சேக்கிழார் பா நயம் – 61 (நீதி மாதவர்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
சுந்தரர் முன் காட்சியளித்த இறைவன் திருவடிச் சிறப்புகளுள் அடுத்து அவற்றின் திருவருள் தன்மைகளைக் கூறுகிறார்.
நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன
வேதி யாதவர் தம்மைவே திப்பன
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
வாதி மாலவன் காணா வளவின.
பொருள்: “நீதியில் நிற்கும் தவமுடையார்களது மனத்திலே ஒளி வீசி விளங்குவன; அறியாதவர்களையும் அறிவித்துத் திருத்துவன; ஒளிப்பொருள்களுக் கெல்லாம் ஒளிகொடுத்து அவற்றின் மேலும் எழுந்து விளங்கும் ஒளியாயுள்ளன; ஒரு காலத்துததோன்றும் இயல்பினராகிய மாலினாலே காணமுடியாத அளவையுடையன;
மற்ற எளிய மக்களின் உள்ளத்தில் விளக்கமின்றி இறைவன் திருவடிகள் இருக்கும். ஆனால் எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன் திருவடிகள் சிவபிரான் அருளிய ஆகம ஒழுக்கமும் தவமாகிய சிவபூசையும் உடைய சிறந்த அடியார்களின் நெஞ்சிலே நீங்காது நிலைத்து நிற்கும். இதனைத் தேவாரம்,
‘’கற்றாரின் உற்று ஓரும் காட்சியானை’’ என்றும்,
‘’கற்பவர் விழுங்கும் கற்பகக் கனியை ‘’ என்றும் கூறுகின்றது.
திருவருள் நிலையை அறியாது மலமாயையுள் அழுந்திக் கிடப்பவர்கள் கேவலர் எனப்படுவர். அவர்களை திருவருளால் அறிவு பெறும் நிலைக்கு இறைவன் உயர்த்துவார். இத்தகையோர் சகலர் எனப் பெறுவர். இதனை வேதித்தல் என்பார்கள். வேதித்தல் = வேறுபடுத்துதல். தெரிந்து பூசிப்போரிடத்துப் பொலிந்து, தெரியாது வாளா கிடப்போரை அறிவித்தும் அருள் செய்வன இரண்டு பாதங்கள் ஆகும்.
“கல்லாதார் மனத்தணுகாக் கடவுடன்னை“,
“மற்றவரறியா மாணிக்க மலையை“ முதலிய திருவாக்குக்கள் இதனை விளக்கும். வேதிப்பன – என்பதற்குப் பேதிக்கச் செய்வன – மாற்றுவன – என்றுரைத்தலுமாம். மாற்றுவது வேதி எனப்படும். இது தரிசவேதி – பரிச வேதி என் இருவகைப்படும். என்றது காண்க.
ஆணவத்திற் கட்டுண்டுகிடப்போரை அதிலிருந்து பரிசம் – நோக்கு – பாவனை முதலிய தீக்கைகளால் மாறச் செய்வன. பரிசத்தாலே கட்டுநீங்கும் கோழி முட்டையும், பார்வையால் நீங்கும் மீன்முட்டையும், பாவனையால் (நினைவினால்) நீங்கும் ஆமை முட்டையும், இவற்றிற்கு உதாரணங்களாகக் கூறுப.
இப்பாடலில் சோதியாய் எழும் சோதி என்பது, சூரியன், சந்திரன் , விண்மீன்கள் , அக்கினி மற்றும் விளக்குகளில் தோன்றும் எல்லா ஒளிகளையும் குறித்தது. இவை தாமே ஒளிகொடுப்பன அல்ல. இவற்றுள்ளே நின்று ஒளிகொடுப்பவன் இறைவன். அவன்பிறிதொன்றினானன்றித்தானே ஒளியுடையவன்;ஆதலின்சுயஞ் சோதியாவன். அவனை ஒளியுருவுடையவனாகவே நினைப்பது சிவாகமங்களின்றுணிபு.
சிவபூசை விதியில் சூரிய பூசையிலே சூரியமண்டலத்திடையில் விளங்கும் ஒளியுருவனாகிய சதாசிவ மூர்த்தியைப் பூசிக்கும் முறை சைவாசாரியர்களிடம் உண்டு. இச்சோதியை, சோதிகளிலே மிகுந்த சோதி என்றும்,சோதிகளுக்குள்ளே நின்று அவற்றிற்கு ஒளிதரும் சோதி என்றும் கொள்க. “ஒளியா யொளியதன் ஒளி“ என அடுக்கிக் கூறுவதுங் காண்க. மும்மலங்களுக்கு சடமாயொழியவே, அவைகளினின்றும் நீங்கிச் சுத்தமாய் மேம்படும் ஆன்ம ஞானவொளியுடன் ஒளியாகி அதனை விளக்குவன.
“சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே“ – சித்தியார்.
“ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகனுருவங்கண்டு“ – கந்தர் அலங்காரம்.
இப்பாடலில் ஆதிமாலவன் காணா அளவின என்பது – பன்றியாய்ச் சென்று திருவடி தேடிக் காணாதவர் திருமாலே யாதலானும், இங்குக் கூறுவது அந்தப் புண்டரீகப் பதமேயாதலாலும் மாலவன் என்ற பாடமே சிறந்ததாம். ஆதி – தொடக்கம் – தோன்றுதல். “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே“ என்றபடி இறைவன் ஒருவனே ஆதியும் அந்தமுமில்லாதவன்; அநாதியாயுள்ளவன். தமக்கு ஒரு ஆதியை – தொடக்கத்தை – உடையார் அநாதியை அறியார். ஆதலின் ஆதி மாலவன் காணா அளவின என்றார். “ஆதியுமந்தமுமல்லா வரும்பெருஞ் சோதி“ என்பது திருவாசகம். பெருஞ் சோதியேயாயினும் சிலர் காணப்பெறாமலிருப்பது அவர்களது பக்குவக் குறையிலேகாண்க. “சோதியேசுடரேசூடரேசூழொளி விளக்கே“ என்ற திருவாசகமும்காண்க. சோதியாய் எழும் மூன்று சோதியும் இறைவனது மூன்று கண்களாம். கண்கள் கருவிகளேயாதலின் இவற்றுள்ளே உயிரின் செயல் கலந்தாலன்றி இவைகட்குச் செயல் இல்லை. இம்மூன்றினுள்ளும் உட்சோதி யாயிருந்து இறைவன் அவற்றிற்கு ஒளி தருவன் என்பதும் குறிப்பு. கறுத்தனவாயினும் சிவந்தன; பொலிந்தனவாயினும் வேதிப்பன; சோதியவாயினும் காணா வளவின; என அணிபெறத் தொடர்ந்து துதித்த சுவையும் காண்க. வேதிப்பன – என்ற கருத்து
“குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன“ என்ற திருவிருத்தத்திலும், மாலவன் காணா- என்ற கருத்து “கருடத் தனப்பாகன் காண்டற் கரியன“ என்ற திருவிருத்தத்திலும் அப்பர் பெருமான் அருளியமை காண்க. சோதிய – என்பது “சோதியாய் நிறைந்தான் சுடர்ச்சோதியுட் சோதியான்“ என்ற திருஞான சம்பந்த நாயனார் தேவாரத்துட் காண்க. இனி முழுப் பாடலையும் படித்துணர்வோம்,
நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன
வேதி யாதவர் தம்மைவே திப்பன
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
வாதி மாலவன் காணா வளவின!
ஆகவே சிவபூசை செய்யும் தவமுடையோர் நெஞ்சில் பொலிவதும், கேவலமலத்துட் கிடந்தோரைச் சகலராக்குவதும், ஒளிகள் அனைத்தையும் கொண்ட பேரொளிப் பிழம்பாய் நிற்பனவும், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியும் இறைவன் திருவடிகளே என்று சுந்தரர் கண்டு கூறியதைச் சேக்கிழார் கொண்டு கூறுகிறார்.