இந்த வார வல்லமையாளர்! (238)
செல்வன்
இவ்வார வல்லமையாளராக திரு அரிசோனன் மகாதேவன் அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வல்லமையில் பல ஆண்டுகளாக எழுதிவருபவர் திரு அரிசோனன். இவர் தமிழகத்தில் பிறந்து, கொரியாவில் பணியாற்றி தற்போது அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் வசித்து வருகிறார். “தமிழ் இனி மெல்ல” எனும் சோழர் காலத்தை மையமாக வைத்த புதினத்தை தாரணி பதிப்பகத்தார் மூலம் வெளியிட்டுள்ளார். தாரகை எனும் வலைதளம் மூலம் தமிழ், தமிழ்மண் குறித்த செய்திகளை வெளியிடுகிறார்.
அரிசோனா மண்ணில் தமிழும், ஆன்மிகமும் தழைப்பது இவரது எழுத்தின் மூலம் அறியலாம். அரிசோனா பிள்ளையார் ஆலயம் குறித்த செய்திகளை இவர்மூலம் வல்லமை குழுவில் அறிந்துகொண்டோம். சைவ உணவு மற்றும் ஜீவகாருண்யத்தில் மிகுந்த அக்கறை கொண்ட அரிசோனர் கொரியாவில் சைவம் என்றால் என்னவென்றே தெரிந்திராத நாட்டில் சைவ உணவுக்கொள்கையை பின்பற்ற தாம் பட்ட சிரமங்களை குழுவில் பதிவுகளின் மூலம் எடுத்துரைத்தார். பலசமயம் வெறும் சீரியலை மட்டுமே உண்டதையும், சைவ உணவின்றி பட்டினி இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
வல்லமையில் நடந்த பலவிவாதங்களில் இவர் பங்குகொண்டுள்ளார். அதில் என்னை மிக கவர்ந்த விஷயம் தன்னை எதிர்ப்பவரையும் பண்புடன் இவர் அணுகும் விதமே. மிக சர்ச்சைக்குரிய கருத்துக்களை விவாதிக்கையிலும் உணர்ச்சிவசப்படாது கருத்தை எடுத்து வைப்பதில் வல்லவர்.
மதுவிலக்கு கருத்தில் மிகதீவிர ஈடுபாடு உள்ள இவர் இது குறித்து குறிப்பிட்ட சம்பவம் ஒன்றில் தான் விருந்தினராக சென்ற இல்லம் ஒன்றில் மது குறித்து உரையாடி, விவாதம் எழுந்து அதனால் தான் உண்ணாமல் வெளியேறியதையும் குறிப்பிட்டார்.
மதக்கலவரம் வந்த சமயம் சிறுபான்மை மதம் சார்ந்த தம்பதியினர் ஒருவரை கலவரக்காரர்கள் துரத்த அவர்களை தன் வீட்டில் வைத்து யாரும் அறியாமல், தனக்கு ஆபத்து வந்தாலும் வரலாம் எனும் சூழலிலும் கலங்காது குடிமகனாக தன் கடமையை ஆற்றிய பண்பாளர்
இத்தகைய சிறப்புக்குரியவரை “ஒரு அரிசோனன் ” மகாதேவன் அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது. அரிசோனன் அவர்களின் நற்பண்புகள் வருங்கால இளைஞர்கள் பின்பற்ற இவ்விருது ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]