திருச்சி புலவர் இராமமூர்த்தி

வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்ப
ஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோ கத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடனுறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத் தாரும் வானிடை இன்பம் பெற்றார்

சிவவேதியர் அழைத்தது பேரோசையாகக் கேட்டமையால் உடனே இயற்பகையார் திரும்பி வந்தார். ‘’யாரேனும் தடுத்தால் என் வாளுக்கு இரையாவார்’’ என்று கூறியபடியே ஓடி வந்தார். அங்கே தம்மை அருட்சக்திக் கோலமாக மாற்றிக் கொள்வதற்காகச் சிவவேதியர் மறைந்தார்; அங்கே  இயற்பகையார்  மனைவியார் நின்றார்.

அப்போது இறைவன் வானில் இடப வாகனத்தின் மேல் தோன்றினார்; அவரைக் கண்ட அடியார் வீழ்ந்து வணங்கினார். அங்கேயே இறைவனைப் பலவாறு துதித்தார். இறைவன். சிவபிரான் ‘’அருள் விளையும் இந்த  உலகில் , இவ்வாறு செயற்கரிய அன்பைக் காட்டிய நீ, உன் பக்திக்குத் துணை புரிந்த மனைவியோடே எம்முடன் வருக!’’ என்று கூறி, இருவருக்கும் வீடு பேறளித்துத் தம் பொன்னம்பலத்தில் புகுந்தார் ஆதலால் இவ்வுலகமே இறைவன் திருவருளுக்கு ஏற்ற இடம் என்பதும் புலனாகின்றது.

அப்போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்; வேதங்கள் வாழ்த்தின; ஞானியர்கள் வணங்கிப் போற்றினர்; எக்குறையும் இல்லாத தொண்டராகிய இயற்பகை நாயனார் தம்மைப் பிரியாத மனைவியாரோடும் இறைவனருகில் நீங்காது உறையும் பெருமை பெற்றார்; அப்போது அங்கே போரிட்டு மாண்ட  உறவினர்கள் அனைவரும் வீரசுவர்க்கம் அடைந்தனர்!

இயற்பகையாரின் தொண்டினால் எல்லார்க்கும் விளைந்த நன்மைகள் இப்பாடலில் கூறப் பெற்றன. அவ்வப்போது  தவறுகள் புரியும் தேவர்கள் இறைவனருள்  பெறப்  பூமாரி பொழிந்தனர்!  அதற்கும் மேலாக, என்றும் ஒரே நிலையில் துதித்துப் பிறர்க்கும் உரைக்கும் வேதங்கள் சொல்வோர் இல்லாமலேயே வாழ்த்தின; இவ்வேதவொலி சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளின் போதுதான்  நிகழும், இதனை

‘’ ஓதும் மறையோர் பிறிது  உரைத்திடினும்  ஓவா
வேதமொழி  யால் ஒலி விளங்கி  எழும்  எங்கும்‘’ என்றும்,

‘’எங்கணும் இயற்றுபவர்  இன்றியும் இயம்பும்
மங்கல   முழக்கொலி  மலிந்த மறுகெல்லாம்’’  என்றும்,

திருஞான சம்பந்தர் தோன்றிய  பெருநிகழ்வின் போது  நிகழ்ந்ததாக  இக்கவிஞரே  கூறுவார்.

அடுத்து  இப்பாட்டில், ‘’ஊனமில் தொண்டர்’’ என்ற தொடர், உலகில் உயிருணர்வு (பசுபோதம்) மட்டுமே பெற்ற தொண்டர்களை விட மேலான இறையுணர்வு (பதி போதம்) பெற்றவர் இயற்பகையார் என்பதைக் குறித்தது. இதனைச்  சிவஞான போதம்  ஒன்பதாம்  சூத்திரம்.

‘’ ஊனக்கண் பாசம்  உணராப் பதியை
ஞானக்  கண்ணினில்  சிந்தை நாடி‘’ என்று கூறும்.

அடுத்து, ‘’நலமிகு  சிவலோகத்தில்‘’ என்ற தொடர் முத்திக்கும் மேற்பட்ட அபரமுத்தித்  தானம் என்ற சுத்த புவனமாகிய சிவலோகத்தில், அதாவது நலமே விளையும் பூமியில் என்ற பொருளை விளக்குகிறது.

அடுத்து ‘’கும்பிட்டு உடனுறை   இன்பம் பெற்றார்’’ என்ற தொடரால், ‘’உணர்வுகள் ஒன்றி வணங்கி, இறைவனுடன் அத்துவிதமாக நிற்கும் பேரின்பம்  பெற்றார்’’   என்பது புலனாகும். அப்பேரின்பம் ,

“பேரா வொழியாப் பிரிவில்லா மறவா நினையா வளவிலா மாளா வின்பம் ‘’

என்று திருவாசகத்தில் கூறப் பெற்றது.

அடுத்து  ‘’ஏனைய  சுற்றத்தாரம் வானிடை  இன்பம் பெற்றார்‘’ என்ற அடி, அவர்கள் அடைந்த வீர சுவர்க்க இன்பத்தைக் குறித்தது. அவர்களும்  உலகியல்  அறத்தை மேற்கொண்டமையாலும், இயற்பகையார், அவர் மனைவியார் மற்றும் தமக்கும்   குலப்பழி  வாராமல்  காக்க  மிகுந்த பாசம் கொண்டு விளங்கியமையாலும், அதற்காகப் போரிட்டு உயிரை இழக்கவும் சித்தமாக இருந்தமையாலும், நாயனாரின் கரங்களாலேயே தண்டிக்கப் பெற்றமையாலும் வானிடை இன்பம் பெற்றார்.

ஆகவே இப்பாடல், இயற்பகை நாயனாரின் செயலும், தொடர்பும் யாருக்கெல்லாம், எவ்வாறெல்லாம் இறைவன் திருவருளை வழங்கின என்பதை  விளக்குகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.