Category: தொடர்கள்

  • சேக்கிழார் பாடல் நயம் – 85 (அம்பொன் )

    சேக்கிழார் பாடல் நயம் – 85 (அம்பொன் )

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இளையான்குடி மாற  நாயனார் புராணம்

    இயற்பகை  நாயனாரின் செயற்கரிய  செயல் குறித்துச்  சேக்கிழார்  இயற்றிய பாடல்களின்  நயங்களை இன்று வரை படித்து மகிழ்ந்தோம்! இனி இளையான்குடி நாயனாரின் அருள் வரலாற்றைச்  சேக்கிழார் பெருமானின் கவித்திறத்தின் வழியே  காண்போம்.

    முதலில்  திருநீலகண்டக்  குயவர், அடுத்து இயற்பகையார் என்ற  கடற்கரை வாணிகர், அடுத்து சூத்திர நற்குலத்தாராகிய இளையான்குடி மாற நாயனார். இவ்வாறு அடியார்களிடையே குலவேறுபாடு  கருதாத சைவத்தின்  சிறப்பைத்   தொடர்ந்து  நம் திருமுறை  கூறுகின்றது!

    அம்பொன்   நீடிய   அம்ப   லத்தினில்  ஆடுவார்அடி   சூடுவார்
    தம்பி  ரான்அடி   மைதிறத்துஉயர் சால்பின்   மேன்மை தரித்துளார்
    நம்பு   வாய்மையின்  நீடு   சூத்திர  நற்கு  லம்செய்    தவத்தினார்
    இம்பர்   ஞாலம்  விளக்கினார்இளை  யான்கு   டிப்பதி  மாறனார்

    உரை:

    அழகிய பொன்னோடுகளால் வேயப்பெற்ற, நீடித்த பெருமையை உடைய அம்பலத்தில் கூத்தாடுவாரின் திருவடியை எப்போதும் தலைமேல் சூடிக் கொள்பவர்; சிவபிரான் அடிமைத்திறத்தில் உயர்ந்த நிறைவு பெற்று அதனையே தம்பண்பாக மேற்கொண்டு வாழ்பவர்; உயர்ந்த நம்பிக்கைக்கு உரிய  சூத்திரக் குலம்  செய்த தவத்தால் அக்குலத்தில் அவதரித்து  அந்தக் குலத்தை   புகழுடன்  விளங்கச்  செய்தவர்,  இளையான்குடி என்ற ஊரை ஆண்ட  சிற்றரசராகிய  மாறனார் ஆவார். அவர் தம்  செயற்கருஞ் செயலை  இப்புராணத்தில் காண்போம்.

    விளக்கம்:

    இப்பாடலில் ‘’அம்பொன் நீடிய அம்பலம்’’ என்ற தொடர் தில்லையம்பலத்தின் நெடிய வரலாற்றைக்  கூறுகிறது! அவ்வம்பலம் காலந்தோறும் பொன்னால் வேயப்பெற்ற  நெடிய வரலாறு கொண்டது. முற்காலத்தில் இறைவனின் திருக்கூத்தை தரிசித்த தேவர்கள் அம்பலத்திற்குப் பொன் வேய்ந்தனர்; அதன் பின் இரணியவர்மன் என்ற அரசர் அம்பலத்திற்குப்  பொற்கூரை வேய்ந்தார்; அதன்பின் அநபாயச் சக்கரவர்த்தி முதலானோர் பொன்னோடுகளால் தில்லையம்பலத்தை வேய்ந்தனர்; இன்றும் தில்லையம்பலம் பொன்னால் வேயப்பெற்று விளங்குகிறது. திருநாவுக்கரசர்,

    ‘’முழுதும்   வானுல  கத்துள  தேவர்கள்
    தொழுதும்  போற்றியும் தூயசெம்   பொன்னினால்
    எழுதி  வேய்ந்த  சிற்றம்பலக்  கூத்தன்‘’

    என்று பாடுகிறார். அவ்விறைவன் திருவடி மலர்களைத் தம் தலைமேல் சூட்டிக்கொண்ட அடியார் மாறனார் ஆவார். இறைவன் திருவடி,

    ‘’அஞ்சிப்போய்க்  கலி  மெலிய  அழலோம்பும்  அப்பூதிக்
    குஞ்சிப்பூவாய்  விளங்கும் சேவடியே கூடுதியே!’’

    என்று அப்பர் பாடுகிறார்.

    மேலும் ‘’உயர் சால்பின்  மேன்மை தரித்துளார்‘’ என்ற தொடர்,  அவர்தம் அடிமைத்   திறத்தில் நிறைந்த,

    அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு
    ஐந்து  சால்பு ஊன்றிய  தூண்!’’

    என்ற வள்ளுவர் வாக்கிக்கேற்ற ஐந்து குணங்களும் புலப்படுகின்றன! இவ்வாறு எல்லாக் குணங்களும் நாயனாரின் இறையடிமைத்  திறத்தில் குடிகொண்டன!

    மேலும் ‘’நம்பு வாய்மையின் நீடு சூத்திர  நற்குலம்‘’ என்ற தொடர் அவர் பிறந்த குலத்தின் வாய்மைத் திறத்தை உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘’வாய்மையோடு   ஐந்து சால்பு ஊன்றிய தூண்‘’ என்ற குறளில் வாய்மை யோடு  சார்ந்த  நான்கு குணங்களும்  சேர்ந்து  சால்பு   ஆயினமையை உணர்த்தியது போலவே  சேக்கிழாரும், சூத்திர நற்குலத்தை ‘’நம்பு வாய்மையின்‘’ என்று அடைமொழி கொடுத்து இங்கே உணர்த்துகிறார்.

    வாய்மைத் தன்மையிலே நீடி வருகின்ற சூத்திரன் என்ற பெயரா லறியப் பெறும் நல்ல குலம். நல் – நல்ல. நலம் – சுத்தம். “சூத்ரா சுத்த குலோத்பவா;“ என்பது சிவாகமம். சூத்திரப் பெயர் இங்கு உழுதொழிலாளரைக் குறித்தது.

    “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்“  என்று ஆசிரியர் பின்னரும் வாயிலார் நாயனார் புராணத்தில்  இக்குலப் பெருமையைச் சிறப்பித்தார். உழுதொழில்  புரிவோர்களைச் சூத்திரர் எனவும், நான்காம் வருணத்தவர் எனவும் பேசுதல் ஆசிரியர் காலத்தில் வழக்காயிருந்தது. அச்சொல்லைப் பிற்காலத்தார் இழிவு படுத்தினர். அப்பெயரால் ஏதும் இழிபு குறித்திருப்பின் ஆசிரியர் அதனை சிறப்புறக் கூறியிருக்க மாட்டார்! இங்கு, ஏர்த்தொழில் புரியுங் குலமாகவே இப்பெயராற் போந்த குலம் சுட்டப் பெற்றது. “ஏரின் மல்கு வளத்தினால் வரும்“ என்று அடுத்த பாட்டிலே தொடர்ந்து கூறுவது காண்க.

    இப்புராணத்துள்ளே மற்றும் பல நாயன்மார்களை வேளாண் குலத்தவர் எனக் குறித்த ஆசிரியர் இங்கு ஏர்த்தொழிலே செய்யும் இந்நாயனார் சூத்திர நற்குலத்தவர் என்று குறித்தலின் வேற்றுமை ஒன்றும் காணப் பெறவில்லை. வேளாளரை வாய்மையின்  மேன்மைபற்றி அறிவிப்பது ஆசிரியர் மரபு. உழுதுண்போர் – உழுவித்துண்போர் என்ற பாகுபாடு கருதி இவ்வாறு வேறு வேறாக குறிக்கப்பெற்றதோ என்று சிலர் ஐயங்கொள்வார்

    “பின்னவர் சதுர்த்தர் பெருக்களார் வன்மையர்
    மன்னுமுத் தொழிலர் மண்மகள் புதல்வர்
    உழவர்  ஏரினர்  வாணர் காராளர்
    விளைஞர் மேழியார்  வேளாளர்  என்றிவை
    தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே“

    என்று பிங்கல நிகண்டு  சொற்பொருள்  கூறுகிறது!  இப்பெயர் பற்றி இந்நாளில் எழும் பல் வகைப் பூசல்களையும் பிற்காலத்தினர் உருவாக்கினர். அக்குலம்  இவரைப் பெறத்  தவம் செய்தது என்று சேக்கிழார் கூறினார், அக் குலஞ்செய்த தவத்தின்   விளைவாக அதனில் வந்தவதரித்து இவ்வுலகை வாழ்வித்தவர் இளையான்குடி  மாறனார் ஆவார்! .

    இளையான்குடி – இது  இப்போது பரமக்குடி என்ற ஊரின் அருகில் உள்ள இளையான்தன்குடி அஃதாவது  இளையாற்றங்குடி  எனப்படும். இதனை அந்த ஊரிலேயே சென்று பேசிய பேராசிரியர் இராதாகிருஷ்ணன் குறிப்பிடுவார். மேலும் சோழநாட்டில் திருநள்ளாற்றுக்கு மேற்கே 2 நாழிகையளவில் உள்ளது என்றும், பத்தகுடி என்ற இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 3/4 நாழிகையில் மட்சாலையில் இதனை யடையலாம் என்றும் சிலர் கூறுவர். இவ்வூரில் பழைய சிவாலயமு மொன்றுண்டு. புராணத்து வரும் நாற்றங்கால் கோயிலுக்குத் தெற்கில் உள்ளது. இதனை முளைவாரிக்குட்டை – முளைவாரி

    நாற்றங்கால் என வழங்குகின்றனர். சோழமண்டல சதகமும் இப்பதி சோழநாட்டிலுள்ளதாகப் பேசுகின்றது. ஆகவே இவர் வரலாற்றின் உண்மைத் தன்மை நன்கு விளங்குகிறது.

    Share
  • நாலடியார் நயம் – 31

    நாலடியார் நயம் – 31

    நாங்குநேரி வாசஸ்ரீ

    31. இரவச்சம்

    பாடல் 301

    நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
    தம்மாலாம் ஆக்கம் இலரென்று – தம்மை
    மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
    தெருண்ட அறிவி னவர்.

    இவ்வறியவர் நம்மாலே வாழ்கிறார்
    இவர் எப்போதும் தாமே சம்பாதித்தவர்
    இலர் எனத் தம்மை மேலானவராய் மதித்து
    இன்புற்று மயங்கும் மனமுடையாரிடத்து
    இரத்தற்குச் செல்வரோ தெளிந்த அறிவுடையார்?

    பாடல் 302

    இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
    பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
    விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
    அழித்துப் பிறக்கும் பிறப்பு.

    தாழ்வதற்குக் காரணமான செய்கைகள் செய்து
    தம் வயிராற உண்பதினும் பழிதரும் அதனைத்
    தள்ளி பசியோடிருந்து இறப்பது குற்றமா? ஒருவன்
    தன்னுயிர் விடுத்தபின் பிறக்கும் பிறப்பு கண் இமைக்கும்
    தருணத்தில் நிகழுமெனவே இவ்வுடம்பு போனால்
    திரும்பவும் வேறுடம்பு கிடைப்பது அரிதென நினையாதீர்.

    பாடல் 303

    இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
    செல்லாரும் அல்லர் சிறுநெறி – புல்லா
    அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
    முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

    தாங்கொணா வறுமையால் இரத்தெலெனும் இழிதொழிலை
    தெளிந்து செய்தாலும் அவ்வற்ப வழியிலும் மேன்மைகருதி
    தம்மைத் தழுவிக்கொண்டு எம் வீட்டிற்கு வாருங்கள் எனத்
    தக்க முறையில் உணவுகொள்ளச்செய்பவரல்லாது வேறோரிடம்
    தலைகாட்டவும் மாட்டார் மேலோர்.

    பாடல் 304

    திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
    உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
    அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
    றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

    தம்மைச் செல்வத்தின் அன்னை இலட்சுமி கைவிட்டாலும்
    தெய்வம் கோபம் கொண்டாலும் மேலோர்
    தம் மேன்மையை நினைப்பதேயல்லாமல்
    தன் பணத்தை வீணாகச் சேர்த்துவைக்கின்ற
    தகுதியற்ற அற்பரிடம் சென்று பொருள் வேண்டி
    தலைகுனிந்து ஒருபோதும் நில்லார்.

    பாடல் 305

    கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
    இரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை
    உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
    கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

    தம் பொருளை மறைக்காது கொடுக்கும்
    திடமான அன்புடைய கண்போலும் இனியவரிடத்தும்
    தாம் சென்று இரவாமல் வாழ்வதே உயர்வாழ்க்கை
    தேடிச்சென்று யாசிப்போம் என நினையும்போதே
    துன்புற்று மனம் உருகிப்போகும் நிலையிலிருக்கிறதே
    தருவதைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ?

    பாடல் 306

    இன்னா இயைக இனிய ஒழிகென்று
    தன்னையே தானிரப்பத் தீர்வதற் – கென்னைகொல்
    காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
    டேதி லவரை இரவு.

    துன்பம் நம்மைச் சேரட்டும் இன்பம்
    தூர விலகட்டும் என வேண்டி
    தன் மனதை நிறைவு செய்வதால்
    தீர்ந்துபோகும் வறுமையெனில் பொருளாசை
    துன்புறுத்தும் மனதுடன் அறிவழிந்து அயலாரைத்
    தேடிச் சென்று இரப்பதால் என்ன பயன்?

    பாடல் 307

    என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
    தென்று மவனே பிறக்கலான் – குன்றின்
    பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
    இரப்பாரை எள்ளா மகன்.

    மலையின் பரப்பு முழுதும் பொன் பரந்து ஓடும்படியான
    மிகு அருவிகளுடை மலைநாட்டு வேந்தனே! இவ்வுலகில்
    எக்காலத்தும் புதியமனிதர் பிறந்துகொண்டேயிருப்பினும்
    என்றும் பிறவாதவன் ஒருவன் யாரெனில் இரப்பாரை
    இகழாது ஆதரிக்கும் மனிதன்.

    பாடல் 308

    புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
    நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
    ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
    மாயானோ மாற்றி விடின்.

    தம் புற உடலை வறுமை வருத்த
    தன் அகத்தேயுள்ள மெய்யறிவை விலக்கி
    அறியாமையை நிலைநிறுத்தி செல்வந்தனை
    அண்டி யாசித்தபின் அவன் கொடுக்க மறுத்தால்
    அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானா?

    பாடல் 309

    ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
    வழிபடுதல் வல்லுத லல்லால் – பாசழிந்து
    செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
    பையத்தான் செல்லும் நெறி?

    வறியவர் மற்றொருவரைச் சார்ந்து சொன்னபடி செய்து
    வணங்கித் தாழ்தல் உலக முறைமையே அல்லாமல்
    ஏதேனும் உதவி செய்யீரோ என இரப்பதைக் காட்டிலும்
    ஏவல் செய்து சார்ந்து வாழும் வாழ்க்கை துன்பம் தருவதோ?

    பாடல் 310

    பழமைகந் தாகப் பசைந்த வழியே
    கிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை
    பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
    தறாஅச் சுடுவதோர் தீ.

    பழைய நட்பை ஆதாரமாகக் கொண்டு உதவி கேட்டுப்
    பெற வந்தவர்க்கு தான் யாதாகிலும் தகுந்ததைச் செய்ய
    மன நிறைவின்மையால் அதைப் பெற்றுக்கொள்ள அவர்
    மறுப்பாராயின் கொடுத்தவர் மனதில் அச்செய்கை
    நீங்காது நிலைத்து நின்று சுடும் தீ போல் வருத்தும்.

    Share
  • நாலடியார் நயம் – 30

    நாலடியார் நயம் – 30

    நாங்குநேரி வாசஸ்ரீ

    30. மானம்

    பாடல் 291

    திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
    பெருமிதம் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்
    கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
    மான முடையார் மனம்.

    செல்வச் செருக்கினால் நற்குணமற்றவர்
    செய்யும் அவமதிப்பைக் கண்டபோது
    மானமுடையார் மனத்தில் காட்டுத் தீ
    மிகுந்து பரவுவதுபோல் அனல் சொலிக்கும்.

    பாடல் 292

    என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
    தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; – தம்பாடு
    உரையாமை முன்  னுணரும் ஒண்மை உடையார்க்கு
    உரையாரோ தாமுற்ற நோய்.

    தம் மானத்தைக் காப்பவர் பசியால்
    தாக்குண்டு எலும்புக்கூடாய் உடல்வற்றிய
    தன்மையேற்படினும் தம் வறுமையைத்
    தகுதியில்லார் பின்சென்று கூறுவரோ?
    தான் சொல்லாதே குறிப்பாலுணரும்
    தகுதியுடை அறிவாளியிடம் சொல்லாதிருப்பாரோ?

    பாடல் 293

    யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
    காணவே கற்பழியும் என்பார்போல் – நாணிப்
    புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
    மறந்திடுக செல்வர் தொடர்பு.

    வறுமையிருந்தாலும் நாமாக இருந்தால்
    வீட்டினுள் அழைத்து செல்வந்தருக்கு
    நம் இல்லாளை அறிமுகப்படுத்துவோம்
    நல்ல பொருள் படைத்த செல்வந்தரோ
    நாம் கண்டாலே மனைவியின் கற்புகெடுமென
    நினைப்பவர்போல் நாணி வாயிலின் புறத்தே
    வைத்துச் சோறிடுவர் அதனால் செல்வந்தருடன்
    வைக்கும் தொடர்பை மறந்திடுக.

    பாடல் 294

    இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
    உம்மையும் நல்ல பயத்தால்; – செம்மையின்
    நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
    மான முடையார் மதிப்பு.

    நன்றாகக் கஸ்தூரிமணம் கமழும் கூந்தலையுடையவளே!
    இப்பிறப்பில் நன்மை உண்டாக்குவதோடல்லாது
    இனிவரும் மறுமையிலும் நன்மை விளைவிக்கும்
    மானமுடையாரின் மதிப்பு அவர்தம் நல்வழிதவறா
    மாண்பினால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக!

    பாடல் 295

    பாவமும் ஏனைப் பழியும் படவருவ
    சாயினும் சான்றவர் செய்கலார்; – சாதல்
    ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
    அருநவை ஆற்றுதல் இன்று.

    பாவமும் மற்ற பழியும் தோன்றும் செயலை
    பண்பட்ட சான்றோர் தாம் இறக்கநேரிடினும்
    புரியார் ஏனெனில் சாவுத்துன்பம் ஒருநாளில்
    அதுவும் ஒருகணப்பொழுது மட்டும்
    அனுபவிக்க்கக் கூடியது அத்துன்பம்
    அப்பாவமும் பழியும்போல் உயிர் உள்ளளவும்
    ஆறாத்துயர் தந்து நிலைத்துநில்லாது.

    பாடல் 296

    மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
    செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
    நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
    செல்வரைச் சென்றிரவா தார்.

    மிக்க வளமான இப்பெரு உலகில் வாழ்பவர்
    மற்றவரைவிட மிகுந்த செல்வம் கொண்டவராயினும்
    வறியோர்க்கு பொருள் கொடுத்து உதவாராயின் அவரும்
    வறியவரே தம் வறுமைநிலையிலும் செல்வரிடம் பொருள்
    வேண்டி இரவாதார் பெருமுத்தரையர் போலும் செல்வந்தரே.

    பாடல் 297

    கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
    இடையெலாம் இன்னாமை அஞ்சும் – புடை பரந்த
    விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
    சொற்பழி அஞ்சி விடும்.

    வில் போலும் வளைந்த புருவத்தின் கீழ்
    வேல் போல் உலாவிவரும் நீள் கண்ணையுடையவளே!
    வாட்டும் பசிக்கு அஞ்சுவர் கீழ் மக்களெல்லாம்
    வருத்தும் துன்பத்துக்கு அஞ்சுவர் இடைப்பட்டோர்
    வரும் பழிக்குஅஞ்சுவர் மேன்மக்கள்.

    பாடல் 298

    நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
    செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
    உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
    தலையாய சான்றோர் மனம்.

    இவர் நல்லவர் அருளுடையவர்
    இப்போது வறுமையுற்றார் எனக்கூறி இகழ்ந்து
    செல்வர் அற்பப் பார்வை பார்க்கும்போது பெருஞ்
    சான்றோர் மனம் கொல்லன் உலைக்களத்தில்
    துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்புபோல்
    துன்பப்பட்டு உள்ளே கொதிக்கும்.

    பாடல் 299

    நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
    அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; – எச்சத்தின்
    மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
    சொல்லாது இருப்பது நாண்.

    விரும்பி வந்தவர்க்குக்கொடாமை நாணம் அன்று
    வேண்டாத தீயவை செய்ய அஞ்சி வெட்கப்படுதலும்
    வெட்கமன்று நம்மை எளியராய்க் கருதி புத்திகெட்டவர்
    செய்த அவமதிப்பைப் பிறருக்குச் சொல்லாதிருப்பதே
    சிறந்த நாணம் ஆகும்.

    பாடல் 300

    கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
    இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய
    வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
    மானம் அழுங்க வரின்.

    காட்டிலுள்ள புலி தான் கொன்ற
    காட்டுப்பசு இடப்பக்கம் வீழுமாயின்
    கொள்ளாது பட்டினியால் இறக்கும்
    கையில் இடமகன்ற விண்ணுலகம்
    கிட்டுவதாயினும் மானம்கெட வருமாயின்
    கொள்ளார் பெரியோர்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 20

    பழகத் தெரிய வேணும் – 20

    நிர்மலா ராகவன்

    (நீடிக்கும் உறவுகள்)

    ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும்.

    நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவற்றைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    துணுக்கு

    ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள்.

    தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்?

    பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது.

    தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது.

    கதை

    என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன்.

    உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் ‘எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார்.

    நான் அமைதியாக, “நீங்கள் என்னைப் பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். ‘எல்லாப் பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாகப் பதில் அளித்திருப்பேன்,” என்றேன்.

    அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று.

    மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் கணபதி. பேசும் சுதந்திரத்தைக்கூடத் தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார். பிறர் பேசும்போது அவள் எதுவும் பேசாது, சிரித்துக்கொண்டே இருப்பாள்.

    ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார்.

    என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப் போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”.

    அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    கதை

    புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல.

    (புரியவில்லையா? உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது).

    பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள்.

    ‘என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான்.

    பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள்.

    பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப் போனீர்கள்?”

    “யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப் போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதைக் கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப் பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”.

    ஒருவர் கூறுவதை ஏற்க முடியாததால் சண்டை பிடிக்கத் தோன்றுகிறதா?

    அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனத்தில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்?

    மற்றவர் செய்த பிழைகளைப் பெரிதுபடுத்தாது இருப்பது உறவைப் பலப்படுத்தும் என்றெல்லாம் மணவாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

    “குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி”.

    ஒரு துணுக்கு

    எல்லா நாடுகளிலும் பெண்கள் தலைவர்களாக இருந்தால் என்ன ஆகும்?

    ஒருவரோடு ஒருவர் பேசாத நாடுகள் உருவாகும்!

    பெண்ணின் எதிர்பார்ப்பு

    நாம் விரும்பிய ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர் அப்படி இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்திய ஒருவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?”

    கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை.

    வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப் பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது.

    காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்!

    இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.

    வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.

    கதை

    அமெரிக்கப் பெண்மணி லூயிஸ் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர்.

    சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?”

    (அவர்களுடைய பிரச்சினையில் நான் மூக்கை நுழைப்பதை அவள் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாள் என்று தெரியும்).

    உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப் போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள்.

    வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவற்றுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் லூயிஸ். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார்.

    காதல் எதுவரை?

    காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருப்பதோடு காதல் முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • நாலடியார் நயம் – 29

    நாலடியார் நயம் – 29

    நாங்குநேரி வாசஸ்ரீ

    29. இன்மை

    பாடல் 281

    அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
    பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
    ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
    செத்த பிணத்திற் கடை.

    காவி தோய்ந்த ஆடையை இடுப்பில்
    கட்டி வாழ்ந்தாலும் பத்தோ எட்டோ
    கொண்டவராயின் பலருக்கிடையிலும்
    கிடைக்கும் மதிப்பு, இல்லையேல் உயர்
    குடிப்பிறப்பு இருப்பினும் ஒன்றுமில்லார்
    கிடக்கும் உயிரற்ற பிணத்தைவிட
    கீழானவராகவே கருதப்படுவார்.

    பாடல் 282

    நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
    யாரும் அறிவர் புகைநுட்பம்; – தேரின்
    நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
    புகற்கரிய பூழை நுழைத்து.

    நீரைவிட நெய் நுட்பம் நெய்யைவிட புகை
    நுட்பமென அனைவரும் அறிவர் ஆராய்ந்தால்
    கையேந்துதலெனும் துன்பமுள்ள வறுமையாளன்
    கடும்புகையும் புகுதற்கரிய துவாரத்திலும் நுழைந்து
    சென்று செல்வரை நாடி யாசிப்பான்.

    பாடல் 283

    கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
    செல்லாவாம் செம்பொறி வண்டினம்; – கொல்லைக்
    கலாஅற் கிளிகடியும் கானக நாட!
    இலாஅஅர்க் கில்லை தமர்.

    கொல்லைகளில் கல்லால் கிளிகளை ஓட்டும்
    காடுகள்சூழ் நாட்டுடை வேந்தனே! பெரும்
    கற்களையுடை மலையின்மேல்
    காந்தள் மலராதபோது செம்புள்ளிகளுடை
    வண்டினங்கள் அங்கு செல்லா அதுபோல்
    வேண்டிய பொருள் இல்லாதாருக்கு
    விரும்பிய உறவினர் இல்லை.

    பாடல் 284

    உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
    தொண்டரா யிரவர் தொகுபவே; – வண்டாய்த்
    திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
    ஒருவரும் இவ்வுலகத் தில்.

    பொருளிருக்கும் காலத்தில் காக்கைக்கூட்டம்
    போல் தொண்டு செய்ய ஆயிரக்கணக்கில் கூடுவர்
    பொருளற்ற வறுமை நிலையில் வண்டுபோல்
    பலதிசையில் ஒருவேளைச்சோற்றுக்கு அலையும்
    பொழுது தீதில்லாது வாழ்கிறீரா (நலமா?) என வினவுவார்
    பாரினிலே யாருமில்லை.

    பாடல் 285

    பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
    சிறந்ததம் கல்வியும் மாயும் – கறங்கருவி
    கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
    இன்மை தழுவப்பட் டார்க்கு.

    அருவிகள் கல்மேல் வீழ்ந்தொலித்து
    அதன்மாசுபோகக் கழுவும் மலைநாட்டுடை
    அரசனே! உலகில் வறுமை கொண்டவர்க்கு
    அவர் பிறந்த குலப்பெருமை கெடும்
    அரும்பெரும் வல்லமை கெடும்
    அளவிற் சிறந்த கல்வியும் கெடும்.

    பாடல் 286

    உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
    உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; – உள்ளூர்
    இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
    விருந்தினன் ஆதலே நன்று.

    வயிற்றுப் பசி மிகுந்து துன்புற்று தம்மிடம்
    விரும்பி வந்தார்க்கு உள்ளூரிலிருந்தும் ஒன்றும்
    வழங்க இயலாதவன் அங்கேயே இருந்து தன்
    வாழ்நாளை வீணாய்க் கழித்து உயிர்விடாது
    வேற்றூர்க்குத் தான் சென்று மற்றவருக்கு
    விருந்தாளியாய் இருப்பதே நல்லது.

    பாடல் 287

    நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
    கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; – கூர்மையின்
    முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
    அல்லல் அடையப்பட் டார்.

    முல்லையரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே!
    மண்ணுலகில் வறுமை எனும் துன்பம் சேரப்பெற்றவர் தம்
    மேன்மைக் குணங்களையே அல்லாமல் புத்தி கூர்மையையும்
    மற்ற சிறப்புக்களனைத்தையும் ஒருசேர இழப்பர்.

    பாடல் 288

    இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
    முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
    நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
    கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

    வறுமைக் குழியில் விழுந்து துயருற்று
    வருபவர்க்கு யாசிக்கும் பொருளைக் கொடுக்க
    முடியாது உள்ளூரில் வருந்தி வாழ்தலைவிட
    முயன்று நெடுந்தூரம் நடந்து வரிசையான
    வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட
    வழியில் வாழ்வதே நலம்.

    பாடல் 289

    கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
    அடகு பறித்துக்கொண் டட்டுக் – குடைகலனா
    உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
    துப்புரவு சென்றுலந்தக் கால்.

    அனுபவிக்கப்படும் பொருட்கள் நீங்கி வறுமையால்
    அல்லலுறும்போது பொற்கடகம் அணிந்த தம்
    கைகளால் கீரைகளைப் பறித்துச் சமைத்து பனங்
    காய்களில் நுங்கெடுத்தபின் துளையுள்ளது போலும்
    பாத்திரத்தில் உப்பில்லாத வெந்த அக்கீரையைப்
    புசித்து மன ஊக்கங்கெட்டு வாழ்வர்.

    பாடல் 290

    ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
    பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் – நீர்த்தருவி
    தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
    வாழாதார்க் கில்லை தமர்.

    நல்ல தன்மையுடை அருவிகள் குறையாத
    நற்சிறப்புடை குளிர் மலைநாட்டு அரசனே!
    நிறைந்த புள்ளிகளுடை வண்டினம்
    நன்கு பூத்துதிர்ந்த கொம்பினை விருப்பத்துடன்
    நாடிச் செல்லமாட்டா அதுபோல் பொருளுடன்
    நல்வாழ்வு வாழாதார்க்கு உறவினர் இல்லை.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-27

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-27

    தி. இரா. மீனா

    பள்ளேஷ மல்லையா

    சமணசமயத்தைச் சேர்ந்த வணிகர்.சிவசரணனான பிறகு மல்ல செட்டி என்ற பெயர் மல்லயா ஆனது. தானியங்களை அளக்கும் படியையே இலிங்கமாக எண்ணி பள்ளேஷ மல்லையா ஆனார். ’பள்ளேஷ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “நீங்கள் உயர்ந்தவர் என்றுரைப்பது உமது பேரிகை
    கேட்பதைக் கொடுப்பீர் என்று சொல்வது உமது தப்பட்டை
    உலகம் தங்கள் படைபென்று சொல்வது உமது சங்கு
    பிற தெய்வமில்லையென்று சொல்வது உமது உடுக்கை
    கெடுதல் பேசுபவரின் வாயைக் கிழிப்பது உமது திரிசூலம்
    அதுவே பள்ளேஷனின் பேரிகையானது மூவுலகிற்கும் “

    2. “உயிரைத் துன்புறுத்த வேண்டாம்
    பிறன்மனை நட்பு வேண்டாம்
    பிறர் பொருளுக்கு ஆசை வேண்டாம்
    பிற கடவுளரை வணங்க வேண்டாம்
    இவை நான்கையும் கடைப்பிடிக்கும் போது
    மற்றவர் பார்ப்பார்,பாரார் என்று நினைக்க வேண்டாம்
    பள்ளேஷ்வர இலிங்கத்தை யாரும் மறைக்க முடியாது
    கொடிய நரகம் தருவான் அவன்“

    பாலசங்கண்ணா

    “கமடேஸ்வரலிங்கா“ இவரது முத்திரையாகும்.

    “பொன்னுக்கு அகமும் புறமுமுண்டோ?
    சந்தனம், சாமந்தி, முல்லை, மல்லிகை மருக்கொழுந்து
    போன்ற இலை மலர்களுக்கு உள்ளும் புறமுமுண்டோ?
    அங்கம் முழுவதும் கொண்டிருக்கும் மணம்
    இது போன்றதே கமடேஸ்வர இலிங்கத்தில்
    இரண்டுமழிந்த சரணரின் நிலை“

    பால சங்கைய்யா

    மிகச் சிறந்த வசனகர்த்தா எனப் போற்றப்படுபவர். ’அப்பிரமாணக் கூடல சங்கம தேவா’ இவரது முத்திரையாகும்.

    1. “வான்மீறியோன் என்னும் மேன்மையுள்
    இணைந்த சரணனின் நிலை
    சூரியனுள்ளிருக்கும் பிம்பம் போன்றது
    கண்ணாடியுள் அடங்கிய பிரதிபிம்பம் போன்றது,
    மலருள் அடங்கிய மணம் போன்றது
    ஒளியுள் அடங்கிய கற்பூரம் போன்றது
    மேன்மையுள் அடங்கிய அடியானின் நிலை
    அப்பிராமாண கூடல சங்கமதேவனே.”

    2. “உப்பு நீரில் கலந்தது போல
    ஆலங்கட்டி நீரில் கலந்தது போல
    கற்பூரம் தீயில் கலந்தது போல
    மனம் இலிங்கத்துள் இணைவது பாவலிங்க வழிபாடு
    இவ்வகையாம் அப்பிராமண கூடலசங்மதேவனே“

    3. “என்னுடல் என்னும் பிரகாரத்துள்
    மனமெனும் சிவாலயம் பாராய்!
    மனமெனும் சிவாலயத்துள்
    பரமாத்மாவெனும் சிம்மாசனம் பாராய்!
    பரமாத்மாவெனும் சிம்மாசனத்தின் மீது
    விழிப்புணர்வின் இலிங்கம் நிலைநாட்டி
    அமைதியெனும் கையால் வழிபட்டு
    பிறப்பென்னும் மாலையறுத்து பிறவியற்றவானேன்“

    4. “கல்தெய்வம் தெய்வமல்ல
    மண்தெய்வம் தெய்வமல்ல
    மரதெய்வம் தெய்வமல்ல
    ஐம்பொன்னால் செய்த தெய்வம் தெய்வமல்ல
    இராமர் பாலம்,கோகர்ணம், காசி, கேதார் முதல்
    புனித இடங்களிலுள்ள தெய்வங்கள் தெய்வங்களல்ல.
    தன்னைத் தானறிந்து தான்யாரெனத் தெரிந்தால்
    தானே தெய்வம் பாராய்
    அப்பிராமண கூடலசங்கமதேவனே“

    பாகூர் பொம்மண்ணா

    காயகம் தோட்ட வேலை. ’சங்கன பசவண்ண சாட்சியாகி பிரமேஸ்வ ரலிங்க’ இவரது முத்திரையாகும்.

    1. “எவ்விடத்தைச் சாதித்து நிற்பினும்
    மனப்பூர்வமாய் உணர்வது ஒரே மகாலிங்கத்தை
    அதுவே பக்தியின் வேர்
    நம்பிக்கையின் கிளைகள், நம்பிக்கையின் கனி
    உண்மைத் தத்துவத்தின் சாரம் தன்மயத்தின் சுவை
    சங்கன பசவண்ணனால் விளைந்த விளைச்சல்
    பிரம்மேஸ்வர இலிங்கத்தில் ஐக்கியமாம்”

    2. “காய்ச்சிய உலோகத்தின் மீது நீரை ஊற்றினால்
    உறிஞ்சுவது உலோகமா? வெப்பமா?
    இதையறிந்தால் அங்க இலிங்கத்தின் உறவாம்
    பால் பொங்கும்போது நீர் தெளித்தால்
    அதனை உள்ளெடுப்பது பாலா? பாத்திரமா?
    இதையறிந்தால் செயல் ஞான ஆத்மலிங்க உறவினன் நீயே
    உண்மை நிலையறியின் செயலுக்குப் பயிற்சி
    அறிவுக்குச் சங்கமம் இது சங்கன பசவண்ணனின் ஆட்டம்
    பிரமேஸ்வர இலிங்கத்தை அறிந்தவரின் ஆட்டம்!”

    3. “கட்டை துளிர்த்தால் ,மலட்டுப்  பசு பால் கறந்தால்
    வரைபடம் உயிர் பெற்றால்
    அது கண்களின் பார்வையா? நம்பிக்கையின் திடமா?
    பக்தியின் பாதையறிய முக்கியமிது!
    சங்கன பசவண்ணன் நிஜமாம், பிரமேஸ்வர இலிங்கத்தில்
    இணைவதற்கு நெறியாம்“

    பிப்பிபாச்சய்யா

    ’ஏணாங்க தர சோமேஸ்வரா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “நெருப்பின் உலோக போல கனியின் சாறு போல
    உடலின் உயிர் போல உருவத்தின் நிழல் போல
    அங்கமும் இலிங்கமும் உறவாக வேண்டும்
    ஏணாங்கதர சோமேஸ்வர இலிங்கத்தில்“

    2. “விதையொன்றில் கிளைகள் படர்வது போல்
    அறிவொன்று உருவங்கள் பலவாகத் தோன்றுவது போல
    தெளிந்த நீரில் தெரிகின்ற நிலவு போல
    வேற்றுமையொன்றே,
    ஏணாங்கதர சோமேஸ்வர இலிங்கத்தில்”

    பொக்கஷதா சிக்கண்ணா

    கல்யாணில் பிஜ்ஜளனின் கருவூல அதிகாரியாக பணியாற்றியவர். ’பசவண்ணப்பிரிய நாகரேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும். தன் தொழிலுக்கு அடிப்படையான கருவூலத்தையே இறையுருவமாகப் பாவித்தவர்.

    “இசைக்கு இராகத்தின் பெயர் சூட்டியது போல
    நாதமொன்று, அசைவுகளின் வண்ணம் வேறானது போல
    பசுக்கள் பலநிறம் பால்நிறம் ஒன்றானது போல
    தொழில்கள் பலவானாலும்
    இலிங்கமுடன் இணைகின்ற சரணர் வழிபாடு
    செயல், உறவு ஒன்றாம்
    பசவண்ணப்பிரிய நாகரேஸ்வர இலிங்கம் அறிவதற்கு.”

    “குளிர்ச்சி உள்ளவரையில் வெப்பத்தின் தேவை
    வெப்பம் உள்ளவரையில் குளிர்ச்சியின் தேவை
    காலை எழுந்து இரவில் உறங்கும் வரையில்
    அத்துவைதம் உண்மையன்று,
    இதனால் செயலை மறக்கவில்லை
    அறிவு சூன்யமென விடவில்லை
    அது கனல் மறைந்துள்ள கல்,எண்ணெய் மறைந்த விதை
    அன்பு வேண்டும் அதையறிய
    பசவண்ணப்பிரிய நாகரேஸ்வர இலிங்கம் அறிவதற்கு.”

    [தொடரும்]                

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 84 (வானவர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 84 (வானவர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்ப
    ஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோ கத்தில்
    ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடனுறை பெருமை பெற்றார்
    ஏனைய சுற்றத் தாரும் வானிடை இன்பம் பெற்றார்

    சிவவேதியர் அழைத்தது பேரோசையாகக் கேட்டமையால் உடனே இயற்பகையார் திரும்பி வந்தார். ‘’யாரேனும் தடுத்தால் என் வாளுக்கு இரையாவார்’’ என்று கூறியபடியே ஓடி வந்தார். அங்கே தம்மை அருட்சக்திக் கோலமாக மாற்றிக் கொள்வதற்காகச் சிவவேதியர் மறைந்தார்; அங்கே  இயற்பகையார்  மனைவியார் நின்றார்.

    அப்போது இறைவன் வானில் இடப வாகனத்தின் மேல் தோன்றினார்; அவரைக் கண்ட அடியார் வீழ்ந்து வணங்கினார். அங்கேயே இறைவனைப் பலவாறு துதித்தார். இறைவன். சிவபிரான் ‘’அருள் விளையும் இந்த  உலகில் , இவ்வாறு செயற்கரிய அன்பைக் காட்டிய நீ, உன் பக்திக்குத் துணை புரிந்த மனைவியோடே எம்முடன் வருக!’’ என்று கூறி, இருவருக்கும் வீடு பேறளித்துத் தம் பொன்னம்பலத்தில் புகுந்தார் ஆதலால் இவ்வுலகமே இறைவன் திருவருளுக்கு ஏற்ற இடம் என்பதும் புலனாகின்றது.

    அப்போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்; வேதங்கள் வாழ்த்தின; ஞானியர்கள் வணங்கிப் போற்றினர்; எக்குறையும் இல்லாத தொண்டராகிய இயற்பகை நாயனார் தம்மைப் பிரியாத மனைவியாரோடும் இறைவனருகில் நீங்காது உறையும் பெருமை பெற்றார்; அப்போது அங்கே போரிட்டு மாண்ட  உறவினர்கள் அனைவரும் வீரசுவர்க்கம் அடைந்தனர்!

    இயற்பகையாரின் தொண்டினால் எல்லார்க்கும் விளைந்த நன்மைகள் இப்பாடலில் கூறப் பெற்றன. அவ்வப்போது  தவறுகள் புரியும் தேவர்கள் இறைவனருள்  பெறப்  பூமாரி பொழிந்தனர்!  அதற்கும் மேலாக, என்றும் ஒரே நிலையில் துதித்துப் பிறர்க்கும் உரைக்கும் வேதங்கள் சொல்வோர் இல்லாமலேயே வாழ்த்தின; இவ்வேதவொலி சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளின் போதுதான்  நிகழும், இதனை

    ‘’ ஓதும் மறையோர் பிறிது  உரைத்திடினும்  ஓவா
    வேதமொழி  யால் ஒலி விளங்கி  எழும்  எங்கும்‘’ என்றும்,

    ‘’எங்கணும் இயற்றுபவர்  இன்றியும் இயம்பும்
    மங்கல   முழக்கொலி  மலிந்த மறுகெல்லாம்’’  என்றும்,

    திருஞான சம்பந்தர் தோன்றிய  பெருநிகழ்வின் போது  நிகழ்ந்ததாக  இக்கவிஞரே  கூறுவார்.

    அடுத்து  இப்பாட்டில், ‘’ஊனமில் தொண்டர்’’ என்ற தொடர், உலகில் உயிருணர்வு (பசுபோதம்) மட்டுமே பெற்ற தொண்டர்களை விட மேலான இறையுணர்வு (பதி போதம்) பெற்றவர் இயற்பகையார் என்பதைக் குறித்தது. இதனைச்  சிவஞான போதம்  ஒன்பதாம்  சூத்திரம்.

    ‘’ ஊனக்கண் பாசம்  உணராப் பதியை
    ஞானக்  கண்ணினில்  சிந்தை நாடி‘’ என்று கூறும்.

    அடுத்து, ‘’நலமிகு  சிவலோகத்தில்‘’ என்ற தொடர் முத்திக்கும் மேற்பட்ட அபரமுத்தித்  தானம் என்ற சுத்த புவனமாகிய சிவலோகத்தில், அதாவது நலமே விளையும் பூமியில் என்ற பொருளை விளக்குகிறது.

    அடுத்து ‘’கும்பிட்டு உடனுறை   இன்பம் பெற்றார்’’ என்ற தொடரால், ‘’உணர்வுகள் ஒன்றி வணங்கி, இறைவனுடன் அத்துவிதமாக நிற்கும் பேரின்பம்  பெற்றார்’’   என்பது புலனாகும். அப்பேரின்பம் ,

    “பேரா வொழியாப் பிரிவில்லா மறவா நினையா வளவிலா மாளா வின்பம் ‘’

    என்று திருவாசகத்தில் கூறப் பெற்றது.

    அடுத்து  ‘’ஏனைய  சுற்றத்தாரம் வானிடை  இன்பம் பெற்றார்‘’ என்ற அடி, அவர்கள் அடைந்த வீர சுவர்க்க இன்பத்தைக் குறித்தது. அவர்களும்  உலகியல்  அறத்தை மேற்கொண்டமையாலும், இயற்பகையார், அவர் மனைவியார் மற்றும் தமக்கும்   குலப்பழி  வாராமல்  காக்க  மிகுந்த பாசம் கொண்டு விளங்கியமையாலும், அதற்காகப் போரிட்டு உயிரை இழக்கவும் சித்தமாக இருந்தமையாலும், நாயனாரின் கரங்களாலேயே தண்டிக்கப் பெற்றமையாலும் வானிடை இன்பம் பெற்றார்.

    ஆகவே இப்பாடல், இயற்பகை நாயனாரின் செயலும், தொடர்பும் யாருக்கெல்லாம், எவ்வாறெல்லாம் இறைவன் திருவருளை வழங்கின என்பதை  விளக்குகிறது!

    Share
  • நாலடியார் நயம் – 28

    நாலடியார் நயம் – 28

    நாங்குநேரி வாசஸ்ரீ

    28. ஈயாமை

    பாடல் 271

    நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
    அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; – அட்டது
    அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
    அடைக்குமாம் ஆண்டைக் கதவு.

    தம்மிடமுள்ள பொருளால் தாம் சமைத்த உணவை
    தன் நண்பருக்கும் நண்பரல்லாதாருக்கும் பங்கிட்டுத்
    தாமும் உண்பதே சமைத்து உண்பதாம்
    தாம் சமைத்த உணவைக் கதவைத் தாழிட்டு
    தன் வீட்டுனுள் தாம் மட்டும் உண்டு வாழும்
    தக்க குணமற்றவர்களுக்கு உட்புகமுடியாவண்ணம்
    தேவ உலகத்துக் கதவுகள் அடைக்கப்படும்.

    பாடல் 272

    எத்துணை யானும் இயைந்த அளவினால்
    சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; – மற்றைப்
    பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
    அழிந்தார் பழிகடலத் துள்.

    எவ்வளவாயினும் தம்மால் முடிந்த சிறிய அளவில்
    எத்தகு தருமமாவது செய்தவர் மேன்மையடைவர்
    எல்லாப் பெருஞ்செல்வமும் சேர்ந்தபின்னும்
    என்றாவது ஒருநாள் தருமம் செய்யலாம்
    என எண்ணி இருப்போர் கடல் சூழ்ந்த உலகத்தாரால்
    எக்காலமும் பழிக்கப்பட்டு கெட்டழிவார்.

    பாடல் 273

    துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
    வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
    பொருளும் அவனை நகுமே உலகத்து
    அருளும் அவனை நகும்.

    தாமும் சேர்த்த பொருளை அனுபவிக்காது
    துறவிகளுக்கும் ஒன்றும் ஈயாது செல்வத்தைத்
    தக்கவைத்து இறந்து போகும் அறிவிலானைத்
    தகுந்த வழியில் நன்கு பயன்படுத்தவில்லையெனத்
    தேடிவைத்த பொருள் நோக்கிச் சிரிக்கும்.

    பாடல் 274

    கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
    உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் – இல்லத்து
    உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
    ஏதிலான் துய்க்கப் படும்.

    அடுத்தவர்க்குக் கொடுப்பதையும் தான் அனுபவிப்பதையும்
    அறியாத லோப குணமுடையானடைந்த பெருஞ்செல்வம்
    அவர்தம் வீட்டில் பிறந்த அழகிய கன்னிப்பெண்ணை
    அவளுக்கேற்ற பருவ காலத்தில் பிறர் அனுபவித்தல் போல
    அயலானால் அனுபவிக்கப்படும்.

    (பிறரைப் பற்றிச் சிந்தியாது, இறக்கமற்று சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகுபார்ப்பதும், கஞ்சத்தனமும் லோபகுணம் எனப்படும்.)

    பாடல் 275

    எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
    அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
    மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை.

    அலைகள் மோதுகின்ற கடலிலிருந்தாலும்
    அதன்நீர் குடிக்கப் பயன்படாததால் மக்கள்
    அடிக்கடி நீர்வற்றும் சிறு கிணற்றின் ஊற்றையே
    அலைந்துகண்டு பருகுவர் அதுபோல்
    அறம் செய்து மறுமை இன்பத்தை நாடுதலை
    அறியாதோரின் செல்வத்தை விட
    அறிவுடைச் சான்றோரின் வறுமை மேல்.

    பாடல் 276

    எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
    எனதெனது என்றிருப்பன் யானும் – தன தாயின்
    தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
    யானும் அதனை அது.

    எப்போதும் அறிவில்லாமூடன் தான் சேர்த்த பொருளை
    என்னுடையது என்னுடையது எனச் சொல்லியிருப்பான்
    எனது எனது என நானும் அப்பொருளை எண்ணியிருப்பேன்
    எப்படியெனில் அவன் அப்பொருளைத் தானும் அனுபவிக்காது
    எவருக்கும் கொடுக்காது இருப்பதுபோல் நானும் அதேபொருளை
    எடுத்து அனுபவிக்காது யாருக்கும் கொடுக்காது இருக்கிறேன்.

    பாடல் 277

    வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
    இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக்
    காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
    யாப்புய்ந்தார் உய்ந்த பல.

    பிறருக்கு ஈயாச் செல்வந்தரை விட வறுமையுற்றோர்
    பல துன்பத்தினின்றும் தப்பியவராய்க் கொள்ளப்படுவர்
    பொருளிழந்தார் என உலகோர் பழிப்பதிலிருந்தும்
    பலவாறு வருந்தி அப்பொருளைக் காப்பதிலிருந்தும்
    புதைத்து மறைக்க நிலத்தைத் தோண்டுவதிலிருந்தும்
    பாதுகாப்பாய் கைவலிக்கக் கெட்டியாய்ப் பிடித்தலினின்றும்
    போன்று அவ்வறியவர் தப்பினவை பல உண்டு.

    பாடல் 278

    தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
    தமதாய போழ்தே கொடாஅர் – தனதாக
    முன்னே கொடுப்பின் அவர்கடியார் – தான்கடியான்
    பின்னை அவர்கொடுக்கும் போழ்து.

    தன்னுடையதாய்ப் பொருள் உள்ளபோது லோபி
    தானும் பிறருக்குக் கொடுக்க மாட்டான் பின்னர்
    தமதான காலத்தில் பங்காளிகளும் கொடுக்க இசையார்
    தன்னுடையதாயிருந்த போது அவன் கொடுப்பதைத்
    தடுத்திருக்க மாட்டார் அவனின் பங்காளிகள் அவர்கள்
    தருவதையோ இறந்தபின் அவனாலும் தடுக்க இயலாது பின்
    தந்து பயன்பெறாது இருவரும் இருந்ததன் காரணம் யாதோ?

    பாடல் 279

    இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
    விரகிற் சுரப்பதாம் வன்மை – விரகின்றி
    வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
    கொல்லச் சுரப்பதாங் கீழ்.

    கேட்பவர் கன்றாக இருக்க
    கொடுப்பவர் பசுவாக இருந்து
    உற்சாகத்துடன் கொடுப்பதே
    உயர்ந்த கொடையாம் அவ்வாறன்றி
    வலியவர் அடித்தபின் மனமின்றி
    வருந்திப் பால் தரும் பசுபோல்
    வல்லோர் பல சூழ்ச்சிசெய்து
    வற்புறுத்தித் துன்புறுத்தியபின்
    கொடுப்பது கீழ்மக்கள் இயல்பு.

    பாடல் 280

    ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
    காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
    குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
    உறைபதி மற்றைப் பொருள்.

    பொருளைச் சம்பாதிப்பதும் துன்பம்
    பாதுகாத்தலும் மிகுந்த துன்பம்
    பாதுகாத்த பொருள் அழிந்தால்
    பெருந்துன்பம் ஆதலில் அப்பொருள்
    பலவித துன்பத்துக்கும் இருப்பிடமாம்.

    Share
  • நாலடியார் நயம் – 27

    நாலடியார் நயம் – 27

    நாங்குநேரி வாசஸ்ரீ

    27. நன்றியில் செல்வம்

    பாடல் 261

    அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
    பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
    பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
    கருதுங் கடப்பாட்ட தன்று.

    அதிகமாய்ப் பழுத்திருந்தாலும் பொரிந்த
    அடி மரத்தையுடை விளாமரத்தை
    அருகிலுள்ளதென எண்ணி
    அண்டாது வௌவால் அதுபோல்
    அருகிலிருப்பினும் பெருமையிலாரின்
    அருஞ்செல்வம் அவரினும் வறியவர்
    அதனால் பயனுறுவர் என நினைப்பதற்கு
    அற்ற தன்மை கொண்டது.

    பாடல் 262

    அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
    கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
    செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
    நள்ளார் அறிவுடை யார்.

    அள்ளிக்கொள்ளத்தக்க சிறு
    அரும்புகள் இருப்பினும் சூடத்தக்கது
    அல்ல எனக் கள்ளிச்செடி மேல்
    ஆர்வமாய் கை வைக்க மாட்டார்
    அதுபோல் பெருஞ்செல்வம்
    அமைந்தவராயினும் அற்பரை
    அவர்தம் செல்வம் பயன்படாதென்று
    அறிவுடையோர் விரும்பிச்சேரார்.

    பாடல் 263

    மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
    வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
    செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
    நல்குவார் கட்டே நசை.

    மிகு அலைகளையுடை கடற்கரையிருப்பினும்
    மக்கள் தோண்டச் சுரக்கும் உப்புச்சுவையற்ற
    கிணற்றுநீரைத் தேடிப்பருகுவர் அதுபோல்
    மிக்க செல்வம் உடையவர் அருகேயிருப்பினும்
    மற்றவர்க்குக் கொடுக்க விரும்பாத அவரை
    விடுத்துத் தூரத்தே சென்று கொடுப்பவரிடத்தில்
    விரும்பிக்கேட்டுப் பெறுவர்.

    பாடல் 264

    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
    உணர்வ துடையார் இருப்ப – உணர்விலா
    வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
    பட்டும் துகிலும் உடுத்து.

    கடல்சூழ் இவ்வுலகில் செல்வத்தின் புண்ணியம்
    கற்ற அறிவுக்குரிய புண்ணியத்தினின்று வேறாம்
    கல்வி அறிவுடையார் ஒன்றுமில்லாது வறுமையுற்றிருக்க
    கல்வியறிவிலா பனவட்டையும் வழுதுணங்காயும்போலும்
    கீழான அற்பர் பட்டும் பருத்தியும் உடுத்தி வாழ்கிறார்களே!

    பாடல் 265

    நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
    கல்லார்க்கொன்று ஆகிய காரணம் – தொல்லை
    வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
    நினைப்ப வருவதொன் றில்.

    வேல் போலும் நீண்ட கண்ணுடையவளே!
    வையகத்தில் அறிவும் பண்புமுடை நல்லவர்
    வறியராய் இருக்கக் கல்லாமதிகெட்டோர் செல்வராய்
    வாழுதலின் காரணம் எப்படி ஆராய்ந்தாலும் பழைய
    வினைப்பயனன்றி வேறொன்றுமில்லை.

    பாடல் 266

    நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
    நீறாய் நிலத்து விளியரோ – வேறாய
    புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
    நன்மக்கள் பக்கம் துறந்து.

    நறுமணமற்ற புற இதழைப்போல
    நல்ல தாமரையில் இருக்கும்
    பொன்னின் பதுமை போலும் திருமகளே! நீ
    பொன்போலே நன்மக்களைத் துறந்து
    கீழ்மக்களைச் சேருகின்றாயதனால்
    இப்புவியில் சாம்பலாகி அழிந்துபோ!

    பாடல் 267

    நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
    பயவார்கண் செல்வம் பரம்பப் – பயின்கொல்
    வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
    நயவாது நிற்கு நிலை.

    வேல் போலும் கண்ணை உடையவளே!
    வழங்கி உதவும் குணமுள்ளோரிடமுள்ள
    வறுமை வெட்கமில்லாததோ? பிறருக்கு
    வழங்காத அற்பரிடம் உள்ள செல்வம்
    விட்டு நீங்காது ஒட்டிக்கொள்ளும் பிசினோ?
    வறுமையும் செல்வமும் ஆகிய இவ்விரண்டும்
    வழங்கும் நல்லவரிடமும் அற்பரிடமும்
    விரும்பத்தகா முறையில் நிற்கும் தன்மைகண்டு
    வியப்பு கொள்வாய் நீ.

    பாடல் 268

    வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
    கலவைகள் உண்டு கழிப்பர் – வலவைகள்
    காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
    மேலாறு பாய இருந்து.

    பேய்த்தனமில்லா மானமுடையவர் வறுமையுற்றபோதும்
    பெருந்தொலைவு நடந்து சென்று சிறுதொழில் செய்து
    பெற்ற கலவைச் சோற்றை உண்டு காலங்கழிப்பர்
    பேய்த்தனமுள்ள இழிகுணமுள்ளோர் வியர்வை
    பெருகி வழிய வீட்டிற்குள் இருந்து உழைப்பின்றி
    பொரிக்கறியுடன் கூடிய உணவைத் தாமே உண்பர்.
    (பேய்த்தனமென்பது இழிதொழில் செய்தலும் பிறரை வருத்துதலையும் குறிக்கிறது.)

    பாடல் 269

    பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
    மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
    வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
    வண்மையும் அன்ன தகைத்து.

    பொன் போலும் நிறமுடை செந்நெற் பயிர்
    பொதிந்திருக்கும் கதிர்களுடன் வாடி நிற்க
    மின்னல் விளங்கும் மேகம் அங்கே
    பொழியாது கடலுள் பெய்துவிடுமதுபோல்
    அறிவற்றார் மிக்க செல்வத்தைப் பெற்றால்
    அவர் கொடையும் அத்தன்மைத்தாம்.

    பாடல் 270

    ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
    ஓதி யனையார் உணர்வுடையார்; – தூய்தாக
    நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
    நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

    பகுத்தறிவில்லாதார் கற்றவராயினும் கல்லாதவரே
    பகுத்தறிவுள்ளோர் கல்லாராயினும் கற்றவரே
    பிறரிடம் தம் வறுமையிலும் இரவாதவர் செல்வந்தரே
    பாவப்பட்ட வறியோர்க்கு உதவாத செல்வந்தரும் வறியவரே.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 19

    பழகத் தெரிய வேணும் – 19

    நிர்மலா ராகவன்

    (எனக்கு எல்லாம் தெரியுமே!)

    எல்லாம் அறிந்தவன் இறைவன் மட்டும்தான் எனில், நமக்குத் தெரியாததை எண்ணி விசனம் கொள்வானேன்! இந்த விவேகம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

    கதை

    ‘எனக்கு எல்லாம் தெரியும்!’ என்று இறுமாப்புடன் கூறுவான் விட்டல்.

    நிறைய விஷயங்கள் அவனுக்குப் புரியாமல் இருக்கும். ஆனால், அதை ஒத்துக்கொள்ளும் தைரியம் அவனுக்குக் கிடையாது.

    எப்படியோ சுமாரான பதவி ஒன்றில் அமர்ந்தபின், தன்னைவிட வித்தியாசமானவர்கள் எல்லாரையும் குறை கூறி, அதில் பெருமிதம் அடைவான்.

    பிறர் சொல்வதைக் கேட்பது விட்டலைப் போன்றவர்களுக்குப் பிடிக்காத சமாசாரம்.

    தன் அறிவை வெளிக்காட்டும்வண்ணம் தானே அதிகம் பேசுவார்கள்.

    ஒருவர் கேட்கும் கேள்வியிலிருந்து அவரது ஆற்றலைப் புரிந்துகொள்ளலாம்.

    கதை

    என்னுடன் பணிபுரிந்த பத்மா இருபது ஆண்டுகளுக்குப்பின் என்னைச் சந்தித்தாள்.

    “இப்போதெல்லாம், நீ உன் தலைமயிரைக் கடையில் perm செய்து, சுருட்டையாக்கிக்கொள்கிறாயா?!” என்று கேட்டாள்.

    “இல்லையே!”

    “இல்லை. நீ அப்படித்தான் செய்துகொள்கிறாய்!”  என்று பிடிவாதம் பிடித்தாள்.

    “இயற்கைதான்,” என்று நான் மறுத்தேன்.

    மீண்டும் சொன்னதையே சொன்னாள்.

    அவர்கள் சொல்வதுதான் சரியென்று வீண்விவாதம் புரியும் குணத்தை SPLITTING THE HAIR என்கிறார்கள்.

    ‘நான் சொல்வதுதான் சரி. எல்லாரும் அப்படித்தானே சொல்கிறார்கள்!’ என்பவர்கள், ‘நாம் சுயமாகச் சிந்தித்து, இருக்கிற சொற்ப மூளைக்கும் வேலை கொடுப்பானேன்!’ என்பதுபோல் நடப்பவர்கள்.

    பொறுமையிழந்து, “சரி. அப்படியே வைத்துக்கொள்!” என்று முடித்தேன்.

    விவேகமானவர்கள் யார்?

    1. பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனிப்பவர்கள். பிறரது கருத்து சரியென்றுபட்டால் ஏற்பார்கள். இல்லாவிட்டால், எங்கே தவறு, அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று அவர்கள் யோசனை போகும்.

    “நான் பெரிய அறிவாளி அல்ல. எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும்வரை விலகுவதில்லை” (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்).

    2. பிறரை மதிப்பவன்

    தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவரிடம் ஒரேயடியாகப் பணிந்து, கீழான நிலைகளில் உள்ளவர்களை அலட்சியமாக நடத்துவதும் கிடையாது. இதற்கு தன்னைத்தானே மதிக்கும் குணம் அவசியம். இப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது.

    எவ்வாறு கற்கலாம்?

    பிறருடைய தவறுகளிலிருந்து கற்பதைவிட, சொந்த வாழ்க்கையிலிருந்தே நிறைய கற்க முடிகிறது.

    வாழ்க்கைப் பாதையில் சிலர் தகாத முறையில் நம்மை நடத்தியிருப்பர். எவ்வளவோ இழிசொற்களையும் அவமரியாதையையும் தாங்க நேர்ந்திருக்கும். கடந்ததைப் பற்றியே நினைத்து, நினைத்து, வருத்தமும் ஆத்திரமும் கொண்டிருந்தாற்போல் அவை மாறிவிடுமா? அவற்றிலிருந்து கற்கலாம்.

    கதை

    ஆரம்பக்கால ஆசிரியப் பயிற்சியின்போது எனக்கு அறிமுகமானவள் ராதா. ஒருமுறை, அவள் கூறிய ஏதோ கருத்தை நான் ஏற்கவில்லை.

    அவளுக்கு வந்ததே கோபம்! கண்டபடி கத்தினாள். நான் பயந்து, விலகினேன்.

    பல வருடங்களுக்குப்பின், இன்னொரு பயிற்சியின்போது அவளும் நானும் ஒரே வகுப்பில் இருக்க நேர்ந்தது. அவளுடைய சுபாவம் புரிந்து, நான் ஒதுங்கிப் போனேன்.

    வகுப்பு நடக்கும்போது, நான் விரிவுரையாளரை ஏதாவது கேட்டால், அதைத் தடுக்க நினைப்பவளாக, `நிர்மலா!’ என்று அவளிடமிருந்து கண்டனக் குரல் எழும்.

    பல முறை பொறுத்துப் போனேன். இறுதியில், அவள் பக்கம் திரும்பி, “Shut up!” என்றேன், மெதுவாக.

    அது போதாதா அவளுக்கு! வகுப்பு முடிந்ததும், என்னுடன் சண்டைக்கு வந்தாள்.

    “என்னை Shut up என்றாய்,” என்றாள் குற்றம் சாட்டுவதுபோல்.

    “ஆமாம். சொன்னேன்,” என்றேன் அமைதியாக.

    “நான் உன்னை அப்படிச் சொன்னால்?” என்றாள்.

    “சொல்லிவிட்டுப்போ!” என்றேன் அலட்சியமாக.

    “நான் அப்படியெல்லாம் கீழ்த்தரமாகப் பேசமாட்டேன்”.

    “சரி. பேசாதே!”.

    மீண்டும் ஆரம்பத்திலிருந்து, அதே வார்த்தைகள்.

    “நீ என்னை ஷட் அப் என்று சொன்னாய்!” என்றுவிட்டு, “நீ என்னை விலக்குகிறாய்!” என்று கத்தினாள்.

    நம்மை இழிவுபடுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேரும்போது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தோன்றிவிடும்.

    “இப்படியெல்லாம் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்றேன்.

    அவள் தன் குரலை எவ்வளவு உயர்த்தியபோதும், நான் நிதானத்தை இழக்காமல் பேசினேன்.

    இன்னும் என்ன பேசுவது என்று புரியாது, என்னைத் தாக்கிவிடுபவள்போல் மிக அருகில் வந்தாள். எங்களிருவருக்கும் இடையே இருந்த இடைவெளியைத் தன் கரத்தால் வெட்டி, அவளைத் தடுத்து நிறுத்தினார் ஒரு சீனர்.

    பிறகு, “இவள் ஏன் இப்படி தரக்குறைவாக நடந்துகொள்கிறாள்!?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

    நான் எதுவும் சொல்லவில்லை.

    அவள் தன்னைப் பற்றி ஒரேயடியாக அளக்க, அடிமைகளாக இருவர் அவள் பின்னால் நடந்தனர். சம்பவம் நடந்த முதல் நாள் அவர்கள் என்னுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க (நான் அழைக்காமலேயே) வந்துவிட்டதில் அவளுக்கு ஆத்திரம் – தன் தலைமைக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று.

    அதன்பின், நான் என்ன செய்தாலும் அதையே பின்பற்றினாள்!

    தூண்டப்பட்ட அறிவு

    கல்லூரிப் பயிற்சியின்போது, எப்படியெல்லாம் ஒரு நல்ல, திறமையான ஆசிரியர் இருக்கவேண்டும் என்று தினமும் சொல்லிக் கொடுத்தார்கள்.

    ஓர் இளைஞன் பொறுமையை இழந்தான். “புத்தகத்தில் படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் சொல்லிக் கொடுக்கிறபடி எல்லாம் நடக்க முடியுமா? நேரம் கிடைக்குமா?” என்று விவாதம் செய்தான்.

    விரிவுரையாளர் பொறுமையாக, “ஒருவருக்கு நல்லவராக இருப்பது எப்படி என்று கற்பித்தால், அவர் எளிதில் கெட்டுப் போகமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்று பதிலளித்தார்.

    என்னிடம் அவர் கேட்டார்: “உங்களிடம் ஒரு மாணவன் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறான். அதற்குப் பதில் தெரியாவிட்டால், என்ன செய்வீர்கள்?”

    “தெரியாது என்று சொல்வேன்”.

    “முட்டாள் என்று உங்களை நினைத்துக்கொள்ளமாட்டானா?”

    “எப்போதுமே அப்படிச் சொல்லமாட்டேனே! பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, பிறகு சொல்வேன்”.

    பிரமிப்புடன், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்றார்.

    பெருமையாக உணர்ந்தேன். என்னைத் திட்டித் திட்டி வழிநடத்திய ஆசிரியைகளை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

    புதிய இடங்களில், நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தால், மௌனமாக இருந்துவிட்டால் தப்பித்தோம். இல்லாவிட்டால், நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டும் வகையில் ஏதாவது உளற நேரிடும்.

    சிறக்க வேண்டுமானால், சில சமயம் சறுக்கவும் செய்வோம். அப்போது குன்றிப்போய்விடலாமா?

    (மேலும் தெரிந்துகொள்வோம்

    Share
  • நாலடியார் நயம் – 26

    நாலடியார் நயம் – 26

    நாங்குநேரி வாசஸ்ரீ

    26. அறிவின்மை

    பாடல் 251

    நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
    பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; – எண்ணுங்கால்
    பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
    கண்ணவாத் தக்க கலம்.

    பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு இழந்த
    பேடியும் கண் விரும்பிக் காணத்தக்க அணிகளை
    அணியாளோ? ஆராய்ந்தால் நுட்பமான
    அறிவின்மையே உண்மையில் வறுமையாம்
    அது உடைமையே மிகப்பெரும் செல்வமாம்.

    பாடல் 252

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
    அல்லல் உழப்பது அறிதிரேல் – தொல்சிறப்பின்
    நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
    பூவின் கிழத்தி புலந்து.

    பலவித நிறைந்த கேள்விகளின்
    பயனை உணர்ந்த நல்லறிஞர்
    தம் பெருமைகெட்டு வறுமையால்
    துன்புறும் காரணம் அறிய விரும்பினால்
    கூறுகிறேன் கேளுங்கள்! பழஞ்சிறப்புடை
    கலைமகள் வாசம் செய்தலால் பூவில் உறையும்
    திருமகள் வெறுப்புற்று அந்நல்லவரிடம் சேராள்.

    பாடல் 253

    கல்லென்று தந்தை கழற அதனையோர்
    சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் – மெல்ல
    எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
    வழுக்கோலைக் கொண்டு விடும்.

    தந்தை கல்வி கற்கச் சொல்லியும் அச்சொல்லைத்
    தள்ளி மதியாது கல்லாமல் இருந்தவன்
    பலர் முன் மெதுவாய் எழுத்தோலையைப்
    படிக்கச் சொல்லி நீட்டும்நேரம் வெகுண்டு
    தாக்கத் தடிகோலைக் கையிலெடுப்பான்.

    பாடல் 254

    கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
    நல்லறி வாளர் இடைப்புக்கு – மெல்ல
    இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
    உரைப்பினும் நாய்குரைத் தற்று.

    கல்வி கற்காமலேயே வளர்ந்த ஒருவன்
    கற்ற நல்லறிவாளர் அவைபுகுந்து
    சும்மா இருந்தாலும் நாய் இருந்தது போலாம்
    சும்மாயிராது பேசினும் நாய் குரைத்தது போலாம்.

    பாடல் 255

    புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
    கல்லாத சொல்லும் கடையெல்லாம் – கற்ற
    கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
    படாஅ விடுபாக் கறிந்து.

    அறிவோடு பொருந்தாப் புலவர்
    அவையில் புகுந்து தாம் கல்லாததையும்
    அற்பர் எடுத்துரைப்பர் தாம் கற்றதைக்கூட
    அடுத்தவர் கேட்டால் பொருளோடு பொருந்தாது
    அமைந்துவிடுமோ என எண்ணி
    ஆராய்ந்து சிந்திக்காது சொல்லார்
    அறிவுடையார்.

    பாடல் 256

    கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
    மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
    வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
    பச்சோலைக்கு இல்லை ஒலி.

    நூல்களைப் படித்து உட்பொருளை அறிந்த
    நாவினையுடைப் புலவர் பேசினால் பிழை
    நேருமோ எனப் பயந்து கண்டபடி பேசார்
    நூலறிவற்றவர் மனம்போனபடி பேசுவர்
    நன்குயர்ந்த பனைமரத்தின் உலர் ஓலைகள்
    நாளும் கலகலவென ஒலி எழுப்பும்
    நல்ல பச்சை ஓலை எப்போதும் ஒலிப்பதில்லை.

    பாடல் 257

    பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
    நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
    குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
    சென்றிசையா வாகும் செவிக்கு.

    பன்றியின் கூழ்வார்க்கும் தொட்டியில்
    பழுத்தினிக்கும் மாங்கனிச்சாற்றை ஊற்றுவது
    போலாம் நன்மையறியா மாந்தரிடம் நல்லறவழி
    பற்றிப் பேசுதல் குன்றின் மேலடிக்கப்படும்
    முளைக்குச்சியின் நுனி சிதைந்ததனால்
    மலைக்குன்றில் இறங்காததுபோல் அறவுரையும்
    அவர்தம் காதுகளின் உள் நுழையாது சிதறிப்போகும்.

    பாடல் 258

    பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
    வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
    கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
    நோலா உடம்பிற்கு அறிவு.

    பாலால் கரியைக் கழுவிப் பல நாள்
    உலர்த்தினும் வெண்மை பெறாது அதுபோல்
    உறும் கோலால் அடித்துக் கூறினும்
    உற்ற புண்ணியம் இல்லாதோன்
    உடம்பில் அறிவு புகாது.

    பாடல் 259

    பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
    இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், – இழிந்தவை
    தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
    தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.

    தேனைப் பொழிந்து நறுமணம் வீசினும்
    தேடிச் செல்லாது ஈ அத்தேனை உண்ண
    தகுதியற்ற இழிகுணம் கொண்ட மனத்தோர்க்கு
    தக்க பெரியோரின் தேன்போல் இனிக்கும்
    தெளிவான சொற்கள் தரும் பயன்தான் என்ன?

    பாடல் 260

    கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
    பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; – மற்றுமோர்
    தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
    புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.

    கற்றவர் சான்றோர் அவையில் உரைக்கும்
    குற்றமற்ற நுட்பமான கருத்துக்களைக்
    கொள்ளாது தன் நெஞ்சம் உதைத்துத் தள்ளுவதால்
    கீழ்மகன் தன் போலும் ஒரு அற்பனின் முகம் நோக்கி
    அதிகம் தெரிந்தவன்போல் தானும் பேசத் தொடங்குவான்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26

    தி.இரா. மீனா

    பிரசாதி போகண்ணா

    தத்துவ போதனை, சரணரைப் போற்றுதல், பக்தனின் இயல்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இவர் வசனங்கள் அமைகின்றன. ’சென்ன பசவண்ணப்பிரிய போக மல்லிகார்ச்சுனலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “தத்துவத்தின் வழி மெய்யறிய நினைத்தால்
    அது குரங்கின் கை கண்ணாடி போலாம்
    வெறுமே ஆடியதன்றி எதையும் காணவில்லை.
    மலைக்குகையில் அழைப்பது வெற்றொலியாம்
    நம்பிக்கைக்குரியவன்
    சென்ன பசவண்ணப்பிரிய போக மல்லிகார்ச்சுன இலிங்கம்”

    2. “பக்தியென்பது வேர், விரக்தியென்பது மரம்
    கனியென்பது ஞானம்,
    பக்குவமடைந்தால் எல்லையற்ற ஞானம்
    காம்பிலிருந்து விடுபட்டால் பரமஞானம்
    சுவைக்கும் போது உள்முக ஞானம்
    மகிழ்வு தன்மயமாகும்போது புனித ஞானம்
    புனிதஒளி நிலைக்கும் போது பரிபூரண ஞானம்
    அது மேலான உடலென்பதற்கிடமில்லை
    சென்னபசவண்ணப்பிரிய போகமல்லிகார்ச்சுன இலிங்கம்
    அளவிற்கு எட்டாத காரணத்தால்“

    3. “உலோகப் பந்து ஊடுருவிச் செல்ல முடியுமா?
    மலரும் முன்னால் செடிக்கு மணமும் நிறமுமேது?
    இந்த துவைத அத்வைத இரண்டும்
    சென்னபசவண்ணப்பிரிய போகமல்லிகார்ச்சுன
    இலிங்கத்துள்ளுண்டு.“

    4. “காற்று அடங்கிய பெரிய கடல்போல
    ஒலியில் அடங்கிய மௌனம் போல
    வெட்ட வெளியைத் தொடாத உறுதியைப் போல
    சென்னபசவண்ணப்பிரிய
    போக மல்லிகார்ச்சுனனுள் அடங்கிய நட்பாம்“

    பிரசாதி லெங்க பங்கண்ணா

    சரணர்களுக்கு சேவை செய்வது இவர் காயகம். ’தகன சண்டிகேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

    “பிரசாதமே உடலெனக் கொண்டவனின் இருப்பு
    பச்சை மண்பாண்டம் உடைந்தது போலிருக்க வேண்டும்
    கானல் நீர் நிரப்பிக் கொட்டியது போலிருக்க வேண்டும்
    தீயில் எரிந்த கற்பூரக் குன்று போலிருக்க வேண்டும்
    பிரசாதத்திற்கு மறுப்போர் இல்லாதது போலிருக்கவேண்டும்
    தகனசண்டிகேஸ்வர இலிங்கத்தில் இணையவேண்டும்“

    பத்தலேஸ்வரனின் புண்ணியஸ்திரி குட்டவ்வே

    நாடோடிகளில் ஒருவரான பத்தலேசுவரனின் மனைவி ’நிம்பேஸ் வரா’ இவரது முத்திரையாகும்.

    “மனம் நிர்வாணமாகாத வரையில்
    உடல் நிர்வாணமாகியென்ன?
    விரதம் தவறிய பின்பு விரதம் தவறியவரோடு சேர்ந்தால்
    விரதம் கடைப்பிடித்தென்ன பயன்?
    அது நரகமே நிம்பேஸ்வரனே.“

    பசவலிங்கதேவா

    குருவின் மீது எல்லையற்ற அன்பு கொண்டதான நிலையில் இவர் வசனங்கள் அமைகின்றன. ’மத்பிராண நாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “மண்ணாசையில் மனம் கொள்ளவைத்தது உயிராத்மா
    பெண்ணாசையில் வாட்டியது அந்தராத்மா
    பொன்னாசையில் கருக்கியது பரமாத்மா
    தனதான்யத்தில் பொடியானது  தூய ஆத்மா
    தாய் தந்தை உறவில் சுழன்றது ஞான ஆத்மா
    உடன்பிறப்பு உறவுகளெனத் தவித்தது உடலாத்மா
    இப்படி ஜடமான ஆன்மாக்களின் நட்பில் கெட்டேன்
    என் கதியென்ன குருலிங்க ஜங்கமமே?
    ஹரஹர சிவசிவ ஜெயஜெய கருணாகரனே
    ’மதபிராணநாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா“

    2. “என்னுள் எள்ளளவும் நல்லெண்ணமில்லை
    ஏழு தீவுகள் அளவு குற்றமுடையவன் நான்
    கருணையால் என்னைக் காப்பீரோ?
    குருலிங்க ஜங்கமமே குற்றம் பொறுப்பவரே,
    ஹரஹர சிவசிவ ஜெயஜெய கருணாகரனே
    ’மதபிராணநாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா”

    பஹூரூபி சௌடய்யா

    நாட்டுப்புறக் கலைஞரான இவர் கல்யாண் நகரில் பலவேட காயகத்தின் மூலம்  சரணவாழ்வு வாழ்ந்தவர். ’ரேகண்ணப்பிரிய நாகி நாதா’ இவரது முத்திரையாகும்.

    1. “ஐவரோடு இணைந்து ஆடினேன்
    சிவனொடு நட்பானேன்
    நான் நீயெனும் வேற்றுமை நீங்கிப் பார்த்தேன்
    கூடினேன் கேடில்லாத கூட்டத்துடன்
    ஆட்டம் போலியானது நோட்டம் முடிந்தது
    ரேகண்ணப்பிரிய நாகிநாதனே“

    2. “எல்லாவுலகங்களிலும் அவன் இருந்தாலென்ன?
    உலகைப் போன்றவனல்லன் சிவன்
    உலகைத் தன்னுள் வைத்து தான் வெளியிலிருப்பின்
    பிரம்மாண்டம் போன்றவனோ? இல்லை
    ஆகாயம் போல உள்ளும் புறமும் ஆற்றலின் ஆதாரம்
    நம் ரேகண்ணப்பிரிய நாகிநாதன்“

    3. “கையை மறந்து சண்டை போடுவது எத்தகையது?
    உணர்வை மறந்து பார்க்கும் பார்வை  எத்தகையது?
    பயத்தை மறந்து செய்யும் பக்தி எத்தகையது?
    குருவை மறந்து இலிங்கத்தை விரும்புவாயெனில்
    இலிங்கமுமில்லை குருவுமில்லை
    ரேகண்ணப்பிரிய நாகநாதனே”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)

    சேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இயற்பகை   முனிவா   ஓலம்;  ஈண்டுநீ   வருவாய்  ஓலம்!
    அயர்ப்பிலா   தானே   ஓலம்!    அன்பனே   ஓலம்,  ஓலம்!
    செயற்கரும்  செய்கை  செய்த  தீரனே  ஓலம்!   என்றான்
    மயக்கறும்    மறைஓ   லிட்டு   மாலயன்  தேட  நின்றான்!

    தம்மிடம்  மனைவியாரை   ஊரறிய  ஒப்படைத்து  விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் தம்மூர் நோக்கிச் சென்ற இயற்பகையாரை, சிவவேதியராக வந்த இறைவன் ஓங்கிய குரலெடுத்து அழைக்கலுற்றார்; ஊர் அறிய ஒப்படைத்த  அடியாரை ஊர் அறிய  அழைத்தார்.

    என்றும் தெளிவுடைய நான்மறைகள் பன்முறையும் தம்மை நோக்கி அழைத்த போதும் வெளிப்படாதவர் சிவபெருமான்; அதுமட்டுமல்ல பிரமனும் திருமாலும் தேடிய போதும் அவர்களுக்கு அகப்படாமல் ஓங்கியுயர்ந்து நின்றவர்  சிவபிரான்; அவரே  இப்போது,  “இயற்பகை முனிவனே ஓலம்!; இங்கே நீ வருவாய் ஓலம்!; எப்போதும் எமது சிந்தனை மறவாதவனே ஓலம்!; அன்புடையவனே ஓலம்! ஓலம்!; பிறர் எவரும் செய்தற்கரிய செய்கை செய்த தீரமுடையானே ஓலம்!” என்று தான் பன்முறையும் ஓலமிட்டு அழைத்தான்.

    இப்பாடலில் ‘இயற்பகை முனிவா!’ என்ற தொடர் இயற்பகையார்,  முனிவர் நிலையை அடைந்த சிறப்பை  விளக்குகிறது. தம் மனைவி பால் காமம் காட்டாமல், காமனை முனிந்தவர் முனிவர் ஆனார்  உலகப் பற்றுக்களை யெலாம் அறவே முனிந்து ஒதுக்கியவராதலின் முனிவர் என்றார். அவரது முனிவராகும்  தன்மையை மூவுலகும் அறியக்  காட்டிய செயல் நிறைவெய்திய இடம் இது!  அதனை நிறுவியமையால்  இவர் முனிவரா யினார் என்று முடித்துக் காட்டியபடியாம்.

    இவ்வாறு அவர் முனிவரான செயலை  இறைவனோடு ஓ[பிட்டு  சேக்கிழார் விளக்குகிறார். பின்னர் இதே நூலில்  “முனிவர்“ – (408); “மாதவன்“ – (412); மறைமுனி – (419); நற்றவர் – (422); முனிவர் (429); தவமுனி – (430) என முன்னர் முனித் தன்மை யாலே குறிக்கப்பெற்ற இறைவன்,

    “துரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும்
    பிரியாதே நிற்கின்ற பெம்மான் – றுரியத்தைச்
    சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்
    ஆக்குவிப்ப னன்பர்க் கவன்”.

    என்று திருக்களிற்றுப்படியார் காட்டிய படி,  தமது தன்மையே தமது அன்பர்க்கும் ஆயினமையை  இங்குக் குறித்துக் காட்டினார்!  முனிவரால் முனிவர் எனப் போற்றப் பெற்றமையால் இவர்  பெரு முனிவர் ஆனார்!

    அடுத்து இப்பாடலின்  ‘’ஈண்டு நீ வருவாய் ‘’ என்ற தொடர்,’’ நீ புகுமிடம் நீ இப்போது திரும்பிச் செல்லும் நகரமன்று. நாம் இருக்கும் இந்த இடமே’ என்பதைக்க குறித்தது. இத்தொடரை, ‘’மீண்டு நீ வருவாய்’’, என்றும்  கூறலாம் .  பிறரால் எளிதின்  மீளக்கூடாத இவ்வுலகத்திலிருந்து மீண்டு எமது நலமிகும்  உலகத்திற்கு மீண்டு வா’ என்ற குறிப்பும் விளங்குகிறது.

    இப்பாடலின்  ‘’அயர்ப்பிலாதானே’’  என்ற தொடர்,  ‘’எந்தக் காலத்தும் எவ்விடத்திலும் சிவனையும் அவனடியாரையும் மறவாமல் நின்று, அடியாருக்கு  இல்லை என்னாத விரதங் காத்தவனே!’’,  என்று பொருள் படும். அயர்ப்பு என்பது மறதியைக்  குறிக்கும்.

    “அங்கொருநாள்  அருளாலே யயர்த்து உண்ணப் புகுகின்றார்
    எங்கள்பிரான் தனையறியாது  அயர்த்தேன் யானென“

    சாக்கியநாயனார் புராணத்திலும் இதனைச் சேக்கிழார் கூறுவார். மேலும், ‘’அன்பனே ஓலம் ஓலம்’’ என்ற பகுதியில் இருமுறை ஓலம் என்று கூறி அழைத்தமையால், இறைவனிடத்தும் அடியாரிடத்தும் அன்பு நிறைந்தவனே. என்ற இருவகை அழைப்பைக்  காட்டுகிறது! அன்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் காரணமான சிறப்புடையதாதலின் ஏனைய இடத்து ஓலம் என்று ஒரு முறை அறைகூவியவர் அன்பனே ஓலம் ஓலம் என இங்கு இருமுறை அடுக்கிக் கூவினார்.

    இறைவன் தம்மையே ஒப்புவிக்கும் பொருள் அடியாரின் அன்பு ஒன்றுதானே! இதனை, “பத்திவலையிற் படுவோன் காண்க“ என்ற  திருவாசகத்திலும், “பத்திரனடிமை யென்றான்“ எனத் திருவிளையாடலில், இறைவன் பாணபத்திரருக்குத் தம்மை அடிமையாக்கிக் கொண்டபகுதியிலும் காண்க. “அன்பே சிவமாவ தாரு மறிகிலர்“ என்பது திருமந்திரம். அன்பிலே கலந்துகொண்டு இரண்டற நிற்பவர் ஆதலின் அன்பனுக்கு இருமுறை ஓலமிட்டனர்!

    அடுத்து, ‘’செயற்கருஞ் செய்கை செய்த தீரனே!’’ என்ற தொடரால், மேற்பாட்டில் ஆசிரியர் தம் வாக்கினால் நாயனாரது அரிய செய்கையைப் பாராட்டியதையும், இங்கு இறைவனும் அவ்வாறு பாராட்டியதையும்  தெரிவிக்கின்றார்.

    அடுத்து,  ‘’மயக்கறும் மறை ஓலிட்டு’’ என்ற தொடரில், மயக்கம் என்பது மோகத்தைக் குறித்தது.  உயிர்களுக்கு உள்ள மயக்கம் போக்கி உண்மை உணர்த்துவது வேதம். மயக்கறும் மறை, மயக்கம்  அறுதற்குக் காரணமான மறையைக் குறித்தது. ஓலமிட்டு என்பது ஒலிட்டு என நின்றது.  ஓலிடவும், தேடவும் நின்றான் என்றுவிரித்துரைக்க. மறை ஓலிடுதலாவது எல்லா  வகையானும் சொல்லியும் இறைவன் தன்மை தன்னளவுட் படாமல் இளைத்து நின்று விடுதல். இதனை,

    ‘’வேதங்கள்  ஐயா  என ஓங்கி  ஆழ்ந்தகன்ற  நுண்ணியனே!’’

    என்ற திருவாசகம் விளக்கும்.  இகலி நின்ற பிரமவிட்டுணுக்களினிடையே நான்கும் வேதங்களும் வெளிப்பட்டடு நீவிர் இருவரில் ஒருவரும் பரமல்லர் இறைவனே பரம்பொருள் என்பதை ஆதாரங்கள் காட்டி, முறையிடவும் என, உரைத்தலும் ஆகும்! நாதரூபமாகிய மறை, நாதாந்த ரூபனாகிய இறைவனை ஓலமிட்டு அழைத்தல் இயல்பாம்.

    மறை ஓலிட்டு, என்பதை மறைச் சொற்களால் ஒலமிட்டு, மாலயன் தேட என்று இவ்விரண்டினையும் ஒன்று கூட்டி உரைக்கலாம். மறை ஓலிடவும் நின்ற  இறைவன், நாயனார் பெயரைக்  கூவி ஓலமிட்டான் என அடியாரது பெருமையை விளக்கினார்!

    மறைவழி நின்ற முனிவர் பெரியர்; அவரிலும் அவர்களால் வழிபடப் பெற்ற வேதம் பெரிது; அவற்றினும், அவ்வேதத்தால் வழிபடப்பெற்றவனும் அதைச் சொன்னவனுமாகிய இறைவன் பெரியன்; அவனும் ஓலமிட நின்ற மிகப் பெரியார் இந்நாயனார்! என இவரது உயர்வைக்  குறித்தார். இதனையே, முன்னர் முனிவர் என்றபோது,  ஐந்தவித்த முனிவனாகிய கௌதமனினும் அங்ஙனம் அவியாது நின்றே உலகச்சார்பை விட்டு அறுத்த நாயனார் ஆற்றல் மிகப் பெரிதென்பதை உணர்த்தினார்.

    இயற்பகையார், முனிவராதலே வருவாய் என்றழைக்கக் காரணம்; அவர் அயராமையே முனிவராதற்குக் காரணம்; அன்பு அதற்கு அடிப்படை; அதுவே செயற்கரிய செய்கை செய்வித்தது எனத் தொடர்புபடுத்திக் கொள்க.

    அறுபகையும் செற்றவர் நாயனாராதலின் இறைவன் கூவிய ஓலங்களும்  அறுவகைப்பட்டன!

    Share
  • நாலடியார் நயம் – 25

    நாலடியார் நயம் – 25

    நாங்குநேரி வாசஸ்ரீ

    25. அறிவுடைமை

    பாடல் 241

    பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
    தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
    இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
    அணங்கருந் துப்பின் அரா.

    வருத்தத்தை விளைவிக்கும் மிக்க
    வலிய பாம்பும் சந்திரன் இளம்பிறையாய்
    விளங்கும்நேரம் விழுங்கச்செல்லாததுபோல்
    வீரமிக்கவர் பகைவர் தளர்ந்திருக்குங்கால்
    வெல்வதற்கு வெட்கப்பட்டு போர்செய்ய
    விரும்பி அவ்விடம் செல்லார்.

    பாடல் 242

    நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
    அணிகலம் ஆவது அடக்கம் – பணிவில்சீர்
    மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
    கோத்திரம் கூறப் படும்.

    அகலக் கடலின் குளிர்மிகு கரைக்கு
    அரசனே! வறுமையுற்ற மனிதனின்
    அணிகலம் அடக்கமுடைமை
    அடக்கமின்றி சிறப்புடைய
    அளவுகடந்து நடப்பானாயின்
    அவன் வாழும் ஊரில்
    அவன் குலம் இகழப்படும்.

    பாடல் 243

    எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
    எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
    தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
    கொன்னாளர் சாலப் பலர்.

    எந்நிலத்தில் விதைத்தாலும்
    எட்டிவிதை தென்னை மரமாகா
    தென் நாட்டினரும் நல்லறம் செய்து
    தூய சுவர்க்கம் புகுதலால்
    மறுமைப்பேறு கிட்டுமேயல்லாது
    பிறந்த இடத்தின் பெருமையாலன்று
    வடதிசையிலுள்ளோரிலும் முயற்சியின்றி
    வீணாய்க் காலம் கழித்து நரகம்
    புகுவார் பலர் உள்ளார்.

    (மறுமைப் பயனடைய அவரவர் செய்கையே காரணமாவதன்றித் திசையினால் ஒன்றுமில்லை.)

    பாடல் 244

    வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
    தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
    இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
    மனந்தீதாம் பக்கம் அரிது.

    வேம்பின் இலைகளிடையே பழுத்தாலும்
    வாழையின் இனிய சுவை மாறாததுபோல்
    தாம் சேர்ந்த கூட்டம் தீயதாயினும்
    தக்க குணமுடைப் பெரியோரின் மனதில்
    தீயவராகும் தன்மை இல்லை.

    பாடல் 245

    கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
    உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
    இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
    மனத்தனையர் மக்கள்என் பார்.

    அலைமோதும் குளிர் கடற்கரையுடை
    அரசனே! கடலருகிலும் இனிய நீர்
    உண்டாகும் மலை அருகிலும்
    உப்புநீர் சுரக்குமாதலால்
    மக்கள் சார்ந்த இனத்தையல்லாது
    தம் மன இயல்பை ஒத்தவராவர்.

    பாடல் 246

    பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
    ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
    மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
    விராஅஅய்ச் செய்யாமை நன்று.

    பருத்த அடிமரம் கொண்ட
    புன்னை சூழ் குளிர்கடற்கரையுடை
    நாட்டின் அரசனே! நிலையான மனமுடையார்
    நல்லசெய்கையுடையாரிடத்து நீங்குதலும்
    பின் சேர்தலும் செய்வாரோ? நீங்குதலைவிட
    பழகாமால் இருத்தலே நன்று.

    பாடல் 247

    உணர உணரும் உணர்வுடை யாரைப்
    புணரிற் புணருமாம் இன்பம் – புணரின்
    தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
    பிரியப் பிரியுமாம் நோய்.

    நம் மனதில் எண்ணியதைக் குறிப்பாலுணரும்
    நுண்ணறிவுடையோரை நண்பராய்க் கொண்டால்
    இன்பம்மிகும் வெளிப்படையாகக் காட்டியும் அறியும்
    இயல்பற்றோரை நண்பராய்க் கொண்டால்
    உண்டாகும் துன்பம் அவரைப் பிரியும் நேரம்
    உடனே நீங்கிச் செல்லும்.

    பாடல் 248

    நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
    நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
    மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
    தலையாகச் செய்வானும் தான்.

    நல்ல நிலையில் தம்மை
    நிறுத்திக்கொள்பவனும் அந்
    நிலைகெடுத்து தம்மைத் தாழ்
    நிலைக்கு கொண்டுசெல்பவனும்
    நிலையை மென்மேல் உயர்த்துபவனும்
    நன்கு உயர்த்தி தலைமையுடையவனாய்
    நிற்கச் செய்பவனும் தானே ஆவான்.

    பாடல் 249

    கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
    பெருமை யுடையாரும் சேறல் – அருமரபின்
    ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
    பேதைமை யன்றுஅது அறிவு.

    அருமையாய் ஒரே சீரான முறையில்
    அலைகள் ஆரவாரிக்கும் குளிர்
    கடற்கரையுடை நாட்டின் வேந்தனே!
    காரியத்தை நிறைவேற்றும் பொருட்டு
    பெருமையுடையாரும் அறிவில்லார்
    பின் செல்வது அறியாமையன்று
    அறிவுடைமையே!

    பாடல் 250

    கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
    தருமமும் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையே
    முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
    பட்டினம் பெற்ற கலம்.

    நல்ல தொழில் முயற்சியால்
    நன்கு பொருள் சேர்த்து இன்பம்
    துய்த்து தகுதியுடையார்க்கு
    தருமம் செய்து ஒருபிறப்பிலே இம்
    மூன்றையும் தடையில்லாமல் ஆற்ற
    முடியுமெனில் அது வாணிகத்தை வெற்றியுடன்
    முடித்து துறைமுகப் பட்டினம் அடைந்த
    கப்பல் போலும் இன்பம்பயக்கும்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 19

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 19

    மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுசோற்றுப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்மக்களின் வளர்ச்சியில் ‘பொய்தல் விளையாட்டு’ பெரும்பங்கு வகிக்கிறது. பெண் குழந்தைகள் உடல், உள, மன வகையாக வளர்ந்து தமது குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராவது இவ்விளையாட்டுகளால்தான்.

    இவை சிற்றில் இழைத்தல், சிறுசோறு சமைத்தல், பாவை விளையாடுதல், குழமணம் மொழிதல் எனப் பல சிறு விளையாட்டுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. பெண்குழந்தைகள் சிற்றில் இழைத்தலைப் பற்றிய விளக்கங்களை இத்தொடரின் 18.1 & 18.2 ஆகிய பகுதிகளில் கண்டோம். ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்திலும் பெண்குழந்தைகள் இழைக்கும் பலவிதமான சிற்றில்கள், அவர்கள் சமைக்கும் சிறுசோறு ஆகியன பற்றிய அழகான விளக்கங்களைக் காணலாம் (இத்தொடரின் பகுதிகள்11.1 & 11.2). மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில் பருவம் பாடப்பட்டுள்ளது. சிறுசோறு அடுதல்/சமைத்தல் என்பது இதில் ஒரு செயலாகவே அடங்கிவிட்டதனையும் காணலாம். ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே இதனை ஒரு தனிப்பருவமாகவே இதனை இயற்றிய புலவர் (பெயர் தெரியவில்லை) பாடிவைத்துள்ளார்.

    பதிப்பு ஆண்டை நோக்கினால், இப்பிள்ளைத்தமிழ் ஆண்டாள் வாழ்ந்த காலத்திற்கு நீண்டநாட்களுக்குப்பின் பாடப்பட்டது. ஆண்டாளின் காலம் கி. பி. 8-ஆம் நூற்றாண்டாக இருக்கும் என்பது சரித்திர, ஆன்மீகவாதிகள் கூற்று. இப்பிள்ளைத்தமிழோ கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் நூல்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் பின்னரே எழுதப்பட்டன. அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கும் முன்னோடியாகக் கருதப்படும் பெரியாழ்வாரின் (இவரே ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையுமாவார்) கண்ணன் மீதான திருவாய்மொழியும் இக்காலத்திலேயே படைக்கப்பெற்றது.

    ஆண்டாள் எனும் தெய்வத் திருமகள் ஒருவளே மார்கழி, தைந்நீராடலையும், காமநோன்பு நோற்பதனையும், அவற்றினூடே சிற்றிலிழைத்தல், சிறுசோறு சமைத்தல் ஆகியனவற்றையும் பெண்மக்களின் விளையாட்டாக மட்டுமின்றி, நாடும் வீடும் நலம்பெற வைக்கும் ஒரு வழிபாடாகவும் காட்டி அழகுறத் தனது பாசுரங்களில் பாடிவைத்துள்ளமை வியத்தற்குரியதாகும். இதனால்தானோ என்னவோ புலவரின் கற்பனையும் கவித்திறனும் அவளிழைக்கும் சிற்றிலையும் சமைக்கும் சிறுசோற்றினையும்  இரு இனிய பருவங்களாக்கி ஒவ்வொன்றினையும் பத்துப் பாடல்களால் பாட வாய்ப்பினையும் அளித்தது எனலாம்.

    ‘மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!1′ எனும் திருப்பாவையில் ஆண்டாள் எவ்வாறு சிறுபெண்களாகிய தாங்கள் அக்கார அடிசிலைச் செய்து அதில் நெய்பெய்து முழங்கையில் வழியுமாறு அனைவருடனும் சேர்ந்து உண்போம் எனப் பாடுகிறாள்.

    இதுபோன்று குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழின் வருகைப் பருவத்துப் பாடலொன்றில் மிகவும் நயமாக  அன்னை பார்வதி ‘ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு’ முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி ‘விளையாடிக் கொண்டி’ருப்பதனைக் கூறுவதனைக் காண்கிறோம்.

    ‘லீலா க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா2‘ என லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் பார்வதிதேவி அன்னைக்கு உண்டு. விளையாட்டாகவே இவ்வுலகங்கள் அனைத்தையும் படைப்பவள் என்பதுதான் அதன் பொருள். பேரண்டமாகிய இந்த உலகினையே சிற்றில் இழைப்பதாக அவள் பாவனை செய்துகொண்டு இழைத்து, மிக அருமையாக, ஆசையாக, விதம்விதமாக, அழகாகப் படைக்கின்றாள்; பின் படைத்த உலகங்களில் வாழும் உயிர்களுக்கு உணவளிக்கச் சிறுசோறாக்குகிறாள்.

    இருவினைப் பயன்களே சிறுசோறெனச் சமைக்கப்படுகின்றன! சிறுமியாகிய நம் அன்னை இவ்வுலகில் உள்ள எண்பத்துநாலாயிரம் கோடிவகை உயிர்களையும் தான்விளையாட உயிருள்ள பாவைகளாகச் செய்விக்கிறாள். அவற்றை மலங்கள் எனப்படும் கருமவினைப் பயன்கள் நாள்தோறும் வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தியவண்ணம் உள்ளன. ஆகவே அவள் சமைத்து வைத்துள்ள இருவினைப் பயன்களெனும் சிறுசோற்றினை அந்தப் பாவைகளுக்கு உண்ணக் கொடுத்து அவற்றின் பசியைப் போக்கி அருளுகிறாள் அவள். ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பொறுமையாகச் சலிப்பின்றி, கற்பகோடி காலங்களாகப் பாராசக்தி அன்னை எனும் சிறுமி செய்து வரும் விளையாட்டு இதுவாகும். இவ்வாறு செய்யும் பராசக்தி எனும் சிறுமி விளையாடுமிடம் பரமானந்தப் பெருவீடு எனப்படும் உயர்ந்த ஞானப் பெருவெளியாகும். அதாவது அவளை உணர்ந்து கொண்டவர்களுக்கே அவளுடைய இவ்விளையாடலையும் இக்கண்ணோட்டத்தில் உணர்ந்து போற்றவியலும் என்பதே பாடலின் உட்பொருள்.

            ‘கடிகொண் டலரு நறுங்கடுக்கைக்
                       கடவுண் மகிழப் பேரண்ட
             கடாகப் பரப்பே சிற்றிலெனக்
                       கருமப் பகுப்பே சிறுசோறாம்,
             படிகொண் டுயிராம் பாவைகட்குப்
                       பைதன் மலநோய்ப் பசியிரியப்
             பல்கா லயிற்றி விளையாடிப்
                       பரமா னந்தப் பெருவீட்டிற்
             குடிகொண் டிருக்குந் தீங்கொம்பே3

     …………..’ என்பன இப்பாடலின் அழகிய பொருள்செறிந்த வரிகளாகும்.

    இதனால் பெண்மக்கள் சிற்றிலிழைப்பதும் சிறுசோறு சமைப்பதும் பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் தனியாகப் பாடப்படாவிடினும், அந்நூல்களின் மற்ற பருவங்களில் அவை ஒரு அழகான செய்தியாக அற்புதமான உவமைகளுடன் கூறப்படுகின்றன என அறியலாம்.

    இனி ஆண்டாள் பிள்ளைத்தமிழிலிருந்து சில பாடல்களைக் கண்டு மகிழலாம். இயற்றப்பட்ட பத்துப்பாடல்களில் கிடைத்தவை ஆறு பாடல்களேயாம்.

    முதற்பாடல் தேவர் முதலானோர் கூறுவதாக உள்ளது. அவர்கள், “திரிசூலமேந்திய சிவபெருமான் தொட்டுண்ட மிச்சத்தினை நாம் இங்கு உண்ண இயலாது; அவன் இருக்குமிடமோ சுடுகாடு; அவன் மாலையாக அணிந்துள்ளவை எலும்புகள்; அவன் மண்டையோட்டில் உண்ணுதற்காகப் பலியினை ஏற்பவன்; ஒரு அன்னையிடம் பிள்ளையை அறுத்துச் சமைத்து உணவிடக் கூறியுண்டவன்; (ஈண்டு சிறுத்தொண்ட நாயனார் கதை உள்ளடக்கமாகக் கூறப்பட்டது); இது எமக்குச் சரிப்படாது; ஆதலால் பிரமன் முதலானவர்கள் அவனை விட்டுவிட்டு உன்னிடம் வந்து நீ அமலனான எம்பெருமானுக்கு ஊட்டி உண்ணுகின்ற உணவின் சேடத்தை (மிச்சத்தை) உண்பதே உசிதம் என்று எதிர்பார்த்து நிற்கின்றனர். புதுவை எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பிராட்டியே! நீ சிறுசோறு இழைத்தருளுக!

    தென்னரங்கத்துப் பெருமான், திருமாலிருஞ்சோலைப் பெருமாள், திருமலைப்பிரான், திருத்தண்கா அப்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி ஆகிய ஐவரும் விருந்துண்ணுமாறு சிறுசோறு சமைத்தருளுக,” என வேண்டுகிறார் புலவர்.

             ஊனறாச் சுடர்முத் தலைக்குல பாணிதொட்
                       டுண்டதீங் கொருவ ருண்ணா
             ……………………………………………………..
             தானமுஞ் சுடுகாடு தமமென் பூனுடைத்
                       தலையிலிடு பலியை யுண்பான்
             ……………………………………………………
             ஆனதா லவனைவிட் டிங்குவந் தன்னைநீ
                       யமலனுக் கூட்டி யுண்ணு
             மச்சேட முண்பதே யுசிதமென் றயனைமுத
                       லவர்களெதிர் கொண்டு நின்றார்
             ………………………………………………
             தென்னரங் கேசன்முத லைவரும் விருந்துணச்
                       சிறுசோ றிழைத்தருள்கவே 4.

    மேற்காணும் பாடலில் ஆண்டாள் அரங்கப்பெருமானுக்கு ஆக்கும் சிறுசோற்றின்பெருமை விளம்பப்பட்டது. மற்றொரு பாடலில் உலகத்து உயிர்கட்கெலாம் சிறுசோறு இழைக்குமாறு ஆண்டாளை வேண்டும் நயம் மிகவும் அருமையாக உள்ளது.

    உயிர்களையெல்லாம் படைத்து, அவற்றிற்கு உரிய வீடுகள் எனப்படும் உடல்களில் குடியேற்றி, அவை உயிர்வாழத் தேவையான உணவெனும் இருவினைப் பயன்களையும் ஊட்டுபவள் அன்னை தெய்வம் எனும்  ஆழ்ந்த கருத்து இதனால் பெறப்படுகின்றது.

    மேலும் ஆண்பாற்பிள்ளைத்தமிழின் சிற்றில் பருவத்துப் பாடல்கள் பெரும்பாலும் பெண்குழந்தைகளின் வேண்டுதல்களாகவே அமைவதனையும் முன்பே இத்தொடரின் பகுதி-11.1 & 11.2-இல் கண்டோம். இவற்றில் தாமிழைக்கும் சிற்றிலை அழிக்க வேண்டாம் என்றும், சமைக்கும் பாண்டங்களை உடைக்க வேண்டாம் என்றும், அடுப்புத்தீயை அவிக்க வேண்டாமெனவும், பாவைத்திருமண விருந்தினை வீணாக்க வேண்டம் எனவும் பலவாறாக வேண்டும் சிறுமியர் கூற்றுகள் மிகவும் நயமானவை; சுவைமிகுந்தவை.

            ‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
                                நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
             தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
                               சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
             முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
                               மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
             திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
              சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே5,’ என்பது சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் இனிய பாடல். பலமுறை கேட்டாலும் தெவிட்டாத கவியமுதம்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும்6 குமரகுருபரனார், திரும்பத் திரும்பப் புதியதாக உலகங்களைப் படைத்து, கலங்களைத் திரும்பவும் கழுவி அவற்றில் புதுக்கூழ் சமைத்து சலியாது  உயிர்களுக்கு ஊட்டும் சிறுபெண்ணாக மீனாட்சியம்மையைச் செங்கீரைப் பருவப் பாடலொன்றில் அழகுபட உரைக்கின்றார். இதனைப் பகுதி 11.2-இல் காணவும்.

    ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சிறுசோற்றுப் பருவத்தின் மற்றொரு இனிய பாடலைக் காண்போம்:

    பறவைகள், விலங்குகள், மீன்வகைகள், ஊர்வன, தாவர வகைகள் என்பன ஆண், பெண், அலி எனும் முப்பாற்பட்டன. இவை தவிர, எண்ணிக்கையில் இன்னும் மேற்பட்ட மக்கள், தேவர் என்பவர்களுடனெல்லாம் சேர்த்து, எண்பத்துநான்கு நூறாயிரம்வகை உயிர்களும் குடிபுகுந்து வாழும்வண்ணம் அவற்றிற்குத் தேவையான வெவ்வேறு வகைப்பட்ட உணவினைப் பெருஞ்சோறு என ஆக்கி அருள்புரிபவள் அன்னை ஆண்டாள் என்கிறார் புலவர்.

    நறவு எனும் தேன், தயிர், நெய், கன்னல் எனும் கரும்பு, பாலாழி, கறிசோறு என இவையனைத்தையும் செய்விப்பதாகக் கடலில் விளையும் முத்துகளைச் சோறாக்கி, மலையைப் பானையாக்கி, புனல்நீரை உலைநீராகப் பெய்து, இவற்றைச் சமைக்க சூரியனை அடுப்பின் நெருப்பாகவும் கொண்டு புதுவைப்பிராட்டியே, சிறுசோறு இழைத்தருளுக என வேண்டுவதாக அமைந்த பாடல். இழைத்தலுக்கு, ஆக்குதல் எனவும் ஒரு பொருளுண்டு.

             பறவைமா மீனமூர் வனதாப ரங்கண்முப்
                       பானுடன் …………………..
             …………………………………….
             முறவுகொண் டெண்பத்து நான்குநூ றாயிரம்
                       யோனியிற் குடிபுக்கவா
             முயிர்கட்கு வேறுவே றுணர்வொடு பெருஞ்சோறு
                       முற்றிழைத் தருள்புரியுநீ
             நறவுதயிர் நெய்கன்னல் பாலாழி கறிசோறு
                       நரலையுட் டரளமுலைநீர்
             நன்புனற் கடனேமி வரைமிடா வுலைமுக
                       நயந்ததழல் ஞாயிறாகச்
             சிறகர்வண் டிமிழ்பொழிற் புதுவைப் பிராட்டியே
                       சிறுசோ றிழைத்தருள்கவே7
                …………………………………….

    இவ்வாறு நயம் மிகுந்த கருத்துக் செறிவான பாடல்களைக் கொண்டு இப்பருவத்தைப் பாடிவைத்துள்ளார் இப்புலவர் பெருமான்.

    அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு அங்கத்தைக் கண்டு களிக்கலாம்.

    (தொடரும்)

    பார்வை நூல்கள்

    1. ஸ்ரீ ஆண்டாள் – திருப்பாவை
    2. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம சுலோகம்
    3. சிவஞான சுவாமிகள்- குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
    4, 7 ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
    5. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    6. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    Share