நாலடியார் நயம் – 30

நாங்குநேரி வாசஸ்ரீ
30. மானம்
பாடல் 291
திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
மான முடையார் மனம்.
செல்வச் செருக்கினால் நற்குணமற்றவர்
செய்யும் அவமதிப்பைக் கண்டபோது
மானமுடையார் மனத்தில் காட்டுத் தீ
மிகுந்து பரவுவதுபோல் அனல் சொலிக்கும்.
பாடல் 292
என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; – தம்பாடு
உரையாமை முன் னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
தம் மானத்தைக் காப்பவர் பசியால்
தாக்குண்டு எலும்புக்கூடாய் உடல்வற்றிய
தன்மையேற்படினும் தம் வறுமையைத்
தகுதியில்லார் பின்சென்று கூறுவரோ?
தான் சொல்லாதே குறிப்பாலுணரும்
தகுதியுடை அறிவாளியிடம் சொல்லாதிருப்பாரோ?
பாடல் 293
யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் – நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு.
வறுமையிருந்தாலும் நாமாக இருந்தால்
வீட்டினுள் அழைத்து செல்வந்தருக்கு
நம் இல்லாளை அறிமுகப்படுத்துவோம்
நல்ல பொருள் படைத்த செல்வந்தரோ
நாம் கண்டாலே மனைவியின் கற்புகெடுமென
நினைப்பவர்போல் நாணி வாயிலின் புறத்தே
வைத்துச் சோறிடுவர் அதனால் செல்வந்தருடன்
வைக்கும் தொடர்பை மறந்திடுக.
பாடல் 294
இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தால்; – செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.
நன்றாகக் கஸ்தூரிமணம் கமழும் கூந்தலையுடையவளே!
இப்பிறப்பில் நன்மை உண்டாக்குவதோடல்லாது
இனிவரும் மறுமையிலும் நன்மை விளைவிக்கும்
மானமுடையாரின் மதிப்பு அவர்தம் நல்வழிதவறா
மாண்பினால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக!
பாடல் 295
பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; – சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.
பாவமும் மற்ற பழியும் தோன்றும் செயலை
பண்பட்ட சான்றோர் தாம் இறக்கநேரிடினும்
புரியார் ஏனெனில் சாவுத்துன்பம் ஒருநாளில்
அதுவும் ஒருகணப்பொழுது மட்டும்
அனுபவிக்க்கக் கூடியது அத்துன்பம்
அப்பாவமும் பழியும்போல் உயிர் உள்ளளவும்
ஆறாத்துயர் தந்து நிலைத்துநில்லாது.
பாடல் 296
மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.
மிக்க வளமான இப்பெரு உலகில் வாழ்பவர்
மற்றவரைவிட மிகுந்த செல்வம் கொண்டவராயினும்
வறியோர்க்கு பொருள் கொடுத்து உதவாராயின் அவரும்
வறியவரே தம் வறுமைநிலையிலும் செல்வரிடம் பொருள்
வேண்டி இரவாதார் பெருமுத்தரையர் போலும் செல்வந்தரே.
பாடல் 297
கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் – புடை பரந்த
விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.
வில் போலும் வளைந்த புருவத்தின் கீழ்
வேல் போல் உலாவிவரும் நீள் கண்ணையுடையவளே!
வாட்டும் பசிக்கு அஞ்சுவர் கீழ் மக்களெல்லாம்
வருத்தும் துன்பத்துக்கு அஞ்சுவர் இடைப்பட்டோர்
வரும் பழிக்குஅஞ்சுவர் மேன்மக்கள்.
பாடல் 298
நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
இவர் நல்லவர் அருளுடையவர்
இப்போது வறுமையுற்றார் எனக்கூறி இகழ்ந்து
செல்வர் அற்பப் பார்வை பார்க்கும்போது பெருஞ்
சான்றோர் மனம் கொல்லன் உலைக்களத்தில்
துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்புபோல்
துன்பப்பட்டு உள்ளே கொதிக்கும்.
பாடல் 299
நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; – எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது நாண்.
விரும்பி வந்தவர்க்குக்கொடாமை நாணம் அன்று
வேண்டாத தீயவை செய்ய அஞ்சி வெட்கப்படுதலும்
வெட்கமன்று நம்மை எளியராய்க் கருதி புத்திகெட்டவர்
செய்த அவமதிப்பைப் பிறருக்குச் சொல்லாதிருப்பதே
சிறந்த நாணம் ஆகும்.
பாடல் 300
கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.
காட்டிலுள்ள புலி தான் கொன்ற
காட்டுப்பசு இடப்பக்கம் வீழுமாயின்
கொள்ளாது பட்டினியால் இறக்கும்
கையில் இடமகன்ற விண்ணுலகம்
கிட்டுவதாயினும் மானம்கெட வருமாயின்
கொள்ளார் பெரியோர்.