நாலடியார் நயம் – 27

நாங்குநேரி வாசஸ்ரீ
27. நன்றியில் செல்வம்
பாடல் 261
அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.
அதிகமாய்ப் பழுத்திருந்தாலும் பொரிந்த
அடி மரத்தையுடை விளாமரத்தை
அருகிலுள்ளதென எண்ணி
அண்டாது வௌவால் அதுபோல்
அருகிலிருப்பினும் பெருமையிலாரின்
அருஞ்செல்வம் அவரினும் வறியவர்
அதனால் பயனுறுவர் என நினைப்பதற்கு
அற்ற தன்மை கொண்டது.
பாடல் 262
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
அள்ளிக்கொள்ளத்தக்க சிறு
அரும்புகள் இருப்பினும் சூடத்தக்கது
அல்ல எனக் கள்ளிச்செடி மேல்
ஆர்வமாய் கை வைக்க மாட்டார்
அதுபோல் பெருஞ்செல்வம்
அமைந்தவராயினும் அற்பரை
அவர்தம் செல்வம் பயன்படாதென்று
அறிவுடையோர் விரும்பிச்சேரார்.
பாடல் 263
மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.
மிகு அலைகளையுடை கடற்கரையிருப்பினும்
மக்கள் தோண்டச் சுரக்கும் உப்புச்சுவையற்ற
கிணற்றுநீரைத் தேடிப்பருகுவர் அதுபோல்
மிக்க செல்வம் உடையவர் அருகேயிருப்பினும்
மற்றவர்க்குக் கொடுக்க விரும்பாத அவரை
விடுத்துத் தூரத்தே சென்று கொடுப்பவரிடத்தில்
விரும்பிக்கேட்டுப் பெறுவர்.
பாடல் 264
புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப – உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து.
கடல்சூழ் இவ்வுலகில் செல்வத்தின் புண்ணியம்
கற்ற அறிவுக்குரிய புண்ணியத்தினின்று வேறாம்
கல்வி அறிவுடையார் ஒன்றுமில்லாது வறுமையுற்றிருக்க
கல்வியறிவிலா பனவட்டையும் வழுதுணங்காயும்போலும்
கீழான அற்பர் பட்டும் பருத்தியும் உடுத்தி வாழ்கிறார்களே!
பாடல் 265
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்று ஆகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.
வேல் போலும் நீண்ட கண்ணுடையவளே!
வையகத்தில் அறிவும் பண்புமுடை நல்லவர்
வறியராய் இருக்கக் கல்லாமதிகெட்டோர் செல்வராய்
வாழுதலின் காரணம் எப்படி ஆராய்ந்தாலும் பழைய
வினைப்பயனன்றி வேறொன்றுமில்லை.
பாடல் 266
நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
நீறாய் நிலத்து விளியரோ – வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.
நறுமணமற்ற புற இதழைப்போல
நல்ல தாமரையில் இருக்கும்
பொன்னின் பதுமை போலும் திருமகளே! நீ
பொன்போலே நன்மக்களைத் துறந்து
கீழ்மக்களைச் சேருகின்றாயதனால்
இப்புவியில் சாம்பலாகி அழிந்துபோ!
பாடல் 267
நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கண் செல்வம் பரம்பப் – பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை.
வேல் போலும் கண்ணை உடையவளே!
வழங்கி உதவும் குணமுள்ளோரிடமுள்ள
வறுமை வெட்கமில்லாததோ? பிறருக்கு
வழங்காத அற்பரிடம் உள்ள செல்வம்
விட்டு நீங்காது ஒட்டிக்கொள்ளும் பிசினோ?
வறுமையும் செல்வமும் ஆகிய இவ்விரண்டும்
வழங்கும் நல்லவரிடமும் அற்பரிடமும்
விரும்பத்தகா முறையில் நிற்கும் தன்மைகண்டு
வியப்பு கொள்வாய் நீ.
பாடல் 268
வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் – வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய இருந்து.
பேய்த்தனமில்லா மானமுடையவர் வறுமையுற்றபோதும்
பெருந்தொலைவு நடந்து சென்று சிறுதொழில் செய்து
பெற்ற கலவைச் சோற்றை உண்டு காலங்கழிப்பர்
பேய்த்தனமுள்ள இழிகுணமுள்ளோர் வியர்வை
பெருகி வழிய வீட்டிற்குள் இருந்து உழைப்பின்றி
பொரிக்கறியுடன் கூடிய உணவைத் தாமே உண்பர்.
(பேய்த்தனமென்பது இழிதொழில் செய்தலும் பிறரை வருத்துதலையும் குறிக்கிறது.)
பாடல் 269
பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.
பொன் போலும் நிறமுடை செந்நெற் பயிர்
பொதிந்திருக்கும் கதிர்களுடன் வாடி நிற்க
மின்னல் விளங்கும் மேகம் அங்கே
பொழியாது கடலுள் பெய்துவிடுமதுபோல்
அறிவற்றார் மிக்க செல்வத்தைப் பெற்றால்
அவர் கொடையும் அத்தன்மைத்தாம்.
பாடல் 270
ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்; – தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
பகுத்தறிவில்லாதார் கற்றவராயினும் கல்லாதவரே
பகுத்தறிவுள்ளோர் கல்லாராயினும் கற்றவரே
பிறரிடம் தம் வறுமையிலும் இரவாதவர் செல்வந்தரே
பாவப்பட்ட வறியோர்க்கு உதவாத செல்வந்தரும் வறியவரே.