இலக்கியம்கவிதைகள்

திருக்காட்சித் திருவிழா

ரகுதேவன்

இயற்கையில் அங்கங்கொண்ட நானும்
எம்புறச் சேரிகளும் –
வன்முறையால் சூறையாடப்பட்டுக் கிடக்கிறோம் – இதோ
என் உடலிலும் இதயத்திலுமுள்ள
காயங்களைப் பாருங்கள் – இவையெல்லாம்
உன்னால் ஏற்பட்டவை
காயங்கள் சில ஆறி வடுவாகியிருக்கின்றன
புண்கள் சில ஆறாமல் கொந்தி சீல்பிடித்து
நெரியேறி ரணமாகியிருக்கிறது – இந்த
உணர்வுப் படையலேந்தி எல்லாக் காலத்திலும்
ஆகக் கடைசியிலிருக்கும் எம்மை உம் முன்கொணர
நீதியின் நல்நிமித்தம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நம்பிக்கை எம்மில் ஆழப் பதிந்து
ஆத்தும நங்கூரமாய் இருக்கிறது – எம்
ஆவேசப் பெருவெறுப்பைத் தணித்து – உம்
வாதை எமை இனி நெருங்காதிருக்க
வாழ்வளிக்கும் வார்த்தையைக் கண்ணால் கண்டோம்
தொட்டுணர்ந்தோம் சுவாசிக்கப் போகிறோம்
பகல் மறுத்த சமூகமானதால் – இப்பொழுதும்
இருளோடு இருளாய் மறைந்து வாழ்கிறோம்
காடோடிக் குடிகளென – அதோ
நீல வான்வெளியில் விண்மீன் எழுந்து திசைகாட்டி வழிநடத்த
தேடிக் கண்டடைந்தோம்
விடுதலை என்னும் மறைபொருளை
இந்நற்செய்தி அறிவிப்பை
திருக்காட்சித் திருவிழாவெனக் கொண்டாடப் போகிறோம்
வாருங்கள் திருவிருந்து உண்ண
உன்னில் கீழானவனென்று இனியும் எனை ஒதுக்காமல்
என் இல்லத்திற்கு அன்புள்ளத்தோடு

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க