நெல்லைத் தமிழில் திருக்குறள்- 94

நாங்குநேரி வாசஸ்ரீ
94. சூது
குறள் 931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
நிச்சயம் செயிக்கப் போகுதோம்னு தெரிஞ்சாலும் சூதாடக்கூடாது. அது தூண்டில் முள்ள இரைனு நெனச்சி முழுங்கின மீன் கணக்கா ஆக்கிவிட்டுரும்.
குறள் 932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
ஒருக்க செயிச்ச சந்தோசத்துல நூறு தடவ பொருளத் தோத்துப் போவுத சூதாடிங்க வாழ்க்கையில நல்லது நடக்க வழி இருக்கா?
குறள் 933
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
பணயம் வச்சி ஒருத்தன் தொடர்ச்சியா சூதாடினாம்னா அவன் சொத்தும் அதனால வருத லாபமும் எதிராளிகிட்ட போய் சேந்துக்கிடும்.
குறள் 934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்
ஒருத்தனுக்கு பல சங்கடங்கள உண்டாக்கி அவன் மரியாதயக் கெடுத்து ஏழையாக்கிப்போடுத சூதாட்டம் கணக்கா கெட்ட காரியம் வேற இல்ல.
குறள் 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
சூதாடுத எடம், சாதனம், ஆடுத தன் கைத்தெறம இதையெல்லாம் பெருமயா நெனஞ்சி சூதாட்டத்த இறுக்கிப் பிடிச்சிக்கிட்டவக எல்லாம் கைவிட்டுப்போயி ஒண்ணுமில்லாமப் போயிடுவாக.
குறள் 936
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்
சூதாட்டம் ங்குத மூதேவியால முழுங்கப்பட்டவுக வயிறார திங்க ஏலாம பலவிதமா சங்கடப்பட்டு சீரளியுவாக.
குறள் 937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
சூதாடுத எடத்துலயே ஒருத்தன் தன் காலத்தக் கழிச்சாம்னா அவன் பரம்பரச்சொத்து கைவிட்டுப் போவும். நல்ல கொணத்தையும் கெடுத்துப்போடும்.
குறள் 938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது
சூதாட்டம் பொருள அழிச்சுப்போடும் அந்தானிக்கு பொய் பேசச் சொல்லும் பொறவு இரக்கங்கெட்டவனாக்கி செரையா வந்து முடியும்.
குறள் 939
உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
சூதாடுதுவன விட்டு மரியாத, படிப்பு, சொத்து, சாப்பாடு, உடுப்பு எல்லாம் அண்டாம வெலகிப்போவும்.
குறள் 940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்
பொருள வச்சி தோக்கத் தோக்க சூதாட்டத்துமேல வைக்க ஆச அதிகமாவுததும் ஒடம்பு சங்கடப் படப்பட உசிரு மேல வைக்க ஆசயும் ஒண்ணுதான்.