குறளின் கதிர்களாய்…(283)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்… (283)

ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
– திருக்குறள் -818(தீ நட்பு)

புதுக் கவிதையில்…

செய்ய முடிந்த செயலை
செய்ய இயலாதவாறு
கெடுப்பவர் உறவை,
சொல்லாமலே அவர்
சோர்வுறுமாறு
கைவிடல் வேண்டும்…!

குறும்பாவில்…

இயன்ற செயலைச் செய்ய
இயலாதவாறு கெடுப்போர் நட்புறவை
இல்லாமலாக்கிடவேண்டும் சொல்லாமலே…!

மரபுக் கவிதையில்…

 செய்திட இயன்ற செயலதுவைச்
செய்ய இயலா வகையினிலே
மெய்யாய்க் கெடுப்பவர் உறவதுதான்
முறைய தில்லாத் தீநட்பே,
பொய்மை மிக்க இவருறவைப்
போற்றிக் காப்பது நன்றன்று,
உய்யும் வழியாய் அவர்சோர
உறவதை உதறிடு உரையாதே…!

லிமரைக்கூ..

தீநட்பு கண்டே பதறிடு,
செயலாற்ற இயலாமல் கெடுப்பவர் உறவைச்
சொல்லாமலே அவர்சோர உதறிடு…!

கிராமிய பாணியில்…

வேண்டாம் வேண்டாம்
தீய நட்பு வேண்டாம்,
கெட்டவன் கூட நட்பு
வேண்டவே வேண்டாம்..

நம்மால செய்யமுடிஞ்சதச்
செய்யமுடியாமக் கெடுக்கிற
கெட்டவனோட ஒறவு
கட்டாயமா வேண்டாம்..

சொல்லாமக் கொள்ளாம
அவன் அசரும்படியா
அந்த ஒறவேயில்லாம
அறுத்து விட்டுடணும்..

அதால
வேண்டாம் வேண்டாம்
தீய நட்பு வேண்டாம்,
கெட்டவன் கூட நட்பு
வேண்டவே வேண்டாம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.