டென்சர்ஃப்ளோ – ஓர் அறிமுகம்

நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்
இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) என்று சொல்லப்படுகின்ற தரவுப் போக்குகளின் முன்கணிப்பு மற்றும் தரவுப் போக்குக் கணிப்புகளில் தலையீட்டு நடவடிக்கைகளின் விளைவு ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள தகவல்களைப் பிரித்தெடுக்கச் சிக்கலான தரவுத் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்ய, தொழில்நுட்பச் சந்தை மற்றும் அறிவு சார்ந்த அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
இத்தகைய செயற்கை நுண்ணறிவுத் தகவல்கள், வருங்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை மாற்றவும் எதிர்காலப் போக்குகளை வழிநடத்தவும் பயன்படுத்தலாம்.
இயந்திரக் கற்றலும், ஆழமான கற்றலும் செயற்கை நுண்ணறிவின் குறிப்பிட்ட துணைத் தொகுப்புகளாகும்..
தற்போது கல்வித் துறையும் தொழில் துறைகளும், பல்வேறு அரசுத் துறைகளும், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆழ்ந்த கற்றல் என்பது இயந்திரக் கற்றலைச் செயல்படுத்துவதற்கான ஒரு தொழில் நுட்பமாகும். மேலும் இதை ஆழமான கற்றல் நரம்பியல் நெட்வொர்க் (டி.என்.என்.) என்றும் கூறலாம். டென்சர்ஃப்ளோ என்பது டென்சர் + ஃப்ளோ என்ற இரண்டு ஆங்கிலச் சொற்கள் சேர்ந்த ஒரு வார்த்தையைக் குறிக்கின்றது.
டென்சர் என்பது பல பரிமாண வரிசைகளை உள்ளடங்கியது.
ஃப்ளோ என்பது செயல்பாடுகளின் வரைபடமாகும்.
எனவே டென்சர்ஃப்ளோ என்பது பல பரிமாண வரிசைகளை உள்ளடக்கிய செயல்பாடுகளின் வரைபடமாகும்.
டென்சர்ஃப்ளோ, கூகுள் உருவாக்கியது. இது கூகுள் மூளைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பிறகு இது ஒரு திறந்த மூல தயாரிப்பாக அமைந்தது. ஏனெனில் பல இயந்திரக் கற்றல் மற்றும் ஆழமான கற்றல் கட்டமைப்புகள் திறந்த மூலமாகக் கிடைப்பதை ஏற்றுக் கொள்கின்றன. அல்லது பயன்படுத்திக் கொள்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் சமூகத்தினர்கள் டென்சர்ஃப்ளோவை ஏற்றுக்கொண்டு அதன் மேல், அம்சங்களையும் தயாரிப்புகளையும் உருவாக்குகின்றனர். டென்சர்ஃப்ளோவின் நன்மை என்னவென்றால், தீவிரப் பயன்பாடுகளைக் கணக்கிடுவதற்கு ஒற்றைக் கணினியில் ஒற்றை சிபியு (மத்திய செயலாக்க அலகு) மூலம் செயல்களை இயக்குவதை விட, டென்சர்ஃப்ளோ செயல்கள் பல CPUக்கள், GPU க்கள் (கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள்), பல இயந்திரங்கள் அல்லது TPUக்கள் (டென்சர் செயலாக்க அலகுகள்) முழுவதும் விநியோகித்து, தீவிரப் பயன்பாடுகளைக் கணக்கிடலாம். தரவு ஓட்ட வரைபடங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதன் மூலம் எண் கணக்கீடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்தத் தரவு ஓட்ட வரைபடங்களை டென்சர்போர்டு தொகுப்பு கருவிகளைப் பயன்படுத்திக் காட்சிப்படுத்தலாம்