நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

நாங்குநேரி வாசஸ்ரீ
99. சான்றாண்மை
குறள் 981
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
நாம செய்ய வேண்டிய கடம இதுனு உணந்துகிட்டு அத நல்ல மொறையில செய்ய மொனையுத எல்லா முயற்சியையும் நல்ல கடமனு சொல்லுதாங்க.
குறள் 982
குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று
நல்ல கொணம் ஒண்ணுதான் படிச்ச பெருமக்களுக்கு அழகு. மத்த எதுவும் அழகோட சேத்தியில்ல.
குறள் 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்
நேசமா இருக்கது, பொல்லாப்புக்கு பயப்படுதது, ஒழுக்கமா இருக்கது, இரக்கமா இருக்கது, உண்மையே பேசுதது இந்த அஞ்சும் சான்றாண்மையத் தாங்குத தூண்கள் ஆவும்.
குறள் 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
நோன்புங்கது மத்த உசிரக் கொல்லாம இருக்கத அடிப்படையாக் கொண்டது. பொறத்தியாரப்பத்தி எப்பமும் கொற பேசாம இருக்குத கொணத்தக் குறிக்குதது சால்பு.
குறள் 985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
தெறமசாலியோட தெறமங்கது பணிஞ்சு நடக்குத கொணம். அதுவே பகையாளியோட பகைய மாத்துத சாதனமா பெருமக்களுக்கு அமைஞ்சுக்கிடும்.
குறள் 986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
ஒருத்தரோட மேன்மைக்கு உரைகல் எதுன்னா தனக்கு சமமில்லாத சின்னவுககிட்ட கூட தோல்விய ஒத்துக்கிடதுதான்.
குறள் 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
தனக்கு தீம செஞ்சவுகளுக்கும் நன்ம செய்யாம விட்டுப்போட்டோம்னா சான்றாண்மைங்குத நல்ல கொணம் இருந்தும் என்ன பிரயோசனம்?
குறள் 988
இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
சால்பு (நிறைவு)ங்குத மனவலிம ஒருத்தங்கிட்ட இருந்திச்சுன்னா பொருளில்லாமப் போகுத ஏழ்ம அவனுக்கு தாழ்ச்சி ஆவாது.
குறள் 989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்
தனக்குரிய கடமையக் கண்ணியமாச் செய்யுத பெருமக்க எல்லாக் கடலும் தடம் புரண்டு போவுத ஊழிக்காலத்துல கூட தன் நெல மாறாம இருப்பாக.
குறள் 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை
பெருமக்களோட நல்ல கொணம் கொறையத் தொடங்கிச்சின்னா இந்தப் பெரிய ஒலகத்தால பாரத்தத் தாங்க முடியாமப் போவும்.