குறளின் கதிர்களாய்…(304)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(304)

பொருளானா மெல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

– திருக்குறள் -1002 (நன்றியில் செல்வம்)

புதுக் கவிதையில்...

செல்வம் ஒன்றிருந்தாலே
எல்லாம் கைகூடும்
என்று எண்ணியே
அதனை ஈட்டி,
எளியவர்க்கு
எதுவுமே ஈயாத
பற்றுள்ளம் செய்யும்
மயக்கத்தால்,
ஒருவனுக்கு
எதிலுமே நிறைவில்லாத
பேய்ப்பிறப்புதான் உண்டாம்…!

குறும்பாவில்...

எதையும் செய்யலாமென்றே பொருளீட்டி
அதையெவர்க்கும் ஈயாத பற்றுள்ள மயக்கம்,
ஒருவனுக்கு நிறைவிலா பேய்ப்பிறப்பே தரும்…!

மரபுக் கவிதையில்...

செல்வம் ஒன்றே போதுமதால்
     செய்து விடலாம் எதையுமென
எல்லா வகையிலும் பொருளீட்டி,
   எவர்க்கு மதனை ஈயாத
பொல்லாக் குணமதைக் கொண்டேதான்
    பற்றுடன் மயக்க முளவொருன்,
நில்லா நிறைவுடைப் பேய்ப்பிறப்பை
  நிச்சய மாகப் பெறுவானே…!

லிமரைக்கூ..

செல்வம் ஒன்றே சிறப்பு
என்றே சேர்த்ததை ஈயாதவனுக்கு வருமே
நிறைவிலாப் பேயாய்ப் பிறப்பு…!

கிராமிய பாணியில்...

செல்வஞ்சேரு செல்வஞ்சேரு
நல்லமொறயில செல்வஞ்சேரு,
அத
நல்லவழியில செலவுபண்ணு..

காசிருந்தா எதயுஞ் செய்யலாமுண்ணு
கண்டபடி சம்பாதிச்சி அத
யாருக்கும் கொடுத்துதவாத
கொணமுள்ள ஒருவனுக்கு
எதிலயுமே நெறவில்லாத
பொல்லாத
பேய்ப்பொறப்புத்தான் கெடைக்கும்..

அதால
செல்வஞ்சேரு செல்வஞ்சேரு
நல்லமொறயில செல்வஞ்சேரு,
அத
நல்லவழியில செலவுபண்ணு…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.