வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 4
தி.இரா.மீனா
அக்கமாதேவி
அற்புதத்திற்குள் அற்புதம், தெய்வீகக் குயில் என்றெல்லாம் அழைக்கப் படும் அக்கமாதேவி கர்நாடக மாநிலம் சிமோகாவிலுள்ள உடுத்தடியில் சுமதி–நிர்மல ஷெட்டிக்கு மகளாகப் பிறந்தவர். பெற்றோர் சிவனின் சரணர்கள். ஏழு வயதில் ஒரு குருவோடு அக்கமாவுக்குக் கிடைத்த அறிமுகம் சிவபெருமானிடம் பக்தி கொள்ளத் தூண்டுகிறது. கௌசிகன் என்னும் சிற்றரசன் அக்கம்மாவின் பேரழகில் மயங்கி அவளை மணக்க எண்ணுகிறான். இதில் அவள் குடும்பத்திற்கு விருப்பமில்லையென்றாலும் அரசன் தன் செல்வாக்கால் அவர்களைத் தன் விருப்பத்திற்கு உடன்பட வைக்கிறான். வேறுவழியின்றி மணக்க உடன்படும் அவள் அவனிடம் சில நிபந்தனைகளை முன்வைக்கிறாள். சென்ன மல்லிகார்ச்சுனனுக்கு [இஷ்டதெய்வம்] நாளும் வழிபாடு நடத்துதலில் அவன் தலையீடு கூடாது, தன்னைத் தேடிவரும் அடியவர்களை மறுப்பின்றி உபசரிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது அந்த இரண்டு நிபந்தனைகள். அவளழகில் மயங்கிய மன்னன் அவற்றிற்கு ஒப்புக் கொள்கிறான். சிவனடியார் கூட்டம், வழிபாடு என்று தொடர்ந்து அரண்மனையில் அக்கம்மா தேவியின் பக்திநிலை வளர்கிறது. சில நாட்களுக்குள்ளேயே அவனுக்குப் பொறுக்க முடியாமல்போக ஒரு சூழலில் அடியவர் கூட்டம் எப்போதும் ஏன் என அவளிடம் கேட்க நிபந்தனையை அவன் மீறியதாகச் சொல்லி அவள் வெளியேறுகிறாள். திருமணமான குறுகியகாலத்திலேயே அவ்வாழ்விலிருந்து வெளியேறும் அக்கமாதேவி தன் ஆடையைக் களைந்து நீண்ட கூந்தலால் உடலை மறைத்து தன் வாழ்வுச் சூழலை மாற்றிக் கொள்கிறாள். பல இடங்களிலும் அலைந்து இறுதியாகக் கல்யாண் வருகிறாள். அங்கு பசவேசர் ,அல்லமாபிரபு ஆகியோர் பங்கு கொண்டுள்ள அனுபவமண்டபத்தைச் சேர்கிறாள். அனுபவ மண்டப மென்பது சிவசாரணர்கள் கூடுமிடமாகும். இளம் பெண்ணான அவளை அனுபவ மண்டபத்திற்குள் இணைத்துக் கொள்வதற்கு முன்பு அல்லமாபிரபு அவள் அறிவாற்றலையும் பக்தி நிலையையும் அறியச் சில கேள்விகள் கேட்கிறார். அவள் அளித்த விளக்கங்கள் அவளுடைய அறிவாற்றலுக்கும், இறைப்பற்றுக்கும் அடையாளமாகின்றன. அக்கமாதேவியின் விளக்கங்களால் மகிழ்ந்த பசவேசர், சித்தராமயன் என்று வயதிலும், அனுபவத்திலும் சிறந்தவர்கள் அவளைப் பாராட்டுகின்றனர். அங்கு சிலகாலம் இருந்து விட்டுப் புறப்படுகிறாள். காடுகளில் அலைகிறாள். இறுதியில் ஆலங்கட்டி தண்ணீரில் சேர்வது போல, உப்பு தண்ணீரில் கரைவது போல. பால் பாலோடு கலப்பதைப் போல இறைவனோடு கலக்கிறாள். ஐக்கியஸ்தலம் ஆனதான புகழ் அவளுக்குக் கிடைக்கிறது. அனுபவ மண்டபத்தின் சரணர்கள் பசவேசரை பசவண்ணா என்றும், அல்லமாவைப் பிரபு என்று, அக்கமாதேவியை அக்கா என்றும் அழைப்பது அம்மூவரும் பெற்றுள்ள உயர்வையும், சிறப்பையும் காட்டுகிறது.
அனுபவ மண்டபத்திற்குள் அவளைச் சேர்க்கும் முன்பு அல்லமாபிரபு அவள் ஆன்மீக நிலையை உறுதிப்படுத்த விரும்புகிறார். அவரது கடுமையான, ஆழமான கேள்விகளுக்கு எந்தவிதத் தயக்கமுமின்றி தனக்குள் தோன்றியதை அப்படியே வெளிப்படுத்தும் அல்லமா—அக்கமாதேவி உரையாடல் கீழே:
பிரபு: “உன் இளமைக்காலத்தில் நீ இங்கு வந்ததன் காரணமென்ன? நம் சமயவாதிகள் பெண்களின் அருகாமையை ஒதுக்கியிருக்கின்றனர். உன் கணவன் யார் என்ற அடையாளத்தை நீ வெளிப்படுத்தினால் எங்களோடு இணையலாம். இல்லாவிட்டால் இங்கேயிருந்து போய்விட வேண்டும். ஒரு பெண்ணின் சேர்க்கை என்பது விஷம் போன்றது. சொல். உன் கணவன் யார்?”
அக்கமா: கடவுள் என் கணவராக வேண்டும் என்பதற்காக கடுமையாகத் தவமிருந்தேன். என் பெற்றோர்கள் என் உடலைச் சாம்பலாக்கிவிட்டு என் கையில் காப்புக்கட்டி என்னைக் கடவுளுக்குச் சொந்தமாக்கிவிட்டனர். கடவுளின் கணக்கில்லாத தொண்டர்கள்தான் என் பெற்றோர் என்பதை உலகமே அறியும் அதனால் பிரபுவே! கடவுள்தான் என் தலைவன், இந்த உலகில் அவரைத் தவிர வேறு கணவர்களில்லை.
பிரபு: ஆடையைக் களைந்து கூந்தலால் உடலை மூடிமறைக்கும் உன் செயல் பொருத்தமில்லாததாக இருக்கிறது. உடலைப் பற்றிய உள்ளுணர்வு இருந்தால்தான் இப்படியான வெளிப்பாடுவரும். அதனால் இன்னும் நீ அதிலிருந்து வெளிவரவில்லை. அதை விளக்கிச் சொல்.”
அக்கமா: அதற்கான காரணம் உலகம்தான். பெண்ணை நிர்வாண நிலையில் பார்த்திருக்காத உலகப் போக்கிற்குத்தான் அச்செயல். உடலென்பது இங்கு கணக்கில் இல்லாதது. பரிசுத்தமான மனம்தான் கடவுளுக்கு உகந்தது.
பிரபு: “மனிதப் பிறவியாக, அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு கடவுளோடு ஒன்றாக இணைய முடியுமா? உருவமற்ற ஒன்றோடு உருவமான ஒன்று எப்படிச் சேரமுடியும்?
அக்கமா: ”சந்தனமரம் துண்டுதுண்டாக வெட்டப்படும்போது அதன் வாசனை குறையுமா?தங்கத்தை அறுத்துச் சுடும்போது அது அதன் பொலிவை இழக்குமா? கரும்பு சக்கையாகப் பிழியப்பட்டு சுடப்படும் போது அதன் சுவை குறையுமா? பாம்பின் விஷப்பல்லைப் பிடுங்கிய பிறகு யாரும் அதோடு விளையாடலாம் சதையோடு இருக்கும் தொடர்பு சரியாகப் புரிந்துகொள்ளப்படுமென்றால் அது சரியானதுதான். தாய் அரக்கியாக மாறினால் அவளுடலின் உணர்ச்சிகளும் அரக்கத் தன்மையுடையதாகிவிடும். விருப்பப்படுகிறவனுக்கு உடல் உண்டென்று நினைக்காதே கடந்து போனவற்றைச் சொல்லி என் முகத்தில் அறைந்தாலும் இழப்பு உங்களுக்குத்தான். என்னைக் கொன்றாலும் அவன் மீது அன்பு காட்டு வதை நிறுத்த மாட்டேன். அவன் இளமையானவன் உருவற்றவன் இறப்பில்லாதவன் அளக்கவியலாதவனாகிய சென்னமல்லிகார்ச்சுனன் என் கணவன்”
பிரபு: ”உன் உடல் பெண்ணுருவம் கொண்டதாக இருக்கலாம். ஆனால் உன் மனம் கடவுளோடு இணைந்துவிட்டது.” என்று பிரபு அவளைப் பாராட்டுவதான இந்த உரையாடல் தொடர்கிறது. பசவேசர், சித்தராமயன் என்று வயதிலும் ,அனுபவத்திலும் சிறந்தவர்கள் நிறைந்த அனுபவ மண்டபத்தில் இணைகிறாள்.
அக்கமாதேவியை ’ஞானி” என்ற நிலையில் அடக்கினாலும், ஞானத்தின் அடையாளமாக வசனங்கள் அமைந்தாலும் மதுரபாவம்-நாயகன் நாயகி [சரணாசதி- லிங்கா பதி ] பாவத்தை பல வசனங்களில் காணமுடிகிறது. சென்னமல்லிகார்ச்சுனன் அக்கமாதேவியின் முத்திரையாகும். வாழ்க்கையின் நலிவு — நோவு, ஆத்ம தர்மத்தின் நிலை ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன. வசனங்கள் தவிர, ”யோகாங்க திரிவிதி”, “ஸ்வர வசனம், ”மந்த்ரகோப்ய” முதலிய சிறு நூல்களைப் படைத்திருந்தாலும் அக்கமாதேவியின் ஆத்மார்த்த தரிசனம் வெளிப்படுவது அவளுடைய வசனங்களில்தான் எனலாம். சில வசனங்கள்:
1. “பொறி பறந்தால் என்வேட்கையும் பசியும் தீர்க்கப்பட்டதாக
நினைப்பேன்
வானம் திறந்தால் என் குளியலுக்காக என்று எண்ணுவேன்
என்தலை தோளில் சாயும்போது உன்னையே நினைப்பேன்”
சென்ன மல்லிகார்ச்சுனா “
2. “பசி பிச்சைப்பாத்திர
அரிசியில் தீரும்
தாகம் கிணற்றுநீரில் தீரும்
தூங்கச் சிதைந்த கோயில்களுண்டு
ஆத்மாவுக்குத் துணை நீ
என்ன கவலை சென்ன மல்லிகார்ச்சுனா”
3. “நல்ல மரத்தால் நிழலைத் தரமுடியாவிட்டால் என்ன பயன்?
செல்வந்தர் கருணையற்று இருந்தால் செல்வத்தால் என்னபயன்?
அழகான மனிதன் இரக்கமற்று இருந்தால் அழகால் என்னபயன்?
நிறைந்த உணவு இல்லாவிட்டால் பாத்திரத்தால் என்ன பயன்?
உன்னைப் பற்றிய சிந்தனையில்லாவிட்டால்
சென்ன மல்லிகார்ச்சுனா என்ன பயன்?”
4. “மண்ணில் புதையல்போல
பழத்தில் சுவைபோல
கல்லில் பொன்போல
விதையில் எண்ணெய்போல
மனதில் நீ யாருக்கும் தெரியாது
சென்ன மல்லிகார்ச்சுனா”
5. “நான் பயப்படும் பெண்ணில்லை
வீணான அச்சம் எதற்குமில்லை
எதையும் அடக்கமுடியும்
பசியையும் வலியையும் ஏற்றுக்கொள்வேன்
உலர்ந்த இலைகளையும் உணவாக்கிக் கொள்வேன்
கூர்மையான வாள் என்படுக்கை
எதற்கும் தயார் இந்த நிமிடத்தில் இறக்கவும்,
ஓ..சென்ன மல்லிகார்ச்சுனா”
6. “பருவமடைவதற்கு முன்னால்
வெட்கமென்பது தெரிவதற்கு முன்னால்
என் மக்கள் எனக்கு மணமுடித்து விட்டனர்
என்பெண்மையை உணரும் முன்னால்
மணமுடித்து விட்டனர் சென்ன மல்லிகார்ச்சுனா”
7. “எனக்கு குருவின் அருளால் இலிங்கம் கிடைத்தது
ஜங்கமா குருவினருளால் கிடைத்தது
பிரசாதம் குருவினருளால் கிடைத்தது
சரணர்களோடு பழகியது குருவால்
குரு என்நெற்றியில் திருநீறு பூசினார்
இலிங்கத்தை உடலில் சேர்த்தார்
நான் ஆசீர்வதிக்கப்பட்டவளானேன்
சென்ன மல்லிகார்ச்சுனா”
[ தொடரும் ]