Category: தொடர்கள்

  • சேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)

    சேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    திருவாரூர்த் திருக்கோயில் முன் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் கூடி இருந்தனர். அவர்களைக் கண்ட சுந்தரர், ‘’இச்சிவனடியார்களுடன் சேரும் திருவருள் எப்போது கிட்டுமோ என்றெண்ணி திருக்கோயில் வாயிலை அடைந்தார். அவர் முன்னே எதிரே காட்சியளித்த சிவபிரானின்  திருவடிகளைக் கண்டமையால் பெற்ற ஞானத்தால், திருவடிப் புகழ்ச்சியை நான்கு திருப்பாடல்களில் பாடி மகிழ்ந்தார். அப்போது சிவபிரான் அடியார்களின் தன்மையைச் சுந்தரருக்கு  உணர்த்தியருளினார்.

    அடியார்களின் எழுவகைச் சிறப்புக்களை ஆண்டவனே உணர்த்திய அழகை இத்திருப்பாடல் வழங்குகிறது. இப்பாடலில்,

    1. “பெருமையினாலே தமக்குத்  தாமே ஒப்பாவார்கள்;
    2. பேணுதல் தன்மையினாலே எம்மைத் தமக்கே உரிமையாகப் பெற்றார்கள்;
    3. எம்மோடு  ஒன்றித்து நின்ற நிலையினாலே உலகத்தை வெல்வார்;
    4. அதனால் மேலே  வரக்கடவன  வாகிய ஊனங்கள் ஒன்றுமில்லாதவர்;
    5. பிறர் எவரும் நிற்றற்கு   அரிய நிலையிலே நின்றவர்கள்;
    6. அன்பு நிறைதலினாலே இன்பத்தையே நிறையத் துய்ப்பவர்கள்;
    7. இம்மை மறுமைகளைக் கடந்த நிலை பெற்றவர்கள்

    இத்தகையினராகிய இந்த அடியவர்களை நீ சேர்வாயாக“ என்று,இறைவன்  கூறியருளுகின்றார்.

    விளக்கம்: பிறர் யாரும் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தவர்கள் என்பதே இவர்களின் பெருமையாகும். இதனைத் திருவள்ளுவர், ‘’செயற்கரிய செய்வார் பெரியர்‘’ என்று போற்றுகின்றார். இப்பெருமை எய்தற்கு அரியது. இதனை எய்திய அடியார்களைப் பற்றித் திருக்களிற்றுப் படியார் என்ற சாத்திர நூல்,

    ‘’செய்தற்   கரிய  செயல்பலவும்   செய்துசிலர்
    எய்தற்    கரியதனை   எய்தினர்கள்’’

    என்று கூறுகின்றது. பசித்து வருந்திய எல்லா உயிர்களுக்கும், தாம் வருந்தாமல் பெரிய அளவில் உணவு வழங்கி உதவுதலே பெருமையாகும்.

    பஞ்சம் வந்து உலகமெல்லாம் வருந்துங் காலத்தும் தாம் அஞ்சாது பெருஞ் சோற்று மலை ஈந்து உயிர்களைக் காத்ததும், “பிறந்தார் பெறும்பயன் இரண்டில் அடியார்க் கமுதுசெய்வித்தல் ஒன்றாமாயின் நீவா“ எனச் சூளுரைத்து ஒரு பாட்டுப்பாடிய அளவில்,  எலும்பு உயிரும் வடிவமும் பெற்றெழச் செய்ததும், இன்னோரன்ன பிறவும் இவர்களது பெருமையாம். இவற்றை முன்னர்த் திருக்கூட்டச்சிறப்பிலே,

    “பூதமைந்தும்  நிலையில்   கலங்கினும்,
    மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்“

    என்பது முதலாக வடித்தெடுத்து வகுத்தருளினமை பின்னர் ஒவ்வொரு  வரலாற்றிலும்  காண்க.

    தம்மை ஒப்பார் – தம்மையே தமக்கு ஒப்பாகப் பெற்றார். பிறர் இவருக்கு  இணையாகார். “தனக்கு உவமை யில்லாதான்“ என்பது எமது தன்மை; “எம்மை அடைந்த அடியார்களாகிய இவர்களுக்கும் அதுவே தன்மை“ என்று இறைவன் அறிவித்தவடியாம். இப்பெருமைகளை இப்புராணத்திலே ஒவ்வொரு  நாயன்மார் சரிதத்திலும் தனித்தனி விரிவாகக் கண்டுணர்ந்துகொள்க.

    பேணலால் எம்மைப் பெற்றார் – பேணுதல் – குழவியைத் தாய் பேணுமாறு போற்றுதல்; என்றும் இடைவிடாது சிந்தித்து வாழ்தல். “வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண்“ என்ற காரைக்காலம்மையார் புராணம் காண்க. பசிக்குமே  என்றெண்ணி இறைவனுக்கே உணவூட்டியவர் கண்ணப்பர். எம்மைப் பெறுதலாவது – எம்மைத் தமக்கே உரிய உரிமைப் பொருளாகப் பெறுதல். நாம் அவர்களது அன்புக்குள்ளாவோம்; எம்மை அடைய வேண்டுபவர்கள் அவர்களை அடைந்து, அவர்கள் வழிப்படுத்த எம்மை வழிபட்டு, அவர்கள்தர எம்மை அடையக்கடவர் என்றபடி. “படமாடக் கோயிற் பரமர் – நடமாடக் கோயில் நம்பர்“ என்ற திருமூலர் திருமந்திரங்காண்க. அடியார்களைப் பேணலால் அடியடைந்த சிறுத்தொண்டர், அப்பூதியார், குலச்சிறையார் முதலிய நாயன்மார் சரிதங்கள் காண்க. பேணுதல் – உவப்பன செய்து வழிபடுதல். ‘பெரியாரைப் பேணி ‘ என்ற திருக்குறள்  உரையில் காண்க!

    ஒருமையால் உலகை வெல்வார் – ஒருமை உணர்ச்சியினால் இறைவனோடு ஒற்றித்திருத்தல். “ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல்கணத்தார்“ என்பது தேவாரம். இதனையே “மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம்“ என்றார் தாயுமானார். இறைவனோடு ஒன்றிய இடத்து உலகம் அவ்வுயிரைப் பற்றாது அருளுள் அடங்கி நிற்கும்; ஆதலின், உலகைவெல்வார் என்றார். உலக பாசக்கோடுகளின் பற்றிலிருந்து விடுபட இது ஒன்றே வழி என்று ஒருமையால் என இரட்டுற மொழிந்துள்ளார்.

    ஊனம் மேல் ஒன்றுமில்லார் – ஊனம் – குறித்ததொன் றாகமாட்டாக் குறைவு. யாதுங்குறைவிலார் என்றதும் அது. ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது திருக்குறள் ஆணை. உடம்பே ஊனம் என்றெண்ணும்போது, ஏனை ஊனங்கள் உடம்பில்  ஒடுங்குவன. உடம்பெடுத்தலே – பிறவியே – ஊனங்கட்கெல்லாம் காரணமும் தாயகமுமாவது. உயிருக்கு வரும் ஊனமாவது உடம்பெடுக்கும் பிறவி. இவர்கள் பேணலால் எம்மைப் பெற்றாராதலின் பிறவி வாராமற் செய்துகொண்டார். ஆதலின் மேல் ஊனம் ஒன்றுமில்லாராயினர்.

    அருமையாம் நிலை – பிறரால் அடைதற்கரிய நிலை.

    அன்பினால் இன்பம் ஆழ்வார் – அன்பு காரணமாக இன்பம் உளதாம். “இன்பமே யென்னுடை யன்பே“,  “இறவாத வின்ப அன்பு வேண்டி“ முதலிய திருவாக்குக்களால்  புலப்படும்.

    இருமையும் கடந்து நின்றார் – இருமை – இம்மை மறுமை என்பன. அவை இம்மை என்னும் இவ்வுலகப்பிறப்பு நிலையும், மறுமை என்னும் சுவர்க்க நரகப்பிறப்பு நிலையும் ஆம். இறைவனைப் பற்றிநின்ற நிலையினாலே இவ்வுலக நிலையையும், சுவர்க்காதி போகங்களைப் பொருளல்ல வென்றொதுக்கியதால் மறுமையும் கடந்தவர். “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு“, “போகம் வேண்டிலேன்பு ரந்த ராதி யின்பமும்“ “சுவர்க்கங்கள் பொருளளவே“, “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்  பேர்வேண்டேன்“. என்ற வாக்குகள்  இதனை உணர்த்தும்.

    “நின், திருவடி பிடித்து வெருவரல் விட்டு
    மக்களும்  மனைவியும்  ஒக்கலுந் திருவும்
    பொருளென நினையா துஉ ன்னரு ளினைநினைந்து
    இந்திரச் செல்வமும்  எட்டுச் சித்தியும்
    வந்துழி வந்துழி மறுத்தனர்  ஒதுக்கிச்
    சின்னச் சீரை துன்னல்  கோவணம்
    அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
    சிதவ லோடு ஒன்று  உதவுழி எடுத்தாங்கு
    இடுவோர்  உளரெனின்  நிலையில் நின் றயின்று
    படுதரைப் பாயலில்  பள்ளி மேவி ஓவாத்
    தகவெனும்  அரிவையைத் தழீஇ மகவெனப்
    பல்லுயிர்  அனைத்தையும்  ஒக்கப் பார்க்கும் நின்
    தெய்வக் கடவுள்   தொண்டர்“

    என்று திருவிடை மருதூர்  மும்மணிக் கோவை  கூறுகிறது.bஇத்தகைய திருவாக்குகளிற் கண்ட இலக்கணங்களும், அவற்றிற் கிலக்கியமாய் விளங்கும் சிறுத்தொண்டர், இயற்பகையார் முதலிய நாயன்மார் சரிதங்களும் காண்க.

    இருமை – “இருமை வகை தெரிந்து“ என்ற குறளிற் பரிமேலழகர் இருமை   யென்பதற்குப் பிறப்பு வீடென்று உரைகண்டார். வீட்டைக் கடந்த நிலை வேறின்மையாலும், இங்கு இருமையுங்கடந்து என்றமையாலும் ஈண்டு மேலே கண்டவாறுரைக்கப் பெற்றது. இருமை – எண் குறித்ததாகக் கொண்டு பிறப்பும் இறப்புங் கடந்த  பேராவியற்கை பெற்றார்  என்பதை அறிக.

    “பெத்தத்தும்   தன்பணி யில்லை பிறத்தலான்
    முத்தத்தும்  தன்பணி யில்லை முறைமையால்
    அத்தற்கு  இரண்டும்  அருளால்  அளித்தலால்
    பத்திப் பட்டோர்க்குப் பணியொன்று மில்லையே“

    என்ற திருமூலர் திருமந்திரக் கருத்தினைக்கொண்டு இவர் நிலையினை  இவ்வாறு உரைத்தலும் ஒருவகையாற் பொருந்துவதாம்.

    “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“ என்றதும் காண்க. இவ்வாறன்றி இதற்கு இருவினைகளையும், இன்ப துன்பங்களையும், பிறப்பிறப்புக் களையும், ஒழித்தவர் என்று கூருவாருமுண்டு.

    இவரை – அண்மைச் சுட்டு. இதோ இங்கு முன்னர்த் தேவாசிரியனிற் கூடியிருக்கும் இவர் எனக் காட்டிக் குறித்தபடியாம்.

    அடைதல் – அடிமையாகச் சேர்ந்து அவர்களோடணைதல். ஆகவே அடியார்களை  ஆண்டவனோடு ஒருங்கு வைத்துப் போற்றும்  சேக்கிழாரின் வாக்குச் சிறப்பை எண்ணி எண்ணி, மகிழ்கிறோம்! இனி மீண்டும் பாடலைப்  படித்துப் பயில்வோம் .

    பெருமையால்   தம்மை  ஒப்பார் ; பேணலால்  எம்மைப்  பெற்றார்;
    ஒருமையால்   உலகை  வெல்வார்;   ஊனம்  மேல் ஒன்றும்  இல்லார்;
    அருமை ஆம்  நிலையில்  நின்றார்; அன்பினால்   இன்பம் ஆர்வார்;
    சிறுமையும்   கடந்து  நின்றார் , இவரை நீ  அடைவாய்!’’ என்றார்!

    இப்பாடலால்,  இறைவன்   நமக்கும்  அடியாரை அடையும் தேவையை  வலியுறுத்துகிறார்!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 100

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 100

    நாங்குநேரி வாசஸ்ரீ

    100. பண்புடைமை

    குறள் 991

    எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

    யாராயிருந்தாலும் அவுக கூட எளிமையாப் பழகுனோம்னா அதுவே பண்புடைமைங்குத நல்ல ஒழுக்குத பெறுததுக்கான சிறந்த வழியா அமையும்.

    குறள் 992

    அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

    நேசமானவரா இருக்கது ஒசந்த குடியில பொறந்த தன்ம அமைஞ்சிருக்கது இந்த ரெண்டும் பண்புடையவரா வாழுத நல்ல வழியாவும்.

    குறள் 993

    உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
    பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

    பாக்குத உடல் உறுப்புக்கள் ஒண்ணுபோல இருக்கதனால ஒத்துப்போகுதது ஆவாது. நல்ல பண்பால மத்தவுகளோட ஒத்துப்போவுததே ஒத்துப்போவுதது ஆவும்.

    குறள் 994

    நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புள ராட்டும் உலகு

    நியாயத்துக்கு கேடு இல்லாம நல்ல காரியங்களச் செய்து மத்தவுகளுக்கு ஒபயோகமா வாழுத பெருமக்களோட நல்ல கொணத்த ஒலகம் பாராட்டும்.

    குறள் 995

    நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு

    விளையாட்டுக்குக்கூட ஒருத்தங்கள எளக்காரமா பேசினோம்னா கேடு உண்டாவும். புத்தியுள்ள பெருமக்க பகையாளிக்கிட்ட கூட கொணங்கெட்டு நடந்துக்கிட மாட்டாக.

    குறள் 996

    பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்

    கொணமுள்ளவுக இருக்கதாலதான் ஒலகம் நெலைச்சி இருக்கு. அவுக இல்லாமப் போனாகன்னா மனுச வாழ்க்க மண்ணுக்குள்ள பொதைஞ்சு அழிஞ்சு போவும்.

    குறள் 997

    அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண் பில்லா தவர்

    அரம் கணக்கா கூர்மையான புத்தியுள்ளவுகளா இருந்தாலும் மனுசத்தன்ம இல்லாதவுக ஓரரிவு இருக்க மரத்துக்குச் சமம் தான். ‘

    குறள் 998

    நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
    பண்பாற்றார் ஆதல் கடை

    சேக்காளியா இருக்க ஏலாம தீம செய்யுத கொணம் இருக்கவங்ககிட்ட கூட நல்லவுகளா நடந்துக்கிடாம இருக்கது தாழ்ச்சிதான்.

    குறள் 999

    நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
    பகலும்பாற் பட்டன் றிருள்

    மத்தவுகளோட கலந்து பழகி சந்தோசமா இருக்க ஏலாதவுகளுக்கு வெளிச்சமான பகலும் கருக்கல் கணக்கா இருட்டாத்தான் தோணும்.

    குறள் 1000

    பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று

    கொணங்கெட்டவங்கிட்ட இருக்க சொத்து சுத்தமில்லாத ஏனத்துல ஊத்திவச்ச பால் திரிஞ்சிபோவுதது கணக்கா அழிஞ்சு போவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

    நாங்குநேரி வாசஸ்ரீ

    99. சான்றாண்மை

    குறள் 981

    கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

    நாம செய்ய வேண்டிய கடம இதுனு உணந்துகிட்டு அத நல்ல மொறையில செய்ய மொனையுத எல்லா முயற்சியையும் நல்ல கடமனு சொல்லுதாங்க.

    குறள் 982

    குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத் துள்ளதூஉ மன்று

    நல்ல கொணம் ஒண்ணுதான் படிச்ச பெருமக்களுக்கு அழகு. மத்த எதுவும் அழகோட சேத்தியில்ல.

    குறள் 983

    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
    டைந்துசால் பூன்றிய தூண்

    நேசமா இருக்கது, பொல்லாப்புக்கு பயப்படுதது, ஒழுக்கமா இருக்கது, இரக்கமா இருக்கது,  உண்மையே பேசுதது இந்த அஞ்சும் சான்றாண்மையத் தாங்குத தூண்கள் ஆவும்.

    குறள் 984

    கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு

    நோன்புங்கது மத்த உசிரக் கொல்லாம இருக்கத அடிப்படையாக் கொண்டது. பொறத்தியாரப்பத்தி எப்பமும் கொற பேசாம இருக்குத கொணத்தக் குறிக்குதது  சால்பு.

    குறள் 985

    ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை

    தெறமசாலியோட தெறமங்கது பணிஞ்சு நடக்குத கொணம். அதுவே பகையாளியோட பகைய மாத்துத சாதனமா பெருமக்களுக்கு அமைஞ்சுக்கிடும்.

    குறள் 986

    சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்

    ஒருத்தரோட மேன்மைக்கு உரைகல் எதுன்னா தனக்கு சமமில்லாத சின்னவுககிட்ட கூட தோல்விய ஒத்துக்கிடதுதான்.

    குறள் 987

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு

    தனக்கு தீம செஞ்சவுகளுக்கும் நன்ம செய்யாம விட்டுப்போட்டோம்னா சான்றாண்மைங்குத நல்ல கொணம் இருந்தும் என்ன பிரயோசனம்?

    குறள் 988

    இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
    திண்மையுண் டாகப் பெறின்

    சால்பு (நிறைவு)ங்குத மனவலிம ஒருத்தங்கிட்ட இருந்திச்சுன்னா பொருளில்லாமப் போகுத ஏழ்ம அவனுக்கு தாழ்ச்சி ஆவாது.

    குறள் 989

    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
    காழி யெனப்படு வார்

    தனக்குரிய கடமையக் கண்ணியமாச் செய்யுத பெருமக்க எல்லாக் கடலும் தடம் புரண்டு போவுத ஊழிக்காலத்துல கூட தன் நெல மாறாம இருப்பாக.

    குறள் 990

    சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
    தாங்காது மன்னோ பொறை

    பெருமக்களோட நல்ல கொணம் கொறையத் தொடங்கிச்சின்னா இந்தப் பெரிய ஒலகத்தால  பாரத்தத் தாங்க முடியாமப் போவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

    நாங்குநேரி வாசஸ்ரீ

    98. பெருமை

    குறள் 971

    ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
    கஃதிறந்து வாழ்தும் எனல்

    ஒருத்தனோட வாழ்க்கைக்கு ஒளி தருதது மன உற்சாகம். அவனுக்கு தாழ்ச்சி உற்சாகம் இல்லாம வாழுவேன் னு நெனைக்கதுதான்.

    குறள் 972

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்

    எல்லா மக்களும் பொறப்பால சமம் தான். அவுக செய்யுத தொழிலில் காட்டுத தெறமியில இருக்க ஒசத்தி தாழ்ச்சியால மட்டுந்தான் வேறுபடுதாங்க.

    குறள் 973

    மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்

    கொணங்கெட்டவுக ஒசந்த பதவியில இருந்தாலும் நல்லவுகளா மதியப்பட மாட்டாக. ஆக்கங்கெட்ட காரியத்த செய்யாத நல்லவுக சின்ன பதவியில இருந்தாலும் ஒசந்தவுக தான்.

    குறள் 974

    ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

    ஒருத்தன் தன்னயத்தானே காத்துக்கிட்டு வாழ்ந்தாம்னா கற்போட வாழுத பத்தினிக்குரிய அத்தன பெருமயும் அவனுக்கும் கெடைக்கும்.

    குறள் 975

    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை யுடைய செயல்

    எந்த நெருக்கடியிலயும் மத்தவுகளால செய்ய ஏலாத காரியத்த அதுக்குண்டான வழிமொறையில செஞ்சு முடிக்குத தெறம இருக்கவுக பெருமயானவங்க.

    குறள் 976

    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக்கொள் வேமென்னும் நோக்கு

    பெருமக்களப் போற்றி ஏத்துக்கிடணும் ங்குத நெனப்பு அவுகளோட சிறப்ப புரிஞ்சிக்கிடாத சின்னவுக மனசுக்குள்ளார இருக்காது.

    குறள் 977

    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
    சீரல் லவர்கண் படின்

    தாழ்ச்சியான கொணம் இருக்கவன்கிட்ட பணம், படிப்பு, பதவி ங்குத சிறப்புநிலை சேந்துச்சின்னா அவன் அகராதி புடிச்சி வரம்புகெட்டு அலையுதது நிச்சயம்.

    குறள் 978

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து

    கொணமுள்ள பெரிய மனுசங்க எல்லார்கிட்டயும் பணிஞ்சு நடப்பாக. கொணங்கெட்டவுக மண்டக்கனம் புடிச்சி தன் பெருமய தம்பட்டம் அடிச்சிட்டுத் திரிவாக.

    குறள் 979

    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்

    பெருமைங்கது மண்டக்கனம் இல்லாம அடக்கமா வாழுத கொணம். சிறுமைங்கது மண்டக்கனம் புடிச்சி அதோட எல்லைக்கே போயி திமிரா திரியுதது.

    குறள் 980

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்

    பொறத்தியாரப்பத்தி பாடு பேசாம கொறைய மறைக்கது பெரும. அவுகளப் பத்தி எப்பமும் கொற சொல்லி பொறளி பேசுதது சிறும.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 62 (வேதம்)

    சேக்கிழார் பா நயம் – 62 (வேதம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    சுந்தரர் பெரிதும் விரும்பிக் கண்ட ஈசனின் திருப்பாதங்கள் மேலும் உயர்ந்த சிறப்புக்களைப் பெற்றுள்ளன. அப்பாதங்கள் வேதங்களாகிய யானைமேல் எழுந்தருளுவன. அவை அறிவின்றி  யான் செய்த பிழைகளையும் பொறுத்து என்னை ஆட்கொண்டன, இன்னும் யான் செய்தற்குரிய பிழைகளையும் இல்லாமல் செய்து என்னை வாழ வைப்பன, என்று கூறும் சுந்தரர் இவை உயிர்த்தொகையின்  தலைவராகிய ஈசனின் தாமரைப் பாதங்கள்  என்கிறார். இதனை, ‘’பூதநாத, நின் புண்டரீகப் பதம்‘’ என்ற ஈற்றடி குறிக்கிறது. அடியும் அடியவர்களும் இணைந்து நிற்றலின் அன்பால் நினைவார்களது உள்ளக்கமலத்தே விரைந்து சென்று நிற்கும் திருவடி என்க. அடியவர்களுக்கு ஆளாந்தன்மையை வேண்டியே திருவடியைத் துதித்தாராதலின் அவர்களது உள்ளக்கமலத்தே விரைந்து சேரும் தன்மையனவாகவே அவற்றைத் துதித்தார் என்பது குறிப்பாம். “அன்பர் சிந்தை யலர்ந்த செந்தாமரை“ என்று தொடங்கிய நம்பிகள் அதனையே மீண்டும் கூறி  முடித்தார் .  தாமரைபோன்ற பாதம் என்பதும் ஆம்.

     “பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன“,

     “தூக்கமலத் தன்ன  வடிவின“ என்பன  அப்பர் பெருமான் திருவாக்குக்கள்.

    ‘’வேதவாரணம் மேற்கொண்டிருந்தன’’ என்ற என்ற முதலடி  வேத  வாரணம் என்றும், வேத ஆரணம் என்று பிரிந்து இருவகைப் பொருள் தந்தது. வேதங்கள் பெருமையும் விளக்கமும் கொண்டமையால்  யானை எனப்பட்டன. பொதுவாக  வேதம் ஆரணம்  எனப்படும். வேதத்தின் ஞானபாகமாகிய உபநிடதம் ஆரணமாகும்.

    “ஆரணங்களே யல்ல மறுகிடை

    வாரணங்களும் மாறி முழங்குமால்“

    எனச் சேக்கிழாரே முன்னர்க் கூறுதலும், வேதங்கள் நிஷாதசுரத்திற் பயிலப்பெறுதலும் இங்கு வைத்துணரத் தக்கன. நிஷாதம் – யானையின் பிளிற்றோசை. “மலைக்கொளானை“ என்ற திருக்கடவூர்த் திருக்குறுந்தொகையிலே அப்பர் பெருமான் இறைவனைக் “கலைக்கை யானை கண்டீர்“ “கள்ளவானை கண்டீர்“ முதலாகப் பதிக முழுதும் யானையாகவே காட்டியதும், “வேதமாகிய வெஞ்சுடரானையார்“ என்றருளியதும் இங்கே காணத்தக்கன.

    மேலும் ஆரணம், குதிரை என்ற பொருளையும் தரும். வாரணம் – குதிரை எனக்கொண்டு வேதமாகிய குதிரையின்மேல் என்றுங் கூறுப. இறைவன் மாணிக்கவாசகர் பொருட்டு வேதக் குதிரையின்மேற் குதிரைச் சேவகனாகி வந்தான் என்ற சரிதமும், “பண்ணியல், வைதிகப் புரவியும்“  என்ற  கோயில் நான்மணி  மாலைத்   திருவாக்கும்   இங்கு கருதத்   தக்கன!

    ‘’பேதையேன் செய்பிழை பொறுத்து ஆண்டன‘’ என்ற அடியில் செய்பிழை என்ற வினைத்தொகை  செய்த  பழைய  பிழைகளையும், இனிமேல்  செய்யத்தக்க பிழைகளையும் என்ற பொருள்பட்டுப், பிற்காலத்தில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்து அடியார்கள், பரவையார், சங்கிலியார் ஆகியோருடன் செய்யும் பிழைகளையும் பொறுத்து ஆட்கொண்ட திறத்தையும்  கூறியதாகக்  கொள்ளலாம்.

    முன் செய்த பிழை பொறுத் தாண்டது போலவே, இனி வருங்காலத்திற் செய்யக் கடவனவாகிய பிழைகளையும், அவற்றால்வரக் கடவனவாகிய ஏதங்களையும் தீர்க்க இப்போதே உடன்பட்டன என்க. “ஏதந்தீர் நெறியைப் பெற்றேன்“  என்பது சேக்கிழார்  வாக்கு.  முன்னே  திருக்கயிலையில் ஏதந்தீர்க்க இசைந்தன; ஆதலின் பேதையேன்செய் பிழைபொறுத் தாண்டன என்று கூட்டியுரைத்தலுமாம். என் பிழையைப் பொறுத்தாண்டதேயன்றி எல்லா உயிர்க்கும் ஏதம் தீர்க்க இசைந்தன  எனவும் பொருள்படும்.

    “ஆறாத வானந்தத் தடியார் செய்த  அனாசாரம் பொறுத்தருளி யவர்மே லென்றுஞ் சீறாத பெருமானை“  என்பது அப்பர்  திருத்தாண்டகம்..

    “யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி“ என்ற நம்பிகள் தேவாரமும் இங்குச் சிந்திக்கத்தக்கது. இப்பாட்டில் ‘’பூத நாத!’’ என்ற தொடர்  பூதங்களின் தலைவனே  எனப் பொருள்படும்.

    பூதபதயேநம: என்பது சிவாஷ்டோத்திரம். பூதங்களாற் சூழப்பட்டு நடம்புரிதல் சிவபெருமானுக்கேயுரியது. இப்பூதங்களின் இயல்பும் வலிமையும் முன்னர்க் கண்டோம்.

    “பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்“  என முன்னர் இத்திருவாரூர்ப் பெருமானைக் குறித்ததும் எண்ணத்தக்கது..

    “ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்அங்க ணன்றனை“ முதலிய எண்ணிறந்த திருவாக்குக்களும் காண்க. பூதங்கள் தாருகவனத்து இருடிகள் மாறாகச் செய்த ஆபிசார யாகத்திற் றோன்றின என்றும், அவற்றைச் தம்மைச் சேவித்துச் சூழ்ந்து நிற்க இறைவன் ஆணையிட்டான் என்றும் புராணங்கள் கூறும்.

    இந்நான்கு திருப்பாட்டுக்களிலும் நின் புண்டரீகப்பதம் என்ற ஒரே எழுவாய் எதிர் நின்றன என்பது முதல் இசைந்தன என்பதுவரைப் பதினொரு தனி வினைமுற்றுக்களைக் கொண்டு முடிந்தது காண்க. பஞ்சப்பிரம சடங்கமாகிய பதினொரு மந்திரங்களாலே இறைவனைக் கொண்டு துதிக்கும் சிவாகம மரபினை இது குறித்தது. இவையே பின்னர்த் திருத்தொண்டத்தொகையின் பதினொரு பாசுரங்களாகப் போந்தன என்பர் ஆலால சுந்தரம்பிள்ளை.

    பதம் எதிர் நின்றன – ஆடின – என்னாது, இறுதியில் நிற்கவேண்டிய பயனிலைகள் முன்னும், முன்னிற்கவேண்டிய எழுவாய் இறுதியிலும் வந்தன. மலையின் மேலே சகடங்களை ஏற்றும் இயந்திரம் பின்னின்று தள்ளுதல்போன்ற மரபுபற்றிப் போலும். “எழுவா யிறுவா யிலாதன“ என்று அப்பர் பெருமான் இத்திருவடிகளின் இலக்கணம் வகுத்துள்ளார்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

    நாங்குநேரி வாசஸ்ரீ

    97. மானம்

    குறள் 961

    இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்

    கட்டாயமா செஞ்சு முடிக்க வேண்டிய வேலையின்னாலும் அதால தன் குடும்பப் பெரும கொறையும்னு நெனச்சா செய்யக் கூடாது.

    குறள் 962

    சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்

    புகழோட சேந்த வீர வாழ்க்க வேணும்னு நெனக்கவுக புகழச் சேக்கதுக்காவ மானங்கெட்ட காரியத்த செய்ய மாட்டாக.

    குறள் 963

    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு

    பணக்காரனா ஒசந்த நெலயில இருக்குதப்போ அடக்கம் வேணும். ஏழையா இருக்குதப்போ அடிமயா அடங்கிப்போவாம மானத்தோட இருக்கணும்.

    குறள் 964

    தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை

    மக்களோட மனசுல ஒசந்த நெலயில இருந்த ஒருத்தர் மானங்கெட்டு தாழ்ந்துட்டாருன்னா தலையிலேந்து உதிந்து கெடக்க தலமயிருக்கு சமமா நெனக்கப்படுவார்.

    குறள் 965

    குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்

    மலை போல ஒசந்து கம்பீரமா இருக்கவுகளும் குந்துமணி அளவு தாழ்ச்சியான காரியத்த செஞ்சாகன்னா தாழ்ந்து போயிடுவாக.

    குறள் 966

    புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
    றிகழ்வார்பின் சென்று நிலை

    மதிக்காம எளக்காரம் செய்யுதவன் பொறத்தால மானங்கெட்டு போவதால இப்பமும் புகழ் கெடைக்காது. மேலோகத்துலயும் சேர்க்காது. வேற என்னதான் தரும் அது?

    குறள் 967

    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று

    மதிக்காதவன் பொறத்தால போயி உசிரு வாழுதான்னு இருக்கதவிட செத்துப் போயிட்டாம்னு சொல்லப்படுதது எம்புட்டோ மேல்.

    குறள் 968

    மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து

    தன் குடும்ப மானங்கெட்டு சீரளியுதப்போ கூட சாவாம இந்த ஒடம்ப காத்து வாழுத வாழ்க்க சாவாமைக்கு மருந்து ஆவுமா?

    குறள் 969

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்

    ஒடம்புல இருக்க உரோமமெல்லாம் உதிந்துபோச்சுதுன்னா கவரிமான் உசிர உடுதது கணக்கா மானங்கெட்ட பொறவு உசிரு வாழ மாட்டாக மானமுள்ள பெரிய மனுசருங்க.

    குறள் 970

    இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழு தேத்தும் உலகு

    மானம் போவுத நேரம் உசிர உடுத மனுசங்களோட புகழ இந்த ஒலகம் எப்பமும் போற்றி நிக்கும்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 5

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 5

    தி. இரா. மீனா        

    8.  “எனக்கு இங்கொரு கணவன் அங்கொரு கணவன் என்றிருக்க
         முடியாது
         உலகவாழ்க்கைக்கு ஒருவன் ஆன்மீக வாழ்க்கைக்கு ஒருவன்
         என்றிருக்க முடியுமா?
         சென்னமல்லிகார்ச்சுனன் தவிர வேறுயாரும் என்கணவனாக
         முடியாது.
         மற்ற எல்லாக் கணவர்களும் மேகங்களின் பின்னால் தெரிகிற
         உருவம்  போன்றவர்கள்தான்”

    9. “மலையில் வீடுகட்டும்போது
        காட்டு விலங்குகளைப் பார்த்து பயப்படுதல் கூடாது
        கடற்கரையில் வீடு கட்டும்போது
        அச்சம் தரும் அலைகளைப் பார்த்து பயப்படக்கூடாது
        சந்தையருகே வீடுகட்டும்போது  சத்தம்கேட்டு பயப்படக்கூடாது
        சென்னமல்லிகார்ச்சுனா உலகத்தில் பிறந்தபிறகு
        புகழுக்காகவோ குறைகளுக்காவோ அமைதியை இழக்கக்கூடாது”

    10. “அறியாமை நிறைந்தவர்களோடு
          பழகுவது கற்களைத் தேய்த்து தீ உருவாக்குவது போன்றது
          அறிவு நிறைந்தவர்களோடு பழகுவது
          தயிர் கடைந்தபிறகு வெண்ணெய் எடுப்பதுபோன்றது
          ஓ சென்ன மல்லிகார்ச்சுனா உன்சரணர்களோடு பழகுவது
          ஒரு கற்பூரமலை தீப்பிடிப்பது போன்றது”

    11. “காய்ந்த மூங்கில் முளைவிடுமா?
          எரிந்தபானை மீண்டும் களிமண்ணாகுமா?
          தன் தண்டிலிருந்து விழுந்த கனி
          மீண்டும் முளைக்குமா
          உழைக்கும் மக்கள்
          தெரியாமல் எதையோ சொல்ல
          ஆழ்நிலை பக்தர்கள் பூமிக்குத் திரும்புவார்களா?
          சென்ன மல்லிகார்ச்சுனா”

    12. “நீ தண்ணீரில் பாலைப் போன்றவன்
          எது முன்னால்
          எது பின்னால்  .
          யார் எஜமானன் யாரடிமை
          எது பெரியது
          எது சிறியதென்று
          என்னால் சொல்ல முடியாது.
          சென்ன மல்லிகார்ச்சுனா
          ஓர் எறும்பு உன்மீது
          அன்புகாட்டி உன்னைப் புகழுமென்றால்
          அதற்கு ராட்சஷ பலம் வராதா?”

    13. “இறைவா நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும்
          நான் பாடுவதைக் கட்டுப்படுத்த முடியாது
          நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்
          உன்னைப் பார்ப்பதை விடமுடியாது
          நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
          உன்னை அணைப்பதைத் தடுக்கமுடியாது
          உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
          உன்னை வணங்குவதை விடமுடியாது
          சென்ன மல்லிகார்ச்சுனா
          உன்னால் நான் பேரானந்தத்திலிருக்கிறேன்.”

    14. “மரணத்திலிருந்து தப்பமுடியா விட்டால்
          திறமை மிகுதியால் என்ன பலன்?
          விரதமிருக்கலாம் தீய பழக்கங்களை விட்டுவிடலாம்
          மூச்சையடக்கலாம் பசியைக் கட்டுபடுத்தலாம்
          முழுவுலகமும் காவல்காரனாக இருந்தால்
          திருடன் எங்கே ஒளிவான் சென்ன மல்லிகார்ச்சுனா”

    15. “எருமைக்கு அதன்கவலை
          தோல் தொழிலாளிக்கு அவன்கவலை
          உலகமனிதர்களுக்கு அவர்கள் கவலை
          அவனுக்கு அவன் கவலை
          எனக்கு சென்ன மல்லிகார்ச்சுனன் விரும்புவானா என்ற கவலை”

    16. “அன்பு ஆழமாகவும் உண்மையாகவுமிருக்கும்போது
          நாம் சாதியையும் சமயத்தையும்  பார்ப்போமா
          மயங்கும்போது வெட்கம் வருமா
          சென்ன மல்லிகார்ச்சுனனிடம் மயங்கும்போது
          உலகவாழ்க்கை புரியுமா? ”

    17. “உள்ளிருக்கும் நஞ்சின் வேட்கையை விடாத வரையில்
          மகுடி இசைக்கு நாகம் படமெடுத்து ஆடியென்ன?
          மனதுள்ளிருக்கும் தீக்குணம் விடாத வரையில்
          பாடியென்ன? கேட்டென்ன?
          அகமறிந்து புறம் மறந்தவரை எனக்குக்
          காட்டிடுவீர் சென்ன மல்லிகார்ச்சுனா.”

    18. “எங்கே சென்றாலும் வீரனுக்கு பயமில்லை
          கோழைக்கு மகிழ்ச்சியில்லை காணீரய்யனே!
          கொடுப்பவனுக்கு தீயகுணமில்லை
          கருணையுள்ளவனுக்குப் பாவமில்லை
          உம்மைத் தொட்டு பிறர்பொருள்  பிறன்மனை
          தொடாதவனுக்கு மறுபிறவியில்லை சென்ன மல்லிகார்ச்சுனா.”

    19. “குயில்களே! அவன் எங்கேயிருக்கிறான்
          மயில்களே உங்களுக்குத் தெரியுமா
          அவன் எங்கேயிருக்கிறான் தெரிந்தால் சொல்லுங்கள்
          என் சென்ன மல்லிகார்ச்சுனன் ”

    20. “மரங்களே! பறவைகளே! நான் ஏன்
          அவனைப் பார்க்க முடியவில்லை?
          மயில் மலையை விட்டு மண்மேட்டில் ஆடுமா?
          வாத்து ஏரியைவிட்டுச் சிறுபள்ளத்தில் நீந்துமா?
          குயில் மாவிளந்தளிர்களைக் கோதாமல் பாடுமா?
          மணமில்லாத மலரருகே தேனீ சுற்றுமா?
          மனம் சென்ன மல்லிகார்ச்சுனனை விட்டு வேறு எதையும்
          நாடுமா? “

    21. “குருவே எசமானன் ஆனான்
           இலிங்கம் மணமகனானான்
           நானே மணமகள் ஆனேன்
           கணக்கற்ற பெற்றோர்கள் எனக்கு; உலகறியுமிது
           தகுந்த வரன் தேடியதால் எனக்கு
           சென்ன மல்லிகார்ச்சுனன் கணவனானான்.
           உலகின் பிற மனிதர்கள் எனக்கு உறவல்ல, பிரபுவே”

    22. “இன்று என் கணவன் வீட்டுக்கு வரப்போகிறான்
          நீங்கள் எல்லோரும் தயாராக இருங்கள்
          சென்ன மல்லிகார்ச்சுனன் இப்போது வரலாம்
          அவனை எல்லோரும் வரவேற்று மகிழுங்கள்”

    வசன இலக்கியம் என்னும் போது வசனகாரர்களில் ஆண்களில் பசவேசரையும், பெண்களில் அக்கமாதேவியையும் சொல்வதுதான் மரபாக இருக்கிறது. இன்றும் அக்காவின் வசனங்கள் எல்லா நேரங்களிலும் கன்னட மண்ணில் மிகச் சாதாரணமாகவும், சரளமாகவும் பயன் படுத்தப்பட்டு வருவது அக்கமாதேவியின் வசனங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

                                                                                                                                                                [தொடரும்]

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 4

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 4

    நிர்மலா ராகவன்

    குமரேசா

    ஒவ்வொரு பாட்டை எழுதி முடித்தபின்னரும், கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்று `அரங்கேற்றம்’ செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

    ஒரு முறை, `எல்லார்மேலேயும் எழுதறியே! என்மேலே ஒரு பாட்டு எழுதக்கூடாதா?’ என்று முருகன் கேட்பதுபோல் இருந்தது. பயந்துவிட்டேன். பாட்டு தானாகவேதான் எழவேண்டும். இல்லாவிட்டால் நன்றாக இருப்பதில்லை.

    அதற்கடுத்த வாரம் பினாங்கு தண்ணீர்மலையிலுள்ள முருகன் கோயிலுக்குப் போனபோது, `ஒனக்குப் பாட்டு வேணும்னா, நீயே சொல்லிக்கொடு!’ என்று பாரத்தை அவன் தலையிலேயே போட்டேன்.

    சரியாக ஒரு வாரம் கழித்து, `குமரேசா’ என்ற பாடலின் முதல் பாகம் (பல்லவி) நள்ளிரவு தூக்கத்தில் என் காதில் ஒலித்தது, கோலாலம்பூரில். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். இரண்டு மூன்று முறைகளுக்குப்பின் விழிப்பு கொடுத்தது. தயாராக வைத்திருந்த நோட்டில் ஸ்வரப்படுத்தி எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். காலையில்தான் ஆபோகி ராகம் என்றே புரிந்தது!

    பத்துமலை உச்சியில் பலமுறை இப்பாடலைப் பாடியிருக்கிறேன்.

    அகன்ற குகை. அங்கு பாடுகையில், கூடவே வீணையோ, புல்லாங்குழலோ ஒலிப்பது கேட்கும். ஒரு வெள்ளைக்காரர் என் வாய்க்குள் புகாதகுறையாகத் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது வேடிக்கையான அனுபவம்.

    பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் இப்பாட்டிற்கு அபிநயம் பிடிக்கையில் சகோதரனுடன் சண்டைபிடித்தல், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்வது எல்லாம் அவர்கள் வாழ்வில் நடந்ததாகவே இருக்க. பார்ப்பவர்கள், `ஆகா! என்ன பாவம்!’ என்று பாராட்டுவார்கள்!

    பி.கு: `கு’ என்றால் அறியாமை. நம் அறியாமையை மாற்றுபவன் குமாறன். அது மருவி, குமாரன் ஆகிவிட்டதாம்.

    இப்பாடலைக் கேட்க:

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

    நாங்குநேரி வாசஸ்ரீ

    96. குடிமை

    குறள் 951

    இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு

    பாரபட்சம் பாக்காத நடுவுநெலமையும், ஆர்ப்பாட்டமில்லாத அடக்க கொணமும் ஒசந்த குடியில பொறந்தவுகளத் தவித்து மத்தவுக கிட்ட இல்ல.

    குறள் 952

    ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
    இழுக்கார் குடிப்பிறந் தார்

    ஒசந்த குடியில பொறந்தவுக ஒழுக்கம், நாணயம், மானம் இந்த மூணயும் விட்டுவெலகி நெலதடுமாறி நடக்க மாட்டாக.

    குறள் 953

    நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு

    ஒசந்த குடியில பொறந்தவுகளுக்கு சிரிச்ச மொகம், இனிக்கப் பேசுத கொணம், கொடுக்குத கொணம், கேலி பேசாம இருக்கது இந்த நாலு நல்ல கொணமும் இருக்கும்.

    குறள் 954

    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்

    பலகோடி செல்வம் கெடைக்கதா இருந்தாலும் ஒசந்த குடியில பொறந்தவுக தங்குடிப் பெரும கெடுததுக்குத் தக்கன காரியத்த செய்ய மாட்டாக.

    குறள் 955

    வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பின் தலைப்பிரிதல் இன்று

    ஏழையாப் போயி மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவுதது கொறஞ்சு போனாலும் பழைய பெரும இருக்க குடியில பொறந்தவுக கொடுக்குத கொணத்த உடமாட்டாக.

    குறள் 956

    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்துமென் பார்

    குத்தங்கொறையில்லாம வாழ நெனைக்கவுக வஞ்ச மனசோட தகாத காரியங்களச் செய்ய மாட்டாக.

    குறள் 957

    குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

    ஒசந்த குடியில பொறந்தவுகளோடகுத்தங்கொற வானத்து நிலாவுல இருக்க களங்கம் கணக்கா பெரிசாத் தோணும்.

    குறள் 958

    நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்

    நல்லகொணத்தோட இருக்க ஒருத்தன் நேசமில்லாம இருந்தாம்னா அவன் பொறந்த குலத்தையே இந்த ஒலகம் சந்தேகப்படும்.

    குறள் 959

    நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

    வெளஞ்ச பயிரப்பாத்தே இது இன்ன நெலத்துல வெளஞ்சதுனு தெரிஞ்சிக்கிடலாம். அதுகணக்கா ஒருத்தங்க பேசுத பேச்ச வச்சி அவுக எந்தமாரி குடும்பத்துல பொறந்திருக்காகனு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 960

    நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
    வேண்டுக யார்க்கும் பணிவு

    ஒருத்தன் நன்ம வேணும்னு நெனச்சா வேண்டாத காரியம் செய்ய பயந்துக்கிடணும். நல்ல குடும்பத்துல பொறந்தவன்னு பேரு வேணும்னு நெனச்சா எல்லார்க்கும் பணிஞ்சு போவணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

    நாங்குநேரி வாசஸ்ரீ

    95. மருந்து

    குறள் 941

    மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று

    மருத்துவம் படிச்சுவுக சொல்லுத வாதம், பித்தம், கபம் இந்த மூணுல ஏதும் ஒண்ணு அதிமானாலோ கொறஞ்சாலோ நோய் உண்டாவும்.

    குறள் 942

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
    தற்றது போற்றி உணின்

    ஒருத்தன் மொத சாப்பிட்டது செரிச்சுட்டுதான்னு தெரிஞ்ச பொறவு அடுத்தாப்ல சாப்பிட்டாம்னா அவனுக்கு மருந்துனு ஒண்ணு தேவ கெடையாது.

    குறள் 943

    அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
    பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

    தின்னது செரிச்சிடுச்சுனு தெரிஞ்சுக்கிட்டு அடுத்தாப்ல அளவா சாப்பிட்டு இருக்கதுதான்  நெறைய ஆயுசோட இருக்கதுக்குண்டான வழி.

    குறள் 944

    அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து

    மொத தின்னது செரிச்சத உணந்துக்கிட்டு ஒடம்பு ஒத்துக்கிடுத சாப்பாட்ட வயிறு பசிஎடுத்த பொறவு திங்கணும்.

    குறள் 945

    மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபா டில்லை உயிர்க்கு

    ஒடம்புக்கு ஏத்த சாப்பாட்டக் கூட மூக்குப்பிடிக்க திங்காம அளவா தின்னாம்னா அவன் வாழ்க்கையில நோவுநொடியால சங்கடப்படமாட்டான்.

    குறள் 946

    இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்

    அளவா சாப்பிடுதவன விட்டு சொகம் வெலகாம இருக்கது கணக்கா மூக்குபிடிக்க திங்கவனவிட்டு நோய் வெலகாம நிக்கும்.

    குறள் 947

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும்

    வயித்துப்பசியோட அளவு தெரியாம அதிகமா திங்கவன் ஒடம்புல நோவுநொடி அளவில்லாம வளந்துபோடும்.

    குறள் 948

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்

    நோய் இன்னதுனு தெரிஞ்சிக்கிட்டு அது வந்த காரணத்த அறிஞ்சு அதப் போக்குத வழிமொறையத் தெரிஞ்சு தக்கமாரி தப்பில்லாம வைத்தியம் பாக்கணும்.

    குறள் 949

    உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்

    சீக்காளியோட வயசு, சீக்கோட தன்ம, வைத்தியம் பாக்க ஆவுத நேரம் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்ட பொறவு தான் வைத்தியர் வைத்தியம் செய்யணும்.

    குறள் 950

    உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
    றப்பானாற் கூற்றே மருந்து

    சீக்காளி, மருந்து, மருந்து கொடுக்கவர்,வைத்தியர் னு வைத்திய மொற நாலு வகையா அமைஞ்சிருக்கு.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 4

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 4

    தி.இரா.மீனா          

    அக்கமாதேவி

    அற்புதத்திற்குள் அற்புதம், தெய்வீகக் குயில் என்றெல்லாம் அழைக்கப் படும் அக்கமாதேவி கர்நாடக மாநிலம் சிமோகாவிலுள்ள உடுத்தடியில் சுமதி–நிர்மல ஷெட்டிக்கு மகளாகப் பிறந்தவர். பெற்றோர் சிவனின் சரணர்கள். ஏழு வயதில் ஒரு குருவோடு அக்கமாவுக்குக் கிடைத்த அறிமுகம் சிவபெருமானிடம் பக்தி கொள்ளத் தூண்டுகிறது. கௌசிகன் என்னும் சிற்றரசன் அக்கம்மாவின் பேரழகில் மயங்கி அவளை மணக்க எண்ணுகிறான். இதில் அவள் குடும்பத்திற்கு விருப்பமில்லையென்றாலும் அரசன் தன் செல்வாக்கால் அவர்களைத் தன் விருப்பத்திற்கு உடன்பட வைக்கிறான். வேறுவழியின்றி மணக்க உடன்படும் அவள் அவனிடம் சில நிபந்தனைகளை முன்வைக்கிறாள். சென்ன மல்லிகார்ச்சுனனுக்கு [இஷ்டதெய்வம்] நாளும் வழிபாடு நடத்துதலில் அவன் தலையீடு கூடாது, தன்னைத் தேடிவரும் அடியவர்களை மறுப்பின்றி உபசரிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது அந்த இரண்டு நிபந்தனைகள். அவளழகில் மயங்கிய மன்னன் அவற்றிற்கு ஒப்புக் கொள்கிறான். சிவனடியார் கூட்டம், வழிபாடு என்று தொடர்ந்து அரண்மனையில் அக்கம்மா தேவியின் பக்திநிலை வளர்கிறது. சில நாட்களுக்குள்ளேயே அவனுக்குப் பொறுக்க முடியாமல்போக  ஒரு சூழலில் அடியவர் கூட்டம் எப்போதும் ஏன்  என அவளிடம்  கேட்க நிபந்தனையை அவன் மீறியதாகச் சொல்லி அவள் வெளியேறுகிறாள். திருமணமான குறுகியகாலத்திலேயே அவ்வாழ்விலிருந்து வெளியேறும் அக்கமாதேவி தன் ஆடையைக் களைந்து நீண்ட கூந்தலால் உடலை மறைத்து தன் வாழ்வுச் சூழலை மாற்றிக் கொள்கிறாள். பல இடங்களிலும் அலைந்து இறுதியாகக் கல்யாண் வருகிறாள். அங்கு பசவேசர் ,அல்லமாபிரபு ஆகியோர் பங்கு கொண்டுள்ள அனுபவமண்டபத்தைச் சேர்கிறாள். அனுபவ மண்டப மென்பது சிவசாரணர்கள் கூடுமிடமாகும். இளம் பெண்ணான அவளை அனுபவ மண்டபத்திற்குள் இணைத்துக் கொள்வதற்கு முன்பு அல்லமாபிரபு அவள் அறிவாற்றலையும் பக்தி நிலையையும் அறியச் சில கேள்விகள் கேட்கிறார். அவள் அளித்த விளக்கங்கள் அவளுடைய அறிவாற்றலுக்கும், இறைப்பற்றுக்கும் அடையாளமாகின்றன. அக்கமாதேவியின் விளக்கங்களால் மகிழ்ந்த பசவேசர், சித்தராமயன் என்று வயதிலும், அனுபவத்திலும் சிறந்தவர்கள் அவளைப் பாராட்டுகின்றனர். அங்கு சிலகாலம் இருந்து விட்டுப் புறப்படுகிறாள். காடுகளில் அலைகிறாள். இறுதியில் ஆலங்கட்டி தண்ணீரில் சேர்வது போல, உப்பு தண்ணீரில் கரைவது போல. பால் பாலோடு  கலப்பதைப் போல இறைவனோடு கலக்கிறாள். ஐக்கியஸ்தலம் ஆனதான புகழ் அவளுக்குக் கிடைக்கிறது. அனுபவ மண்டபத்தின் சரணர்கள் பசவேசரை பசவண்ணா என்றும், அல்லமாவைப் பிரபு என்று, அக்கமாதேவியை அக்கா என்றும் அழைப்பது அம்மூவரும் பெற்றுள்ள உயர்வையும், சிறப்பையும் காட்டுகிறது.

    அனுபவ மண்டபத்திற்குள் அவளைச் சேர்க்கும் முன்பு அல்லமாபிரபு அவள் ஆன்மீக நிலையை உறுதிப்படுத்த விரும்புகிறார். அவரது கடுமையான, ஆழமான கேள்விகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி  தனக்குள் தோன்றியதை  அப்படியே  வெளிப்படுத்தும் அல்லமா—அக்கமாதேவி உரையாடல் கீழே:

    பிரபு: “உன் இளமைக்காலத்தில் நீ இங்கு வந்ததன் காரணமென்ன? நம் சமயவாதிகள் பெண்களின் அருகாமையை ஒதுக்கியிருக்கின்றனர். உன் கணவன் யார் என்ற  அடையாளத்தை  நீ வெளிப்படுத்தினால் எங்களோடு இணையலாம். இல்லாவிட்டால் இங்கேயிருந்து போய்விட வேண்டும். ஒரு பெண்ணின் சேர்க்கை என்பது விஷம் போன்றது. சொல். உன் கணவன் யார்?”

    அக்கமா: கடவுள் என் கணவராக வேண்டும் என்பதற்காக கடுமையாகத் தவமிருந்தேன். என் பெற்றோர்கள் என் உடலைச் சாம்பலாக்கிவிட்டு என் கையில் காப்புக்கட்டி என்னைக் கடவுளுக்குச் சொந்தமாக்கிவிட்டனர். கடவுளின் கணக்கில்லாத தொண்டர்கள்தான் என் பெற்றோர் என்பதை உலகமே அறியும் அதனால் பிரபுவே! கடவுள்தான் என் தலைவன், இந்த உலகில் அவரைத் தவிர வேறு கணவர்களில்லை.

    பிரபு: ஆடையைக் களைந்து கூந்தலால் உடலை மூடிமறைக்கும் உன் செயல் பொருத்தமில்லாததாக இருக்கிறது. உடலைப் பற்றிய உள்ளுணர்வு இருந்தால்தான் இப்படியான வெளிப்பாடுவரும். அதனால் இன்னும் நீ அதிலிருந்து வெளிவரவில்லை. அதை விளக்கிச் சொல்.”

    அக்கமா: அதற்கான காரணம் உலகம்தான். பெண்ணை நிர்வாண நிலையில் பார்த்திருக்காத உலகப் போக்கிற்குத்தான் அச்செயல். உடலென்பது இங்கு கணக்கில் இல்லாதது. பரிசுத்தமான மனம்தான் கடவுளுக்கு உகந்தது.

    பிரபு: “மனிதப் பிறவியாக, அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு கடவுளோடு ஒன்றாக இணைய முடியுமா? உருவமற்ற ஒன்றோடு உருவமான ஒன்று எப்படிச் சேரமுடியும்?

    அக்கமா: ”சந்தனமரம் துண்டுதுண்டாக வெட்டப்படும்போது அதன் வாசனை குறையுமா?தங்கத்தை அறுத்துச் சுடும்போது அது அதன் பொலிவை இழக்குமா? கரும்பு சக்கையாகப் பிழியப்பட்டு சுடப்படும் போது அதன் சுவை குறையுமா? பாம்பின் விஷப்பல்லைப் பிடுங்கிய பிறகு யாரும் அதோடு விளையாடலாம் சதையோடு இருக்கும் தொடர்பு சரியாகப் புரிந்துகொள்ளப்படுமென்றால்  அது சரியானதுதான். தாய் அரக்கியாக மாறினால் அவளுடலின் உணர்ச்சிகளும் அரக்கத் தன்மையுடையதாகிவிடும். விருப்பப்படுகிறவனுக்கு உடல் உண்டென்று நினைக்காதே கடந்து போனவற்றைச் சொல்லி என் முகத்தில் அறைந்தாலும் இழப்பு உங்களுக்குத்தான். என்னைக் கொன்றாலும் அவன் மீது அன்பு காட்டு வதை நிறுத்த மாட்டேன். அவன் இளமையானவன் உருவற்றவன் இறப்பில்லாதவன் அளக்கவியலாதவனாகிய சென்னமல்லிகார்ச்சுனன் என் கணவன்”

    பிரபு: ”உன் உடல் பெண்ணுருவம் கொண்டதாக இருக்கலாம். ஆனால் உன் மனம் கடவுளோடு இணைந்துவிட்டது.” என்று பிரபு அவளைப் பாராட்டுவதான இந்த உரையாடல் தொடர்கிறது. பசவேசர், சித்தராமயன் என்று வயதிலும் ,அனுபவத்திலும் சிறந்தவர்கள் நிறைந்த அனுபவ மண்டபத்தில் இணைகிறாள்.

    அக்கமாதேவியை ’ஞானி” என்ற  நிலையில் அடக்கினாலும், ஞானத்தின் அடையாளமாக வசனங்கள் அமைந்தாலும் மதுரபாவம்-நாயகன் நாயகி [சரணாசதி- லிங்கா பதி ] பாவத்தை பல வசனங்களில் காணமுடிகிறது. சென்னமல்லிகார்ச்சுனன் அக்கமாதேவியின் முத்திரையாகும். வாழ்க்கையின் நலிவு — நோவு, ஆத்ம தர்மத்தின் நிலை ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன. வசனங்கள் தவிர, ”யோகாங்க திரிவிதி”, “ஸ்வர வசனம், ”மந்த்ரகோப்ய” முதலிய சிறு நூல்களைப் படைத்திருந்தாலும் அக்கமாதேவியின் ஆத்மார்த்த தரிசனம் வெளிப்படுவது அவளுடைய வசனங்களில்தான் எனலாம். சில வசனங்கள்:

      1. “பொறி பறந்தால் என்வேட்கையும் பசியும் தீர்க்கப்பட்டதாக
            நினைப்பேன்
            வானம் திறந்தால் என் குளியலுக்காக என்று எண்ணுவேன்
            என்தலை தோளில் சாயும்போது உன்னையே நினைப்பேன்”
            சென்ன மல்லிகார்ச்சுனா “

     2. “பசி பிச்சைப்பாத்திர
           அரிசியில் தீரும்
           தாகம் கிணற்றுநீரில் தீரும்
           தூங்கச் சிதைந்த கோயில்களுண்டு
           ஆத்மாவுக்குத்  துணை நீ
           என்ன கவலை சென்ன மல்லிகார்ச்சுனா”

     3. “நல்ல மரத்தால் நிழலைத் தரமுடியாவிட்டால் என்ன பயன்?
          செல்வந்தர் கருணையற்று  இருந்தால் செல்வத்தால் என்னபயன்?
          அழகான மனிதன் இரக்கமற்று இருந்தால் அழகால் என்னபயன்?
          நிறைந்த உணவு இல்லாவிட்டால் பாத்திரத்தால் என்ன பயன்?
          உன்னைப் பற்றிய சிந்தனையில்லாவிட்டால்
          சென்ன மல்லிகார்ச்சுனா என்ன பயன்?”

    4. “மண்ணில் புதையல்போல
          பழத்தில் சுவைபோல
          கல்லில் பொன்போல
          விதையில் எண்ணெய்போல
          மனதில் நீ யாருக்கும் தெரியாது
          சென்ன மல்லிகார்ச்சுனா”

    5. “நான் பயப்படும் பெண்ணில்லை
         வீணான அச்சம் எதற்குமில்லை
         எதையும் அடக்கமுடியும்
         பசியையும் வலியையும் ஏற்றுக்கொள்வேன்
         உலர்ந்த இலைகளையும் உணவாக்கிக் கொள்வேன்
         கூர்மையான வாள் என்படுக்கை
         எதற்கும் தயார் இந்த நிமிடத்தில் இறக்கவும்,
         ஓ..சென்ன மல்லிகார்ச்சுனா”

    6. “பருவமடைவதற்கு முன்னால்
         வெட்கமென்பது தெரிவதற்கு முன்னால்
         என் மக்கள் எனக்கு மணமுடித்து விட்டனர்
         என்பெண்மையை உணரும் முன்னால்
         மணமுடித்து விட்டனர் சென்ன மல்லிகார்ச்சுனா”

    7. “எனக்கு குருவின் அருளால் இலிங்கம் கிடைத்தது
         ஜங்கமா குருவினருளால் கிடைத்தது
         பிரசாதம்  குருவினருளால் கிடைத்தது
         சரணர்களோடு பழகியது குருவால்
         குரு  என்நெற்றியில்  திருநீறு பூசினார்
         இலிங்கத்தை உடலில் சேர்த்தார்
         நான் ஆசீர்வதிக்கப்பட்டவளானேன்
         சென்ன மல்லிகார்ச்சுனா” 
    [ தொடரும் ]

    Share
  • சேக்கிழார் பா நயம் – 61 (நீதி  மாதவர்)

    சேக்கிழார் பா நயம் – 61 (நீதி மாதவர்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    சுந்தரர் முன் காட்சியளித்த  இறைவன்  திருவடிச் சிறப்புகளுள்  அடுத்து அவற்றின் திருவருள் தன்மைகளைக்  கூறுகிறார்.

    நீதி  மாதவர்   நெஞ்சிற்  பொலிந்தன
    வேதி   யாதவர்   தம்மைவே   திப்பன
    சோதி   யாயெழுஞ்  சோதியுட்   சோதிய
    வாதி   மாலவன்   காணா   வளவின.

    பொருள்: “நீதியில் நிற்கும் தவமுடையார்களது மனத்திலே ஒளி வீசி விளங்குவன; அறியாதவர்களையும் அறிவித்துத் திருத்துவன; ஒளிப்பொருள்களுக் கெல்லாம் ஒளிகொடுத்து அவற்றின் மேலும் எழுந்து விளங்கும் ஒளியாயுள்ளன; ஒரு காலத்துததோன்றும் இயல்பினராகிய மாலினாலே காணமுடியாத அளவையுடையன;

    மற்ற எளிய மக்களின்  உள்ளத்தில் விளக்கமின்றி  இறைவன் திருவடிகள் இருக்கும். ஆனால்  எல்லா  இடத்திலும் இருக்கும் இறைவன் திருவடிகள் சிவபிரான் அருளிய ஆகம ஒழுக்கமும்  தவமாகிய சிவபூசையும் உடைய சிறந்த அடியார்களின்  நெஞ்சிலே நீங்காது நிலைத்து நிற்கும். இதனைத் தேவாரம்,

    ‘’கற்றாரின்  உற்று   ஓரும்  காட்சியானை’’   என்றும்,

    ‘’கற்பவர்   விழுங்கும்  கற்பகக்  கனியை ‘’  என்றும்  கூறுகின்றது.

    திருவருள்  நிலையை அறியாது  மலமாயையுள்  அழுந்திக் கிடப்பவர்கள்  கேவலர் எனப்படுவர். அவர்களை  திருவருளால்  அறிவு பெறும் நிலைக்கு   இறைவன் உயர்த்துவார். இத்தகையோர்   சகலர்  எனப் பெறுவர். இதனை  வேதித்தல் என்பார்கள். வேதித்தல் = வேறுபடுத்துதல். தெரிந்து பூசிப்போரிடத்துப் பொலிந்து, தெரியாது வாளா கிடப்போரை அறிவித்தும் அருள் செய்வன இரண்டு பாதங்கள்   ஆகும்.

    “கல்லாதார் மனத்தணுகாக் கடவுடன்னை“,

    “மற்றவரறியா மாணிக்க மலையை“ முதலிய திருவாக்குக்கள் இதனை விளக்கும். வேதிப்பன – என்பதற்குப் பேதிக்கச் செய்வன – மாற்றுவன – என்றுரைத்தலுமாம். மாற்றுவது வேதி எனப்படும். இது தரிசவேதி – பரிச வேதி என் இருவகைப்படும். என்றது காண்க.

    ஆணவத்திற் கட்டுண்டுகிடப்போரை அதிலிருந்து பரிசம் – நோக்கு – பாவனை முதலிய தீக்கைகளால் மாறச் செய்வன. பரிசத்தாலே கட்டுநீங்கும் கோழி முட்டையும், பார்வையால் நீங்கும் மீன்முட்டையும், பாவனையால் (நினைவினால்) நீங்கும் ஆமை  முட்டையும், இவற்றிற்கு உதாரணங்களாகக் கூறுப.

    இப்பாடலில்  சோதியாய் எழும்  சோதி என்பது,  சூரியன், சந்திரன் , விண்மீன்கள் , அக்கினி மற்றும் விளக்குகளில் தோன்றும் எல்லா  ஒளிகளையும் குறித்தது. இவை தாமே ஒளிகொடுப்பன அல்ல. இவற்றுள்ளே நின்று ஒளிகொடுப்பவன் இறைவன். அவன்பிறிதொன்றினானன்றித்தானே ஒளியுடையவன்;ஆதலின்சுயஞ் சோதியாவன். அவனை ஒளியுருவுடையவனாகவே நினைப்பது சிவாகமங்களின்றுணிபு.

    சிவபூசை விதியில் சூரிய பூசையிலே சூரியமண்டலத்திடையில் விளங்கும் ஒளியுருவனாகிய சதாசிவ மூர்த்தியைப் பூசிக்கும் முறை சைவாசாரியர்களிடம் உண்டு. இச்சோதியை, சோதிகளிலே மிகுந்த சோதி என்றும்,சோதிகளுக்குள்ளே நின்று அவற்றிற்கு ஒளிதரும் சோதி என்றும் கொள்க. “ஒளியா யொளியதன் ஒளி“ என அடுக்கிக் கூறுவதுங் காண்க. மும்மலங்களுக்கு சடமாயொழியவே, அவைகளினின்றும் நீங்கிச் சுத்தமாய் மேம்படும் ஆன்ம ஞானவொளியுடன் ஒளியாகி அதனை விளக்குவன.

     “சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே“ – சித்தியார்.

    “ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகனுருவங்கண்டு“ – கந்தர் அலங்காரம்.

    இப்பாடலில் ஆதிமாலவன் காணா அளவின என்பது – பன்றியாய்ச் சென்று திருவடி தேடிக் காணாதவர் திருமாலே யாதலானும், இங்குக் கூறுவது அந்தப் புண்டரீகப் பதமேயாதலாலும் மாலவன் என்ற பாடமே சிறந்ததாம். ஆதி – தொடக்கம் – தோன்றுதல். “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே“ என்றபடி இறைவன் ஒருவனே ஆதியும்  அந்தமுமில்லாதவன்; அநாதியாயுள்ளவன். தமக்கு ஒரு ஆதியை – தொடக்கத்தை – உடையார் அநாதியை அறியார். ஆதலின் ஆதி மாலவன் காணா அளவின என்றார். “ஆதியுமந்தமுமல்லா வரும்பெருஞ் சோதி“ என்பது திருவாசகம். பெருஞ் சோதியேயாயினும் சிலர் காணப்பெறாமலிருப்பது அவர்களது பக்குவக் குறையிலேகாண்க. “சோதியேசுடரேசூடரேசூழொளி விளக்கே“ என்ற திருவாசகமும்காண்க. சோதியாய் எழும் மூன்று சோதியும் இறைவனது மூன்று கண்களாம். கண்கள் கருவிகளேயாதலின் இவற்றுள்ளே உயிரின் செயல் கலந்தாலன்றி  இவைகட்குச் செயல் இல்லை. இம்மூன்றினுள்ளும் உட்சோதி யாயிருந்து இறைவன் அவற்றிற்கு ஒளி தருவன் என்பதும் குறிப்பு. கறுத்தனவாயினும் சிவந்தன; பொலிந்தனவாயினும் வேதிப்பன; சோதியவாயினும் காணா வளவின; என அணிபெறத் தொடர்ந்து துதித்த சுவையும் காண்க. வேதிப்பன – என்ற கருத்து

    “குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன“ என்ற திருவிருத்தத்திலும், மாலவன் காணா- என்ற கருத்து “கருடத் தனப்பாகன் காண்டற் கரியன“ என்ற திருவிருத்தத்திலும் அப்பர் பெருமான் அருளியமை காண்க. சோதிய – என்பது “சோதியாய் நிறைந்தான் சுடர்ச்சோதியுட் சோதியான்“  என்ற திருஞான சம்பந்த நாயனார் தேவாரத்துட் காண்க.  இனி முழுப் பாடலையும் படித்துணர்வோம்,

     நீதி  மாதவர்   நெஞ்சிற்  பொலிந்தன
    வேதி   யாதவர்   தம்மைவே   திப்பன
    சோதி   யாயெழுஞ்  சோதியுட்   சோதிய
    வாதி   மாலவன்   காணா   வளவின!

    ஆகவே சிவபூசை செய்யும் தவமுடையோர் நெஞ்சில் பொலிவதும், கேவலமலத்துட் கிடந்தோரைச்  சகலராக்குவதும்,  ஒளிகள் அனைத்தையும் கொண்ட பேரொளிப் பிழம்பாய்  நிற்பனவும், ஆதியும் அந்தமும் இல்லா  அரும்பெருஞ் சோதியும் இறைவன் திருவடிகளே  என்று சுந்தரர் கண்டு கூறியதைச் சேக்கிழார்  கொண்டு கூறுகிறார்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 94

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 94

    நாங்குநேரி வாசஸ்ரீ

    94. சூது

    குறள் 931

    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
    தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

    நிச்சயம் செயிக்கப் போகுதோம்னு தெரிஞ்சாலும் சூதாடக்கூடாது. அது தூண்டில் முள்ள இரைனு நெனச்சி முழுங்கின மீன் கணக்கா ஆக்கிவிட்டுரும்.

    குறள் 932

    ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

    ஒருக்க செயிச்ச சந்தோசத்துல நூறு தடவ பொருளத் தோத்துப் போவுத சூதாடிங்க வாழ்க்கையில நல்லது நடக்க வழி இருக்கா?

    குறள் 933

    உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
    போஒய்ப் புறமே படும்

    பணயம் வச்சி ஒருத்தன் தொடர்ச்சியா சூதாடினாம்னா அவன் சொத்தும் அதனால வருத லாபமும் எதிராளிகிட்ட போய் சேந்துக்கிடும்.

    குறள் 934

    சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
    வறுமை தருவதொன் றில்

    ஒருத்தனுக்கு பல சங்கடங்கள உண்டாக்கி அவன் மரியாதயக் கெடுத்து ஏழையாக்கிப்போடுத சூதாட்டம் கணக்கா கெட்ட காரியம் வேற இல்ல.

    குறள் 935

    கவறும் கழகமும் கையும் தருக்கி
    இவறியார் இல்லாகி யார்

    சூதாடுத எடம், சாதனம், ஆடுத தன் கைத்தெறம இதையெல்லாம் பெருமயா நெனஞ்சி சூதாட்டத்த இறுக்கிப் பிடிச்சிக்கிட்டவக எல்லாம் கைவிட்டுப்போயி ஒண்ணுமில்லாமப் போயிடுவாக.

    குறள் 936

    அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
    முகடியான் மூடப்பட் டார்

    சூதாட்டம் ங்குத மூதேவியால முழுங்கப்பட்டவுக வயிறார திங்க ஏலாம பலவிதமா சங்கடப்பட்டு சீரளியுவாக.

    குறள் 937

    பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
    கழகத்துக் காலை புகின்

    சூதாடுத எடத்துலயே ஒருத்தன் தன் காலத்தக் கழிச்சாம்னா அவன் பரம்பரச்சொத்து  கைவிட்டுப் போவும். நல்ல கொணத்தையும் கெடுத்துப்போடும்.

    குறள் 938

    பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
    தல்லல் உழப்பிக்கும் சூது

    சூதாட்டம் பொருள அழிச்சுப்போடும் அந்தானிக்கு பொய் பேசச் சொல்லும் பொறவு இரக்கங்கெட்டவனாக்கி செரையா வந்து முடியும்.

    குறள் 939

    உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
    அடையாவாம் ஆயங் கொளின்

    சூதாடுதுவன விட்டு மரியாத, படிப்பு, சொத்து, சாப்பாடு, உடுப்பு எல்லாம் அண்டாம வெலகிப்போவும்.

    குறள் 940

    இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற் றுயிர்

    பொருள வச்சி தோக்கத் தோக்க சூதாட்டத்துமேல வைக்க ஆச அதிகமாவுததும் ஒடம்பு சங்கடப் படப்பட உசிரு மேல வைக்க ஆசயும் ஒண்ணுதான்.

    Share
  • இயற்கையில் எழுந்த இசை – பகுதி 3

    இயற்கையில் எழுந்த இசை – பகுதி 3

    நிர்மலா ராகவன்

    சடை விரிந்ததேன்                  

    கோயம்புத்துரில் ஒரு சிற்றுண்டிசாலைக்கு வெளியே மழைக்கு ஒதுங்கியபோது, “அம்மா! சிவன் மேலே `ஏன், ஏன்’னு கேக்கறமாதிரி ஒரு பாட்டு எழுதேன். பேகட ராகத்திலே இருக்கணும்,” என்று ஷீலா ஒரு வேண்டுகோள் விடுத்தாள்.

    உடனே, `சடை விரிந்ததேன் சிவனே?’ என்று பாடிக்காட்டினேன்.

    “இதேதான்!” என்று ஆர்ப்பரித்தாள்.

    எங்களிருவரையும் வீட்டுக்கு அழைத்துப்போக வந்த என் இளைய சகோதரியிடம், “எனக்கு ஒரு பாட்டு வந்தது,” என்று உற்சாகமாக அந்த ஒரு வரியைப் பாடிக்காட்டினேன்.

    நான் எதற்கு அடிபோடுகிறேன் என்று அவளுக்குத் தெரியாதா! “எனக்குப் பாட்டெல்லாம் எழுதப் பிடிக்காது,” என்றபடி, விறைப்பாக காரை ஓட்டிப்போனாள்.

    “உன்னை யார் எழுதச் சொன்னது?” என்ற நான் அந்த ஒற்றை வரியை விடாது பாடியபடி இருந்தேன்.

    சில நிமிடங்களுக்குள், தன்னையுமறியாது, அடுத்த வரியைப் பாடினாள், சங்கீத வித்வான் டாக்டர் ஹேமலதா நடேசன் (1960-களில், அடையார் இசைக்கல்லூரியில் முசிறி, Dr.எஸ்.ராமநாதன், K.V. நாராயணஸ்வாமி, T.N. கிருஷ்ணன் போன்ற பல வித்வான்களிடம் பயின்றவள்).

    அவள் பாடப் பாட, நான் ஸ்வரப்படுத்தினேன். நாங்களிருவரும் மாறி மாறிப் பாட, நான்கு ராகங்களில், இரண்டிரண்டு வரிகள்கொண்ட பாடல் முழுமை பெற்றது.

    இப்பாடலைக் கேட்க:

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 93

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 93

    நாங்குநேரி வாசஸ்ரீ

    93. கள்ளுண்ணாமை

    குறள் 921

    உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
    கட்காதல் கொண்டொழுகு வார்

    கள்ளு குடிக்க பழக்கம் இருக்கவுகளப் பாத்து யாரும் பயப்படமாட்டாங்க. வாழுத  காலத்துலயும் அவுகளுக்கு புகழ் இல்லாமப் போவும்.

    குறள் 922

    உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார்

    கள்ளு குடிக்கக் கூடாது.. படிச்ச பெருமக்க முன்ன மானம் மருவாதி கெட்டு அலையணும்னு நெனைக்கவன் குடிச்சிக்கிடலாம்.

    குறள் 923

    ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி

    எல்லாத்தையும் பொறுத்துப்போவுத பெத்த ஆத்தா முன்ன ஒருத்தன் கள்ளு குடிச்சிட்டு கெடந்தாம்னா அவளே சகிச்சிக்கிட மாட்டாங்குதப்போ படிச்ச பெருமக்க  சகிப்பாகளா?

    குறள் 924

    நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
    பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

    கள்ளு குடிக்கதுங்கத ஆக்கங்கெட்ட காரியத்த செய்யுதவன் முன்ன நாணம் ங்குத நல்ல கொணம் நிக்காம ஓடிப்போவும்.

    குறள் 925

    கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்

    தன்ன மறந்து சொரணகெட்டு மயங்கிக் கெடக்கதுக்காவ ஒருத்தன் வெல கொடுத்து கள்ளு வாங்கிக் குடிக்கதுமாரி கூறுகெட்டதனம் ஒண்ணுமில்ல.

    குறள் 926

    துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

    ஒறங்குதவருக்கும் செத்தவருக்கும் எங்ஙன பெரிய வித்தியாசமில்லயோ அங்ஙனதான் கள்ளுகுடிக்கவனுக்கும் விசம் குடிச்சவனுக்கும் இருக்கதும்..

    குறள் 927

    உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
    கள்ளொற்றிக் கண்சாய் பவர்

    கள்ளை ஒளிச்சி வச்சிக்கிட்டு  குடிச்சாலும் ஊர்க்காரவுக தெரிஞ்சிக்கிட்டு எப்பமும் எளக்காரம் செஞ்சு சிரிப்பா சிரிப்பாக.

    குறள் 928

    களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
    தொளித்ததூஉம் ஆங்கே மிகும்

    கள்ளு குடிக்கவன் நான் குடிச்சதே இல்லன்னு பொய் சொல்லுதத உட்டுப்போடணும்.  ஏம்னா அவன் குடிச்சிருக்க நேரம் மனசுக்குள்ளார ஒளிச்சு வச்ச உண்ம வெளிய வந்துரும்.

    குறள் 929

    களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ அற்று

    குடிபோதையில மயங்கிக் கெடக்கவனுக்கு புத்தி சொல்லுதது தண்ணிக்குள்ளார முங்கினவன தீப்பந்தம் புடிச்சுக்கிட்டு தேடுதது கணக்கா ஆவும்.

    குறள் 930

    கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
    உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

    ஒரு குடிகாரன் தான் குடிக்காம இருக்குதப்போ மத்த குடிகாரனப் பாத்து நாமளும் இப்டிதான் சீரளியுதோம்னு புரிஞ்சிக்கிடமாட்டானோ?

    Share