவிடென்ஸ் கதிர் அவர்கள் சொல்வதை கேளும்:
இந்த வாழ்நெறி நசுக்கி ஒழித்து விடாப்பட்டால் 2077 தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருக்காது; அதற்கு இருக்கவேண்டிய தகுதியும் இருக்காது. யாராவது சிலருக்காவது மனம் கொதிக்குதா என்று பார்ப்போம். மனம் இரங்குதா என்று பார்ப்போம்.காஷ்ட மவுனம் சாதிக்காமல், இந்த மாதிரியான வாழ்நெறியைக் கடைபிடிக்காத பிராமணர்களை மட்டும் தாக்கும் மனப்பான்மை தணிந்து நடுநிலை முக்கியத்துவம் பெற்றால், 2077 லாவது தமிழ்நாடு செழிப்புடன் திகழக்கூடும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
படித்தவை:
’’சூடான சாதம் சிலீரென் றகட்டி
ஏடான சீமைத் தயிருடன் -மேடாக்கி
ஊறுகாய் தொட்டுஉண்டு ஓரமாய் மெத்தையில்
ஊருவேலை பாக்க உறங்கு’’….!
’’பாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்
ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
சாத்தமுது சாதம் சுவையா னநீர்மோர்
ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்’’….!
“வத்தக் குழம்பை வயிறார உண்டுநிதம்
செத்த பிணம்போல சாய்ந்தபடி- மெத்தையில் ,
மல்லாந்(து)ஆ ராய்தல் மிகப்பெறும்வீண், பாரதியார்
சொல்லாழ்ந்(து) அனுபவிசத் சித்”….கிரேசி மோகன்….
”பரம்பொருளே ஆயினும் பாண்டித்யம் பெற்றார்
அறம்பொருள் இன்பம் அடைந்தார் -குருயில்ல(குரு ஆஸ்ரம)
டீச்ச ரிடம்பெற்றார் தாமு(யசோதைசேயாய் உள்ளவரை கண்ணன்பெயர் தாமோதரர் அலயஸ் தாமு) சகாவுடன்
ஆச்சார்யர் கீதை அளிப்பு’’….கிரேசி மோகன்….!
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….
“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய, வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..
“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம்
பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
சரணடை கோவண சந்நிதியில்”….!
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
வாத புரீசன் வடமதுரா மன்னவன்
கீதகோ விந்தந்தாள் காப்பு….!
களித்தெமுனா தீரத்தில் கோபியர் சூழ
குளித்தவர் காமத்தைக் கொன்று -அளித்தனன்
ஞானத்தை; அந்தநந்த நீலத்தை நாம்வணங்கி
ஓணத்தில் கொள்வோம் உவப்பு….!
வானத்தை மண்ணை வரமாய் பலிதந்த
தானத்தை அன்றளந்த தெய்வத்தை -ஓணத்து
வாமனக் குட்டனை வாத புரீசனை
நீமனக் கட்டில் நிறுத்து….!
கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
நூற்றிடுவேன் வெண்பாக்கள் நீர்வண்ணா வாழ்த்திடுவாய்
ஈற்றடி யாக இருந்து….!கிரேசி மோகன்….!
ஆவணியஸ்தம் தொடங்கிய திருவோணத் திருவிழவில்..
…………அரியுருவாகி அரியைழிந்தவனுக்கோர் அற்புத விழாவாம்.!
தாவணியில் பெண்கள்தனை பட்டாடையால் அலங்கரித்து..
…………மண்ணுக்குள் மாய்ந்த மாவலியையழைக்கும் விழாவாம்.!
தாரணியெங்கும் தசநாட்கள் கொண்டாடும்…மாவலியாமவன்..
…………மூன்றாவதடிக்கு முன்னந்தலையைக் காட்டிய விழாவாம்..!
பேரணியாய் மகிழ்வுடனே திரளுவாரங்கே மாவலிராஜாவின்..
………..பெருவரவென்று..!பெருவிருந்தான “ஓணசத்யா” உணவுடன்.!
காம்பொடுகூடிய கடிமலர்கள் எல்லாம் பெருங்கூட்டமாய்..
…………காரணத்தோடு…தோவாளை யெனுமிடத்திற்கு கடுகிவருமாம்.!
கூம்பின்வடிவாய் ஆங்காங்கே வந்தமலர்க் கூட்டமெலாம்..
…………குவியலாய் வாசல்தோறுமங்கே கோலமா யலங்கரிக்குமாம்.!
ஆம்பல் மலர்நிறத்தில் வானமுமேகமும் வாழ்த்த..வெள்ளை..
…………ஆடையுடித்திய இளமங்கையரெலாம் கூடுவரங்கே..விருந்..
தோம்பலே வாமனாவதாரத்தின் பிரதான நோக்கமாகுமாமது..
…………திருமாலைப் போற்றும் திருவோணமெனும் பெருவிழாவாம்.!
=========================================================
நன்றி:: படம்..தினகரன்_2012
வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் “ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்”.
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வீட்டுக் குள்ளே என்னைப்
பூட்டி வைப்பாய் !
பகற் பொழுதை நான் பார்க்க
அனுமதி தராதே !
இங்கே எப்படி நான் தனிமையில்
மறைந்து வாழ்வது ?
பிறர் என்ன சொல்கிறார் என்று
கவலைப் படேன் !
காதலி இல்லாத உலகில் நான்
வாழ விரும்பிலேன்.
காத்தி ருப்பேன் சில காலம் !
உண்மைக் காதலி வரலாம்
ஒருநாள்,
எப்போ தென்று நான் அறியேன்.
அப்படி அவள் வந்தால்
அறிவேன் நானதை !
புள்ளினம் இசை எழுப்பும்.
மழைமுகில் நிலவினை
மறைக்கும் !
இங்கே கிடப்பேன்
என் ஏகாந்த நிலையில் !
அதுவரை என்னைப் பூட்டி வை.
அனுமதி தராதே
பகற் பொழுதைப் பார்க்க !
காதலி இல்லா உலகில் நான்
வாழ விரும்பிலேன் !
( எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
பிறப்புக்கும் இறப்புக்கும் பெரும்போரே நடக்கிறது
பிறந்துவிட்ட யாவருமே இறந்துவிடல் நியதியன்றோ
இறப்பதற்கு எவருமே ஏக்கமுடன் இருப்பதில்லை
இருந்துவிட வேண்டும் என்னும் ஏக்கமதேயிருக்கிறது
வருந்தியமன் அழைத்தாலும் வரமாட்டேன் என்றழுத்தி
யமனுக்கே போக்குக்காட்டும் நாடகத்தை ஆடுகிறார்
விருந்துண்டு நாள்முழுக்க மேதினியில் வாழ்வதற்கே
மருந்துண்டு மருந்துண்டு வாழ்நாளை பார்க்கின்றார் !
எத்தனையோ வைத்தியங்கள் அத்தனையும் பார்க்கின்றார்
சத்திர சிகிச்சையெலாம் தான்செய்து நிற்கின்றார்
நித்திரையை வரவழைக்க நிறையப்பணம் கொடுக்கின்றார்
அத்தனைக்கும் அவர்வசதி உச்சமதில் இருக்கிறது
சொத்தெல்லாம் வித்தாலும் சுகம்பெறவே விளைகின்றார்
சத்தான உணவையெல்லாம் தானவரும் உண்ணுகிறார்
மொத்தமுள்ள வைத்தியரை குத்தகைக்கே எடுக்கின்றார்
முழுமையாய் வாழ்வதற்கே முழுகவனம் செலுத்துகிறார் !
வசதியுடன் வாழ்வோரும் வழிதெரியா வாழ்வோரும்
நீண்டகாலம் வாழ்வதற்கே நினைக்கின்றார் நாளெல்லாம்
மரணபயம் யாவருக்கும் மனம்முழுக்க இருப்பதனால்
தினமுமவர் மனம்முழுக்க இறைவனையே எண்ணுகிறார்
பயபக்தி கொண்டதனால் பலதுமவர் செய்கின்றார்
பலகடவுள் வழிபாட்டை பாங்குடனே ஆற்றுகின்றார்
மனம்முழுக்க வாழ்வுபற்றி பலவற்றை நிரப்பியதால்
வாழ்நாளை இழந்துவிட மனமவர்க்கு மறுக்கிறது !
இப்படியே பலபேரும் இருக்கின்ற உலகினிலே
எப்படியும் வாழலாம் எனநினைக்கும் நினைப்பினால்
தப்பான வழிசென்று தன்வாழ்வின் பயனறியா
தற்கொலையை தேர்ந்தெடுத்து தாமழிந்து நிற்கின்றார்
ஒருகணத்தில் உதிக்கின்ற உணர்வதனால் தமைமறந்து
உலகமே தமக்கெதிரி எனநினைத்து வெறுப்படைந்து
தமக்குள்ளே முடிவெடுத்து தன்வாழ்வை முடிக்கின்ற
தரமில்லா மக்களுக்கு தன்னுணர்வை ஊட்டவேண்டும் !
அவசரமாய் அவசரமாய் அவரெடுக்கும் முடிவாலே
அவசரமாய் அவசரமாய் அவர்வாழ்வே முடிகிறது
பதட்டமுடன் செயற்படுதல் பார்த்தவுடன் வெறுப்படைதல்
கிடைக்கின்ற வாய்ப்பினையும் கீழெனவே நினைத்துவிடல்
தாழ்வுமனப் பான்மையினை தமதாக்கிக் கொண்டுவிடல்
புத்திமதி சொல்வாரை புறமொதுக்கி நின்றுவிடல்
எப்பவுமே தப்பிதமாய் எக்கணமும் இருந்துவிடல்
அத்தனையும் அவர்வாழ்வை அழித்துவிடக் காரணமே !
மண்ணிலே நல்லவண்ணம் வாழவந்த வாழ்க்கையினை
எண்ணியே மக்களெலாம் எத்தனையோ செய்கின்றார்
புண்ணியங்கள் மனமெண்ணி பொறுப்புடனே நடக்கின்றார்
கண்ணெனவே வாழ்க்கையினை காத்திடவே எண்ணுகிறார்
மண்ணைவிட்டு ஓடிவிட மனமெவர்க்கும் இருப்பதில்லை
மகிழ்வுடனே வாழ்வதற்கு வகைகள்பல தேடுகிறார்
உண்மையினை உணராமல் உயிரைமாய்த்துக் கொள்ளுகின்றார்
மெல்லநின்று உணர்ந்துவிட்டால் வீணாக்கார் தம்முயிரை !
இல.பிரகாசம்
“கால்கள் ஓடி ஓய்கிற வயதாச்சு
வயசு ஐம்பதை நெருங்கிடுச்சு
வருஷம் தவறாது
கால்கடுக்க வெயிலில் நின்னு
பேரு விலாசம் எல்லாத்தையும்
கொடுத்தாச்சு“
காலத்தை தொலைத்து விட்ட
பதிவாளரின் மூச்சு
பின் வரிசைக்காரனுக்கும் ஒலித்திருக்கும்
சங்கேத மொழிகள் ஏதேனுமொன்றில்
ஆபிசு வாசலில் “வேலைவாய்ப்பு
படித்த இளைஞா்களே வாய்ப்பை தவறவிடாதீா்கள்”
கொட்டை எழுத்தில் கெக்கலித்துக் கொண்டிருப்பது போல்
பாவனை காட்டியதாக ஒரு சித்திரம்
அப்போது தோன்றியிருந்தாலும்
ஆச்சரியப் படுவதற்கில்லை
பட்டயச் சான்றிதழ் நகல்களைக்
கொடுத்துப் போகச் சொன்ன அலுவலா்
அடுத்த மாதம்
அலுவலக வாசல் பஜ்ஜிக் கடையில்
ஒரு மூலையில்
ஒரு நாளேட்டின் நான்கு துண்டு
காகிதங்களோடு
இந்த நான்கு துண்டு நகல்கள்
எங்கேனும் தேடிப் பார்க்கத் துாண்டுமா?
வரிசை நீண்டு கொண்டிருப்பது போல
என் பெயருடன் விலாசத்துடன்
மேலும் ”நான் ஒரு
பட்டதாரி” பதிவுகளும் எண்ணிக்கையில்
நீண்டு கொண்டிருக்கின்றன
வயசு பதிவு மூப்பாகிக் கொண்டிருக்கிறது
என் பட்டயச் சான்றிதழும்
இன்னும் கன்னி கழியவில்லை
நான் பட்டதாரி தான்
“பட்ட” தாரி!
வரிசையில் மீண்டும் என்னைப் போல்
ஒருவன்
நாளையும் வருவான்
வரிசையும் நீளும்…!
பதிவெண்களும் நீளும்….!