நாலடியார் நயம் – 28

நாங்குநேரி வாசஸ்ரீ
28. ஈயாமை
பாடல் 271
நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; – அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
தம்மிடமுள்ள பொருளால் தாம் சமைத்த உணவை
தன் நண்பருக்கும் நண்பரல்லாதாருக்கும் பங்கிட்டுத்
தாமும் உண்பதே சமைத்து உண்பதாம்
தாம் சமைத்த உணவைக் கதவைத் தாழிட்டு
தன் வீட்டுனுள் தாம் மட்டும் உண்டு வாழும்
தக்க குணமற்றவர்களுக்கு உட்புகமுடியாவண்ணம்
தேவ உலகத்துக் கதவுகள் அடைக்கப்படும்.
பாடல் 272
எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; – மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.
எவ்வளவாயினும் தம்மால் முடிந்த சிறிய அளவில்
எத்தகு தருமமாவது செய்தவர் மேன்மையடைவர்
எல்லாப் பெருஞ்செல்வமும் சேர்ந்தபின்னும்
என்றாவது ஒருநாள் தருமம் செய்யலாம்
என எண்ணி இருப்போர் கடல் சூழ்ந்த உலகத்தாரால்
எக்காலமும் பழிக்கப்பட்டு கெட்டழிவார்.
பாடல் 273
துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.
தாமும் சேர்த்த பொருளை அனுபவிக்காது
துறவிகளுக்கும் ஒன்றும் ஈயாது செல்வத்தைத்
தக்கவைத்து இறந்து போகும் அறிவிலானைத்
தகுந்த வழியில் நன்கு பயன்படுத்தவில்லையெனத்
தேடிவைத்த பொருள் நோக்கிச் சிரிக்கும்.
பாடல் 274
கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் – இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.
அடுத்தவர்க்குக் கொடுப்பதையும் தான் அனுபவிப்பதையும்
அறியாத லோப குணமுடையானடைந்த பெருஞ்செல்வம்
அவர்தம் வீட்டில் பிறந்த அழகிய கன்னிப்பெண்ணை
அவளுக்கேற்ற பருவ காலத்தில் பிறர் அனுபவித்தல் போல
அயலானால் அனுபவிக்கப்படும்.
(பிறரைப் பற்றிச் சிந்தியாது, இறக்கமற்று சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகுபார்ப்பதும், கஞ்சத்தனமும் லோபகுணம் எனப்படும்.)
பாடல் 275
எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
அலைகள் மோதுகின்ற கடலிலிருந்தாலும்
அதன்நீர் குடிக்கப் பயன்படாததால் மக்கள்
அடிக்கடி நீர்வற்றும் சிறு கிணற்றின் ஊற்றையே
அலைந்துகண்டு பருகுவர் அதுபோல்
அறம் செய்து மறுமை இன்பத்தை நாடுதலை
அறியாதோரின் செல்வத்தை விட
அறிவுடைச் சான்றோரின் வறுமை மேல்.
பாடல் 276
எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
எனதெனது என்றிருப்பன் யானும் – தன தாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.
எப்போதும் அறிவில்லாமூடன் தான் சேர்த்த பொருளை
என்னுடையது என்னுடையது எனச் சொல்லியிருப்பான்
எனது எனது என நானும் அப்பொருளை எண்ணியிருப்பேன்
எப்படியெனில் அவன் அப்பொருளைத் தானும் அனுபவிக்காது
எவருக்கும் கொடுக்காது இருப்பதுபோல் நானும் அதேபொருளை
எடுத்து அனுபவிக்காது யாருக்கும் கொடுக்காது இருக்கிறேன்.
பாடல் 277
வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.
பிறருக்கு ஈயாச் செல்வந்தரை விட வறுமையுற்றோர்
பல துன்பத்தினின்றும் தப்பியவராய்க் கொள்ளப்படுவர்
பொருளிழந்தார் என உலகோர் பழிப்பதிலிருந்தும்
பலவாறு வருந்தி அப்பொருளைக் காப்பதிலிருந்தும்
புதைத்து மறைக்க நிலத்தைத் தோண்டுவதிலிருந்தும்
பாதுகாப்பாய் கைவலிக்கக் கெட்டியாய்ப் பிடித்தலினின்றும்
போன்று அவ்வறியவர் தப்பினவை பல உண்டு.
பாடல் 278
தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர் – தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார் – தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
தன்னுடையதாய்ப் பொருள் உள்ளபோது லோபி
தானும் பிறருக்குக் கொடுக்க மாட்டான் பின்னர்
தமதான காலத்தில் பங்காளிகளும் கொடுக்க இசையார்
தன்னுடையதாயிருந்த போது அவன் கொடுப்பதைத்
தடுத்திருக்க மாட்டார் அவனின் பங்காளிகள் அவர்கள்
தருவதையோ இறந்தபின் அவனாலும் தடுக்க இயலாது பின்
தந்து பயன்பெறாது இருவரும் இருந்ததன் காரணம் யாதோ?
பாடல் 279
இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
விரகிற் சுரப்பதாம் வன்மை – விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.
கேட்பவர் கன்றாக இருக்க
கொடுப்பவர் பசுவாக இருந்து
உற்சாகத்துடன் கொடுப்பதே
உயர்ந்த கொடையாம் அவ்வாறன்றி
வலியவர் அடித்தபின் மனமின்றி
வருந்திப் பால் தரும் பசுபோல்
வல்லோர் பல சூழ்ச்சிசெய்து
வற்புறுத்தித் துன்புறுத்தியபின்
கொடுப்பது கீழ்மக்கள் இயல்பு.
பாடல் 280
ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.
பொருளைச் சம்பாதிப்பதும் துன்பம்
பாதுகாத்தலும் மிகுந்த துன்பம்
பாதுகாத்த பொருள் அழிந்தால்
பெருந்துன்பம் ஆதலில் அப்பொருள்
பலவித துன்பத்துக்கும் இருப்பிடமாம்.