இலக்கியம்கவிதைகள்

பூட்டிய இதயங்களுக்குள் புகுந்து வா!

ராதா விஸ்வநாதன்

அன்பே….
எத்தனை பெயர்கள் உனக்கு
நீ இருக்குமிடமே சொர்க்கம்
மண்ணுக்குள் வளம்
மலருக்குள் வாசம்
மேகத்துக்குள் நீர்
பெண்மைக்குள் தாய்மை
உறவுக்குள் நட்பு
தேசத்தின்பால் கடமை
இறையைக் காண பக்தி
இறை காட்டுவது கருணை

அன்பே …
எத்தனை பெயர்கள் உனக்கு
இருப்பிடத்திற்குத்
தகுந்தாற்போல்..

நீ இருந்தால்
சுழலும் உலகம்
உடலும் உழைக்கும்
உயிர்கள் வாழும்
பூக்களும் பூக்கும்
பூக்கள் மட்டுமில்லை
மனங்களும் தான்
அமைதியின் வாசத்துடன்

உன் ஆளுகையில்
பருவங்கள் பொய்ப்பதில்லை
கோடையின் விடுமுறையில்
வசந்தங்கள் வருகின்றன
உன் அரவணைப்பில்
எல்லைகள் அழிகின்றன
வேரற்று வீழ்கிறது
வேற்றுமையும்…..

நீ மறைந்தால்
எங்கும் முளைக்கும்  கல்லறை
காளான்களைப் போல்
கருவறையும் கல்லறையாகும்
கங்கையும் வண்டுவிடும்
அன்புக்கு விலை பேசுவது
மனிதனின் இயல்பு
உன் இயல்பினை
என்றும் மறந்து விடாதே
எதிர்பார்ப்பு இல்லாமல்
பூட்டிய இதயங்களைத்
திறந்து புகுந்து விடு

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க